Monday, December 31, 2007

2007 என் பதிவுகளில் சில - தொகுப்பு

பதிவர் சந்திப்புகள், பதிவர் பட்டறைகள் , சக பதிவர்கள் நட்பு ஆலோசனை அரட்டைகள் என ஊக்கப்படுத்தப்பட்டதன் பயனாக இந்த வருடத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியாகிவிட்டது. அவற்றில் பெரும்பான்மையானவை சுமாரான சிறுகதைகளாக இருப்பினும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் கொடுத்த பதிவர் வட்ட வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்த வருடத்தில் நான் எழுதி , என்னாலும் பிறராலும் ரசிக்கப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இது.

நல்ல நாள் என்ற குட்டிகதை” வருடத்தின் முதற்பதிவாக இருப்பினும், அது முன்னமே எழுதி மீள்பதிவு செய்யப்பட்டதால் குரு பட விமர்சனமே ஜனவரியின் முதற்பதிவாக அமைந்தது.

பேயும் காதலும் இல்லாமல் உங்களால் கதை எழுத முடியாதா என ஜெனி கடிந்து கொண்ட போது பெரும் உத்வேகத்துடன் எழுதப்பட்ட நேர்மறைக் கதைதான் “நானும் கடவுள்களும் - சிறுகதை”
இந்தக் கதை பூங்காவில் வெளிவரும் என மிகவும் எதிர்பார்த்தேன். இதைவிட சிறந்த படைப்புகள் அவ்வாரம் வந்திருந்ததால் இதற்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பிடத்தக்க விசயம் இந்தக் கதையை ஜெனி படித்துவிட்டு பாராட்டி சில மணி நேரம் தொலை பேசி உரையாடல் கொடுத்தது தான்..

அதிகம் பார்வையிடப்படாத ஆனால் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தால் பாராட்டப்பட்ட திகில் கதை “லால்குடி Days - சிறுகதை "

கல்லூரி் ஜூனியர் சொன்ன உண்மை சம்பவத்தை அப்படியே கதையாக்கியது தான் “ஆர்குட்ல தேடு - சிறுகதை

தமிழ்மண பூங்காவில் வெளிவந்த முதல் கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை

பதிவுலக நண்பர்களுடன் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கித் தந்தது கோவை பதிவர் பட்டறை. அதனைப் பற்றிய ஒரு வரைவு கோவை வலைப்பதிவர் பட்டறை

நான் எழுதின திகில் கதைகளிலேயே அதிகம் கிலியூட்டகூடிய கதை என இதைச் சொல்லலாம்
”கதையில் வந்த பெண்- சிறுகதை”


வலையுலகக் கூட்டுத்தொடரான “பார்த்த ஞாபகம் இல்லியோ என்ற தொடரை முடித்து வைத்தப் பெருமை என்னையேச் சாரும்.

இதே பெயரில் ஆங்கிலப் படத்தை தழுவி எழுதப்பட்டக் கதை ”Pay it forward"
இப்படி மனசாட்சி இல்லாமல் காப்பி அடிக்கிறியே என்று ஒரு பின்னூட்டம் வந்த போது ஒரு வேளை சாப்பாடு செல்லவில்லை.

சென்னை வலைப்பதிவர் பட்டறையைப் பற்றிய என் பார்வை ”கற்றதும் கற்றுக் கொடுத்ததும்

நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் ஜெனியின் கடிந்துரைகளால் எழுதப்பட்ட பாசிடிவ் கதை “கற்கை நன்றே

கடைசியாக இந்த மாதத்தில் எழுதிய புதுவை வலைப்பதிவர் பட்டறைப் பற்றிய ஒரு கட்டுரை. புதுவைவலைப் பதிவர் பட்டறை ஒரு மைல்கல்


ஆயிற்று இந்த “Best of 2007 - Vinaiooki" பதிவுடன் 143 பதிவுகள் இந்த வருடத்தில் பதிந்தாயிற்று. மேலும் தரமான பதிவுகளை வரும் வருடத்தில் தருவேன் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வளமும் நலமும் அனைவரின் வாழ்வினில் செழிக்கட்டும்.

தமிழ் சசிக்கு நன்றி , சில மணி நேரத்தில் அடிப்படைத் திரட்டி உருவானது

கடந்த வாரம் பதிவான தமிழ் சசி அவர்களின் “ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி” என்ற இடுகையின் துணைக் கொண்டு ஒரு அடிப்படைத் திரட்டியை வினையூக்கி.கோம் தளத்தில் ஒரு துணைத் தளமாக நிறுவியாகிவிட்டது. வருட இறுதியில் ஒரு சுவாரசியமான மென்பொருளை தளத்தில் நிறுவி சின்ன சின்ன விசயங்களை கற்றுக் கொண்டது பேருவகையாக இருந்தது.

திரட்டியைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

Saturday, December 29, 2007

கோபக்கார சுனில் கவாஸ்கரின் நடத்தையும் 1981 ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டமும்

1981 ஆம் ஆண்டு, இடம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0 - 1 என இந்தியா பின் தங்கி இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தின் நான்காவது நாள், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி பந்து வீச வேகமாக ஓடி வருகிறார். கவாஸ்கர் தடுத்தாட முயற்சிக்கிறார். விக்கெட் முன் கால் என்ற வகையில் முறையில் நடுவரிடம் முறையிடப் படுகிறது. நடுவர் ரெக்ஸ் வொயிட்ஹெட் கவாஸ்கர் ஆட்டமிழந்தார் என கைத்தூக்க , பந்து மட்டையில் பட்டது என புலம்பிக் கொண்டே மைதானத்தில் வெளியேறிக் கொண்டு இருக்கையில் திடிரென திரும்பி மறுமுனையில் நின்ற மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சேத்தன் சௌகானையும் அழைத்துககொண்டு மைதானத்தில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் அப்போதிய அணி மேலாளர் விங் கமாண்டர் துரானி மைதானத்தின் எல்லைக்கு வந்து கவாஸ்கரை சமாதனப் சமாதனப் படுத்தி சேதன் சௌகானை திரும்ப அனுப்பி ஆட்டத்தை தொடரச் செய்தார்.



இந்த ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்தது எனக் கூறலாம். 324 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அன்றிரவு நடந்த ஒரு விருந்தில் இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றி ஏளனமாக ஆட்டக்காரர்களின் முன்னிலையிலேயே பேசப்பட்டதாம். காயம் காரணமாக பந்து வீச முடியுமா என்று சூழலில் இருந்த கபில்தேவ் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு பந்து வீச ஆரம்பித்தார். Cricket is a glorious game of uncertainities என்பது மற்றொரு முறை நிருபணமானது. ஆம் கபில்தேவி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 1- 1 என்று தொடரையும் சமன் செய்தது.




இந்த ஆட்டத்தின் விபரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

Friday, December 28, 2007

நாலாவது தெருவில் நான் சந்தித்த மனிதர் - சிறுகதை

நகரங்கள் விரிவடைகின்றன, கிராமங்கள் சுருங்குகின்றன.. சில வருடங்களுக்கு முன்னர் வரை கிராமமாகக் கருதப்பட்ட எங்க ஊர் அதற்கான அடையாளங்களைத் தொலைத்து, வயல்வரப்புகள் எல்லாம் குட்டிசாலைகளாக மாறி, விவசாய நிலமெல்லாம் வீடுகளாய் மாறித்தொலைத்திருந்தது.இப்போ எங்க ஊர் நகரமும் இல்லாம கிராமமாகவும் இல்லாமல் ஒரு கலவையா இருக்கு... விலைவாசி நகரங்கள் அளவுக்கு, அடிப்படை வசதிகள் கிராம அளவுக்கு.. இரண்டாவது ஷிப்டு முடிந்து வீடு திரும்பும் ஒவ்வொரு இரவிலும் என் மனதில் ஓடும் எண்ணம் இது. இன்னும் 10 நிமிடமாவது ஆகும் என் வீடு போய் சேர, வழக்கம்போல கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டேன்.. நாலாவது தெருவில நாய்கள் அதிகம்.. நாலாவது தெருவில் திரும்பியதும் என்னைப் பார்த்து குலைத்துப் பழக்கப்பட்ட நாய்கள் இன்றைக்கும் அமைதியாக இருந்தன. ஒரு வேளை நான் அவைகளுக்குப் பழக்கமாகிவிட்டேனோ!!

இந்த நாலாவது தெருதான் எங்க ஊரின் பணக்காரத் தெரு.எல்லாம் வீடும் கிட்டத்தட்ட குட்டி மாளிகைகள். நான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் நாலாவது தெருவில் முருகேசனை மட்டும் தான் தெரியும். மற்ற வீடு எல்லாம் கடைசி நாலைந்து வருடங்களில் பக்கத்து நகரத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முருகேசன் அப்பாதான் அந்த இடங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றவர்.

அமைதியாக இருந்த நாய்களை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் பார்த்துக் கொண்டே, சிறிது தூரம் கடந்த போது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஒருவர் எனக்கு எதிர் திசையில் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்..2 அடித்து 10 நிமிடங்கள் ஆகி இருந்தன. அருகில் வந்த ஆள் சிரித்தபடி,

“என்ன தம்பி, கையில தடி எல்லாம்!!?”

