ஞொள்சிரஷாக்ஸ்ப்ளோ - ஒரு நிமிடக்கதை
தொடர்ந்த நச்சரிப்பைத் தாங்க முடியாமல், சில ஆங்கிலப்படங்கள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் கிளுகிளுப்பு எனக் கலந்து கட்டி அடித்த திகில் புனைவு ஒன்றை எழுதி முடித்து எனது வார இதழின் ஆசிரியரின் மேசையின் மேல் கொண்டு வந்து வைத்தேன். அவசரப்படுத்தினால், பல இடங்களில் இருந்து அச்செடுத்துத் தான் எழுதிக் கொடுக்க முடியும்.
“அதுக்குள்ள முடிச்சிட்டியா, கதையை கடுகு மாதிரி நச்சுன்னு சொல்லுப்பா”
”கதை இது தான் சார், ஒரு நகரம்,,, அங்கிருக்கும் மக்கள் திடிரென தலை வெடித்து சாகின்றனர், சுடப்படவில்லை, எந்த மின்னழுத்த வேறுபாடுகள் இல்லை.. வரிசையாக சாகிறார்கள். நாயகன், ஏன் சாகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் பொழுது அவனுக்கு ஓர் அதிர்ச்சி, எங்கிருந்தோ வந்த ஒரு குறிப்பிட்ட வார்த்தையை வாய்விட்டு உச்சரிக்கும்பொழுது, தலை வெடிக்கிறது. வார்த்தையை உபயோகப்படுத்திய எல்லோரும் தலைவெடித்து இறந்து விட, காரணத்தைக் கண்டுபிடித்த நாயகனும், இந்த வார்த்தை வேறு யாருக்கும் தெரியக்கூடாது என அது சம்பந்தபட்ட தனதுக் குறிப்புகளை எல்லாம் அழித்துவிட்டு, சத்தமாக சொல்லிவிட்டு இறக்கின்றான்.”
“ஆமாம் அது என்ன வார்த்தை”
”உட்டலாக்கடியா ஒரு வார்த்தையை நானே யோசிச்சி எழுதினேன் அது என்ன வார்த்தை என்பது கடைசி எபிசோட்ல கடைசி வார்த்தையா இருக்கும் சார்”
“இண்ட்ரஸ்டிங், கதையை நான் படிச்சுட்டுக் கூப்பிடுறேன்”
அறையின் கதவை சாத்திவிட்டு அடுத்தக் குற்றப்பின்னணி கொண்ட கதைக்கு கருவைத் தேடிக்கொண்டிருப்பதில் இரண்டு மணி நேரம் கரைந்தது. மேசை தொலைபேசி அடிக்க, ஆசிரியர் எதிர்முனையில்
“பின்னிட்டய்யா, கலக்கல் அருமை தலைப்பு அந்த வார்த்தைதான்யா“ எனச்சொல்லி சில வினாடிகள் இடைவெளிவிட்டு
“ஞொள் சி ர ஷா க் ஸ் ப் ளோ ” என ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லி முடிக்க மறுமுனையில் டப்பென வெடிக்கும் சத்தம் கேட்க தொலைபேசி துண்டிக்கப்பட்டது.