Thursday, March 06, 2008

புஷ்பக விமானா (எ) பேசும்படம் - திரைப்பார்வை


எந்த ஒரு திரைப்படம், ஒலிச்சித்திரமாக கேட்டால் கூட கதை ஓட்டம் எளிதாகப் புரிந்துவிடுகிறதோ , அந்தத் திரைப்படம் காட்சி ஊடகமாக தான் செய்ய வேண்டியதை தவறவிடுகிறது. கடை 80 கள் வரை வந்தத் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒலிச்சித்திரமே , திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தரும்.

அந்த சமயத்தில் பரீட்சாத்த முயற்சிகளை செய்ய ஆரம்பித்திருந்த கமலஹாசன், நடித்து சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த படம் “புஷ்பக விமானா”. அரை நிமிடத்திற்கும் குறைவான அளவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்(பேசும்படம்),தெலுங்கு(புஷ்பக விமானம்),மலையாளம்(புஷ்பக விமானம்),இந்தி(புஷ்பக்) மற்றும் ஆங்கிலத்தில்(Love chariot) என வெளிவந்தது.

சிறுவயதில் இந்தப்படத்தை தூர்தர்ஷனில் பார்க்கும்போது அவ்வளவு ஆர்வமாக பார்த்ததில்லை. டினுஆனந்த் வரும் ஐஸ் கத்தி எறியும் காட்சி மட்டுமே பிடித்து இருந்தது. ஒரு பாட்டு இல்லை, சண்டை இல்லை. கமல் நடித்து இப்படி ஒரு படமா எனத்தோன்றும். கமலஹாசனின் நிறையப்படங்களின் அருமை, காலங்கடந்து தான் விளங்கும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

போன வருடம் சென்னையில் ராஜ் வீடியோ விஷனில் தள்ளுபடியில் திரைப்பட குறுந்தகடுகள் விற்கிறார்கள் என வாங்கப்போன போது, அங்க நடந்த சுவாரசியமான உரையாடல் இங்கே,

“பேசும்படம் இருக்கா? கமல் நடிச்சது”

“தமிழில்ல எங்களுக்கு ரைட்ஸ் எங்களுக்கு கிடையாது, ஹிந்தில இருக்கு. உங்களுக்கு வேண்டுமா”

மனதிற்குள் சிரித்துக்கொண்டு மிக ஆர்வமாக வாங்கி வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். ஆரம்பம் முதல் முடிவுவரை ஒரே மூச்சில் பார்த்து முடித்த போது , வசனங்களால் நிரப்பப்பட்டு படம் வெளிவந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், வசனம் ஏதும் இல்லாமலே , அலுப்புத்தட்டாமால் பார்க்கும் வகையில் படம் வெளிவந்து 20 வருடங்களுக்குப்பிறகும் சுவாரசியத்தைத் தந்த மகிழ்ச்சி, கமலஹாசன் மேல் வைத்திருந்த பிரமிப்பை மேலும் அதிகரித்தது.கையில் நயா பைசா இல்லாமல் , பகல் கனவு காணும், சடுதியில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலைதேடும் பட்டதாரியான கமலஹாசன் , தெருவில் குடித்துவிட்டு விழுந்துக் கிடக்கும் குடிகார பணக்காரரை(சமீர் கக்கர்) தன் வீட்டில் கட்டி வைத்துவிட்டு , அந்தப் பணக்கார நபராக இடம் மாறுகிறார்.

