உன் மொழி போல் என் மொழியும் அமுதமே - சிறுகதை
பரீதாபாத்தில் இருந்து எங்க அலுவலகத்திற்கு வியாபரம் விசயமாய் வந்திருந்த பங்கஜ் அகர்வாலுடன் நான், என் அலுவலக தலைமை நிர்வாகி மோகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அகர்வாலே பேச்சை ஆரம்பித்தார்.
"தமிழ்நாடு வந்தாலே ஒரு பிரச்சினை, யாருக்கும் ஹிந்தி தெரியமாட்டேங்குது" என்றார் ஆங்கிலத்தில்
"உங்க ஊரிலேயும் அப்படித்தானே... யாருக்கும் தமிழ் தெரியமாட்டேங்குது" மென்மையான ஆங்கிலத்தில் மோகன் பதில் சொல்ல
"மோகன், என்ன பேசுறீங்க.. ஹிந்தி நம்மோட தேசிய மொழி" கடுமையான குரலுடன் ஆங்கிலத்திலேயே அகர்வால் தொடர்ந்தார்.
இது மாதிரி ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தி, மோகன் கிட்ட பேசி நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.
அகர்வாலுக்கு எப்படி மோகன் பதில் தரப் போகிறார் என்று ஆர்வத்துடன் கவனிக்கலானேன்.
ஆனால் அதற்குள் ஷகிராவின் ஆங்கிலப் பாடல் அதிர அகர்வாலின் கைத்தொலைபேசி அடித்தது. எழுந்துப் போய் கெஞ்சலாய் கொஞ்சலாய் யாருடனோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். பேசி முடித்துவிட்டு திரும்பி கொஞ்சம் சந்தோசமாய் வந்த அகர்வால்
"என் மனைவியிடமிருந்து அழைப்பு... என் அலுவலக மேலிடத்தைவிட இவளிடம் தான் எனக்கு அதிகம் பயம்" கோர்வையான ஆங்கிலத்தில் அகர்வால் பேசப் பேச்சு குடும்பம், குழந்தைகள், கிரிக்கெட் என திசை திரும்பிற்று.
சூடான ஒரு விவாதத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு சப்பென்றாயிற்று. அன்று மாலை அகர்வால் தான் கிளம்பும் முன் திட்ட முன்வடிவுகளை சிறப்பாக வழங்கிய என்னையும் கிருஷ்ணமூர்த்தியையும் தனியே அழைத்துப் பாராட்டினார். எங்களைப் பொதுவாக ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் அகர்வால் ஏதோ ஹிந்தியில் பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு கோபம் கோபமாய் வந்தது.. அவர்கள் மேல் அல்ல..
ஹிந்திப் படிக்க வைக்காத இந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்காக.. இன்று நேற்று வந்த கோபமல்ல.. "மைனே பியார் கியா, தூர்தர்ஷன் மகாபாரதம், ராமாயண" காலத்துக் கோபம். என்னோட பொழுது போக்கு உலகத்தில் இருந்து பாதியை யாரோ சதி செய்து எடுத்து விட்டு போலத் தோன்றும்.
நடுவில் கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்த இந்தக் கோபம் எங்க அலுவலகத்தில் கோவாவில் இருந்து ஜெனிபர்- டி -சௌசா வந்து சேர்ந்த போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. இந்தக் கிருஷ்ணமூர்த்தி அவளிடம் ஹிந்தியில் கடலைபோடுவான். என்னைவிட கிருஷ்ணமூர்த்தி ஆறு மாதம் சீனியர், மற்றபடி நானும் அவனும் தொழில்நுட்ப அறிவு சம்பந்தபட்ட விசயங்களில் சமம்தான். சீனியர் என்பதால் விடுப்பு சம்பந்தபட்ட விசயங்களில்
அவனின் அனுமதி பெறவேண்டும் என்று இருப்பதால் சில சமயங்களில் ஜெனி முன்னர் என்னை இரண்டாம்தரமாக நடத்துவதும் உண்டு.
