Friday, November 11, 2011

போலாந்து - ஃபீனிக்ஸ் தேசம்

ஒரு பக்கம் வாசனைத் திரவியங்களுக்காகவும் தங்கத்திற்காகவும் நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய மன்னாராட்சி வல்லரசுகளின் மத்தியில், அமைதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஒற்றுமையே பலம் என்ற தற்கால ஐரோப்பிய ஒன்றிய கோட்பாடுகளை அன்றே செயற்படுத்திய போலாந்து இன்று (நவம்பர் 11) தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
சோவியத் ரஷியாவின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு மாநிலமாக 50 ஆண்டுகள் பொதுவுடைமை சித்தாந்த அடிப்படையில் ஆட்சி நடைபெற்ற போலாந்து தேசம் தான், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சி தத்துவத்தை ஆட்சி முறையில் நடைமுறைப்படுத்தியது என்பதைக் கேட்க வியப்பாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் எப்பொழுது ஏப்பம் விடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ரஷியா, மறுபக்கம் கடல் வாணிபம் என்ற பெயரில் கடற்கொள்ளையர்களாகத் திரியும் சுவீடன் தேசத்து கடற்படை, வேறொரு பக்கம், மேற்கு ஐரோப்பா முழுவதையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் துருக்கிய ஆட்டோமான், இவற்றிற்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டு, தங்களுக்குள்ளும் அடித்துக்கொண்டிருந்த லித்துவேனியாவும் போலாந்தும் கூட்டமைப்பாக இருப்பது என முடிவு செய்தன.அரசன், கடவுளுக்கு அடுத்தபடி என ஐரோப்பாவே மந்திரித்து திரித்துவிட்டதுபோல இருந்த சமயத்தில், மன்னனின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி தேர்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வழியாக கூட்டாட்சித் தத்துவம் செயற்படுத்தப்பட்டது. லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பில் தற்கால பெலாரஸ் , எஸ்தோனியா ,லாட்வியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, உக்ரைன் மற்றும் ரஷியாவின் சிலபகுதிகளும் அடங்கி இருந்தன. பலதரப்பட்ட இன மக்கள், அவர்களில் பல்வேறு மொழிகள் பேசும் இனக்குழுக்கள், ஆதி தெய்வங்கள் முதற்கொண்டு ஆபிராகமிய மதங்கள் வரை பின்பற்றும் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தது இன்றளவிலும் வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்படுகிறது.போலிஷ் மொழி முதன் அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் லத்தீன், ஜெர்மன், ஹீப்ரூ, ஆர்மீனியன், ஸ்லேவேனியன் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்தன. பிரெஞ்சு நீதிமன்ற தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டது.சோழ சாம்ராஜ்யத்தைப்போல பண்பட்டு 1569 முதல் 1795 வரை கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள் வெற்றிகரமாக செயற்பட்ட லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பு வீழ்ந்ததன் காரணங்கள் பலவாக இருந்தாலும் மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் முக்கியமானதாக சொல்லபடுகிறது. தற்பொழுதைய ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழுவில் இருக்கும் ரத்து அதிகாரத்திற்கு நிகரானது. பலமிழக்கும் கூட்டமைப்பை வலுப்படுத்த, திருத்தி வடிவைமைக்கப்பட்ட அரசியலைப்பு சட்டம் 18 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்த ஆஸ்திரிய, பிரஷிய , ரஷிய தாக்குதல்கள் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அரசாங்கம் அப்பத் துண்டுகள் போல தனித்தனியே வெட்டி எடுக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. வாழ்ந்து கெட்டவர்கள் படும் துன்பங்களை ஏனைய ஐரோப்பா கொண்டாடிக்கொண்டிருக்கையில் ஆட்டோமான் துருக்கிய அரசு, கூட்டமைப்பு உடைந்ததை அங்கீகரிக்கவில்லை.

