Friday, December 28, 2007

நாலாவது தெருவில் நான் சந்தித்த மனிதர் - சிறுகதை

நகரங்கள் விரிவடைகின்றன, கிராமங்கள் சுருங்குகின்றன.. சில வருடங்களுக்கு முன்னர் வரை கிராமமாகக் கருதப்பட்ட எங்க ஊர் அதற்கான அடையாளங்களைத் தொலைத்து, வயல்வரப்புகள் எல்லாம் குட்டிசாலைகளாக மாறி, விவசாய நிலமெல்லாம் வீடுகளாய் மாறித்தொலைத்திருந்தது.இப்போ எங்க ஊர் நகரமும் இல்லாம கிராமமாகவும் இல்லாமல் ஒரு கலவையா இருக்கு... விலைவாசி நகரங்கள் அளவுக்கு, அடிப்படை வசதிகள் கிராம அளவுக்கு.. இரண்டாவது ஷிப்டு முடிந்து வீடு திரும்பும் ஒவ்வொரு இரவிலும் என் மனதில் ஓடும் எண்ணம் இது. இன்னும் 10 நிமிடமாவது ஆகும் என் வீடு போய் சேர, வழக்கம்போல கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டேன்.. நாலாவது தெருவில நாய்கள் அதிகம்.. நாலாவது தெருவில் திரும்பியதும் என்னைப் பார்த்து குலைத்துப் பழக்கப்பட்ட நாய்கள் இன்றைக்கும் அமைதியாக இருந்தன. ஒரு வேளை நான் அவைகளுக்குப் பழக்கமாகிவிட்டேனோ!!

இந்த நாலாவது தெருதான் எங்க ஊரின் பணக்காரத் தெரு.எல்லாம் வீடும் கிட்டத்தட்ட குட்டி மாளிகைகள். நான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் நாலாவது தெருவில் முருகேசனை மட்டும் தான் தெரியும். மற்ற வீடு எல்லாம் கடைசி நாலைந்து வருடங்களில் பக்கத்து நகரத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முருகேசன் அப்பாதான் அந்த இடங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றவர்.

அமைதியாக இருந்த நாய்களை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் பார்த்துக் கொண்டே, சிறிது தூரம் கடந்த போது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஒருவர் எனக்கு எதிர் திசையில் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்..2 அடித்து 10 நிமிடங்கள் ஆகி இருந்தன. அருகில் வந்த ஆள் சிரித்தபடி,

“என்ன தம்பி, கையில தடி எல்லாம்!!?”

“இந்த தெருவில நாய்ங்க ஜாஸ்தி, ஒரு சேஃப்டிக்கு, நீங்க யாரு சார், இந்த நேரத்தில” கேட்கும்போதே எனக்கு மனதில் லேசாக ஒரு உதறல்.. இந்த நேரத்தில் இதற்கு முன்னர் இங்கே யாரையும் பார்த்ததில்லை... கழுத்தை தடவி சாமிப் படம் போட்ட டாலர் இருக்கான்னு ஒரு முறை பார்த்துக்கிட்டேன். இனி பயமில்லை.இருந்தாலும் அவரை தலையில் இருந்து பாதம் வரை நோட்டம் பார்த்தேன்... கால் இருக்கா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவருடைய வேட்டி தரை வரை இருந்தது.
அவரது குரலிலும் பார்வையிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது போல உணர்வு..
தூக்கக்கலக்கத்தில் நேரங்கெட்ட நேரத்தில இப்படி ஒருத்தரை பார்க்கிறதுனால ஏற்பட்ட பிரமையாக் கூட இருக்கலாம்.

”சும்மா காத்தாட நடக்கலாம்னு தான்” அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் கிட்டத்தட்ட அந்த தெருவின் பாதி தூரம் கடந்திருந்தேன்.

நான் எங்கே வேலை பார்க்கிறேன், என்னோட வீடு எங்கே எல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அந்த வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி மனிதர் நாலாவது தெரு முடிவடையும் இடம் வந்ததும் “தம்பி என் எல்லை முடிஞ்சது.. நீங்க புறப்படுங்க?” அவர் திரும்ப நாலாவது தெருவின் அடுத்த முனையை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தார். கால்கள் தெரிகிறதா எனப் பார்த்தேன்.. ம்ஹூம் ம்ஹூம் வேட்டி மறைத்திருந்தது.

