Wednesday, April 04, 2007

மீண்டும் ஒரு முறை - சிறுகதை

"காதலின் வெற்றி தோல்விகள் திருமணத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை. மதிப்புக்கூட்டப்பட்ட, முன்னுரிமை அதிகம் கொடுக்கப்படும் ஒரு வகையான அன்புதான் காதல். காதலியோ/காதலனோ விட்டுப் போய்விட்டால் முன்னுரிமையோ அல்லது கொடுக்கப்பட்ட மேலதிக அன்புதான் போகுமோ தவிர, அடிப்படை அன்பு நிச்சயம் அடிமனதில் இருந்து கொண்டுதான் இருக்கும். வெற்றி/தோல்வி சமயங்களில் அவன்/அவள் கூட இருந்திருந்தால் அதன் அனுபவம் வித்தியாசப்பட்டு இருக்குமோ, என்று நினைக்காதவர்கள் இல்லை. முகச்சாயல், குரல்,திரைப்பட பாடலகள், சம்பவங்கள்,இடங்கள் வார்த்தைகள், வாசிப்புகள் இப்படி ஏதாவது ஒன்றினால் நம் பழைய காதல் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியாது."

நான் கல்லூரியில் விழா மலருக்காக முன்பு ஒரு முறை எழுதி எழுதி இருந்த கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். ஹும், இவையெல்லாம் சுவை கூட்டப்பட்ட வார்த்தைகள். எனக்கு இப்பொழுதெல்லாம் நம்பிக்கையில்லை.

என்னைப் பொறுத்தவரை குடும்ப உறவுமுறைகளைத்தவிர, பிறரிடம் வரும் அன்பு எதேனும் ஒரு வகையில் நிபந்தனைக்கு உட்பட்டது. சம்பந்தபட்டவரால் தனக்கு ஏற்படும் அசௌகரியங்கள் எல்லையைத் தாண்டுகிறது என்று நினைத்தாலே அங்கு அன்புக்கு இறங்குமுகம் ஆரம்பிக்கிறது என்று புரிந்துக் கொள்ளலாம். அது ஊர்ஜிதமாகும்போது அந்த உறவுக்கு முடிவு கட்டப்படுகிறது.
ஒரு காதலை கல்லூரியில் இழந்த பின் தான் இதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பெரும்பாலான இழப்புகள் உண்மையில் நாம் நினைக்கும் அளவுக்கு இழப்பு இல்லை. அந்த இழப்பை ஈடுகட்ட வேறு விசயங்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ம்ம்ம், விசயத்துக்கு வருவோம், இன்றைக்கு ஜெனியிடம் இரண்டாவது முறையாக என் காதலைச் சொல்லப் போகிறேன். இதை காதல் என்றுகூட சொல்ல முடியாது. திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுதல். ஏற்கனவே ஒரு முறை சொன்னபோது தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் வரனை மட்டும் வாழ்கைத் துணையாக தேர்வு செய்ய உள்ளதாகவும், மற்றவைகளைப் பற்றி யோசிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்.

இந்த ஒரு வருட நட்பை வாழ்க்கைத்துணை நட்பாக்கத்தான் கேட்டேன், பராவாயில்லை நட்பு மட்டும் தொடரலாம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். ம்ம்ம் ஆறு மாதங்கள் ஓடி விட்டன. விருப்பத்தை சொல்லும் முன் இருந்த நட்பைவிட இந்த ஆறு மாதக் காலங்களில் நட்பு வலுப்பெற்றுள்ளது,. முன்பை விட அதிகம் பேசிக் கொள்கிறோம். தயக்கங்கள் இல்லை , பேசுவதிலும் பேசப்படும் விசயங்களிலும்.

ஜெனி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தத்தில் நிறுத்து விட்டு வருவதைப் பார்த்து படித்துக் கொண்டிருந்த வார இதழை மூடி வைத்தேன்.

"சாரி, கார்த்திக் டிராபிக்லே லேட்டாயிடுச்சு"

"இட்ஸ் ஓகே ஜெனி"

"என்ன விசயம் கார்த்தி, திடீர்னு வர்றச் சொன்னீங்க"

நீண்ட நாட்களாகப் பழகி இருந்தாலும் , "ங்க" மரியாதை விகுதி எப்போதும் நேரில் பேசும்போது எங்களிடையே இருக்கும்.

"ஜெனி, நடந்துகிட்டே பேசுவோமா, "

கடற்காற்று மிதமாக வீசியது, நான் சொல்லப்போகும் விசயத்துக்கு அருமையான சூழலைக் கொடுத்ததாக உணர்ந்தேன். இந்த கண நேரம் அப்படியே நின்று விடக்கூடாதா எனத்தோன்றியது. ஜெனி,நான்,கடல், காற்று இப்படியே இருந்துவிடலாம் என இருந்தது.

