ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை
காயிதே ஆசாம் முகமது அலி ஜின்னா, இவரின் பெயரைக் கேட்டாலே அன்றைய பிரிட்டிஷ் - இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம். இன்றும் கூட ஜின்னாவைப் புகழ்ந்தால் இந்திய தேசியத்தின் எதிரி எனக் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பகுதி மக்களுக்கு நாட்டைத் துண்டாடிய வில்லன், மறுபகுதி மக்களுக்கு வரலாற்று கதாநாயகன், அரசியல் வரலாற்று நோக்கர்களுக்கு ஒரு புதிர். ஒரு வேளை முகமது அலி ஜின்னா , இந்தியாவின் நேருவைப்போல அதிக காலம் ஆண்டிருந்தால் பாகிஸ்தான் ஒரு நவீன, மக்கள் நலன் நாடாக உருவெடுத்து இருக்கும் எனக் கூறும் அரசியல் நிபுணர்களும் உண்டு. ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான, தனது 14 அம்சத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரசியலில் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டபொழுது, தனது வீச்சைக் காட்டவேண்டும் என்று வீம்பாக பாகிஸ்தானிய கோஷத்தை எடுத்தவர், தனக்கு பிரதமர் பதவி கிடைக்காது என்ற கோபத்தில் பிரிவினை வாதத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. காந்தி கதாநாயகன் , நேரு துணை கதாநாயகன் , ஜின்னா வில்லன் என திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரக் கட்டமைப்புகளில்தாம் நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஸ்வீடன் வந்தபின்,
ஒரு திட்ட மேலாண்மை பாடத்தில் தலைமைப்பண்புகளை பற்றி ஒரு தலைவனை உதாரணமாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. பெரும்பான்மையான பாகிஸ்தானிய மாணவர்கள் எழுதியது முகமது அலி ஜின்னாவைப் பற்றியதுதான். கட்டுரைகள் மிகையாக எழுதப்பட்டிருந்தாலும், சிலக்கட்டுரைகளை, படித்தபொழுது சுவாரசியமான மனிதராகப் பட்டார்.
எனக்குத் தெரிந்திருந்த ஜின்னா, காந்தி திரைப்படத்தில் சிகரெட் பிடித்தபடி, முகத்தைக் கடுமையாக வைத்திருக்கும் இந்திய நடிகர் அலிக்பதமஸி தான். காந்தி திரைப்படத்தில் பிரிட்டீஷ் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக கெட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஜின்னாவினது. காந்தி திரைப்பட உருவாக்கத்தில் இந்திய திரைப்பட வாரியமும் பங்கு பெற்று இருந்ததால் திட்டமிட்ட சேறடிப்பு இருந்ததாக ஒரு வாதம் உண்டு. சரி காந்தியைப் பற்றி திரைப்படம் உலகிற்கு வந்தாகிவிட்டது. அவருக்கு இணையான வரலாற்று நாயகன் ஜின்னாவைப் பற்றி படம் வேண்டும் அல்லவா... பொதுவாக பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரிடை சந்தையிலோ கள்ள சந்தையிலோ இந்தித் திரைப்படங்களை நம்பி இருக்கும் பாகிஸ்தானிய சமூகம் போர்கள், சர்வாதிகாரிகள் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்கள் திரைப்படம் எடுக்க எங்குப்போவார்கள்.
காந்தித் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, பன்னாட்டு வெகுசனங்களுக்கு ஜின்னா ஒரு எதிர்மறைநாயகன் என ஸ்திரப்படுத்தியப்பின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜின்னா. கலைகளின் இருப்பிடம் கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஜமீல் தெஹ்லாவி இயக்க ஜின்னா திரைப்படம் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் வெளியானது. ஜமீல் தெஹ்லாவியின் முந்தையத் திரைப்படமான தெ பிளட் ஆஃப் ஹுசைன் , ஜியா உல் ஹக் அரசாங்கத்தால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று கதாப்பாத்திரங்களைத் திரையில் வடிவமைக்கும்பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நாயகர்கள்-நாயகிகள் வேறு எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்காதிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மாறாக ஜின்னாவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ்டோபர் லீ.
கிறிஸ்டோபர் லீ, தேர்ந்த நடிகர்தான், அதில் சந்தேகமுமில்லை, பிரச்சினை என்னவெனில் அவர் டிராகுலா வரிசைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். பொதுவாகவே தொட்டாச்சிணுங்கிகளான துணைக்கண்ட மக்கள் இதற்கு குரூரமான படங்களில்
நடித்த நடிகர், தங்களின் தலைவனாக எப்படி நடிக்கலாம் என பாகிஸ்தானிய மக்களின் ஒரு பிரிவினர் கொதித்து எழுந்தனர். அடுத்தது, ஜின்னாவின் மனைவி ரத்தன்பாய் ஜின்னாவாக நடித்தவர் - இந்திரா வர்மா. காமசூத்திரா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர். கேட்கவா வேண்டும், பாகிஸ்தானிய அரசாங்கம், நடுவில் திரைப்படத்திற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது. தளராத ஜமீல் ஒத்தக் கருத்து உடைய மக்களின் உதவியுடன் திரைப்படத்தை முடித்து வெளியிட்டார்.
