Saturday, March 08, 2008

சைகை மொழி , கைகளினால் ஒரு மொழி

செவித்திறனும் வாய்பேசும் திறனும் முழுவதுமாகவோ அல்லது குறைவாகவோ பெற்றிருப்போர் கூடும் சந்திப்புகளில் நிறைய சந்தர்ப்பங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விசயங்களில் ஒன்று அவர்களின் உற்சாகத்தை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விதம். தங்களுக்குள் நகைச்சுவை,கிண்டல் , கேலி, வருத்தம், ஏமாற்றங்கள் இப்படி மனிதனின் அனைத்து மனவெளிப்பாடுகளையும் தங்களது சைகை மொழி மூலம் படுவேகமாக அடுத்தவருக்கு வெளிப்படுத்துவார்கள்.

உதட்டசைவு, கைகளில் அடையாளங்கள், சொல்ல நினைப்பதற்கு ஏற்ற முகபாவங்கள் ஆகியன மூலம் தாங்கள் சொல்ல வந்ததை சக நண்பர்களுக்கு சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் ஒரு வகையான சைகைமொழியும், கோல்கத்தா, டெல்லி என ஒவ்வொரு மாநகரத்திற்கும் ஒவ்வொரு முறையிலான சைகைமொழியும் சென்னை-பெங்களூர்-ஹைதராபாத் என தென்னிந்தியாவிற்கு ஒரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்திய சைகை மொழிகள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட, பிரிட்டிஷ் முறையைத் தழுவி இருக்கின்றன.

பிரிட்டிஷ் முறையில் இரண்டு கைகளையும் பயன் படுத்தும் விதத்தில் சைகை மொழி அமைந்திருக்கும்.ஆனால் அமெரிக்க சைகை மொழியில் ஒரு கை மட்டுமே பயன் படுத்துவார்கள். பெங்களுரில் குறைவான எண்ணிக்கையில் அமெரிக்க சைகை மொழியும் பயன்பாட்டில் உள்ளது.பலவகையான சைகை மொழிகள் பயன்பாட்டில் இருப்பதை ஒருங்கிணைத்து , ஒரே வடிவத்தை அதற்கு கொடுக்கும் முயற்சியில் தில்லி,செவித்திறன் இல்லாதோர் சங்கமும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா,கனடா, பெல்ஜியம், பின்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அந்த அந்த நாடுகளின் மொழியை அடிப்படையாகக் கொண்ட சைகைமொழியை ஒரு மொழியாகவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்தியாவில் செவித்திறன் அற்றோரும் பங்கேற்கும் முக்கிய அரசாங்க விழாக்களில் அவர்களுக்காகவே ஒரு சைகைமொழி பெயர்ப்பாளர் நிகழ்ச்சியில் பேசுபவர்களின் பேச்சை மொழி பெயர்த்து தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சைகைமொழி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பு , இந்தியாவிலும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே தூர்தர்ஷனில் சைகை மொழியில் செய்தித் தொகுப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 30 லட்சம் செவித்திறன் அற்றோர் இருப்பதில் வெறும் 2% மட்டுமே முறையானக் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 1000 காது கேளாத குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் சைகை மொழியின் பயன்பாடு,முறைப்படுத்தப்பட்டு அதிகரிக்கும்பொழுது அவர்களுக்கு ஏற்ற நல்லதொரு கல்வி முறையை உருவாக்கி ,அவர்களையும் மைய நீரோட்டத்தில் இணைக்க முடியும்.

மைய நீரோட்டத்தில் வாய் பேச இயலாத, செவித்திறன் அற்றோர் கலப்பது , கேட்கும் திறன் வாய் பேசும் திறன் உள்ள நம்மில் சிறுபான்மையினராவது சைகைமொழியைத் தெரிந்து வைத்துக்கொள்ளும்போது இன்னும் முழுமை அடையும். இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டுதான் சைகை மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சைகை மொழி இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்தால் இதுவரை சிக்காததால் , இன்னும் அதற்கான முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.[ஒரு வேளை அப்படி ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தால் உபயோகமான அத்தகவலைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்]

சென்ற வருடம் வெளியான “மொழி” திரைப்படத்தின் இருந்த கதையம்சம், நடிப்பு, இசை , இயக்கம் இவையெல்லாம் தாண்டி அந்தப் படம் செய்த மிகப்பெரிய விசயம், மக்களிடம் சைகை மொழியைக் கொண்டுச்சேர்த்ததுதான். நிறைய நண்பர்கள் சைகைமொழி கற்றுக்கொள்ள ஆர்வப்பட்டார்கள். இந்தப்பதிவை அந்த நோக்கத்துடன் நட்சத்திர வாரத்தில் பதிவு செய்ய மகிழ்ச்சி அடைகிறேன்.

16 பின்னூட்டங்கள்/Comments:

said...

நிறைய புதிய தகவல்கள் அளித்த
வினையூக்கி வாழ்க!

said...

+ + +

ஹிஹி
சைகை மொழியில் பின்னூட்டம் போட்டேன் வினையூக்கி! என்னை மிகவும் கவர்ந்த பதிவு!

வீட்டுல நானும் அம்மாவும் சில சமயம் சைகை மொழியில் பேசிக் கலாய்ச்சிப்போம்! புதுசா வரவங்க, அய்யோ பாவம்-னு நினைச்சிக்குவாங்க! :-)

தோசை வேணும்னா ரெண்டு விரல் காட்டுவேன்=தோ!
அப்படியே போட்டோவுல இருக்குறா மாதிரி சாஞ்சிக்குவேன்=சாய்=சை
தோசை-ன்னு புரிஞ்சிக்கிட்டு, மண் தவால போட்டுச் சூடா வரும்! :-)))

said...

