Saturday, April 07, 2007

20 நாட்களில் மரணம் - சிறுகதை

"ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. அடுத்து எங்கு பார்த்தாலும் எனது புகைப்படங்கள், ஒவ்வொன்றாய் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கின்றன.
படிக்கட்டுகளில் ஏறி ஓடுகின்றேன், படிக்கட்டுகள் அப்படியே சுவற்றில் மோதி நிற்கின்றன. திருப்பிபார்த்தால் படிக்கட்டுகளையும் காணவில்லை. "
"என்ன கருமம் இது, இந்த மாதிரிக்கனவுகள்தாம் கடைசி இரண்டு மூன்று நாட்களாக வருகிறது. ஒரு வாரமா திகில் படங்களை டிவிடியில் பார்க்கிறதுனாலயா?? இல்லை இந்த கனவுகள் ஏதாவது சொல்ல வருகின்றனவா!!! அல்லது என் ஆழ்மன ஓட்டத்தின் வெளிப்பாடா? பொதுவாக என்னுடைய கனவுகள் விளம்பரப்படங்கள் மாதிரி குட்டி குட்டியா அழகா வந்துட்டு போயிடும். வழக்கமா காலையிலே எழுந்த சில நிமிடங்கள்ல மறந்தும் போயிடும். ஆனால் இப்போ ஒரே வகையான கனவுகள் திரும்ப திரும்ப வருகின்றன, எல்லாக் கனவுகளும் ஒன்றை மட்டும் திருப்பி திருப்பி சொல்கின்றன. "நான் அழிக்கப்படுகின்றேன்". ம்ம்ம்ம் இந்த மாதிரி கனவுகளுக்கு விளக்கம் யாரவது சொல்வாங்களா? . எண்ணங்கள் கனவையேச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தக் கனவுகளின் படி நான் அழிக்கப்பட போகின்றேனா?... ஒரு வேளை அப்படி நடந்து விட்டால், எனக்கு மரணம் சம்பவித்து விட்டால்.. அதன் பின், இந்த எண்ணமே வித்தியாசமானா சிலீர் உணர்வைக் கொடுத்தது. யார் யார் அழுவார்கள், செத்த பிறகு என்ன நடக்கும், பேய் ஆகிவிடுவேனா, நாயா அடுத்து பிறப்பேனா? சொர்க்கம் போவேனா? நரகமா?

துக்கங்களுக்கு செல்லும்போது, மனிதன் எப்படி இருந்தாலும் கடைசியில் இறந்து தான் போகப் போகின்றான். எதற்கு போட்டி, பொறாமை, பழிவாங்கல் எண்ணங்கள், இவை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்று மனதில் உறுதி மொழி எடுக்க வைக்கும். இதை மயான வைராக்கியம் என்பார்கள். ஆனால் அது இரண்டு நாளைக்குத்தான் தாங்கும், பின் அந்த உறுதிமொழி மறந்தேப் போய்விடும்.

என்ன இது, மரணம் பற்றிய எண்ணம் வந்தால் பயம் அல்லவா வரவேண்டும்,எனக்கு பயம் வரவில்லையே.. தத்துவார்த்தமாக அல்ல யோசிக்க வைக்கிறது. வீட்டிலே இதைப் பற்றி விளையாட்டுக்கு சொன்னால் கூட பூஜை, பரிகாரம், சாமிகுத்தம் என ஏதாவது பேசப் ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பக்தியும் அதிகம், பயமும் அதிகம். எனக்கு இந்த சந்தேகம் உண்டு , பயத்தினால் பக்தியா? பக்தியினால் பயமா.. எதுவாகினும் யாருக்கும் பாதிப்பில்லாத வரை பிரச்சினையில்லை.

வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கி நிதானமாக நடைபோடும் நிகழ்வு. அந்த நிகழ்வின் போது ஏன் மனிதனுக்கு இவ்வளவு ஆர்பாட்டம். ஒரு வேளை இந்த ஆர்ப்பாட்டங்கள் தான் நாம் வாழ்கிறோம்/மரணத்தை நோக்கி பயணிக்கின்றோம் என்பதை உணர்த்தும் அடையாளங்களோ என்னவோ?.

60 வருடம் மனிதனின் சராசரி வாழ்க்கையென்றால், அதில் பாதி வருடம் தூக்கத்தில் போய் விடுகிறது. மீதி படிப்புக்காக போராடும் வருடங்கள், வாழ்வை நிலைநிறுத்தும் பொருளாதாரத்துக்காக சில வருடங்கள், வந்தவகளை நிலை நிறுத்திக் கொள்ள மீதி வருடங்கள்.
சிந்தனை ஓட்டம் அதிகமாகியது. மரணம் தான் கடைசி முடிவு என்றால், எதற்கு இவ்வளவு விசயமும்.. போராட்டங்கள், வெற்றிகள் தோல்விகள். ...... சரி, நேரம் ஆயிடுச்சு,ஆபிஸுக்கு கிளம்பலாம்...
ஆபிஸுக்கு கிளம்பும்போதே , வீட்டில் கால் இடறியது. சகுணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிடினும் , அநாவசியமாக இரவு வந்த கனவு ஞாபகம் வந்து தொலைத்தது. .

கொஞ்சம் அதிகம் ஜாக்கிரதையாகவே பைக் ஓட்டி வந்து ஆபிஸ் சேர்ந்தேன். மெயில் பாக்ஸை திறந்தால், முதல் மெயிலே "20 more days" தலைப்பில் ஒரு மெயில், திக் என்று இருந்தது, உள்ளே பார்த்தால், உலககோப்பை இறுதிப் போட்டிக்கு அப்படினு ஒரு மொக்கை மெயில்.

அடுத்தது, "Death Caclulator"னு ஒரு எக்ஸல் கோப்பு, பிறந்த தேதிக் கொடுத்தால், சரியாக 20 நாள் கழித்து உனக்கு சாவு எனப் போட்டு இருந்தது.

விளையாட்டுத்தனமாக அனுப்பப்பட்டது என்றாலும், எனக்கு வந்த கனவுகளுடன் இதை தொடர்பு படுத்தி பார்க்கும்பொழுது கொஞ்சம் வேகமாகவே இதயம் துடிக்க ஆரம்பித்தது.

மாலை அலுவலகம் முடிந்ததும், வரும் வழியில் கிளிஜோசியம் பார்த்தேன். ஜோசியக்காரனின் கைசைகையையும் மீறி கிளி சுடுகாட்டுக்காளி படத்தை எடுத்தது.

"சார், இந்த சுடுகாட்டுக்காளி சாவை குறிப்பாக உணர்த்துகிறது, இதற்கு ஒரு பரிகாரம் உண்டு, நீங்க கூட வரவேண்டியதில்லை, 100 ரூபாய் கொடுங்க , நானே முடிச்சுடுறேன்".

அவன் கண்களில் அடுத்த நாலு நாள் சாப்பாட்டிற்கான பரிகாரம் எனது 100 ரூபாய் என சொல்லியது. எடுத்துக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அடுத்த 20 நாட்களில் சந்திக்க விரும்பியவர்களை எல்லாம் சந்தித்தேன். மன்னிக்க வேண்டியவர்களை எல்லாம் மன்னித்தேன். மன்னிப்பு சொல்ல வேண்டிய இடங்களில் மன்னிப்பைக் கேட்டேன். ஒவ்வொரு நொடியையும் விரும்பி விரும்பி செலவழித்தேன். வழக்கத்துக்கு மாறான இந்த செயல்கள் ஒரு வகையில் மனசுக்கு சந்தோசத்தை தான் கொடுத்தது.வழக்கமான நான் செய்யும் விதிமுறை மீறல்கள் இல்லை. விதண்டாவாதம் இல்லை.
ம்ம்ம்.. மற்றவர்களுக்குப் பிடித்தமானவன் ஆனேன். என் பார்வையில் மற்றவர்களும் மற்றவர்களின் பார்வையில் நானும் மாறினோம். எல்லோரும் விரும்பும் மனிதனாய் இருப்பதில்தான் எத்தனை சந்தோசம்.

