Monday, July 23, 2007

Pay It Forward - சிறுகதை

"மோகன் டீ குடிக்க போகலாமா?"

RMCOBOL கம்பலைரில் மூழ்கி இருந்தவர், நான் கூப்பிடுவதைக் கேட்டதும் இருக்கையை விட்டு எழுந்து வந்தார்.

"கார்த்தி, மேலே கேண்டின் போய் மெஷின் ல குடிச்சிடலாமே, போயிட்டு வர எப்படியும் 20 நிமிஷம் ஆயிடுது, நேத்து பி.எம் கூட கேட்டாரு எங்க போயிட்டு வர்றீங்கன்னு"

"அந்த ஆளை விடுங்க, வீட்டிலேந்து ஃபிளாஸ்கில காபி எடுத்துட்டு வந்துடுறாரு, பிரச்சினை இல்லை, நாம தான் சுத்தம் பண்ணி பல நாள் ஆகிற மெஷின்ல குடிக்க வேண்டியாதா இருக்கு, தினமும் எப்படியும் 9 மணிவரை அந்த ஆளு நம்மளை உட்கார வச்சுடுறார்ல, இந்த டைமிங் எல்லாம் அதுல சரியா ஆயிடும் நீங்க வொரி பண்ணாதிங்க"

"கார்த்தி, நீ கிண்டல் பண்ற அந்த மெஷின் டீ, காபி சத்யம் லேயும் மாயாஜால் தியேட்டர்லேயும் 15 ரூபாய், தெரியுமா?"

மோகனை எப்படியோ பேசி, டீக்கடைக்கு இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மோகன் எங்க அலுவலக்த்திலேயே கொஞ்சம் வித்தியாசமானவர். நடுத்தர வயதைத் தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனாலேயே என்னவோ பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்திலேயே இருப்பார். மேஜையில் விவேகானந்தரின் புத்தகங்கள் இருக்கும். ஆனால் ஒரு நாள் கூகிளில் பெரியார் சம்பந்தபட்ட வலைத்தளங்களைத் தேடிக் கொண்டிருந்தார். இப்படி சில சமயங்களில் முரணாக தோன்றும் விசயங்களை செய்து கொண்டிருப்பார்.

ஒரு முறை இதைப் பற்றி நேரடியாகவே கேட்டபோது, “வாழுற கொஞ்ச நாள்ல எல்லாத்தைப் பத்தியும் தெரிஞ்சு வச்சுக்கலாமே, நிறைய மக்களால் ஒருவர் நிஜமாகவே நேசிக்கப்படுகிறார் எனும்போது அவரைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும் " என்றார்.

மோகனைப் பற்றிய எண்ணங்கள் என் மனதினுள் ஓடி முடிப்பதற்குள்ளாகவே நாங்கள் இருவரும் டீக்கடையை வந்தடைந்தோம்.

இரண்டு வடை, டீ வாங்கி கொண்டு தினத்தந்தியை மேய்ந்து கொண்டிருக்கையில்

"சார், நான் விழுப்புரத்தில ஒரு காலேஜில படிக்கிறேன், அடுத்த செமஸ்டர் ஃபீஸ் கட்டனும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்" என்ற ஒரு குரல் கெஞ்சலாகக் கேட்க,

எளிமையான உடையில் ஒரு பையன் மோகனிடம் உதவிக் கேட்டுகொண்டிருந்தான்.
மோகன் கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவனிடம் நீட்டி, நல்லா படி என்று தட்டி அனுப்பினார்.

டீக்கடையிலிருந்து திரும்பும் போது

“என்ன சார், கொஞ்சம் கூட யோசிக்காம பணத்தை எடுத்துக் கொடுத்திட்டிங்க, இந்த காலத்தில எல்லாம் ஃபிராடு , புதுப்புது டெக்னிக்கா கண்டுபிடிக்கிறானுங்க, என்கிட்ட மட்டும் கேட்டிருந்தான்னா அடிச்சே விரட்டி இருப்பேன்"