"கார்த்தி, மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாமா, "

"ம்ம்ம்" நிகழ்காலத்துக்கு வந்தேன்.

இருவரும் ஆளுக்கு ஒரு தட்டு வாங்கி கொண்டு அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தோம்.

"ஜெனி, நீங்க சில விசயங்களை மறுபரீசிலனை பண்ணுவீங்களா?"

"நீங்க எதை பத்தி பேசுறீங்க"

"ஐ மீன், இப்போ ஒரு கம்பெனிக்கு இண்டர்வியூ போறோம், வேலை கிடைக்கல, 6 மாசத்துக்கு பிறகு மறுபடியும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண அனுமதிப்பார்கள், அது மாதிரி ஆறு மாசத்துக்கு முன்ன உங்களை கல்யாணம் பண்ணிக்க என் விருப்பத்தை சொன்னேன், மறுத்து விட்டீர்கள். ம்ம்ம்ம் இந்த ஆறு மாசத்திலே ஏதேனும் மறுபரிசீலனைக்கான வாய்ப்பு உள்ளதா?? "

மெலிதான புன்னகையுடன் "தங்களின் மறுபரிசீலனை கோரிக்கையும் நிரகாரிக்கப்பட்டது" கோபம் இன்றி ஜெனியிடம் பதில் வந்தது.


இந்த பதிலை எதிர்ப்பார்த்து இருந்தாலும், இந்த முறை ஒத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை துளியூண்டு இருந்தது,

"ஏன்?"

"அதே பதில் தான் கார்த்தி, என் அப்பா அம்மா பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்"

"உங்க வீட்டுல, கலப்புத்திருமணம், காதல் இதெல்லாம் பிடிக்காதா?'

"உண்மையில், நான் இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மெலிதாகக் கேட்டால் கூடப் போதும், என் அப்பா, அம்மா ஒத்துக் கொள்வார்கள். இந்த நிமிடம் வரை என் விருப்பத்திற்கு மாற்றாக எதையும் அவர்கள் என்னிடம் சொன்னதில்லை. நான் படித்த படிப்பிலிருந்து, இப்பொழுது மெட்ராஸ் வந்து வேலைபார்க்கும் வரை. நான் எடுக்கும் முடிவுகள் சரியானவை என்று நம்புகின்றனர். ஆனால் இந்த கல்யாண விசயத்தில் அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட முடிவு செய்துள்ளேன். தாங்கள் தேடிய வரனை முடிக்கும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் நிறைவு மட்டுமே நான் என் அப்பா அம்மாவிற்கு செய்யும் சரியான கைமாறு."

சிறிது நேரம் கனத்த மவுனம் எங்களிடையே நிலவியது. இந்தப் பதில் ஜெனியின் மேல் வைத்திருந்த பிரியத்தை மேலும் அதிகப்படுத்தியது.

"நான் உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனோ!! " என்றேன்.

"நிச்சயம் இல்லை, உங்கள் விருப்பத்தை தானே சொன்னீர்கள். உங்களை அங்கீகரிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன், மற்றபடி உங்கள் மேல் கோபமோ வருத்தமோ இல்லை. நீங்க கடைசியா எழுதின கதைக்கு ரிப்லை மெயில் அனுப்பிச்சு இருந்தேன், வாசிச்சிங்களா/"

"ம்ம்ம். கிடைச்சது,

பேச்சு அரசியல், சினிமா, கிரிக்கெட் நாவல்கள் எனத் தொடர்ந்தது. இதுதான் ஜெனியிடம் பிடித்தது. நெருங்கிய நண்பர்கள் தங்களிடத்தில் காதலோ/திருமண விருப்பத்தையோ தெரிவித்து விட்டால், அதனை ஏற்றுக் கொள்ளாத பெரும்பாலான பெண்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஜெனியிடம் நான் இரண்டாவது முறை விருப்பம் சொன்ன பிறகும் கூட சகஜமாக இருந்தது அவள் மேல் வைத்திருந்த மரியாதையை மேலும் கூட்டியது.

அதை ஜெனியிடமே கேட்ட போது,

"குழம்பிய தண்ணீர்தான் தெளிவடையும், தெளிந்த நீர் எப்போதும் தெளிவுதான், எனக்கு குழப்பமில்லை"

ஆனால் தெளிந்த நீரை உறைய வைக்க முடியும் மனதில் நினைத்துக் கொண்டு, "கிளம்பாலாம " என்றேன்.

அவள் ஸ்கூட்டியை உதைத்து கிளம்புவதற்கு முன்னால், "ம்ம்ம், அடுத்த புரொபெசல் இன்னும் ஆறு மாசம் கழித்து" என்றேன்

"எனக்கு கல்யாணம் ஆயிட்டால் கூடவா?"

