Tuesday, April 24, 2007

பயப்படாதே - சிறுகதை

முகத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது.. அறைக்குள்ள காலையிலே சூரிய வெளிச்சம் வராதே!! கண்ணைத் திறந்து பார்த்தால் விடுதி மொட்டை மாடியில் படுத்து இருக்கேன். திக்குன்னு இருந்துச்சு. என்னோட படுக்கையை சுத்தி மல்லிகைப்பூவா சிதறிக் கிடந்துச்சு. என் மேலேயும் மல்லிகைப்பூ வாசம் அடித்தது. படுக்கையை சுருட்டிக் கொண்டு விழுந்தடித்து என் அறைக்கு கீழே வந்தேன். அறை நண்பர்களிடம் எதுவும் நடக்காதது போல் காட்டிக் கொண்டு, அந்த வாசம் தெளிய குளித்து வகுப்புக்கு செல்லும்முன் விடுதி பிள்ளையார் கோயிலுக்கு போய் எனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

ஏற்கனவே விடுதி பின்புறம் உள்ள மயில்காட்டில் மோகினி உலவுவதாக சீனியர் மாணவர்கள் சொல்லி இருந்தனர். அன்று மாலை தூங்குவதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டதோடு மட்டும் அல்லாமல் , அறை நண்பனின் சிலுவை செயினையும் வாங்கிப் போட்டுக்கொண்டு தூங்கினேன். மறுநாள் எழுந்தபோது என் விடுதி எதிரே உள்ள வேப்ப மரத்தில் கீழே இருந்தேன். மரத்தில் சிவப்பு தாவணி தொங்கிக் கொண்டிருந்தது. நேற்று போல் இன்றும் சுத்து மல்லிகைப்பூக்கள், என் மேலும் அதே வாசம்.

அறைக்கு ஓடி வந்து திகில் பிடித்தது போல் உட்கார்ந்தேன். நான் வெளிறிப் போய் இருப்பதைப் பார்த்த என் அறை மாணவர்கள், அந்த வரிசையில் இருந்த அறைகளின் அனைத்து மாணவர்களும் வந்து என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அவர்கள்தான் நான் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் மொட்டைமாடியிலும்,வேப்ப மரத்தடியிலும் அலேக்காக தூக்கிக் கொண்டு போய் போட்டனர் என்று சொன்னார்கள்.

"நான் தாண்ட உன்னை சுத்து மல்லிகைப்பூ போட்டேன்,செண்ட் நல்ல வாசமா" இது சிலுவை செயின் கொடுத்த பையன்.

"பாத்ரூம் போகக்கூட துணைக்கு கூப்பிடுற உன் பயத்தோட இம்சை தாங்கல, உன் பயத்தைப் போக்கத்தான் இப்படி பண்னோம், கோச்சுக்காதடா" என்று சமாதனப்படுத்தினார்கள்.

இவனுங்க என்னை பயமுறுத்துவதற்கு ஒரு வாரமா திட்டம் போட்டு செயல்படுத்தி இருக்கின்றனர். எனக்கு ஆத்திரமும் அவமானமும் பிடுங்கித் தின்றாலும் கூட ஒரு வகையில் என் பயம் தெளிந்தது என்று சந்தோசமா இருந்தது. சுற்றி நடப்பதுகூட தெரியாமல் இனி தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொல்ளவேண்டும். அந்த இரண்டு சம்பவங்களுக்குப் பின் பயம் போனதால் இரண்டாவது ஆட்டம் சினிமா போய் விட்டு தனியாக வரக்கூட தைரியம் வந்தது.

விஜயதசமிக்கு சேர்ந்தார் போல விடுமுறை வந்ததால் எனது வரிசையில் இருக்கும் அறை மாணவர்கள் அனைவரும் ஊருக்குச் சென்று விட்டனர். மொத்தம் 28 அறைகளில் நான் மட்டுமே. DC Machines படித்து விட்டு 2 மணி போல, உள்பக்கம் தாழிட்டு இருக்கேனா என்று உறுதி செய்து கொண்டு தூங்கப் போனேன். ஆழ்ந்து துங்கிக் கொண்டிருக்கையில் திரும்பிபடுத்த போது சின்ன சின்ன கல்லு, முள்ளு குத்திய உணர்வு. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தால், அது மயில் காடு. என்னை சுத்தி மல்லிகைப்பூக்கள்.. என் மேலே அதே மல்லிகை வாசம்,, ஆனால் இது அந்த பழைய செண்டு வாசம் இல்லை. இந்த மல்லிகைப் பூ நெடி அதைக்காட்டிலும் வித்தியாசமாய் இருந்தது...

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

நாம காலேஜ் படிக்கும்போதா அண்ணா இது நடந்தது?
அப்புறம் என்ன அச்சு?

said...

கிட்டத்தட்ட இதில் பாதி நடந்தது.

மயில்காட்டு மோகினி said...

கதை நல்லா இருக்கு,