சுயசரிதங்களைப் படமாக்கும்பொழுது எழுதப்படவேண்டிய நேரிடை திரைக்கதை இந்தத் திரைப்படத்தில் பின்பற்றப்படவில்லை என்பது மூன்றாவது கோணல். மரணமடைந்த ஜின்னாவின் ஆத்மா வானுலகிற்கு வருகிறது. இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் தான் வானுலக தேவதூதர். ஜின்னா நரகத்திற்கு அனுப்பபடவேண்டியவரா, சொர்க்கத்திற்கு வரவேண்டியவரா என சசிகபூர் தனது கணினியின் கோப்புகளில் விபரங்களைத் தேடுகிறார். சிலக்கோப்புகள் அழிந்துவிட்டபடியால், சசிகபூரும் ஜின்னாவின் ஆத்மாவும் மீண்டும் பூமிக்குப் பயணிக்கின்றனர். சசிகபூருக்கும் ஜின்னவின் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், கடந்த கால மீள்பார்வைகளாக விரிகின்றன. படம் முழுக்க, ஜின்னாவின் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியாகவே ஒவ்வொரு காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் நெருடல். போகிற போக்கில் விளக்கங்கள் இல்லாமல், முழுத் திரைக்கதையும் விளக்கங்களைச் சுற்றியே இருக்கின்றது.
ஜின்னா நாயகப்பாத்திரம் என்றால், நேருவின் பாத்திரம் எதிர்மறைப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஜின்னா - ரத்தன்பாய் காட்சிகளை விட, நேரு - எட்வினா காட்சிகள் படத்தில் அதிகம். நேரு பத்திரமாட்டுத் தங்கமல்ல, என அவரை வெளிச்சப்படுத்தி,
ஜின்னாவை உயர்த்திக் காட்டும் கதைப்போக்கு இருப்பது ஒரு சறுக்கல். எந்தவித ஒப்புமைகளும் இல்லாமலேயே ஜின்னா மகத்தான தலைவர் என படத்தில் காட்சிப்படுத்தி இருக்கலாம். நேருவும் எட்வினாவும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருப்பதும் போன்ற காட்சியமைப்புகள் உண்மையிலேயே தைரியமானவையே. மௌண்ட்பேட்டன் மற்றும் நேரு, எட்வினாவின் கைப்பாவைகள் எனக் குறிப்புகளால் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வரலாற்று கற்பிதங்களில் ஊறியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும்.
ஒரு காட்சியில் லியாகத் அலிகான், சிலக்கடிதங்களைக் கொண்டு வந்து ஜின்னாவிடம் கொடுத்து, இக்கடிதங்கள் நேரு எட்வினாவிற்கு இடையில் பரிமாறப்பட்டவை, இவற்றைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனச் சொல்லுவார். அதற்கு ஜின்னா இந்தக் கடிதங்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது, அதைப் பிரசுரிப்பது என்பது தவறு, இக்கடிதங்களை எரித்துவிடுங்கள் என கோபமாக உத்தரவிடுவார். நேருவிற்கும் ஜின்னாவிற்கும் இடையிலான நீயா நானாப் போட்டியில் ஜின்னா எத்தனைப் பெருந்தன்மையானவர் என்பதை நிருபிப்பதிலேயேப் பாதிப்படம் போகின்றது.
பலரும் அறிந்திராத ஜின்னாவின் இளமைப்பருவத்தை உள்ளபடியே கூறியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் விசயம். முதல் மனைவி இறந்த சோகத்தில் தனித்து இருக்கும் ஜின்னா, ரத்தன்பாய் என்ற பார்சிப் பெண்ணின் மேல் ஈர்ப்பாகிறார். ரத்தன்பாய் குடும்பம் எதிர்க்க, ரத்தன்பாய் சட்டப்பூர்வ திருமண வயது வரைக் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அரசியல் போராட்டங்கள், அரசியல் தனிமைப்படல், மனைவியின் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கமுடியாமை, மேற்கத்திய சிந்தனையோட்டம் - இஸ்லாமிய தேசிய முன்னெடுப்பு இரண்டு நேரெதிர் கருத்தாங்களுக்கு இடையில் அல்லல் படல் என இளமையான ஜின்னாவாக ரிச்சர்ட் லிண்டர்ன் அருமையாக நடித்து இருக்கின்றார்.