ஆரம்பத்தில் திடிரெனக் கிடைத்த பணக்கார வாழ்வை ஏகபோகமாக அனுபவிக்கும் கமலஹாசன் , அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு மாஜிக் செய்ய வருபவரின் மகள்(அமலா) மேல் நேசம் வைக்கிறார். ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி இருந்தபோதிலும், போகப்போக பிச்சைக்காரர் (நாரயணா), ஹோட்டல் முதலாளி ஆகிய கதாபாத்திரங்களின் வாயிலாக காசும் பணம் மட்டும் வாழ்க்கையல்ல, உற்சாகம், உழைப்பு , விடாமுயற்சி மூன்றும் ஒரு சேர இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்பதை உணரும் கமலஹாசன் , பணக்கார நபரை அவரின் இடத்தில் மீண்டும் வைத்துவிட்டு , தனது ஏழ்மை நிலையுடன் வேலைத்தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார். இதனிடையில் பணக்காரரின் மனைவியின் கள்ளக்காதலன்(பிரதாப்போத்தன்) ஏவிவிடும் கொலைகாரன்(டினு ஆனந்த்) இடமிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதையும், பணக்காரரின் மனைவி எப்படி தன் தவறை உணர்ந்து மீண்டும் கணவருடன் சேருகிறார் என்பதையும் அழகாக இயக்குனர் சொல்லி இருப்பார்.

நகைச்சுவை இழையோடும் சோகப்படமா, சோகம் இழையோடும் நகைச்சுவைப்படமா என்ற சிந்தனையைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியமைப்பையும் சிலாகித்து சொல்லலாம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் பேசக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் மௌனமாக இருப்பது போலவோ அல்லது தூரத்தில் இருக்கும்படியோ, கண்ணாடித்தடுப்பில் பேசுவது போலவோ காட்சிகளின் கோணங்களை அமைத்து மௌனத்தை மொழியாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் விதம் ஆச்சரியத்திற்குரியது. வசனங்களற்ற
இப்படத்தில் எந்த ஒரு இடத்தில் கூட சிறு குழப்பம் கூட வராமல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு இருப்பவர்களுக்கு ஒரு பாலபாடம்.

மெல்லிய நகைச்சுவையைத் தாண்டி, வேலையில்லாத்திண்டாட்டம் , காதல், கள்ளக்காதல், பிரிவு , குடிக்கு அடிமை, பணத்தாசை, உழைப்பின் பெருமை என பல விசயங்களை திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி செதுக்கி வாழ்வின் எதார்த்தங்களை காட்டும் வகையில் அமைந்திருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.


படத்தின் இறுதியில் அமலா கொடுக்கும் முகவரியுடன் கூடிய கடிதத்தை வாசித்துவிட்டு,அதனுடன் இருந்த ரோஜா மட்டும் கையில் இருக்க , காகிதம் பறந்து போகும் காட்சி மறக்கவே முடியாதது என்றாலும் ரசிக்கும்படியான காட்சிகள் படத்தில் ஏராளம் அவற்றில் சிலவை

* பணக்கார வாழ்வில் , அமைதியான சூழலில் தூங்க இயலாமல் தவிக்கும் கமல், பழைய வீட்டிற்குப்போய் அந்த திரையரங்க ஒலியை ஒலிப்பேழையில் பதிவு செய்து எடுத்துவந்து அதைக்கேட்டபடி துங்கும் காட்சி.

* காலைக்கடன்களை கழிக்க நெடிய வரிசையில் நிற்பது, காலியாக இருக்கும் கழிவறைகளில் இருப்பதில சுத்தமானதை தேர்வு செய்து உள்நுழையும் காட்சி. சமீர் கக்கர் காலைக் கடன்கள் போக உதவிசெய்து, அதை அழகாக பார்சல் கட்டி ஒரு இடத்தில் வைத்து விட்டு போக அதை ஏதோ முக்கியமானதொன்று என எடுத்துப்போகும் ஒரு ஆள் அடுத்த முறை கமலஹாசனைப் பார்த்த மாத்திரத்தில் குமட்டிக்கொண்டு ஓடும் காட்சி.

* சோப்பு தண்ணீரை வாசனைத் திரவியமாக சட்டையில் தடவிக்கொள்வது.

* கமலஹாசன் பிச்சைக்காரர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும். பிச்சைக்காரர் செத்த பிறகு அவரின் பிணத்தின் கிழே கிடக்கும் பணம் பறக்க, அதற்காக பிணத்தை அப்படியே போட்டுவிட்டு பணத்தின் மக்கள் ஓடும் காட்சி.

