Friday, January 20, 2012

விவிஎஸ். லக்‌ஷ்மண்

1998 ஆம் ஆண்டு, ஷார்ஜாவில் இந்திய அணிக்கு இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒன்று ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, மற்றொன்று இறுதிப்போட்டிக்கு ஓட்டங்கள் விகித அடிப்படையில் தகுதி பெறுவதற்கு,,, இரண்டில் எதையுமே அடைய விட மாட்டோம் என ஆஸ்திரேலியா கடினமான இலக்கை நிர்ணயிக்கிறது. சோம்பலுக்கும் சொதப்பலுக்கும் பெயர் போன, 90களின் இந்திய அணி 138 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் தான் கதையே , அன்றிரவு ஏற்பட்ட மணற்புயலைக்காட்டிலும் பரபரப்பாக மறுநாள் பேசப்பட்டது டெண்டுல்கரின் சூறாவளித்தனமான ஆட்டம். டெண்டுல்கர் மட்டுமே பேசப்பட்டார்.... மறு முனையில் உறுதியாகவும் உறுதுணையாகவும் நின்ற விவிஎஸ் லக்‌ஷ்மணைப் பற்றி மக்கள் பேசவே இல்லை. டெண்டுல்கருடன் இணைந்து இணையாட்டமாக 104 ஒட்டங்கள் எடுத்து ரன்ரேட் அடிப்படையில் தகுதிப் பெற செய்ததில் கண்டிப்பாக லக்‌ஷ்மணுக்கு கால்வாசிப் பங்காவது உண்டு. இத்தனைக்கும் லக்‌ஷ்மணுக்கு மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்.

கடைசி 15 வருடங்களில் தொடர்ந்து கத்தித் தொங்கிக் கொண்டே இருப்பது லக்‌ஷ்மணினின் கழுத்துக்குத்தான் ... அணியில் தடகளப்பு சரியில்லையா.... தூக்கு லக்‌ஷ்மணை, பந்து வீச்சாளர்கள் சரி இல்லையா... லக்‌ஷ்மணை தூக்கிவிட்டு மேலதிக பந்துவீச்சாளரை சேருங்கள் ...என்னது இந்தியா தோற்றுவிட்டதா ... லக்‌ஷ்மணை எல்லாம் இன்னும் ஏனப்பா வைத்திருக்கிறார்கள் ... இந்தப் பல்லவியை லக்‌ஷ்மண் ஆடத்தொடங்கிய நாள் முதல் இன்று வரை கேட்கலாம். இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு கங்குலியின் தலைமைப் பண்புகள் எந்த விதத்தில் உதவியதோ அந்த அளவிற்கு லக்‌ஷ்மணது நிதானமான கோல்கத்தா 2001 டெஸ்ட் ஆட்டமும் இந்தியக் கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டிகளுக்கே புதுப் பரிமாணத்தைக் கொண்டு வந்தது. அற்புதங்கள் அடிக்கடி நிகழ்த்தப்பட்டால் அவை சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடும். லக்‌ஷ்மணால் அந்த அளவிற்கு மீண்டும் ஒரு ஆட்டத்தைக் கொண்டு வர இயலாவிட்டாலும், அந்த ஆட்டத்தின் அடர்த்திக்கு நெருக்கமாக பல ஆட்டங்களில் ஆடி வென்றோ அல்லது அணியைத் தோல்விகளில் இருந்து காத்தோ இருக்கின்றார். முதுகுவலி இருந்தாலும் பொறுத்துக்கொண்டு, புறமுதுகிட்டு ஓடிப்போன ஆட்டக்காரர்களைப்பற்றி நினையாமல் இஷாந்த் சர்மாவுடனும் கடைசியில் பிரக்யான் ஓஜாவுடனும் வெற்றிக்கான இலக்கை அடைய அவர் எடுத்த ஓட்டம் வெறு 76 ரன்களாக இருந்தாலும் அது 281 ரன்களுக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை.



ஏனோதானோவென்று லக்‌ஷமண் இந்திய அணியில் இடம்பெறவில்லை, வலுவாக முதல்தர ஆட்டங்களில் பிரகாசித்து, வெகுவான ஓட்டங்களை எடுத்துத்தான் உள்ளே நுழைந்தார். ரஞ்சிப்போட்டிகளில் இரண்டு முச்சதங்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து 9 ஆட்டங்களில் சதமடித்து தனது இருப்பை தேர்வாளர்களுக்குக் காட்டிக்கொண்டே இருந்தார். கடவுள்களும் மஹாராஜாக்களும் இருந்த இந்திய அணியில் முழுக்க முழுக்க தனது விடாமுயற்சியாலும், தொடர்ந்த அர்ப்பணிப்புடனும் அணியில் இருந்து வருபவர்.