“இந்த தெருவில நாய்ங்க ஜாஸ்தி, ஒரு சேஃப்டிக்கு, நீங்க யாரு சார், இந்த நேரத்தில” கேட்கும்போதே எனக்கு மனதில் லேசாக ஒரு உதறல்.. இந்த நேரத்தில் இதற்கு முன்னர் இங்கே யாரையும் பார்த்ததில்லை... கழுத்தை தடவி சாமிப் படம் போட்ட டாலர் இருக்கான்னு ஒரு முறை பார்த்துக்கிட்டேன். இனி பயமில்லை.இருந்தாலும் அவரை தலையில் இருந்து பாதம் வரை நோட்டம் பார்த்தேன்... கால் இருக்கா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவருடைய வேட்டி தரை வரை இருந்தது.
அவரது குரலிலும் பார்வையிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது போல உணர்வு..
தூக்கக்கலக்கத்தில் நேரங்கெட்ட நேரத்தில இப்படி ஒருத்தரை பார்க்கிறதுனால ஏற்பட்ட பிரமையாக் கூட இருக்கலாம்.

”சும்மா காத்தாட நடக்கலாம்னு தான்” அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் கிட்டத்தட்ட அந்த தெருவின் பாதி தூரம் கடந்திருந்தேன்.

நான் எங்கே வேலை பார்க்கிறேன், என்னோட வீடு எங்கே எல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அந்த வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி மனிதர் நாலாவது தெரு முடிவடையும் இடம் வந்ததும் “தம்பி என் எல்லை முடிஞ்சது.. நீங்க புறப்படுங்க?” அவர் திரும்ப நாலாவது தெருவின் அடுத்த முனையை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தார். கால்கள் தெரிகிறதா எனப் பார்த்தேன்.. ம்ஹூம் ம்ஹூம் வேட்டி மறைத்திருந்தது.

ஐந்தாவது தெருவின் ஆரம்பத்தில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேகவேகமாக வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் மாலை வேலைக்குப் போகும்பொழுது முந்தைய இரவு பார்த்த நபர் கண்ணில் படுகிறாரா என பார்த்தபடி நாலாவது தெருவைக் கடந்தேன். கலகலப்பாக இருந்த தெருவில் நிறைய ஆட்கள் தென்பட்டாலும் அந்த மனிதரைக் காணவில்லை.

அன்றிரவு நாலாவது தெரு வழியாக வீடு திரும்பும்பொழுது, ஒரு வீட்டின் படிக்கட்டில் அந்த நபர் உட்கார்ந்திருந்ததைக் கண்டும் காணாமலும் போக எத்தனித்தபோது, அவரேக் கூப்பிட்டார். “என்ன தம்பி கண்டுக்காம போறீங்க... உங்களுக்காகத் தான் காத்திக்கிட்டு இருந்தேன்.. “


“இல்லை , சார் கவனிக்கல.. சாரி”

வர்றப்போற கோடைக்காலம் எப்படி இருக்கும் என்று பேச்சை ஆரம்பித்தார். என் நினைப்பெல்லாம் எப்படியாவது சீக்கிரம் இந்த தெருவைக் கடக்க வேண்டும் என்பது தான். நாலாவது தெரு முடிந்ததும் விடைபெற்றார். ஆர்வக் கோளாறில் ”வாங்க சார் அடுத்த தெருவரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்” நான் சொல்ல

“அவரவர் எல்லைகளில் இருப்பதுதான் எல்லோருக்கும் நலம்.. எல்லை மீறும்பொழுது தான் பிரச்சினையே “ என்று சொல்லி சிரித்தார்.

மறுநாள் காலை அந்த ஆளை ஒரு முறையாவது பகலில் பார்த்துவிடலாம் என்று சீக்கிரமாகவே எழுந்து நாலாவது தெருப் பக்கம் போனேன். இரண்டு மணி நேரம் அப்படி இப்படி வெயிலில் நடந்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

அடுத்தடுத்த நாட் இரவுகளில் சரியாக அந்த தெருவில் நான் வரும்பொழுது நிற்பார்.நான் அந்த தெரு கடக்கும் வரையில் எதாவது பேசிக்கொண்டே வருவார். அரசியல் ஆன்மீகம் , கடவுள் , அமானுஷ்யம் இப்படி பேச்சு பலவிதங்களில் ஆரம்பிப்பார். நான் பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டு மட்டும் வருவேன். தினமும் பேசிக்கொள்வதால் அவர் மேல் இருந்த அந்த அமானுஷ்ய பயம் போய் இருந்தது. பேய்களிடம் கூட தொடர்ந்து பேசினால் பழக்கமாகிவிடும் போல... ஆமாம் அந்த ஆள் என் மனதில் பேய் என்றே பதிந்து விட்டார்.
எனக்கும் பேய்களை விட நாய்களின் மேல் அதிக பயம் இருந்ததால் அந்த ஆள் இருப்பது எனக்கு வசதியாகவே பட்டது.

ஒரு இரண்டு வாரம் போய் இருக்கும். அவரைக் காணவில்லை. மறு நாள், அதற்கடுத்த நாள்... மூன்றாவது நாள் இரவு கொஞ்ச நேரம் காத்திருந்துக் கூடப் பார்த்தேன். அவர் வரவில்லை.பத்து நாட்கள் ஓடிப்போனது. அவர் நினைவில் இருந்து மறைந்து போனார்.
பொங்கலுக்கு கான்பூரில் இருந்து முருகேசன் வந்திருந்தான். அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போய் இருந்தேன். அவனிடமும் அவன் குடும்பத்தினருடனும் நலம் விசாரிப்புகளுக்குப் பின்,

“முருகேசா, இந்த தெருவில் பளீர்னு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுகிட்டு இருக்கிற ஆள் யாராவது உனக்குத் தெரியுமா?”

“ஓ தெரியுமே... வேதநாயகம்.. தமிழ் வாத்தியார்.. ராமசாமி வீட்டுல திருடு போன பிறகு எங்கத் தெருவுக்கு அவர் தான் இரவுக்காவல்... இந்த வயசிலேயும் மனுசனுக்கு எவ்வளவு சுறுசுறுப்பு தெரியுமா.. இரண்டு வாரம் முன்ன அவரோட பையன் வீட்டுக்குப் போனவர் கொஞ்சம் ஹெல்த் கண்டிசன் சீரியஸ் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்காரு..நல்லபடியாயிடுவாருன்னு நினைக்கிறேன்.. நாளைக்கு நானும் அப்பாவும் அவரைப் பார்க்க போறோம்.. நீ வர்றீயா”

“இல்லைடா ..நீ போயிட்டு வாடா?”

நான் வேதநாயகத்தை பேய்னு நினைத்தது ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
என்னோட புது கைத்தொலைபேசி எண்ணை முருகேசனுக்கு கொடுத்துவிட்டு அவன் வீட்டில் இருந்து விடைபெற்றேன்.

அடுத்த வாரம் எனக்கு ஷிப்டு மாறியிருந்ததால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அட .. வேதநாயகம் அவர் வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்.

“ஹல்லோ சார், எப்படி இருக்கீங்க சுகமா... “

“ம்ம்ம் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்..”

அவரிடம் அவரை பேய் என்று நினைத்ததை அசடு வழிய சொன்னேன்.

வாய்விட்டு சிரித்துவிட்டு “ஆமாம் , இந்த நேரத்துல உஜாலா டிரஸ் போட்டுக்கிட்டு நடந்து கிட்டு இருந்தா யாருக்குத் தான் பயம் வராது?”

அவருடைய மருத்துவமனை அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டே வந்தார். நாலாவது தெரு முடிவு வந்ததும் “சார், உங்க எல்லை முடிந்து விட்டது, நாளைக்குப் பார்க்கலாம்.. “ சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“சில விதிவிலக்குகள் உண்டு, சில சமயங்களில் எல்லை மீறலாம்!!” என்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே மாரியம்மன் கோவில் வாசலில் நின்றேன். சாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன். பேசிக்கொண்டே எனது வீடு வரை வந்து விட்டுவிட்டு வேதநாயகம் திரும்பினார்.
என்றைக்குமல்லாமல் அன்றிரவு நான் நல்லாத் தூங்கினேன். கைத்தொலைபேசியின் குறுந்தகவல் சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்த தகவலைப் பார்த்தேன்..

“வேதநாயகம் காலமானார், இறுதிச் சடங்குகள் அவர் ஊரில் இன்று நடைபெறும்”.. அய்யோ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனதில் இருந்த நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போனேன். இரவு வரும்பொழுது இந்தப் பக்கம் வரவேண்டாம், பகல் தானே என்று நாலாவது தெருவழியாகவே போனேன். தெரு வெறிச்சோடி இருந்தது, எல்லோரும் வேதநாயகத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் போய் இருப்பார்களோ!!!
வேதநாயகத்தின் வீட்டை நெருங்குகையில் இதயம் வேகம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.வேதநாயகத்தின் வீட்டின் வாசற்படியில் ...ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை...அது ...அய்யோ!!! வேதநாயகமே தான்.

