Monday, April 30, 2007

SouthPaw - தகவல்

கிரிக்கெட் வர்ணனைகளின் போது இடது கை ஆட்டக்காரர்களை "South-Paw" என்றுக் குறிப்பிடுவதைக் கவனித்து இருக்கலாம். இது பேஸ்பால் ஆட்டத்தில் நாற்கர முனை மதிய சூரியனை தவிர்க்கும் வகையில் இடதுகை ஆட்டக்காரகளுக்கு ஏதுவாக கிழக்குப்பக்கம் பார்க்கும் முனை தேர்வு செய்யப்படும். அப்போது பாதம் தென் திசையை நோக்கி இருக்கும். இதுவே அப்படியே கிரிக்கெட்டிலும் எந்த திசையில் இருந்தாலும் இடக்கை ஆட்டக்காரர்களை Southpaw என்று அழைக்க காரணமாகிவிட்டது.
******

சந்தடி சாக்கில் ஒரு விளம்பரம்

இன்று பதியப்பட்ட கதைகள்

முரண்பாடுகள் - சிறுகதை
நாணயம் - ஒரு நிமிடக்கதை

Sunday, April 29, 2007

நாணயம் - ஒரு நிமிடக்கதை

"கார்த்தி சார் " யாரோக்கூப்பிட திரும்பிப் பார்த்தேன்.

"சார் எவ்வளவு நாள் ஆச்சு, எப்படி இருக்கீங்க" நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தின் கடைநிலை ஊழியர் முத்து நின்று கொண்டிருந்தார்.

"நல்லா இருக்கேன் முத்து"

"சார், உங்க கிட்ட கடைசியா வாங்கின 500 ரூபாய் தரவேயில்லல, நீங்க ரிசைன் பண்ண அந்த ஒரு மாசம் லீவ்ல இருந்தேன்" என்று சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து 500 யை எடுத்துக் கொடுத்தார்.

'இல்ல வேண்டாம்" என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக என் கையில் திணித்துவிட்டு சென்றார்.

அந்தக் கடைசி மாதம் என் வீட்டை சுத்தம் செய்து , துணித்து துவைத்துக் கொடுத்த பாட்டிக்கு அந்த மாதப் பணம் 200 ரூபாய் கொடுக்காமலேயே மறந்து வீட்டைக்காலி செய்து வந்தது நினனவுக்கு வந்தது. அந்த வேலைக்காரி பாட்டிக்கு அந்த பணத்தை கொடுத்துவிட வளசரவாக்கம் நோக்கி வண்டியை செலுத்தினேன்.

முரண்பாடுகள் - சிறுகதை

தமிழ் செய்தித்தாள்களை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பதை படிக்கையில் மனது தன்னையும் அறியாமல் 15 வருடங்கள் பின்னோக்கிப் போனது.

எங்கள் ஊர் பள்ளியில் தேர்வு முடிவுகள் வரும் அன்றே முதல் மூன்று இடம் பெற்றவர்களின் மதிப்பெண்கள் மட்டும் தலைமை ஆசிரியருக்கு வந்துவிடும். மனது படபட என அடித்துக் கொண்டது. மதிப்பெண்களை விட அப்பாக்குத்தான் பயம். குறைந்த பட்சம் பள்ளியிலாவது முதற் மாணவனாக வரவேண்டும், இது தான் நிபந்தனை. அது நடக்காவிடில் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைக்கையிலேயே உதறல் எடுத்தது. இராசப்பன் காலையிலே வீட்டுக்கு வந்துட்டான்.

இராசப்பன், என் வகுப்புத்தோழன், எனக்கும்,அவனுக்கும் நடுவிலேதான் படிப்பிலே கடும்போட்டி. போட்டி இருந்தலும் நாங்க நல்ல நண்பர்களாகவே இருந்தோம்.

"அம்மா , நான் ஸ்கூலுக்கு போய் ரிசல்ட்டும், மார்க்கும் பார்த்துட்டு வர்றேன்" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நானும் இராசப்பனும் பள்ளியை நோக்கி நடந்தோம். பள்ளிக்குப் போற வழியிலே இருக்கிற பிள்ளையார் கோயில் வாசல்ல நின்றேன்.

"இராசப்பா, சாமி கும்பிட்டுட்டு போலாம்ட"

"வேணாம் கார்த்தி , நான் வரல, இந்த கோயில்ல பூஜை பண்றவர், நான் போறப்ப எல்லாம் ஏற இறங்கப் பார்த்துட்டு விபூதிய அலட்சியமா கொடுப்பாரு, நான் இப்ப எல்லாம் சர்ச்சுக்குதான் போறது,
சர்ச்ல சாமிக்கிட்ட கூடப் போய் தொடலாம்"

"இல்லட எல்லா சாமியும் ஒண்ணுதான், வா" என வலுக்கட்டாயம அவனை இழுத்துட்டுப் போனேன்.

உள்ளே அந்த கோயிலில் பூஜை செய்கிறவர், என் அப்பாவைப் பற்றி விசாரித்து விட்டு, விபூதி குங்குமத்துடன் ஒரு பழமும் கொடுத்தார். இராசப்பன் சொன்னதைப் போலவே, இராசப்பனுக்கு கொடுக்கும்போது மட்டும் வேண்டா வெறுப்பாகவே கொடுத்தார். அவனுக்கு பழம் கொடுக்கவில்லை.

"இதுக்குதான் முதல்லயே சொன்னேன், வரமாட்டேன்னு"

'இல்லைடா அவர் தட்டில ஒரு பழம்தான் இருந்துச்சு, முதல்ல நின்னதால எனக்குக் கொடுத்துட்டாரு"

"ம்ம், உனக்கு இதெல்லாம் புரிய சில வருசம் ஆகும்"

பள்ளியில் தலைமையாசிரியர் நானும் , இராசப்பனும் ஒரே மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் மட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் முதல் இடத்தைப்பிடித்துள்ளதாக சொன்னார்.

பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இராசப்பன் அப்பாவின் செருப்புத்தைக்கும் கடையில் அவன் நின்று விசயத்தை சொன்னதும் அவருக்கு தலைகால் புரியவில்லை. முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்தின் அளவை சொல்ல முடியாது. ஓடிப்போய் எங்கள் இருவருக்கும் தேநீரும் வடையும் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். நாங்க தேநீர் குடித்து முடிப்பதற்கு முன் அவர் அந்த வரிசையில் இருந்த அனைத்து தெரிந்த கடைகளிடம் போய் சொல்லிவிட்டு வந்தார். இராசப்பனை எப்படியாவது நிறைய படிக்க வைத்துவிடுவது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக இராசப்பன் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

நாங்கள் இருவரும் என்னுடைய வீட்டிற்கு வந்தோம். இராசப்பன் முதன்முறையாக தயங்கி தயங்கி வீட்டிற்குள் வந்தான். என் அம்மா, ஒரு தட்டு நிறைய பலகாரங்கள் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தார்கள். கூச்சப்பட்டுக் கொண்டே அவன் சாப்பிட்டு முடித்தான். நானும் அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டேன்.

அவன் போனதும் அம்மாவிடமிருந்து எனக்கு முதுகில் அடி விழுந்தது.

"அறிவில்லை உனக்கு, கேவலம் அவன் தட்டிலேந்து எடுத்து சாப்பிடுற" என்று அந்த தட்டை கழுவி கொல்லைபுறத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.

"கேவலம்" என்ற வார்த்தை மனதை மிகவும் வலிக்கச் செய்தது.

இது மாதிரி ஒரு முறை கணக்கு வாத்தியார் வீட்டில் நடந்ததாக சொல்லி இருக்கிறான். நல்ல வேளை அவன் போன பிறகு அம்மா இப்படி நடந்து கொண்டார்கள். அப்பா இப்படி இல்லை. இராசப்பனை பள்ளியில் பார்க்கும் பொழுதெல்லாம் தொட்டு பாராட்டி பேசுவார். இராசப்பனுக்கு பள்ளிகட்டணம் கூட கட்டி இருக்கிறார்.

மாலை, கொல்லைப்புறத்தில் நான் உட்காந்து இருந்தபோது, அப்பா வந்தது தெரிந்ததும் உள்ளே சென்றேன்.

"கேவலம், அவனும் இவனும் சமமா மார்க் வாங்கி இருக்கானுங்க, செருப்புதைக்கிற பயலோட புள்ளையும் இவனும் ஒண்ணா!! ஊர்ல மானமே போச்சு,சகிச்சுக்க முடியல" அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கேவலம்" என்ற வார்த்தை இரண்டாவது முறையாக வலித்தது.

அப்பாவுக்கு "அவனும் " முதல் மதிப்பெண்கள் எடுத்துள்ளான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

நாங்கள் திருச்சிக்கு மாற்றலாகி போகும் வரை இராசப்பன் எப்போதும் வீட்டுக்கு வந்தாலும் அந்த கொல்லைபுற தட்டுதான்.

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தேன். இந்த சாதிக்கூறு எப்படி எல்லா இடத்திலேயும் நிறைஞ்சு இருக்குன்னு கால ஓட்டத்திலே புரிந்தது. சாதி தவிர்க்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு விசயமாகி விட்டது. எல்லோரும் ஒரு அடையாளத்தை நோக்கி ஒடுகின்றனர். இல்லை என்றால் பொய்யான கவுவரத்திற்காக அடையாளத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். இப்போ இராசப்பன் ஒரு அரசாங்க நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கின்றான்.

இராசப்பன் தனது கல்யாண பத்திரிக்கை கொடுக்க என் வீட்டிற்கு வந்திருக்கையில்,வருடங்கள் ஓடியும் கோயில் விசயமும், கணக்கு வாத்தியார் வீட்டு சம்பவமும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் இன்னமும் இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டான். இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் அவனுக்கு டிஸ்போஸபிள் தட்டில் தான் சாப்பாடு.

அவன் கல்யாணப்பத்திரிக்கையில் மணமகனின் பெயர் ராஜ் என மாற்றப்பட்டிருந்தது. அவனிடம் கேட்ட போது மாமனார் வீட்டின் விருப்பத்திற்கேற்ப அப்படி போட்டுள்ளதாகக் கூறினான்.

கல்யாணத்தில் கல்வியின் செழுமையும், பொருளாதார வளமையும் வந்திருந்த ஒவ்வொருவரின் நடை உடை பாவனைகளில் நன்றாகத் தெரிந்தது.

"ராசப்பா, சாரி ராஜ், எங்கட உங்க அம்மா, அப்பா!!'

"ஹே, சும்மா கிண்டல் பண்ணாதே, அங்க மூனாவது ரோல இருக்காங்க பாரு"

"அறிவில்லை, உனக்கு அவங்களை சபையில முந்தி இருக்க வைடா"

"நோ, நோ, தே டொண்ட் நொ ஹௌவ் டு பிஹேவ் வித் ஹை கிளாஸ் பியுபுல்"

அதுக்கு மேல் அவனிடம் பேச விருப்பமில்லாமல், அவனோட அம்மா அப்பா இருந்த வரிசையில் அவர்களின் அருகில் நானும் உட்கார்ந்து கொண்டேன். எதோ ஒன்றை தாங்கள் இழந்து விட்டதாக அவர்கள் கண்கள் சொல்லாமல் சொல்லியது.

மணமகள் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து இருக்க, மணமகன் ராஜ் என்ற முன்னாள் இராசப்பன் திருமாங்கல்யத்தை சம்பிரதாயப்படி மணமகளின் கழுத்தில் கட்டினார்.

ராஜ் ஒரு உயர் அடையாளத்தை தேடிக்கொண்ட பெருமிதத்துடன் மணமகளுடன் உட்கார்ந்து இருந்தவரை வாழ்த்தி விட்டு, அடுத்ததாக எனது சாதி சங்கத்தின் புதிய தலைவராக நான் பொறுப்பேற்க இருக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமானேன், சாதி அடையாளத்தை அடியோட அழிக்க விருப்பம் இருந்தும், அப்படி செய்ய முடியாத சுயநல சூழ்நிலைக்கைதியாக.

Friday, April 27, 2007

ஹர்ஷினி பாப்பா - சிறுகதை

"டேய் கார்த்தி, இங்க வந்து பாருடா, ஹர்ஷினி பாப்பா எப்படி டான்ஸ் ஆடுறான்னு!" என் தங்கை எனது மாடி அறையை நோக்கிக் கத்தினாள்.

சுவாரசியமா செகுவேராப் பற்றி படித்துக் கொண்டிருந்த நான் மாடிக்கதவைத் திறந்தேன். போக்கிரிபொங்கல் பாடல் பண்பலை வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. குட்டி பாப்பா விஜய் மாதிரியே காலரைத் தூக்கி விட்டு ஆடிக்கொண்டிருந்தது.

"ஏண்டி இப்படி இம்சை பண்ற, வேணும்னா, அந்த பாப்பாவோட சேர்ந்து நீயும் ஆடு, இன்னொருதடவை கத்தினீன்னா, அந்த ரேடியோவைப் போட்டு உன் தலையில உடைச்சுடுவேன்" என்று கத்திவிட்டு மேலே வந்தேன். என் காட்டுக்கத்தலைப் பார்த்த ஹர்ஷினி பாப்பாவுக்கு முகம் வாடிபோனது.

ஹர்ஷினி பாப்பா எங்க பக்கத்து வீட்டுக் குழந்தை மூன்று வயதிருக்கும். என் தங்கைக்கும் தேர்வுகள் முடிந்து விட்டதால் அந்தக் குட்டிபாப்பாவை எங்க வீட்டுக்கு கூட்டி வந்து விளையாடிக்கிட்டு இருப்பாள். போன வாரம் வரை குட்டிபாப்பா எங்க வீட்டுக்கு வந்தால் நேரா என் மாடி அறைக்கு வந்து தயா தக்கான்னு குதிச்சுட்டு இருக்கும். அந்த பாப்பா மேல வந்தால் எங்க வீட்டு குட்டி பிசாசும் மேலே வந்துடும். நிம்மதியா ஜெனிக்கிட்ட தொலைபேச முடியவில்லை. என்னோட தனிமை பெருமளவு பாதிக்கப்பட்டது.

கதவை மூடி வைத்தாலும் குட்டி பாப்பா அழகா மாடி ஏறி வந்து கதவைத் தட்டி, "கொம்பிட்டர்ல டோலு டோலு பாட்டு" ன்னு கேட்கும். இன்னொரு நாள் அல்கெமிஸ்ட் புத்தகத்தோட எல்லா பக்கத்திலேயும் கிறுக்கி வைத்திருந்தது.

