எனக்கே எனக்கா !! - குறுந்தொடர் (1 )
என்னுடைய கதைக்கருக்களின் சுவாரசியம் அதை தொடர்ந்து வாசிக்க வைக்கும் உதவும் வசனங்கள்,வார்த்தைகளின் தட்டுப்பாட்டால் நீர்த்துப்போய்விடுகிறதோ
என்பதைப் பற்றி "மனசுக்குள்மத்தாப்பு" திவ்யா அவர்களுடன் ஆர்குட்டில் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, உதித்த யோசனைதான், என் கதைக்கருக்கு திவ்யா கதையோட்டம் மற்றும் உரையாடல்களை திவ்யா அமைத்துக்கொடுப்பது
சிரத்தைஎடுத்து, இதற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்த திவ்யாவிற்கு நன்றி.கதைஓட்டத்தை வாசித்து,மேலும் சில ஆலோசனைகளை வழங்கிய முத்துகுமரன் அவர்களுக்கும் நன்றி. இனி கதைக்குப் போவோம்.
----------------
கார்த்தி மூன்று வருடங்கள் பூனாவில் வேலைப்பார்த்துவிட்டு, சென்னையில் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சிலவாரங்களே ஆகிறது. அவனது வேலைப்பிரிவில் அந்த வருடம் கல்லூரி முடித்து, பணியில் சேர்ந்திருந்த ஜெனியிடமும், அவனது மேலாளர் மோகனிடமும் நட்பாக பேச ஆரம்பித்து இருந்தான். மோகன் கார்த்தியை விட அலுவல் நிலையிலும், வயதிலும் சில வருடங்கள் மூப்பாக இருந்த போதிலும்,கார்த்தியுடன் சகஜமாகவே பேசுவார்.
மோகன் கதைப்புத்தகங்களில் வரும் நேர்மறைக் கதாபாத்திரங்களுக்குரிய அத்தனை இலக்கணங்களைக் கொண்டிருப்பதாக கார்த்திக்குப் பட்டது. வெளிப்படையாகப் பேசுபவர் என்பதைவிட இயல்பாக , அதே சமயத்தில் அடுத்தவரின் எல்லைக்குள் செல்லாமல், கனிவுடனும் பரிவுடனும் பேசும் மோகனை எல்லோருக்கும் பிடித்ததைப்போல கார்த்திக்கும் பிடித்தது ஆச்சரியம் இல்லை.
கார்த்தியின் எல்லா நட்புகளும் தோழமைகளும் கற்பூரம் எரிவதைப்போல, கொஞ்சம் நேரம்தான் எல்லாம்.. தன்னுடன் பழகுபவர்கள், தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும்,தன்னுடன் மட்டுமே தோழமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களினால் அவனுடனான மற்றவர்களின் நட்பு குறிப்பாக பெண் தோழமை, நெடுங்காலம் நீடித்தது இல்லை.அப்படி தரப்படவில்லை எனில், எத்தகைய அழகிய உறவையும் பொசுக்கிவிடக்கூடிய கோபக்கனல் எப்பொழுதும் எரிமலையாய் அவனுள் தூங்கிக்கொண்டிருக்கும். பெற்றோரை சிறுவயதில் இழந்தபின், சுயநலமான உறவுகளால் எடுத்துவளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பாதுகாப்பின்மையால் கார்த்திக்கு தான் நட்ட ரோஜா தனக்காக மட்டும் பூக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருப்பதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
கார்த்திக்கு ஜெனியைப்பிடித்திருந்தது, அவள் அழகாய் இருக்கிறாள் என்பதற்காக மட்டும் இல்லை. அவளுக்கும் கிரிக்கெட் பிடிக்கும். அவளுக்கும் பாரதிதாசன் கவிதைகள் பிடிக்கும். ஜெனி அவனுடன் மட்டுமே மதிய உணவு சாப்பிடுவாள். இரண்டு மூன்று முறை விடுதியில் அவளை இறக்கிவிடுமாறு கேட்டிருக்கிறாள். ஒரு முறை கார்த்தியால் வர இயலாதபோது, கிருஷ்ணமூர்த்தி வலிய தான் வருவதாகக் கேட்டபோது, ஆட்டோவில் போய்விடுவேன் என சொன்னபோது கார்த்திக்கு உள்ளூர மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.அலுவலகத்தில் இருந்த அத்தனைப் பேரும் வெள்ளித்திரைப் படத்திற்கு போன போது, அவனருகில் அமருவதற்காகவே அவள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள் கார்த்திக்குப் பிடித்து இருந்தன.