எனக்காகவே காத்திருந்தது போல் இருந்த வேதநாயகம் புன்னகையுடன்
“தம்பி, இப்போ உங்க வேலைக்கு நேரமாச்சு, நீங்க நைட்டு ஷிப்டு முடிஞ்சு வர்றப்ப பேசலாம்...”
-----------

Wednesday, December 26, 2007

இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை

ஜெனிக்கு இரண்டு நாட்களாக குழப்பமாய் இருந்தது. அலுவலகத்தில் தன்னிடம் சகஜமாகப் பேசும் கார்த்தி, காலையில் கடற்கரையில் தூரத்தில் இருந்து வைத்தக் கண் வாங்காமல் பார்த்துவிட்டு ஒரு சின்னப் புன்னகைக் கூட செய்யாமல் போய்விட்டான்.இன்று மட்டுமல்ல அதற்கு முந்தைய நாள் கூட ராகத் பிளஸாவில் பார்த்தும் இதேபோல் போய்விட்டான்.

கார்த்தி அந்த அலுவலகத்திற்குப் புதிதாய் வந்து சேர்ந்திருந்தாலும், வந்த சில நாட்களிலேயே தனது கலகலப்பான குணாதியசத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டான். போன வாரம் மோகன் சாரின் வழியனுப்பு விழாவை அருமையாக ஒருங்கிணைத்து அலுவலக மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டான்.

எப்படி இவனால் இரண்டு விதமாக நடந்து கொள்ள முடிகிறது ,ஒரு வேளை பொதுவிடம் என்பதால் தெரிந்தவள் என்றுக் காட்டிக்கொள்ளாமல் போய்விட்டானோ!!! என்ற நினைப்பைக் கலைக்கும் வகையில் அங்கே கார்த்தி வர,

“ஹல்லோ கார்த்தி,”


“ஜெனி, உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் ..” என அவளைக்கூட்டிக் கொண்டு அலுவலகத் தோட்டத்திற்கு வந்து அவனே பேச ஆரம்பித்தான்.

“ஜெனி, எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் உங்களை நேசிக்கிறானாம்... கிட்டத்தட்ட அவனை 27 வருஷமா தெரியும், “


“.....”


“இன்னும் சொல்லப்போனால் நாங்க பிறக்கிறதுக்கு முன்னமே எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்...”


ஜெனி மேலும் குழப்பமானாள்.


“நேத்து மோகன் சார் பங்சன் போட்டொக்களை அவன்கிட்ட காட்டினப்போ , அதுல உங்களைப் பார்த்துட்டு தன் விருப்பத்தை சொன்னான், அவன் என்னை மாதிரி இல்லை, நேர் ஆப்போசிட் ..ரொம்ப ரிசர்வ்ட், இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் அங்கே பாருங்க, உட்கார்ந்திருக்கான் ”

அங்கே அலுவலக வரவேற்பறையில் அச்சு அசலாய் கார்த்தியை உரித்து வைத்தது போல அவனோட இரட்டை சகோதரன் உட்கார்ந்திருந்தான்.

Friday, December 21, 2007

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற - கோங்குர தோட்ட காடா - மெட்டு ஒன்று பாடற்கள் இரண்டு- வீடியோ

2004 ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், பாடலைப் பாடியிருப்பவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மாலதி.
அமர்க்களமான இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பவர்கள் ரவிதேஜா மற்றும் புன்னகை இளவரசி சினேகா.



இதே மெட்டில் அமைந்த பாடல், தமிழிலும் அதே இசைக்கூட்டணியில் மாயாவி படத்தில் வெளி வந்தது. தமிழில் இந்த மெட்டுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா.




நன்றி : www.youtube.com

Thursday, December 20, 2007

ஃபாதர் என் குழந்தை பிரெஞ்சு பேசுறாள் - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

சுற்றுலாவாக கடற்கரை நகரமான இந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து சுணக்கமாக இருந்த அஞ்சலி பாப்பா இன்றைக்குத்தான் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தாள். அதனால் அப்படியே கடற்கரை மணலில் நடைபோய்விட்டு வருவோம் என கார்த்தி ,ஜெனி தங்களது குழந்தை அஞ்சலி பாப்பாவுடன் அந்த அழகிய மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

குழந்தை அஞ்சலி மணலை தனது பிஞ்சுக்காலால் மணலை அள்ளித் தெரித்தபடியே உதறி உதறி நடந்து வந்து கொண்டிருந்தது. மூவரின் கால் தடங்களும் அழகாக மணலில் பதிந்து இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரர் நடந்து வர, அஞ்சலிபாப்பா அந்த வெள்ளைக்காரரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தது. குழந்தையை இருவரும் வேகமாக பின் தொடர, அந்த வெள்ளைக்காரரும் இவர்களின் மிக அருகில் வந்து சேர்ந்தார்.

ஜெனியும் கார்த்தியும் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஆங்கிலத்தில் உரையாடலை தொடர, சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரர் குட்டிக்குழந்தையைப் பார்த்து

"கோமோன் வ த்யூ?"(Comment vas-tu) என கேட்க

அஞ்சலிபாப்பா "ஜ வே திரேபியான் ?" (Je vais très bien)என மழலையாகச் சொல்ல ஜெனி மற்றும் கார்த்தியின் முகம் மாறியது.

அந்த வெள்ளைக்காரர் மேலும் சிலக் கேள்விகளை பிரெஞ்சில் கேட்க குழந்தை உடனுக்குடன் பதில் சொல்ல இவர்களின் முகம் வெளிற ஆரம்பித்தது. ஜெனி சடாரென அஞ்சலிபாப்பாவை கையில் தூக்கிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரர் "ஓவர்"(Au voir) என்று குழந்தைக்கும் "சி யூ லேட்டர் " என ஜெனிக்கும் சொல்லிவிட்டு கார்த்தியின் கண்களைப் பார்த்து "யூ ஆர் சோ லக்கி ஜென்டில்மேன்" என அழுத்தமாகக் கைக்கொடுத்துவிட்டு விடைபெற்று சென்ற போது மாலை மறைந்து இரவாகிப் போய் இருந்தது.


வெளிறிய முகத்துடன் அஞ்சலிபாப்பாவை தூக்கிக் கொண்டு, ஜெனி் அந்த தேவாலயத்திற்குள் வேகமாக ஓடிவந்தாள்.அவளின் பின்னால் கார்த்தி பொறுமையாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவளின் கண்கள் பாதிரியார் பிலிப்பை தேடிக்கண்டுபிடித்தன.

"ஃபாதர்,அஞ்சலிக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க, இன்னக்கி ஈவ்னிங் பீச்ல, ஒரு ஃபாரினரோட வேற ஒரு ஈரோப்பியன் லாங்குவேஜ் ல பேசினாள்,ஐ திங்க் அது பிரெஞ்சு.. த்ரேபியான், ஓவர் னு சில வார்த்தைகள் புரிந்தது. அவளுக்கு இந்த லாங்குவேஜ் தெரிய வாய்ப்பே இல்லை, எங்களுக்கு பயமாயிருக்கு ஃபாதர், பிளீஸ் பிலெஸ் பண்ணுங்க"

இதைக் கேட்ட பின்னர் ஃபாதர் பிலிப்பின் முகம் இறுக ஆரம்பித்தது. அவரின் முகத்தில் சிறிது தயக்கத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார்.

"கூட யாரவது பார்த்திங்களா, ஃபாரின் லேடி, சின்னகுழந்தை,"

"நோ ஃபாதர்"

"ஜெனி, நீங்க சீக்கிரம் இந்த ஊரை விட்டு கிளம்புவதுதான் நல்லது, மூனு வருஷம் முன்னாடி ஒரு பிரெஞ்சுக்கார் அவரோட மனைவி மற்றும் குழந்தையுடன் வாக்கிங் போறப்ப சுனாமி அலையில போயிட்டாங்க, அதுக்குப் பின்ன அடிக்கடி கடற்கரையிலே ஒரு அவங்க உருவங்களை பார்த்ததாக அடிக்கடி சர்ச்சுக்கு வர்றவங்க சொல்லுவாங்க, பட் நான் இதுவரை பார்த்ததில்லை. அனேகமா நீங்க சந்திச்சுப் பேசினது அவராக இருக்கலாம், " என சொல்லிவிட்டு "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ஆமென், ஆண்டவர் எப்போதும் உங்களுடன் துணை இருப்பாராக" என மூவரையும் ஆசிர்வதித்து அனுப்பினார்.கார்த்தி எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.

தேவாலய வாசல் வரை அவர்களை வழியனுப்பிட்டு வந்த பாதிரியார், ஜெனியும், கார்த்தியும் சத்தமாக பிரெஞ்சில் பேசிக்கொண்டுப் போவதைக் கேட்டதும் அவரின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் பரவியது. அதிர்ச்சி அலைகளுக்கு காரணம் அவர்கள் பிரெஞ்சுப் பேசிக்கொண்டு போவதில் அல்ல.. அவர்களின் குரல் அலையில் அடித்து செல்லப்பட்ட அந்த பிரெஞ்சு தம்பதியினரின் குரலாக இருந்தது தான். திரும்பிப்பார்த்த பாதிரியாரை நோக்கி மின்னொளி வெளிச்சத்தில் அழகாக அஞ்சலி சிரித்தாள். அது இந்தியக் குழந்தையின் சிரிப்பில்லை என பாதிரியாருக்குப் புரிந்தது.

