Monday, March 31, 2008

மார்கஸ் டிரஸ்கோதிக்

தொடர்ச்சியான பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகள், சுற்றுப்பயணங்கள்,ஒவ்வொரு சமயத்திலும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயங்கள் , குடும்பத்தை விட்டு வெகுநாட்கள் பிரிந்து இருக்க நேர்தல்,நம்பிக்கை இழத்தல் போன்ற விசயங்களின் நீட்சியான மன அழுத்தப்பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகிச்செல்ல விரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டையிட், நியுசிலாந்து ஆட்டக்காரர் லூயிவின்சென்ட் ஆகியோருக்கு முன்னமே இத்தகையதொரு பிரச்சினையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு , கடைசியில் அதில் இருந்து மீண்டு வர இயலாமலேயே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரஸ்கோதிக்.

நேர்த்தியான இடதுகை ஆட்டக்காரரான டிரஸ்கோதிக், 2000 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின்போது, மாற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே 79 ரன்கள் அடித்து வருகையை பறை சாற்றிய போதும் மற்ற ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டத்தால் அந்த சமயத்தில் வலுவாக, முழுப்பலத்துடன் இருந்த ஜிம்பாப்வே அணியுடன் தோற்றுப்போனது. அதன்பின் தொடர்ந்து வந்த ஆட்டங்களில் மற்ற இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடதபோதும், இவர் தனிஒரு ஆளாக நின்று அணியை கரைச்சேர்க்க போராடுவார். இவரின் முதல் நான்கு ஒருநாள் சதங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பைத் தேடித் தர இயலவில்லை. 2002 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்தியா பரபரப்பான சூழலில் வெற்றி பெற, இந்த ஆட்டத்தில் அடித்த சதமும் அணியை வெற்றி பெறச்செய்ய இயலவில்லை. [விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்
இவர் ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக இலங்கைக்கு எதிராக அடித்த சதமும் வீணாய்போனது. டிரஸ்கோதிக்கின் சதத்தினால் இங்கிலாந்து குவித்த 321 ரன்களை ஜெயசூரியா , தரங்கா ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்து, 75 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அதிரடி வெற்றி பெற்றது. [விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்
ஒருநாள் போட்டிகள் மட்டுமன்றி டெஸ்ட் ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் 14 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இதில் ஒன்று இரட்டைச்சதமாகும். மகிழ்ச்சிக்குரிய விசயம் என்னவெனில் இந்த இரட்டைச்சதம் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் அடிக்கப்பட்டதாகும். இந்த இரட்டைச்சதத்திற்கு ஊறுகாயாக இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் ஒரு அரைசதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிச்செய்தார்.
[விபரத்திற்கு இங்கேசொடுக்கவும்] இவரின் 9 டெஸ்ட் சதங்கள் இங்கிலாந்து வெற்றி பெற்ற ஆட்டங்களில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் பாதியில் அழுதுகொண்டே நாடு திரும்பியது அவரது கிரிக்கெட் வாழ்வின் முடிவின் ஆரம்பமாக அமைந்தது. சிறந்த ஸ்லிப் பீல்டரான டிரஸ்கோதிக் டெஸ்ட் ஆட்டங்களில் 95 கேட்சுகளைப்பிடித்துள்ளார். பரமவைரியான ஆஸ்திரேலியா அணிக்கெதிராக டெஸ்ட் ரன்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை அடித்து இருந்தாலும் ,டெஸ்ட் சதம் ஏதும் அடிக்காதது ஏமாற்றமே.ஹைலி ரோஸ் என்ற பெண்ணை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட டிரஸ்கோதிக்கிற்கு இரண்டு மகள்கள் உண்டு. மனஅழுத்தத்தால் பாதிக்கபடாமல் நிதர்சனங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் பன்னாட்டுப்போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை அடித்திருக்கும் டிரஸ்கோதிக், இன்னும் சிலவருடங்கள் சிறப்பாக ஆடி, இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் சாதனைகள் பலவற்றை முறியடித்திருக்கக்கூடும். எதுவாக இருந்தாலும் வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் "No ifs and buts" . விளையாடும்போது "Catalyst" மட்டைகளை உபயோகப்படுத்திய டிரஸ்கோதிக், மீண்டும் சர்வதேச அரங்கில் கிரிக்கெட் சம்பந்தபட்ட வேறுதுறைகளில் மின்னுவார் என நம்பலாம்.

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

அதிகம் கொண்டாடப்படாத வீரரைப்பற்றிய சிறப்பான பதிவு

said...

எய்ட்ஸ் நலநிதி கிரிக்கெட் போட்டி