Sunday, April 29, 2007

முரண்பாடுகள் - சிறுகதை

தமிழ் செய்தித்தாள்களை இணையத்தில் உலவிக் கொண்டிருக்கையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பதை படிக்கையில் மனது தன்னையும் அறியாமல் 15 வருடங்கள் பின்னோக்கிப் போனது.

எங்கள் ஊர் பள்ளியில் தேர்வு முடிவுகள் வரும் அன்றே முதல் மூன்று இடம் பெற்றவர்களின் மதிப்பெண்கள் மட்டும் தலைமை ஆசிரியருக்கு வந்துவிடும். மனது படபட என அடித்துக் கொண்டது. மதிப்பெண்களை விட அப்பாக்குத்தான் பயம். குறைந்த பட்சம் பள்ளியிலாவது முதற் மாணவனாக வரவேண்டும், இது தான் நிபந்தனை. அது நடக்காவிடில் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைக்கையிலேயே உதறல் எடுத்தது. இராசப்பன் காலையிலே வீட்டுக்கு வந்துட்டான்.

இராசப்பன், என் வகுப்புத்தோழன், எனக்கும்,அவனுக்கும் நடுவிலேதான் படிப்பிலே கடும்போட்டி. போட்டி இருந்தலும் நாங்க நல்ல நண்பர்களாகவே இருந்தோம்.

"அம்மா , நான் ஸ்கூலுக்கு போய் ரிசல்ட்டும், மார்க்கும் பார்த்துட்டு வர்றேன்" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு நானும் இராசப்பனும் பள்ளியை நோக்கி நடந்தோம். பள்ளிக்குப் போற வழியிலே இருக்கிற பிள்ளையார் கோயில் வாசல்ல நின்றேன்.

"இராசப்பா, சாமி கும்பிட்டுட்டு போலாம்ட"

"வேணாம் கார்த்தி , நான் வரல, இந்த கோயில்ல பூஜை பண்றவர், நான் போறப்ப எல்லாம் ஏற இறங்கப் பார்த்துட்டு விபூதிய அலட்சியமா கொடுப்பாரு, நான் இப்ப எல்லாம் சர்ச்சுக்குதான் போறது,
சர்ச்ல சாமிக்கிட்ட கூடப் போய் தொடலாம்"

"இல்லட எல்லா சாமியும் ஒண்ணுதான், வா" என வலுக்கட்டாயம அவனை இழுத்துட்டுப் போனேன்.

உள்ளே அந்த கோயிலில் பூஜை செய்கிறவர், என் அப்பாவைப் பற்றி விசாரித்து விட்டு, விபூதி குங்குமத்துடன் ஒரு பழமும் கொடுத்தார். இராசப்பன் சொன்னதைப் போலவே, இராசப்பனுக்கு கொடுக்கும்போது மட்டும் வேண்டா வெறுப்பாகவே கொடுத்தார். அவனுக்கு பழம் கொடுக்கவில்லை.

"இதுக்குதான் முதல்லயே சொன்னேன், வரமாட்டேன்னு"

'இல்லைடா அவர் தட்டில ஒரு பழம்தான் இருந்துச்சு, முதல்ல நின்னதால எனக்குக் கொடுத்துட்டாரு"

"ம்ம், உனக்கு இதெல்லாம் புரிய சில வருசம் ஆகும்"

பள்ளியில் தலைமையாசிரியர் நானும் , இராசப்பனும் ஒரே மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் மட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் முதல் இடத்தைப்பிடித்துள்ளதாக சொன்னார்.

பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் இராசப்பன் அப்பாவின் செருப்புத்தைக்கும் கடையில் அவன் நின்று விசயத்தை சொன்னதும் அவருக்கு தலைகால் புரியவில்லை. முகத்தில் ஏற்பட்ட சந்தோசத்தின் அளவை சொல்ல முடியாது. ஓடிப்போய் எங்கள் இருவருக்கும் தேநீரும் வடையும் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். நாங்க தேநீர் குடித்து முடிப்பதற்கு முன் அவர் அந்த வரிசையில் இருந்த அனைத்து தெரிந்த கடைகளிடம் போய் சொல்லிவிட்டு வந்தார். இராசப்பனை எப்படியாவது நிறைய படிக்க வைத்துவிடுவது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக இராசப்பன் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

நாங்கள் இருவரும் என்னுடைய வீட்டிற்கு வந்தோம். இராசப்பன் முதன்முறையாக தயங்கி தயங்கி வீட்டிற்குள் வந்தான். என் அம்மா, ஒரு தட்டு நிறைய பலகாரங்கள் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தார்கள். கூச்சப்பட்டுக் கொண்டே அவன் சாப்பிட்டு முடித்தான். நானும் அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டேன்.

அவன் போனதும் அம்மாவிடமிருந்து எனக்கு முதுகில் அடி விழுந்தது.

"அறிவில்லை உனக்கு, கேவலம் அவன் தட்டிலேந்து எடுத்து சாப்பிடுற" என்று அந்த தட்டை கழுவி கொல்லைபுறத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.

"கேவலம்" என்ற வார்த்தை மனதை மிகவும் வலிக்கச் செய்தது.

இது மாதிரி ஒரு முறை கணக்கு வாத்தியார் வீட்டில் நடந்ததாக சொல்லி இருக்கிறான். நல்ல வேளை அவன் போன பிறகு அம்மா இப்படி நடந்து கொண்டார்கள். அப்பா இப்படி இல்லை. இராசப்பனை பள்ளியில் பார்க்கும் பொழுதெல்லாம் தொட்டு பாராட்டி பேசுவார். இராசப்பனுக்கு பள்ளிகட்டணம் கூட கட்டி இருக்கிறார்.