Tuesday, December 18, 2007

நீங்காத நினைவுகள் - சிறுகதை

அந்த பிரபலமான வார இதழில் கார்த்தி எழுதி இருந்த சிறுகதையை மோகன் திரும்ப ஒருமுறைப் படித்து முடித்துவிட்டு மேசையின் மேல் வைப்பதற்கும் கார்த்தி கையில் ஒரு கோப்புடன் அவரின் அறையினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"மோகன்,பைனல் இண்டர்வியுல 4 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆயிருக்காங்க, நாம எடுக்கப் போறது மூணு பேர்தான்,ஒருத்தரை ரிஜக்ட் பண்ணனும்? நீங்க ஒரு முறை இந்த ரிப்போர்ட்டை ரிவ்யூ பண்ணி ரிசல்ட் சொல்லிடுங்க "

"அது இருக்கட்டும் கார்த்தி, நீ முதல்ல உட்காரு உன் கதை படிச்சேன்.. ம்ம்ம்ம் நல்லா வந்து இருக்குன்னுசொல்றதுக்கு முன்ன ஒரு விசயம் .. சொன்னால் கோச்சுக்ககூடாது"

"சொல்லுங்க மோகன், நீங்க எப்போதும் என்னோட நலம் விரும்பின்னு எனக்குத் தெரியும்"

"பேரைக்கூட மாற்றாமல் எதுக்கு ஜெனிப் பத்தி எழுதி இருக்க? அதுவும் எதிர்மறைக் கதாபாத்திரமாய்? சொந்தவாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தவிர்த்துக் கதை எழுத முடியாதா? "

"ம்ம்ம்ம் ஜெனி மேல ஏற்பட்ட வெறுப்பை தீர்த்துக் கொள்வதற்காக போன வருடம் எழுதிவைத்தக் கதை, சும்மாஅனுப்பி வைக்கலாமேன்னு அனுப்பி வச்சா அதை பிரசுரமே பண்ணிட்டாங்க .. நானே எதிர்பார்க்கல மோகன்"

"நாம நேசிக்கிறவங்க மேல, எந்தக்காலத்திலும் எந்தக் காரணத்தை சொல்லியும் வெறுக்க முடியாது ..நீ அவளை நேசிச்சது உண்மைன்னா உன்னால இவ்வளவு வெறுப்பைக்காட்டி இருக்க முடியாது... வார்த்தைகளிலும்வசனங்களிலும் இவ்வளவு வெறுப்புன்னா உன் மனசில்ல எவ்வளவு காட்டம் இருந்திருக்கும்.. "

"இருக்கு மோகன், இன்னும் கூட கொஞ்சம் இருக்கு, அவ டிப்லோமெடிக்கா பிரிஞ்சு போயிருந்தா பரவாயில்லை,அவ பண்ணது பச்சைத் துரோகம்.. அவள் துரோகி.. அந்த நினைப்பு போக இன்னும் கொஞ்ச நாளாகும்... எனக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் இருந்திருந்தால் அவளை அப்போவே கொலை பண்ணி இருப்பேன்.. நல்ல வேளை
அப்படி எதுவும் ஆகல..நான் கோழையா இருந்ததும் நல்லதா போச்சு, " கண்கள் சிவக்க பேசிய கார்த்தியை தண்ணீர் கொடுத்து மோகன் ஆசுவாசப்படுத்தினார். தண்ணீரைக் குடித்துவிட்டு கார்த்தி தொடர்ந்தான்

"இதில் எந்த தப்பும் இருக்கிறதா நான் நினைக்கல மோகன், ஆல்பிரட் நோபல் உருவாக்கின நோபல் பரிசை கணக்குக்கு மட்டும் தரமாட்டாங்க, காரணம் உங்களுக்குத் தெரியும்தானே!! அவரோட காதலி அவரை விட்டுட்டு ஒரு பெரிய கணிதமேதையோட போயிட்டாங்கன்னு,.. உயில் கூட எழுதி வச்சிருக்காராம்.. எக்காலத்திலும் கணக்குக்கு நோபல் பரிசு தரக்கூடாதுன்னு, எப்பேற்பட்ட விஞ்ஞானி அவருக்கே, அவரோட காதல் எந்த அளவுக்கு பாதிப்பைக் கொடுத்திருக்குன்னா, நான் எல்லாம் சாதரணம் மோகன்"

"கார்த்தி, நீ சொல்ற இந்த நோபல் பரிசு உதாரணம் தப்பு, நீ குறிப்பிடுற அந்த மேத்தமேடிசியனுக்கும் நோபலுக்கும் நேரிடையா எந்த தொடர்பும் கிடையாது, அது அந்தக் காலத்தில மேத்ஸுக்கு நோபல் பரிசு ஏன் கொடுக்கலேன்னு கதைகள் பாணியில சொல்லப்பட்ட பல கிசுகிசுக்களில் ஒன்னு.. விசயத்துக்கு வருவோம், உன் எழுத்து நடை நல்லா இருக்கு, இந்த மாதிரி சுய புலம்பல்களை கதையா மாற்றாமல் நல்ல பாசிடிவ் கதைகள் எழுது.. உன் கதை படிக்கிறவங்களில் யாராவது ஒருத்தருக்கு லேசான மனமாற்றம் வந்தாலே போதும், நீ எழுத்தாளானாய் ஜெயிச்சுடுவே!!! "

கார்த்திக்கு லேசாய் உறைக்க ஆரம்பித்தது.

"கார்த்தி, நமக்கு சங்கடங்களைக் கொடுத்தவங்களை மன்னிக்கிறது தான் அவங்களுக்கு நாமக் கொடுக்கிற பெரிய தண்டனை.. அது மாதிரி ஒரு சந்தோசமான பழிவாங்கல் எதுவுமே இல்லை தெரியுமா!! " மோகன் தொடர்ந்து பேச பேச கார்த்தி தனக்கு ஒரு தெளிவு பிறப்பதாய் உணர்ந்தான்.

சில வினாடிகள் அமைதிக்குப் பின்னர்

"கார்த்தி, அந்த லிஸ்ட்டை ரேங்கிங் படி வாசிங்க, "

"இமானுவேல் ஞானசேகரன், பாண்டித்துரை, அஜீஸ் அகமது அண்ட் லாஸ்ட்டா ரம்யா திருவேங்கடம்,"

"ரம்யா" இந்தப் பெயரை மெல்ல மனதுக்குள் மோகன் முணுமுணுத்துக் கொண்டார். எத்தனை வருடம் ஆனாலும் இந்தப் பெயரை மறக்க முடியுமா அல்லது அவளைத்தான் மறக்க முடியுமா...எங்கிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியாது..அதனால் என்ன? மலர்கள் சருகாக மாறிப்போயிருந்து இருக்கலாம்.. அதன் மனம் மனதில் எப்போதும் அப்படியேத்தானே இருக்கும். மோகனின் மனதில் ஏற்பட்ட உற்சாகம் மெல்லிய புன்னகையாய் மாறி

"கார்த்தி, யாரையும் ரிஜெக்ட் பண்ண வேண்டாம், நாலு பேரையும் செலக்ட் பண்ணிடுங்க, எல்லோருக்கும் நாளைக்கே ஆஃபர் லெட்டர் அனுப்பிச்சுடுங்க"

மோகன் சொல்வதைக் கேட்ட கார்த்தி அதற்கான காரணம் தெரியாமலேயே தலையை ஆட்டினான்.

Monday, December 17, 2007

மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

காட்சி 1 :

"ஏன் தங்கினால் என்ன?" இது தான் இன்றைக்கு காலை ஜெனி என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

<< எவ்வளவு திமிர் இருந்தால், ஜெனி வெளியூர் போறப்ப மோகன் கூட ஒரே ரூமில் தங்கி இருப்பாள், அதை வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்றாள், சே, எவ்வளவு கேவலமானவளா இருப்பாள் >> என் மனதுக்குள் ஜெனியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மேல் இது நாள் வைத்திருந்த அன்பெல்லாம் வெறுப்பின் வடிவில் எரிமலையாய் சீறியது. மதியம் ஒரு லோக்கல் ரவுடியிடம் சொல்லி கள்ளத்துப்பாக்கி வாங்கினேன். நேராக ஜெனி ரம்யாவுடன் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்ஸை நோக்கி என் காரை ஓட்டினேன்.


காட்சி 2 :

"சாரி, ஜெனி, நான் தான் அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கோ"

"இல்லை கார்த்தி, ஐ சுட் நாட் ஹாவ் டன் தட், நான் அப்படி தங்கி இருக்கக்கூடாது, பட் மோகன் பர்பெக்ட் ஜெண்டில்மேன் தெரியுமா?"

"சாரி, நான் மோகனையும் தப்பா நினைச்சுட்டேன், எனி வே இப்போவாது நாம புரிஞ்சுக்கிட்டோமே!!"

"ஆமாண்டா கார்த்தி, நீ இப்படி பண்ணலேன்னா, நாம எப்போவுமே சேர்ந்து இருக்க முடியாது, மார்னிங் நீ பேசுன பேச்சுக்கு உன் முகத்திலேயே முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன்"

இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்தோம். மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

காட்சி 3:

படிகளில் மோகனைப் பார்த்த ரம்யா அழுதபடியே அவனிடம் ஓடி வந்தாள்.

