Saturday, March 08, 2008

डरना मना ह - டர்ணா மனா ஹை என்ற திகில் படமும் அதில் இருந்து ஒரு சிலக்கதைகளும்


ராத்(இந்தி), தைய்யம்(தெலுங்கு), பூத் மற்றும் ,கௌன்,(இந்தி) போன்ற உறைய வைக்கும் திகில் படங்களையும் இயக்கிய ராம்கோபால் வர்மா மற்றும் தாஃபிக் அகமது ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் ப்ராவல் ராமன் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த வித்தியாசமான திகில் படம் டர்ணா மனா ஹாய், தமிழில் பயப்படாதே எனப்பொருள் கொள்ளலாம்.

ஆறு கிளைக்கதைகளும், அவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கதையும் அமைந்த இபபடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அடர்ந்த காட்டின் ஊடே நள்ளிரவில் காரில் பயணம் செய்யும் ஆறு நண்பர்கள் கார் பழுதடைய அந்தக் காட்டினுள் மாட்டிக்கொள்கின்றனர். பாழடைந்த வீட்டில் தஞ்சம் அடையும் அவர்கள் நேரத்தைப் போக்க ஒவ்வொருவருவம் ஒரு அமானுடக் கதைகளை சொல்ல ஆரம்பிக்கின்றனர். ஆறு பேரும் சொல்லும் ஒவ்வொரு கதையும் கிளைக்கதையாக விரிகிறது.


அனைவரும் ஒவ்வொருகதை சொல்லி முடித்தவுடன். ஏழாவதாக வரும் நபர், இரவில் அந்தக் காட்டில் வரும் நபர்களை ஒரு தொடர்கொலைகாரன் செய்துவிடுவதாகவும் அது எப்படி நடக்கிறது என்பதையும் விவரிக்கின்றான். இதனிடையில் ஆறு பேரில்
ஒரு பெண்ணைத் தவிர, மற்ற எல்லோரும் கொல்லப்படுகின்றனர். தொடர்கொலைகாரனைப் பற்றி விவரனை செய்தவன் தான் கொலைகாரன் என்பதை புரிந்து கொண்ட மீதமிருக்கும் பெண் தப்பிக்க முயற்சிக்கிறாள்.

துரத்தும் தொடர்கொலைகாரனை அந்தப் பெண் கொன்றுவிட்டு மயக்கமடைகிறாள். மறுநாள் காலை போலிஸ் வர, அவர்களிடம் அங்கு அன்றிரவு நடந்ததை விவரிக்க முயற்சிக்கையில் அவர்கள் அதைக்கேட்காமல் போகின்றனர். அப்பொழுது அவள் பின்னே இரவு கொல்லப்பட்ட 5நபர்களும், அந்த தொடர்கொலைகாரனும் நிற்க, தான் யார் என்பதை உணர்ந்து கொள்வதாகப் படம் முடிவடையும்.

படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு கிளைக்கதையும் திகில் அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்தாலும், நகைச்சுவை இழையோடும் நானா படேகர், விவேக் ஒபராய் வரும் பகுதி அதி சுவாரசியமாக இருக்கும்.

--------கல்லறையின் வாசலில் காத்திருக்கும் நானாபடேகர் தூரத்தில் வரும் காரை மடக்கி லிப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார். காரை ஓட்டிவரும் விவேக் ஒபராய்

“கல்லறையில உங்களுக்கு என்ன வேலை” எனக் கேட்க

“ஒரு ஆக்சிடெண்ட் என்னையும் என் மனைவியையும் பிரிச்சுடுச்சு, அதனாலதான் கல்லறைக்கு வந்தேன்”

“ஓ உங்க மனைவி இறந்துட்டாங்களா?”

“இல்லை அவ உயிரோடத்தான் இருக்காள், நான் தான் அவளை விட்டு பிரிந்துட்டேன்” என நானாபடேகர் சொன்னதும் விவேக் ஒபராய் சிரிக்க

“நான் நிஜமாத்தான் சொல்றேன்” என பேய், பிசாசு பற்றி தொடர்ச்சியாகப் பேசுக்கொண்டே இருக்கும் நானாபடேகரின் மேல் எரிச்சல் அடையும் விவேக் ஒபராய் எரிச்சல் அடைந்து, அவரைக் காரை விட்டு கீழே இறங்கச் சொல்கிறார்.

கீழே இறங்கும் நானா படேகர்

“இந்த எம்டிவி பக்ரா புரோகிராமோட வின்னர், நீங்க தான், நான் இதுவரை உங்களை மாதிரி ஒரு தைரியசாலியைப் பார்த்ததில்லை” எனப்பாராட்ட

விவேக் ஒபராய் மெல்லிய புன்னகையுடன், “நீங்க பேய் இல்லைன்னு எனக்கு முன்னமே தெரியும் “

“எப்படி கண்டுபிடிச்சீங்க”

“ஏன்னா நாந்தான் பேய்” என விவேக் ஒபராய் சீரியஸாக சொல்ல

“சும்மா விளையாடாதீங்க” எனும் நானாபடேகரிடம் விவேக் ஒபராய் தன் கண்ணாடியைக் கழட்டிக் கண்களைக் காட்டுகிறார். அங்கு கண்கள் இருக்கும் இடத்தில் ஏதும் இல்லாமல் இருக்க அப்படியே நானாபடேகர் மயங்கி சரிகிறார்.

