Monday, April 02, 2007

நான் கடவுளைப் பார்த்தேன் - சிறுகதை

அழைப்பு மணி அடித்தது, பழைய மோகன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நான் எழுந்து கதவைத் திறக்காமல், யார் எனக் கேட்டேன்.

"கடவுள் வந்து இருக்கேன் கதவைத் திற" என்றது குரல்.

யாருடா இது, இரவு 11 மணிக்கு லொள்ளு பண்றது நினைத்துக் கொண்டே, கையில் ஒரு கிரிக்கெட் மட்டையை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.

வெளியே, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார்.

"சீக்கிரம் கதவைத் திறப்பா, கடவுளைப் போய் காக்க வைக்கிற" என்றார் அந்த ஆள்.

என் கையில் மட்டையைப் பார்த்தவுடன் "ஹும், வீடு முழுவதும் சாமிப்படம் மாட்டி வச்சி என்ன பிரயோஜனம், உண்மையானக் கடவுள் வர்றப்ப மட்டும் நம்பி கதவைத் திறக்க மாட்டுற," என்று சொன்னார் அந்த ஆள்.

எனது வீட்டை அப்படியே நோட்டம் விட்டார். "ம்ம்ம், எல்லா மதமும் சம்மதம் போல, வெரி குட்" தொடர்ந்து பேசினார்.

பக்தி ஒரு புறம் இருந்தாலும் எனக்குள்ள பேய் பயத்தைப் போக்கி கொள்ளதான் எல்லாக் கடவுளின் படங்களையும் மாட்டி வைத்து இருக்கிறேன் என்று அந்த ஆளிடம் சொல்ல வில்லை.

என் வீட்டு மேசையில் வைத்து இருந்த பன்னீர் சோடாவை எடுத்து குடிக்க ஆரம்பித்து நாற்காலியில் அமர்ந்தார்.

"டீவி யைப் போடு, சி.என்.என் ஐ.பி.என் ல நியுஸ் கேட்கலாம்"

"யோவ், நீ யாருய்யா, மரியாதையா எழுந்து வெளியேப் போ"

"கோபப்படாதே தம்பி, நான் தான் சொல்றேன் ல, நான் கடவுள் னு"

"கடவுள்னா வீட்டுக்கதவை ஏனய்ய தட்டுற, அப்படியே உள்ளே வர வேண்டியது தானே!!"

"மாயஜாலம் காமிச்சு தான் நான் கடவுள்னு நிருபிக்க வேண்டாம் அது எனக்கு அவசியமும் இல்லை"

"ஓகே, என்னோட எதிர்கால விசயம் ஏதாவது சொல்லு, உன்னை நான் கடவுள் னு நம்புறேன்"

"உன்னோட எதிர்காலம் உன் எண்ண ஓட்டங்களை வைத்து நீ முடிவு பண்ண போவது,
என்னைக் கேட்காதே, ஓசியிலே ஜோசியம் சொல்ல முடியாது " என்று அந்த ஆள் என்னை மடக்கி மடக்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.


"சரி, உன் இதிகாச கால டிரஸ்ஸையாவது காட்டு, இப்படி மாடர்னா பேண்டு சேர்ட்டு போட்டு வந்திருக்க"

"அந்த அந்தக் கால கட்டத்தில் மக்கள் எந்த வித உடை அணிந்தார்களோ அதை எனக்கு அணிவித்து அழகுப் பார்த்தார்கள், இப்போ நீங்க எல்லாம் இந்த டிரஸ்தான் போடுறீங்க, அது தான் இந்த டிரஸ்ல வந்தேன் "

அந்த ஆள் முகத்தை உற்றுப் பார்த்தேன், எந்தக் கடவுளின் சாயலும் இல்லை, கையாட்டி பேசும்போது கையில் ஏதேனும் காயங்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். இயேசு நாதருக்கு அப்படித்தான் பார்த்தார்களாம்.

"ஓகே நான் ரெண்டு கேள்விகள் கேட்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்
மனுசனோட தெ பெஸ்ட் கண்டுபிடிப்பு எது?" என்றார் அந்த ஆள்.