ஐந்தாவது தெருவின் ஆரம்பத்தில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேகவேகமாக வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் மாலை வேலைக்குப் போகும்பொழுது முந்தைய இரவு பார்த்த நபர் கண்ணில் படுகிறாரா என பார்த்தபடி நாலாவது தெருவைக் கடந்தேன். கலகலப்பாக இருந்த தெருவில் நிறைய ஆட்கள் தென்பட்டாலும் அந்த மனிதரைக் காணவில்லை.

அன்றிரவு நாலாவது தெரு வழியாக வீடு திரும்பும்பொழுது, ஒரு வீட்டின் படிக்கட்டில் அந்த நபர் உட்கார்ந்திருந்ததைக் கண்டும் காணாமலும் போக எத்தனித்தபோது, அவரேக் கூப்பிட்டார். “என்ன தம்பி கண்டுக்காம போறீங்க... உங்களுக்காகத் தான் காத்திக்கிட்டு இருந்தேன்.. “


“இல்லை , சார் கவனிக்கல.. சாரி”

வர்றப்போற கோடைக்காலம் எப்படி இருக்கும் என்று பேச்சை ஆரம்பித்தார். என் நினைப்பெல்லாம் எப்படியாவது சீக்கிரம் இந்த தெருவைக் கடக்க வேண்டும் என்பது தான். நாலாவது தெரு முடிந்ததும் விடைபெற்றார். ஆர்வக் கோளாறில் ”வாங்க சார் அடுத்த தெருவரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்” நான் சொல்ல

“அவரவர் எல்லைகளில் இருப்பதுதான் எல்லோருக்கும் நலம்.. எல்லை மீறும்பொழுது தான் பிரச்சினையே “ என்று சொல்லி சிரித்தார்.

மறுநாள் காலை அந்த ஆளை ஒரு முறையாவது பகலில் பார்த்துவிடலாம் என்று சீக்கிரமாகவே எழுந்து நாலாவது தெருப் பக்கம் போனேன். இரண்டு மணி நேரம் அப்படி இப்படி வெயிலில் நடந்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

அடுத்தடுத்த நாட் இரவுகளில் சரியாக அந்த தெருவில் நான் வரும்பொழுது நிற்பார்.நான் அந்த தெரு கடக்கும் வரையில் எதாவது பேசிக்கொண்டே வருவார். அரசியல் ஆன்மீகம் , கடவுள் , அமானுஷ்யம் இப்படி பேச்சு பலவிதங்களில் ஆரம்பிப்பார். நான் பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டு மட்டும் வருவேன். தினமும் பேசிக்கொள்வதால் அவர் மேல் இருந்த அந்த அமானுஷ்ய பயம் போய் இருந்தது. பேய்களிடம் கூட தொடர்ந்து பேசினால் பழக்கமாகிவிடும் போல... ஆமாம் அந்த ஆள் என் மனதில் பேய் என்றே பதிந்து விட்டார்.
எனக்கும் பேய்களை விட நாய்களின் மேல் அதிக பயம் இருந்ததால் அந்த ஆள் இருப்பது எனக்கு வசதியாகவே பட்டது.

ஒரு இரண்டு வாரம் போய் இருக்கும். அவரைக் காணவில்லை. மறு நாள், அதற்கடுத்த நாள்... மூன்றாவது நாள் இரவு கொஞ்ச நேரம் காத்திருந்துக் கூடப் பார்த்தேன். அவர் வரவில்லை.பத்து நாட்கள் ஓடிப்போனது. அவர் நினைவில் இருந்து மறைந்து போனார்.
பொங்கலுக்கு கான்பூரில் இருந்து முருகேசன் வந்திருந்தான். அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போய் இருந்தேன். அவனிடமும் அவன் குடும்பத்தினருடனும் நலம் விசாரிப்புகளுக்குப் பின்,

“முருகேசா, இந்த தெருவில் பளீர்னு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுகிட்டு இருக்கிற ஆள் யாராவது உனக்குத் தெரியுமா?”

