Monday, April 23, 2007

டீக்கடை,டெலிபோன் பூத், மொட்டைமாடி,லிஃப்ட் - சிறுகதை

வழக்கமாக எழும் நேரத்தை விட சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டதால், அருகில் இருக்கும் டீக்கடைக்கு நடை போட்டேன். டிசம்பர் மாதம் ஆதலால் 7 மணியாகியும் லேசாக பனி மூட்டம் இருந்தது. இந்த சூழலில் டீ குடிக்கிறது ஒரு தனி சுகம்தான். எஃப்.எம்மில் ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"மாஸ்டர், ஒரு டீ" என்று சொல்லிவிட்டு தினத்தந்தி எடுத்து என்ன தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பார்க்கலானேன்.

"சார், டீ"

டீ வாங்குகையில் அவளைக் கவனித்தேன். அவளும் என்னோட அபார்ட்மெண்ட்ஸ் தான். அடிக்கடி ஸ்கூல் யூனிபார்ம்ல பார்த்து இருக்கேன். நல்ல களையான முகம். அந்த டீக்கடையை ஒட்டினாற் போல உள்ள மளிகைக் கடையில் பால் பாக்கெட் வாங்கி கொண்டிருந்தாள். சில்லறைகளை பெற்றுக்கொண்டு, அந்த கடையில் வைத்து இருந்த ஒரு ரூபாய் தொலைபேசியில் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ, கார்த்தி,"

"......"

"நான் ஜெனி பேசுறேன், எப்படி என் சர்ப்ரைஸ் கால்?, நீங்க எதிர்பார்க்கல தானே?"

"....."

"ம்ம், ஓகே, அடிக்கடி கால் பண்றேன், தாங்க்ஸ் செல்நெம்பர் கொடுத்ததுக்கு"

"....."

"ஒகே, கார்த்தி, ஸ்கூல் கிளம்பனும் ஈவ்னிங் பேசுறேன்"

அவள் போனைவைத்த பிறகு அவள் முகத்தில் இனம்புரியாத சந்தோசம், ஆய்தஎழுத்தில் ஈசா தியோல் ஒரு பாடலில் முகபாவம் காட்டுவது போல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

டீக்கு காசு கொடுத்து விட்டு நானும் என் பிளாட்டுக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த ஒரு வாரத்திற்கு வழக்கமான நேரத்துக்கு எழுந்ததால், டீக்கடைக்கு போகும் வாய்ப்பில்லை.

ஒரு நாள் அலுவலகத்தில் முழு இரவும் அமெரிக்க நேரத்தில் வேலை பார்த்துவிட்டு வருகையில் மீண்டும் அவள் அந்த ஒரு ரூபாய் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் அப்படி என்னத்தான் பேசுகிறாள் என்று அறியும் நோக்கில், அந்த மளிகைக்கடையில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு லைஃப் பாய் பிளஸ் கேட்டேன். அவள் பேச்சை இடது காதில் ஒட்டுக்கேட்டேன்.

"இல்லை கார்த்தி, நாளைக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது, இன்னக்கி வீட்டுல வெளியில விட மாட்டங்க, நாளக்கி மதியம் ஸ்கூல்கிட்ட வாங்க, கொஞ்ச நேரம் பேசலாம்"

'...."

"அப்படி இல்லை,யூ ஆர் ஆல்வேஸ் இம்பார்டண்ட், ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. "

"..."

"ம்ம்ம் சரி, எக்ஸாம் முடிஞ்சு போகலாம்"

'...."


"சில்லறை இல்லை, கால் முடியப் போகுது டாடா, நாளைக்கு பார்க்கலாம்".

அவள் பேசுவதை நான் கவனித்ததை கவனித்தாளோ என்னவோ, போகும் போது என்னை ஒரு வித பயத்தோடு பார்த்து விட்டு சென்றாள்.

அடுத்த நாளிருந்து தொடர்ச்சியாக, அவள் அந்த கடைக்கு போகும் நேரத்தில் டீ குடிக்க போக ஆரம்பித்தேன். ஒட்டுகேட்ட போது காதில் தெரித்தவை.

