Wednesday, March 05, 2008

அஜீஸ் அகமது வும், Patriotism உம் - சிறுகதை

முதன்முதலில் எனக்கு அஜீஸ் அகமதுவைப் பிடிக்காமல் போனது, ஷார்ஜா மேட்ச்ல அக்யூப் ஜாவித் ஹேட்ரிக் எடுத்தப்ப, அதுக்காக அவன் ரொம்ப சந்தோசப்பட்டப்பத்தான் . அவன் மட்டுமல்ல, அன்றைக்கு அவங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்குமே இந்தியா தோற்றுப்போய்விட்டதேன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லை. அவன்கிட்ட ”இந்தியாவில யாருடா உனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் “ ன்னு கேட்டால் அசாரூதினைச் சொல்லுவான். கிருஷ்ணமூர்த்திக்கும் அசாரைப்பிடிக்கும் என்றாலும் அஜீஸ் அசாரைப்பற்றி சிலாகித்துச் சொல்லும்போது மட்டும் எனக்கு எரிச்சலா இருக்கும்.

எங்க பிளாக்ல மொத்தம் 12 வீடுகள். அதுல எங்க வீட்டுல மட்டும் தான் அப்போ டீவி கிடையாது. கிருஷ்ணமூர்த்தி வீட்டுல கலர் டீவி இருக்கும். மற்றவங்க வீட்டுல பிபிஎல் சின்ன பிளாக் அண்ட் வொயிட் டீவி. எல்லார் வீட்டிலேயும் டீவி இருந்தாலும் கலர்ல
பார்க்கலாம்னு எங்க செட்டு பசங்க எல்லாம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுலதான் கிரிக்கெட் பார்ப்போம். அஜீஸ் மட்டும் வரமாட்டான். இன்னொரு பக்கத்துவீட்டுபையன் வாசு, கிருஷ்ணமூர்த்தி வீட்டுல சோபால உட்கார்ந்தப்ப, அவங்க அம்மா ஒன்றுமே சொல்லாமல் இருக்க நான் உட்கார்ந்தப்ப மட்டும் கீழே உட்கார்ந்துக்கப்பா அப்படின்னு சொன்னதுலேந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப்போறதை நிறுத்திட்டேன்.

அதுக்கப்புறம் நான் யார் வீட்டுக்கும் ஒளியும் ஒலியுமோ , ஞாயிறுப் படமோ போய் பார்க்கக்கூடாது என முடிவெடுத்து வீம்பாய் இருந்தேன்.
எதேச்சையாய் அஜீஸின் அம்மா, கிரிக்கெட் ஆட்டம் நடக்கும் விடுமுறை நாள் ஒன்றில் என் வீட்டுக்கு வர, “அஜீஸ், வீட்டுல தனியாத்தான் மேட்ச் பார்க்கிறான், நீ வா வீட்டுக்கு” என்று கூப்பிட்டுப்போய் , அங்கு நான் தரையில் உட்கார , ”சோஃபா, உட்காரத்தான் போட்டு இருக்கோம் , அதுல உட்காரு “ உரிமையாய் சொன்னாங்க. அப்போ அப்போ தீனியும் கொடுப்பாங்க.

எனக்கு அங்க நெருடின விசயம் அவங்களுக்குள்ள உருதுல பேசிக்குவாங்க. இங்கிலிஷ் கமெண்ட்ரி புரியாமலேயே மேட்ச் பார்க்கற மாதிரி அவங்க முகபாவங்களை வைத்து
என்ன பேசிக்கிறாங்கன்னு ஓரளவுக்கு புரிந்துகொள்வேன். சனிக்கிழமை சாயங்காலம் போடுற இந்திப்படங்களும் அஜீஸ் பார்ப்பான். நானும் அவன் கூட பார்ப்பேன்.வசனங்களை அவ்வப்போது அவங்க வீட்டுல யாராவது எனக்கு சொல்லுவாங்க. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. இந்த ஷார்ஜா மேட்ச்ல இந்தியாவுக்கு ஒவ்வொரு விக்கெட்டு விழுறப்பயும் கைத்தட்டி குஷியானதும் எனக்கு என்னவோ போல இருந்தது.

அன்றிரவு என் அப்பாவிடம் டீவி வாங்கிக் கொடுத்தாலே கொடு என அடம்பண்ணி , ஒரு வாரம் சாப்பிடாமல் கலட்டா செய்த பின்னர் கதவு வைத்த சாலிடெர் டீவி வாங்கி வந்து வைத்தார். ஆரம்பத்தில் வயலும் வாழ்வும் கண்மணிப்பூங்கான்னு எதுப்போட்டாலும் டீவி முன்னாடியே இருந்து, அலுத்துப்போகும் சமயத்தில் ஆஸ்திரேலியாவுல வேர்ல்ட் கப் வந்தது. விடியக்காலையில மேட்ச் பார்க்கற சுகம் , அதுவும் என் வீட்டு சொந்த டீவில பார்ப்பது பெருமையா இருந்தது.

ஜாவித் மியாண்டட் மங்கி ஜம்ப் பண்ண மேட்ச்ல இந்தியா ஜெயிச்சதுக்கு நான் நாலு சர வெடி வச்சேன். அஜீஸ் ஏதோ அவன் வீட்டுல துக்கம் விழுந்த மாதிரி சோகத்தோட
இருந்தான். கிருஷ்ணமூர்த்தி தான் வம்பை ஆரம்பித்தான்.

“என்ன உங்க பாகிஸ்தான் தோத்துப்போச்சா? ”கிருஷ்ணமூர்த்தியோட நக்கல் எனக்கும் தொத்திக்கொண்டது.

“இல்லடா, கிச்சா, அஜீஸ் ஹேப்பிதான், அசாரூதின் இண்டியாவோட கேப்டனா இருக்கிறவரை இண்டியா ஜெயிச்சாலும் அவனுக்கு சந்தோசம் தான்”

என்று நான் சொல்லி முடிக்கும் முன் என் முகத்தில் ஒரு குத்து விட்ட அஜீஸ், அடுத்து கண்மண் தெரியாமல் கிருஷ்ணமூர்த்தியை துவைத்து எடுத்தான். அன்றிரவு என் அப்பாவிடமும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவிடமும் அஜீஸ் அகமதின் அப்பா வந்து மன்னிப்புக்
கேட்டார். அஜீஸின் அப்பா போன பிறகு , என் அப்பா ஆரம்பித்தார்.

“நாட்டுப்பற்றுன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பானுங்க, சரியா வளர்த்திருந்தா இப்படி நடந்திருக்குமா!! எல்லா இடத்திலேயும் இவனுங்க இப்படித்தான் இருக்கானுங்க, கூத்தாநல்லூர்ல பாகிஸ்தான் ஜெயிச்சா வெடிவைப்பானுங்க”

“மெட்ராஸ்ல டிரிப்லிகேன்லயும் இப்படித்தான், இவனுங்களுக்கு மனசாட்சியே இல்லை, இருக்கிறது இங்கே, சப்போர்ட் எல்லாம் வேற எங்கேயோ!அப்போவே போயிருக்கலாம்ல அவனுங்களுக்குன்னு கொடுத்த நாட்டுக்கு !”


அந்த சம்பவத்திற்குப்பிறகு நாங்க யாரும் அஜீஸுடன் பேசுவதில்லை. நாளும் வருடமும் வேகமாக ஓடி 96 வேர்ல்ட் கப்ல திரும்ப பாகிஸ்தானை ஜெயிச்சப்ப , எங்க குவார்ட்டர்ஸ்ல வெடி வைத்து, மைசூர்பக், ஜாங்கிரி எல்லாம் கொடுத்து கொண்டாடினோம். அஜீஸ் செமிபைனல்ஸ்ல இந்தியா தோற்றுப்போகும் வரை வெளியே வரவே இல்லை.

அடுத்த வருடம் +2 க்காக கிரிக்கெட் , டீவி எல்லாம் மூட்டை கட்டிவைக்க படிப்பு ஒன்றே
கதியானது. கிருஷ்ணமூர்த்தி பிட்ஸ் பிலானி போக நான் எஞ்சினியரிங் படிக்க மதுரை போய்விட்டேன். அஜீஸ் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜமால் முகமது கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தான். எனக்கு பல விசயங்களைப்புரிய வைத்த கல்லூரி விடுதி வாழ்க்கை, அஜீஸுடன் மீண்டும் ஊருக்கு வரும்போதெல்லாம் பேசவைத்தது. முன்னவிட நிறையப்பக்குவமாய் பேச ஆரம்பித்தான். நிறைய மாறி இருந்தான். அழகாக அந்த குறுந்தாடி, தினம் 5 முறை தொழுகின்றான்.

”இந்த கெட்டப்ல இருக்கிறவன் எல்லாம் குண்டு தானட வைக்கிறீங்கன்னு “ மனசுல நினைத்துக்கொண்டாலும் அஜீஸிடம் கேட்கவில்லை. தொடர்ந்து அங்கேயே எம்சிஏவும் அவன் படிக்க, நான் படிப்பு முடிந்து மெட்றாஸில் வேலை என் மொத்தக்குடும்பமும் மாற்றலாகி, நகரத்தின் விரைவு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆனபிறகு , அஜீஸ் அகமதுவிடம் இருந்து ஒரு வேலைத் தேட உதவும்படி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ரம்யாவிற்கு அந்த மின்னஞ்சலை அனுப்பி நேர்முகத்தேர்வுக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு
வேலையும் கிடைத்தது.

எனக்கும் ரம்யாவுக்கும் கல்யாணம் முடிந்து வெளிநாட்டில் குடியேறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், அஜீஸ் தான் வேலையை விட்டுவிட்டதாகவும் , திருச்சியில் விரிவுரையாளராக சேரப்போவதாகவும் எங்களிடம் சொன்னபோது

”அஜீஸ் , உன் டெக்னாலஜி அறிவுக்கு, அடுத்த வருடம் பாரின்ல செட்டில் ஆகிடலாம், எதுக்கு பைத்தியக்காரத்தனமா வாத்தியார் வேலை” என நானும் ரம்யாவும் எவ்வளவு அறிவுரை
சொல்லியும் கேட்கவில்லை.

“கார்த்தி, என் சமுதாய மக்கள் கிட்ட இருக்கிற பெரிய பிரச்சினை யாரும் சரியா படிக்க மாட்டுறானுங்க, படிச்ச என்னைப்போல ஒரு சிலரும் இப்படி வசதியா போய் செட்டில் ஆயிட்டா, காலங்காலத்துக்கும், துபாய்லேயும் சிங்கப்பூர்லேயும் ஒட்டகம் மேய்க்கிற வேலையும் கொத்தனார் வேலையும் தான் செய்ய வேண்டியதா இருக்கும். அங்கேயும் வேலை கிடைக்கலாட்டி உன் கல்யாணத்துல கிச்சா என்னை கிண்டல் பண்ணானே வெடிகுண்டு
பார்ட்டின்னு அதுவே நிரந்தரம் ஆயிடும். லெக்சரரா போறதுனால நான் அவங்களுக்கு சின்ன ஏணியாய் இருக்க முடியுமுன்னு நினைக்கிறேன், விஷ் மி குட் லக் ப்ளீஸ்”

கிருஷ்ணமூர்த்தியின் தொலைபேசி அழைப்பு வர, பழைய நினைவுகளில் இருந்து இயல்புக்கு வந்தேன்.

“கார்த்தி, இண்டியா டாஸ் ஜெயிச்சுட்டானுங்க, ஆபிஸுக்கு லீவு போடு, இப்பொவே போயிடுவோம் ”

“சரிடா, அஜீஸூக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணிட்டியா, “

”ஆச்சு , காத்தாலேயே பண்ணிட்டேன்”

அஜீஸீன் முயற்சியால் அவனது கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரிய கணிணிப் பயிற்சி மையத்திற்கு ஒரு சின்ன தொகையை நானும் அஜீஸின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு ரம்யாவுடன் கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிளம்பினேன். சொல்ல மறந்துவிட்டேனே, நாங்கள் இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டாலும் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவைத்தான் வெகு உற்சாகமாக ஆதரிக்கப்போகிறோம். இது போன்ற விசயங்கள் ஒருவரின் நாட்டுப் பற்றைக் கேள்விகுறியாகவும் கேலிக்குரியதாகவும் ஆக்காது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள 10 வருடங்கள் ஆனது.

போன தடவை அஜீஸிடம் பேசியபோது பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக்கைப்
பற்றியும் இந்தியாவின் இர்பான் பதானைப் பற்றியும் பெருமையாக சொன்ன போது, முன்பிருந்த நெருடல் ஏதும் இல்லை.

24 பின்னூட்டங்கள்/Comments:

said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

//
இன்னொரு பக்கத்துவீட்டுபையன் வாசு, கிருஷ்ணமூர்த்தி வீட்டுல சோபால உட்கார்ந்தப்ப, அவங்க அம்மா ஒன்றுமே சொல்லாமல் இருக்க நான் உட்கார்ந்தப்ப மட்டும் கீழே உட்கார்ந்துக்கப்பா அப்படின்னு சொன்னதுலேந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப்போறதை நிறுத்திட்டேன்.
//
எங்கள் ஊரில் ஒரே ஒரு டீவி மட்டும் இருந்த காலத்தில், அந்த வீட்டம்மா செய்யும் அலும்புகள் தாங்காமல் நான் டீவி பார்ப்பதையே சில வருடங்கள் தவிர்த்திருக்கிறேன். இதனாலேயே எனக்கு நீச்சல் மிகவும் பிடித்த பொழுதுபோக்கானது. ஊரைச்சுற்றி எங்கும் தண்ணீர் வேறென்ன செய்யமுடியும். இரவு பகல் என்று பாராமல் நீச்சலடிப்பேன். இன்றும் நான் என் நண்பர்கள் போல குண்டாகாமல் இருப்பதற்கு அந்த டீவிக்காரம்மா தான் காரணம்!!

