சிக்ஸர் சித்துவும் பெருந்தகையாளர் கபில்தேவும் - மறக்க முடியாத மெட்றாஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - 1987
சென்னை-மெட்றாஸ் , கிரிக்கெட் இவை இரண்டும் தேனும் பாலும் போல.... ஒன்றிணையும்பொழுது ரசிகர்களுக்கு திகட்டத்திகட்டக் கொண்டாட்டந்தான்... பெரும்பான்மையான சமயங்களில் காப்பியின் தொண்டைக்குழித் தித்திப்புக் கசப்பைப்போல வருத்தமான தோல்விகள் கிடைக்கப்பெறும் இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம்., இருந்த போதிலும் தோல்வியோ வெற்றியோ ஆட்டத்தை ஆட்டமாகப் பார்த்து கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். சொற்ப ஓட்டங்களில் தோல்வியுற்ற பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியாக இருக்கட்டும், சையத் அன்வர், அன்றைய உலகசாதனை ஓட்டங்கள் எடுத்த போதாகட்டும், எதிரணியினரைப் பாராட்ட சென்னை ரசிகர்கள் தவறியதேக் கிடையாது.
வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் டிராவும் இல்லாமல், டையில் முடிவுற்ற ஆஸ்திரேலியா - இந்திய டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று ஒருவருடம் முடிந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் துவங்குகிறது. இந்தியாவிற்கான முதல் ஆட்டம் மெட்றாசில்.... எள்ளு எண்ணெய் ஆகும் அளவிற்கு ரசிகர் கூட்டம்.... நாணய சுண்டலில் வென்ற இந்திய அணித்தலைவர் கபில்தேவ் ஆஸ்திரேலியாவை முதலில் ஆட பணிக்கிறார். ஜெஃப் மார்ஷ் சதமடிக்க, டீன் ஜோன்ஸ் அதிரடியாக ஆட , அன்றையக் காலக் கட்டங்களில் எட்ட முடியாத இலக்காக 271 ஓட்டங்கள் வெற்றி பெற நிர்ணயிக்கப்படுகிறது.
சோம்பேறித்தனமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற, கவாஸ்கர் அதிரடியாக ஆட, அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கியது. வழக்கமாக விரைவாக ஆடும் ஸ்ரீகாந்தை விட கவாஸ்கர் குறைந்த பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின் வருகிறார் நவ்ஜோத் சிங் சித்து. அவருக்கான முதல் ஆட்டம். சித்துவும் ஸ்ரீகாந்தும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பிளக்க, எளிதாக இந்தியா வெற்றியைப் பெற்றிவிடும் என்ற நிலையில் ஸ்ரீகாந்த் 70 ஓட்டங்கள் எடுக்க ஆட்டமிழந்தாலும், சித்து 5 சிக்ஸர்களுடன் வான வேடிக்கைகளைத் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம், சிக்ஸர் என்றால் ஒன்றோ இரண்டோ ஆட்டத்திற்கு கிடைக்கும் நிலையில் ஐந்து சிக்ஸர்கள், அதுவுமொரு அறிமுக நாயகன் அடிப்பது என்பது பெரிய விசயம். 207 க்கு இரண்டு விக்கெட்டுகள், 90 பந்துகளில் வெறும் 64 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடங்கியது இந்திய அணியின் தொன்று தொட்டப்பழக்கம்... சித்து, வெங்க்சர்க்கார், ரவி சாஸ்திரி, கபில்தேவ் என வரிசையாக இருக்கைக்குத் திரும்ப, கடைசி ஓவர், 6 ரன்கள் எடுத்தால் வெற்றி,,, மட்டையடிப்பது மனிந்தர் சிங் .... டை ஆன டெஸ்ட் ஆட்டத்தில் கடைசியாக ஆட்டமிழந்தது, மனிந்தர் சிங் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பந்து வீச வருவது ஸ்டீவன் வாக் ... மறு முனையில் நம்பகமான கிரன் மோரே ... அடுத்தடுத்து இரண்டு இரண்டாக நான்கு ஓட்டங்களை எடுத்த மனிந்தர் சிங் நம்பிக்கை சேர்க்கிறார். இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி,.. விட்டதைப்பிடிப்பாரா மனீந்தர் சிங்.... ஸ்டீவ் வாஹின் மிதவேகப்பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் .... ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.... இதே போல மேலும் ஒரு ரன் வித்தியாச பரபரப்பான வெற்றியை 92 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப்போட்டியிலும் ஆஸ்திரேலியா மீள்பதிவு செய்தது.-......
சரி கிரிக்கெட் வர்ணனையெல்லாம் இருக்கட்டும், கபில்தேவ் எப்படி பெருந்தகையாளர் ஆனார் என்று கேட்கிறீர்களா !!! ஆஸ்திரேலியா ஆடும்பொழுது, டீன் ஜோன்ஸ் அடித்த ஒரு சிக்ஸர் நான்காக அறிவிக்கப்படுகிறது. எல்லைக்கோட்டின் அருகே இருந்த ரவி சாஸ்திரி பந்து தலைக்கு மேலே பறந்து எல்லைக்கோட்டைத் தாண்டிய பொழுதும், சிக்ஸர் இல்லை எனக்கூறியதை நம்பி நடுவர் டிக்கி பேர்ட் நான்கு என அறிவிக்கிறார். சாதாரணமாகவே போங்கு ஆட்டம் ஆடும் ஆஸ்திரேலியர்கள், அடித்த சிக்ஸரை சும்மா விட்டுவிடுவார்களா என்ன ... ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முடிந்த பின்னர், ஆட்ட இடைவெளியின் பொழுது டீன் ஜோன்ஸ் அடம்பிடித்து, அணி மேலாளர் அலன் கிராம்ப்டனை கபில்தேவிடம் பேச வைத்தனர். ஆட்டத்தை கண்ணியமாக ஆடும் கபில்தேவ், எந்த ஆட்சேபனையும் இன்றி இரண்டு ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். நான்கு ஆறாக மாற்றப்பட்டு, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 270 ஆக உயர்த்தப்பட்டது. கடைசியில் தோல்விக்கு அந்த பெருந்தன்மை காரணம் என சராசரி ரசிகர்களால் பேசப்பட்டாலும், அன்றைய கிரிக்கெட் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் நினைவுகூறப்படுவதற்கு காரணம் கபில்தேவின் பெருந்தன்மை..... இன்று நன்னடத்தைகளைப் பற்றியும் அழுகுனி ஆட்டங்களைப் பற்றியும் வாய்கிழிய பேசும் ரவிசாஸ்திரியும் டீன் ஜோன்ஸும் எப்பொழுதும் கபில்தேவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதுவரை போகிற வருகிறவர்களால் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, வீறுகொண்டு அடுத்த 30 வருடங்களுக்கு அசைக்கமுடியாத கிரிக்கெட் சக்தியாக மாறிய வித்து இந்த மெட்றாஸ் ஒரு நாள் போட்டியில் தான் விதைக்கப்பட்டது. எழுச்சிப் பெற்ற 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது அதற்குபின் வந்த வெற்றிகள் எல்லாம் வரலாறு ஆனது.
ஆட்ட விபரங்களை இங்கே காணலாம் http://www.espncricinfo.com/ci/engine/match/65093.html