மனிதர்களுக்கு பிறக்கும்போதே இறக்கும் நாளும் தெரிந்து விட்டால், பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ம்ம் அந்த 20 வது நாள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் , அருகில் சின்னப் பையனுடன், எனது வண்டியைக் கைக்காட்டி நிறுத்தினார். ஊருக்குப் போக காசு இல்லை என்றும், 50 ரூபாய் இருந்தால் கொடுக்கவும் என்று கேட்டார். வழக்கமாக இந்த மாதிரி யாரவதுகேட்டால் கொடுப்பதில்லை, ஆனால் "நாட்கள் எண்ணப்படுகிறது" என்ற சூழலில் இருப்பதால் 50 ரூபாய் கொடுக்கலாம் என்று தோனியது.

50 கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை ஒரு லாரி வேகமாக கடந்து சென்றது. 30 வினாடிகள் கழித்து டாமார் என்று ஒரு சத்தம். 50 ரூபாய் வாங்கி கொண்டவர் நகர்ந்ததும், வண்டியை முன்னோகி செலுத்தினேன், மெயின் ரோட்டிலிருந்து என் வீட்டுக்கு வளையும் அந்த வளைவில் அந்த லாரி கவிழ்ந்து கிடந்தது. மானசீகமாக அந்த 50 ரூபாய் ஆளுக்கு நன்றி சொன்னேன்.

அன்று இரவு மீண்டும் அதே கனவு, "ஒரு பெரிய மரம், கிட்டத்தட்ட முப்பதடி உயரம் இருக்கும், அந்த முழுமரத்தில் என் உருவம் ஒட்டுமொத்தமாகத் தெரிகிறது. ராட்சச ரம்பங்கள், என்னை அறுக்கின்றன, கிளைகள் என் கைகளாக, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி என் உருவத்தை தாங்கி நிற்கிற அந்த பிகப்பெரிய மரம் சாய்க்கப்படுகிறது, ....பின்னதொரு உயரந்த மலை, மலையின் முகட்டில் என்னுடைய முகம், மலை தூள் தூளாக வெடித்து சிதறுகிறது.. ........."
ஒவ்வொன்றும் உருவகங்கள், என் மன மாற்றங்களுக்கு என்று இப்போது கனவின் அர்த்தம் விளங்கியது,

முழுத் தெளிவுடன் அன்று காலை எழுந்து, அலுவலகம் கிளம்பினேன். அலுவலகம் செல்லும் வழியில் அந்த கிளி ஜோசியக்காரன் என்னை மடக்கி பரிகாரம் செய்துவிட்டதாகவும் இனி கவலல வேண்டாம் என்று வடபழனியில் வாங்கிய திருநீறு பொட்டலத்தைக் கொடுத்தான். சிரித்துக் கொண்டே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டேன்.

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

அற்புதமான கதைக் கரு. முக்கியமாக முடிவை மிகவும் ரசித்தேன்.

கோபப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! இடையில் கொஞ்ச நேரம் கதை படித்து கொண்டிருக்கிறோமா, கட்டுரை படித்து கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் வருவதை தடுக்க முடியவில்லை!! நடையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.


பி.கு.: உங்கள் கதைகளையெல்லாம் மெதுவாக ஒன்று ஒன்றாய் படித்து கொண்டிருக்கிறேன்!!!;-)

said...

யோசிப்பவர், தங்களின் விமர்சனம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நடையில் மெருகூட்ட முயற்சி செய்கின்றேன். நன்றி.