Tuesday, October 16, 2007

கற்கை நன்றே - சிறுகதை

ரம்யாவுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள், சரி அவளுக்கு ஒரு புத்தகம் வாங்கி அதை பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கலாம் என்று நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் அந்த புத்தகக் கடையினுள் நுழைந்தேன். ரம்யாவுக்கு "Fiction" வகையான புத்தகங்கள் பிடிக்காது. சரி, கலை, கலாச்சார வரலாறு சம்பந்த பட்ட புத்தகங்கள் எதாவது வாங்கலாம் என்று தேடினேன்.

பெரிய புத்தக மையங்களில் இது தான் பிரச்சினை .. எதை வாங்குவது, எதை விடுவது... சடாரென சுதா மூர்த்தியின் "Wise and other wise" கண்ணில் பட்டது. புத்தகத்தை எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன் . சுவாரசியமாகத்தான் இருக்கும் போல இருந்தது, அதை கையில் எடுத்துக் கொண்டு, தமிழ் புத்தகங்கள் இருக்கும் பிரிவிற்கு வந்தேன்.

தமிழ் பிரிவில் ஆன்மீகப் பகுதியில் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் அதிகம் பேர் தென்பட்டனர். ம்ம் மக்களின் ஆன்மீகத் தேடல் அதிகம் ஆகிவிட்டது என நினைத்துக்
கொண்டே தமிழ் புதினங்களை நோட்டமிட்டபடியே வந்த பொழுது , ஒடிசலான தேகத்துடன் , ஏழ்மை உடையில் தெரிய ஆனால் முகத்தில் படிப்புக் களையுடன் ஒரு பையன், 20, 21 வயது இருக்கும். சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடியே ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.

நீண்ட நாட்களாகவே அந்த புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தேன். வேறு ஏதேனும் பிரதி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் . ம்ஹூம் இல்லை.

நான் மிகவும் தயங்கியபடி, அந்த பையனிடம்

"தம்பி, நீங்க இந்த புக்கை வாங்கப் போறிங்களா, "

"இல்லை சார், சும்மா பார்த்துட்டு இருந்தேன், உங்களுக்கு வேணுமா?" அவன் சொல்லும்போதே ஒரு வருத்தம் தெரிந்தது.

"யெஸ், வாங்கலாம்னு இருக்கேன்" என்றேன் நான்.

"ஒரு டென் மினிட்ஸ் தர்றீங்களா, இந்த அத்தியாயத்தில 3 பேஜ் பாக்கி இருக்கு, வாசிச்சுட்டு தந்துடுறேன் சார்"

10 நிமிடத்திற்கு முன்னதாகவே அந்தப் பையன் என்னிடம் கொடுத்தான்,

"சார், இந்த புக் வாங்கிட்டு போகலாம்னுதான் ஆசை சார், புக் கொஞ்சம் காஸ்ட்லி, நானுறு ரூபாய் கூட எனக்குப் பெரிய விசயம்"

அவனுக்கு உம் கொட்டிக்கொண்டே பணம் செலுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

"வாரத்தில இரண்டு நாள் சாயங்காலம் வந்து கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சுட்டு இருந்தேன்... கால்வாசி தான் முடிச்சு இருக்கேன், இன்னொரு காப்பி எப்போ வருதோ..."

ஏதோ அவனுக்கு சொந்தமான பொருளை நான் தூக்கிச் செல்வது போல விஷ்ணுபுரம் புத்தகத்தையேப் பார்த்து கொண்டிருந்தான்.

பணம் செலுத்திவிட்டு அந்த பையனை தேடினேன். அந்த புத்தகக் கடையின் மேலாளர் அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

முன்பைவிட சோகமாக வெளியே வந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.

நான் அவனைக்கூப்பிட்டு

"அந்த மானேஜர் என்ன சொன்னார்?"

"புக் வாங்குறதுன்னா வா, சும்மா ஓசில வந்து படிச்சுட்டுப் போக வராதே... இது லைப்ரரி இல்லைன்னு சொன்னாரு சார்"

"நீ என்ன படிக்கிற"

"எம்.ஏ தமிழ் சார், பர்ஸ்ட் இயர்"

"ம்ம் சரி, இந்த புக்கை நீ படிச்சுட்டு எனக்குக் கொடு" என சொல்லி புத்தகத்தின் முதற் பக்கத்தில் என் அலுவலக முகவரியைக் எழுதிக் கொடுத்தேன்.