"எல்லாம் கண்ணிமைக்கிற நேரத்துக்குள் நடந்துடுச்சு மோகன், கார்த்தி வந்தான், ரிவால்வரை எடுத்து ஜெனியை சுட்டுட்டு , தன்னையும் சுட்டுக்கிட்டான்"

ரத்த வெள்ளத்தில் எங்களது உருவங்களை பத்திரிக்கைகாரர்கள் போட்டோ பிளாஷ் தெரிக்க எடுத்துக் கொண்டிருக்க மெதுவாக வான் மேகங்களைத் தாண்டி வானில் நானும் ஜெனியும் பறக்கலானோம்.

Wednesday, December 12, 2007

கிரிக்கெட்டும் டேவிஸ் கோப்பை டென்னிசும் - தகவல்

கோட்டார் ராமசாமி, சர்வதேச அளவில் இரண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர் என்ற பெருமை உடையவர். 1920களில் இந்தியாவின் சார்பாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்ற இவர் பிற்பாடு 1936 ஆம் ஆண்டில் இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 40 வயதில் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை இங்கிலாந்து ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் ஆடிய இவர் இரண்டு இன்னிங்ஸுகளிலும் முறையே 40 மற்றும் 60 அடித்து அந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவியாக இருந்தார்.

1985யில் தனது குடும்பத்தினருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறிய இவரை அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இவரது மரணம் உறுதிப்படுத்தபடாததால் "காணவில்லை" என கிரிக்கெட் குறிப்பு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய கிரிகின்போ இணையதளக் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


கோட்டார் ராமசாமியைப் போலவே மேற்கிந்தியதீவு அணிகளின் முன்னாள் விக்கெட்கீப்பர் "ரால்ப் லீகலும்" டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமன்றி டேவிஸ் கோப்பை ஆட்டங்களிலும் ஆடியுள்ளார். இருவருக்கும் அதிசயமான ஒற்றுமை என்னவெனில் இவரும் "காணமல் போனவராக" கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். 2003 ஆம் ஆண்டில் இருந்து இவரைக் காணவில்லை எனபதிவு செய்யப்பட்டுள்ளது.




கென்ய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆசிப்கரீமும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டங்களில் பங்கு பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு கென்ய அணிக்குத் தலைமை தாங்கிய இவர் , டேவிஸ் கோப்பை ஆட்டங்களிலும் கென்ய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்

Monday, December 10, 2007

பேய் வீடு - Surveyசன் போட்டிக்காக "நச்சுன்னு" மேலும் ஒரு கதை

" இந்த பேய் வீட்டை வாங்குற நீங்க பெரிய தைரியசாலிதான் சார், இருந்தும் உங்களுக்கு லாபம் தான், இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போற கிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட 15க்கு வந்துடுச்சு, " என தன் கமிஷன் தொகை குறைந்துவிட்டதை தலையை சொறிந்தபடி சுட்டிக்காட்டிய வீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துவிட்டு , நான் வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத் தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தர வயது ஆசாமியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்த வீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4 வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட பின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11 மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம் வீட்டில கேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க, “

“ம்ம்ம்" அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.

“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை உண்டா?”

“இல்லை சார்

“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்க ஃபேமிலியோட குடிவர முன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய் வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள் இருந்தாலும் உங்களுக்கு போயிடும்... நீங்க குடும்பஸ்தரா?, ”

“இல்லை சார், எனக்கு இன்னும் கல்யாணமாகல" அவர் வீட்டில் கொடுத்த காபியை நாசுக்காக மறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கிய வீட்டிற்கு ஒரு சில தட்டுமுட்டு சாமான்களுடன் வேலையாட்கள் சுத்தம் செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.

“சார், இந்த புல்லாங்குழல் கொல்லப் பக்கம் கிடந்தது" என்று சுத்தம் செய்ய வந்திருந்த ஆட்களில் ஒருவன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை சிரித்துக் கொண்டே வாங்கி அலமாரியில் வைத்து, வேலையாட்களை அனுப்பிவிட்டு கட்டிலில் கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது . ஆம் இது என் கல்லூரிக் காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது... ம்ஹூம் ... இன்னும் வாழ்கிறாள் இங்குதான்.. எனக்காக... மற்றவர்களுக்கு அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ள அதே பழைய ஜெனிதான்... கல்லூரியில் அவள் வழக்கமாக வாசிக்கும் புல்லாங்குழல் இசை மெலிதாக என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.

Sunday, December 09, 2007

புதுவைப் பட்டறை ஒரு மைல்கல்

தமிழை , கணினியில் தமிழின் பயன்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தமிழார்வலர்கள் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆரோக்கியமான சூழலில், புதுவை வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி வலைப்பதிவர் பட்டறை ஒரு மைல்கல் என்று சொல்லலாம். நகரத்தின் மையப்பகுதியில் , வெளியூர்காரர்களும் சிரமமில்லாமல் சென்றடைந்திடக்கூடிய இடமாக பட்டறை நடக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தமைக்காக அமைப்புகுழுவினரை நிச்சயம் பாராட்டலாம்.





நந்தா, மா.சிவக்குமாருடன் சரியாக காலை 9 மணிக்கு அரங்கை (சற்குரு உணவகம்) அடைந்தபோது ஓசை செல்லா, எ-கலப்பை முகுந்த் ஆகியோர் ஏற்கனவே அங்கு இருந்தனர். புதுவை நண்பர் ஜே.பூரா எங்களுக்கான காலை உணவு ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டார்.
காலை உணவை முடித்துவிட்டு பட்டறை நடக்கும் ஐந்தாம் தளத்தை அடைந்த போது ஏற்கனவே பட்டறை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தவர்கள் நிறைந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் உள்ளே நுழையும்பொழுதே பட்டறைக்கான மலர், தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு , எழுதுகோல், எழுத நோட்டுப்புத்தகம் அதை அழகாக வைத்துக் கொள்ள ஒரு கோப்பையும் அவர்களுக்கு தரப்பட்டது.


வழக்கமான ஆரம்ப விழாபோல் அல்லாமல் , ரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோர் ரத்தினச்சுருக்கமாக பட்டறையின் நோக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு நேரிடையாக நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

எ-கலப்பை முகுந்த் தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகளை எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து முடித்தவுடன் , முனைவர். மு.இளங்கோவன் தமிழ்99 முறையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பங்கேற்பாளர்கள் சற்று இறுக்கமாக அமர்ந்திருப்பதைக் கவனித்த மா.சிவக்குமார் மு.இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவரசியமாகக் கூறி அந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினார்.





பங்கேற்பாளர்களும் இறுக்கம் தளர்ந்து சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க நந்தா, முகுந்த் ஆகியோர் மா.சி உடன் இணைந்து அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். பட்டறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஓசை செல்லா புகைப்படங்களை எடுத்து , தனக்கே உரிய ஒன்லைனருடன் தமிழ்வெளி தளத்தில் நேரலையாக தரவு செய்து கொண்டிருந்தார்.



அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் , அரட்டை வசதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி வகுப்பெடுத்து முடித்ததும், “உபுண்டு" ராமதாஸ் சுவரசியமாக உபுண்டு இயங்கு தளத்தைப் பற்றியும் கட்டற்ற மென்பொருள்களின் அவசியத்தைப் பற்றியும் ஆதிக்க அடிமை மோகம் எந்த அளவுக்கு போகும் என அழுத்தம் திருத்தமாக உதாரணங்களுடன் விளக்கினார்.

ராமதாசு பேசிக்கொண்டிருக்கையிலேயே , மா.சிவக்குமார் இடைமறித்து , ராமதாசு லினக்ஸு குழுமங்களில் தமிழில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் உறுதியான நிலையைப் பாராட்டினார்.



ராமதாசின் விளக்கம் முடிந்த பின்னர், முனைவர்.மு.இளங்கோவன் தமிழில் இணையத்தில் கிடைக்கப் பெறும் இணையத்தளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தமிழில் இணையம் என்று பெயர்வந்தமையைப் பகிர்ந்து கொண்டார்.






அருமையான மதிய உணவிற்குப் பின்னர், முனைவர் நா.இளங்கோவின் தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிப்பது, குறித்த அமர்வு ஆரம்பித்தது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்ப விசயங்களைச் சொல்லித்தருவது பெரிய கலை. அதை மிக அனயாசமாக செய்தார். அவ்ர் ஒவ்வொன்றாய் விளக்க மடிக்கணினியில் இருந்து விளக்கங்களை விரைவாக திரையில் காட்டிய அருண்பாரதியின் ஒருங்கிணைவு பாராட்டத்தக்கது. திரட்டிகளில் இணைப்பது பற்றி தூரிகா வெங்கடேசும் , வேர்டுபிரஸ் பற்றி நந்தாவும் ஒலி ஒளிக்காட்சிகளை இணைப்பது பற்றி செல்லாவும் வகுப்பு எடுத்தனர். சென்னைப் பட்டறையில் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள் மாணவர்கள் என்றால் இங்கு அரசு அலுவலங்களில் பணிபுரியும் நடுத்தர வயதினர் காட்டிய ஆர்வம் மெச்சத்தகுந்தது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வைத்தார்கள். கடை நாற்பதுகளில் இருந்த ஒரு பெண்மனி தமிழில் டைப் அடிச்சுக் காட்டுங்கோ என்று சொல்லி அவர்களுக்கு தட்டச்சு செய்து எவ்வளவு எளிமையானது என்று சொல்ல அவர்கள் முகம் அடைந்த பூரிப்பு அளவிட முடியாதது.