நூற்றாண்டுகள் தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போலாந்து இன மக்கள், தனது மொழியைப் பேச மறுக்கப்பட்டனர், ரஷிய , ஜெர்மானிய அடையாளங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். பதுங்கு அறைகளில் போலாந்திய மொழி அடுத்து வரும் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடையாளங்கள் உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கப்பட்டது. இடையில் நெப்போலியன் ஒரு பரப்பளவில் சிறிய நாட்டைப் பெற்றுத்தந்தாலும், மீண்டும் நெப்போலியனின் தோல்விக்குப்பிறகு போலாந்திய மக்கள் அகதிகள் ஆகினர். தற்கால தமிழர்களைப்போல தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என ஒரு நாடில்லை கதியில் போலாந்து மக்களின் துயரம் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் நாடற்று இருந்த போலாந்திய இனம், முதலாம் உலகப்போரின் முடிவில், ரஷியாவின் உள்நாட்டுக்குழப்பம், ஜெர்மனியின் பின்வாங்கல் ஆகியனவற்றுடன், சுதந்திரக் காற்றை சுவாசிக்க இரண்டு தலைமுறையாய் காத்துக்கொண்டிருந்த போலாந்து மக்கள் ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் ஒன்று திரண்டனர். எஞ்சி இருந்த ஜெர்மானிய ஆதிக்கத்தை துரத்தி அடித்து ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் இரண்டாம் போலாந்து குடியரசு உதயமான நாள் தான் நவம்பர் 11.உணர்ச்சிப்பூர்வமாக நான்கு ஒன்றுகள் அடுத்தடுத்து இருக்கும் இந்த நாள், ஒவ்வொரு போலாந்தை சேர்ந்தவரும் தன அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் வந்த ரஷியாவின் பொம்மை அரசாங்கம் அரை நூற்றாண்டு காலத்திற்கு , இந்த நாளுக்கான மரியாதையை குப்பையில் போட்டது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள், போலாந்தில் இருந்த யூதர்களை வேட்டையாடியபொழுது, உயிரைக்கொடுத்தாலாவது யூதர்களைக் காப்பாற்ற வேண்டும் என போலாந்து மக்கள் பிரயத்தனப்பட்டார்கள். இலங்கையில் 80களின் இடையில் ஜேவிபி இளைஞர்களுக்கு அடைக்கலம் அளித்த தமிழ் குடுமபங்கள் இங்கு நினைவுக்கு வருவது தடுக்க முடியாதது. வரலாற்றுப்பூர்வமாக நோக்கினால் , ஐரோப்பா முழுமைக்கும் நிலவிய யூத எதிர்ப்பு போலாந்து சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் மிக மிகக்குறைவு, இதற்கு ஒரு காரணம் லித்துவேனிய-போலாந்து கூட்டமைப்பு காலம் தொட்டு ரத்தத்தில் ஊறி இருந்த சகிப்புத்தன்மை, பெருந்தன்மை. யூதர்களுக்கு சமமாக போலாந்து மக்களும் கொல்லப்பட்டாலும் (முதலில் ஜெர்மானிய ராஜிக்கள், பின்னர் ரஷியா), யூதப்படுகொலைக்கு ஈடாக போலாந்திய இனப்படுகொலை வரலாற்றில் உணரப்படுவதில்ல்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் போலாந்து ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர், போலாந்து தேசியவாதிகளில் நாடுகடந்த அரசாங்கம் முதலில் பாரிஸில் இருந்தும் பின்னர் லண்டனில் இருந்தும் செயற்படத் தொடங்கியது.

ஏட்டளவு அரசாங்கமாக இருந்தாலும், நாடுகடந்த அரசாங்கத்தின் தொடர் இயக்கம் போலாந்து மக்களின் ரஷிய ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளுக்குள் கணர வைத்துக்கொண்டே இருந்தது. தங்களின் இன மொழி தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு கோரிப்போராடி வருபவர்களுக்கு இந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் பற்றிய பார்வை ஒரு உற்சாக மருந்து. நாடுகடந்த அரசாங்க செயற்படுகளின் தொடர் முயற்சிகளில் , 80 களின் தொடக்கத்தில் ரஷியாவின் பொம்மை அரசாங்கத்தின் அடித்தளம் கிடான்ஸ்க் நகரில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் ஆடத் துவங்கியது. உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து முதன் முதலில் மீண்டும் ஒருமுறை ஃபீனிக்ஸ் பறவையாய் சுய அடையாளத்தைக் கண்டது. மீண்டும் நவம்பர் 11 சுதந்திர தினம் ஆனது. மக்களாட்சித் தத்துவத்தை உலகிற்கு நடைமுறைப்படுத்திக் காட்டிய போலாந்து மக்கள் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு எதிராக கிளம்பினர் என்பதை விட, ஆதிக்க ரஷியாவிற்கு எதிராக நூற்றாண்டுகளாகப் போராடியதைப்போல, 80 களின் பிற்பகுதியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். வோட்காவிலும் வினிகரிலும் எழுச்சியை முடக்க நினைத்தாலும், இறுதியில் வைராக்கியம் வென்றது. மக்களாட்சியாகட்டும் பொதுவுடமைத் தத்துவமாகட்டும் முழு அதிகாரங்களுடன் நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒரு தத்துவமும், அது சார்ந்த அரசாங்கமும் தோல்வியில் முடிவடையும் என்பது போலாந்தின் வரலாற்றில் கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடமாகும்.
தொடர் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது கண்ணிமைக்கும் நேரம், அடையாளங்களைத் தொடர்ந்து எழுச்சியுடன் வைத்திருப்பது எப்படி என்பதை தமிழ்ச் சமுதாயம் போலாந்து தேசியத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. உலகிற்கே உதாரணமாக விளங்கிய சில நூற்றாண்டுகள், ஒடுக்கப்பட்டு ஓடி ஓளிந்து பாதாள அறைகளில் விழுமியங்களையும் மொழியையும் அடையாளங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது, வல்லரசுகள் மத்தியில் நசுங்கி சின்னா பின்னம் ஆனாலும், ஏகாதிபத்திய திமிங்கல வாயில் நுழைந்து விடாமல், நாடுகடந்த அரசாங்கங்களின் ஊக்கத்தில் விசுவரூபம் எடுத்து அடையாளாங்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் போலாந்து தேசியத்திடம் இருந்து தமிழர்களும் தமிழ் தேசியமும் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனர். அப்பொழுதுதான் தமிழர்கள் நண்டுகள் அல்ல , அவர்கள் ஃபீனிக்ஸ் பறவைகள் என வரும் வரலாறு சொல்லும் காலமும் கனவும் நிறைவேறும். ஆம் நவம்பர் 11 ஆம் தேதிக்கும் நவம்பர் 27 ஆம் தேதிக்கும் பெரிய இடைவெளி இல்லை.

---

போலாந்து தேசத்தின் வரலாற்றை விரிவாகப்படிக்க Norman Davies எழுதியிருக்கும் God's Playground நூலின் இரண்டு தொகுதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.