“கார்த்தி, நீ சொல்றது வாஸ்தவம்தான், 99 பேர் ஏமாத்திறான் என்பதற்காக ஒரு தகுதியான ஆளுக்கு உதவியை மறுத்துவிடக் கூடாது அது தான் என் எண்ணம்.நூறு பேர்ல ஒருத்தன் நம்முடைய சின்ன உதவினால ஒரு அடி வாழ்க்கையிலே முன்னேறுகிறான் அப்படின்னாலே பெரிய சந்தோசம்தான்,நாம மத்தவங்களுக்கு செய்யுற உதவி ஒரு நாள், நமக்கோ அல்லது நமக்கு வேண்டியவங்களுக்கோ திரும்ப எதாவது ஒரு வகையில் கிடைத்துவிடும்.“

எனக்கென்னமோ மோகன் சொன்னதுல உடன்பாடே இல்லை. ஒருத்தனை மிதிச்சுட்டு அவன் மேலே ஏறி முன்னேறி போய்கிட்டே இருக்கிற இந்த காலத்திலே இது எல்லாம் சாத்தியப்படாது .

இதே மாதிரி இன்னொரு நாள் நாங்க டீக்கடைக்கு போகும் வழியில் ஆபிஸ் முன்னாடி ஒருத்தன் அனுமார் வேசம் போட்டு கொண்டு பணம் கேட்டுக் கொண்டிருந்தான். ஒருத்தரும் காசு கொடுக்காம எரிச்சலுடன் அவனை விட்டு விலகிச் செல்வதிலேயே குறியாய் இருக்க மோகன் வழக்கம் போல பணம் கொடுத்தார்,

“என்ன சார், கடவுளுக்கு காணிக்கைக் கொடுத்திட்டிங்களா? கடவுளை எப்படி எல்லாம் பயன்படுத்துறாங்க பார்த்திங்களா?”

அவர் பதில் சொல்லவே இல்லை.

நாங்க கடைக்குப் போன சில நிமிடங்கள் கழித்து, அந்த அனுமாரும் வந்து சேர்ந்தார். நாலு வடை வாங்கி அரக்கப்பறக்க அவர் சாப்பிட்ட விதம் காலையிலே ஒன்றுமே சாப்பிடவில்லை என்று சொல்லியது. அனுமார் சாப்பிட்டுப் போகும்போது அவர் கண்களில் நன்றியுடன் மோகனைப் பார்த்தது சில விசயங்களை சொல்லாமலேப் புரிய வைத்தது.

அன்று மாலை,

“என்ன மோகன், நீங்க இந்த வாரம் நம்ம டீம் பிளான் பண்ண வீக் எண்ட் டூருக்கு வரலேன்னு சொல்லிட்டிங்க"

“இல்லை, கார்த்தி, பொதுவாக எனக்கு இந்த மாதிரி பொழுதுபோக்கு கொண்டாட்டங்களிலே நாட்டமில்லை, இந்த சனி ஞாயிறு வேறு சில வேலைகள் இருக்கு, யூ ஹேவ் அ நைஸ் டைம்"

திங்கள் கிழமை நாங்க வழக்கமா டீக்குடிக்கும் கடை அங்கில்லை. திடிரென்று காலி பண்ண சொல்லிட்டாங்களாம். அந்த ஆளு சனிக்கிழமையே கடையை காலி செய்துவிட்டு போய் விட்டதாக எங்க ஆபிஸ் செக்யூரிட்டி சொன்னார்.

வேறுகடைகள் எதுவும் அருகில் இல்லாததால் நானும் மோகனும் கேண்டின் போய் மெஷின் டீ குடித்தோம்.. ஒரு நாள் திடிரென்று மோகன் வேலையை விட்டு ராஜினாமா செய்தார். போதுமான அளவு சம்பாதித்து விட்டதாகவும், சில கனவுக் கடமைகளுக்காக கோயம்புத்தூர் போய் செட்டில் ஆகப் போவதாகவும் சொல்லி சென்றார். அதன்பிறகு அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். சிறிய அளவில் சமூகப்பணிகள் செய்து வருவதாக சொல்வார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெனியுடன் மாயாஜாலில் படம் பார்த்துவிட்டு நீலாங்கரை தாண்டி வந்து கொண்டிருந்த பொழுது திடிரென்று வண்டி பஞ்சர் ஆனது. வண்டியை தள்ளிக் கொண்டே சில மீட்டர்கள் வந்து கொண்டிருந்தபோது "சார், சார் " என யாரோ என்னைக் கூப்பிடுவதை கவனித்த ஜெனி என் முதுகைத் தட்டினாள்.