மூன்றுநாட்கள் சொந்த விசயமாக வெளியூர் சென்றிருந்த மோகன், ஜெனியையும் கார்த்தியையும் தனது அறைக்கு வரச்சொல்லி தனது நிச்சயதார்த்த புகைப்படஆல்பத்தை மடிக்கணினியில் திறக்கும் முன்.
"நான் பர்ஸ்ட் பார்க்கனும்" என ஜெனி மோகனின் மடிக்கணினியை தன் பக்கம் திருப்பிக்கொண்டு ஒவ்வொரு படமாக நகர்த்திக்கொண்டிருக்க
"இரண்டு வருசம் ஆச்சு, அவளை கன்வின்ஸ் பண்ண?"
"லவ் மேரேஜா , மோகன்?"
"ஆமாம், கார்த்தி,, ஹைதராபாத் ல ஒரே ஆபிஸ்.. அவளோட காதலுக்காக தவமாய் தவமிருந்தேன்... இப்போ அதை எல்லாம் நினைச்சுப்பார்க்கவே சுவாரசியமா இருக்கு. கல்யாணம் முடிஞ்சு மெட்றாஸ்ல செட்டில் ஆவுறது என் விருப்பம், அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டு சாலரி குறைவாயிருந்தாலும் இங்கே ஜயின் பண்ணேன்.. அவளும் இந்த மாசக்கடைசிலே ரிலீவ் ஆயிடுவா...மேரேஜ்க்குப் பின்ன கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு வேலை டிரை பண்ணலாம்னு இருக்கோம்"
"மோகன் சார், உங்க வருங்கால மனைவி ரொம்ப அழகா இருக்காங்க, மேட் ஃபார் ஈச் அதர்" எனச்சொல்லி அந்த புகைப்படங்களை கார்த்தி பார்ப்பதற்காக அவன் பக்கமாக மடிக்கணினியை ஜெனி நகர்த்தினாள்.
புகைப்படத்தில் மோகனின் அருகே ரம்யா.. கார்த்திக்கு குளிர் அறையிலும் வியர்க்க ஆரம்பித்தது. அதே பழைய காந்தப்புன்னகை..வசீகரம். பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் களையான முகம்... தேவதையைப்போல பட்டுச்சேலையில் மோகனின் அருகே நின்று கொண்டிருந்தாள்.
படபடப்பான மனதுடன் கார்த்தியின் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.
கதையின் தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்கவும்
6 பின்னூட்டங்கள்/Comments:
வினையூக்கி ,
என் பேரு போட்டு விளம்பரம் கொடுத்துட்டீங்க......நன்றி வினையூக்கி!!
ம். டிபிகல் ஜெனி கதை ஆரம்பம். :)
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
வழக்கம் போல கலகல்!!!!
அடுத்த பகுதிக்கு காத்துக்கிட்டு இருக்கோம் சீக்கிரம் பதியுங்கள்!!!!
வாழ்த்துகள்!!!
ம். நல்ல ஆரம்பம்
தொடருங்கள்.
//தான் நட்ட ரோஜா தனக்காக மட்டும் பூக்கவேண்டும் என்ற எண்ணம் //
ரசித்த வரிகள். நல்லா இருக்கு!
//வெள்ளித்திரைப் படத்திற்கு போன போது, அவனருகில் அமருவதற்காகவே அவள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள் கார்த்திக்குப் பிடித்து இருந்தன. //
சுவார்ஸ்சியமான காட்சி.. சூப்பர்!!
கதை ஓட்டம் அருமை! நல்லா விறுவிறுப்பாக கொண்டு போறீங்க.. வாழ்த்துகள்!
Sundar :
Nan Enna Seldradu?
Kadha Nallathan Irukku.
Post a Comment