Saturday, February 11, 2012

2012 - ஒரு நிமிடக்கதை

” வரும் 2012 யின் இறுதியில் ஒட்டு மொத்த அழிவு இல்லை என்றாலும் பூமி பெரும் மாற்றத்திற்கு ஆளாகும், இயற்கை மாற்றங்களால் முடிவுக்குப்பின் மீண்டும் ஆரம்பம் என்ற நிலைக்கு மனிதனைக் கொண்டு வரும்” என்ற என் வாதத்திற்கு,

“இருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை, உலகத்தின் தோற்றம், உலகமென்ன, இந்த அண்டசராசரங்களின் தோற்றம் என் பிறப்பில் ஆரம்பித்து நான் இறக்கும்பொழுது அழிந்து விடுகின்றது” வழமைப்போல மோகன் தத்துவார்த்தமாகப் பதில் சொன்னார்.

பேரழிவுச் செய்திகளின் மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தை பொட்டில் அடித்தால் போல சொல்லி மர்ஃபி விதிகளையும் சொன்னதால், மோகன் பேசும்பொழுது எல்லாம் கவனமுடன் கேட்பேன். சிறுவயது முதலேயே இயற்கைச் சீற்றங்கள், பெரிய விபத்துகள் பற்றிய செய்திகளின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பேரிடர்கள் எங்கேனும் ஏற்படும் சில மணி நேரங்களுக்கு முன்னரே, உள்ளுணர்வில் ஒரு பரபரப்பு என்னைத் தொற்றிக்கொள்ளும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபொழுது, அய்யோ கட்டிடம் இடிகிறதே, ஏராளமான மக்கள் கட்டிடங்களோடு புதைந்துப் போவார்களே என மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, “அட , அடிச்சான் பாரு, இது தில்லு, காலையிலேயே நினைச்சேன், இன்னக்கி செம நியுஸ் இருக்குன்னு ” என்று சொல்லி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன். ஒவ்வொரு டிசம்பர் 26 போது, சுனாமிக்கு ஊரே துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க, நான் மட்டும், முந்தயதைவிட கொஞ்சம் காட்டம் அதிகமாக இன்னொரு சுனாமி வரக்கூடாதா என ஏங்கிக் கொண்டிருப்பேன். வேறு சில சமயங்களில் பேரிடர்களில் நான் மட்டும் தப்பிப்பதாகவும் கற்பனை செய்துப் பார்ப்பேன்.

விபத்துக்களில் ஒருவர் இருவர் இறந்துப்போனால் எனக்குப் பரிதாபமாகவும் கவலையாகவும் இருக்கும், ஆதலால் பெரும் விபத்துகளே எனது விருப்பங்கள், உதாரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத்தாலிக் கப்பல் கவிழ்ந்தபொழுது, 4500 பேர் இருந்த கப்பலில் வெறும் 23 பேர் இறந்துபோனது அத்தனை சுவாரசியமாகத் தோன்றவில்லை. இந்த 2012ல் குறைந்த பட்சம், உலக உருண்டையில் சில பாகங்களாவது கூண்டோடு கைலாசம் போகக்கூடும் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மோகனுக்கு எதிர்மறையாகப் பேசுவது பிடிக்கவே பிடிக்காது என்பதால் அழிவைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு , 2012 புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிராட்டிஸ்லாவாவில் கொண்டாடப்போவதாகச் சொல்லி பேச்சை மாற்றினேன்.

புத்தாண்டுத் தினத்தன்று, வியன்னாவில் இருந்து 45 நிமிடங்கள், வண்டியை ஒரு அழுத்து அழுத்தி பிராட்டிஸ்லாவாவிலும் கொண்டாடிவிட்டு, 100 கிமீக்கும் சற்று அதிகமான வேகத்தில் தனியாகத் திரும்பிக்கொண்டிருக்கும்பொழுது ஒன்றுமே இல்லாமல் ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டது, ஆகா 2012 வேலையை ஆரம்பித்து விட்டது போல, காலையில் சுடச்சுட செய்திகள் காத்திருக்கும்போல என ஆர்வமாக வேகத்தை அதிகரிக்க, சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட கண்டெயினர் லாரியைக் கவனிக்காமல் நேரேக் கொண்டுபோய் அதன் பின்னர் என் காரை சொருகினேன்...அப்பளமாக நானும் காரும் நொறுங்கும் முன், கடைசியாகப் பார்த்தவை,


கண்டெயினர் லாரியின் பதிவு எண் 2012, பதிவு எண் தகட்டிற்கு மேலே வரையப்பட்டிருந்த,பண்டைய அமெரிக்க அஸ்டெக் நாகரிக சூரிய அட்டவணைக்கல் ஓவியம்.