படத்தில் என்னைக் கவர்ந்தப் பாத்திரமும் இவரே !!!!
ஆண் பெண் சமம் என, தனது தங்கை பாத்திமா தீவிர அரசியலில் ஈடுபடுவதையும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் ஆதரித்த ஜின்னா, முஸ்லீம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகவும் படத்தில் காட்டப்படுகிறது. ரத்தன்பாய் இறந்த பின்னர் பாத்திமா தனது பல்மருத்துவமனையை மூடிவிட்டு, தனது அண்ணனுடனேயே வந்துத் தங்குகிறார். ஜின்னா எடுக்கும் பெரும்பான்மையான முடிவுகளில் பாத்திமாவின் பங்கும் உண்டு என்பதை திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. (பாகிஸ்தானின் இந்திரா காந்தியாக உருவெடுத்து இருக்கக்கூடியவர், பின்னாட்களில் அயுப்கானின் அடாவடி தேர்தல் தில்லுமுல்லுகளால் அதிபராக முடியாமல் போய்விட்டார். )
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிணங்களுடன் ரயில்கள் வந்ததைப்போல , இந்தியப்பகுதிகளில் இருந்தும் அதே அளவிற்கு பிணங்களுடன் ரயில்கள் அனுப்பப்பட்டன என்பதையும் திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. கடைசிவரை சிறையே செல்லாமல் ஒரு நாட்டை வார்த்து எடுத்தது ஜின்னாவின் சிறப்பாக சொல்லப்பட்டாலும்,, அரசாங்கத்தை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்களுக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்பது நெருடுகிறது. போராட்ட விதைகளே சுதந்திரத்தை அறுவடை செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லாமல், ஜின்னா ஒரு மேட்டிமை மேசை அரசியல்வாதியோ எனப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கின்றது.
திரைப்படத்தின் இறுதியில், அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி ஜின்னா வழக்கறிஞராக வாதாடுவது போன்ற கற்பனையான நீதிமன்றக் காட்சி மேலுலகில் நடத்தப்படுவது போல காட்சிகள் இருப்பது பார்க்க நன்றாக இருந்த போதிலும் முன்பே சொன்னபடி, சுயசரிதைப்படங்களுக்கான இலக்கணக் கூறாக இல்லை. காந்தி, நேருவுடன் ஜின்னா பாபர் மசூதி இடிப்பையும் அதனைத் தொடர்ந்த கலவரங்களையும் கணினியில் பார்ப்பது போலவும், ஜின்னா கலவரங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான் தான் அன்றே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டதாக சொல்வதுடனும், காந்தியும் நேருவும் மௌனமாக அதை ஆமோதிப்பதுடனும் படம் முடிவடைகிறது.
படம் முழுக்க, ஜின்னாவினது மேல் இருக்கும் அவதூறுகளைக் களையவேண்டும் என்ற இயக்குனரின் தவிப்பு சாமனிய ரசிகனுக்கும் புரிவது போல் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்செலவுகளுடனுடம் படத்தைத் தயாரித்து இருந்திருந்தாலும், ஒரு திரைப்படமாக கண்டிப்பாக ஜொலிக்கின்றது. தரமான ஒளிப்பதிவு, பொருந்துகின்ற பின்னணி இசை 50 களுக்கு முந்தைய வருடங்களை மீண்டும் திரையில் கொண்டு வந்தது, நவநாகரிக , மிடுக்கான கிறிஸ்டோபர் லீ மற்றும் ரிச்சர்ட் லிண்டர்ன் ஆகியோரது நடிப்பு ஆகியனவற்றுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மாற்று அரசியல் வரலாற்றைப் பதிவு செய்த படம் வகையில் கண்டிப்பாக ஜின்னா குறிப்பிடத்தக்க திரைப்படம். காந்தி திரைப்படத்துடன் இதை ஒப்பிடுவது நியாயமானது இல்லை என்றாலும், ஒப்புமைகள் தவிர்க்கப்பட முடியாதது. படம் திரையரங்குகளில் வெளிவந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்தே ஜின்னா திரைப்படத்தின் டிவிடி-விசிடி வடிவம் வெளிவந்தது என்பதிலும் சொல்லப்படாத அரசியல்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் ஆங்கிலத்திலும் உருதிலும் யூடியுப் இணையதளத்தில் கிடைக்கின்றது. திரைப்பட ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியத் திரைப்படம். படம் பார்த்து முடிந்த பின்னர், ஜின்னா கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அவரை இனிமேல் வில்லன் என கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள், அதுவே இந்தப்படத்தின் வெற்றி.