Friday, January 13, 2012

ரயில் பயணங்களில் - துணுக்குகளின் தொகுப்பு




பிடித்த விசயங்கள் சிலவற்றைப் பெண்களாக மாற்றிக்கொள்ளவரம் கிடைத்தால், கிரிக்கெட்டிற்குப்பின் ரயில்போக்குவரத்தைப் பெண்ணாக மாற்றிவிடுவேன். உலகத்தை சுருங்கிய கிராமமாக மாற்ற போடப்பட்ட முதல் அடிக்கல் இருப்புப்பாதைகள். இருப்புப்பாதைகளை, ரயில்வேஸ் என அழகான ஆங்கிலத்தில் சொல்லமால் அசிங்கமாக இரும்பினால் ஆனால் பாதைகள் என்ற பொருள் தரும் பதம் எப்படி வந்தது என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே உண்டு. நெடுங்காலம் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய ஆங்கிலத்தில் ரயில்வே என்பதில் எந்த இரும்பு சம்பந்தப்பட்டதும் இல்லியே, பின்னர் எப்படி என யோசித்தது உண்டு. ஆங்கிலத்தைத் தவிர, ஏனைய ஐரோப்பிய மொழிகளில் ரயில்பாதைகளுக்கு, இரும்பினால் அமைக்கப்பட்ட பாதைகள் என்ற சொற்பதத்திலேயே அர்த்தங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு, Chemin de fer என பிரெஞ்சு மொழியிலும், Eisenbahn என ஜெர்மன் மொழியிலும், Järnväg என சுவிடீஷ் மொழியிலும் , Ferrovie என இத்தலிய மொழியிலும் Fer, Eisen, Järn , Ferro என இரும்பைக் குறிப்பிடும் வார்த்தைகள் முறையே அமைந்துள்ளதை அறிந்த பின்னர் இருப்புப்பாதை என்ற மொழியாக்கம் ரயிலைப்போலவே அழகாக தெரிய ஆரம்பித்தது.

பெண்களும் கிரிக்கெட்டும் சுவாரசிய அம்சங்களாக வாழ்க்கையில் இடம்பெறும் முன், என் வாழ்க்கையில் நுழைந்தவை ரயில் வண்டிகளும், ரயில் பாதைகளும் ரயில்
நிலையங்களும்தான். கடை 80கள் ஆரம்ப 90களில் கொல்லத்தில் இருந்து திருச்சி வழியாக நாகூர் வரை செல்லும் தொடர்வண்டியில் கொரடாச்சேரி வரை செல்லும் பயணங்கள் தான்
ரயிலின் மீதான காதலை அதிகரித்தன. அன்றைய ரயில்வே அமைச்சர், ஜாபர்ஷெரீப் பெங்களூரில் இருந்து நேரிடையாக ரயிலில் நாகூர் செல்ல முடியவில்லை என திருச்சி நாகூர்
அகலரயில் பாதை திட்டம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லுவார்கள். திருச்சி நாகூர் மீட்டர்வழி ரயில் பாதை நிறுத்தப்பட்டவுடன் சிலப்பல வருடங்கள் ரயில் பிரயாணங்கள்
தடைப்பட்டன.சன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு, நெடும் வளைவுகளில் தொடர்வண்டியின் எஞ்சினைப் பார்க்கும் ஆனந்தம் இன்றும் கோபன்ஹேகன் கார்ல்ஸ்க்ரோனா ரயிலில்
செல்லும்போதும் தொடர்கின்றது. ரயிலின் மீதான காதல் ரயிலைக்காட்டும் திரைப்படங்களையும் விரும்பிப்பார்க்க வைத்தது. செந்தூரப்பூவே என்ற ஒருபடம், ரயிலுக்காகவே அடிக்கடிப்பார்த்த படம்.

