ஆறாவது மாடி - சிறுகதை
இரண்டு வார அலைச்சலுக்குப் பின் நகர எல்லைக்குள்ளேயே ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு கிடைத்தது,
வீட்டின் சொந்தக்காரர் லண்டனில் இருப்பதால், அவரின் மாமனார் கோவில்பட்டியில் இருந்து வந்து, சாவியை ஒப்படைத்தார். 6 வது மாடியில்தான் வீடு என்றாலும், ரம்யாவுக்கும், என் அம்மா அப்பாவுக்கும் வீடு பிடித்திருந்தது.
"கார்த்தி, பால்கனில இருந்து பார்த்தா டிரெயின் டிராக் தெரியுது,அந்த சைட் பாரு ஒரு ஸ்கூல் கிரவுண்ட்,இந்த சைட் பிஸி ரோடு இனி நல்லா பொழுது போகும், இங்கே இருந்து போட்டோஸ் ஆ எடுத்து தள்ளிடுவேன்"
இரண்டு படுக்கையறைகள் அட்டாச்ட் பாத்ரூம், சின்ன ஹால் மற்றும் ஒரு பால்கனி, ஓரளவுக்கு வசதியான வீட்டிற்கு மிகக்குறைவான வாடகையே வீட்டின் சொந்தக்காரர் தொலைபேசியில் சொன்ன போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
அம்மாவும் அப்பாவும் இரண்டு நாட்கள் எங்களுடன் இருந்து விட்டு ஊருக்கு சென்றுவிட்டனர். வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை வெளியேக் கூட்டிட்டுப் போ என்று அடம்பிடிக்கும் ரம்யா, கையில் கேமராவுடன் பால்கனியிலேயே செட்டில் ஆகி போட்டோக்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தாள். இந்த ஒரு மாதத்தில் 10 ரோல்களை காலி பண்ணி இருக்கிறாள்.
"கார்த்தி, அடுத்த வாரம் எல்லாத்தையும் டெவலப் பண்ணனும், நான் எடுத்த போட்டோஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்"
மறுநாள் ஆபிஸ் விட்டு வீட்டிற்கு வந்த போது ரம்யா முகம் வாடிப் போய் இருந்தது.
"என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா?"
"இல்லை, கார்த்தி. பக்கத்து வீட்டு ஆண்டி இன்னக்கி வீட்டுக்கு வந்து இருந்தாங்க, அவங்க ஒரு விசயம் சொன்னங்க, அதிலேந்து மனசு கஷ்டமாக இருக்கு, இந்த வீட்டிலே முன்னாடி குடி இருந்த ஒரு பொண்ணு இந்த பால்கனிலே இருந்து கீழே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாளாம், நைட்ல அடிக்கடி ஒருவித அலறல் சவுண்ட் கேட்குமாம்"
"அப்படி எல்லாம் இல்லை ரம்யா, இங்க பாரு நாம குடி வந்து ஒரு மாசம் ஆகுது, எதாவது அசம்பாவிதமா நடந்து இருக்கா, பேய் பிசாசு எல்லாம் கிடையாதுமா.. நீ கவலைப்படாதே..."
அன்றிலிருந்து ரம்யா பால்கனி பக்கம் போறதேயில்லை. வீட்டைக்காலி பண்ணிடலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாள். ஒரு நாள் துக்கத்தில் இருந்து எழுந்து ரம்யா அலற. வேறு வழியின்றி அவசரம் அவசரமாக வேறு வீடு பார்க்க ஆரம்பித்தேன்
தற்போதைய வாடகையை விட 1500 ரூபாய் அதிகமாக ஒரு வீடு கிடைத்தது. வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்கும் முன் எதாவது பேய், பிசாசு பயம் இருக்கா என்று வீட்டு உரிமையாளரிடம் நான் சிரியசாக கேட்க என்னை எரித்துவிடுவது போல பார்த்தார்.
பழைய வீட்டின் அட்வான்சை ரம்யாவை பயமுறுத்திய பக்கத்து வீட்டு ஆண்டியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று லண்டனிலிருந்து வீட்டின் உரிமையாளர் சொல்லிவிட, ஆபிஸிலிருந்து சீக்கிரமாகவே கிளம்பி அங்கே போனேன். நாங்க இருந்த வீட்டைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
"ஆண்டி, யார் குடி வர்றாங்க, "
"என் தம்பி தான் குடிவர்றான் கார்த்தி, அவனும் அவன் பொண்டாட்டியும் தைரியாசாலிகள் பக்கத்துலேயே இருக்கட்டுமேன்னு தான் நான் இங்கேயே வர்ற சொல்லிட்டேன்"
பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மேல் அங்க நிற்க விரும்பாமல் சீக்கிரம் கிளம்பினேன்.
சே, என்ன உலகமடா இது, நல்லா இருக்கிற குடும்பத்திலே பயத்தைப் புகுத்தி, வீட்டைக் காலி செய்ய வைக்கும் கயவாளித்தனம்... வெறுப்பாய் இருந்தது.
வீட்டிற்குப் போகும் வழியில, டெவலப் பண்ணக் கொடுத்திருந்த போட்டோக்களை வாங்கி சரி்பார்க்கையில் ஐஸ்கத்தியை சொருகுவது போல் இருந்தது.
பால்கனியிலிருந்து எடுத்த போட்டோக்கள் சிலவற்றில் ஒரு வித வெள்ளை உருவம் போட்டோவின் நடுவில் இருந்தது. டெவலப் பண்ணியபோது ஏற்பட்டக் கோளாறா? அல்லது உண்மையிலேயே அந்த ஆண்டி சொன்ன விசயமா? போட்டோ டெவலப் பண்ணியவரிடம் கேட்கலமா? வேண்டாமா ?
இதைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு சிறு உதறலுடன், அந்த போட்டொக்களை மட்டும் தனியாக எடுத்து கிழித்துப் போட்டு மீதியை வீட்டுக்கு எடுத்து வந்தேன்.
8 பின்னூட்டங்கள்/Comments:
Ha Ha Ha..
பயமுறத்த வேண்டும் என்ற முடிவுடன் இருக்கீங்க போல..
நல்லாயிருக்கு கதை..!!!
சூப்பர் தல!
அந்த ஆண்ட்டி மாதிரி ஊர்ல பல பேர் திரிஞ்சுட்டிருக்காங்க..பார்த்து இருந்துக்கோங்க தல :))
கதை ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. முடிவு எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆயினும் கதை நன்றாகவே இருந்தது.
நன்றி சிவபாலன், கப்பிபய மற்றும் பிரதாப்
போச்சு போங்க!ஆரம்பிசிட்டீங்களா அண்ணா?
nice narration...i was reminded of ram gopal varma's movie which had a similr theme(dont remember the name of movie)....
நல்ல கதை சொல்லும் நடை, ஆனால் இந்த ஆவி விடயம் நம்பிக்கையில்லை.
நிறுறுறுறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்த்த்துங்க!
எனக்கு வீட்டுக்கு போக பயமாயிருக்கு. நான் மட்டும் தனியா வேற குடியிருக்கேன்!!!
ஐயையோ இப்பவும் நான் தனியாதான் இருக்கேன்!?!?
(என் ஃபோட்டோவுல பச்சையாவோ, வெள்ளையாவோ ஏதாவ்து தெரியுதா?!?!)
Post a Comment