ஜெனியின் முகவெட்டு எனக்கு கல்லூரியில் இருந்த முதல் காதலியின் முகத்தை ஞாபகப்
படுத்தியதால் அவள் மேல் எனக்கு தனிக்கவனம் உண்டு. எனக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்றபொழுதும், எனக்கு ஹிந்தி தெரியாததால் அது சம்பந்தபட்ட விசயங்களை பேசி அவளைக் கவர முடியவில்லையே என்ற எரிச்சல் அடிக்கடி வரும். இயலாமையினால் எரிச்சல் கடைசியில் என்னை ஹிந்திப் படிக்க விடாமல் பண்ணிட்டாங்களே!! அப்படின்னு ஒரு புலம்பல்ல வந்து முடியும்.
இரண்டு நாள் கழித்து, மோகன் அவரோட அறைக்கு கூப்பிட்டார். இதுதான் முதல் முறை அவர் என்னை அவரின் அறைக்கு அழைப்பது. எதுவாக இருந்தாலும் என் இடத்திற்கே வந்துதான் சொல்லுவார் அல்லது கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கூப்பிட்டு சொல்லுவார். லேசான நடுக்கத்துடனும் பயத்துடனும் உள்ளே நுழைந்தேன்.
திருவள்ளுவர் படம் அவர் இருக்கைக்கு மேலே இருந்தது. திருக்குறள் புத்தகம் அவரின் மேசையின் மேல் இருந்தது. அறையைச்சுற்றி கண்களை சுழலவிட்டேன். பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள், சிலப்பதிகாரம், மற்றும் சில திராவிட இயக்க வரலாறு சம்பந்தபட்ட புத்தகங்கள் அலமாரியில் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
என்னை அவர் அமரச்சொன்னவுடன், "நீராறும் கடலுடுத்த " என கைத்தொலைபேசி பாட எடுத்து யாருடனோ ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் விதத்தை வைத்துப் பார்த்த பொழுது சரளமாகவே பேசுகிறார் என்று தெரிந்தது.
அவர் பேசி முடித்தவுடன் "சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?!!! " என்றேன் ஆச்சரியத்துடன்.
"இந்தக் கம்பெனி ஆரம்பிப்பதற்கு முன்னர் போபால்ல 5 வருஷம் இருந்தேன்" என்றார் சிரித்துக் கொண்டே
"பின்ன அந்த பங்கஜ் அகர்வாலோட நீங்க இங்கிலீஷ்லேயே தான் பேசினீங்க.. ஏன்?"
"இங்கிலீஷ் தானே எங்க இரண்டு பேருக்கும் தெரிந்த பொது மொழி.. ஹிந்தி பேசி நானும் உன் ஆளுதான் அப்படின்னு ஒரு பொய்யான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பல அதனாலதான் இங்கிலீஷ்ல மட்டும் பேசினேன்" என்றார்
அவர் சொல்வதுசரி போலத்தான் தோன்றியது..
" சார்..இவ்வளவு தமிழ் புக்ஸ்.. உங்களுக்கு இவ்வளவு தமிழ் மேல அபெக்சனா?"
"இல்லை கார்த்தி, தமிழ் மொழிப் பற்று என்று சொல்ல முடியாது. தாய்மொழிப் பற்று அப்படின்னு சொல்லலாம்.. தமிழ் என் தாய் மொழியாக அமைந்துபோய்விட்டது.. ஒரு வேளை பெங்காலியோ ஒரியாவோ என் தாய் மொழியாக அமைந்திருந்தால் அந்த மொழியின் பால் பிரியம் அதிகமாக இருந்திருக்கும்... இந்த உலகத்துக்கும் நமக்கும் ஏற்பட்ட முதல் பாலம் நம்ம மொழிதான் அதுமேல ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது இயல்புதானே!!"
"ஆமாம் சார்.. அப்போ ஏன் வேற மொழி வேண்டாம்னு நாம் போராட்டம் பண்ணோம்?"
"போன வாரம் கொலம்பஸ் பத்தின படம் பார்த்தேன்.. கொலம்பஸ் கரீபியன் தீவுகளுக்குப்போறபோது ஒரு பழங்குடி பையனுக்கு ஸ்பானிஷ் கத்துக்கொடுத்து அங்கு இருக்கிற பழங்குடி மக்களுடன் தொடர்பு கருவியாக அவனைப் பயன் படுத்திக் கொள்வார்... ஒரு கட்டத்தில் கொலம்பஸின் ஆட்கள் பழங்குடி மக்களை கொடுமைப் படுத்துவதை காணச்சகிக்காமல் அந்தப் பழங்குடிப் பையன் தனது பழைய அடையாளங்களை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டு போகும்பொழுது கொலம்பஸ் அவனைக் கூப்பிடுவார்.. அவன் கொலம்பஸை நோக்கி, << நான் உன் மொழியை கத்துக்கிட்டேன்.. ஆனால் நீ என் மொழியில் இருந்து ஒரு வார்த்தைகூட கற்றுக்கொள்ளவில்லை உன்னை நான் எப்படி நம்புவது>> என சொல்லிவிட்டு காட்டுக்குள் ஓடிவிடுவான்.. இப்போ புரிந்ததா!!"