"இன்னக்கி பச்சைக்கலர் சுடிதார்"

"...."

"இல்லை, என்கிட்ட ஜீன்ஸ் இல்லை"

"....."

"தாங்க்ஸ், ஆனால் வேண்டாம், அம்மா ஆயிரம் கேள்வி கேட்பாங்க,'

"...."

"மீ டூ, 1000 டைம்ஸ் மோர் தான் யூ"

"...."

"மிஸ்ஸிங் யூ எ லாட்".

அந்த பெண்ணும் வழக்கத்தை விட தைரியமாகவே பேச ஆரம்பித்தாள். ம்ம்ம், ஆணின் நட்போ/காதலோ பெண்ணுக்கு எவ்வளவு தைரியத்தை தருகிறது. இப்போதெல்லாம் அவள் சுற்றும் முற்றும் பார்ப்பதில்லை. நான் அவளின் பேச்சை ஒட்டுக் கேட்கிறேன் என்று உறுதியாக தெரிந்த போதும், கண்களில் பயம் இல்லை. நான் செய்வது தவறில்லை, பிறகு ஏன் பயம் என்று அவள் முகம் சொல்லாமல் சொல்லியது. எனக்கும் ஒரு கட்டத்தில் ஒட்டுக்கேட்பது போர் அடிக்க ஆரம்பித்தது.ஒரே விதமான உரையாடல்கள், இடையில் சில சிணுங்கல்கள். அவ்வளவுதான், பெரிய சுவாரசியம் எதுவும் இல்லை. பேசுபவர்க்ளுக்கு வேண்டுமானால் கடலை சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு அதைவிட போரடிக்கும் விசயம் எதுவுமில்லை.

அடுத்த மாதம் ஆன்சைட் வாய்ப்பு கிடைத்து பின்லாந்துக்கு அனுப்பிவிட்டார்கள். கிட்டத்தட்ட 8 மாதம் அந்த தேசத்தில் இருந்து விட்டு மீண்டும் அலுவலகத்தில், பழைய நிலைக்கு வந்தபோது அவளின் ஞாபகம் வந்தது. மறுநாள் அந்த டீக்கடைக்கு போனேன்.நேரத்தைப் போக்க 3 வது டீ குடித்து முடித்தும் அவள் வரவில்லை. அடுத்த நாளும் போனேன். ம்ஹூம் அவளைக் காணோம். அன்றிரவு ரூம்மேட் டீவியை சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்ததால், மொட்டைமாடிக்கு போன் பேச போனேன். மாடியில் அதேப் பெண், காதில் செல்போனை வைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

"சாரி, கார்த்தி, இவ்வளவுதான் உனக்கு லிமிட், டோண்ட் டிரை டு கண்ட்ரோல் மி"

"......."

'நோ, நோ, உன் பேச்சை கேட்க எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேச டிரை பண்ண வேண்டாம்"

"....."

"நீ சொல்றது பொசசிவ்னெஸ் இல்லை, சந்தேகம்"

"...."

"மிரட்டுறீயா?"

"......"

"இவ்வளவு மட்டமான கேரக்டரா நீ, இனி நீ கால் பண்ணினால் ஈவ்டீஷிங் னு கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் குட் பை" அழுதுக் கொண்டே போனை கட் பண்னினாள்.

தூரத்தில் நான் நிற்பதை அவள் கவனித்தாலும் அழுவதை நிறுத்தவில்லை.

நான் என் வீட்டுக்குப் பேச ஆரம்பித்தேன்.

மறுநாள் லிஃப்டில் கீழே இறங்கி கொண்டிருக்கும்போது. ஒரு ப்ளோரில் அவளும் ஏறினாள்.

என்னைப் பார்த்ததும் அவள் சினேகமாக சிரித்துவிட்டு "ஹாய், ஐ யம் ஜெனி" என்றாள்.

14 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லா இருக்கு!!!

said...