"இல்லை , கால்யாணம் ஆகாதவரை, விருப்பப்படுவது தப்பில்லையே!!" என்றேன்

இருவரும் சிரித்தோம். சிரிப்பில் நம்பிக்கை ஏற்பட்டது, "மூனாம் சுற்றில் முழுமையாகுமடா" என கமலஹாசனின் பாட்டு எங்கேயோ கேட்பது போல் தோனியது.

13 பின்னூட்டங்கள்/Comments:

said...

முதல் பத்தி அருமை..ரொம்ப நல்லா இருக்கு...

//மதிப்புக்கூட்டப்பட்ட, முன்னுரிமை அதிகம் கொடுக்கப்படும் ஒரு வகையான அன்புதான் காதல்///

முக்கியமா இந்த வரிகள்..அருமை

said...

Perfect Entertainer..!

said...

//.....இழப்புகள் உண்மையில் நாம் நினைக்கும் அளவுக்கு இழப்பு இல்லை//

சபாஷ்!

said...

RECORDED LIVEA????????????????????????????????....

said...

I enjoyed this throughly da....and am not able to stop my smiles....ha ha....

btw, it was a nice story....??

said...

முதல் பத்தியில் அருமையா சொல்லிருக்கீங்க.

நம்பிக்கை ஊட்டுறமாதிரி இருக்கு கதை!
6 மாசதிற்கு பிறகு திரும்ப டிரை பண்ணலாம்குரீங்களா அண்ணா? :)

Anonymous said...

என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒவ்வொரு முறையும் நான் என் காதலை அவளிடம் கூறிய பொழுதும் அவளிடம் இருந்து அதே பதில் தான். “என் அப்பா அம்மா பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”... ம்ம்..மூணு வருஷம் டிரை பண்ணினேன். இப்போ சமீபத்தில் தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியலப்பா...

Anonymous said...

என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒவ்வொரு முறையும் நான் என் காதலை அவளிடம் கூறிய பொழுதும் அவளிடம் இருந்து அதே பதில் தான். “என் அப்பா அம்மா பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”... ம்ம்..மூணு வருஷம் டிரை பண்ணினேன். இப்போ சமீபத்தில் தான் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியலப்பா.

Anonymous said...

good story. but if the girl is able to see his love for her in his eyes, wat she ll do....other than going away from him (even though she does not want to)

im in tat posititon.
Truth is i miss him a lot

said...

//good story. but if the girl is able to see his love for her in his eyes, wat she ll do....other than going away from him (even though she does not want to)//

அந்தப் பையனின் காதல் உண்மையானது "உணர்கின்றபோது" நிச்சயம் அந்தப் பையனை ஏற்றுக் கொள்ளலாம். நாம் எப்போது ஒருவரை "மிஸ்" பண்ணுகிறோம் என்று நினைக்கிறோமோ அந்த கணத்திலிருந்து அவரை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோம்

said...

நன்றி மங்கை,அல்கெமிஸ்ட், சிவஞானம்ஜி,ஞானேஷ், பூர்ணிமா மற்றும் பெயரில்லாமல் பின்னூட்டம் இட்டவர்கள். மிக்க நன்றி

said...

\\ஆனால் இந்த கல்யாண விசயத்தில் அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட முடிவு செய்துள்ளேன். தாங்கள் தேடிய வரனை முடிக்கும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் நிறைவு மட்டுமே நான் என் அப்பா அம்மாவிற்கு செய்யும் சரியான கைமாறு."\\

நாம் விரும்புபவரை மதித்தால் மட்டும் போதாது, அவரது விருப்பங்களையும் மதிக்க வேண்டும்,


\அவள் ஸ்கூட்டியை உதைத்து கிளம்புவதற்கு முன்னால், "ம்ம்ம், அடுத்த புரொபெசல் இன்னும் ஆறு மாசம் கழித்து" என்றேன்\


அவரது கடமையாக நினைக்கும் காரியத்தை தடை செய்யும் வண்ணம், சிதறடிக்கும் வண்ணம், கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் வைப்பது.......உண்மையான அன்பின் வெளிப்பாடாக இருக்குமா??

அதில் ஒரு ஒருவித பிடிவாதமே மேலோங்கி இருக்கும்,.........நினைத்ததை, விருப்ப பட்டது கிடைத்தே ஆக வேண்டும் என்ற வேகம் ஆரோக்கியமானதா?

\\இருவரும் சிரித்தோம். சிரிப்பில் நம்பிக்கை ஏற்பட்டது, "மூனாம் சுற்றில் முழுமையாகுமடா" என கமலஹாசனின் பாட்டு எங்கேயோ கேட்பது போல் தோனியது.\\

விரும்பும் நபரை, திரும்ப திரும்ப தொந்தரவு செய்யாமல் , அவரது கொள்கைகளை மதித்து ஏற்றுக்கொள்வது சிறந்தது.

said...

arumai arumai un ezhuthuppani thodarga