Tuesday, April 24, 2007

லால்குடி Days - சிறுகதை

ஜெயங்கொண்டம் பேருந்து, லால்குடி பேருந்து நிலையத்துக்கு உள்செல்லாமல், திருப்பத்திலேயே என்னை இறக்கிவிட்டு விட்டு சென்றது.என் சொந்தக் காரங்க வீடுகளிலேயே, இந்த லால்குடி மாமா வீட்டுக்கு மட்டும் தான் எந்த நேரம் வேண்டுமனாலும் போகலாம். திருச்சியிலே இருக்கிற நண்பர்களுக்கு என்னுடைய திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு இப்போதான் வர்ற முடிந்தது. தன்னோட கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பது என்பது குஷியான விசயம். அதிலும் காதல் கைகூடி கல்யாணம்னா சொந்தக்காரங்க அண்டார்டிகால இருந்தா கூட போய் கொடுக்கலாம்.

மாமா வீடு சப்தஷ்ரீஸ்வர் கோயிலைத் தாண்டி நன்னிமங்கலம் போற வழியிலே இருக்கு. குதிரை வண்டி ஏதாவது கிடைக்குமான்னு பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன்.

ஒரேயொரு குதிரை வண்டிக்காரர், குதிரை வண்டியில் கட்டி இருக்க, வண்டி அருகில் படுத்து இருந்தார். பக்கத்தில் போய் எழுப்பினேன். குப்புன்னு சாராய நெடி.

"அண்ணே!!!, நன்னிமங்கலம் போகனும், வர்றீங்களா?"

இரண்டு மூன்று முறை எழுப்பியும் குதிரைக்காரர் எழவில்லை.

சரி நடந்தே போவிடுவோம் என்று எண்ணி நடைக்கட்டுகையில்,

"தம்பி, நில்லுங்க"
திரும்பிப் பார்த்தேன். அங்க குழந்தைவேலு நின்னுக்கிட்டு இருந்தார்.

"தம்பி, வண்டியிலே ஏறுங்க, நான் நான் கொண்டாந்து விடுறேன்"

குழந்தைவேலு, மாமா வீட்டுல எடுபுடி வேலை செய்றவர், சின்ன வயசுல, நான் இந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறபோதெல்லாம் குழந்தைவேலுதான் ஊர் சுத்திக்காட்டுவார்.
இஞ்சினியரிங் கடைசி வருஷம் படிக்கிறப்ப வந்தப்பக் கூட நானும் அவரும் குதிரைவண்டியிலே பூவாளுர் போய் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்தோம்.
முன்ன எல்லாம் மாப்ளே என்றுதான் கூப்பிடுவார். மாமா ஒரு நாள் படிக்கிற பையனை கூப்பிடுற அழகான்னு சொன்ன பிறகு தம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சார்.

நான் பின்லாந்து போய்விட்டு வந்தப்ப அவருக்குகாக வாங்கி வந்திருந்த டீசர்ட்டைதான் இப்போ போட்டு இருந்தார்.

"குழந்தை, எனக்கு அடுத்த மாசம் கல்யாணம், வந்துடுங்க"

"ரொம்ப சந்தோசம். நேத்துதான் சின்ன புள்ளயா பார்த்த மாதிரி ஞாபகம், வருசம் எல்லாம் ஓடுது தம்பி, யாரு தம்பி பொண்ணு, அந்த கிறிஸ்தவ பொண்ணுதானே!!"

"ஆமா குழந்தை, அவங்களேதான். மாமாகிட்ட சொல்றேன், உங்களைக் கூட்டிட்டு வருவாரு"

"ஆகட்டும் தம்பி"

அடுத்த சில நிமிடத்தில் மாமா வீடு இருக்கும் தெரு வளைவு வந்தது.

"தம்பி, இங்கேயே இறங்கிகோங்க, உங்க மாமாவுக்கு இப்போ என்னைக் கண்டால் ஆகாது"

"சரி, அண்ணே!, தாங்க்ஸ்"

மாமா இந்த அர்த்தராத்திரியில் வருவதற்கு கோபித்துக் கொண்டார். முன்ன மாதிரி லால்குடி இல்லை. ஊர்ல வழிப்பறி அதிகம் ஆகிவிட்டது என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

"நம்ம குழந்தை தான் குதிரை வண்டில கொண்டு வந்து விட்டுட்டுப் போனார், மாமா"

மாமாவோட முகம் மாறியது.