"என்ன இதுன்னு" கோபமா பாப்பாவிடம்
ரொம்ப கூலா " கிறுக்கா புறுக்கா" என்று சொன்னது.

முதுகில நாலு சாத்தலாம்னு தோணியது.

"இந்த ரூம்ல சந்திரமுகி இருக்கு, குட்டி பாப்பா இனி மாடிக்கு வந்தால் தூக்கிட்டுப் போயிடும்னு சொன்னுச்சு" என்று அந்தக் குழந்தை இனி மாடிக்கு வருவதை தவிர்க்க பயம் காட்டினேன். அன்றிலிருந்து ஹர்ஷினி பாப்பா மாடிக்கு வருவதேயில்லை.

லேசாகப் பசித்தது மாதிரி இருந்ததால், கிழே வந்தேன்.

"எங்கடி ஹர்ஷினி பாப்பா"

"நீ தான் நாய் மாதிரி வள்ளு வள்ளுன்னு கத்தினில்ல அதுல குழந்தை பயந்து வீட்டுக்குப் போயிடுச்சு"

அவள் சொன்னதைக் கவனிக்காமல் "அம்மா சாப்பாடு வை" என்றேன்.

"ஏண்டா, நீ மாடி ரூம்ல சந்திரமுகி பேய் இருக்குன்னு சொன்னே, குழந்தை நேத்து நீ இல்லாதப்ப மாடிக்கு போய் இன்னொரு ஹர்ஷினி பாப்பாவும் , சந்திரமுகி பேயும் இருக்குன்னு அலறிட்டு கீழே ஓடியாந்துடுச்சு"

"அதுவா தன்னையே கண்ணாடில பார்த்துட்டு பயந்து இருக்கும்"

"குழந்தைகளை எல்லாம் பயமுறுத்தாதடா.. பிஞ்சு மனசு, ஆழ்ந்து பதிஞ்சுடும்"

"கிழவி மாதிரி அட்வைஸ் பண்ணாதே,முதல்ல அந்த ரிமோட்டை எடு" என்று சொல்லி தொலைக்காட்சியில் காத்துக் கருப்பு பார்க்க ஆரம்பித்தேன்.

மறுநாள் மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டதால், காபி குடித்து விட்டு மாடிக்குபோனப்ப அங்க ஹர்ஷினி பாப்பா என்னோட கணினி முன்னால் நின்றுக்கொண்டு அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. என் தங்கை இல்லாவிடில் இது தான் பிரச்சினை. நேரா என் அறைக்கு வந்துவிடும். சந்திரமுகி பேய் பயம் போயிடுச்சு போல.

"பாப்பா, அக்காக்கிட்ட போய் விளையாடு, இங்க பேய் வரும். போ போ"
என விரட்டினேன்.

குழந்தைங்க கோபமா பார்த்தா அதுலக் கூட ஒரு அழகு இருக்கும். ஹர்ஷினி பாப்பா முறைச்சு பார்த்துச்சு.அது முறைக்கிறத பார்த்து எனக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. ஆனால் சிரிச்சிட்டா இங்கேயே உட்கார்ந்துடும். ஜெனிக்கிட்ட இருந்து அழைப்பு வரும் வேற.

பாப்பா, என்னைப் பார்த்துக்கிட்டே படியிலே இறங்கி கீழே போனது.

அன்றிரவு எங்க வீட்டுல சேர்ந்து சாப்பிடும்போது,

"கார்த்தி, இன்னக்கி நாள் முழுசும் ஒரே போருட !! காலையிலே ஹர்ஷினி பாப்பா ஊருக்குப் போயிட்டா, அடுத்த மாசம் தான் வருமாம்" என்றாள் என் தங்கை.

அப்போ இன்று சாயந்திரம் நான் பார்த்தது??? ##@@$%%#$@#$%

Wednesday, April 25, 2007

நடேசன் பூங்கா - ஒரு காதல் ஜோடி - வலைப்பதிவர் சந்திப்பு

"கார்த்தி, அங்கே என்னடா வட்டமா ஒரு க்ருப் உட்கார்ந்து இருக்கு, யாரு அவங்க" என்று ஜெனி என்னிடம் கேட்டபோது அப்போதான் அவங்களைக் கவனித்தேன். நாங்க உட்கார்ந்து இருந்த பெஞ்சுக்கு நேரா புல்தரையில் ஒரு 30 பேர் வளையமா உட்கார்ந்து இருந்தனர்.

வழக்கமா இந்த நேரத்தில ரிடையர்டு கோஷ்டிதான் இந்த நேரத்தில வந்து அரட்டையடிச்சுட்டு இருப்பாங்க, ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டத்திலே சில பெரியவங்களும் இருக்காங்களே, நடுத்தர வயது ஆட்களும் இருக்காங்க.

"இரு ஜெனி, அங்க போய் என்ன கூட்டம்னு பார்த்துட்டு வர்றேன்" என்று ஜெனியிடம் சொல்லிவிட்டு அந்த கூட்டத்தின் அருகில் வந்தபோது, சாகரனுக்கு மவுன அஞ்சலி, மலர் வெளியிட்டு, அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்தது.
(1. உங்கள் நண்பன் சரவணன் 2. மா. சிவகுமார் 3. தருமி 4. ஓகை நடராஜன்
5. ஐகாரஸ் பிரகாஷ் 6. பாஸ்டன் பாலா 7. லியோ சுரேஷ் 8. விக்கி 9. சிறில் அலெக்ஸ் 10. பாலராஜன் கீதா 11. இராம.கி 12. லக்கிலுக் 13. நந்தா:
14. உண்மைத் தமிழன் 15. சுந்தர் 16. ஓசை செல்லா 17. ப்ரியன்
18. சு.க்ருபாசங்கர் 19. மோகன்தாஸ் 20. ஜி.ராகவன் 21. முத்து தமிழினி
22. பகுத்தறிவு 23. பொன்ஸ் 24. We the People 25. ஜே கே 26. நாமக்கல் சிபி
27. விஜயராஜ் 28. மாரிக்கனி 29. மாஹிர் 30. நவீன் பிரகாஷ் 31. தமிழ்வாய்ஸ்
32. 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் 33. யோசிப்பவர் 34. நிலாரசிகன்
35. தங்கவேல் 36. மிதக்கும்வெளி 37. செந்தில் 38. WeeBee 39. ஜி. கௌதம்
40. வடுவூர் குமார் 41. சார்லஸ் )
எல்லோருடைய பெயர்கள்/புனைப்பெயர்களக்கேட்ட பின் ஜெனியிடம் வந்தேன்.

"ஜெனி, அது தமிழ் பிலாக்கர்ஸ் மீடிங்காம்"

"ஆமாண்டா, நான் கேள்விப்பட்டு இருக்கேன்"

"அங்க மொட்டைத்தலையா ஒருத்தர் இருக்காருல அவர் பேரு பாலபாரதி, அவர்தான் இந்த மீடிங்கோட ஆர்கனைசராம்"

"ஹே, ஆள் நல்லா ஸ்மார்ட்டாதான் இருக்காரு"

"அங்க பாரு ஒருத்தர் நம்ம மாதிரி இருக்கிற லவ்வர்ஸ் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு கவனிச்சுக்கிட்டு இருக்காரு"என்று ஜெனியிடம் பேச்சை மாற்றினேன்.

"கார்த்தி என்னடா மக்கள் டீவி கேமரா தூக்கிட்டு வர்றாங்க, எங்க அப்பா இந்த சேனல் அடிக்கடி பார்ப்பார், மாட்டினேன்னா சுலுக்குதான்"

பொதுவா இந்த எழுத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துக் கொண்டால் அந்த இடம் போர்க்களம் போல் ஆகிவிடுமென்று கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால் இவர்கள் அமைதியாக சந்திப்பை நடத்துகிறார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்ட வளையத்துக்கப்பால் இருவர் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சலசலப்பை பொருட்படுத்தாமல் கூட்டம் தொடர்ந்தது.

"கார்த்தி, அங்க பாரு, மாது பாலாஜி மாதிரி இருக்கரு"

"அவர் பேரு பாஸ்டன் பாலா, ஸ்னாப்ஜட்ஜ் பத்தி பேசிக்கிட்டு இருக்காரு"

தேன்கூடு பெட்டகம்(சிரில் அலெக்ஸ்) ,மாற்று(தண்டோரா0, கில்லி(பிரகாஷ்), எ-கலப்பை(ஓகை நடராஜன்) , இணைய சுதந்திரம்(செல்லா), தமிழ்மணம்(மா.சிவக்குமார்) , அனானி(லக்கிலுக்), வெகுஜனம்,தரமான பதிவு(தருமி) பின்னூட்ட எல்லை(மோகன்தாஸ்) என்ற புதுபுது விசயங்களை அவர்கள் பேசுவதை நானும் ஜெனியும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தோம்.

"ஜெனி, நாமளும் பிலாக் எழுதுவோமா?"

"எழுத ஆரம்பிக்கலாம், இப்போ கிளம்பலாம்" என்று எழுந்தாள்.

"ஜெனி, நான் ஒன்னு சொல்றேன் நிச்சயமா, இளைஞர்கள், தொழில்நுட்பம், பேராசிரியர்கள், மொழியுண்ர்வு, ஊடகம் தமிழ் சமுதாயம் அடுத்த பரிமாணத்தில் ஜொலிக்கப் போகின்றது" வண்டியில் போகும்போது சொன்னேன்.

"ம்ம், இதுல இருக்கிறவங்க நிறையபேர் கருத்து மாறுபாடு இருந்தாலும் எவ்வளவு சினேகமா பேசிக்கிட்டாங்க, நீயும் தான் இருக்கியே எதுக்கெடுத்தாலும் கோச்சுக்கிட்டு"

போகும்போது நாங்க சரவணபவனில் இட்லி வடை சாப்பிட்டு விட்டுபோனோம்.

மறுநாள், கூகிளில் எல்லாவற்றையும் எங்கள் காதில் விழுந்த கலைச்சொற்களைக் கொண்டு தேடி சந்திப்பை பற்றி வந்த அனைத்துப் பதிவுகளையும் படித்தோம். நாங்கள் அவர்கள் பதிவுகளை வாசிக்கும்போது அந்தந்த வலைப்பதிவாளாரே அவர் குரலில் சொல்வதாக உணர்ந்தோம்.
தூரத்தில் இருந்து கவனித்த எங்களுக்கே இந்த உணர்வு என்றால் சந்தித்த வலைப்பதிவர்களுக்கு எவ்வளவு நிறைவைக் கொடுத்து இருக்கும்.

சென்னபட்டினம்
லக்கிலுக்
பொன்ஸ்
வடுவூர்குமார்
பாலபாரதி
மிதக்கும் வெளி
அபி அப்பா
மோகன்தாஸ்

***************

பின் குறிப்பு : இந்தப் பதிவை தமிழ்மணத்தில் பதிவர் வட்டத்தில் இணைப்பதற்குப் பதிலாக சிறுகதை/கவிதை என தவறுதலாக வகைப்படுத்திவிட்டேன். மன்னிக்கவும்.

Tuesday, April 24, 2007

பயப்படாதே - சிறுகதை

முகத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது.. அறைக்குள்ள காலையிலே சூரிய வெளிச்சம் வராதே!! கண்ணைத் திறந்து பார்த்தால் விடுதி மொட்டை மாடியில் படுத்து இருக்கேன். திக்குன்னு இருந்துச்சு. என்னோட படுக்கையை சுத்தி மல்லிகைப்பூவா சிதறிக் கிடந்துச்சு. என் மேலேயும் மல்லிகைப்பூ வாசம் அடித்தது. படுக்கையை சுருட்டிக் கொண்டு விழுந்தடித்து என் அறைக்கு கீழே வந்தேன். அறை நண்பர்களிடம் எதுவும் நடக்காதது போல் காட்டிக் கொண்டு, அந்த வாசம் தெளிய குளித்து வகுப்புக்கு செல்லும்முன் விடுதி பிள்ளையார் கோயிலுக்கு போய் எனக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

ஏற்கனவே விடுதி பின்புறம் உள்ள மயில்காட்டில் மோகினி உலவுவதாக சீனியர் மாணவர்கள் சொல்லி இருந்தனர். அன்று மாலை தூங்குவதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டதோடு மட்டும் அல்லாமல் , அறை நண்பனின் சிலுவை செயினையும் வாங்கிப் போட்டுக்கொண்டு தூங்கினேன். மறுநாள் எழுந்தபோது என் விடுதி எதிரே உள்ள வேப்ப மரத்தில் கீழே இருந்தேன். மரத்தில் சிவப்பு தாவணி தொங்கிக் கொண்டிருந்தது. நேற்று போல் இன்றும் சுத்து மல்லிகைப்பூக்கள், என் மேலும் அதே வாசம்.

அறைக்கு ஓடி வந்து திகில் பிடித்தது போல் உட்கார்ந்தேன். நான் வெளிறிப் போய் இருப்பதைப் பார்த்த என் அறை மாணவர்கள், அந்த வரிசையில் இருந்த அறைகளின் அனைத்து மாணவர்களும் வந்து என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அவர்கள்தான் நான் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் மொட்டைமாடியிலும்,வேப்ப மரத்தடியிலும் அலேக்காக தூக்கிக் கொண்டு போய் போட்டனர் என்று சொன்னார்கள்.

"நான் தாண்ட உன்னை சுத்து மல்லிகைப்பூ போட்டேன்,செண்ட் நல்ல வாசமா" இது சிலுவை செயின் கொடுத்த பையன்.

"பாத்ரூம் போகக்கூட துணைக்கு கூப்பிடுற உன் பயத்தோட இம்சை தாங்கல, உன் பயத்தைப் போக்கத்தான் இப்படி பண்னோம், கோச்சுக்காதடா" என்று சமாதனப்படுத்தினார்கள்.

இவனுங்க என்னை பயமுறுத்துவதற்கு ஒரு வாரமா திட்டம் போட்டு செயல்படுத்தி இருக்கின்றனர். எனக்கு ஆத்திரமும் அவமானமும் பிடுங்கித் தின்றாலும் கூட ஒரு வகையில் என் பயம் தெளிந்தது என்று சந்தோசமா இருந்தது. சுற்றி நடப்பதுகூட தெரியாமல் இனி தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொல்ளவேண்டும். அந்த இரண்டு சம்பவங்களுக்குப் பின் பயம் போனதால் இரண்டாவது ஆட்டம் சினிமா போய் விட்டு தனியாக வரக்கூட தைரியம் வந்தது.

விஜயதசமிக்கு சேர்ந்தார் போல விடுமுறை வந்ததால் எனது வரிசையில் இருக்கும் அறை மாணவர்கள் அனைவரும் ஊருக்குச் சென்று விட்டனர். மொத்தம் 28 அறைகளில் நான் மட்டுமே. DC Machines படித்து விட்டு 2 மணி போல, உள்பக்கம் தாழிட்டு இருக்கேனா என்று உறுதி செய்து கொண்டு தூங்கப் போனேன். ஆழ்ந்து துங்கிக் கொண்டிருக்கையில் திரும்பிபடுத்த போது சின்ன சின்ன கல்லு, முள்ளு குத்திய உணர்வு. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தால், அது மயில் காடு. என்னை சுத்தி மல்லிகைப்பூக்கள்.. என் மேலே அதே மல்லிகை வாசம்,, ஆனால் இது அந்த பழைய செண்டு வாசம் இல்லை. இந்த மல்லிகைப் பூ நெடி அதைக்காட்டிலும் வித்தியாசமாய் இருந்தது...

லால்குடி Days - சிறுகதை

ஜெயங்கொண்டம் பேருந்து, லால்குடி பேருந்து நிலையத்துக்கு உள்செல்லாமல், திருப்பத்திலேயே என்னை இறக்கிவிட்டு விட்டு சென்றது.என் சொந்தக் காரங்க வீடுகளிலேயே, இந்த லால்குடி மாமா வீட்டுக்கு மட்டும் தான் எந்த நேரம் வேண்டுமனாலும் போகலாம். திருச்சியிலே இருக்கிற நண்பர்களுக்கு என்னுடைய திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு இப்போதான் வர்ற முடிந்தது. தன்னோட கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பது என்பது குஷியான விசயம். அதிலும் காதல் கைகூடி கல்யாணம்னா சொந்தக்காரங்க அண்டார்டிகால இருந்தா கூட போய் கொடுக்கலாம்.

மாமா வீடு சப்தஷ்ரீஸ்வர் கோயிலைத் தாண்டி நன்னிமங்கலம் போற வழியிலே இருக்கு. குதிரை வண்டி ஏதாவது கிடைக்குமான்னு பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன்.

ஒரேயொரு குதிரை வண்டிக்காரர், குதிரை வண்டியில் கட்டி இருக்க, வண்டி அருகில் படுத்து இருந்தார். பக்கத்தில் போய் எழுப்பினேன். குப்புன்னு சாராய நெடி.

"அண்ணே!!!, நன்னிமங்கலம் போகனும், வர்றீங்களா?"

இரண்டு மூன்று முறை எழுப்பியும் குதிரைக்காரர் எழவில்லை.

சரி நடந்தே போவிடுவோம் என்று எண்ணி நடைக்கட்டுகையில்,

"தம்பி, நில்லுங்க"
திரும்பிப் பார்த்தேன். அங்க குழந்தைவேலு நின்னுக்கிட்டு இருந்தார்.

"தம்பி, வண்டியிலே ஏறுங்க, நான் நான் கொண்டாந்து விடுறேன்"

குழந்தைவேலு, மாமா வீட்டுல எடுபுடி வேலை செய்றவர், சின்ன வயசுல, நான் இந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறபோதெல்லாம் குழந்தைவேலுதான் ஊர் சுத்திக்காட்டுவார்.
இஞ்சினியரிங் கடைசி வருஷம் படிக்கிறப்ப வந்தப்பக் கூட நானும் அவரும் குதிரைவண்டியிலே பூவாளுர் போய் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு வந்தோம்.
முன்ன எல்லாம் மாப்ளே என்றுதான் கூப்பிடுவார். மாமா ஒரு நாள் படிக்கிற பையனை கூப்பிடுற அழகான்னு சொன்ன பிறகு தம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சார்.

நான் பின்லாந்து போய்விட்டு வந்தப்ப அவருக்குகாக வாங்கி வந்திருந்த டீசர்ட்டைதான் இப்போ போட்டு இருந்தார்.

"குழந்தை, எனக்கு அடுத்த மாசம் கல்யாணம், வந்துடுங்க"

"ரொம்ப சந்தோசம். நேத்துதான் சின்ன புள்ளயா பார்த்த மாதிரி ஞாபகம், வருசம் எல்லாம் ஓடுது தம்பி, யாரு தம்பி பொண்ணு, அந்த கிறிஸ்தவ பொண்ணுதானே!!"

"ஆமா குழந்தை, அவங்களேதான். மாமாகிட்ட சொல்றேன், உங்களைக் கூட்டிட்டு வருவாரு"

"ஆகட்டும் தம்பி"

அடுத்த சில நிமிடத்தில் மாமா வீடு இருக்கும் தெரு வளைவு வந்தது.

"தம்பி, இங்கேயே இறங்கிகோங்க, உங்க மாமாவுக்கு இப்போ என்னைக் கண்டால் ஆகாது"

"சரி, அண்ணே!, தாங்க்ஸ்"

மாமா இந்த அர்த்தராத்திரியில் வருவதற்கு கோபித்துக் கொண்டார். முன்ன மாதிரி லால்குடி இல்லை. ஊர்ல வழிப்பறி அதிகம் ஆகிவிட்டது என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

"நம்ம குழந்தை தான் குதிரை வண்டில கொண்டு வந்து விட்டுட்டுப் போனார், மாமா"

மாமாவோட முகம் மாறியது.

"அவனோடயா வந்தே?"

"ஆமாம், என்ன பிரச்சினை, வழக்கம்போல வீட்டுல ஏதாவது திருடிட்டாரா?"

" சரி போய் படு காலையில பேசிக்கலாம்" என்றார் மாமா.

அடுத்த நாள் மாமாவுக்கு முறைப்படி பத்திரிக்கை வைத்துவிட்டு,அக்கம்பக்கம் கிராமத்தில் உள்ள தூரத்து சொந்தங்களுக்கும் கொடுத்து முடித்தேன். இன்று நாள் முழுவதும் குழந்தை கண்ணிலேயெ படவில்லை. ஒரு வேளை மாமா என்கூடவே இருந்ததனால் கண்ணில் தென்படும்படி நடமாடி இருக்க மாட்டார். எல்லாம் நல்லபடியா முடிய அன்றிரவு மலைக்கோட்டை ரயில் ஏற லால்குடி ரயில் நிலையத்தில் நானும், வழியனுப்ப மாமாவும் காத்திருந்தோம்.

அட தூரத்தில் குழந்தைவேலு.

"மாமா, குழந்தைகிட்ட போய் வர்றேன்னு சொல்லிட்டு வந்துடுறேன்"

"ஒன்னும் வேனாம்" என்று என் கையை அழுத்திப் பிடித்து தன்னருகிலியே இருக்க வைத்தார்.

ரயிலும் வந்தது. ரயிலில் ஏறியவுடன் மாமா, கையில் சப்தஷ்ரீஸ்வர் கோயில் பிரசாதம்னு திறுநீரு பொட்டலத்தை திணித்தார்.

"பத்திரமா போய்ட்டு காலையிலே போன் பண்ணு"

"சரி, மாமா"

கண்கள் குழந்தைவேலுவை தேடியது. ஆனால் அவரைக் காணவில்லை. ரயில் மெதுவாக பரமசிவபுரம் ரயில் கிராசிங்கை கடக்கையில் குழந்தைவேலு தெரிந்தார்.

டாடா காட்டிவிட்டு ஒரு நாள் முழுவதும் அலைந்த அசதியில் அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

கல்யாணத்துக்கு குழந்தைவேலு வரவில்லை. மாமாக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரிடம் அதைப்பற்றி கேட்கவில்லை.

.... ம்ம்ம் நாலு மாசம் கழித்து மாமா ஊர்ல இருந்து என்னையும் ஜெனியையும் பார்க்க வந்திருந்தார். ஊருக்குப் போவதற்கு முன்ன ஒரு விசயம் சொன்னார்.

"கார்த்தி, நீ கல்யாண பத்திரிக்கை கொண்டுவந்து கொடுக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னதான் குழந்தைவேலு ட்ரெயின் டிராக்கை கிராஸ் பண்றப்ப பல்லவன் அடிச்சு செத்துப் போனான்"

மாமா சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. உண்மையான அதிர்ச்சி என்னவென்றால் இந்த செத்துப் போன குழந்தைவேலுவை போன மாசம் ஒரு நாள் தாமதமா அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் பார்த்தேன். தான் மெட்ராசுக்கு வந்துவிட்டதாக கூறினார். அன்றுகூட அந்த பின்லாந்து டீசர்ட் தான் போட்டு இருந்தார்.
இதயம் வேகம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

Monday, April 23, 2007

டீக்கடை,டெலிபோன் பூத், மொட்டைமாடி,லிஃப்ட் - சிறுகதை

வழக்கமாக எழும் நேரத்தை விட சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டதால், அருகில் இருக்கும் டீக்கடைக்கு நடை போட்டேன். டிசம்பர் மாதம் ஆதலால் 7 மணியாகியும் லேசாக பனி மூட்டம் இருந்தது. இந்த சூழலில் டீ குடிக்கிறது ஒரு தனி சுகம்தான். எஃப்.எம்மில் ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"மாஸ்டர், ஒரு டீ" என்று சொல்லிவிட்டு தினத்தந்தி எடுத்து என்ன தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பார்க்கலானேன்.

"சார், டீ"

டீ வாங்குகையில் அவளைக் கவனித்தேன். அவளும் என்னோட அபார்ட்மெண்ட்ஸ் தான். அடிக்கடி ஸ்கூல் யூனிபார்ம்ல பார்த்து இருக்கேன். நல்ல களையான முகம். அந்த டீக்கடையை ஒட்டினாற் போல உள்ள மளிகைக் கடையில் பால் பாக்கெட் வாங்கி கொண்டிருந்தாள். சில்லறைகளை பெற்றுக்கொண்டு, அந்த கடையில் வைத்து இருந்த ஒரு ரூபாய் தொலைபேசியில் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ, கார்த்தி,"

"......"

"நான் ஜெனி பேசுறேன், எப்படி என் சர்ப்ரைஸ் கால்?, நீங்க எதிர்பார்க்கல தானே?"

"....."

"ம்ம், ஓகே, அடிக்கடி கால் பண்றேன், தாங்க்ஸ் செல்நெம்பர் கொடுத்ததுக்கு"

"....."

"ஒகே, கார்த்தி, ஸ்கூல் கிளம்பனும் ஈவ்னிங் பேசுறேன்"

அவள் போனைவைத்த பிறகு அவள் முகத்தில் இனம்புரியாத சந்தோசம், ஆய்தஎழுத்தில் ஈசா தியோல் ஒரு பாடலில் முகபாவம் காட்டுவது போல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

டீக்கு காசு கொடுத்து விட்டு நானும் என் பிளாட்டுக்கு வந்து சேர்ந்தேன். அடுத்த ஒரு வாரத்திற்கு வழக்கமான நேரத்துக்கு எழுந்ததால், டீக்கடைக்கு போகும் வாய்ப்பில்லை.

ஒரு நாள் அலுவலகத்தில் முழு இரவும் அமெரிக்க நேரத்தில் வேலை பார்த்துவிட்டு வருகையில் மீண்டும் அவள் அந்த ஒரு ரூபாய் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் அப்படி என்னத்தான் பேசுகிறாள் என்று அறியும் நோக்கில், அந்த மளிகைக்கடையில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு லைஃப் பாய் பிளஸ் கேட்டேன். அவள் பேச்சை இடது காதில் ஒட்டுக்கேட்டேன்.

"இல்லை கார்த்தி, நாளைக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது, இன்னக்கி வீட்டுல வெளியில விட மாட்டங்க, நாளக்கி மதியம் ஸ்கூல்கிட்ட வாங்க, கொஞ்ச நேரம் பேசலாம்"

'...."

"அப்படி இல்லை,யூ ஆர் ஆல்வேஸ் இம்பார்டண்ட், ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.. "

"..."

"ம்ம்ம் சரி, எக்ஸாம் முடிஞ்சு போகலாம்"

'...."


"சில்லறை இல்லை, கால் முடியப் போகுது டாடா, நாளைக்கு பார்க்கலாம்".

அவள் பேசுவதை நான் கவனித்ததை கவனித்தாளோ என்னவோ, போகும் போது என்னை ஒரு வித பயத்தோடு பார்த்து விட்டு சென்றாள்.

அடுத்த நாளிருந்து தொடர்ச்சியாக, அவள் அந்த கடைக்கு போகும் நேரத்தில் டீ குடிக்க போக ஆரம்பித்தேன். ஒட்டுகேட்ட போது காதில் தெரித்தவை.

"இன்னக்கி பச்சைக்கலர் சுடிதார்"

"...."

"இல்லை, என்கிட்ட ஜீன்ஸ் இல்லை"

"....."

"தாங்க்ஸ், ஆனால் வேண்டாம், அம்மா ஆயிரம் கேள்வி கேட்பாங்க,'

"...."

"மீ டூ, 1000 டைம்ஸ் மோர் தான் யூ"

"...."

"மிஸ்ஸிங் யூ எ லாட்".

அந்த பெண்ணும் வழக்கத்தை விட தைரியமாகவே பேச ஆரம்பித்தாள். ம்ம்ம், ஆணின் நட்போ/காதலோ பெண்ணுக்கு எவ்வளவு தைரியத்தை தருகிறது. இப்போதெல்லாம் அவள் சுற்றும் முற்றும் பார்ப்பதில்லை. நான் அவளின் பேச்சை ஒட்டுக் கேட்கிறேன் என்று உறுதியாக தெரிந்த போதும், கண்களில் பயம் இல்லை. நான் செய்வது தவறில்லை, பிறகு ஏன் பயம் என்று அவள் முகம் சொல்லாமல் சொல்லியது. எனக்கும் ஒரு கட்டத்தில் ஒட்டுக்கேட்பது போர் அடிக்க ஆரம்பித்தது.ஒரே விதமான உரையாடல்கள், இடையில் சில சிணுங்கல்கள். அவ்வளவுதான், பெரிய சுவாரசியம் எதுவும் இல்லை. பேசுபவர்க்ளுக்கு வேண்டுமானால் கடலை சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு அதைவிட போரடிக்கும் விசயம் எதுவுமில்லை.

அடுத்த மாதம் ஆன்சைட் வாய்ப்பு கிடைத்து பின்லாந்துக்கு அனுப்பிவிட்டார்கள். கிட்டத்தட்ட 8 மாதம் அந்த தேசத்தில் இருந்து விட்டு மீண்டும் அலுவலகத்தில், பழைய நிலைக்கு வந்தபோது அவளின் ஞாபகம் வந்தது. மறுநாள் அந்த டீக்கடைக்கு போனேன்.நேரத்தைப் போக்க 3 வது டீ குடித்து முடித்தும் அவள் வரவில்லை. அடுத்த நாளும் போனேன். ம்ஹூம் அவளைக் காணோம். அன்றிரவு ரூம்மேட் டீவியை சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்ததால், மொட்டைமாடிக்கு போன் பேச போனேன். மாடியில் அதேப் பெண், காதில் செல்போனை வைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

"சாரி, கார்த்தி, இவ்வளவுதான் உனக்கு லிமிட், டோண்ட் டிரை டு கண்ட்ரோல் மி"

"......."

'நோ, நோ, உன் பேச்சை கேட்க எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேச டிரை பண்ண வேண்டாம்"

"....."

"நீ சொல்றது பொசசிவ்னெஸ் இல்லை, சந்தேகம்"

"...."

"மிரட்டுறீயா?"

"......"

"இவ்வளவு மட்டமான கேரக்டரா நீ, இனி நீ கால் பண்ணினால் ஈவ்டீஷிங் னு கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் குட் பை" அழுதுக் கொண்டே போனை கட் பண்னினாள்.

தூரத்தில் நான் நிற்பதை அவள் கவனித்தாலும் அழுவதை நிறுத்தவில்லை.

நான் என் வீட்டுக்குப் பேச ஆரம்பித்தேன்.

மறுநாள் லிஃப்டில் கீழே இறங்கி கொண்டிருக்கும்போது. ஒரு ப்ளோரில் அவளும் ஏறினாள்.

என்னைப் பார்த்ததும் அவள் சினேகமாக சிரித்துவிட்டு "ஹாய், ஐ யம் ஜெனி" என்றாள்.

Wednesday, April 18, 2007

நடேசன் பூங்கா

சென்னை நகரத்தின் மையப்பகுதியில், தி.நகரில் அமைந்துள்ளது நடேசன் பூங்கா. 1950 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பூங்காவில் குழந்தைகளுக்கென தனியாக டென்னிஸ் ஆடுதளமும் அமைந்துள்ளது. நான்கு ஏக்கர் பரந்துபட்ட இப்பூங்காவில் சென்னைவாசிகள் காலை நடைப்பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் பயன்படுத்துகின்றனர்.
தாவரவியல் பூங்காவான நடேசன் பூங்காவில் சென்னையில் இதர பகுதிகளில் இல்லாத மரங்கள்,செடி கொடிகள் இருக்கின்றன,


இத்தனை பெருமைகள் நிறைந்த நடேசன் பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வரும் ஏப்ரல் 22, ஞாயிற்றுக்கிழமை அன்று, வருங்கால தூண்களான வலைப்பதிவர்களின் மாநாடு நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக, தமிழால் இணைவோம்.

நேரம் : மாலை 3.30 - 7.30

மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

Tuesday, April 17, 2007

20 நாட்களில் மரணம் - சிறுகதை

"ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. அடுத்து எங்கு பார்த்தாலும் எனது புகைப்படங்கள், ஒவ்வொன்றாய் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றன.
படிக்கட்டுகளில் ஏறி ஓடுகின்றேன், படிக்கட்டுகள் அப்படியே சுவற்றில் மோதி நிற்கின்றன. திருப்பிபார்த்தால் படிக்கட்டுகளையும் காணவில்லை. "
"என்ன கருமம் இது, இந்த மாதிரிக்கனவுகள்தாம் கடைசி இரண்டு மூன்று நாட்களாக வருகிறது. ஒரு வாரமா திகில் படங்களை டிவிடியில் பார்க்கிறதுனாலயா?? இல்லை இந்த கனவுகள் ஏதாவது சொல்ல வருகின்றனவா!!! அல்லது என் ஆழ்மன ஓட்டத்தின் வெளிப்பாடா? பொதுவாக என்னுடைய கனவுகள் விளம்பரப்படங்கள் மாதிரி குட்டி குட்டியா அழகா வந்துட்டு போயிடும். வழக்கமா காலையிலே எழுந்த சில நிமிடங்கள்ல மறந்தும் போயிடும். ஆனால் இப்போ ஒரே வகையான கனவுகள் திரும்ப திரும்ப வருகின்றன, எல்லாக் கனவுகளும் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி சொல்கின்றன. "நான் அழிக்கப்படுகின்றேன்". ம்ம்ம்ம் இந்த மாதிரி கனவுகளுக்கு விளக்கம் யாரவது சொல்வாங்களா? . எண்ணங்கள் கனவையேச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தக் கனவுகளின் படி நான் அழிக்கப்பட போகின்றேனா?... ஒரு வேளை அப்படி நடந்து விட்டால், எனக்கு மரணம் சம்பவித்து விட்டால்.. அதன் பின், இந்த எண்ணமே வித்தியாசமானா சிலீர் உணர்வைக் கொடுத்தது. யார் யார் அழுவார்கள், செத்த பிறகு என்ன நடக்கும், பேய் ஆகிவிடுவேனா, நாயா அடுத்து பிறப்பேனா? சொர்க்கம் போவேனா? நரகமா?

துக்கங்களுக்கு செல்லும்போது, மனிதன் எப்படி இருந்தாலும் கடைசியில் இறந்து தான் போகப் போகின்றான். எதற்கு போட்டி, பொறாமை, பழிவாங்கல் எண்ணங்கள், இவை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்று மனதில் உறுதி மொழி எடுக்க வைக்கும். இதை மயான வைராக்கியம் என்பார்கள். ஆனால் அது இரண்டு நாளைக்குத்தான் தாங்கும், பின் அந்த உறுதிமொழி மறந்தேப் போய்விடும்.

என்ன இது, மரணம் பற்றிய எண்ணம் வந்தால் பயம் அல்லவா வரவேண்டும்,எனக்கு பயம் வரவில்லையே.. தத்துவார்த்தமாக அல்ல யோசிக்க வைக்கிறது. வீட்டிலே இதைப் பற்றி விளையாட்டுக்கு சொன்னால் கூட பூஜை, பரிகாரம், சாமிகுத்தம் என ஏதாவது பேசப் ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பக்தியும் அதிகம், பயமும் அதிகம். எனக்கு இந்த சந்தேகம் உண்டு , பயத்தினால் பக்தியா? பக்தியினால் பயமா.. எதுவாகினும் யாருக்கும் பாதிப்பில்லாத வரை பிரச்சினையில்லை.

வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கி நிதானமாக நடைபோடும் நிகழ்வு. அந்த நிகழ்வின் போது ஏன் மனிதனுக்கு இவ்வளவு ஆர்பாட்டம். ஒரு வேளை இந்த ஆர்ப்பாட்டங்கள் தான் நாம் வாழ்கிறோம்/மரணத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்பதை உணர்த்தும் அடையாளங்களோ என்னவோ?.

60 வருடம் மனிதனின் சராசரி வாழ்க்கையென்றால், அதில் பாதி வருடம் தூக்கத்தில் போய் விடுகிறது. மீதி படிப்புக்காக போராடும் வருடங்கள், வாழ்வை நிலைநிறுத்தும் பொருளாதாரத்துக்காக சில வருடங்கள், வந்தவகளை நிலை நிறுத்திக் கொள்ள மீதி வருடங்கள்.
சிந்தனை ஓட்டம் அதிகமாகியது. மரணம் தான் கடைசி முடிவு என்றால், எதற்கு இவ்வளவு விசயமும்.. போராட்டங்கள், வெற்றிகள் தோல்விகள். ...... சரி, நேரம் ஆயிடுச்சு,ஆபிஸுக்கு கிளம்பலாம்...
ஆபிஸுக்கு கிளம்பும்போதே , வீட்டில் கால் இடறியது. சகுணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் , அநாவசியமாக இரவு வந்த கனவு ஞாபகம் வந்து தொலைத்தது. .

கொஞ்சம் அதிகம் ஜாக்கிரதையாகவே பைக் ஓட்டி வந்து ஆபிஸ் சேர்ந்தேன். மெயில் பாக்ஸை திறந்தால், முதல் மெயிலே "20 more days" தலைப்பில் ஒரு மெயில், திக் என்று இருந்தது, உள்ளே பார்த்தால், உலககோப்பை இறுதிப் போட்டிக்கு அப்படினு ஒரு மொக்கை மெயில்.

அடுத்தது, "Death Caclulator"னு ஒரு எக்ஸல் கோப்பு, பிறந்த தேதிக் கொடுத்தால், சரியாக 20 நாள் கழித்து உனக்கு சாவு எனப் போட்டு இருந்தது.

விளையாட்டுத்தனமாக அனுப்பப்பட்டது என்றாலும், எனக்கு வந்த கனவுகளுடன் இதை தொடர்பு படுத்தி பார்க்கும்பொழுது கொஞ்சம் வேகமாகவே இதயம் துடிக்க ஆரம்பித்தது.

மாலை அலுவலகம் முடிந்ததும், வரும் வழியில் கிளிஜோசியம் பார்த்தேன். ஜோசியக்காரனின் கைசைகையையும் மீறி கிளி சுடுகாட்டுக்காளி படத்தை எடுத்தது.

"சார், இந்த சுடுகாட்டுக்காளி சாவை குறிப்பாக உணர்த்துகிறது, இதற்கு ஒரு பரிகாரம் உண்டு, நீங்க கூட வரவேண்டியதில்லை, 100 ரூபாய் கொடுங்க , நானே முடிச்சுடுறேன்".

அவன் கண்களில் அடுத்த நாலு நாள் சாப்பாட்டிற்கான பரிகாரம் எனது 100 ரூபாய் என சொல்லியது. எடுத்துக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த 20 நாட்களில் சந்திக்க விரும்பியவர்களை எல்லாம் சந்தித்தேன். மன்னிக்க வேண்டியவர்களை எல்லாம் மன்னித்தேன். மன்னிப்பு சொல்ல வேண்டிய இடங்களில் மன்னிப்பைக் கேட்டேன். ஒவ்வொரு நொடியையும் விரும்பி விரும்பி செலவழித்தேன். வழக்கத்துக்கு மாறான இந்த செயல்கள் ஒரு வகையில் மனசுக்கு சந்தோசத்தை தான் கொடுத்தது.வழக்கமான நான் செய்யும் விதிமுறை மீறல்கள் இல்லை. விதண்டாவாதம் இல்லை.
ம்ம்ம்.. மற்றவர்களுக்குப் பிடித்தமானவன் ஆனேன். என் பார்வையில் மற்றவர்களும் மற்றவர்களின் பார்வையில் நானும் மாறினோம். எல்லோரும் விரும்பும் மனிதனாய் இருப்பதில்தான் எத்தனை சந்தோசம்.

மனிதர்களுக்கு பிறக்கும்போதே இறக்கும் நாளும் தெரிந்து விட்டால், பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ம்ம் அந்த 20 வது நாள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் , அருகில் சின்னப் பையனுடன், எனது வண்டியைக் கைக்காட்டி நிறுத்தினார். ஊருக்குப் போக காசு இல்லை என்றும், 50 ரூபாய் இருந்தால் கொடுக்கவும் என்று கேட்டார். வழக்கமாக இந்த மாதிரி யாரவதுகேட்டால் கொடுப்பதில்லை, ஆனால் "நாட்கள் எண்ணப்படுகிறது" என்ற சூழலில் இருப்பதால் 50 ரூபாய் கொடுக்கலாம் என்று தோனியது.

50 கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை ஒரு லாரி வேகமாக கடந்து சென்றது. 30 வினாடிகள் கழித்து டாமார் என்று ஒரு சத்தம். 50 ரூபாய் வாங்கி கொண்டவர் நகர்ந்ததும், வண்டியை முன்னோகி செலுத்தினேன், மெயின் ரோட்டிலிருந்து என் வீட்டுக்கு வளையும் அந்த வளைவில் அந்த லாரி கவிழ்ந்து கிடந்தது. மானசீகமாக அந்த 50 ரூபாய் ஆளுக்கு நன்றி சொன்னேன்.

அன்று இரவு மீண்டும் அதே கனவு, "ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. ........."
ஒவ்வொன்றும் உருவகங்கள், என் மன மாற்றங்களுக்கு என்று இப்போது கனவின் அர்த்தம் விளங்கியது,

முழுத் தெளிவுடன் அன்று காலை எழுந்து, அலுவலகம் கிளம்பினேன். அலுவலகம் செல்லும் வழியில் அந்த கிளி ஜோசியக்காரன் என்னை மடக்கி பரிகாரம் செய்துவிட்டதாகவும் இனி கவலல வேண்டாம் என்று வடபழனியில் வாங்கிய திருநீறு பொட்டலத்தைக் கொடுத்தான். சிரித்துக் கொண்டே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டேன்.

Saturday, April 07, 2007

இன்னொரு அரைநிமிடக்கதை

இரண்டு நாட்களாக என் மொபைலுக்கு பின்னிரவுகளில் குறிப்பிட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. டேண்ட்லைன் நெம்பர்தான், தூக்கத்தில் எடுக்கவே இல்லை. மீண்டும் நேற்று வந்தது. ம்ஹூம் எடுக்கவில்லை. காலையில் திரும்ப அந்த நெம்பருக்கு அழைத்துப் பார்த்தேன், நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் என்றது. என்னடா இது, அதிகப்படியான கியூரியாசிட்டியுடன் பி.எஸ்.என்.எல் சைட்டில் அந்த நெம்பரை அடித்துப் பார்த்தால் நெம்பர் இல்லை என்று சொன்னது. டெலிபோன்ஸில் வேலை பார்க்கும் பிரெண்டுக்கு அடித்து விவரத்தை சொன்னேன். அவரும் செக் பண்ணி பார்த்துவிட்டு அப்படி ஒரு நெம்பர் இன்னும் கொடுக்கவில்லை என சொன்னார். மனது திக்திக் என அடித்தது.
பின்னர் வேலைப்பளுவில் மறந்தே போய்விட்டேன். இரவு அந்த நினைவு இல்லாமல் தூங்கிகொண்டிருந்த போது மீண்டும் அதே அழைப்பு, மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பச்சைக்கலர் பொத்தானை அமுக்கி
"ஹலோ" என்றேன். !!!

"????$$$@@@@@@"

அரைநிமிடக் கதை

சொன்ன ரேட்டுக்கு ஒரு ஆட்டோக்காரர் வந்தார், நைட்டுக்காக டபுள் சார்ஜ் பண்ணவில்லை. அவரது முகத்தில் சாந்தம் தெரிந்தது, ஏற்கனவே மணி 11 ஆயிருந்தது. என் வீட்டுக்கு செல்லும் வழியில் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததை வழக்கமான ஆட்டோக்காரர்கள் போல் குறைசொல்லவில்லை. வீட்டின் முன் இறக்கிவிட்டு விட்டு திரும்பிய ஆட்டோவின் பின் பக்கம் பார்த்தேன், அவருடைய போட்டோ போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.

20 நாட்களில் மரணம் - சிறுகதை

"ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. அடுத்து எங்கு பார்த்தாலும் எனது புகைப்படங்கள், ஒவ்வொன்றாய் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றன.
படிக்கட்டுகளில் ஏறி ஓடுகின்றேன், படிக்கட்டுகள் அப்படியே சுவற்றில் மோதி நிற்கின்றன. திருப்பிபார்த்தால் படிக்கட்டுகளையும் காணவில்லை. "
"என்ன கருமம் இது, இந்த மாதிரிக்கனவுகள்தாம் கடைசி இரண்டு மூன்று நாட்களாக வருகிறது. ஒரு வாரமா திகில் படங்களை டிவிடியில் பார்க்கிறதுனாலயா?? இல்லை இந்த கனவுகள் ஏதாவது சொல்ல வருகின்றனவா!!! அல்லது என் ஆழ்மன ஓட்டத்தின் வெளிப்பாடா? பொதுவாக என்னுடைய கனவுகள் விளம்பரப்படங்கள் மாதிரி குட்டி குட்டியா அழகா வந்துட்டு போயிடும். வழக்கமா காலையிலே எழுந்த சில நிமிடங்கள்ல மறந்தும் போயிடும். ஆனால் இப்போ ஒரே வகையான கனவுகள் திரும்ப திரும்ப வருகின்றன, எல்லாக் கனவுகளும் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி சொல்கின்றன. "நான் அழிக்கப்படுகின்றேன்". ம்ம்ம்ம் இந்த மாதிரி கனவுகளுக்கு விளக்கம் யாரவது சொல்வாங்களா? . எண்ணங்கள் கனவையேச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தக் கனவுகளின் படி நான் அழிக்கப்பட போகின்றேனா?... ஒரு வேளை அப்படி நடந்து விட்டால், எனக்கு மரணம் சம்பவித்து விட்டால்.. அதன் பின், இந்த எண்ணமே வித்தியாசமானா சிலீர் உணர்வைக் கொடுத்தது. யார் யார் அழுவார்கள், செத்த பிறகு என்ன நடக்கும், பேய் ஆகிவிடுவேனா, நாயா அடுத்து பிறப்பேனா? சொர்க்கம் போவேனா? நரகமா?

துக்கங்களுக்கு செல்லும்போது, மனிதன் எப்படி இருந்தாலும் கடைசியில் இறந்து தான் போகப் போகின்றான். எதற்கு போட்டி, பொறாமை, பழிவாங்கல் எண்ணங்கள், இவை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்று மனதில் உறுதி மொழி எடுக்க வைக்கும். இதை மயான வைராக்கியம் என்பார்கள். ஆனால் அது இரண்டு நாளைக்குத்தான் தாங்கும், பின் அந்த உறுதிமொழி மறந்தேப் போய்விடும்.

என்ன இது, மரணம் பற்றிய எண்ணம் வந்தால் பயம் அல்லவா வரவேண்டும்,எனக்கு பயம் வரவில்லையே.. தத்துவார்த்தமாக அல்ல யோசிக்க வைக்கிறது. வீட்டிலே இதைப் பற்றி விளையாட்டுக்கு சொன்னால் கூட பூஜை, பரிகாரம், சாமிகுத்தம் என ஏதாவது பேசப் ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பக்தியும் அதிகம், பயமும் அதிகம். எனக்கு இந்த சந்தேகம் உண்டு , பயத்தினால் பக்தியா? பக்தியினால் பயமா.. எதுவாகினும் யாருக்கும் பாதிப்பில்லாத வரை பிரச்சினையில்லை.

வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கி நிதானமாக நடைபோடும் நிகழ்வு. அந்த நிகழ்வின் போது ஏன் மனிதனுக்கு இவ்வளவு ஆர்பாட்டம். ஒரு வேளை இந்த ஆர்ப்பாட்டங்கள் தான் நாம் வாழ்கிறோம்/மரணத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்பதை உணர்த்தும் அடையாளங்களோ என்னவோ?.

60 வருடம் மனிதனின் சராசரி வாழ்க்கையென்றால், அதில் பாதி வருடம் தூக்கத்தில் போய் விடுகிறது. மீதி படிப்புக்காக போராடும் வருடங்கள், வாழ்வை நிலைநிறுத்தும் பொருளாதாரத்துக்காக சில வருடங்கள், வந்தவகளை நிலை நிறுத்திக் கொள்ள மீதி வருடங்கள்.
சிந்தனை ஓட்டம் அதிகமாகியது. மரணம் தான் கடைசி முடிவு என்றால், எதற்கு இவ்வளவு விசயமும்.. போராட்டங்கள், வெற்றிகள் தோல்விகள். ...... சரி, நேரம் ஆயிடுச்சு,ஆபிஸுக்கு கிளம்பலாம்...
ஆபிஸுக்கு கிளம்பும்போதே , வீட்டில் கால் இடறியது. சகுணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் , அநாவசியமாக இரவு வந்த கனவு ஞாபகம் வந்து தொலைத்தது. .

கொஞ்சம் அதிகம் ஜாக்கிரதையாகவே பைக் ஓட்டி வந்து ஆபிஸ் சேர்ந்தேன். மெயில் பாக்ஸை திறந்தால், முதல் மெயிலே "20 more days" தலைப்பில் ஒரு மெயில், திக் என்று இருந்தது, உள்ளே பார்த்தால், உலககோப்பை இறுதிப் போட்டிக்கு அப்படினு ஒரு மொக்கை மெயில்.

அடுத்தது, "Death Caclulator"னு ஒரு எக்ஸல் கோப்பு, பிறந்த தேதிக் கொடுத்தால், சரியாக 20 நாள் கழித்து உனக்கு சாவு எனப் போட்டு இருந்தது.

விளையாட்டுத்தனமாக அனுப்பப்பட்டது என்றாலும், எனக்கு வந்த கனவுகளுடன் இதை தொடர்பு படுத்தி பார்க்கும்பொழுது கொஞ்சம் வேகமாகவே இதயம் துடிக்க ஆரம்பித்தது.

மாலை அலுவலகம் முடிந்ததும், வரும் வழியில் கிளிஜோசியம் பார்த்தேன். ஜோசியக்காரனின் கைசைகையையும் மீறி கிளி சுடுகாட்டுக்காளி படத்தை எடுத்தது.

"சார், இந்த சுடுகாட்டுக்காளி சாவை குறிப்பாக உணர்த்துகிறது, இதற்கு ஒரு பரிகாரம் உண்டு, நீங்க கூட வரவேண்டியதில்லை, 100 ரூபாய் கொடுங்க , நானே முடிச்சுடுறேன்".

அவன் கண்களில் அடுத்த நாலு நாள் சாப்பாட்டிற்கான பரிகாரம் எனது 100 ரூபாய் என சொல்லியது. எடுத்துக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த 20 நாட்களில் சந்திக்க விரும்பியவர்களை எல்லாம் சந்தித்தேன். மன்னிக்க வேண்டியவர்களை எல்லாம் மன்னித்தேன். மன்னிப்பு சொல்ல வேண்டிய இடங்களில் மன்னிப்பைக் கேட்டேன். ஒவ்வொரு நொடியையும் விரும்பி விரும்பி செலவழித்தேன். வழக்கத்துக்கு மாறான இந்த செயல்கள் ஒரு வகையில் மனசுக்கு சந்தோசத்தை தான் கொடுத்தது.வழக்கமான நான் செய்யும் விதிமுறை மீறல்கள் இல்லை. விதண்டாவாதம் இல்லை.
ம்ம்ம்.. மற்றவர்களுக்குப் பிடித்தமானவன் ஆனேன். என் பார்வையில் மற்றவர்களும் மற்றவர்களின் பார்வையில் நானும் மாறினோம். எல்லோரும் விரும்பும் மனிதனாய் இருப்பதில்தான் எத்தனை சந்தோசம்.

மனிதர்களுக்கு பிறக்கும்போதே இறக்கும் நாளும் தெரிந்து விட்டால், பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ம்ம் அந்த 20 வது நாள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் , அருகில் சின்னப் பையனுடன், எனது வண்டியைக் கைக்காட்டி நிறுத்தினார். ஊருக்குப் போக காசு இல்லை என்றும், 50 ரூபாய் இருந்தால் கொடுக்கவும் என்று கேட்டார். வழக்கமாக இந்த மாதிரி யாரவதுகேட்டால் கொடுப்பதில்லை, ஆனால் "நாட்கள் எண்ணப்படுகிறது" என்ற சூழலில் இருப்பதால் 50 ரூபாய் கொடுக்கலாம் என்று தோனியது.

50 கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை ஒரு லாரி வேகமாக கடந்து சென்றது. 30 வினாடிகள் கழித்து டாமார் என்று ஒரு சத்தம். 50 ரூபாய் வாங்கி கொண்டவர் நகர்ந்ததும், வண்டியை முன்னோகி செலுத்தினேன், மெயின் ரோட்டிலிருந்து என் வீட்டுக்கு வளையும் அந்த வளைவில் அந்த லாரி கவிழ்ந்து கிடந்தது. மானசீகமாக அந்த 50 ரூபாய் ஆளுக்கு நன்றி சொன்னேன்.

அன்று இரவு மீண்டும் அதே கனவு, "ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. ........."
ஒவ்வொன்றும் உருவகங்கள், என் மன மாற்றங்களுக்கு என்று இப்போது கனவின் அர்த்தம் விளங்கியது,

முழுத் தெளிவுடன் அன்று காலை எழுந்து, அலுவலகம் கிளம்பினேன். அலுவலகம் செல்லும் வழியில் அந்த கிளி ஜோசியக்காரன் என்னை மடக்கி பரிகாரம் செய்துவிட்டதாகவும் இனி கவலல வேண்டாம் என்று வடபழனியில் வாங்கிய திருநீறு பொட்டலத்தைக் கொடுத்தான். சிரித்துக் கொண்டே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டேன்.

மூன்று வரியில் ஒரு கதை

மாலையிலிருந்து உட்கார்ந்து இருந்த நாற்காலியிலிருந்து எழுந்தேன்...
எழுந்தபின் நாற்காலி அங்கு இல்லை...
மணி 12 காட்டியது...

Thursday, April 05, 2007

ஆர்கட்ல தேடு - சிறுகதை

"டேய் கார்த்தி, நீ ஆர்கட்ல இருக்கியா" காலங்காத்தால வந்தவுடன் ஜெனி கேட்டாள்.
ஜெனிக்கு ஏதாவது புதுசா கண்டுபிடிச்சா உடனே யாருக்காவது சொல்லிடனும், இல்லை என்றால் அவளுக்கு தலை உடனே வெடித்து விடும். அடுத்த சீட்ல இருக்கிற கார்த்திக்கு தான் பிரச்சினை. தொண தொணவென்று ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாள் இல்லை, பாடிட்டு இருப்பாள்.

"கேள்விப்பட்டு இருக்கேன், ஜாயின் பண்ணல?" என்றான் கார்த்தி.

"நேத்து என்னோட ஸ்கூல் பிரெண்ட்ஸ் எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சேன், எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா, ஒவ்வொருத்தரையா லிஸ்ட்ல சேர்த்து டெஸ்டிமொனி எழுதிட்டு இருக்கேன். . என் பின்னாடி சுத்துன ஸ்கூல் சீனியர்ஸையும் கண்டுபிடிச்சுட்டேன்" சொல்லிட்டு ஹா ஹா என சிரித்தாள் ஜெனி.

"ஆமாம், நீ ஆபிஸ்ல போடுற கடலைப் பத்தாத??"

"போடா, மங்குனி, " என்று சொல்லி முறைத்துவிட்டு தன் ஆர்கட் பக்கத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.

கார்த்தி, மெயில் பக்கம் திறந்து வைத்து இருந்தாலே, பி-எம் வர்றப்ப மூடிடுவான். இதுல ஆர்கட் எப்படி. எல்லாவற்றுக்கும் மேல புது நட்பை உருவாக்குவதிலோ , இல்லை பழைய நட்பை புதுப்பித்துக் கொள்ளுதலிலோ அவனுக்கு ஆர்வம் இல்லை.

ஜெனி ஆர்கட்டை பத்திப் பேசிட்டு போனப்பிறகு, கார்த்திக்கு பள்ளிக்கூட ஞாபகம் வர ஆரம்பித்தது. குறிப்பாக அந்த பத்தாம் வகுப்பு.

தண்டக்காரப் பசங்களா எனத்திட்டும் அறிவியல் வாத்தியார். "டிபன் பாக்ஸ்" சத்தம் கேட்டால் மட்டும் அடிக்கும் தமிழ் வாத்தியார், ஹிடலரை நல்லவன் என்று சொன்ன சமூக அறிவியல் வாத்தியார். "ரெபிடெக்ஸ்" ஆங்கில வாத்தியார். ம்ம்ம்ம்ம்ம் எல்லாரையும் விட கணக்கு வாத்தியாரை தான் கார்த்திகுப்பிடிக்கும். கணக்கு நல்லா சொல்லிக் கொடுத்ததுக்காக இல்லை. அந்த கணக்குனாலதான் கார்த்திக்கு ரம்யாவோட அறிமுகம் கிடச்சது, ரம்யாவோட குடும்பம், கார்த்தி குடியிருந்த வீட்டு அடுத்த போர்ஷனுக்கு புதுசா குடிவந்தவங்க. ரம்யாவும் அப்போ தான். ஒரு நாள் ரம்யா அம்மா வந்து ரம்யாவுக்கு மேத்ஸ் சரியா படிக்க வரல, கார்த்தியினால் சொல்லித்தர முடியுமா என கார்த்தி அம்மா கிட்ட கேட்ட போது கார்த்தியோட அம்மா அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே இல்லை. அதற்குப்பிறகு கார்த்தி கணக்கில தனி கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

காலாண்டுல அவள் 75 மார்க் எடுத்தப்ப அவங்க வீட்டுல ஸ்வீட் செய்து கார்த்தி வீட்டுல கொடுத்தாங்க. கொஞ்ச நாள்ல கணக்கு மட்டுமின்றி மற்ற பாடங்களையும் இருவரும் ஒன்றாகப் படிக்க ஆரம்பித்த போது ரம்யாவோட ரேங்க் கும் முன்னேற ஆரம்பித்தது. கார்த்தியோட ஸ்கூல் பசங்க கார்த்தியையும் ரம்யாவையும் சேர்த்து வைத்து கிண்டல் பண்ணபோது கார்த்தி கோபப்பட்டாலும் உள்ளூர ரசிக்க ஆரம்பித்தான். அவளோட அருகாமை, அவனுக்கு ஒரு வகையான சந்தோசம் தருகிறது என மட்டும் புரிந்தது .

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ரம்யாவே எதிர்பாரா வண்ணம் 445/500 எடுத்தாள். கார்த்திக்கு 470 வந்துச்சு. ஸ்டேட் ரேங்க் எதுவும் எடுக்கலைன்னு கார்த்தி வீட்டுல கொஞ்சம் வருத்தம் தான்.

ரம்யா வோட நல்ல மார்க்குக்குகாக கார்த்திக்கு ரம்யா வீட்டிலே டிரஸ் எடுத்துக் கொடுத்தாங்க.
அந்த வருசம் கார்த்தியோட அப்பாக்கு மதுரைக்கு மாற்றல் ஆனது.
பத்து பக்கம் ஆட்டோகிராப் ரம்யா எழுதிக் கொடுத்தாள்.கையை அழுத்தம பிடிச்சுக்கிட்டு தாங்கஸ் சொன்னாள்.

அப்படியே நாள் ஓடிப்போச்சு, இஞ்சினியரிங்ல கார்த்தியோட 10 வது கிளாஸ்மேட்டைப் பார்த்தப்ப, ரம்யா +2 ல ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்ததாகவும், இப்போ அங்களம்மன் ல இஞ்சினியரிங் பண்ணுவதாகவும் கேள்விப்பட்டான். அதன் பின் அவ்வப்போது பத்தாம் வகுப்பு நினைப்பு வரும்போதெல்லாம் ரம்யாவும் நினைவின் ஊடே வருவாள்

நிகழ்காலத்துக்கு வந்தான் கார்த்திக்.

"ஒரு வேளை ஆர்கட்ல ரம்யாவைத் தேடினா கிடைப்பாளா? ஞாபகம் இருக்குமா? அந்த பழைய ரம்யாவா இருப்பாளா? கால ஓட்டம் அவள்கிட்ட மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமா..
அந்த மாற்றங்கள் இந்த பசுமையான பத்தாம் வகுப்பு நினைவுகளை இடமாற்றம் செய்துவிடுமா?
வேண்டாம், மனதில் உறைய வைத்த பசுமையான தருணங்கள் மட்டும் போதும், ஆர்கட்ல யோ வேறு எந்த வடிவிலோ அவளைத் தேட வேண்டாம்" என கார்த்தி முடிவு செய்தான்.

ஆனால் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் ரம்யா கார்த்தியை ஆர்கட்டில் தேடிக் கொண்டிருந்தாள்.

Wednesday, April 04, 2007

மீண்டும் ஒரு முறை - சிறுகதை

"காதலின் வெற்றி தோல்விகள் திருமணத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை. மதிப்புக்கூட்டப்பட்ட, முன்னுரிமை அதிகம் கொடுக்கப்படும் ஒரு வகையான அன்புதான் காதல். காதலியோ/காதலனோ விட்டுப் போய்விட்டால் முன்னுரிமையோ அல்லது கொடுக்கப்பட்ட மேலதிக அன்புதான் போகுமோ தவிர, அடிப்படை அன்பு நிச்சயம் அடிமனதில் இருந்து கொண்டுதான் இருக்கும். வெற்றி/தோல்வி சமயங்களில் அவன்/அவள் கூட இருந்திருந்தால் அதன் அனுபவம் வித்தியாசப்பட்டு இருக்குமோ, என்று நினைக்காதவர்கள் இல்லை. முகச்சாயல், குரல்,திரைப்பட பாடலகள், சம்பவங்கள்,இடங்கள் வார்த்தைகள், வாசிப்புகள் இப்படி ஏதாவது ஒன்றினால் நம் பழைய காதல் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியாது."

நான் கல்லூரியில் விழா மலருக்காக முன்பு ஒரு முறை எழுதி எழுதி இருந்த கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். ஹும், இவையெல்லாம் சுவை கூட்டப்பட்ட வார்த்தைகள். எனக்கு இப்பொழுதெல்லாம் நம்பிக்கையில்லை.

என்னைப் பொறுத்தவரை குடும்ப உறவுமுறைகளைத்தவிர, பிறரிடம் வரும் அன்பு எதேனும் ஒரு வகையில் நிபந்தனைக்கு உட்பட்டது. சம்பந்தபட்டவரால் தனக்கு ஏற்படும் அசௌகரியங்கள் எல்லையைத் தாண்டுகிறது என்று நினைத்தாலே அங்கு அன்புக்கு இறங்குமுகம் ஆரம்பிக்கிறது என்று புரிந்துக் கொள்ளலாம். அது ஊர்ஜிதமாகும்போது அந்த உறவுக்கு முடிவு கட்டப்படுகிறது.
ஒரு காதலை கல்லூரியில் இழந்த பின் தான் இதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பெரும்பாலான இழப்புகள் உண்மையில் நாம் நினைக்கும் அளவுக்கு இழப்பு இல்லை. அந்த இழப்பை ஈடுகட்ட வேறு விசயங்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ம்ம்ம், விசயத்துக்கு வருவோம், இன்றைக்கு ஜெனியிடம் இரண்டாவது முறையாக என் காதலைச் சொல்லப் போகிறேன். இதை காதல் என்றுகூட சொல்ல முடியாது. திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுதல். ஏற்கனவே ஒரு முறை சொன்னபோது தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் வரனை மட்டும் வாழ்கைத் துணையாக தேர்வு செய்ய உள்ளதாகவும், மற்றவைகளைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்.

இந்த ஒரு வருட நட்பை வாழ்க்கைத்துணை நட்பாக்கத்தான் கேட்டேன், பராவாயில்லை நட்பு மட்டும் தொடரலாம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். ம்ம்ம் ஆறு மாதங்கள் ஓடி விட்டன. விருப்பத்தை சொல்லும் முன் இருந்த நட்பைவிட இந்த ஆறு மாதக் காலங்களில் நட்பு வலுப்பெற்றுள்ளது,. முன்பை விட அதிகம் பேசிக் கொள்கிறோம். தயக்கங்கள் இல்லை , பேசுவதிலும் பேசப்படும் விசயங்களிலும்.

ஜெனி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்து விட்டு வருவதைப் பார்த்து படித்துக் கொண்டிருந்த வார இதழை மூடி வைத்தேன்.

"சாரி, கார்த்திக் டிராபிக்லே லேட்டாயிடுச்சு"

"இட்ஸ் ஓகே ஜெனி"

"என்ன விசயம் கார்த்தி, திடீர்னு வர்றச் சொன்னீங்க"

நீண்ட நாட்களாகப் பழகி இருந்தாலும் , "ங்க" மரியாதை விகுதி எப்போதும் நேரில் பேசும்போது எங்களிடையே இருக்கும்.

"ஜெனி, நடந்துகிட்டே பேசுவோமா, "

கடற்காற்று மிதமாக வீசியது, நான் சொல்லப்போகும் விசயத்துக்கு அருமையான சூழலைக் கொடுத்ததாக உணர்ந்தேன். இந்த கண நேரம் அப்படியே நின்று விடக்கூடாதா எனத்தோன்றியது. ஜெனி,நான்,கடல், காற்று இப்படியே இருந்துவிடலாம் என இருந்தது.

"கார்த்தி, மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாமா, "

"ம்ம்ம்" நிகழ்காலத்துக்கு வந்தேன்.

இருவரும் ஆளுக்கு ஒரு தட்டு வாங்கி கொண்டு அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தோம்.

"ஜெனி, நீங்க சில விசயங்களை மறுபரீசிலனை பண்ணுவீங்களா?"

"நீங்க எதை பத்தி பேசுறீங்க"

"ஐ மீன், இப்போ ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூ போறோம், வேலை கிடைக்கல, 6 மாசத்துக்கு பிறகு மறுபடியும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண அனுமதிப்பார்கள், அது மாதிரி ஆறு மாசத்துக்கு முன்ன உங்களை கல்யாணம் பண்ணிக்க என் விருப்பத்தை சொன்னேன், மறுத்து விட்டீர்கள். ம்ம்ம்ம் இந்த ஆறு மாசத்திலே ஏதேனும் மறுபரிசீலனைக்கான வாய்ப்பு உள்ளதா?? "

மெலிதான புன்னகையுடன் "தங்களின் மறுபரிசீலனை கோரிக்கையும் நிரகாரிக்கப்பட்டது" கோபம் இன்றி ஜெனியிடம் பதில் வந்தது.


இந்த பதிலை எதிர்ப்பார்த்து இருந்தாலும், இந்த முறை ஒத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை துளியூண்டு இருந்தது,

"ஏன்?"

"அதே பதில் தான் கார்த்தி, என் அப்பா அம்மா பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்"

"உங்க வீட்டுல, கலப்புத்திருமணம், காதல் இதெல்லாம் பிடிக்காதா?'

"உண்மையில், நான் இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மெலிதாகக் கேட்டால் கூடப் போதும், என் அப்பா, அம்மா ஒத்துக் கொள்வார்கள். இந்த நிமிடம் வரை என் விருப்பத்திற்கு மாற்றாக எதையும் அவர்கள் என்னிடம் சொன்னதில்லை. நான் படித்த படிப்பிலிருந்து, இப்பொழுது மெட்ராஸ் வந்து வேலைபார்க்கும் வரை. நான் எடுக்கும் முடிவுகள் சரியானவை என்று நம்புகின்றனர். ஆனால் இந்த கல்யாண விசயத்தில் அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட முடிவு செய்துள்ளேன். தாங்கள் தேடிய வரனை முடிக்கும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் நிறைவு மட்டுமே நான் என் அப்பா அம்மாவிற்கு செய்யும் சரியான கைமாறு."

சிறிது நேரம் கனத்த மவுனம் எங்களிடையே நிலவியது. இந்தப் பதில் ஜெனியின் மேல் வைத்திருந்த பிரியத்தை மேலும் அதிகப்படுத்தியது.

"நான் உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனோ!! " என்றேன்.

"நிச்சயம் இல்லை, உங்கள் விருப்பத்தை தானே சொன்னீர்கள். உங்களை அங்கீகரிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன், மற்றபடி உங்கள் மேல் கோபமோ வருத்தமோ இல்லை. நீங்க கடைசியா எழுதின கதைக்கு ரிப்லை மெயில் அனுப்பிச்சு இருந்தேன், வாசிச்சிங்களா/"

"ம்ம்ம். கிடைச்சது,

பேச்சு அரசியல், சினிமா, கிரிக்கெட் நாவல்கள் எனத் தொடர்ந்தது. இதுதான் ஜெனியிடம் பிடித்தது. நெருங்கிய நண்பர்கள் தங்களிடத்தில் காதலோ/திருமண விருப்பத்தையோ தெரிவித்து விட்டால், அதனை ஏற்றுக் கொள்ளாத பெரும்பாலான பெண்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஜெனியிடம் நான் இரண்டாவது முறை விருப்பம் சொன்ன பிறகும் கூட சகஜமாக இருந்தது அவள் மேல் வைத்திருந்த மரியாதையை மேலும் கூட்டியது.

அதை ஜெனியிடமே கேட்ட போது,

"குழம்பிய தண்ணீர்தான் தெளிவடையும், தெளிந்த நீர் எப்போதும் தெளிவுதான், எனக்கு குழப்பமில்லை"

ஆனால் தெளிந்த நீரை உறைய வைக்க முடியும் மனதில் நினைத்துக் கொண்டு, "கிளம்பாலாம " என்றேன்.

அவள் ஸ்கூட்டியை உதைத்து கிளம்புவதற்கு முன்னால், "ம்ம்ம், அடுத்த புரொபெசல் இன்னும் ஆறு மாசம் கழித்து" என்றேன்

"எனக்கு கல்யாணம் ஆயிட்டால் கூடவா?"

"இல்லை , கால்யாணம் ஆகாதவரை, விருப்பப்படுவது தப்பில்லையே!!" என்றேன்

இருவரும் சிரித்தோம். சிரிப்பில் நம்பிக்கை ஏற்பட்டது, "மூனாம் சுற்றில் முழுமையாகுமடா" என கமலஹாசனின் பாட்டு எங்கேயோ கேட்பது போல் தோனியது.

கெர்ரி பேக்கர் "போட்டி" உலக கிரிக்கெட் தொடரின் ஸ்கோர்கார்டுகள்

ஜீ குழுமம் இந்திய கிரிக்கெட் லீக் நடத்த முயற்சிக்கும் இந்த சமயத்தில் இந்த திட்டத்தின் முன்னோடியான
கெர்ரி பேக்கர் தொடரின் ஆட்டவிவரங்களைத் தேடிக்கொண்டிருக்கும்பொழுது கூகிளின் உதவியால் கிடைத்த விபரங்கள்

உலகத்தொடர் சூப்பர் டெஸ்ட் 1977-78

உலகத்தொடர் ஒரு நாள்போட்டிகள் 77-78

உலகத்தொடர் ஒரு நாள்போட்டிகள் 78-79

உலகத்தொடர் சூப்பர் டெஸ்ட் 1978-79

போனை எடு - சிறுகதை

"சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம" கைத்தொலைபேசியில் மணி அடித்தது, வந்த அழைப்பின் எண்ணைப் பார்த்தேன். நான் பதியாத எண், மூன்றாவது முறையாக வருகிறது. பொதுவாக நான் பதியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில்லை. பெரும்பாலும், கடன் அட்டை அழைப்புகளும், கடன் கொடுக்கும் வங்கி ஆட்களும் தான் அழைக்கிறார்கள்.

"கார்த்தி, ஏன் போனைக் கட் பண்ணினே. எடுத்துப் பேச வேண்டியதுதானே, ஏதேனும் பெர்சனல் காலா?" என்றார் மோகன்.

"இல்லை மோகன், கிரெடிட் கார்ட் கால் ஆ இருக்கும். இந்த நெம்பர் அவனுங்க நெம்பர் மாதிரிதான் இருக்கு"

"எந்த காலா இருந்தாலும் அட்டெண்ட் பண்ணி பேசிடு கார்த்தி, டென் டைம்ஸ் எரிச்சலா இருந்தாலும் ஒரு தடவை உண்மையிலேயே சில சமயங்களில் யாருக்கேனும் உதவி கூட தேவைப்படலாம், மொபைலோட நோக்கமே அதுதானே, எல்லா சமயங்களில் நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு தொடர்பு எல்லையில் இருக்க வேண்டும் என்பது தானே"

அதற்குள் மோகனுக்கு "மிஸ்ட் கால்" வந்தது.

மோகன் அந்த எண்ணுக்கு திரும்ப அழைத்தார்.

"ஹலோ , இந்த நெம்பரிலேந்து மிஸ்ட் கால் வந்துச்சு, என் பேரு மோகன், யார் கால் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

".."

"ஓ, அப்படியா, இட்ஸ் ஓகே, பை"

"என்ன மோகன், லோன் பசங்களா?" என்றேன்.

"இல்லை, தவறுதலா ஒருத்தர் நெம்பர் மாத்தி போட்டுட்டாராம்"

அதைக்கேட்டவுடன் நக்கலாகச் சிரித்தேன்.

நாங்கள் குடித்த பெப்ஸிக்கு மோகன் காசு கொடுக்க நாங்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பினோம்.

மறந்தே போச்சு, ஜெனி வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருந்தாள்.

வழக்கமாக, அவள் சீக்கிரம் வந்தாளும், அவளிடமும் ஒரு சாவி இருப்பதால், அவளே கதவைத்திறந்து உள்ளே உட்கார்ந்து இருப்பாள்.

ஆனால் வீடு பூட்டியிருந்தது, எதிர்த்த வீட்டு தாத்தா என்னைப் பார்த்ததும், என்னிடம் வந்து

"உங்களைத் தேடி உங்க பிரெண்டு ஜெனி வந்தாங்க, அவங்க மொபைல்ல சார்ஜ் இல்லைன்னு என் வீட்டு டெலிபோன்லேந்து போன் பண்ணாங்க, அவங்க உங்ககிட்ட சொல்ல சொல்லிட்டு சீக்கிரம் போகனும்னு கிளம்பிட்டாங்க"

"ஓ அது உங்க வீட்டு நெம்பரா சார், சாரி, நெம்பர் பார்த்தேன். தெரியாத நெம்பர்னு எடுக்கல, சாரி"

"சார், எனக்கு சொல்லவேண்டாம் தம்பி, அவங்க கிட்ட சொல்லுங்க, கோபமா போனாங்க" என்றார் தாத்தா.

நான் இந்த வீட்டிற்கு வந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் காலையிலே 9 மணிக்குப் புறப்பட்டால் வீடு திரும்ப எப்படியும் இரவு 10 ஆகிவிடும். இந்த தாத்தா ரொம்ப நாளா இங்க இருக்கிறவர்னு மட்டும் தெரியும். அவருடைய பையன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறானாம். பிரச்சினையில்லாதவர்னு என் வீட்டு ஓனர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். விடுமுறை நாட்களில் பார்த்தால் மெலிதாக புன்னகை செய்வார். ஜெனி வருவது போவதும் அவருக்குத் தெரியும்.

"தம்பி இப்பயாவது என்னோட நெம்பரை ஸ்டோர் பண்ணிகோங்க, ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் கூப்பிடலாமா"

"ஸ்யூர் சார்" என்று சொல்லி நெம்பரை அவர்முன்னமே கைத்தொலைபேசியில் பதிந்தேன்.

வீட்டைத் திறந்து ஜெனியை கைத்தொலைபேசியில் அழைத்தேன்.

"கார்த்தி உனக்கு அறிவே இல்லைடா, இது மாதிரி பண்ணாதே, போனை எடுத்துப் பேசுறதுல உனக்கு அவ்வளவு என்ன சிரமம், கொஞ்ச நேரம் தவிச்சுப் போயிட்டேன். " என்றாள்.

"சாரிடா, அம்முக்குட்டி, " எனது "Sweet nothings Talk" ஆரம்பமானது.
இடையில் வீட்டிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது, வீட்டிற்குப் பேசி முடித்தவுடன் இரவு ஒரு மணி வரை ஜெனியுடன் தொலைபேச்சு தொடர்ந்தது.

வழக்கம்போல் தூங்கும் முன் கைத்தலைபேசியை "Switch=off" செய்து விட்டு படுத்தேன்.

கனவினில் டெண்டுல்கர் சதமடித்து இலங்கையைத் தோற்கடித்து சூப்பர் 8 க்கு இந்தியாவை முன்னேற செய்கிறார்.

கனவு முடிந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது "சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம" கைத்தொலைபேசியில் மணி அடித்தது,
யார் இந்த நேரத்தில் கூப்பிடுவது என்று நினைத்துக் கொண்டே

கைத்தொலைபேசி "thaathaa calling" காட்டியது.

"ஹலோ சார், சொல்லுங்க"

"என்னப்பா தம்பி, மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தூங்குகிறாய்."

"அய்யோ ஆமாம், எப்படி இப்ப கால்" மனது திக் திக் என அடித்தது,

"அடப்போப்பா, இன்னும் 5 வருஷம் வாழனும்னு நினைச்சேன், கொஞ்ச நேரம் முன்ன திடீர்னு நெஞ்சு வலி, உனக்கு கால் பண்ணி ஹெல்ப் கூப்பிடலாம்னு நினைச்சா உன் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப், என்ன பன்றது என் விதி அவ்வளவுதான். அது இருக்கட்டும் என் பையனோட ஆஸ்திரேலியா நெம்பரைக் குறிச்சுக்கோ, அவனை கால் பண்ணி தகவலைத் தெரிவி"
என்றார்.

கைத்தொலைபேசியைப் பார்த்தேன். இன்னும் "Switched - on" செய்யப்படவில்லை.

அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனேன். கனவில்லை. இது நிஜம். கதவைத்திறந்து ஓடி எதிர் வீட்டு தாத்தாவின் கதவைத் தட்டினேன், வேகமாக, இன்னும் வேகமாக அடுத்த 10 நிமிடங்களுக்கு .. கதவு திறக்கப்படவே இல்லை.

Tuesday, April 03, 2007

ஒற்றைக்கால் "டான்ஸர்" , நடிகர் குட்டி மரணம்

கேயாரின் தயாரிப்பில் "டான்ஸர்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் குட்டி, இராமநாதபுரம் அருகே ஒரு கோயில் திருவிழாவில் நடனமாட சென்றபோது, அவர் தங்கியிருந்த விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு மரணமடைந்தார். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்த இவர், தளாரத முயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் ஒற்றைக்காலில் நடனம் ஆடி கதாநாயகனாக அறிமுகம் ஆகும் அளவுக்கு பெயர் பெற்றார்.

டான்ஸர் படத்துக்காக 2004 ஆம் ஆண்டு தேசிய சிறப்பு விருதும் பெற்றவர்.

நடிகர் குட்டியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

டான்ஸர் பட விமர்சனம் இங்கே

தம்பி பந்தை உருட்டிவிடு -சாப்பல், வீடியோவுடன்

இதோ, போன பதிவின் தொடர்ச்சி, அண்ணன் கிரெக் சாப்பல் சொல்ல அதைத் தட்டாமல் பந்தை உருட்டிவிடும் தம்பி டிரெவர் சாப்பல், வீடியோ இதோ

தம்பி பந்தை உருட்டிவிடு - கிரெக் சாப்பல்

பிப்ரவரி 1, 1981 ஆம் வருடம் நியுசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நியுசிலாந்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டத்தை சமன் செய்யலாம் என்று இருந்த போது, நம்ம "பெரியண்ணன்" கிரெக் சாப்பல் தனது தம்பி டிரெவர் சாப்பலை சிக்சர் அடிக்காத வண்ணம் தரையில் உருட்டிவிட சொன்னார். நியுசிலாந்து ஆட்டக்கார பிரையன் மெக்கன்சி ஆல் அந்த பந்தை அடிக்க இயலாமல் போனது.
மெக்கன்சி கடுப்பில் மட்டையை விசிறி எறிகிறார்.

பல தரப்புகளிலும் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு "under arm " பந்து வீச்சு முறை தடை செய்யப்பட்டது.

25 வருடங்களுக்குப் பிறகு மெக்கன்சி கொடுத்த பேட்டி இங்கே

நன்றி: கிரிகின்போ மற்றும் தெ ஏஜ் தளங்கள்

Monday, April 02, 2007

நான் கடவுளைப் பார்த்தேன் - சிறுகதை

அழைப்பு மணி அடித்தது, பழைய மோகன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நான் எழுந்து கதவைத் திறக்காமல், யார் எனக் கேட்டேன்.

"கடவுள் வந்து இருக்கேன் கதவைத் திற" என்றது குரல்.

யாருடா இது, இரவு 11 மணிக்கு லொள்ளு பண்றது நினைத்துக் கொண்டே, கையில் ஒரு கிரிக்கெட் மட்டையை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.

வெளியே, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார்.

"சீக்கிரம் கதவைத் திறப்பா, கடவுளைப் போய் காக்க வைக்கிற" என்றார் அந்த ஆள்.

என் கையில் மட்டையைப் பார்த்தவுடன் "ஹும், வீடு முழுவதும் சாமிப்படம் மாட்டி வச்சி என்ன பிரயோஜனம், உண்மையானக் கடவுள் வர்றப்ப மட்டும் நம்பி கதவைத் திறக்க மாட்டுற," என்று சொன்னார் அந்த ஆள்.

எனது வீட்டை அப்படியே நோட்டம் விட்டார். "ம்ம்ம், எல்லா மதமும் சம்மதம் போல, வெரி குட்" தொடர்ந்து பேசினார்.

பக்தி ஒரு புறம் இருந்தாலும் எனக்குள்ள பேய் பயத்தைப் போக்கி கொள்ளதான் எல்லாக் கடவுளின் படங்களையும் மாட்டி வைத்து இருக்கிறேன் என்று அந்த ஆளிடம் சொல்ல வில்லை.

என் வீட்டு மேசையில் வைத்து இருந்த பன்னீர் சோடாவை எடுத்து குடிக்க ஆரம்பித்து நாற்காலியில் அமர்ந்தார்.

"டீவி யைப் போடு, சி.என்.என் ஐ.பி.என் ல நியுஸ் கேட்கலாம்"

"யோவ், நீ யாருய்யா, மரியாதையா எழுந்து வெளியேப் போ"

"கோபப்படாதே தம்பி, நான் தான் சொல்றேன் ல, நான் கடவுள் னு"

"கடவுள்னா வீட்டுக்கதவை ஏனய்ய தட்டுற, அப்படியே உள்ளே வர வேண்டியது தானே!!"

"மாயஜாலம் காமிச்சு தான் நான் கடவுள்னு நிருபிக்க வேண்டாம் அது எனக்கு அவசியமும் இல்லை"

"ஓகே, என்னோட எதிர்கால விசயம் ஏதாவது சொல்லு, உன்னை நான் கடவுள் னு நம்புறேன்"

"உன்னோட எதிர்காலம் உன் எண்ண ஓட்டங்களை வைத்து நீ முடிவு பண்ண போவது,
என்னைக் கேட்காதே, ஓசியிலே ஜோசியம் சொல்ல முடியாது " என்று அந்த ஆள் என்னை மடக்கி மடக்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


"சரி, உன் இதிகாச கால டிரஸ்ஸையாவது காட்டு, இப்படி மாடர்னா பேண்டு சேர்ட்டு போட்டு வந்திருக்க"

"அந்த அந்தக் கால கட்டத்தில் மக்கள் எந்த வித உடை அணிந்தார்களோ அதை எனக்கு அணிவித்து அழகுப் பார்த்தார்கள், இப்போ நீங்க எல்லாம் இந்த டிரஸ்தான் போடுறீங்க, அது தான் இந்த டிரஸ்ல வந்தேன் "

அந்த ஆள் முகத்தை உற்றுப் பார்த்தேன், எந்தக் கடவுளின் சாயலும் இல்லை, கையாட்டி பேசும்போது கையில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். இயேசு நாதருக்கு அப்படித்தான் பார்த்தார்களாம்.

"ஓகே நான் ரெண்டு கேள்விகள் கேட்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்
மனுசனோட தெ பெஸ்ட் கண்டுபிடிப்பு எது?" என்றார் அந்த ஆள்.


"யோவ் உனக்கு நான் தானா கிடைச்சேன், இந்த ராத்திரியிலே, நீ கேட்ட கேள்வி ஏற்கனவே சினிமாவுல வந்துடுச்சு, கேடிவில போட்ட வர்ணஜாலம் படம் பார்த்துட்டு வக்கைனையா கேள்வி கேளு"

கிட்டத்தட்ட நேரம் 12 அடிக்க இருந்தது, ஒரு வேளை இந்த ஆளு பேயா இருப்பாரா, காலைப் பார்த்தேன். கால் இருந்துச்சு, பேய் இல்லை.

"அடுத்த கேள்வி, கடவுளோட தெ வொர்ஸ்ட் கண்டுபிடிப்பு எது?"

"......"

"அட மனுசனுங்க நீங்க தாண்ட என்னோட கேவலமான படைப்பு"

"....."

"நீ கடவுளை எங்க பார்ப்ப தினமும், "

"சரி, தெய்வமே நீ கடவுளாகவே இரு, இப்போ நீ கிளம்பு" என அந்த ஆளை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன்.

ஜன்னல் வழியாக எந்த பக்கம் போறாருன்னு பார்த்தேன், இந்த ஆளு நிச்சயம் கடவுள் இல்லை. பிள்ளையார் கோயிலுக்குள் போகல.

ட்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈங் ட்ரீஙஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈங் அலாரம் அடித்து எழுந்தேன், அடச்சே, கனவு,

"நீ கடவுளை எங்க பார்ப்ப தினமும் " இது தான் அந்த ஆளின் கடைசி வாக்கியம். தூக்கம் கலைந்த பின்னும் கனவில் வந்த ஆள் தெளிவாக நினைவில் இருந்தார்.

முகச்சவரம் எல்லாம் செய்துவிட்டு, 10 மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன்.
சிக்னல்ல மஞ்சள் விழுந்துடுச்சு, இருந்தாலும் வண்டியின் வேகத்தை அதிகமாக்கி சிக்னலைக் கடக்க முயற்சிக்கையில், வலதுபுறம் பச்சை விழ, மின்னல் வேகத்தில் வந்த நகரப் பேருந்து என்னை இடிக்க தூக்கியெறியப்பட்டேன்.

என்னைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம்,எல்லோரும் வேடிக்கைப் பார்க்கின்றனர். கடவுளே!! யாரையாவது என்னைக் காப்பாற்ற செய். இவ்வுலகத்தில் என்னால் செய்யப்பட வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. காப்பாத்துங்கோ எனக் கத்த வேண்டும் போல் உள்ளது, ஆனால் முடியவில்லல. எத்தனை முறை இந்த மாதிரி விபத்துக்களைப் பார்த்து அச்சச்சோ என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறேன். தனக்கு நடக்கும்போது தான் மற்றவர்களின் வலிகள் வேதனைகள் புரிய ஆரம்பிக்கிறது.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஒருவர் என்னை தூக்கி ஆட்டோவில் போட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். அவரின் முகத்தை உற்றுப் பார்க்கிறேன், கனவில் வந்த அந்த ஆளின் முகச்சாயல். நான் பிழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை வந்தது,

நீதான் வந்தாயா? - குட்டிக்கதை

"கார்த்தி நான் கிளம்புறேன், டைம் ஆயிடுச்சு" என சொல்லிக்கொண்டே தனது கைப்பையை எடுத்துக் கொண்டு என் சீட்டுக்கு வந்தாள்.

"திஸ் ஈஸ் டூ ஜெனி மச், உன்னோட கோடிங்க தான் பார்த்துட்டு இருக்கேன் வெயிட் பண்ணு" என்றேன்.

"இல்லை, இப்போவே மணி பத்து, நான் கிளம்புறேன். பை பை, நாளைக்குப் பார்க்கலாம் " என்று கூறி விட்டு அலுவலகத்தை விட்டு கிளம்பிப் போனாள்.

இவளோட வேலையை நாம் செய்வதற்கு , இவளை இருக்க வைக்க எவ்வளவு கெஞ்ச வேண்டி இருக்கு.

அவள் போய் பத்து நிமிடம் கழித்து அவளிடமிருந்து கால் வந்தது

"சாரிடா, அந்த ஆசிரமத்துக்கு தர்றேன்னு சொன்ன பத்தாயிரம் ரூபாயை நாளைக்கு காலையிலே வந்தவுடன் உன் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்" என்றாள்.

"உன் பாஸ்வேர்ட் ஐடி கொடு, நானே டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்" அவளின் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன். ஏற்கனவே அவளின் ஐடி பாஸ்வேர் கேட்டபோது அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளினால் என்னை அர்ச்சித்து இருக்கிறாள்.

அவள் ஏதோ சொல்ல வந்தாள், அதற்குள் கிரிச்சீன்னு ஒரு சத்தம், அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அவளை அழைத்த போது இணைப்பு கிடைக்கவில்லை.

கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு இடத்துக்கு வந்தமர்ந்தேன்.

யாரோ பின்னே நிற்பது போல உணர, திரும்பிப் பார்த்தேன். ஜெனி அங்கே.

"எதுக்கு திரும்ப வந்த?"


"கார்த்தி, பேங்கோட வெப்சைட் போ, நல்ல விசயங்களை உடனே செய்துடனும், அதுதான் திரும்ப வந்தேன்"

"இந்த நீயே ஐடி பாஸ்வேர்ட் அடி" என்று அவளை நோக்கி கீ போர்டைத்திருப்பினேன்.

"இல்லை நீயே அடி" என் தனது ஐடி பாஸ்வேர்ட்டை எனக்கு சொன்னாள்.

"ஒரு 40000 உன் அக்கவுண்டுக்கு மாத்திக்கோ, இனிமேல் என்னைக் கேட்கவேண்டாம், நீயே என் சார்பா கொடுத்துடு" என்று மேலும் சொன்னாள்.

"ஹே, ஏன் " என்றேன் ஆச்சர்யத்துடன்..

"பராவாயில்லை இருக்கட்டும், நான் கிளம்புறேன் பை" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கான வேலையை முடித்து விட்டு, என் வேலை தொடங்கலானேன்.

சிறிது நேரம் கழித்து வசந்தின் அழைப்பு வந்தது,

"ஹலோ கார்த்தி, ஜெனி ஆக்சிடெண்ட், ஜெனி...சாரிட அவ ஸ்பாட்லயே " என்றான் வார்த்தைகள் தழுதழுக்க.

கடவுளே!!, இப்பொழுது தானே ஜெனி வந்தாள். ஆக்சிடெண்டுக்கு முன்னமே இங்கே வந்தாளா!!! இல்லை ஆக்சிடெண்டுக்கு பின்னாடியா!!!
எனக்குத் தலைச்சுற்றியது.

Sunday, April 01, 2007

கட் ஆஃப் - சிறுகதை

இந்த கல்லூரியில் சேர்ந்து இன்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. வகுப்பிலேயும் விடுதி அறையிலேயும் கட்-ஆப் மார்க் பத்தி தான் ஒரே பேச்சு. நீ எவ்வளவு எடுத்த, கலந்தாய்வின் போது வேறு எந்த எந்த கல்லூரிகளில் இடங்கள் இருந்தன என்று உரையாடல்கள் அமைந்து, சில குழுக்களாக பிரிவது கண்கூடாகத் தெரிந்தது.

நானும் ஒரு குழுவில் இணைந்தேன். முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்தக் கல்லூரியும் பிடிக்கவில்லை, நான் எடுத்து இருந்த பொறியியற் பிரிவும் பிடிக்கவில்லை. அவசரப்பட்டு செய்த தவறினால் கணிதத்தில் தவறிய 10 மதிப்பெண்கள் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது.,

என்னோட அறையில் இருந்தவர்களில், மூவர் என்னோட கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்கள். இன்னொருத்தன் என்னை விட 15 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து, நான் எந்த பிரிவை எடுக்க நினைத்து கிடைக்காமல் போனதோ, அதை இவன் இட ஒதுக்கீட்டில் எடுத்து இருந்தான். முதற்நாள் அதைக் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு ஏற்கனவே இருந்த எரிச்சல் உணர்வு அதிகமானது. அவனும் என்னோட வகுப்புதான். முதல் செமஸ்டர் மட்டும் அனைத்து பிரிவு மாணவர்களும் ஒன்றாக இருப்பார்கள். கல்லூரியில் அவனைப் பார்த்தால் நான் சிரிப்பது கூட கிடையாது.

15 மதிப்பெண்கள் என்பது கிட்டத்தட்ட 5 சதவீதம். இந்த 5 சதவீத மதிப்பெண்களை அதிகமாக எடுக்க எத்தனை இரவு தூக்கத்தை இழந்து இருப்பேன். எத்தனை மாதிரி பரிட்சை எழுதி இருப்பேன். எத்தனை விருப்பங்களை தியாகம் செய்து இருப்பேன். கிட்டத்தட்ட 14 மாத தவம். +1 தேர்வு முடிந்த கையோடு எடுத்த புத்தகங்களை நுழைவுத்தேர்வு முடியும் வரை கீழே வைக்க வில்லை. சே!! என்னவொரு தேர்வு முறையடா, தரப்பட்டியலில் முதலில் இருப்பவனுக்கு கிடைக்க வேண்டியதை , சொகுசாக குறைவான மதிப்பெண் எடுத்தவன் எடுத்துக் கொள்கின்றேன். நான் மட்டும் இந்த தேசத்தின் தலைவன் ஆனால் முதலில் இந்த முறைகளை எடுத்து விட்டு தகுதி அடிப்படையில் மட்டுமே எல்லா விசயங்களும் என்று சட்டம் இயற்றுவேன்.

நேற்றிரவு 2 மணிவரை, "இவன் நம்ம ஆளுட" என்று மூன்றாமண்டு மாணவர்கள், நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்ததால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. முதல் பாடவேளை வேதியியல். தாமதமாகப் போனால், அந்த விரிவுரையாளர் வருகை அளிக்க மாட்டார். அதனால் அடுத்து இயற்பியல் வகுப்புக்குப் போனேன். அங்கு நான் உட்காரும் இடத்தில் வேறு ஒருவன் உட்கார்ந்து இருந்ததால், வேறு வழியின்றி ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து இருந்த "அவனுடன்" வேறு வழியின்றி அமர்ந்தேன். இயற்பியற் ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்கும்போது , இவன் அந்த கேள்விகளுக்கு முணுமுணுவென சரியான பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எழுந்து பதில் சொல்லவில்லை. ஒரு சின்ன ஆச்சர்யம் எப்படி இவன் தமிழ்வழியில் படித்தவன் பொதுவாகவே தமிழ் வழியில் படித்தவர்கள் தனக்கு தெரிந்து இருந்தாலும் ஆங்கிலத்தில் இணையான வார்த்தைகள் தெரியாததால் சில விசயங்களை கிரகித்துக் கொள்ள சிரமப்படுவார்கள். இதைக் கூறித்தான் என் அப்பா 5 வதுக்குப் பிறகு ஆங்கில வழிக்கல்வியில் என்னைச் சேர்த்தார். இதைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

அதற்கடுத்து தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறையாகிப் போனதால், முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் தங்களது ஊருக்கு சென்று விட்டனர். முதலாமாண்டு விடுதி மாணவர்களில் எஞ்சியது நாங்கள் இருவரும் தான்.

முதல் இரண்டு நாட்கள் நான் "எங்க ஆளுங்க" மூன்றாமண்டு மாணவர்கள் அறையில் போய் பேசிக் கொண்டிருந்ததால் "அவனுடன்" பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்று திருப்பரங்குன்றம் கோயில் போகலாம் என்று நினைத்த போது பேச்சுத் துணைக்கு "அவனையும்" கூப்பிட்டு போகலாம் என்று அவனை அழைத்தேன்.
போகும் வழியில்
"இங்கிலீஷ் ஈகுவலண்ட் வேர்ட்ஸஸெப்படி உனக்குத் தெரியும், நீ தமிழ் மீடியம் தானே படிச்ச"

"ஆமா, காலேஜ்ல சேர முன்னாடி இங்கிலீஷ் மீடிய புக்ஸ் வாங்கி வாசிச்சேன், ஈகுவேசன்ஸ் எல்லாம் முன்னமே தெரியும், வேர்ட்ஸ் எல்லாம் இப்ப படிச்சுக்கிட்டு இருக்கேன்".

என்னையும் அறியாமல் அவன் தோளைத் தட்டி பாராட்ட தோனியது. அவன் குடும்ப சூழல்கள் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.

"அப்பா கூலி வேலை பார்க்கிறாரு, அம்மா பண்ணை வீட்டுல வேலை பார்க்குறாங்க
நானும் வேலை பார்த்து இருக்கேன், எல்லா காட்டு வேலையும் எனக்குத் தெரியும். ஸ்கூல் முடிச்சுட்டு பண்ணை வீட்டுல வேலை பார்ப்பேன்"

"நீ ஏன் படிக்கிறப்ப வேலை பார்க்கனும், உங்க வீட்டுல தான் ரெண்டு பேரும் இயர்னிங் ல, "

"இல்லை, எங்க அப்பா காசு கொடுக்க மாட்டாரு, சரியன குடிகாரரு, அக்கா புருஷன் கள்ளச்சாராயம் காய்ச்சி அடிக்கடி ஜெயிலுக்குப் போய்டுவாரு, அதனால அக்கா வீட்டையும் நாங்க தான் பார்த்துக்கனும்"

நீ நல்ல மார்க் வாங்கினதனால் கணினி வாங்கித் தருவதாக சொன்ன அமெரிக்காவில் இருக்கும் என் அக்காவின் கணவர் நினைவில் வந்து போனார்.

தின செய்திகள், கிரிக்கெட், தொலைக்காட்சி தொடர்கள் தியாகம் செய்த அம்மா,அப்பா, ஒவ்வொரு தொலைபேசி உரையாடலிலும் படிப்பை மட்டும் பேசும் அக்காவும் ஞாபகம் வந்தார்கள்.

"சரி நீ எண்ட்ரன்ஸ் கோச்சிங் போனியா? எங்க போன?"

"எங்க ஸ்கூல்லய சொல்லிக்கொடுத்தாங்க, அதுவும் முழுசா போக முடியல, பண்ணை வீட்டுல வேலைக்குகூப்பிட்டுட்டாங்க, எங்க ஸ்கூல் வாத்தியார் தான் என்னை கவுன்சிலிங்க் எல்லாம் கூட்டிட்டுப் போனார், படிக்க அனுப்பிச்சா ஸ்காலர்ஷிப் பணம் எல்லாம் கிடைக்கும் , செலவு இல்லன்னு சொன்ன பின்ன தான் அப்பா என்னை காலேஜ் ல சேர விட்டாரு"

நகரத்திலே இருக்கிற நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் சிறந்த மையத்தில் நான் படிக்க அப்பா தனது வண்டியை எனக்குக் கொடுத்து விட்டு அவர் பேருந்தில் சென்றதும் நினைவுக்கு வந்தது.

"நமக்கு செமஸ்டர் லீவ் எவ்வளவு நாள் கிடைக்கும், அறுப்பு நேரம், நான் போனால் அம்மாக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்."

என்னையும் அவனையும் ஒப்பிட்டு பார்த்தேன். படிப்பு மட்டுமே சூழலாகக் கொண்டு, ஊக்கத்தை மட்டுமே பெற்று வளர்ந்து, உயர் மனப்பாண்மையில் இருந்து நான் எடுத்த மதிப்பெண்,
விளிம்பு நிலை பிரச்சினைகள் , கல்வி வாசனை அறியாத குடும்பம், அடிமைச் சூழல் இத்தனை இருந்த போதும் அவன் படித்து எடுத்த மதிப்பெண்களைக் காட்டிலும் மிகக் குறைவு என இன்னொரு பரிமாணத்தில் உணர்த்தியது.
ஒரு வேலை நான் அவன் சூழலில் இருந்து இருந்தால் அவன் அளவு படித்திருப்பேனா என்று எண்ணம் ஒரு திகிலைக் கொடுத்தது. கல்வி சமுதாயத்தின் மிகப்பெரும் சமனி, வேதியியல் சமன்பாடுகளை சமப்படுத்துவது போல் தான் இதுவும் என் உணர்ந்தேன்.

"எப்படியும் 10 நாள் கிடைக்கும் என அவனது முந்தைய கேள்விக்கு பதில் சொல்லி, அவன் தோளில் பெருமிதமாக கைபோட்டு கல்லூரியை நோக்கி நடந்தேன்".