"ம்ம் புரிஞ்சது சார்..."
"இப்போ நாம ஆபிஸ்ல எல்லோரும் ஏன் ஸ்பானிஷ் படிக்கிறோம்" என்று மோகன் ஸ்பானிஷ் ல கேட்ட கேள்விக்கு
"ஜனவரில பாதிபேருக்கு மேல புரஜெக்ட் விசயமா தென்னமெரிக்கா சிலி நாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு அதிகம்" என் உடைந்த ஸ்பானிஷில் பதிலளித்தேன்.
"ம்ம் அதேதான் தேவைக்கேற்ப தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சரியானது.. நான் போபால்ல இருந்தப்ப ஹிந்தி தேவை இருந்தது கத்துக்கிட்டேன்.. அந்தந்த ஊருக்குப் போறப்ப அந்த ஊரு மொழியில பேசுறதுதான் நாம அந்த மக்களுக்கு கொடுக்கிற மரியாதை .. அப்படி இல்லைன்னா இரண்டு பேரும் பொதுவாக கத்துக்கிட்ட மொழியில பேசனும்..." மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார்.
நான் அவரின் பேச்சைக் கேட்டபடி மெதுவாகத் தலையாட்டினேன்.
"என்ன ரொம்ப அறுக்கிறேனா? ... "
"இல்லை சார்.. அப்படி எல்லாம் இல்லை"
"சரி, விசயத்திற்கு வருவோம்.. அடுத்த வாரம் ஹைதராபாத் போகமுடியுமா உங்களால.."
"கிருஷ்ணமூர்த்தி தானே போறதா இருக்கு, நானும் போகனுமா?"
"ம்ம் நீங்களும் போக வேண்டியதா இருக்கும்.. அந்த புரஜெக்டை கொஞ்சம் நல்லா ஸ்டடி பண்ணி வச்சுக்கோங்க" என்றார்
"சார் அந்த பரீதாபாத் , பங்கஜ் அகர்வால் புரொஜெக்ட்.. " என்று இழுத்தேன்.
"ஓ அதுவா.. அவங்க நம்ம புரொபசலை ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. தட்ஸ் ஓகே. சில விசயங்கள் கிடைப்பதை விட கிடைக்காமல் இருப்பதுதான் நல்லது..."
இரவுப்பகல் கண்விழித்து உழைத்த விசயம் இப்படி ஆயிடுச்சே என்ற வருத்தம் இருந்த போதும் அதை வெளிக்காட்டாமல் மெலிதாய் சிரித்துவைத்தேன்.
நான் மோகன் அறையை விட்டு வெளியே வரும்முன்
"கார்த்தி, உங்க தாய்மொழி தமிழ் தானே?"
"ஆமாம் சார்"
"எதிர்காலத்துல உங்க பசங்களுக்கு தமிழ் கத்துக் கொடுங்க.. கடந்த தலைமுறையில் இருந்து எதிர்கால தலைமுறைக்கு அவங்க அவங்க மொழியைக் கொண்டுப் போற பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு..இப்பொவெல்லாம் நம்ம மொழியை வெளிசக்திகள் அழிக்க விரும்புவதில்லை..அவர்களுக்கு இந்த மொழி தேவை .. நம்ம சினிமா, ஆடியோ, புத்தகங்கள் , இண்டர்நெட் என வியாபார ரீதியா தமிழ் ஒரு பெரிய இண்டர்நேஷனல் மார்க்கெட் .. நாம கடத்தியாய் மொழியறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகலேனா இன்னும் மூன்று தலைமுறையில நம்ம மொழி காணாமல் போய்விடும்.. என்ன செய்யுவீங்களா?"