புதிய அரிய தகவல்களுடன் அருமையான பதிவு, நன்றி வினையூக்கி!

said...

   
உங்களுக்காக நான் இரண்டு கையையும் விரித்தபடி வானத்தை நோக்கி உயர்த்தி ஆட்டுவது தெரிகிறதா?
(எனக்கு பிடித்த சைகை)

said...

நல்ல பதிவு ;))

என் கம்பெனியில் வாய்பேசும் திறன் இல்லாத ஒரு நண்பன் கிடைத்தான். அவன்தான் எனக்கு இந்த மொழியை கற்றுக் கொடுத்தான். நாங்கள் இருவரும் சைகை மொழியில் தான் பேசுவோம்.

நான் அவனிடம் கேட்ட வரையில் அவன் பேசும் மொழி பிரிட்டிஷ் முறை என்று சொன்னான்.

தமிழில் சைகை மொழி இல்லை என்று அவன் கூறியாதாக நினைவு ;)

said...

நேற்று தான் மொழி படம் கலைஞர் டீவியில் பார்த்தேன். ஜோதிகா நன்றாக செய்வார். DD யில் முன்பு இந்த வகையில் செய்திகள் வரும்.இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

said...

//தங்களுக்குள் நகைச்சுவை,கிண்டல் , கேலி, வருத்தம், ஏமாற்றங்கள் இப்படி மனிதனின் அனைத்து மனவெளிப்பாடுகளையும் தங்களது சைகை மொழி மூலம் படுவேகமாக அடுத்தவருக்கு வெளிப்படுத்துவார்கள். //

தம்பி!
என்னையும் மிக ஆச்சரியப்படுத்திய
விடயம்.
நிறைய தகவல்கள் தந்துள்ளீர். பல புதிய தகவல்கள் எனக்கு.
இம்மொழியில் இவ்வளவு பாகுபாடு உள்ளதென்பதை இன்றே அறிந்தேன்.
பயனான பதிவு.எனக்கும் இத்திறன் குறைந்த சொந்தங்கள் உண்டு.

said...

ரொம்ப நல்ல பதிவு!!!!

வாழ்த்துகள்!!!!

said...

அட்டகாசமான பதிவு வினையூக்கி!இதை பற்றி வெகு நாட்களாக எழுத வேண்டும் என்றூ நினைத்ததுண்டு. நான் பெங்களூரில்தான் இந்த சைகை மொழி பயின்றேன்.லிங்கராஜபுரத்தில் இருக்கும் டாக்டெர் சந்திரசேகர் இன்ஸ்டிடுயூடில் கற்றுக்கொண்டேன்.


http://www.speechear.org/acadc_trgs/acad_trng_prg.html

http://www.speechear.org/acadc_trgs/sign_language.html

மிக சுவாரசியமான ஓன்று.இது யார் வேண்டுமானாலூம் பயிலலாம்.ரொம்ப விசேஷமான ஒன்று இங்க காக்லியெர் இம்ப்ளாண்டும் செய்கிறார்கள்.

said...

நட்சத்திர வாரத்தின் சிறந்த பதிவு இது... :)) தகவல்களுக்கு நன்றிகள் பல

சென்ஷி

said...

//Radha Sriram said...
அட்டகாசமான பதிவு வினையூக்கி!இதை பற்றி வெகு நாட்களாக எழுத வேண்டும் என்றூ நினைத்ததுண்டு. நான் பெங்களூரில்தான் இந்த சைகை மொழி பயின்றேன்.லிங்கராஜபுரத்தில் இருக்கும் டாக்டெர் சந்திரசேகர் இன்ஸ்டிடுயூடில் கற்றுக்கொண்டேன்.


http://www.speechear.org/acadc_trgs/acad_trng_prg.html

http://www.speechear.org/acadc_trgs/sign_language.html

மிக சுவாரசியமான ஓன்று.இது யார் வேண்டுமானாலூம் பயிலலாம்.ரொம்ப விசேஷமான ஒன்று இங்க காக்லியெர் இம்ப்ளாண்டும் செய்கிறார்கள்.//

மிகப்பயனுள்ள தகவல்கள் மற்றும் தொடர்புகள்.. மிகவும் நன்றி :))

கண்டிப்பாக பதிவில் இந்த சைகை மொழியைப்பற்றி எழுதுங்கள்... நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

வாழ்த்துக்கள் பதிவிட்ட வினையூக்கிக்கும், பதிவிடப்போகும் உங்களுக்கும் :))

said...

நன்றி சிவஞானம்ஜி, கே.ஆர்.எஸ்.

@சுல்தான்
மிக்க நன்றி சார். :)))

கோபிநாத்,தமிழ்பிரியன்,யோகன் பாரிஸ்,சென்ஷி,எழில்பாரதி மற்றும் திவ்யா ஆகியோருக்கு மிக்க நன்றி.

said...

@radha sriram

தங்களுக்கு சைகைமொழி தெரியுமென அறிந்த போது மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் கொடுத்த சுட்டிகளுக்கும் நன்றி.
விரைவில் சைகை மொழிப்பற்றிய ஒரு விலாவாரியான பதிவை இடுங்கள்.ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

said...

@கோபிநாத்
தங்களது சக அலுவலரிடம் இருந்தும் தாங்களும் சைகை மொழியைக் கற்றுகொண்டது பாராட்டுக்குரியது. நன்றி.

said...

@சுல்தான்
தலை வணங்குகிறேன்.

said...

நன்பா அருமையான பதிவு. கம்முனிகேசன் இரண்டு வகையாக பிரிகாலாம். வார்த்தைகளால் ஒரு வகை, சைகைகலால் ஒரு வகை. சைக்கைகள் பற்றி இந்த பதிவொ மிக அருமை.