மாலை, கொல்லைப்புறத்தில் நான் உட்காந்து இருந்தபோது, அப்பா வந்தது தெரிந்ததும் உள்ளே சென்றேன்.

"கேவலம், அவனும் இவனும் சமமா மார்க் வாங்கி இருக்கானுங்க, செருப்புதைக்கிற பயலோட புள்ளையும் இவனும் ஒண்ணா!! ஊர்ல மானமே போச்சு,சகிச்சுக்க முடியல" அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கேவலம்" என்ற வார்த்தை இரண்டாவது முறையாக வலித்தது.

அப்பாவுக்கு "அவனும் " முதல் மதிப்பெண்கள் எடுத்துள்ளான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

நாங்கள் திருச்சிக்கு மாற்றலாகி போகும் வரை இராசப்பன் எப்போதும் வீட்டுக்கு வந்தாலும் அந்த கொல்லைபுற தட்டுதான்.

பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தேன். இந்த சாதிக்கூறு எப்படி எல்லா இடத்திலேயும் நிறைஞ்சு இருக்குன்னு கால ஓட்டத்திலே புரிந்தது. சாதி தவிர்க்கப்பட வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு விசயமாகி விட்டது. எல்லோரும் ஒரு அடையாளத்தை நோக்கி ஒடுகின்றனர். இல்லை என்றால் பொய்யான கவுவரத்திற்காக அடையாளத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். இப்போ இராசப்பன் ஒரு அரசாங்க நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கின்றான்.

இராசப்பன் தனது கல்யாண பத்திரிக்கை கொடுக்க என் வீட்டிற்கு வந்திருக்கையில்,வருடங்கள் ஓடியும் கோயில் விசயமும், கணக்கு வாத்தியார் வீட்டு சம்பவமும் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் இன்னமும் இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டான். இப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் அவனுக்கு டிஸ்போஸபிள் தட்டில் தான் சாப்பாடு.

அவன் கல்யாணப்பத்திரிக்கையில் மணமகனின் பெயர் ராஜ் என மாற்றப்பட்டிருந்தது. அவனிடம் கேட்ட போது மாமனார் வீட்டின் விருப்பத்திற்கேற்ப அப்படி போட்டுள்ளதாகக் கூறினான்.

கல்யாணத்தில் கல்வியின் செழுமையும், பொருளாதார வளமையும் வந்திருந்த ஒவ்வொருவரின் நடை உடை பாவனைகளில் நன்றாகத் தெரிந்தது.

"ராசப்பா, சாரி ராஜ், எங்கட உங்க அம்மா, அப்பா!!'

"ஹே, சும்மா கிண்டல் பண்ணாதே, அங்க மூனாவது ரோல இருக்காங்க பாரு"

"அறிவில்லை, உனக்கு அவங்களை சபையில முந்தி இருக்க வைடா"

"நோ, நோ, தே டொண்ட் நொ ஹௌவ் டு பிஹேவ் வித் ஹை கிளாஸ் பியுபுல்"

அதுக்கு மேல் அவனிடம் பேச விருப்பமில்லாமல், அவனோட அம்மா அப்பா இருந்த வரிசையில் அவர்களின் அருகில் நானும் உட்கார்ந்து கொண்டேன். எதோ ஒன்றை தாங்கள் இழந்து விட்டதாக அவர்கள் கண்கள் சொல்லாமல் சொல்லியது.

மணமகள் தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து இருக்க, மணமகன் ராஜ் என்ற முன்னாள் இராசப்பன் திருமாங்கல்யத்தை சம்பிரதாயப்படி மணமகளின் கழுத்தில் கட்டினார்.

ராஜ் ஒரு உயர் அடையாளத்தை தேடிக்கொண்ட பெருமிதத்துடன் மணமகளுடன் உட்கார்ந்து இருந்தவரை வாழ்த்தி விட்டு, அடுத்ததாக எனது சாதி சங்கத்தின் புதிய தலைவராக நான் பொறுப்பேற்க இருக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமானேன், சாதி அடையாளத்தை அடியோட அழிக்க விருப்பம் இருந்தும், அப்படி செய்ய முடியாத சுயநல சூழ்நிலைக்கைதியாக.

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

thought provoking ...... nice one

said...

எந்தவொரு மனிதனும் தானும் உயர்ந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களும் தன் மாதிரியே உயர வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால், ஒரு கூட்டமே உயர்வார்கள். இக்கூட்டத்தினரின் உயர்வு ஒரே போல் அமைந்துவிட்டால் அங்கே வேறு எந்த பிரிவும் இருக்க முடியாது. இப்படி ஒவ்வொரு கூட்டமும் இருந்துவிட்டால் சாதி என்ற அரக்கன் காணாமல் போய்விடுவான். ஆனால் இங்கே காணாமல் போனது மனிதர்கள், தம் சக மனிதர்களைக் கைத்தூக்கிவிடுவதுதான். சாதி வளர்ச்சிக்கு அரசோ, நூலோ, பரம்பரையோ, நாடோ காரணமில்லை. மனிதர்கள்தான்..

தம்பி வினையூக்கி சிந்தனையைத் தூண்டும் கதை இது. உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது கதையுலகில். தொடரட்டும் உமது பணி..

said...

நன்றி ஞானேஷ் மற்றும் உண்மைத்தமிழன்