"சார், இல்லை வேண்டாம் சார்.. "

"இட்ஸ் ஓகே , நீ படிச்சுட்டு மறக்காம திரும்பக் கொடு" என அந்த தடிமனான புத்தகத்தை அவன் கையில் தந்துவிட்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. அந்த பையன் இடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. 400 ரூபாய் பெரிய விசயமாக எனக்கு இல்லாததால் அவன் புத்தகத்தை தராமல் ஏமாற்றினாலும் பெரிய நட்டமில்லை என்று அதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

ஒரு நாள் மாலை, மணி 5 இருக்கும், எனது அலுவலக வரவேற்பாளர் , என்னைப்பார்க்க ஒருவர் வந்திருப்பதாகக் கூற மாடியில் இருந்து கீழே வந்தேன்.

அட அந்த பையன்.கையில் புத்தகத்துடன் என்னைக் கண்டவுடன் எழுந்து நின்றான்.

"சாரி, சார் ரொம்ப நாள் ஆக்கிட்டேன். இந்த முழுபுத்தகத்தையும் நிறைய ஒரு குயர் நோட்டு வாங்கி, எல்லாத்தையும் எழுதிட்டேன் அதுதான் உங்க கிட்ட ரிடர்ன் பண்ண லேட்டாகிடுச்சு சார்"

அவன் என்னை ஏமாற்றிவிட்டானோ என்று மனதில் நினைத்துக் கொண்டதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவனை முதுகில் தட்டி பாராட்டிவிட்டு, "சரி வா, ஒரு இடத்திற்குப் போய்ட்டு வரலாம்" என்று அவனை என் காரில் ஏற்றி நேராக அவனை அந்த புத்தக நிலையத்திற்கு கூட்டி வந்தேன்.

அவனுக்கு விருப்பமான சில புத்தகங்களை வாங்கி கொடுத்து ,

"இதை எல்லாம் நோட் புக்ல எழுதாதே, எல்லாம் உனக்குத்தான், நல்லா படி, உன்னோட ஆர்வமும் உன் அறிவும் நீ படிக்கிற தமிழும் உனக்கு நல்ல பேர் வாங்கித்தரும் " என அவனை தட்டிக்கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நான் வீட்டிற்கு போவதற்கும், அங்கு ஏற்கனவே நான் வரச்சொல்லி இருந்த கொத்தனார் வருவதற்கும் சரியாக இருந்தது.

"சார் இந்த திண்ணையை, லெஃப்ட்ல பாதி இடிச்சுட்டா போதும், கார் ஷெட் ரெண்டு நாள்ல முடிச்சுடலாம்."

"வேண்டாம், கார் ஷெட் வேண்டாம், திண்ணை அப்படியே இருக்கட்டும், திண்ணையை சுத்தி சுவர் கட்டிடுங்க"

கொத்தனார் போன பிறகு ரம்யாவைக் கூப்பிட்டு

"நாளைக்கு புக்ஸ் வைக்கிற மாதிரி நாலும் ஸ்டீல் ஸெல்ஃப்ஸ அண்ணாச்சி கடையில ஆர்டர் பண்ணிடு, அப்படியே மாடியில இருக்கிற டேபிள்ஸை , சுவர் கட்டின பிறகு திண்ணையில கொண்டாந்து போட்டுடு"

ரம்யா என்னை ஒரு குழப்பமான பார்வையுடன் பார்த்தாள்.

"நம்ம கிட்ட இருக்கிற புக்ஸை இங்க கொண்டாந்து வச்சு ஒரு மினிலைப்ரரி ஆக்கிடுவோம், உள்ளே அலங்காரமா இருக்கிறதைவிட இங்க நாலு பேருக்குப் பயன்படுறமாதிரி இருக்கட்டும். வீக் எண்ட்ஸ்லேயும் ஈவ்னிங்லேயும் நம்ம தெருவில இருக்கிற படிக்கிற பிள்ளைங்க பயன்படுத்திக்கட்டும், என்ன ரம்யா நான் சொல்றது கரெக்ட் தானே!"

ரம்யாவுக்கே உரித்தான புன்னகையுடன் நான் சொன்னதை அவள் ஆமோதித்தாள்.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்

said...

ஆவி கதைன்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே!!!

said...

இலவசக்கொத்தனார்,

நீங்க போன கதையை மிஸ் பண்ணிட்டிங்க

said...

இன்றைய நடைமுறை உலகில் சாத்தியப்படுமோ தெரியவில்லை.ஏனேனில் வீடுகளுக்கு வரண்டா என்பதே இல்லாமல் போய் விட்டது.
நல்ல எண்ணம்.

said...

வினையூக்கி,

உங்கள் கதை சொல்லும் உத்தியும் எளிமையும் சொல்லும் கருத்துக்களும் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடியவை. இந்தக் கதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிட எண்ணம் இருக்கிறதா?

அன்புடன்,
மா சிவகுமார்

said...

நன்றி யோகன் பாரிஸ்,
சிவா சார்,
விரைவில் மேலும் சில நெம்புகோல் வகையான கதைகள் எழுதிவிட்டு புத்தகம் போடலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது