Thursday, December 20, 2007

ஃபாதர் என் குழந்தை பிரெஞ்சு பேசுறாள் - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

சுற்றுலாவாக கடற்கரை நகரமான இந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து சுணக்கமாக இருந்த அஞ்சலி பாப்பா இன்றைக்குத்தான் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தாள். அதனால் அப்படியே கடற்கரை மணலில் நடைபோய்விட்டு வருவோம் என கார்த்தி ,ஜெனி தங்களது குழந்தை அஞ்சலி பாப்பாவுடன் அந்த அழகிய மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

குழந்தை அஞ்சலி மணலை தனது பிஞ்சுக்காலால் மணலை அள்ளித் தெரித்தபடியே உதறி உதறி நடந்து வந்து கொண்டிருந்தது. மூவரின் கால் தடங்களும் அழகாக மணலில் பதிந்து இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரர் நடந்து வர, அஞ்சலிபாப்பா அந்த வெள்ளைக்காரரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தது. குழந்தையை இருவரும் வேகமாக பின் தொடர, அந்த வெள்ளைக்காரரும் இவர்களின் மிக அருகில் வந்து சேர்ந்தார்.

ஜெனியும் கார்த்தியும் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஆங்கிலத்தில் உரையாடலை தொடர, சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரர் குட்டிக்குழந்தையைப் பார்த்து

"கோமோன் வ த்யூ?"(Comment vas-tu) என கேட்க

அஞ்சலிபாப்பா "ஜ வே திரேபியான் ?" (Je vais très bien)என மழலையாகச் சொல்ல ஜெனி மற்றும் கார்த்தியின் முகம் மாறியது.

அந்த வெள்ளைக்காரர் மேலும் சிலக் கேள்விகளை பிரெஞ்சில் கேட்க குழந்தை உடனுக்குடன் பதில் சொல்ல இவர்களின் முகம் வெளிற ஆரம்பித்தது. ஜெனி சடாரென அஞ்சலிபாப்பாவை கையில் தூக்கிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரர் "ஓவர்"(Au voir) என்று குழந்தைக்கும் "சி யூ லேட்டர் " என ஜெனிக்கும் சொல்லிவிட்டு கார்த்தியின் கண்களைப் பார்த்து "யூ ஆர் சோ லக்கி ஜென்டில்மேன்" என அழுத்தமாகக் கைக்கொடுத்துவிட்டு விடைபெற்று சென்ற போது மாலை மறைந்து இரவாகிப் போய் இருந்தது.


வெளிறிய முகத்துடன் அஞ்சலிபாப்பாவை தூக்கிக் கொண்டு, ஜெனி் அந்த தேவாலயத்திற்குள் வேகமாக ஓடிவந்தாள்.அவளின் பின்னால் கார்த்தி பொறுமையாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவளின் கண்கள் பாதிரியார் பிலிப்பை தேடிக்கண்டுபிடித்தன.

"ஃபாதர்,அஞ்சலிக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க, இன்னக்கி ஈவ்னிங் பீச்ல, ஒரு ஃபாரினரோட வேற ஒரு ஈரோப்பியன் லாங்குவேஜ் ல பேசினாள்,ஐ திங்க் அது பிரெஞ்சு.. த்ரேபியான், ஓவர் னு சில வார்த்தைகள் புரிந்தது. அவளுக்கு இந்த லாங்குவேஜ் தெரிய வாய்ப்பே இல்லை, எங்களுக்கு பயமாயிருக்கு ஃபாதர், பிளீஸ் பிலெஸ் பண்ணுங்க"

இதைக் கேட்ட பின்னர் ஃபாதர் பிலிப்பின் முகம் இறுக ஆரம்பித்தது. அவரின் முகத்தில் சிறிது தயக்கத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார்.

"கூட யாரவது பார்த்திங்களா, ஃபாரின் லேடி, சின்னகுழந்தை,"

"நோ ஃபாதர்"

"ஜெனி, நீங்க சீக்கிரம் இந்த ஊரை விட்டு கிளம்புவதுதான் நல்லது, மூனு வருஷம் முன்னாடி ஒரு பிரெஞ்சுக்கார் அவரோட மனைவி மற்றும் குழந்தையுடன் வாக்கிங் போறப்ப சுனாமி அலையில போயிட்டாங்க, அதுக்குப் பின்ன அடிக்கடி கடற்கரையிலே ஒரு அவங்க உருவங்களை பார்த்ததாக அடிக்கடி சர்ச்சுக்கு வர்றவங்க சொல்லுவாங்க, பட் நான் இதுவரை பார்த்ததில்லை. அனேகமா நீங்க சந்திச்சுப் பேசினது அவராக இருக்கலாம், " என சொல்லிவிட்டு "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ஆமென், ஆண்டவர் எப்போதும் உங்களுடன் துணை இருப்பாராக" என மூவரையும் ஆசிர்வதித்து அனுப்பினார்.கார்த்தி எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.