"நிச்சயமாக சார்" என்று தெளிவாய் வெளியே வந்தேன். மறுவாரம் நான் மட்டும்தான் ஹைதராபாத் போகவேண்டியிருந்தது. போவதற்கு முன் சில அடிப்படை வாசகங்களை தெலுங்கிலும் ஹிந்தியிலும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டேன். வெற்றிகரமாய் ஹைதராபாத்தில் திட்டவிளக்கங்களை கொடுத்துவிட்டு அந்த அலுவலக புது நண்பர்களோடு ஒரு தெலுங்குப் படம் போகலாம் என்று முடிவு செய்து கொண்டிருந்தபோது மோகன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.
"கார்த்தி, வாழ்த்துக்கள் ..இந்த புரெஜெக்ட் பிரசண்டேஷன் நல்லா பண்ணீங்கன்னு தகவல் வந்தது.. உங்க உழைப்புக்கு நன்றி.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா"
"சொல்லுங்க சார்"
"என் பொண்ணு இப்போ நல்லா பேச ஆரம்பிச்சுட்டா, அங்க குழந்தைகளுக்கான தெலுங்குப் பாடபுத்தகம், ரைம்ஸ் இருக்கிற புத்தகங்கள் ஆடியோ கேஸட்ஸ் பார்த்து வாங்கிட்டு வரமுடியுமா?"
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
"சரி சார் வாங்கி வரேன்.. ஒரு சின்ன விசயம் உங்க குழந்தை எப்படி... தெலுங்கு?" சந்தேகமாய் கேட்டேன்.
"ஓ அதுவா. என் மனைவி ரம்யா தெலுங்கு தேசப் பொண்ணு, எனக்கு எப்படி என் மொழிக் கத்துக்கொடுக்க உரிமை இருக்கோ என் மனைவிக்கும் இருக்கும் அல்லவா!! அதனால தமிழ் தெலுங்கு இரண்டும் கத்துக்கொடுக்க நாங்க டிசைட் பண்ணி இருக்கோம்... "
மோகன் மேல் வைத்திருந்த மரியாதை மேலும் அதிகமானது. ஒரு வாரக் காத்திருப்பிற்குப் பின் ஹைதராபாத் புரெஜெக்ட் வெற்றிகரமாக எங்களுக்கு கிடைத்தது. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.. கிருஷ்ணமூர்த்தி எங்க அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அந்த பரீதாபாத் பங்கஜ் அகர்வால் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டான். அவன் போய்விட்டதால் இப்பொழுது என் வேலைத் திறமையை முழுமையாகக் காட்ட வாய்ப்புக் கிடைத்தது. பொறுப்புகளும் அதிகமாக வந்து சேர்ந்தது.ம்ம்ம்... இன்னொரு விசயம் நானும் ஜெனிபர் டிசௌசாவும் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம். ஒரு நல்ல நாள் பார்த்து ஆங்கிலத்திலேயே என் காதலைச்சொல்ல , பிகு ஏதும் செய்யாமல் உடனடியாக ஏற்றுக் கொண்டாள்.
பின்னொரு நாள் மாலை சத்யமில் ஒரு தமிழ் படம் எனக்காக அவள் என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த இடைவெளியில்
"ஜெனி, உன் தாய்மொழி என்ன?"
"கொங்கனி"
"எனக்கு அந்த மொழியை எனக்கு கற்றுத்தருவீயா?"
"நிச்சயமா கார்த்திக்" என்றாள் தமிழில்.
============
18 பின்னூட்டங்கள்/Comments:
இதுதான் சூப்பர். கொடுக்கல் வாங்கல்தான் எப்பவும் சரி. நம் தாய்மொழியைக் கற்கனும். மதிக்கனும். அதுனாக வேற மொழியைக் கற்காம இருக்கக் கூடாது. தேவைக்கு வேண்டியத தெரிஞ்சு வெச்சுக்கிறது நல்லதுதான்.
டிசோசா நல்லாருக்காங்களா :))))
தாய் மொழியின் தேவை குறைத்து, தெளிவான, அருமையான புரிந்துணர்வை தந்துள்ள உங்கள் கதைக்கு பாராட்டுக்கள்.
கதையும், கருத்தும் நன்று, வாழ்த்துக்கள்!
நன்றி ஜீவா.
