Friday, March 07, 2008

ஜம்புதுவீப் - சிறுகதை

இயறகையை வெல்ல மனிதன் நடத்திய அறிவுப்போட்டியினால் உலகத்தின் பெரும்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற உலகப்போர்களாலும்,இயற்கை மனிதனுக்கு கொடுத்த தண்டனையான கடல்சீற்றங்களினாலும் மனித இனம் 90 விழுக்காடு அழிக்கப்பட்டு, எஞ்சிய மானுடம் தத்தித் தாவி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நாகரிக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்குப்பிறகான காலத்தில் பூமிப்பந்தின் ஒரு பகுதியை ஜம்புதுவீப் என்ற பெயருடன் அசோக் என்னும் அரசன் ஆண்டுகொண்டிருந்தார்.அவருக்கு முதன்மந்திரியாக நரேந்திரா என்பவர் இருந்தார்.

அசோக்கின் தாத்தா காலத்தில் , நம் முன்னோர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளானதால் தான் அறிவுவளர்ச்சியின் உச்சத்தில் இருந்த உலகம் அழிந்தது. அதனால் கடவுளின் மேல் நம்பிக்கையும் மரியாதையும் வைக்கவேண்டும் என்று ஏகப்பட்ட வழிபாட்டு ஆலயங்கள் எழுப்பப்பட்டன.அவருடன் உரையாட கடவுளின் மொழி என்று ஏகமனதாக நரேந்திராவின் தாத்தா வீட்டில் புழங்கி வந்த பேச்சுவழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த சிலநூறு பேருக்கு மட்டுமே புரிந்த ஒரு மொழியில் வழிபாடுகள் இருக்கக்கூடாது என போராடியவர்களை நரேந்திரா கைது செய்து மன்னன் முன் நிறுத்தி இருந்தார். அந்த வழக்குதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.

“அரசே, கடவுளின் மொழியை அவமதித்த இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையைத் தரவேண்டும்”

“இவர்களின் போராட்டம் யோசிக்க வேண்டிய விசயம், இவர்களுக்கான தண்டனையை அடுத்த வாரம் இறுதி செய்வோம், எதற்கும் சித்தார்த்தா விடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று அசோக் பதிலளித்தபோது நரேந்திராவிற்கு கோபம் தலைக்கேறினாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் ”அப்படியே ஆகட்டும் அரசே” என்று சொல்லி வைத்தார்.

ஜம்புதுவீபின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரு தீவுப்பகுதியை அமைதியாகவும் நேர்மையாகவும் ஆண்டுகொண்டிருந்த பிரபா என்ற மன்னனுடன் நடத்திய கடுமையான போரின் போது போரின் இழப்புகளை, அன்பின் வலிமையை, சகிப்புத்தன்மையை போர்க்களத்தில் அசோக்கிற்கு உணரவைத்தவர் தான் சித்தார்த்தா.

”வல்லரசு ஆவது முக்கியமல்ல, நல்லரசு தான் சிறப்பு “ என்ற அவரின் பேச்சில் மனமாறிய அசோக், அவரைத் தன்னுடன் வந்து தன் அரசவையில் தனக்கு குருவாக இருக்கக் கேட்டும் சித்தார்த்தா மறுத்துவிட்டார்.

பிரபா வின் நாட்டை அவரிடமே திரும்பக் கொடுத்து அவரை தன் நண்பனாக ஆக்கிக் கொண்ட அசோக், அந்த சம்பவத்திற்குப்பின் அசோக் அடிக்கடி சித்தார்த்தாவின் இடத்திற்கே போய் சந்தித்துவிட்டு , ஆலோசனைகள் கேட்டு வர ஆரம்பித்ததில் இருந்து நரேந்திரா தன் முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர்ந்தார்.

அடுத்த வாரம் சித்தார்த்தாவின் ஆலோசனையின் படி, போராளிகளை விடுவித்து, ஜம்புதுவீபின் எல்லா மக்களும் பேசும் மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும், இருந்த போதிலும் முன்னோரின் முடிவுகளை மதிக்கும் விதத்தில், பழைய வழிபாட்டு மொழியை மக்கள் கேட்டால் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மன்னனுக்கே உரிய கர்வத்துடன், ”கடவுளுக்கும் மனிதனுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்” என்ற வாக்கியத்துடன் தன் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றிலும் பதிய வேண்டும் என்ற ஆணையும் இட்டார்.

வேற்று மொழிக்காரனான பிரபாவுடன் அசோக் நட்புப் பாராட்டுவதற்கும், இந்த உத்தரவுக்கும் காரணமான சித்தார்த்தா வின் மேல் நரேந்திராவிற்கு கடும் கோபம் ஏற்பட்டது. மன்னனை மீறி ஏதும் செய்ய முடியாததால் வாய்ப்பு வரும் வரைக் காத்திருந்தார்.