ஜிமெயில் ஒரு கட்டத்தில் தன் வேலையைக் காட்டியதால் சிலருக்கு ஜிமெயில் கணக்கு திறந்து தர இயலவில்லை. இருப்பினும் கோவிந்து என்ற புதுவை நண்பர் விடாப்பிடியாக தனது கையேட்டில் கணக்குத்திறக்கும் வழிமுறைகளை எழுதிக் கொண்டார். மா.சிவக்குமாரும் களத்தில் இறங்கி சொல்லிக் கொடுத்தது பேருதவியாக இருந்தது.





பிரபல வலைப்பதிவாளர் பொட்டீக்கடை சத்யாவை இந்த நிகழ்வின் போது சந்தித்தது மகிழ்ச்சியான விசயம்.




பட்டறையை வெற்றிகரமாக முடிந்ததும், தன் வீட்டுக் கல்யாணத்தை சிறப்பாக முடித்து ஏற்படும் சந்தோசத்தை அமைப்பாளர்களின் கண்களில் காண முடிந்தது. பட்டறையின் தொடர்ச்சியாக புதுவைக்குட்பட்ட பள்ளிகளில் தமிழில் கணினிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் புதுவை வலைப்பதிவர் சிறகம் ஈடுபடப் போவதாக தூரிகா வெங்கடேஷ் தெரிவித்தார். இவர் திரட்டி.காம் என ஒரு வலைப்பூத் திரட்டி ஒன்றை வடிவமைத்துள்ள செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.



இந்த புதுச்சேரி பட்டறை, பிறநகரங்களில் இருக்கும் தமிழார்வலர்கள் இணைந்து தமிழ்க்கணினிப் பயன்பாட்டை பாமரமக்களிடம் கொண்டு சேர்க்க, இவ்வகைப் பட்டறைகளை நடத்தப் போவதற்கு ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையாகாது. புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

தமிழ்க் கணினி பயன்பாட்டைப் பரவலாக்கும் முயற்சிகளில் மீண்டும் ஒரு முறை பங்கேற்ற மகிழ்ச்சியில் ஊர் திரும்பினோம்.






புகைப்படங்கள் நன்றி: ஓசை செல்லா, தமிழ்வெளி.காம்

Saturday, December 08, 2007

புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது


புதுச்சேரியில் தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை இரா.சுகுமாரன் மற்றும் கோ.சுகுமாரன் ஆகியோர்களின் ஆரம்ப அறிமுக உரைக்குப் பின்னர் இனிதே துவங்கியது. எ-கலப்பை முகுந்த் தமிழ் தட்டச்சு முறைகளை தமிழ்க் கணினி ஆர்வலர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொன்டிருக்கிறார். சென்னையில் இருந்து வலைப்பதிவர்கள் நந்தா, மா.சிவக்குமார் உடன் நானும் சரியான நேரத்திற்கு பட்டறை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.கோவையில் இருந்து ஓசை செல்லாவும் வந்திருக்கிறார்.

முனைவர்.மு.இளங்கோவன் தமிழ்99 தட்டச்சு முறையை விளக்கிக்கொண்டிருக்கிறார்.இறுக்கமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களை மா.சிவக்குமார் இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவையாகக் கூறி அந்த இறுக்கத்தை தளர்த்தினார்.

பங்கேற்பாளர்களின் இறுக்கம் தளர்ந்து தங்களது சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க, முகுந்த் ,நந்தா, மா.சி ஆகியோர் அதற்கான விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர்.

அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் அரட்டை ஆகிய விசயங்களை வகுப்பு எடுத்தார்.நேரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பட்டறையில் அடுத்த நிகழ்வாக இயங்குதளங்களைப் பற்றி மா.சிவக்குமாரும், உபுன்டு ராமதாசு அவர்களும் விளக்கினர்.்
உபுன்டு ராமதாசு மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்கள் எவ்வாறு பயனாளரகளை அடிமைத்தனத்தில் கொண்டு போகிறது என கமலஹாசனின் திரைப்பட எடுத்துக்காட்டைக் கூறி ஒபன் சோர்சு மென்பொருள்களின் தேவையை விளக்கினார்.்
இணைய உலவிகளைப் பற்றி, முக்கியமாக பயர்பாக்சு அதன் நீட்சிகளைப்பற்றியும் விரிவாக விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
இணைய வெளியில் உலவும் தமிழ் இணையதளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையை முனைவர். மு. இளங்கோவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓசை செல்லா பட்டறை செய்திகளை உடனுக்குடன் தமிழ்வெளி முகப்பில் தந்துகொன்டிருக்கிறார்.



மேலதிக தகவல்களைப் புகைப்படங்களுடன் தமிழ்வெளி செய்திகளில் காண இங்கு சொடுக்கவும்

உன் மொழி போல் என் மொழியும் அமுதமே - சிறுகதை

பரீதாபாத்தில் இருந்து எங்க அலுவலகத்திற்கு வியாபரம் விசயமாய் வந்திருந்த பங்கஜ் அகர்வாலுடன் நான், என் அலுவலக தலைமை நிர்வாகி மோகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அகர்வாலே பேச்சை ஆரம்பித்தார்.

"தமிழ்நாடு வந்தாலே ஒரு பிரச்சினை, யாருக்கும் ஹிந்தி தெரியமாட்டேங்குது" என்றார் ஆங்கிலத்தில்

"உங்க ஊரிலேயும் அப்படித்தானே... யாருக்கும் தமிழ் தெரியமாட்டேங்குது" மென்மையான ஆங்கிலத்தில் மோகன் பதில் சொல்ல

"மோகன், என்ன பேசுறீங்க.. ஹிந்தி நம்மோட தேசிய மொழி" கடுமையான குரலுடன் ஆங்கிலத்திலேயே அகர்வால் தொடர்ந்தார்.

இது மாதிரி ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தி, மோகன் கிட்ட பேசி நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.

அகர்வாலுக்கு எப்படி மோகன் பதில் தரப் போகிறார் என்று ஆர்வத்துடன் கவனிக்கலானேன்.

ஆனால் அதற்குள் ஷகிராவின் ஆங்கிலப் பாடல் அதிர அகர்வாலின் கைத்தொலைபேசி அடித்தது. எழுந்துப் போய் கெஞ்சலாய் கொஞ்சலாய் யாருடனோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். பேசி முடித்துவிட்டு திரும்பி கொஞ்சம் சந்தோசமாய் வந்த அகர்வால்

"என் மனைவியிடமிருந்து அழைப்பு... என் அலுவலக மேலிடத்தைவிட இவளிடம் தான் எனக்கு அதிகம் பயம்" கோர்வையான ஆங்கிலத்தில் அகர்வால் பேசப் பேச்சு குடும்பம், குழந்தைகள், கிரிக்கெட் என திசை திரும்பிற்று.

சூடான ஒரு விவாதத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு சப்பென்றாயிற்று. அன்று மாலை அகர்வால் தான் கிளம்பும் முன் திட்ட முன்வடிவுகளை சிறப்பாக வழங்கிய என்னையும் கிருஷ்ணமூர்த்தியையும் தனியே அழைத்துப் பாராட்டினார். எங்களைப் பொதுவாக ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் அகர்வால் ஏதோ ஹிந்தியில் பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு கோபம் கோபமாய் வந்தது.. அவர்கள் மேல் அல்ல..

ஹிந்திப் படிக்க வைக்காத இந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்காக.. இன்று நேற்று வந்த கோபமல்ல.. "மைனே பியார் கியா, தூர்தர்ஷன் மகாபாரதம், ராமாயண" காலத்துக் கோபம். என்னோட பொழுது போக்கு உலகத்தில் இருந்து பாதியை யாரோ சதி செய்து எடுத்து விட்டு போலத் தோன்றும்.

நடுவில் கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்த இந்தக் கோபம் எங்க அலுவலகத்தில் கோவாவில் இருந்து ஜெனிபர்- டி -சௌசா வந்து சேர்ந்த போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. இந்தக் கிருஷ்ணமூர்த்தி அவளிடம் ஹிந்தியில் கடலைபோடுவான். என்னைவிட கிருஷ்ணமூர்த்தி ஆறு மாதம் சீனியர், மற்றபடி நானும் அவனும் தொழில்நுட்ப அறிவு சம்பந்தபட்ட விசயங்களில் சமம்தான். சீனியர் என்பதால் விடுப்பு சம்பந்தபட்ட விசயங்களில்
அவனின் அனுமதி பெறவேண்டும் என்று இருப்பதால் சில சமயங்களில் ஜெனி முன்னர் என்னை இரண்டாம்தரமாக நடத்துவதும் உண்டு.

ஜெனியின் முகவெட்டு எனக்கு கல்லூரியில் இருந்த முதல் காதலியின் முகத்தை ஞாபகப்
படுத்தியதால் அவள் மேல் எனக்கு தனிக்கவனம் உண்டு. எனக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்றபொழுதும், எனக்கு ஹிந்தி தெரியாததால் அது சம்பந்தபட்ட விசயங்களை பேசி அவளைக் கவர முடியவில்லையே என்ற எரிச்சல் அடிக்கடி வரும். இயலாமையினால் எரிச்சல் கடைசியில் என்னை ஹிந்திப் படிக்க விடாமல் பண்ணிட்டாங்களே!! அப்படின்னு ஒரு புலம்பல்ல வந்து முடியும்.