"யோவ் உனக்கு நான் தானா கிடைச்சேன், இந்த ராத்திரியிலே, நீ கேட்ட கேள்வி ஏற்கனவே சினிமாவுல வந்துடுச்சு, கேடிவில போட்ட வர்ணஜாலம் படம் பார்த்துட்டு வக்கைனையா கேள்வி கேளு"

கிட்டத்தட்ட நேரம் 12 அடிக்க இருந்தது, ஒரு வேளை இந்த ஆளு பேயா இருப்பாரா, காலைப் பார்த்தேன். கால் இருந்துச்சு, பேய் இல்லை.

"அடுத்த கேள்வி, கடவுளோட தெ வொர்ஸ்ட் கண்டுபிடிப்பு எது?"

"......"

"அட மனுசனுங்க நீங்க தாண்ட என்னோட கேவலமான படைப்பு"

"....."

"நீ கடவுளை எங்க பார்ப்ப தினமும், "

"சரி, தெய்வமே நீ கடவுளாகவே இரு, இப்போ நீ கிளம்பு" என அந்த ஆளை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன்.

ஜன்னல் வழியாக எந்த பக்கம் போறாருன்னு பார்த்தேன், இந்த ஆளு நிச்சயம் கடவுள் இல்லை. பிள்ளையார் கோயிலுக்குள் போகல.

ட்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈங் ட்ரீஙஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈங் அலாரம் அடித்து எழுந்தேன், அடச்சே, கனவு,

"நீ கடவுளை எங்க பார்ப்ப தினமும் " இது தான் அந்த ஆளின் கடைசி வாக்கியம். தூக்கம் கலைந்த பின்னும் கனவில் வந்த ஆள் தெளிவாக நினைவில் இருந்தார்.

முகச்சவரம் எல்லாம் செய்துவிட்டு, 10 மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பினேன்.
சிக்னல்ல மஞ்சள் விழுந்துடுச்சு, இருந்தாலும் வண்டியின் வேகத்தை அதிகமாக்கி சிக்னலைக் கடக்க முயற்சிக்கையில், வலதுபுறம் பச்சை விழ, மின்னல் வேகத்தில் வந்த நகரப் பேருந்து என்னை இடிக்க தூக்கியெறியப்பட்டேன்.

என்னைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம்,எல்லோரும் வேடிக்கைப் பார்க்கின்றனர். கடவுளே!! யாரையாவது என்னைக் காப்பாற்ற செய். இவ்வுலகத்தில் என்னால் செய்யப்பட வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. காப்பாத்துங்கோ எனக் கத்த வேண்டும் போல் உள்ளது, ஆனால் முடியவில்லல. எத்தனை முறை இந்த மாதிரி விபத்துக்களைப் பார்த்து அச்சச்சோ என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறேன். தனக்கு நடக்கும்போது தான் மற்றவர்களின் வலிகள் வேதனைகள் புரிய ஆரம்பிக்கிறது.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஒருவர் என்னை தூக்கி ஆட்டோவில் போட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். அவரின் முகத்தை உற்றுப் பார்க்கிறேன், கனவில் வந்த அந்த ஆளின் முகச்சாயல். நான் பிழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை வந்தது,

10 பின்னூட்டங்கள்/Comments:

said...

சூப்பர்!

said...

very well conceived one...surely a valiant attempt...kudos man

said...

Thank you Sivanjanamji and Gnanesh annae!

said...

வினையூக்கி,
நல்ல கதை.
பாராட்டுக்கள். இன்னும் தொடருங்கள்.

said...

நல்ல கதை அண்ணா!
பாராட்டுக்கள்!

said...

வியர்டு பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன், பங்குபெற விழைந்தால் நலம்.

said...

Thank you வெற்றி, பூர்ணிமா.

said...

சூப்பரா இருக்குங்க.
ஏன் கடவுள்/பேய் சம்பந்தமாவே எழுதறீங்க?

மனுசங்க நாங்க உங்க கண்ணுக்குத் தெரியவேயில்லையா :))?

said...

கோவை மணி சில காதல் கதைகளும் எழுதி இருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு உங்க அபிப்ராயம் சொல்லுங்க

Anonymous said...

nice story senior