இது சம்பந்தமான இன்னொரு பதிவு இங்கே http://maalaimayakkam.blogspot.com/2008/03/blog-post.html

said...

வினையூக்கி சார், கொஞ்சம் சென்சிட்டிவான விஷயத்தை அழகாக முடித்து விட்டீர்கள். பரவாயில்லை. :)

said...

////
இன்னொரு பக்கத்துவீட்டுபையன் வாசு, கிருஷ்ணமூர்த்தி வீட்டுல சோபால உட்கார்ந்தப்ப, அவங்க அம்மா ஒன்றுமே சொல்லாமல் இருக்க நான் உட்கார்ந்தப்ப மட்டும் கீழே உட்கார்ந்துக்கப்பா அப்படின்னு சொன்னதுலேந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப்போறதை நிறுத்திட்டேன்.
//


நுண்ணரசியலு??????

நடத்துங்க... நடத்துங்க... :-))))

said...

ஏதோ நெருடுதே..

உரையாடியில் பேசலாம்..

கத்தி மீது நடக்கிற கதை..

நல்ல முயற்சி..

said...

அருமையான பதிவு

said...

// பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக்கைப் பற்றியும் இந்தியாவின் இர்பான் பதானைப் பற்றியும் பெருமையாக சொன்ன போது//
இப்பவும் டெண்டுல்கர், டோனி, கும்ப்ளே பற்றி பேசலையா? :(((

said...

கத்தி மேல் நடந்திருக்கிறீர்கள். காலை அறுக்கவில்லை என்றே நினைக்கிறேன்!!;-))

said...

புரியல்ல .. யாருக்கு நாட்டுப் பற்று அதிகம்னு சொல்றீங்க?

அஜீஸ் மாறிட்டார்னு சொல்ல வர்றீங்களா?

நல்ல கதை, நல்லா சொல்லியிருக்கீங்க..

said...

//கொத்தனார் வேலையும் தான் செய்ய வேண்டியதா இருக்கும். //

என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே!! :))

மத்தபடி புபட்டியான் சொன்னது மாதிரி கொஞ்சம் கேள்விகள் விடையில்லாமல் நிக்குது!

said...

neat narration thala!!

எனக்கு புரிஞ்சதுல..இந்த கதைல ரெண்டு விஷயம் சொல்றீங்க

-> அஜீசோட கிரிக்கெட் அணி சார்புக்கும் அவனோட நாட்டுப்பற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..கிரிக்கெட் அணி சார்பு நாட்டுப்பற்று அளவீட்டுல கிடையாது

-> அஜீஸ் குறித்தான கதைசொல்லியின் எண்ணத்தில் மாற்றம்

இதில் இரண்டாவது மிகத் தெளிவாகவே இருக்கு...முதலாவதற்கான பதிலை வாசகரின் முடிவுக்கே விட்டிருக்கீங்க..படிக்கறவங்க (அஜீஸையும் கதைசொல்லியையும் பார்க்கிறவங்க) பார்வையில தான் முடிவு இருக்கு..ஆமான்னா ஆமா.இல்லன்னா இல்ல..அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான் :))))

said...

You have handled a sensitive issue in a sensible way, hats off Vinayooki!

Narration is very very neat!

Keep going 'star' Vinayooki!!

said...

எல்லோருக்குள்ளும் முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகவும் நுட்பமான விசயத்தை மிக யதார்த்தமாக, இயல்பாக நிறைய பேர் எண்ணங்களில், அனுபவங்களில் படிந்து உள்ள விதமாகப் பதிவு செய்துள்ளீர்.அருமை வினையூக்கி...

said...

நச்சென்று உள்ளே ஒன்றை கூறியிருக்கிறீர்கள். அழகாக யதார்த்தமாக கையாண்டிருப்பது உங்கள் தனித்தன்மை வினையூக்கி :)

said...

//கூத்தாநல்லூர்ல பாகிஸ்தான் ஜெயிச்சா வெடிவைப்பானுங்க”//

வாழ்த்துக்கள் நட்சத்திரமானதற்கு. எங்களூரில்(கூத்தாநல்லூர்) கிரிக்கெட் என்றால் கிலோ என்ன விலை என கேட்பார்கள். தெருவுக்கு தெரு கால்பந்துதான் அப்படியே சிலர் கிரிக்கெட்டை ரசித்தாலும் உங்கள் அப்பா சொன்னதுபோல வெடியெல்லாம் வைக மாட்டார்கள்:)))

கூத்தாநல்லூரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. வாழ்க

said...