அட , அது எங்க ஆபிஸ் அருகே டீக்கடை வைத்திருந்தவர்,

“என்ன சார், நல்லா இருக்கீங்களா, இப்போ இங்க சின்னதா ரெஸ்டாரண்ட் வச்சு இருக்கேன், எல்லாம் மோகன் சார் செஞ்ச ஹெல்ப் தான். அங்க டீக்கடை காலி பண்ண சொல்லிட்டப்ப இங்க கடை போட பணம் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கேன். என் வண்டியை எடுத்துட்டு போங்க சார், நாளைக்கு நான் உங்க வண்டியை பஞ்சர் போட்டுட்டு ஆபிஸ்ல கொண்டு வந்து விட்டுடுறேன்".

அவரின் ரெஸ்டாரண்டில் என் வண்டியை நிறுத்திவிட்டு அவரின் பைக்கை எடுத்துக் கொண்டேன். கடைப் பெயரைக் கவனித்தேன். “Pay it Forward”

“என்னது இது கடைக்கு இங்கிலிஷ் பேரு வச்சிருக்கீங்க"

“மோகன் சார் தான் இப்படி வைக்க சொன்னாரு, நான் வாழ்க்கையிலே வளரும்போது எனக்குக் கிடைத்த உதவிகளை நான் தேவைப்படுற மற்றவங்களுக்கு செய்யனும்னு சொன்னாரு, அதை அடிக்கடி ஞாபகப்படுத்துற விதமா இந்த பேரு"

மோகன் மேல் நான் மனதில் வைத்திருந்த மரியாதை பலப்பட்டதை இன்னும் உறுதியாக உணர முடிந்தது.

இந்த சம்பவத்திற்குப் பின் மோகனை நானே அடிக்கடி தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தேன். ஒரு முறை கோயம்புத்தூர் வர சொன்னார்.

அடுத்தடுத்த வாரங்களில் கோயம்புத்தூர் போகலாம் என்று நினைக்கும் பொழுதெல்லாம், ஜெனியுடன் செலவழிக்கும் வார இறுதிகள் முன்னுரிமைப் பெற்றது.

ஒரு வார இறுதியில் கடற்கரையில் நானும் ஜெனியும் இருந்த போது,

இரண்டு சிறுவர்கள் எங்கள் அருகில் வந்து என்னிடம் ஒரு அட்டையை நீட்டினார்கள் அதில் அவர்களிருவருக்கு வாய் பேச , காது கேட்க முடியாதென்றும் , படிப்புக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. நான் பாக்கெட்டிலிருந்து இரண்டு பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

அவர்கள் போன பிறகு ஜெனி என்னிடம்

“கார்த்தி, இது எல்லாம் ஃபிராடுங்க, பிச்சை எடுக்கிறதுல இதுவும் ஒரு டெக்னிக், நீ இல்லாம என்கிட்ட வந்து கேட்டு இருந்தால் அந்த கார்டை கிழிச்சு அந்த பசங்க தலையிலே போட்டிருப்பேன்"

நான் பதில் சொல்லாமல் மெலிதாக புன்னகைத்தேன். கோயம்புத்தூர் போகும்போது ஜெனியையும் கூட்டிட்டுப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சிறிது நேரம் கடற்கரையில் இருந்துவிட்டு கிளம்பினோம். ஜெனியை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வரும் வழியில் ஒரு சிறிய ஸ்டேஷனரி கடையின் பெயர் பலகை அந்தக் கடையின் அருகே நிற்க வைத்தது.
கடையின் பெயர் Pay It Forward

15 பின்னூட்டங்கள்/Comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல மெஸேஜ்.....
அப்ப ஆவிகள விட்டுட்டீங்களா?

லக்ஷ்மி said...

excellent story.

வினையூக்கி said...

நன்றி சிவஞானம்ஜி மற்றும் லக்ஷ்மி.
இரண்டாவது pay it forward கடை பழைய டீக்கடை முதலாளி வைத்துக் கொடுத்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

மா சிவகுமார் said...