தேவாலய வாசல் வரை அவர்களை வழியனுப்பிட்டு வந்த பாதிரியார், ஜெனியும், கார்த்தியும் சத்தமாக பிரெஞ்சில் பேசிக்கொண்டுப் போவதைக் கேட்டதும் அவரின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் பரவியது. அதிர்ச்சி அலைகளுக்கு காரணம் அவர்கள் பிரெஞ்சுப் பேசிக்கொண்டு போவதில் அல்ல.. அவர்களின் குரல் அலையில் அடித்து செல்லப்பட்ட அந்த பிரெஞ்சு தம்பதியினரின் குரலாக இருந்தது தான். திரும்பிப்பார்த்த பாதிரியாரை நோக்கி மின்னொளி வெளிச்சத்தில் அழகாக அஞ்சலி சிரித்தாள். அது இந்தியக் குழந்தையின் சிரிப்பில்லை என பாதிரியாருக்குப் புரிந்தது.

11 பின்னூட்டங்கள்/Comments:

TBCD said...

அருமை அருமை...புல்லரிச்சுப் போச்சு படிச்சு முடிக்கும் போது...

விஜயன் said...

நல்லா இருக்கு வித்தியாசாமா.கொஞ்சம் நச் தான் குறையுது.நடை,கருத்தாழம் மிக்கது

Divya said...

கதை படிக்க ரொம்ப வித்தியாசமா இருந்தது , ரொம்ப திரில்லிங்கா எழுதியிருக்கிறீங்க,

படிச்சு முடிச்ச பிறகும், திக்கு திக்குன்னே இருக்குது!

பாராட்டுக்கள்!

[உங்கள் கதாப்பாத்திர படைப்புகளான கார்த்திக்கிற்க்கும் , ஜெனிக்கும் ஒரு குட்டி அஞ்சலி பாப்பா வந்தாச்சா?? வாவ்!!]

cheena (சீனா) said...

கதை நல்லாவே இருக்கு - முடிவும் அருமை - நம்ப முடியாத செயல்கள் நடந்து கொண்டு தானிருக்கின்றன

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வினையூக்கி!
அட பிரன்சு பேசும் கதாபாத்திரங்கள்.
கலக்குங்க...
ஆவிக் கதையை விடமாட்டீங்க போல

சிவபாலன் said...

Wow! Nice one!

Kalakkal!

manjoorraja said...

அன்பு செல்வா கதை நன்றாக ரசிக்கும்படி இருக்கிறது.

ஆனால் மிகவும் அவசரமாக எழுதப்பட்டது போல சில இடங்களில் தெரிகிறது. கோர்வையாக வரவில்லை.

என்ன அவசரமோ?

dondu(#11168674346665545885) said...

கோமோன் ஏ த்யூ?"

ஜ வே திரேபியான்

ஓவர்

மேலேயுள்ளவற்றுக்கு பதிலாக நேராகவே இவ்வாறு போட்டு விடுங்கள். அல்லது ஃபிரெஞ்சு வாக்கியத்தை அடைப்புக் குறிகளுக்குள் தரவும். நீங்கள் தமிழில் தந்த ட்ரான்ஸ்லிடெரேஷன் தவறு.

Comment vas-tu?
Je vais très bien.
Au voir

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்ஷி said...

//[உங்கள் கதாப்பாத்திர படைப்புகளான கார்த்திக்கிற்க்கும் , ஜெனிக்கும் ஒரு குட்டி அஞ்சலி பாப்பா வந்தாச்சா?? வாவ்!!//

இது... இது மேட்டரு...!

சூப்பரா எல்லோரும் வந்து ரிப்பீட்டே போட்டுட்டு போங்கப்பா..! :)))

வினையூக்கி said...

மஞ்சூர் ராசா சார்,
ஆமாம், கொஞ்சம் துரிதகதியில் எழுதிய கதை தான் இது. எழுதும்போது இரவு 12 கிட்டத்தட்ட.. கொஞ்சம் தூக்கக்கலக்கம் மெல்லிய பயம் எல்லாம் கதையில் சில இடங்களில் கோர்வையை தவறவிடச் செய்து இருக்கலாம்.

டோண்டு சார்,
மிக்க நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டியபடி திருத்திவிட்டேன்.

சென்ஷி,சிவபாலன் யோகன்பாரிஸ், திவ்யா ,சரவணா, டிபிசிடி,சீனா ஆகியோருக்கும் நன்றி

வீ. எம் said...

சூப்பர் வினையூக்கி, நேற்று இரவு 11.50 இந்த கதை படிக்க ஆரம்பித்த போது, பாதியிலேயே நிறுத்திவிட்டு,. இன்று பகலில் தான் மீதத்தை படித்தேன்.
இதை ஒரு வாரம் முன்பே எழுதி நச் போட்டியில் இனைத்து இருக்கலாம்..

வீ எம்