கோவி.கண்ணன் சார், உண்மையை சொல்லப்போனால் உங்க மொழி பற்றிய கட்டுரை ஒன்றை சில நாட்களுக்கு முன்னால் வாசிக்க நேர்கையில் தான் இந்த கதைக்கான கரு கிட்டியது.
ஜி.ராகவன் மிக்க நன்றி. ஜெனிபர் டிசௌசா பத்தி கார்த்திக்கிட்ட கேட்டு சொல்றேன். :) :) :)
கலக்கல் தலைவரே.
நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கதையாய் இது அமைந்து விட்டது.
குறிப்பாக தனது குழந்தைக்கு தெலுங்கு கற்றுக் கொடுக்கவேண்டும் என்று மோகன் சொல்லும் போதும், சிறுவனின் வார்த்தைகளும்.....
அருமையோ அருமை.
Good!
Nice one!
To make TAMIL as survival of fittest ... This is the best way!
Good Story.
nalla sindhanai...nalla kadhai.
vazhthukkal
சின்னச் சின்ன கூர்மையான இடங்கள் கதைக்க்கு மெருகேற்றுகின்றன. வினையூக்கி, நல்ல கதை, எளிய நடை, இனிய கருத்து. வாழ்க! (அநேகமாக 2007-ல் நான் படித்த முதல் கதை இதுதான்! இனி உங்க -பேய்னு தலைப்பில் இல்லாத- கதைகள் படிக்கணும்.)
முழுக்க முழுக்க ஊகிக்கக்கூடிய moral science வகுப்புக் கதை..எனக்கு என்னவோ இது போன்ற நீதி சொல்லும் கதைகளைப் பிடிப்பதில்லை..அதற்குப் பதில் நல்ல கட்டுரையாகவே எழுதி விட்டுப் போகலாம்.
நன்றி நந்தா , சிவபாலன் மற்றும் விஜி.
காசி சார்,
//, தமிழ் மொழிப் பற்று என்று சொல்ல முடியாது. தாய்மொழிப் பற்று அப்படின்னு சொல்லலாம்.. தமிழ் என் தாய் மொழியாக அமைந்துபோய்விட்டது.. ஒரு வேளை பெங்காலியோ ஒரியாவோ என் தாய் மொழியாக அமைந்திருந்தால் அந்த மொழியின் பால் பிரியம் அதிகமாக இருந்திருக்கும்...// இந்த வசனம் தங்களது சிந்தாநதியுடன் ஆன பேட்டியில் இருந்த ஒரு பதிலில் இருந்து "inspire" ஆனது.
தங்களது பாராட்டுக்கு நன்றி. பல பேய்க்கதைகளுக்கு மத்தியில் சில பாசிடிவ் கதைகளும் நான் எழுதுவது உண்டு.
ரவிசங்கர்,
கட்டுரைகளை விட கதைகளுக்கு வீச்சு அதிகம் என்பதால் இந்த தாய் மொழிப்பற்று என்ற விடயத்தை கதை வடிவில் அமைத்திருந்தேன்.
பேய் இல்லாத வினையூக்கி கதையானாலும்... சூப்பர்...!
//இந்த வசனம் தங்களது சிந்தாநதியுடன் ஆன பேட்டியில் இருந்த ஒரு பதிலில் இருந்து "inspire" ஆனது. //
அட! :-))
மாநிலம், தேசம், மதம், மொழி இவைகளை எல்லாம் தாண்டி திருமணங்கள் நடந்தாலும், கணவன் அல்லது தந்தையின் மதம், மற்றும் மொழியைத் தான் குழந்தைகள் பின்பற்றவேண்டும் என்கிற எழுதப்படாத ஒரு விதிமுறையை பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கதை ஒரு நல்ல பாடம். நல்ல moral. பாராட்டுக்கள்!
தாரா.
தாய்மொழியின் மீது பற்று என கூறிக்கொண்டு, மற்ற மொழிகளை கற்றுக்கொள்ளாமலும் மதியாமலும் இருப்பது தவறு என் உணர்த்தியது இந்த கதை!
ரசித்தேன்!!
தாரா மற்றும் திவ்யா
மிக்க நன்றிகள்.
hi,
I read all your short stories today...hmm really interesting..
Keep up the good work.
excellant narration, vungal kathaiyai vaasikkum phothu migavum makilchiyaaga vunargiren,migavum nantri
நன்றி ராஜேஷ் மற்றும் கமல்
Post a Comment