Sunday, March 09, 2008

நல்ல வேளை நான் அவளைப்பார்த்தேன் - சிறுகதை

ரயிலின் வேகம் அதிகரித்திருப்பது ரயிலின் ஆட்டத்தில் இருந்து தெரிந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்றைக்காட்டியது. விழுப்புரத்தை தாண்டி இருக்கும் என நினைத்துக்கொண்டு மெதுவாக எனது படுக்கையை விட்டு எழுந்து, நீட்டிக்கொண்டிருக்கும் சில கால்களில் இடித்துவிடாமல் நிதானமாக ரயிலின் கதவருகே வந்து கதவைத் திறந்தேன். எதிர்புறம் இருந்த கதவின் பக்கம் பெண்ணின் அழுகை சத்தம் கேட்க, திரும்பிப்பார்த்தேன். கடவுளே!!! ஒரு வினாடி நான் தாமதித்திருந்தாலும் அவள் ரயிலில் இருந்து கீழே குதித்திருப்பாள். முரண்டு பிடித்தவளை உள்ளே இழுத்து கதவை சாத்தி ஒரு அறைவிட்டேன்.

விட்ட அறையில் பொறிகலங்கி, கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வர, உடைந்து அழ ஆரம்பித்தாள். அறைந்திருக்கக் கூடாதோ என்று என் மனம் வருத்தப்பட ஆரம்பிக்க

”இப்போ நீங்க தடுத்திட்டீங்க, எப்போதும் நீங்க தடுத்துட்டேவா இருக்கப்போறீங்க”

“சாக நினைக்கிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?”

“உங்ககிட்ட சொன்னா நீங்க தீர்த்து வச்சிடுவீங்களா? நீங்க என்ன கடவுளா?” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , கையில் துப்பாக்கியுடன் வலம் வந்துகொண்டிருந்த ரயில் காவலர், கண்ணீருடன் இருந்த அவளையும் , என்னையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு கடந்து சென்றார். ரயிலின் வேகம் மெதுவானதால் என்னவென்று வெளியேபார்த்தேன். இப்பொழுதுதான் விழுப்புரம் வருகிறது.

“சரி உன்னைக்காப்பாத்துனதுனால் கடவுள்னே வச்சிக்கியேன்” ரயில் விழுப்புரம் நிலையத்தில் நிற்க கீழே இறங்கினேன்.


“ட்டீ டீ சாயா சாயா” எனக் கத்திக்கொண்டு வந்தவரிடம்

”இரண்டு டீ கொடுப்பா”

வாங்கியதில் ஒன்றை அந்த பெண்ணிடம் நீட்டினேன். கண்களைத் துடைத்துக்கொண்டே ரயில் பெட்டியைவிட்டு கீழே இறங்கி வாங்கிக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு முன் சாகத்துணிந்தவள் எப்படி இவ்வளவு நிதானமாக, சாந்தமான முகத்துடன் டீ யைக் குடித்துக்கொண்டிருக்கிறாள். அவளாகவே பேசட்டும் என அமைதியாக இருந்தேன்.

”திண்டிவனம் முன்ன கூட்ஸ் வண்டி கவுந்துடுச்சாம், டிரெயின் எடுக்க லேட்டாகுமாம்” நான் டீ வாங்கிய நபர் திரும்ப வரும்பொழுது அவராகவே சொல்லிவிட்டுப் போனார்

அருகே இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். கூடவே அவளும் வந்து அருகே அமர்ந்தாள்.

“சரி, இப்போ சொல்லு, உனக்கு தற்கொலைப் பண்ணிக்கிற அளவுக்கு என்னப்பிரச்சினை?”

“லவ் பெயிலியர்”

“லவ்பெயிலியர் எல்லாம் பெரிய விசயமா?” சொல்லும்போதே எனக்கு தொண்டையை அடைத்தது.

“நேத்துதான் திருச்சில அவனுக்கு கல்யாணம், அதைத்தான் அட்டெண்ட் பண்ணிட்டு வரேன் ”

“இவ்வளவு பெருந்தன்மை இருக்கிற நீ ஏன் அப்படி பண்ண?, ” எனக்கு அந்தப் பெருந்தன்மை இல்லையே என்று என் மனதில் ஓடக் கேட்டேன்.

“ஒரே ஆதரவா இருந்த என் அம்மாவும் போன பிறகு அவனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா!! ”

“லவ் பெயிலியர்னால எல்லோரும் செத்துப்போயிடனம்னு நினைச்சா ஒரே வாரத்தில் மனித இனம் அழிஞ்சுப்போயிடும், “ எப்படி வினாடிப்பொழுதுகள் மனிதனின் மனப்போக்கை மாற்றுகின்றன என என்மேல எனக்கே வியப்பாய் இருந்தது.

“இப்படி அட்வைஸ் பண்றது ஈசி, நான் கூட என் ஆபிஸில இப்படி ஏகப்பட்ட பேரிடம் ஆறுதல் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும்... அவனால மனசு செத்துபோச்சு, மனசு செத்துப்போன பிறகு இந்த உடம்பு வெறும் ஜடம்தான்.” என அழுகை விசும்பல் களுடன் கோர்வை இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தவளை , எப்படித் தேற்றுவது என எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவளைத் தேற்றுவதற்கு அருகதை இருக்கா என தெரியாமல்

“உன்னை ஏமாத்தினவன் முன்ன நீ வாழ்ந்து காட்டுறது தானே நிஜமான பழிவாங்கல், நீ செத்துப்போயிட்டீன்னா எப்படி பழிவாங்குவா? ஆவியா வருவியா?” அவளை இயல்பான நிலைக்கு கொண்டுவர வைக்க. நகைச்சுவையாகப் பேச முயற்சித்தேன்.

“ம்ம்ம்ம்”

“சீட்டுக்கட்டு ஆட்டம் தெரியுமா,”

”தெரியும் சொல்லுங்க”

“அதில தேவையில்லாத கார்டை வச்சிட்டே இருந்தோம்னா, கரெக்ட்டான சீக்வென்ஸ் கிடைக்கிறதுக்கு இன்னொரு கார்ட் உள்ளே கொண்டுவர முடியாது. டிராப் பண்ண வேண்டிய கார்டை டிராப் பண்ணிட்டு புதுசா ஒரு கார்டுக்காக வெயிட் பன்ணனும்.. உன்னைப்பார்த்தால் நல்லா படிச்ச பொண்ணா இருக்க,நல்ல வேலைல இருக்கன்னு நினைக்கிறேன்... ஜஸ்ட் இந்த நினைவுகளை தூரப்போட்டுட்டு அடுத்த காரியத்தைப்பாரு” சில மணி நேரத்திற்கு முன்ன இருந்த என் மனநிலைக்கு நேரெதிராக அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தேன்.

“ம்ம்ம்ம்”

“ஒரு ஆறுமாசம், இல்லாட்டி ஒரு வருஷம் வேற எதாவது ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டுப்போயிடு..அவுட் ஆப் சைட், அவுட் ஆப் மைண்ட்?“

நான் சொன்ன அறிவுரைக்கு எல்லாம் அவள் ம்ம்ம் கொட்டிக்கொண்டிருக்க ரயில் புறப்படப்போகும் அறிகுறிகள் தெரிந்தன. இருவரும் ரயிலில் ஏறினோம்.

“காலைல உன்னை எக்மோர்ல பார்க்கனும், இப்போ போய்நல்லாத்தூங்கு” என அவளை அவளது படுக்கைக்கு அனுப்பிவிட்டு எனது படுக்கைக்குப் போனேன். மறுநாள் காலை எழும்பூர் நிலையத்தில் அவள் இறங்குவதைப்பார்த்தபின் தான் நிம்மதியாக இருந்தது. இரவுப் பார்த்ததைக் காட்டிலும் பகல் வெளிச்சத்தில் அழகாகவே இருந்தாள்.

“வீடு எங்க?”

“அண்ணாநகர், நீங்க”

“நான் திருவான்மியூர்,”

“தட்ஸ் பைன், தாங்க் யூ சோ மச்,தட் வாஸ் எ வொண்டர் புல் கவுன்சிலிங் ... ஹேவ் எ நைஸ் டே” என விடைபெற்று போனவள் திரும்ப வந்து அவளின் பெயருடன் மின்னஞ்சல் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் ஒரு தாளில் எழுதிக்கொடுக்க, நானும் எனது அலுவலக முகவரி அடங்கிய அட்டையை எடுத்துக்கொடுத்தேன்.

“தாங்க்ஸ், ஐ வில் கால் யூ சம்டைம்ஸ்” என சொல்லிவிட்டு ஆட்டோக்கள் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

நானும் மனதிற்குள் அவளுக்கு நன்றி சொன்னேன். ஒரு வேளை அவள் இந்தப்புறம் அவள் ரயிலில் இருந்து குதிக்கும் முயற்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவள் சொன்ன அதே காரணங்களுக்காக நானும் ரயிலில் இருந்து குதித்திருக்கும் எண்ணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பேன். நல்ல வேளை நான் அவளைப்பார்த்தேன்.