வினையூக்கி,

என்ன எழுதுவது என்று நிலை மறக்கச் செய்த சேதியை உங்களுக்கே உரித்தான நடையில் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஒரு நல்ல பணி செய்ய வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் எழுப்பி விடுகிறோம். அதன் விளைவுகள் இப்படி நீரில் இட்ட கல் கிளப்பும் அலைகளாக பரவி விரியும் என்பதைப் படம் பிடித்துக் காட்டிய சிறு கதை. நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

சிவபாலன் said...

Nice One!

Excellent!

கப்பி | Kappi said...

அருமை!!

CVR said...

இதே பெயரில், இதே மெசேஜோடு ஒரு ஆங்கில படம் கூட வந்தது அல்லவா???
நல்ல சிந்தாந்தம்!!!

வொர்க் அவுட் ஆனா சரி!!
வாழ்த்துக்கள்!! :-)

வினையூக்கி said...

நன்றி மா.சி சார். சிவபாலன் சார் கப்பிபய.

ஆம் சிவிஆர் இந்த பெயரில் ஒரு படம் வந்தது. பார்த்ததில்லை கேள்விப்பட்டு இருக்கேன். அதைத் தழுவி தெலுங்கில் ஸ்டாலின் முருகதாஸ் இயக்கத்தில் எடுக்கப்பட்டது.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப அருமையான முயற்சி. ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே சிறுகதையாக்கியதில் படிக்க அழகாயிருந்தது.

Pay it forward என்பதை தமிழாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாயிருக்கும்.

வாழ்த்துக்கள்

TBR. JOSPEH said...

ரொம்ப நல்லாருக்குங்க...

சாரி.. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..

நாமல்லாம் கேள்வி மேல கேள்வி கேக்கறதுலயே குறியாயிருக்கோம்..

சிலர் சைலண்டா செஞ்சிட்டு போயிடறாங்க..

none said...

என் தந்தையை யாரோ முகம் தெரியாத ஒருவர் படிக்கவைத்தாராம்!
நான் என் முகத்தை காட்டாமல் இருவரை படிக்கவைக்கிரேன்!
- Anonymous

ரொம்ப நல்ல கதை அண்ணா!

யோசிப்பவர் said...

உதவி செய்வது தவறில்லைதான் ஆனாலும் பாத்திரம் இல்லாத உதவி, பயன் இல்லாதது என்பதை விட சில சமயம் பாவமாகக் கூட மாறும். இதை ஓரிரு தருணங்களில் நானே உணர்ந்ததால் சொல்கிறேன்

Anonymous said...

Hello Mr. Vinaiooki,

It is crystal clear that the base of your story is from the english movie Pay It Forward. Nothing wrong in redoing the story, but you have to mention a courtesy.

Oru ezhuthallanukku athu than perumai.

If you tell me this is your own idea and it is really strange coincidence.

Be honest for yourself. Otherwise you can not be at peace.

Good luck...

வினையூக்கி said...

I am so happy for your comment Yes it was inspired the movie "Pay it forward". Though I have not seen the movie yet, I read the reviews sometimes back. The story Title itself is paying a tribite to that movie. As our bloggers are exposed to English movies, I thought people would understand that the story is inspired by above mentioned movie just by giving the name "Pay it forward". It is not intentional to hide or take credits for this. Sometimes "good things" should be conveyed in all the possible modes. This pay it forward concept is one of the few. I had just paid it forward in tamil.

Coming to the point "own thinking" Yes, i dont want to claim the 40+ stories that I had written are my "own thinking" . we are bound to be influenced by things "surrounded" us. So none of the stories is 100% free from influences. All my stories are influenced , inspired by the incidents happened with friends society (fear, beliefs, betrayals emotions ).

I am just a presenter ,At the same time, I present the things which could bring positive impact and I present it in my own way.

When I release the book, sure I shall give "credits" to that novel written by Catherine ryan hide and the movie.

Please do visit my site often and pass me your opinions. Thanks a lot

vinaiooki

பனிமலர் said...

என்னங்க அந்த படத்தை அப்படியே தமிழிழே மொழியாக்கமா, நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் அந்த சிறுவன் செய்வதெல்லாம் வேடிக்கையாகவும் எரிச்சலுமாக இருக்கும். ஆனால் கடைசியில் காட்டும் அந்த மையில் கணக்கு மெழுகுவத்திகள் அத்தனையும் மறக்க செய்யும். மக்களே அந்த படத்தையும் பார்க்கவும்.