----------

மற்றொரு கிளைக்கதையான , சில்பாசெட்டி, சஞ்சய்கபூர்,ராஜ்பால் யாதவ் வரும் பேய் இல்லாத ஆப்பிள் கதையும் திகிலாக இருக்கும். வித்தியாசமான ஆப்பிள்களை தெருவுக்குப் புதிதாக விற்கவந்திருக்கும் சந்தேகத்திற்கிடமான ராஜ்பால்யாதவிடம்

வாங்கும் சில்பாவிற்கு ஏதோ நெருட.. கணவருக்குக் கொடுக்காமலும் தானும் சாப்பிடாமலும் அந்த ஆப்பிளை பாதுகாப்பாக வைக்கிறார்.


இரவு தூங்கியபின் காலையில் கண்விழித்துப்பார்க்கும் சில்பா தன் கணவன் படுத்திருந்த இடத்தில் கணவன் இல்லாமல் ஒரு ஆப்பிள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
பயந்து போய் வெளியே ஓடும் சில்பாவிற்கு தெருவெங்கும் ஆப்பிள்களாக இருப்பது தெரிகிறது. ஆப்பிள் வாங்கி சாப்பிட்ட எல்லோரும் ஆப்பிள்களாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். அங்கே ஆப்பிள் விற்கும் ராஜ்பால் யாதவ், ஒரே ஒரு
ஆப்பிள் மீதம் இருக்கிறது, இலவசமாகத் தருகிறேன் என்று கடைசி ஆப்பிளை சில்பாவிடம் நீட்டுகிறார்.

அந்தரமாலி, சோகையில் கான் வரும் முதற்கதையும் , சாயிப் அலிகான், பொமன் இரானி வரும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்களைப்பற்றியக்கதையும், அப்தப்சிவதஸ்தானி,இஷா கோபிகர் வரும் பகுதியையும் திகிலூட்டுபவையே. ரகுவீர்யாதவ் வரும் கதை மட்டுமே இருப்பதிலேயே சுமாராக இருக்கும். ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் தொய்வில்லாமல் நகரும் இப்படம் இந்தி மொழி அறியாத திகில் படரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். பாடல்கள் ஏதுமில்லாமல் வழக்கத்தைவிட குறைவான நேரமே ஓடும் இந்தப் படம் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியதிரைபடங்களிலும் மிகவித்தியாசமானப் படமே!!!

8 பின்னூட்டங்கள்/Comments:

said...

வினையூக்கி,

சமீபத்தில் தான் இந்தப் படம் பார்த்தேன்,

வித்தியாசமான முயற்சி..

இந்தியில் நடிகர்கள் இனைந்து நடிப்பதற்கு தயங்குவதில்லை...

நிறைய இதுப் போன்ற முயற்சிகள், பல நடிகர்களை வைத்து எடுக்கிறாங்க...

நம்ம ஆளூங்க சும்மா, பறந்து பறந்து அடிக்கிறதிலேயும், ஆரம்ப அறிமுகப் பாடலிலேயும் இருக்காங்க..

கவனம் தர வேண்டிய முயற்சி தான்..அது..இந்தியாகவே இருந்தாலும்.. :P

said...

ஏன்யா இப்படி பயமுருத்துறீங்க?
பேய்க்கதை பதியுற நேரமா இது?

said...

இரவு நேரத்தில் பார்க்க வேண்டிய படம். ஆப்பிள் கதை, சிறுமியின் வீட்டுப்பாடக்கதை, சிகரெட் குடிப்பவர்களைக் கொல்லும் கதை வித்தியாசமான சிந்தனை ரசனை.முயற்சி :)

said...

\\வணிக பெரிய அளவில் \\ change to
\\பெரிய அளவில் வணிக\\
your review is good.

said...

சூப்பரா விவரிச்சிருக்கீங்க. குறிப்பா நானா படேகர் விவேக் ஓபராய் இடையில் நடக்கும் பேச்சின் தமிழ் வடிவமே அவ்வளவு சுவாரசியமா இருந்தது. படம் பார்க்கும் ஆவல் இப்பதிவினால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.

said...

நல்லா விமரிசிச்சிருக்கீங்க!

பாக்கணும்

said...

விமர்சனம் நன்றாக இருந்தது..ஆனாலும் உங்களுக்கு திகில் மேல் உள்ள பிரியமே அலாதிதான்..

said...

உங்களின் விமர்சனம் ‘திருட்டு' வி.சி.டி வாங்கியாவது பார்த்துவிடவேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.

பதிவின் இந்தி தலைப்பில் 'ஹை' என்றில்லாமல் 'ஹ' என்று மட்டுமே இருக்கிறது..