96 ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகமான லக்‌ஷ்மண் முதல் ஆட்டத்திலேயே அரை சதத்தைக் கடந்தார். இவர் அணில் கும்ப்ளேவுடன் இணைந்து எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்த 56 ஓட்டங்கள் கடைசியில் இந்தியா வெற்றியைப் பெற மிகப்பெரும் காரணமாகும். கடைவரிசை ஆட்டக்காரர்களை கண்ணியமாக வழி நடத்தி, தேவைப்படும் ஓட்டங்களை எடுக்க வைப்பதில் லக்‌ஷ்மண் எப்பொழுதுமே கெட்டிக்காரர். பின்வரிசை ஆட்டக்காரர்கள் லக்‌ஷ்மணுடன் ஆடும்பொழுது, தன்னம்பிக்கையுடன் ஆடுவதைக் கவனித்து இருக்கலாம். மத்திய வரிசை ஆட்டக்காரரான இவரை, அணியின் துவக்க ஓட்டக்காரராக பலிகடா ஆக்கப்பட்டார். லக்‌ஷ்மணுக்கு விருப்பம் இல்லை என்றாலும் துவக்க ஆட்டக்காரராக சித்துவுடனும் ரமேஷுடனும் சில ஆட்டங்கள் களமிறங்கினார். சில அரைசதங்களை எடுத்தபோதிலும், இவரின் சிட்னி ஆட்டம் இவரைக் கவனிக்க வைத்தது. இவர் எடுத்த 167 ஓட்டங்கள் தொடர்ந்த ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற வைத்தது. ஒரு நாள் போட்டிகளில் சோபிக்காவிட்டாலும், சில டெஸ்ட் போட்டிகளுக்குப்பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியாவை நொங்கு எடுத்த 281 ஓட்டங்கள் இவரின் இரண்டாவது சதமானது,

ஆரம்பகால விவிஎஸ் லக்‌ஷ்மணினின் பேட்டியைக் காண http://www.espncricinfo.com/ci/content/story/85437.html

ஆறு ஒருநாள் சதங்கள் , இரண்டாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் , ஒரு உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட ஆடாத பிரபல வீரர் யார் என வினாடிவினா வகையில் கேள்வி கேட்கப்பட்டால் அதன் விடை விவிஎஸ் லக்‌ஷ்மண், ஓடத் தெரியாதவர், ஆடத்தெரியாதவர் என்றெல்லாம் எகத்தாளமாகப் பேசப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தானிலேயே கைப்பற்றக் காரணமாக இருந்தவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். லாகூரில் நடை பெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்து அந்த ஆட்டத்தையும் தொடரையும் வெற்றி பெறச்செய்தார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா 325 இலக்கை வெற்றிகரமாக எட்டிய அகமதாபாத் ஒருநாள் ஆட்டம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி ஒருநாள் ஆட்டசதம் என பல சிறப்பான ஆட்டங்களை ஆடியிருந்த போதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் எடுக்கும் 20 களையும் 30 களையும் சதமாகவோ அரைசதமாகவோ மாற்றமுடியாமல் போகும்பொழுது , நன்றாக ஆடி இருந்த போதிலும் சராசரிகளையும் சதங்களையும் வைத்து ஆட்டத்திறனை மதிப்பிடும் இந்தியக் கிரிக்கெட் மனோபாவத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டார்.

எல்லா சாபங்களிலும் ஒரு மறைமுக வரம் இருக்கின்றது. லக்‌ஷ்மணால் டெஸ்ட் ஆட்டங்களில் மேலும் நேர்த்தியாக ஆட முடிந்தது. பணிச்சுமை குறைந்தது. டெஸ்ட் ஆட்டங்கள் இல்லாதபொழுது ஓய்வு எடுக்காமல் பயிற்சிகளோ அல்லது ரஞ்கிப்போட்டிகளிலோ தொடர்ந்து ஆடி வருபவர். வலைப்பயிற்சிகளைக் காட்டிலும் , உண்மையான ஆட்டங்கள் ஆடும்பொழுதே சிறந்த பயிற்சி கிடைக்கின்றது, அது உள்ளூர் போட்டிகளாக இருந்த போதிலும் கூட..... யார் வீசினாலும் சில மைக்ரோ வினாடி கவனம் சிதறினாலும் ஆட்டமிழக்க இருக்கும் நிகழ்தகவு அனைத்துப்போட்டிகளிலும் ஒரே அளவே....

டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் திராவிட் ஏவிஎம் ராஜன் என்றால் , திராவிடிற்கு லக்‌ஷ்மண் ஏவிஎம் ராஜன். கோல்கத்தா, அடிலெய்ட் என மறக்க முடியாத டெஸ்ட் ஆட்டங்களில் இந்த இணை கலக்கி இருந்தாலும் உள்ளூர்ப்போட்டிகளிலும் அதே அளவு ஆட்டத்தைத் தருவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம், 2003 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரானிக் கோப்பை ஆட்டத்தில் வெற்றி இலக்கு 340 என மும்பையால் நிர்ணயிக்கப்பட்டபொழுது, அசராமல் சிவாஜி - திராவிடும், ராஜன் - லக்‌ஷமனும் இணைந்து வெற்றியைத் தேடித் தந்தனர். ஆட்ட விபரம் இங்கே http://www.espncricinfo.com/india/engine/match/133757.html

கடைசி 10 வருடங்களில் மறக்க முடியாத இந்திய டெஸ்ட் வெற்றிகளை எடுத்துப்பாருங்கள், அதில் லக்‌ஷ்மணது பங்கு பாதிக்குப் பாதி இருக்கும். தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய ஆட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அதிலும் லக்‌ஷமணது பங்கு இருக்கும். 37 வயது ஆகி இருந்தாலும் , கடந்த 6 வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆடததால் , லக்‌ஷமணது ஆட்டத்திறனின் நீட்டிப்பு அதிகமே.... இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஊடகங்களும் எவ்வளவு மறதித் திறன் உடையவர்கள் என்பதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரும் சதத்தை அடித்தவர் லக்‌ஷமண்.

சிலர் சொகுசாக அனைத்தும் தனக்கு சாதகமாக இருந்தால் தான் ஆடுவார்கள், வெகுசிலர் எட்ட முடியாத இலக்கு, போராடினால்தான் வெற்றி , கழுத்துக்கு மேலே கத்தி, ஏழு கடல் ஏழு மலைத் தாண்டித்தான் சாதனையை அடைய முடியும் என்றால் புத்துணர்ச்சியுடன் ஆடுவார்கள். டெஸ்ட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி லக்‌ஷ்மண் ஒவ்வொரு சறுக்கலிலும் மீண்டு வந்தார் என்பது தெரியும்.

தன்னை ஏமாற்றி பவுல்ட் ஆக்கிவிட்டார்களோ என முழிக்கும் அதே லக்‌ஷ்மண் , அடுத்த ஆட்டத்தில் எதிர்ப்பக்கம் போகும் பந்தை மணிக்கட்டை சுழற்றி கால்பக்கம் அடித்து நம்மை மெய் மறக்கச்செய்வார். சிலர் வைனைபோன்றவர்கள், காலம் ஆக ஆகத்தான் அவர்களின் மதிப்பும் பெருமையும் கூடிக்கொண்டேப்போகும். வாழ்க்கைக்கு நெருக்கமான விளையாட்டான டெஸ்ட்போட்டிகளில் வயதைக் காரணம் காட்டி ஒருவரைக் கீழேத் தள்ளிவிடுவது டெஸ்ட்போட்டிகளின் மூலம் நாம் கற்கும்பாடங்களுக்கு அழகல்ல.... நிச்சயம் பத்தாயிரம் டெஸ்ட் ஓட்டங்களை எடுத்தப்பின்னர்தான் லக்‌ஷமண் ஓய்வு பெறவேண்டும் , அப்பொழுதுதான் அவருக்கும் அவரின் பங்கிற்கும் ஒரு முழுமைத்துவம் கிடைக்கும்.

“நிக்காதடா.... வேடிக்கைப்பார்க்கதேடா ...ஓடுறா டேய் “ என அன்று ஓஜாவிடம் கத்தியது போல, உமேஷ் யாதவிடமோ அஷ்வினிடமோ அணிக்காகவும் அணியின் வெற்றிக்காகவும் லக்‌ஷ்மண் மீண்டும் ஒருமுறையல்ல, பலமுறை சத்தம் போட வேண்டும் என்பதே டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.