அருமையான பதிவு!!!!!!!!

வாழ்த்துகள்!!!

said...

//இங்கிலிஷ் கமெண்ட்ரி புரியாமலேயே மேட்ச் பார்க்கற மாதிரி அவங்க முகபாவங்களை வைத்து
என்ன பேசிக்கிறாங்கன்னு ஓரளவுக்கு புரிந்துகொள்வேன்//
கதைக் களத்துக் கேற்ற அழகான உவமானம்.
எனக்குக் கிரிக்கெட்டில் ஆர்வமில்லை. ஆனாலும் உங்கள் கதை சொல்லும் நீதியும் சொல்லிய முறையும் பிடித்தது.

said...

@கருப்பன்
நிச்சயமாக, அந்தக்காலக்கட்டங்களில் நம் வீட்டில் டீவி இல்லாதபோது, அடுத்தவர்கள் வீட்டில் பார்க்கும்போது நிறைய சங்கடங்களை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
உங்கள் பதிவின் சுட்டிக்கும் நன்றி.
@தமிழ் பிரியன்
மிக்க நன்றி
@லக்கிலுக்
தங்களின் நுண்ணரசியல் பின்னூட்டத்திற்கு நன்றி :))))

@டிபிசிடி
நிச்சயமாக உரையாடுவோம் சார்.
@சிவஞானம்ஜி
மிக்க நன்றி

said...

@ சுல்தான்
சார்,
[ பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக்கைப்
பற்றியும் இந்தியாவின் இர்பான் பதானைப் பற்றியும் ]

யும் யும் என எண்ணும்மை போட்டிருப்பதால், தோனி பற்றியும் கும்ப்ளே பற்றியும் ஏற்கனவே பேசி இருக்கிறார் என்று வாசகர்களின் புரிதலுக்கு விட்டுவிட்டேன். இந்தக் கதை முழுவதுமே கார்த்தி என்ற கதை சொல்லியின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அஜீஸ் அகமது கதாபாத்திரம் எப்பொழுதுமே நேரிடையாக தன்னிலையை சொல்லுவதில்லை. இவர்களாகவே நினைத்துக்கொள்வது போலத்தான் எழுதி இருக்கிறேன். கடைசியில் கார்த்திக்கு நெருடல் இல்லை என முடித்திருந்ததன் காரணம் இவர்களின் புரிதல் முன்பை விட சரியாக மாறி இருக்கிறதனால்.

said...

@ யோசிப்பவர்
மிக்க நன்றி :)
@திவ்யா
மிக்க நன்றி திவ்யா
@சிவந்தி
மிக்க நன்றி சிவந்தி
@சதிஷ்
மிக்க நன்றி

said...

@கூத்தாநல்லூரான்
வருகைக்கு நன்றி. எங்க அப்பாவுக்கு சொந்த ஊரு கொரடாச்சேரிதான். கூத்தாநல்லூர் நிறை கேள்விப்பட்டு இருக்கேன். என் சொந்தக்காரங்க சிலர் குட்டி விசயங்களை மிகைப்படுத்தி சொல்லுவார்கள், அதில் அந்த வசனமும் ஒன்று... அப்படித்தான் நடக்கிறது என்று சொல்லவில்லை.. அப்படி நடப்பதாக பல காதுகள் மாறி தவறாக வெளி வருகிறது.

said...

@கப்பி பய
மிக்க நன்றி. உங்க புரிதலான பின்னூட்டடத்திற்கு.

@ புபட்டியன் & இலவசக்கொத்தனார்
யாருக்கு நாட்டுப்பற்று அதிகம் என்று சொல்ல வரவில்லை. நாட்டுப்பற்றின் அளவுகோல் விளையாட்டில் ஆதரிப்பதில் இல்லை என்பதே கதையின் மையக்கரு.
விடைகள் வாசகர்களின் புரிதலில்.

said...

நன்றி எழில் & யோகன் பாரிஸ்

said...

Story is good ...and true also..
But end of the story i cant believe..In short..climax is "maluppal".

said...

/* @டிபிசிடி
ஆமாம்.. காம்ப்ளி அழுத பின்னர் நான் ஆடுகளத்தில் அழுத வீரர் ஹோப்ஸ்தான்
ஆடுகளத்திற்கு வெளியே அழுத வீரர் ஹான்சி க்ரோன்யே */

and another one : KAPIL DEV