Tuesday, March 27, 2007

நானும் கடவுள்களும் - சிறுகதை

இரண்டு நிமிடம் கண்களை மூடி இழுத்து மூச்சை விட்டு கணினியில் வேலையை ஆரம்பித்தேன். மின்னஞ்சல்களை பார்க்கும்போது, மோகனின் மின்னஞ்சலை வழக்கம் போல் "Shift+Del" அடித்து முழுவதுமாக அழித்தேன். இந்த ஆளுக்கு வேற வேலையே கிடையாது, காலங்காத்தாலே யாருக்காவது ரத்தம் வேணும், சிறுநீரகம் வேணும், அவனுக்கு உதவனும் இவனுக்கு உதவனும் ஏதாவது வேண்டுகோள் மின்னஞ்சல்கள் அனுப்புவதே பிழைப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டே ஜெனியினால் தள்ளிவிடப்பட்ட மினனஞ்சல்களில் மூழ்கிப் போனேன். எல்லாம் ஏற்கனவே படித்த சர்தார்ஜி துணுக்குகள் என்றாலும், அது ஜெனியினால் அனுப்பப்பட்டு படிக்கபடும்பொழுது அதன் சுவாரசியம் மேலும் கூடுகிறது.

நேற்றிரவு கிரிக்கெட் ஆட்டம் பார்த்ததனால் ஏற்பட்ட விழிப்பு, இப்பொழுது தூக்கமாக கண்களை சொக்கியது. சரி முகம் கழுவி விட்டு வந்து வேலையைப் பார்க்கலாமமென்று எண்ணி, ஒய்வறைக்கு சென்றேன். அங்கு மோகன் ரத்தக் கறை படிந்த சட்டையைக் கழட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

"மோகன், என்ன ஆச்சு?"

"ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் கார்த்தி"

"என்ன சார், கார் வாங்கி இரண்டு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள ஆக்ஸிடெண்ட் பண்ணிடிங்களா!! " ஒரு நக்கல் தொனியுடன் கேட்டேன்.

"இல்லைப்பா , நான் பண்ணல, ஆற்காட் ரோட்ல ஒரு வயசான ஆளை அரைபாடி லாரி அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான், அந்த ஆளை ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டுப் போக ஒரு ஆட்டோக்காரன் கூட வரலை, அப்புறம் நானே என் கார்ல தூக்கிட்டுப் போய் ரக்சித்ல சேர்த்துட்டு வர்றேன், ஆளுக்கு ஆயுசு கெட்டி, பிழைச்சுக்கிட்டார்"

நான் பைக் புதிதாய் வாங்கிய பொழுது என் வீட்டு வேலைக்காரியின் மகன் விளையாட்டுத்தனமாக சீட்டில் கிறுக்கிய போது நான் அவனை போட்டு அடித்தது ஞாபகத்துக்கு வந்து சென்றது. இப்படிக்கூட மனுஷாள் இருப்பானுங்களா? தன்னோட புது கார்ல ரத்தத்தோட அடிபட்டு கிடக்கிற ஆளை எடுத்துச் செல்கிற மனப்பக்குவம்.

ஜெனியின் தொலைபேசி அழைப்பு வர, கைத்தொலை பேசியை எடுத்துக் கொண்டு அலுவலக தோட்டத்துக்குச் சென்றேன்.

"கார்த்தி, இந்த சண்டே மொழி போகலாம்ட"

"ஜெனி, என் கார்ட்ல ஏற்கனவே லிமிட் எக்ஸீட் ஆயிடுச்சு, சத்யம் ல நீயே புக் பண்ணிடு"

"சரிடா" என்று சொல்லிவிட்டு கைத்தொலைபேசியின் இணைப்பை அவள் துண்டித்த பிறகு மெதுவாக தோட்ட புல்வெளியில் நடக்கும்பொழுது , மோகனின் காட்டமான குரலைக் கேட்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தேன்.

"முன்ன வாங்கின பணமே இன்னும் நீ கொடுக்கல, அதுக்குள்ள திரும்ப திரும்ப பணம் கேக்குற?" என்று மோகன் எங்க அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலைப் பார்க்கும் நரசய்யாவை கேட்டுக் கொண்டிருந்தார்.

நரசய்யாவின் கெஞ்சல்களுக்குப் பிறகு, மோகன் பணத்தைக் கொடுத்துவிட்டு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்ய வருமாறு கூறிவிட்டு சென்றார்.

மெதுவாக நரசய்யாவிடம் போய்,
"என்னப்பா? மோகன் கடன் கொடுத்து வீட்டு வேலை வாங்குறாரா?"

'சார், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை,அவர் வீட்டு வேலைக்கு இல்லை சார், போரூர் தாண்டி இருக்கிற ஆதாரவற்றோர் இல்லத்து தோட்டத்தை சுத்தம் செய்ய சார்,அப்படி வேலை செஞ்சா கடன் ல பாதிய வாங்கிக்க மாட்டாரு, அவர் வீட்டு வேலைக்கு என்னை என்னக்குமே கூப்பிட்டதில்லை" என்றார் நரசய்யா.

மோகன் ஒவ்வொரு மாதமும் ஏதாவது இயலாதோர் இல்லத்துக்கு பணம் கேட்க வரும்பொழுது, அலுவலக மக்கள் எரிச்சலுடன் இருந்தாலும், அவரைப் பார்த்த பிறகு தன்னையறியாமல் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் கொடுப்பது மோகனுக்காக. மோகன் யார் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்தாலும், வலிய சென்று உதவுவார். ஆண் , பெண் பேதம் கிடையாது, ஜாதி,மதம், மொழி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு. வேலையில் சந்தேகமிருந்தாலும், வீடு பார்த்துக்கொடுப்பதிலும்,குழந்தைகளுக்கு பள்ளியில் சேர, சிபாரிசு செய்வதிலும் மனுசன் அசரவே மாட்டார்.

எனக்குக் கூட வீடு பார்த்துகொடுத்தவர் மோகன் தான். ஆரம்பத்தில் உதவிய போதிலும் எனக்கு என்னமோ மோகன் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அதீதமாக முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் எப்போதும் உண்டு. ஒரு முறை அவர் ஒரு சிறார் பாதுகாப்பு அமைப்புக்காக பணம் கேட்ட போது முகத்தில் அடித்தார் போல தர முடியாது என்று சொன்ன போதும், அடுத்த மாதம் மீண்டும் வந்து கேட்டார், அவர் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமுமில்லை. சகஜமாக என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை செய்வார்.

ஞாயிறன்று, மொழி படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இடைவேளையின் போது எங்களுக்கு இரண்டு வரிசை முன்பு இருந்தவர்களைக் கவனித்தேன். ஒரு பதினைந்து பேர் ஊனமுற்ற குழந்தைகள். சிலர் கைக்கட்டை வைத்து இருந்தார்கள், சிலரால் பேசமுடியாதது போல் இருந்தது. இங்கு ஒன்று சொல்ல வேண்டும், மோகனுக்கு இப்படி சொன்னால் பிடிக்காது, சிறப்புத்திறன் உடையவர்கள் என்று சொல்லவேண்டும் எனக்கூறுவார்.

அட, மோகன் கையில் பாப்கார்ன்,காபி என எல்லா திண்பண்டங்களுடன் கஷ்டப்பட்டு எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்கிறார். இன்னொரு ஆச்சர்யம் , என் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த ரெமோ கூட அங்க இருக்கான். அவனும் தட்டுத் தடுமாறி தின்பண்டங்களை வாங்கி வந்து அவனும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றான். பெரிய ஆளுதான் மோகன்,இவனையும் இவரது கோஷ்டியிலே சேர வைத்துட்டார். நான் மோகனை கவனிக்கக் கூடாது என்று தவிர்க்க நினைத்து வேறு திசையில் பார்க்க முயற்சி செய்கையில் என்னை அவர் கவனித்து விட்டு கூப்பிட்டார்.

வேறு வழியின்றி அவர் அருகில் சென்றேன். மோகன் தனது "சிறந்த நண்பர்கள்" என்று அந்த சிறப்புத்திறன் உடையவர்களை எனக்கும் ஜெனிக்கும் அறிமுகப்படுத்தினார். நானும் மோகனும் பேசிக்கொண்டிருக்கையில் அதில் இருந்த ஒரு செவித்திறன் குறைந்த குழந்தையுடன் ஜெனி சைகை மொழியில் பேச ஆரம்பித்தாள். அவர்களின் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.
கண்களில் எத்தனை சினேகம். வழி தெரியாமல் நான் ஒரு முறை பின்லேந்தில் மாட்டிக் கொண்ட தெலுங்கு பேசும் நபருக்கு தெலுங்கில் வழி சொன்ன போது அவரின் கன்களில் தெரிந்த ஆனந்தம் இவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.
எனக்கு ஜெனிக்கு இந்த சைகை வடிவங்கள் தெரியும் என்பது இன்றுதான் தெரியும்.

மோகன் படம் முடிந்ததும் இரவு உணவுக்கு அவர்களுடன் வருமாறு அழைத்தார். நாசுக்காக மறுத்துவிட்டேன். ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் படம் முடிந்து நானும் ஜெனியும் வெளியே வந்தோம். மோகனும் அவரது நண்பர்களும் அவர்கள் வந்திருந்த பெரிய வேனில் ஏறி எங்களுக்கு கையசைத்து விடை கொடுத்தார்கள்.

எப்படி மோகனால் இப்படி இருக்க முடிகிறது, நிதானம், பரிவு , புரிந்துகொள்ளல் எப்படி இந்த ஆளால் முடிகிறது. என் அகராதியில் மோகனுக்கு அர்த்தம் 'இளிச்சவாயன்".ஆனால் அலுவலகத்திலும் , பொதுவிலும் இந்த ஆளுக்கு எப்படி இவ்வளவு நண்பர்கள், பிடித்தவர்கள்.
ஒரு முறை மோகனை பற்றி புதிதாய் சேர்ந்தவரிடம் கிண்டலடிக்க போய்,அவர் தன்னை வேலைக்கு சேர்த்து விட்டது மோகன் தான் என்று கூறி என் மூக்குடைத்தார்.

எனது அலுவலகத்திலேயே அவரது சிபாரிசில் வந்தவர்கள் நிறைய பேராம். எனது மேலாளார் கூட அவரது சிபாரிசுதான். அவரின் சிபாரிசுகளின் கடமை உணர்ச்சிக்கு சில சமயம் அளவே இல்லாமல் இருக்கும். கோவிலுக்கு நேந்து விட்ட காளைகள் மாதிரி வேலையிலேயே குறிய இருப்பானுங்க மேலிடத்திலும் செல்வாக்கான ஆள்.

எனது மேலாளார் ஒரு முறை சொல்லி இருக்கிறார், இந்த மோகன் குப்பத்து பசங்களுக்கு எல்லாம் வார இறுதிகளில் அடிப்படை ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறார். என்னையும் கூப்பிட்டார் ஆனால் எனக்கு ஜெனியுடன் கடலை போடவே நேரம் போதவில்லை என்று மறுத்துவிட்டேன்.

இந்த மோகனைப் பத்தி கேள்விப்படும் விசயங்கள் எல்லாம் திகட்ட திகட்ட நல்லவையாகவே இருக்குது. இதைப்பற்றி மோகனிடமே நேராக்கேட்கவேண்டும் என நினைத்து இருக்கையில்
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று, மோகனை பெசண்ட் நகர் பீச்சில் பார்க்க நேரிட்டது. அவரைச் சுற்றி ஏகப்பட்ட நாய்கள். பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன சார், நாய்ங்க கூட உங்களுக்கு பிரெண்டா?" என்றேன் கேலியாக.

மோகன் சிரித்துக் கொண்டே பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னார். இதுதான் மோகனது இன்னொரு சிறப்பம்சம், கேலி , கிண்டல் என தெரிந்தாலும் கூட அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும்போது எதிராளியை நிராயுதபாணியாக்கி தவிக்க விட்டுவிடுவார்.

"நேராகவே கேட்கிறேன், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? அன்பே சிவம் கமலஹாசன் மாதிரி" என்றேன்.

அவர் ஹாஹா என வாய்விட்டு சிரித்து விட்டு "நீ ரொம்ப சினிமா பார்க்கிற" என்றார்,

" என்னோட லாஜிக் சிம்பிள் கார்த்தி, எனக்குத் தேவைப்பட்ட போது கிடைக்காத ஆதரவுகள்,உதவிகள் யாருக்கேனும் தேவைப்படுவதை தெரிந்தும் என்னால் சும்ம இருக்க முடியாது" என தொடர்ந்தார்.


"ஒண்ணுத்தெரியுமா? மற்ற எந்த விசயங்களில் இல்லாத ஒரு போதை மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது, நான் நிச்சயம் அவர்களுக்கு உதவுவேன் என்ற அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும்பொழுது ஒரு நிறைவு எந்த விசயத்திலும் கிடைக்காது" என்று மோகன் சொல்வதை உற்றுக் கேட்கும் சமயத்தில் கையில் பைபிளுடன் ஒருவர் வந்து அதன் பெருமைகளை பேச ஆரம்பித்தார்.
அதை கவனியாமல் நான் ஜெனிக்கு குறுஞ்செய்திகள் அனுப்ப ஆரம்பித்தேன். மோகன் அந்த நபரின் அனைத்து வார்த்தைகளையும் உன்னிப்பாக கேட்டு முடித்து அவரை அனுப்பி வைத்தார்.

"சார், நீங்க கிறிஸ்டியனா?"

"இல்லை கார்த்திக், எனக்கு திணிக்கப்பட்ட எந்தவொரு வழிபாட்டு முறைகளிலும் துளியும் நம்பிக்கை கிடையாது, சொல்லப் போனால் நான் ஒரு Agnostic"

"பிறகு ஏன் பைபிள் பத்தி அவர் சொல்லிக்கிட்டு இருந்தப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்க?"

"அதுவா!!!, கிறிஸ்தவம் கான்செப்ட், இலவசமா ஒருத்தர் எனக்கு உலகம் முழுவதும் மதிக்கப்படும் விசயத்தை சொல்லவருகிறார், நான் ஏன் அதை தடுக்க வேண்டும். நான் கதாகாலட்சேபம் கூட போய் உட்கார்ந்து கேட்பேன். நீ ஒண்ணு கவனிச்சியா , நான் அவரோட அட்ரஸ், போன் நெம்பர் , பிளட் க்ருப் எல்லாம் வாங்கிக்கிட்டேன். என்றாவது யாருக்காவது தேவைப்படும்" என்றார்.

"சார் உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது ? ஆபிஸ்ல வேலை நேரம் போக மீதி நேரம் சமூக சேவைதான் செய்றீங்க" என்றேன்.

" அது சரி உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?" என்றார்.

"இருக்கு, நிறைய இருக்கு? அவனின்றி ஒரு அணுவும் அசையாது"

"அந்தகடவுளுக்கு எவ்வளவு நேரம் நீ கொடுப்ப?"

'ஒரு நாளைக்கு 30 நிமிசம், வெள்ளிகிழமை 1 மணி நேரம்"

"ம்ம்ம், இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமான ஒரு விசயத்துக்கு நீ 30 நிமிசம் கொடுக்கிற, கண்ணுக்கு முன் இருக்கிற உன் கடவுளின் அம்சங்களுக்கு நான் 3 மணி நேரம் கொடுக்கிறேன், அவ்வளவு தான். கடவுளின் துகள்கள் நாம், முடிந்தவரை சக கடவுள்களை மதிப்போம்"

மனதினுள் இந்த ஆள் "Gods Debris" by Scott Adams படிச்சு இருக்கார்னு நினைச்சுக்கிட்டேன்.
இன்னமும் மோகனை கிண்டல் செய்யும் மனோபாவம் விடுபடவில்லை.

அந்த சமயத்தில் ஜெனியிடமிருந்து போன் வந்தது, அவளின் தோழி பேசினாள், ஜெனி வந்த ஸ்கூட்டி தடுமாறி கிழே விழுந்ததில், அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினாள்.

என் முகம் கலவரப்படுவதைக் கவனித்த மோகன் விசயத்தைக் கேட்டார். நிதானமாக , சிலருக்கு போன் அடித்து அந்த மருத்துவமனைக்கு போகச் சொன்னார். என்னையும், வேறொருவரிடம் பைபிளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்த அந்த கிறிஸ்தவ நபரையும் மோகன் தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.

எனக்கு எல்லோரும் கடவுள்களாக தெரிய ஆரம்பித்தனர்.

18 பின்னூட்டங்கள்/Comments:

said...

a very nice feel good story...though, i was able to predit the story, it was a total pleasure reading it...kudos man
(felt a little lengthy...try trimming a little)

said...

நல்ல கதை

said...