* ஹோட்டல் முதலாளியின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்தையும் புகைப்படங்களின் மூலம் கமலஹாசன் உழைப்பின் பெருமையை உணருவது

* அமலா பரிசாக , பாழடைந்த பங்களாவில் உயரே பூத்திருக்கும் பூ ஒன்றைக் கேட்கும் காட்சி.

போதும் போதும் சொல்லிக்கொண்டே போனால் மொத்தப்படத்தையும் எழுதிவிடலாம்.காட்சிகளுக்கு இதமாக எல்.வைத்தியநாதனின் பிண்ணனி இசை அமைந்திருந்ததும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விசயம்.

ஆரம்பக்காட்சிகளில் பிண்ணனியாக வரும் வானொலியின் செய்திகள் மட்டுமே அந்தந்த மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் தமிழில் ‘டப்பிங்' பட வரிசையில் சேர்த்திருந்தாலும் , இந்தப்படம் உலக சினிமாக்களில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் படம் என்பதற்கு சாட்சியாக imdb தளத்தில் பத்துக்கு ஒன்பதுக்கு அதிகமான மதிப்பை பெற்றிருக்கிறது. வெளியிடப்பட்டக் காலத்தில் பரந்த வரவேற்பைப் பெறாமல் போனாலும், காலம் கடந்தும் காவியங்கள் நிற்கும் என்பதை இந்த புஷ்பகவிமானா பொய்ப்பிக்கவில்லை. மௌனமாய் பேசும் இந்தப்படம் ஒவ்வொரு திரை அபிமானிகளின் வரவேற்பறையை அலங்கரிக்க வேண்டிய படமாகும்

19 பின்னூட்டங்கள்/Comments:

said...

இன்றைக்குத் தான் கில்லிப் பதிவுகளில் பழைய தொகுப்பில் இதேப் படத்தைப் பற்றிப் படித்தேன்..

மீண்டும் இங்கொரு முறை...

பேசும் படத்தைப் பற்றி பேசமால் இருக்க முடியாதுப் போலிருக்கே.. :)

said...

akicage பின்னூட்டம் வைரஸ் போல் இருக்கிரது. ஜாக்கிரதை

said...

நல்ல பதிவு. நன்றி!

said...

//akicage பின்னூட்டம் வைரஸ் போல் இருக்கிரது. ஜாக்கிரதை
//

ஆமாங்க.. இந்த மாதிரி நிறைய வந்திட்டிருக்கு. அதை டெலிட் பண்ணிடுங்க.

said...

இந்தப்படத்தை சின்னப் புள்ளயா இருக்கச்ச தூர்தர்ஷன்ல பாத்திருக்கேன். கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சது இன்னும் நியாபகமிருக்கு. :)

said...

இந்தப் படம் ஒரு திருப்பு முனைதான்
பேச்சே இல்லாத படத்த்ற்கு பேசும்படம் என்று பெயர் வைத்த்தே
துணிச்சல்தான்........

said...

எனக்கு இது புது படம் மாதிரி தெரியுது...

ஏன்னா,,,?
இன்னைக்குதான் பேசும் படம் பற்றி எனக்கு தெரியும்...

பகிர்வுக்கு நன்றி...

said...

nice. invoke the feelings

said...
This comment has been removed by the author.
said...

தம்பி!
வந்த போதே மிக ரசித்துப்பார்த்த படம். உங்கள் எழுத்து மீண்டும் பார்க்கத் தூண்டியுள்ளது.

said...

தம்பி!
வந்த போதே மிக ரசித்துப்பார்த்த படம். உங்கள் எழுத்து மீண்டும் பார்க்கத் தூண்டியுள்ளது.

said...