13 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லகதை........
ஆமா! உங்க ரெண்டு பேரில யார்
யாரைக் காப்பாற்றினாங்க?
நட்சத்திரக்கதை இதுதான்...

said...

அருமையான கதை...

கதையோட முடிவை அறிவிக்கும் புள்ளிகள் நடுவிலே வராமல் இருந்திருருக்கலாம்..."நச்" என்றுச் சொல்ல வைக்கும் மேட்டர், நடுவிலே தெரிஞ்சிட்டா, அப்பறம், இறுதி "நச்" சின்ன நச்சா ஆகிடுதே.. :P

"நச்"க்குன்னே அவதாரமெடுத்த சர்வேசன் வந்து கருத்துச் சொல்லச் சொல்லுங்கப்பா..

said...

-1 X -1 = +1

When negative Crosses another negative it becomes positive.

:)

said...

மிக மிக அருமையான கதை வினையூக்கி,
நட்சத்திர வாரத்தின் கடைசி தினத்தில் இப்படி ஒரு அட்டகாசமான கதையை கொடுத்து அசத்திட்டீங்க,
மனமார்ந்த பாராட்டுக்கள் வினையூக்கி!!

said...

இயல்பான நடை,
கருத்தக்களை தெளிவாக உரையாடல்களில் வெளிப்படுத்திய விதம்,
அனைத்துமே அழகோ அழகு!!

'நச்'சென்று சூப்பராக இருந்தது கதை!!

said...

\\விட்ட அறையில் பொறிகலங்கி, கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வர, உடைந்து அழ ஆரம்பித்தாள். அறைந்திருக்கக் கூடாதோ என்று என் மனம் வருத்தப்பட ஆரம்பிக்க \\

தான் செய்ய இருந்த தவறை, செய்ய முற்படும் மற்ற நபரை தடுக்க துடிக்கும் மனதின் வெளிப்பாடு அருமை!!

said...

\சில நிமிடங்களுக்கு முன் சாகத்துணிந்தவள் எப்படி இவ்வளவு நிதானமாக, சாந்தமான முகத்துடன் டீ யைக் குடித்துக்கொண்டிருக்கிறாள். அவளாகவே பேசட்டும் என அமைதியாக இருந்தேன். \\

அதானே, டக்குனு எப்படி படபடப்பு எல்லாம் அடங்கி போய், இவ்வளவு அமைதலானாள்???

said...

@சிவஞானம் ஜி,
ஒருவர் மற்றொருவரைத் தெரிந்து.
மற்றொருவர் இன்னொருவரைத் தெரியாமலேயே காப்பாற்றினார்கள்

@டிபிசிடி
:)))

@அரைபிளேடு
மிக்க நன்றி.

@திவ்யா
மிக்க நன்றி திவ்யா. தற்கொலை செய்தக் கொள்ள நினைக்கும் பெண் , தான் செய்ய நினைத்தது மிகப்பெரும் தவறு என கதை சொல்லி கவுன்சிலிங் ஸ்டார்ட் செய்யும் முன்னமே உணர ஆரம்பிப்பதால் சாந்தமாக இருந்திருக்கலாம்.

said...

மிக அருமையான கதை......

சீட்டுக்கட்டு ஆட்டத்தை வைத்து வாழ்க்கையை அழகப் புரிய வ‌ச்சிட்டிங்க!!!!

கலக்கல்......

வாழ்த்துகள் செல்வா!!!!

said...

நாம செய்ய நினைக்கற சில காரியங்கள் எவ்வளவு முட்டாள்தனமானதுங்கறது அதையே இன்னொருத்தர் செய்ய முனையறபோதுதான் நமக்கே தெரிய வருது, இல்லையா?

குட்டியா இன்னொரு ஸ்வீட்டான கதை. வாழ்த்துக்கள்.

said...

நன்றி எழில்பாரதி மற்றும் வசந்தன்.

said...

எப்பிடி இதை மிஸ் பண்ணினேன்!?!?!?

ரொம்ப இயல்பா இருந்தது. ஆனால் கடைசி லைன்ஸ் இவளை பாக்கலைனா நான் தற்கொலை பண்ணிட்டிருந்திருப்பேன் அப்படிங்கறது ட்ராமாடிக்கா இருக்கு.

கலக்கல்.

said...

Wow!

Good One!

- Sivabalan