//எனக்கு என்னமோ மோகன் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அதீதமாக முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் எப்போதும் உண்டு.//

//"ஒண்ணுத்தெரியுமா? மற்ற எந்த விசயங்களில் இல்லாத ஒரு போதை மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது//

//"ம்ம்ம், இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமான ஒரு விசயத்துக்கு நீ 30 நிமிசம் கொடுக்கிற, கண்ணுக்கு முன் இருக்கிற உன் கடவுளின் அம்சங்களுக்கு நான் 3 மணி நேரம் கொடுக்கிறேன், அவ்வளவு தான்.//

அழகா எழுதி இருக்கீங்க. ரொம்ப நல்ல கதை. க்ளைமாக்ஸ் மட்டும் விஜய் பட டைப்ல முடிஞ்சிடுச்சு. ஆனா உங்களோட Psychological apporach க்கு ஒரு சல்யூட்.....

said...

தலைவா.. வர வர கலக்கலா இருக்கு.. இந்தக் கதை ப்ளக்குக்கு கொஞ்சம் நீளமா இருந்தாலும் சூப்பரா வந்திருக்கு

said...

"யாருக்கென்றும் அழுத உள்ளம் தெய்வமாகலாம்..."

said...

நல்லாயிருக்கு.

said...

//sivagnanamji(#16342789) said...
"யாருக்கென்றும் அழுத உள்ளம் தெய்வமாகலாம்..."
//
நிச்சயமாக ஐயா, தொடர்ந்து வரும் தங்களின் ஆதரவுக்கு நன்றி

said...

//
பொன்ஸ் said...
தலைவா.. வர வர கலக்கலா இருக்கு.. இந்தக் கதை ப்ளக்குக்கு கொஞ்சம் நீளமா இருந்தாலும் சூப்பரா வந்திருக்கு
//

நிரம்ப தாங்க்ஸ் மத்மஸல். இப்பொழுது எல்லாம் நிறுத்தற்குறிகளில் அதிகம் கவனம் செலுத்தி எழுதுகின்றேன்.

said...

நந்தா, கதை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கமாக மரபுப்படி முடித்து விட்டேன்.

said...

Thank you Protector.

said...

வினையூக்கி,
மிகவும் அருமையான கதை. நீண்ட நாட்களின் பின் ஒரு சிறந்த கதையை வாசித்த திருப்தி.

வழமையாக நான் நீண்ட பதிவுகளை ஒரே தடவையில் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் நீங்கள் கதை சொல்லியிருந்த நடை, ஒரே தடவையில் முழுக்க வாசிக்க வைத்து விட்டது.
பாராட்டுக்கள்.

said...

//
வெற்றி said...
வினையூக்கி,
மிகவும் அருமையான கதை. நீண்ட நாட்களின் பின் ஒரு சிறந்த கதையை வாசித்த திருப்தி
//
மிக்க நன்றி வெற்றி அவர்களே. :)

said...

If Director Radha Mohan is to be appreciated or praised for the movie "Mozhi", Selva deserves the same for this story.

said...

//Alchemist said...
If Director Radha Mohan is to be appreciated or praised for the movie "Mozhi", Selva deserves the same for this story.
//
Thank you Alchemist. ரொம்ப பெரிய இடத்தோட வச்சி பாராட்டி இருக்கீங்க. நன்றி

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

படிச்சி முடிச்சப்போ ரஜினி ஒரு படத்துல சொன்னது நினைவுக்கு வருது..

கடவுள் ஒனக்குள்ளயும் இருக்கார் எனக்குள்ளயும் இருக்கார்

அது உண்மைதான்..

வாழ்த்துக்கள்.

said...

The kind of person the 'Mohan' in this story is, is the ultimate that everybody should try to become. I too would want to be like him someday. But to reach that someday theres a lot of things that I/we need to do now. Hope I/we get the energy and environment to do everything that needs to be done and let me/us strive for it.

கதைய பாராட்டாம,character
அ பாராட்டீட்டு இருக்கேன்னு நினைக்காதீஙக அண்ணா. நிஜம்மாதிரியே கதை இருக்குறதால 'Mohan' ஒரு சக மனிதர்னு தோன ஆரம்பிச்சிடுச்சு.
கொஞ்சம்Mr.Vidyaakar (http://www.udavumkarangal.org/about.htm) சாயல்ல இருப்பாரோ இந்த 'Mohan' இன்னு கூட தோனுது!
இது தானே ஒரு கதைக்கு உண்மையான வெற்றி?

said...

Good to see you writing such good stories! நாலு பேருக்கு நல்லது நியாபகம் வர்ர மாதிரி கதைகள் எழுதுவது பாராடிற்குரியது!!

said...

நானும் கடவுள் !!!!