“ஓ தெரியுமே... வேதநாயகம்.. தமிழ் வாத்தியார்.. ராமசாமி வீட்டுல திருடு போன பிறகு எங்கத் தெருவுக்கு அவர் தான் இரவுக்காவல்... இந்த வயசிலேயும் மனுசனுக்கு எவ்வளவு சுறுசுறுப்பு தெரியுமா.. இரண்டு வாரம் முன்ன அவரோட பையன் வீட்டுக்குப் போனவர் கொஞ்சம் ஹெல்த் கண்டிசன் சீரியஸ் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்காரு..நல்லபடியாயிடுவாருன்னு நினைக்கிறேன்.. நாளைக்கு நானும் அப்பாவும் அவரைப் பார்க்க போறோம்.. நீ வர்றீயா”

“இல்லைடா ..நீ போயிட்டு வாடா?”

நான் வேதநாயகத்தை பேய்னு நினைத்தது ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
என்னோட புது கைத்தொலைபேசி எண்ணை முருகேசனுக்கு கொடுத்துவிட்டு அவன் வீட்டில் இருந்து விடைபெற்றேன்.

அடுத்த வாரம் எனக்கு ஷிப்டு மாறியிருந்ததால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அட .. வேதநாயகம் அவர் வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்.

“ஹல்லோ சார், எப்படி இருக்கீங்க சுகமா... “

“ம்ம்ம் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்..”

அவரிடம் அவரை பேய் என்று நினைத்ததை அசடு வழிய சொன்னேன்.

வாய்விட்டு சிரித்துவிட்டு “ஆமாம் , இந்த நேரத்துல உஜாலா டிரஸ் போட்டுக்கிட்டு நடந்து கிட்டு இருந்தா யாருக்குத் தான் பயம் வராது?”

அவருடைய மருத்துவமனை அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டே வந்தார். நாலாவது தெரு முடிவு வந்ததும் “சார், உங்க எல்லை முடிந்து விட்டது, நாளைக்குப் பார்க்கலாம்.. “ சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“சில விதிவிலக்குகள் உண்டு, சில சமயங்களில் எல்லை மீறலாம்!!” என்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே மாரியம்மன் கோவில் வாசலில் நின்றேன். சாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன். பேசிக்கொண்டே எனது வீடு வரை வந்து விட்டுவிட்டு வேதநாயகம் திரும்பினார்.
என்றைக்குமல்லாமல் அன்றிரவு நான் நல்லாத் தூங்கினேன். கைத்தொலைபேசியின் குறுந்தகவல் சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்த தகவலைப் பார்த்தேன்..

“வேதநாயகம் காலமானார், இறுதிச் சடங்குகள் அவர் ஊரில் இன்று நடைபெறும்”.. அய்யோ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனதில் இருந்த நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போனேன். இரவு வரும்பொழுது இந்தப் பக்கம் வரவேண்டாம், பகல் தானே என்று நாலாவது தெருவழியாகவே போனேன். தெரு வெறிச்சோடி இருந்தது, எல்லோரும் வேதநாயகத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் போய் இருப்பார்களோ!!!
வேதநாயகத்தின் வீட்டை நெருங்குகையில் இதயம் வேகம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.வேதநாயகத்தின் வீட்டின் வாசற்படியில் ...ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை...அது ...அய்யோ!!! வேதநாயகமே தான்.

எனக்காகவே காத்திருந்தது போல் இருந்த வேதநாயகம் புன்னகையுடன்
“தம்பி, இப்போ உங்க வேலைக்கு நேரமாச்சு, நீங்க நைட்டு ஷிப்டு முடிஞ்சு வர்றப்ப பேசலாம்...”
-----------

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்ல நடை.. :-) ரசிக்க வைக்கிறது..

said...

:)

said...

ஒரு சிறுகதைக்கான அத்தனை அம்சங்களும் இருக்கிறது.

முடிவை யூகித்திருந்தாலும் கதை சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

said...

ஐயோ, தெரியாத்தனமா உங்க பதிவை ராத்திரி நேரத்துல படிச்சுட்டேனே,

எப்படிங்க இப்படியெல்லாம் பயங்கரமா கற்பனை பண்ண முடியுது,

ரொம்ப பயமா போச்சு,

நல்லா, நம்புறமாதிரியே எழுதியிருக்கிறீங்க!

said...

:) ஏனோ உங்க கதை எல்லாம் படிச்சி பழகிட்டதினால முதல்லயே ஊகிச்சிட்டேன்..