இரண்டு நாள் கழித்து, மோகன் அவரோட அறைக்கு கூப்பிட்டார். இதுதான் முதல் முறை அவர் என்னை அவரின் அறைக்கு அழைப்பது. எதுவாக இருந்தாலும் என் இடத்திற்கே வந்துதான் சொல்லுவார் அல்லது கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கூப்பிட்டு சொல்லுவார். லேசான நடுக்கத்துடனும் பயத்துடனும் உள்ளே நுழைந்தேன்.

திருவள்ளுவர் படம் அவர் இருக்கைக்கு மேலே இருந்தது. திருக்குறள் புத்தகம் அவரின் மேசையின் மேல் இருந்தது. அறையைச்சுற்றி கண்களை சுழலவிட்டேன். பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள், சிலப்பதிகாரம், மற்றும் சில திராவிட இயக்க வரலாறு சம்பந்தபட்ட புத்தகங்கள் அலமாரியில் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

என்னை அவர் அமரச்சொன்னவுடன், "நீராறும் கடலுடுத்த " என கைத்தொலைபேசி பாட எடுத்து யாருடனோ ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் விதத்தை வைத்துப் பார்த்த பொழுது சரளமாகவே பேசுகிறார் என்று தெரிந்தது.

அவர் பேசி முடித்தவுடன் "சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?!!! " என்றேன் ஆச்சரியத்துடன்.

"இந்தக் கம்பெனி ஆரம்பிப்பதற்கு முன்னர் போபால்ல 5 வருஷம் இருந்தேன்" என்றார் சிரித்துக் கொண்டே

"பின்ன அந்த பங்கஜ் அகர்வாலோட நீங்க இங்கிலீஷ்லேயே தான் பேசினீங்க.. ஏன்?"

"இங்கிலீஷ் தானே எங்க இரண்டு பேருக்கும் தெரிந்த பொது மொழி.. ஹிந்தி பேசி நானும் உன் ஆளுதான் அப்படின்னு ஒரு பொய்யான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பல அதனாலதான் இங்கிலீஷ்ல மட்டும் பேசினேன்" என்றார்

அவர் சொல்வதுசரி போலத்தான் தோன்றியது..

" சார்..இவ்வளவு தமிழ் புக்ஸ்.. உங்களுக்கு இவ்வளவு தமிழ் மேல அபெக்சனா?"

"இல்லை கார்த்தி, தமிழ் மொழிப் பற்று என்று சொல்ல முடியாது. தாய்மொழிப் பற்று அப்படின்னு சொல்லலாம்.. தமிழ் என் தாய் மொழியாக அமைந்துபோய்விட்டது.. ஒரு வேளை பெங்காலியோ ஒரியாவோ என் தாய் மொழியாக அமைந்திருந்தால் அந்த மொழியின் பால் பிரியம் அதிகமாக இருந்திருக்கும்... இந்த உலகத்துக்கும் நமக்கும் ஏற்பட்ட முதல் பாலம் நம்ம மொழிதான் அதுமேல ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது இயல்புதானே!!"

"ஆமாம் சார்.. அப்போ ஏன் வேற மொழி வேண்டாம்னு நாம் போராட்டம் பண்ணோம்?"

"போன வாரம் கொலம்பஸ் பத்தின படம் பார்த்தேன்.. கொலம்பஸ் கரீபியன் தீவுகளுக்குப்போறபோது ஒரு பழங்குடி பையனுக்கு ஸ்பானிஷ் கத்துக்கொடுத்து அங்கு இருக்கிற பழங்குடி மக்களுடன் தொடர்பு கருவியாக அவனைப் பயன் படுத்திக் கொள்வார்... ஒரு கட்டத்தில் கொலம்பஸின் ஆட்கள் பழங்குடி மக்களை கொடுமைப் படுத்துவதை காணச்சகிக்காமல் அந்தப் பழங்குடிப் பையன் தனது பழைய அடையாளங்களை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டு போகும்பொழுது கொலம்பஸ் அவனைக் கூப்பிடுவார்.. அவன் கொலம்பஸை நோக்கி, << நான் உன் மொழியை கத்துக்கிட்டேன்.. ஆனால் நீ என் மொழியில் இருந்து ஒரு வார்த்தைகூட கற்றுக்கொள்ளவில்லை உன்னை நான் எப்படி நம்புவது>> என சொல்லிவிட்டு காட்டுக்குள் ஓடிவிடுவான்.. இப்போ புரிந்ததா!!"

"ம்ம் புரிஞ்சது சார்..."

"இப்போ நாம ஆபிஸ்ல எல்லோரும் ஏன் ஸ்பானிஷ் படிக்கிறோம்" என்று மோகன் ஸ்பானிஷ் ல கேட்ட கேள்விக்கு

"ஜனவரில பாதிபேருக்கு மேல புரஜெக்ட் விசயமா தென்னமெரிக்கா சிலி நாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு அதிகம்" என் உடைந்த ஸ்பானிஷில் பதிலளித்தேன்.

"ம்ம் அதேதான் தேவைக்கேற்ப தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சரியானது.. நான் போபால்ல இருந்தப்ப ஹிந்தி தேவை இருந்தது கத்துக்கிட்டேன்.. அந்தந்த ஊருக்குப் போறப்ப அந்த ஊரு மொழியில பேசுறதுதான் நாம அந்த மக்களுக்கு கொடுக்கிற மரியாதை .. அப்படி இல்லைன்னா இரண்டு பேரும் பொதுவாக கத்துக்கிட்ட மொழியில பேசனும்..." மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார்.

நான் அவரின் பேச்சைக் கேட்டபடி மெதுவாகத் தலையாட்டினேன்.

"என்ன ரொம்ப அறுக்கிறேனா? ... "

"இல்லை சார்.. அப்படி எல்லாம் இல்லை"

"சரி, விசயத்திற்கு வருவோம்.. அடுத்த வாரம் ஹைதராபாத் போகமுடியுமா உங்களால.."

"கிருஷ்ணமூர்த்தி தானே போறதா இருக்கு, நானும் போகனுமா?"

"ம்ம் நீங்களும் போக வேண்டியதா இருக்கும்.. அந்த புரஜெக்டை கொஞ்சம் நல்லா ஸ்டடி பண்ணி வச்சுக்கோங்க" என்றார்

"சார் அந்த பரீதாபாத் , பங்கஜ் அகர்வால் புரொஜெக்ட்.. " என்று இழுத்தேன்.

"ஓ அதுவா.. அவங்க நம்ம புரொபசலை ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. தட்ஸ் ஓகே. சில விசயங்கள் கிடைப்பதை விட கிடைக்காமல் இருப்பதுதான் நல்லது..."

இரவுப்பகல் கண்விழித்து உழைத்த விசயம் இப்படி ஆயிடுச்சே என்ற வருத்தம் இருந்த போதும் அதை வெளிக்காட்டாமல் மெலிதாய் சிரித்துவைத்தேன்.

நான் மோகன் அறையை விட்டு வெளியே வரும்முன்

"கார்த்தி, உங்க தாய்மொழி தமிழ் தானே?"

"ஆமாம் சார்"

"எதிர்காலத்துல உங்க பசங்களுக்கு தமிழ் கத்துக் கொடுங்க.. கடந்த தலைமுறையில் இருந்து எதிர்கால தலைமுறைக்கு அவங்க அவங்க மொழியைக் கொண்டுப் போற பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு..இப்பொவெல்லாம் நம்ம மொழியை வெளிசக்திகள் அழிக்க விரும்புவதில்லை..அவர்களுக்கு இந்த மொழி தேவை .. நம்ம சினிமா, ஆடியோ, புத்தகங்கள் , இண்டர்நெட் என வியாபார ரீதியா தமிழ் ஒரு பெரிய இண்டர்நேஷனல் மார்க்கெட் .. நாம கடத்தியாய் மொழியறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகலேனா இன்னும் மூன்று தலைமுறையில நம்ம மொழி காணாமல் போய்விடும்.. என்ன செய்யுவீங்களா?"

"நிச்சயமாக சார்" என்று தெளிவாய் வெளியே வந்தேன். மறுவாரம் நான் மட்டும்தான் ஹைதராபாத் போகவேண்டியிருந்தது. போவதற்கு முன் சில அடிப்படை வாசகங்களை தெலுங்கிலும் ஹிந்தியிலும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டேன். வெற்றிகரமாய் ஹைதராபாத்தில் திட்டவிளக்கங்களை கொடுத்துவிட்டு அந்த அலுவலக புது நண்பர்களோடு ஒரு தெலுங்குப் படம் போகலாம் என்று முடிவு செய்து கொண்டிருந்தபோது மோகன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.

"கார்த்தி, வாழ்த்துக்கள் ..இந்த புரெஜெக்ட் பிரசண்டேஷன் நல்லா பண்ணீங்கன்னு தகவல் வந்தது.. உங்க உழைப்புக்கு நன்றி.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா"

"சொல்லுங்க சார்"

"என் பொண்ணு இப்போ நல்லா பேச ஆரம்பிச்சுட்டா, அங்க குழந்தைகளுக்கான தெலுங்குப் பாடபுத்தகம், ரைம்ஸ் இருக்கிற புத்தகங்கள் ஆடியோ கேஸட்ஸ் பார்த்து வாங்கிட்டு வரமுடியுமா?"

