Wednesday, January 18, 2012

கவிழ்ந்த கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோ



டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து நூறாவது ஆண்டு நினைவுதினம் நெருங்கிக் கொண்டிருக்கையில், இத்தாலிய கடற்பகுதியில் பிரம்மாண்டமான கோஸ்டா கன்கார்டியோ ( Costa Concordia) தரைத் தட்டிக் கவிழ்ந்தது. நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களுடன் பிராயணப்பட்டுக்கொண்டிருந்த உல்லாசக்கப்பல், சிவிட்டாவெக்கியா(Civitavecchia) என்ற இடத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் கியில்யோ (Giglio Islands)என்ற தீவுக்கருகில் தரைத் தட்டியது. இதுபோன்ற உல்லாசக்கப்பல்களில் சிலமுறை பயணம் செய்து இருப்பதால், தனிப்பட்ட அளவிலும் இந்த விபத்து பாதித்தது.



டைட்டானிக் கப்பலைப் போல பெரும் உயிர்சேதம் இல்லை என்ற போதிலும், மத்தியத் தரைக்கடலின் மிதக்கும் நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இந்த கப்பல் சாய்ந்தபடி கிடக்கும் புகைப்படங்கள் பரவலாக அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. விபத்தைக் காட்டிலும் அதிகமாக இத்தாலியில் தற்பொழுது விவாதிக்கப்படுவது கப்பல் கேப்டனின் விபத்திற்கு முன்னரும் பின்னரும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம்.



இருபது வருடங்களுக்கு முன்னர், தஞ்சாவூர் வாணக்காரத் தெரு வழியாக பேருந்துகள் செல்லாது, வண்டிக்காரத் தெருவழியாகத்தான் புறநகரப்பேருந்துகள் செல்லும். ஆனாலும் மதியம் ஒரு மணி அளவில் சில சோழன் போக்குவரத்து கழகபேருந்துகள் மட்டும் ஒன்று, தனது வீட்டில் இருந்து கட்டுச்சோற்றை வாங்கவோ, அல்லது தனது உறவினர்கள் யாரையேனும் இறக்கிவிடவோ வாணக்காரத் தெரு வழியாக பயணப்படும். பேருந்துகளுக்கு சரி, கப்பல்களுக்கு ... கப்பலை ஓட்டும் குழுவினரில் ஒருவர் வசிக்கும் தீவை ஒட்டி கப்பலை செலுத்தி, உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம் செய்ய முற்பட்டபொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அகண்ட கடற்பகுதி இருந்தாலும் பொதுவாகக் கப்பல்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வழித்தடத்தில்தான் பயணப்படவேண்டும். இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கப்பல் தலைவரின் முடிவில் பாதைகள் மாற்றப்படலாம். எதிர்வரும் அபாயத்தை அறியாமல் கரையை ஒட்டிப்போக, பெரும்பாறையில் மோதி சாய்ந்தது.

கப்பலின் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவிற்கும் துறைமுகக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் நடந்த உரையாடலில், கப்பல் கவிழ்ந்தவுடன் கப்பலையும் பயணிகளையும் அதோகதியாக விட்டுவிட்டு கேப்டன் ஓடி இருக்கிறார் என்பது தெளிவாகி இருக்கின்றது.



கேப்டனின் பதில்கள் வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனின் சாக்குப்போக்குகள் இருக்கின்றன. உரையாடலின் உச்சமாக, துறைமுகப் பொறுப்பு அதிகாரி கோபம், நீ உயிர் பிழைத்து இருக்கலாம், இதற்கான விலையை நீ கொடுத்தாகவேண்டும்,, உன் வாழ்க்கை இனி அத்தனை சுலபமாக இருக்கப்போவதில்லை என வார்த்தைகளாக வெளிப்பட்ட போதிலும் கோழைத்தனத்தின் சிகரமாக பிரான்சிஸ்கோ கப்பலுக்கு மீண்டும் போகவே இல்லை. விடியற்காலையில் டாக்ஸி பிடித்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அடிபட்ட நாயின் கண்களில் தெரியும் கலவரமும் பயமும் கேப்டனிடம் காணப்பட்டதாக இத்தாலியருக்கே உரிய உவமையுடன் அவரைக்கூட்டிச் சென்ற டாக்ஸி ஓட்டுனர் சொல்லுகின்றார்.



தனக்கு அளிக்கப்பட்ட கடல் மேப்பில் அந்த பாறை இருக்கவே இல்லை, தன்னுடைய உயிர்கவச ஆடையை வேறு ஒருவருக்கு அளித்து விட்டதால் மீண்டும் கப்பலுக்கு செல்லவில்லை, தனது மேற்பார்வையின் பேரில் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது என வாதிட்டாலும், கேப்டனின் வாதங்கள் எடுபடப்போவதில்லை என இத்தாலிய சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். 2002 ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரியாக பணியில் கோஸ்டா கப்பல் நிறுவனத்தில் சேர்ந்த பிரான்சிஸ்கோ , 2006 ஆம் ஆண்டு கப்பலின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.

எத்தனைப் பாதுகாப்பு அம்சங்களோடு இருந்தாலும் சரி, கப்பலின் கேப்டனாக முதன்முறை பொறுப்பேற்கும்பொழுது , டைட்டானிக் பற்றிய கேள்வித் தவிர்க்கப்படமுடியாதது.-

“பனிப்பாறைகள் மிதக்கும் கடல்பாதையின் வழியாக டைட்டானிக் கப்பலை பயணிக்கவைத்தது முதல் தவறு, மேலும் சமகால தொழில்நுட்ப வசதிகளில் டைட்டானிக் போன்று ஒரு விபத்து ஏற்படுவது சாத்தியமல்ல” என்பது தான் 6 வருடங்களுக்கு முன்னர் பிரான்சிஸ்கோவின் பதிலாக இருந்தது.

இவ்விபத்திற்குப்பின்னர், பிரான்சிஸ்கோவின் அத்தனை முந்தைய நடவடிக்கைகளும் அலசப்படுகின்றன. விபத்திற்கு முன்னர் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டதை, இயல்பாக கப்பல்களில் நடக்கும் ஒன்றைக்கூட அலட்சியக்காரணிகளில் ஒன்றாக முன்வைக்கின்றார்கள்.

வரலாறு, அனைத்து பிரம்மாண்டங்களின் வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணம் அலட்சியமே எனத் திரும்ப திரும்ப பதிவு செய்தாலும், பாடங்கள் நினைவுக்கூறப்படுவதில்லை. மெத்தனத்துடன் அலட்சியமும் கைக்கோர்க்கும்பொழுது, விபத்துக்களுடன் கையாலாகத கோழைகளும் வரலாற்றில் அடிக்கடி நினைவுகூறப்படுவார்கள் , பிரான்சிஸ்கோ ஸ்கெட்டினோவும் அத்தகையவர்களில் ஒருவர் ஆவார் என்பது துரதிர்ஷ்டவசமானதே !!! அடுத்தமுறை கப்பலில் பயணப்படும்பொழுது, கேப்டனின் வரவேற்புரையை உன்னிப்பாகக் கேட்கவேண்டும், குறைந்த பட்சம் அடுத்த ஒரு நாளாவது எனது உயிரும் உடைமைகளும் அவரின் பொறுப்பல்லவா...