அகத்தா கிறிஸ்டியின் Murder on the Oriental Express என்ற கதை முழுக்க முழுக்க ஓரியண்டல் விரைவு ரயிலில் நடப்பதாக எழுதி இருப்பார். ஆடுகளம் திரைப்படம் பிடிக்க பலக்காரணங்களுள் ஒன்று, ரயில்வே காலனி பின்புலம். திருச்சியில் ரயில்வே காலனியைக் கடக்கும்பொழுதெல்லாம் இவர்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் ரயிலில் போவார்களே ஒரு பொறாமை கலந்த ஏக்கம் ஏற்படும். ஒரு வேளை பத்தாவது படிக்கும்பொழுது எழுதிய ரயில்வே துறைக்கான தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ !!



காதல் தோல்விகள் எதைப்பார்த்து நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ, கைவிடப்பட்ட ரயில் பாதைகளைப் பார்த்தவுடன் சட்டென நினைவுக்கு வரும். உலகத்திலேயே அழகான
கோலம் என்னவென்றால் ரயில்பாதைகள்தாம், இந்தியத் துணைக்கண்ட பிரிப்பின் போது ரத்தமின்றி துண்டானது தண்டவாளங்களும்தான், எல்லைகளில் தொடர்பற்று துண்டுகளாகக்
கிடக்கும் தண்டவாளங்களும் தன் பங்கிற்கு வரலாற்றைச் சேர்த்து வைத்திருக்கின்றனஅதை அழிக்க எப்படி மனசு வருகின்றதோ....



ரயில் போக்குவரத்துகளில் மிகவும் பிடித்தது
குறைவேக பயணிகள் ரயில்கள்தான் எனினும் சமீபகாலமாக ரயில்டிராம்கள் பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. டிராம் போக்குவரத்தை அனுபவிக்க வேண்டுமானால் கண்டிப்பாக
சுவிட்சர்லாந்தின் ஜூரிச் அல்லது ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு ஒரு முறையேனும் பயணப்படவேண்டும். நகரம் முழுவதும் அழகிய கோலத்தின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் போல எண்ணிலடங்கா டிராம்கள் , டிராம்களில் நகரத்தைச் சுற்றிப்பார்ப்பது கவித்துவமானது.





பிடித்த ஒன்று என இருந்தால் பிடிக்காத ஒன்றும் இருக்கவேண்டும்தானே... சுரங்கவழிப்பாதைகளில் செல்லும் மெட்ரோ ரயில்களை காதை அடைக்கும் வேகத்தினாலும் நெரிசலினாலும் பிடிக்காது..

ரயில்களைப் பற்றி சிலத்துணுக்குகளுக்குப் போகும் முன்னர் ஒரு கேள்வி, சென்னையில் இருந்து பாரிஸிற்கு ரயில்விடமுடியுமா தொடர்ச்சியாக ரயில்பாதை இணைப்புகள் இருந்த போதிலும் நேரிடையான ரயிலை இயக்க முடியாது. (Bogie exhange முறையில் சக்கரங்களை மாற்றி தொடர்ந்து ஓட வைக்க முடியும் எனினும், சில இடங்களில் சரக்கு ரயில்களைத் தவிர பயணிகள் ரயில்களுக்கு இந்த முறைப் பயன்படுத்தப்படுவதில்லை) ஏனெனில் இந்தியவில் பயன்படுத்தப்படும் அகலரயில் பாதைகள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய அகலரயில் பாதையில், தண்டவாளங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, நீண்ட தூர பயணிகள் சரக்குப்போக்குவரத்தில் இந்திய ரயில்வே பயன்படுத்தும் ரயில்பாதைகள் ஐரோப்பியப் பாதைகளை விட அகலமானது. துணைக்கண்டத்தைத் தவிர, அர்ஜெண்டினாவிலும் சிலியிலும் 1676 மில்லிமீட்டர்கள் இடைவெளியுடன் கூடிய தண்டவாளப்பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷியா பின்லாந்து நீங்கலாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளின் அகலம் 1435 மில்லிமீட்டர்கள். 1435 மில்லிமீட்டர்கள் அகலம் கொண்ட பாதைகளே பன்னாட்டுத் தரமாகப் பார்க்கப்படுகின்றது. சுற்றுத்தலங்களிலும், மலைத் தோட்டங்களிலும், பூங்காக்கள் அருங்காட்சியகங்களிலும் 600 மில்லிமீட்டர்களுக்கும் குறைவாக உள்ள இருப்புப்பாதைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் மிதமிஞ்சிய பணக்காரன் ஆகும்பொழுது, பரந்த நிலப்பரப்பை வாங்கி குறைந்தபட்ச தூரத்திற்காவது நிஜ ரயில் விட்டுப் பயன்படுத்தவேண்டும்.