@டிபிசிடி
ஆமாம் சார், பேசாத பேசும்படம் எப்போதும் பேசப்படும்
@பென் & ஸ்கேல் , காயத்ரி
வைரஸ் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.
@லக்கிலுக்
நன்றி
@காயத்ரி
:)))
@சிவஞானம்ஜி
ஆமா. துணிச்சலாகவும் எடுக்கப்பட்ட படம்
@பேரரசன்
இந்தப்படம் கண்டிப்பாக பாருங்க
@முரளி கண்ணன்
ஆமாம் முரளி, நிறைய நினைவுகளை கிளப்பும்
@யோகன் பாரிஸ்
:)))))

said...

//அமலா பரிசாக , பாழடைந்த பங்களாவில் உயரே பூத்திருக்கும் பூ ஒன்றைக் கேட்கும் காட்சி.//

கமல் சிரமப்பட்டு பறித்து தரும் பூவை முத்தமிட்டு கமலுக்கு தருகிறார் அமலா. சற்றுப் பொறுத்து கையில் இருக்கும் பணம் கீழே விழ, பூவை கீழே போட்டு விட்டு பணத்தைப் பிடிக்க பாய்கிறார். காலடியில் மிதிபட்டு கசங்கிப்போன பூவை பணம் கைக்கு வந்த பிறகு தான் கவனிக்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சியை நியாயப் படுத்தும் இந்த உணர்வுப் பூர்வமான காட்சி மறக்க முடியாதது.

படம் - ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிது எனத்தோன்றும் நேர்த்தி... அருமை.

said...

படம் வெளியான அன்று பார்த்தது.சிறந்த படம். கிட்டத்தட்ட மறந்தே போய்விட்ட நிலையில் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். கண்டிப்பாக டிவிடி வாங்கி மீண்டும் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

(நேற்று சாட்டிங்கில் பேசியப்பிறகு தான் இந்த பதிவை படிக்கிறேன்). நன்றி.

said...

படம் மிக மிக அருமையான படம். மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்றால் மிகையில்லை.

said...

அருமையான படம், இளையராஜா பேசியிருந்தால் இன்னும் ஒரு படி மேல் சிறப்பாக இருந்திருக்கும்.

said...

மீண்டும் பார்க்க தூண்டும்படியாக எழுதி இருக்கிறீர்கள்.

அருமை!

said...

நீண்ட நாளைக்குப் பிறகு பேசும்படத்தை நினைவூட்டி விட்டீர்கள். பின்னோட்டிய நண்பர்களும் அந்த உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் வந்த அபூர்வ படங்களில் ஒன்று இது. தொழில்நுட்பரீதியாக திரைக்கதைக்கான ஒரு பயிற்சி நூல் இப்படம். பிச்சைக்காரனுக்கும் ஒரு வேலையில்லாத இளைஞனுக்கும் இடையிலான அந்த மெளன உரையாடல் பணம் என்பது என்ன? அதன் பெருண்மையான அர்த்தம் என்ன? என்பதை கேள்விக்குட்படுத்தும் அற்புதமான காட்சி. இறந்த அந்த பிச்சைக்காரன் பணவேட்கையின் ஒருகுறியீடாக மாறும் அவனது இறப்புக் காட்சி முகத்தில் அறையும் உண்மை.

படத்தின் மையமயான குறியீடே பணம்தான். பணத்திற்காக பீத்திங்க முடியாது என்பது கிராமத்தின் சொல்வழக்கு இப்படத்தில் பண்திற்காக சம்பந்தமற்ற ஒருவனின் மலத்தை அள்ளும் அபத்த நாடகம் மண்டையில் அறையக்கூடியது.

மனச்சங்கடங்கள் வரும்போது நல்ல புத்தகங்களைப்போல கமலின் பேசும்படம், மகாநதி, குணா, அன்பே சிவம் போன்ற படங்கள் நமக்கு மனித முகத்தை நினைவூட்டக்கூடியவை. திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் படங்கள்.

said...

எந்த நேரத்தில் இந்த பதிவ எழுதினீங்க... நேற்று ஜீ டிவியில் இந்த படத்த போட்டாங்க...