என்ன சொல்ல வந்தீங்கன்னு புரியவே இல்ல. கடைசியில் பிரம்மாதமா எதுவும் திடீர் திருப்பம் ஒன்னும் இல்லையே! ஏமாந்தே போய்விட்டேன்.

said...

மாசிலா சார், அந்த பெண்ணின் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தின் துவக்கம் அந்த சுய அறிமுகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

said...

நன்றி சங்கரய்யா

said...

பதின்ம வயது ஈர்ப்புகள் விரைவில் கசந்துவிடும் என்பது கதையின் அடிப்படைக்கரு.

said...

test

said...

//அந்த பெண்ணின் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தின் துவக்கம் அந்த சுய அறிமுகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.//
அவளின் உரையாடல்களை வைத்து பார்க்கும் போது உங்கள் பாத்திரம் ஒரு நல்ல ஒழுக்கம் உடையவள் போலவே தென்படுகிறாள். இவ்வளவு சீக்கிரம் இப்படி மனம் மாறுவாளா என்பது கேள்விக்குறியே.

உங்களிடமிருந்து இந்த பதில்வரும் என முன்பே தெரியும். இது போன்ற கதைகளும் இதே போன்ற முடிவுகளும் ரொம்பவும் சகஜம். ஒரு மாற்றத்திற்காகத்தான் இப்படி கேட்டேன்.

உங்கள் பதிலுக்கு நன்றி வினையூக்கி.
தொடர்ந்து எழுதிவாருங்கள்.

said...

மாசிலா சார், முதலில் மொட்டை மாடி போன் உரையாடலை எடுத்து விட்டு , கதையின் நாயகன் ஜெனி கதாபாத்திரத்தை மொட்டை மாடியில் சந்திப்பதாகவும், அது கடைசியில் ஆவி என்று மறுநாள் அவனுக்குத் தெரிவதாகவும் எழுத நினைத்து இருந்தேன். ஒரு மாற்றமாக வழக்கமாக முடித்து விட்டேன்

said...

;-)

said...

நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா!
நல்ல வேளை 'ஆவி கீவி' இன்னு எல்லாம் சொல்லாம இருந்தீங்க! இல்லைனா நான் tension ஆகி இருப்பேன்! :)

said...

கதையும், அதை எழுதிய நடையும், மிக அருமை வினையூக்கி!!!

//பேசுபவர்க்ளுக்கு வேண்டுமானால் கடலை சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு அதைவிட போரடிக்கும் விசயம் எதுவுமில்லை.
//

ரொம்ப உண்மை. பல தடவை இந்த கொடுமைக்கு ஆளாகியிருக்கும் பரிதாபாத்மா நான்!!;)

கதையின் முடிவை முன்னமேயே கூட("தூரத்தில் நான் நிற்பதை அவள் கவனித்தாலும் அழுவதை நிறுத்தவில்லை." என்பதோடு) நிறுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய முடிவும் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்(நான் புரிந்து கொண்டது!) என்பது போல அழகாகவே உள்ளது!!;)

said...

//அவளின் உரையாடல்களை வைத்து பார்க்கும் போது உங்கள் பாத்திரம் ஒரு நல்ல ஒழுக்கம் உடையவள் போலவே தென்படுகிறாள். இவ்வளவு சீக்கிரம் இப்படி மனம் மாறுவாளா என்பது கேள்விக்குறியே.
//

இதைவிட வேகமாக மனம் மாறிய பலரை நான் பார்த்திருக்கிறேன் மாசிலா! நல்லொழுக்கத்துக்கும் இதற்கும் அவ்வளவாக சம்பந்தமில்லை. புரிதல் இல்லாத ஈர்ப்பு அவ்வளவுதான் தாக்குபிடிக்கும்.;-)

said...

Sama Interesting... Oru third Persona irrundhu Lovers a Paakara angle, really good imagination

said...

நன்றி. யோசிப்பவர். நீங்கள் சொன்ன முடிவுகூட நல்லாதான் இருக்கு.