மைசூரில் மீட்டர்வழிப்பாதையும், அகலவழிப்பாதையும் ஒரே தடத்தில்




இந்தியக்குடியரசில் ஹிம்சாகர் விரைவுவண்டி அகலரயில் பாதைகளில் தொலைத்தூரப்பாதைவண்டியாகும். கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவி வரை 3751 கிலோமீட்டர்கள் பயணப்படுகின்றது. அதிகநேரம் பயணப்படும் வண்டியும் இதுதான்.

மஹராஷ்டிராவில் ஸ்ரீராம்பூர் பேலாப்பூர் என்ற இரு ரயில்நிலையங்கள் இருக்கின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவெனில் தண்டவளாங்களுக்கு எதிரெதிரே அமைந்திருக்கின்றன. ஒரு வழியில் ஸ்ரீராம்பூர் எனவும் , எதிர்வழியில் பேலாப்பூர் எனவும் அழைக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் இந்தியப்போர்களில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கிருந்தாலும், ஒருமுறை இந்திய ரயில் எஞ்சினை பாகிஸ்தானியர் கைப்பற்றி, அதற்கு இந்திராகாந்தி எனப்பெயரிட்டு
பாகிஸ்தானிலேயே வைத்துகொண்டனராம்.

உலகத்திலேயே சிறியரயில் பாதை வலையத்தைக் கொண்டிருக்கும் நாடு வாடிகன்.

கௌகாத்தி - திருவனந்தபுரம் விரைவு வண்டி இதுவரை ஒரு முறை கூட சரியான நேரத்திற்கு ஓடியது இல்லையாம்.

ஸ்வீடன் மால்மோ நகரத்தில் இருந்து பெர்லின் வரை செல்லும் விரைவுரயில், டென்மார்க் - ஜெர்மனி எல்லையில் ஒரு கப்பலில் ஏற்றப்பட்ட மறுமுனையில் இறக்கிவிடப்படும். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ரயில் கப்பலில் இருந்தபடி பயணிக்கும். (எதிர்காலத்தில் மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்தவகையில் விரைவுவண்டிகள் ஓடவேண்டும்)
இந்தியரயில்வேயின் ஆரம்பக் காலங்களில் தில்லி - கல்கத்தா ரயில் பெட்டிகள் அலகாபாத்தில் படகுகள் மூலம் அக்கறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பரப்பளவில் ஓரளவிற்கு பெரியபகுதியாக இருக்கும் ஐஸ்லாந்தில் ரயில் போக்குவரத்து கிடையாது.



மேற்கண்ட புகைப்படம், படிதாண்டிய கிரான்வீல் - பாரிஸ் விரைவு வண்டி சுவரை உடைத்துக்கொண்டு மறுப்பக்கம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆண்டு 1895.

பின்லாந்திற்கும் ஸ்வீடனுக்கும் ரயில்பாதைகளின் அகலங்களில் வேறுபாடுகள் இருப்பதால், பின்லாந்தின் துரூக்கு துறைமுகத்தில் Bogie exchange என்ற முறையில் சரக்கு ரயில் சக்கரங்கள் மாற்றப்படும். பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் வேறு ரயிலுக்கு மாறியாகவேண்டும்.

இந்தியதொடர்வண்டிகளுக்கான ரசிகர் மன்றமே கீழ்க்கண்ட தளத்தில் இயங்குகிறது. ரயில் ஆர்வலர்கள் சேமித்துவைக்க வேண்டியத் தளம் இது

http://www.irfca.org/index.html


உலகம் இணையத்தால் இணைகிறதோ இல்லையோ... இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட வேண்டும். இரும்பிற்கும் இதயம் உண்டு என்பதை வாழ்க்கை முழுவதும் நமக்கு கிடைக்கும் ரயில் சினேகங்கள் மூலம் உணர்ந்து கொண்டே இருக்கலாம்.