"அவனோடயா வந்தே?"

"ஆமாம், என்ன பிரச்சினை, வழக்கம்போல வீட்டுல ஏதாவது திருடிட்டாரா?"

" சரி போய் படு காலையில பேசிக்கலாம்" என்றார் மாமா.

அடுத்த நாள் மாமாவுக்கு முறைப்படி பத்திரிக்கை வைத்துவிட்டு,அக்கம்பக்கம் கிராமத்தில் உள்ள தூரத்து சொந்தங்களுக்கும் கொடுத்து முடித்தேன். இன்று நாள் முழுவதும் குழந்தை கண்ணிலேயெ படவில்லை. ஒரு வேளை மாமா என்கூடவே இருந்ததனால் கண்ணில் தென்படும்படி நடமாடி இருக்க மாட்டார். எல்லாம் நல்லபடியா முடிய அன்றிரவு மலைக்கோட்டை ரயில் ஏற லால்குடி ரயில் நிலையத்தில் நானும், வழியனுப்ப மாமாவும் காத்திருந்தோம்.

அட தூரத்தில் குழந்தைவேலு.

"மாமா, குழந்தைகிட்ட போய் வர்றேன்னு சொல்லிட்டு வந்துடுறேன்"

"ஒன்னும் வேனாம்" என்று என் கையை அழுத்திப் பிடித்து தன்னருகிலியே இருக்க வைத்தார்.

ரயிலும் வந்தது. ரயிலில் ஏறியவுடன் மாமா, கையில் சப்தஷ்ரீஸ்வர் கோயில் பிரசாதம்னு திறுநீரு பொட்டலத்தை திணித்தார்.

"பத்திரமா போய்ட்டு காலையிலே போன் பண்ணு"

"சரி, மாமா"

கண்கள் குழந்தைவேலுவை தேடியது. ஆனால் அவரைக் காணவில்லை. ரயில் மெதுவாக பரமசிவபுரம் ரயில் கிராசிங்கை கடக்கையில் குழந்தைவேலு தெரிந்தார்.

டாடா காட்டிவிட்டு ஒரு நாள் முழுவதும் அலைந்த அசதியில் அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

கல்யாணத்துக்கு குழந்தைவேலு வரவில்லை. மாமாக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரிடம் அதைப்பற்றி கேட்கவில்லை.

.... ம்ம்ம் நாலு மாசம் கழித்து மாமா ஊர்ல இருந்து என்னையும் ஜெனியையும் பார்க்க வந்திருந்தார். ஊருக்குப் போவதற்கு முன்ன ஒரு விசயம் சொன்னார்.

"கார்த்தி, நீ கல்யாண பத்திரிக்கை கொண்டுவந்து கொடுக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னதான் குழந்தைவேலு ட்ரெயின் டிராக்கை கிராஸ் பண்றப்ப பல்லவன் அடிச்சு செத்துப் போனான்"

மாமா சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. உண்மையான அதிர்ச்சி என்னவென்றால் இந்த செத்துப் போன குழந்தைவேலுவை போன மாசம் ஒரு நாள் தாமதமா அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் பார்த்தேன். தான் மெட்ராசுக்கு வந்துவிட்டதாக கூறினார். அன்றுகூட அந்த பின்லாந்து டீசர்ட் தான் போட்டு இருந்தார்.
இதயம் வேகம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

பேய் கதை எழுதாதீங்கன்னு அடிக்கடி உங்ககிட்ட சொல்வேன் அண்ணா. ஆனா இந்த கதை நிச்சயமா நல்ல இருக்கு!

said...

சிறுகதைன்னா அதன் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருந்தே ஆகனும்-இதை நன்றாகவே பின்பற்றுகின்றீர்கள்

சிவஞானம்ஜி

said...

நன்றி பூர்னிமா & சிவஞானம்ஜி

said...

nalla iruku vinai

said...

good.your narration has a touch of Sri.Sujatha. All the Best.