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

"சரி சார் வாங்கி வரேன்.. ஒரு சின்ன விசயம் உங்க குழந்தை எப்படி... தெலுங்கு?" சந்தேகமாய் கேட்டேன்.

"ஓ அதுவா. என் மனைவி ரம்யா தெலுங்கு தேசப் பொண்ணு, எனக்கு எப்படி என் மொழிக் கத்துக்கொடுக்க உரிமை இருக்கோ என் மனைவிக்கும் இருக்கும் அல்லவா!! அதனால தமிழ் தெலுங்கு இரண்டும் கத்துக்கொடுக்க நாங்க டிசைட் பண்ணி இருக்கோம்... "

மோகன் மேல் வைத்திருந்த மரியாதை மேலும் அதிகமானது. ஒரு வாரக் காத்திருப்பிற்குப் பின் ஹைதராபாத் புரெஜெக்ட் வெற்றிகரமாக எங்களுக்கு கிடைத்தது. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.. கிருஷ்ணமூர்த்தி எங்க அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அந்த பரீதாபாத் பங்கஜ் அகர்வால் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டான். அவன் போய்விட்டதால் இப்பொழுது என் வேலைத் திறமையை முழுமையாகக் காட்ட வாய்ப்புக் கிடைத்தது. பொறுப்புகளும் அதிகமாக வந்து சேர்ந்தது.ம்ம்ம்... இன்னொரு விசயம் நானும் ஜெனிபர் டிசௌசாவும் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம். ஒரு நல்ல நாள் பார்த்து ஆங்கிலத்திலேயே என் காதலைச்சொல்ல , பிகு ஏதும் செய்யாமல் உடனடியாக ஏற்றுக் கொண்டாள்.

பின்னொரு நாள் மாலை சத்யமில் ஒரு தமிழ் படம் எனக்காக அவள் என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த இடைவெளியில்

"ஜெனி, உன் தாய்மொழி என்ன?"

"கொங்கனி"

"எனக்கு அந்த மொழியை எனக்கு கற்றுத்தருவீயா?"

"நிச்சயமா கார்த்திக்" என்றாள் தமிழில்.

============

Wednesday, December 05, 2007

"காதலிக்க நேரமில்லை" - விஜய் தொலைக்காட்சித் தொடர்

விஜய் தொலைக்காட்சித் தொடர்களின் சிறப்பம்சம், அவை ஆரம்ப்பிக்கப்படும் முன்னரே கொடுக்கப்படும் விளம்பரங்கள் தாம். தொடர் எந்த வகையாக இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் தொடர் நீளக்கூடாதா என நினைக்கையிலேயே தொடரை முடித்துவிடுவனர். வளவள கொழகொழ என்று சவ்வாக இழுக்காமல் திடிரென முடிப்பதும் பாராட்டப்படக் கூடிய விசயம் தான்.


தற்போது திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு (இந்திய நேரம்) "காதலிக்க நேரமில்லை" தொடர் அட்டகாசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரபல திரை இசையமைப்பாளர் விஜய் ஆந்தனி யின் ஆரம்பப் பாடலும்(பாடல் வரிகள் : தேன்மொழி தாஸ்), சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ள காட்சியமைப்புகளும், சின்னத்திரை அடுத்த பரிணாமத்தை நோக்கி மெல்ல நகர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.



பிரஜன், சந்திரா லக்ஷ்மணன், "உன்னாலே உன்னாலே" ஸ்ரீநாத் ஆகியோர் கதையின் மையக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். பிரஜன்,ஏற்கனவே சன் மியுசிக் தொகுப்பாளராக இருந்த காலங்களில் விஜய் தொலைக்காட்சிக்காக மின்பிம்பங்கள் தயாரித்த "இது ஒரு காதல் கதை" தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் நாயகனாக நடித்து திடிரென ஏனோ மாற்றப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. தற்பொழுது சன் தொலைக்காட்சியில் அஞ்சலி தொடரிலும் பிரஜன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மறைந்த இயக்குனர் ஜீவாவின் படங்களான 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே ஆகியப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் இந்த தொடரில் கலகலப்பான கதாபாத்திரத்தில் வருகிறார். பிரம்மா கதை திரைக்கதை எழுத அழகர் ரா.பிரபுகண்ணா இயக்கியுள்ளார்(ஒருவரா, இல்லை இரட்டை இயக்குனர்களா என்பது சரியாகத் தெரியவில்லை)



மறுநாள் மதியம் 1 மணிக்கு(இந்திய நேரம்) மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

"காதலிக்க நேரமில்லை" தொடரின் அதிகாரப்பூர்வத்தளம் இங்கே

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்

ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம் - "நச்சுன்னு ஒரு கதை" (Surveyசன் போட்டிக்காக)

ஞாயிற்றுக்கிழமை காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நினைச்சா, ஜெனி ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில ஒரு டிவிடி சகிதமா என்னை எழுப்பி விட்டு லேப்டாப்பில் அந்தப் படத்தை போட்டாள். ஜெனி ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. இருந்தாலும் அவளுக்குப் பேய்ப்படம் பார்க்கறதுன்னா கொள்ளை விருப்பம்.. ஆனால் ஒன்னு அவள் பேய்ப்படங்களை தைரியமா பகல்ல மட்டும் தான் பார்ப்பாள்.

ஒரு படம் பார்த்தான்னா ஒரு வாரத்துக்கு அவ ரூம்ல தூங்க மாட்டாள்... அவள் பயப்படுவது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து பயமுறுத்தி என் ரூம்ல வந்து தூங்குவாள். என்ன படம்னு டிவிடிக் கவரை எடுத்துப் பார்த்தேன்... அட இது நான் ஸ்கூல் படிக்கிறப்பவேயே பார்த்தது...

"ஜெனி, இந்தப் படத்தில ஒரே ஒரு பயங்காட்டுற சீன் தான்... இப்பொ வர பேய்ப்படங்களைக் கம்பேர் பண்றப்ப , இந்த காலத்து சின்னக் குழந்தைக் கூட இதைப் பார்த்துப் பயப்படாது... "

ஒவ்வொரு பயங்காட்டும் சீன் வரும்பொழுதும் அதை முன்கூட்டியே ஜெனியிடம் நான் சொல்ல சொல்ல அவள் வழக்கத்தை விட கொஞ்சம் தைரியமாகவே படத்தைப் பார்த்தாள்.

"ஜெனி, இப்போ பாரு, அந்த ஹீரோவோட கம்ப்யூட்டர்லேந்து ஒரு கை வரும் பாரேன்!!!
இந்த கம்ப்யூட்டர்லேந்து கைவரும் சீன் தான் அப்போ என் கனவில எல்லாம் அடிக்கடி வரும்.. பாரேன்.. பாரேன்.... "

ஜெனியும் கைவரும் என்று அந்த சீனை உன்னிப்பாக கவனித்தாள்... கம்ப்யூட்டரிலிருந்து கை
வராமலேயே அந்த சீன் முடிந்துப் போனது. எனக்கு குழப்பமாய் போனது.. திரும்பவும் டிவிடிக் கவரை எடுத்து சரிபார்த்தேன்... அதே படம்தான்... ஹீரோவின் கம்ப்யூட்டரில் இருந்து கைவரும் சீன் தான் இந்தப் படத்திலேயே கொஞ்சம் பயமான சீன்.. அது வரவில்லையே!!! டிவிடி வெர்ஷன்ல கட் பண்ணிட்டாங்களா!!! இல்லை நான் தான் படத்தை மறந்துட்டேனா!! ஒன்றும் புரியவில்லை... அந்த ஒரு சீனைத்தவிர நான் சொன்ன எல்லா சீனும் சரியா படத்தில் இருந்தது.

படம் முடிந்ததற்கும் ஜெனிக்கு கார்த்தியிடம் இருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது,

"ரம்யா, லேப்பியும், டிவிடியும் இங்கேயே இருக்கட்டும்,, நைட்டு வந்து எடுத்துக்கிறேன்.."

ஜெனி போனதும் திரும்பவும் தூங்கப்போன நான் மதியம் எழுந்தவுடன் ஒரு கியுரியாசிட்டியில் திரும்பவும் அதேப் படத்தை போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்,,, எல்லா சீனும் வந்தது... அந்த கம்ப்யூட்டர் கை சீன்.. மனது என்னையும் அறியாமல் திக் திக் என அடிக்க ஆரம்பித்தது... ஹீரோ கம்ப்யூட்டரில் எதோ செய்து கொண்டிருக்கிறான்.. கை நீளூமா.. இல்லை இல்லை.. .. அந்த சீன் வரவில்லை... என் பதைபதைப்பு சிறிது நேரம் நின்றது..

ஆனால் ... ஆனால்... ஆனால்... ஆனால்... நான் படம் பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப்பிலிருந்து ஒரு கை என் கழுத்து வரை நீளஅ..ஆஆஆஆஆஆஆஆஆரம்பித்தது....
----------------------------

Surveyசன் நடத்தும் "நச்சுன்னு ஒரு கதை" போட்டிக்காக எழுதப்பட்டது