மக்களுக்கு சம உரிமைக்கொடுத்து நேர்மையான ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் அசோக், சித்தார்த்தா வின் திடிர் மரணத்தினால் மனமுடைந்துப் போனார். குரு சித்தார்த்தாவின் கோட்பாடுகளை மதித்த ஆனால் அரைகுறையாகப் புரிந்து வைத்திருந்த மகனுக்கு மகுடம் சூட்டிவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஒரு நாள் தூக்கத்தில் கண்கள் திறக்காமலே மரித்துப்போனார்.

அசோக் இறந்து போன பின் சரியான ஆலோசனைகள் தர வேறும் இல்லாத நிலையில் நரேந்திராவின் முக்கியத்துவம் மீண்டும் வலுப்பெற்றது. சித்தார்த்தாவின் கோட்பாடுகளை தனக்கு சாதகமான மாற்றங்களுடன் ஒரு மார்க்கமாக மாற்றிய நரேந்திரா, சித்தார்த்தாவையும், அசோக்கையும் கடவுள்கள் ஆக்கி, ”கடவுளுக்கும் மனிதனுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்” என்ற கல்வெட்டுகள் இருந்த இடத்தில் அவர்களின் உருவ பொம்மைகளை மன்னனின் உத்தரவுகள் மூலம் வைத்தார்.

புரியாமல் இருப்பதனால் தான் கடவுளின் மொழி என்ற நரேந்திராவின் கூற்றை ஏற்றுக்கொண்ட புதிய மன்னன் தெற்குப்பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரபாவையும் வென்று ஜம்புதுவீப்பை வல்லரசு ஆக்கினான்.

கடவுளின் ஆசிர்வாதத்துடன் புதிய மன்னனின் ஆட்சியில் பொன்னும் பொருளும் மக்களிடம் செழித்து நீதியும் நேர்மையும் எங்கும் நிறைந்து பேரரசனாக வாழ்ந்தான் என வரலாற்றில் எழுதப்பட்டது.

------------

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

ஏனுங்க..இது நடந்த கதையா நடக்கப் போகும் கதையா...

said...

// அந்த வழக்குதான் இப்பொழுது
நடந்துகொண்டிருக்கின்றது //

அந்த வழக்குதான் *இப்பொழுதும்*
நடந்துகொண்டிருக்கின்றது

said...

புனைவுக்கதை நன்றாகத்தான் உள்ளது.

said...

ரசிச்சிப் படிச்சேன் தலைவரே!
உங்களின் மற்ற கதைகளில் இருந்து சற்று மாறுபட்ட கதைக்களன்! வீச்சும் அவ்வளவாக இல்லை!

எனினும் புனைவுக் கதை என்பதாலும், அண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒட்டியும், கதை ஒரு மாறுபட்ட வாசக அனுபவத்தைத் தரும்!

//என வரலாற்றில் எழுதப்பட்டது//
மைக்ரோசிப்-ல எழுதலியா?
உலகம் அழிஞ்ச போது டெக்னாலஜியும் அழிஞ்சிருச்சி போல!

ஜம்பு த்வீப்=நாவலந் தீவு! கதையின் பேரு டக்கர்! :-)

said...

நாவலந்தீவு - ஜம்புத்வீப் - தலைப்பு நல்லா இருக்கு.

என்னமோ சொல்ல வர்றீங்க... ஆனா கதை ஒண்ணும் சொல்லப்படாமலேயே முடிந்துவிடுகிற மாதிரிதான் இருக்கு :-)

//சித்தார்த்தாவின் கோட்பாடுகளை தனக்கு சாதகமான மாற்றங்களுடன் ஒரு மார்க்கமாக மாற்றிய நரேந்திரா, சித்தார்த்தாவையும், அசோக்கையும் கடவுள்கள் ஆக்கி,//

ஆம். பல தத்துவ மார்க்கங்கள் இப்படியாகத்தான் குறிக்கோள் மாறி தத்துவ நிறுவனங்களாக நிலைபெற்று விட்டது.

said...

//என்னமோ சொல்ல வர்றீங்க... ஆனா கதை ஒண்ணும் சொல்லப்படாமலேயே முடிந்துவிடுகிற மாதிரிதான் இருக்கு :-)//

ரிப்பீட்டு.

:)

said...

மாறுபட்ட புதிய முயற்சி, பாராட்டுக்கள்!

இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம் வினையூக்கி!

புதிதாக முயற்சிக்க வேண்டுமென்ற உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன்!