ஹர்ஷினி பாப்பா - சிறுகதை
"டேய் கார்த்தி, இங்க வந்து பாருடா, ஹர்ஷினி பாப்பா எப்படி டான்ஸ் ஆடுறான்னு!" என் தங்கை எனது மாடி அறையை நோக்கிக் கத்தினாள்.
சுவாரசியமா செகுவேராப் பற்றி படித்துக் கொண்டிருந்த நான் மாடிக்கதவைத் திறந்தேன். போக்கிரிபொங்கல் பாடல் பண்பலை வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது. குட்டி பாப்பா விஜய் மாதிரியே காலரைத் தூக்கி விட்டு ஆடிக்கொண்டிருந்தது.
"ஏண்டி இப்படி இம்சை பண்ற, வேணும்னா, அந்த பாப்பாவோட சேர்ந்து நீயும் ஆடு, இன்னொருதடவை கத்தினீன்னா, அந்த ரேடியோவைப் போட்டு உன் தலையில உடைச்சுடுவேன்" என்று கத்திவிட்டு மேலே வந்தேன். என் காட்டுக்கத்தலைப் பார்த்த ஹர்ஷினி பாப்பாவுக்கு முகம் வாடிபோனது.
ஹர்ஷினி பாப்பா எங்க பக்கத்து வீட்டுக் குழந்தை மூன்று வயதிருக்கும். என் தங்கைக்கும் தேர்வுகள் முடிந்து விட்டதால் அந்தக் குட்டிபாப்பாவை எங்க வீட்டுக்கு கூட்டி வந்து விளையாடிக்கிட்டு இருப்பாள். போன வாரம் வரை குட்டிபாப்பா எங்க வீட்டுக்கு வந்தால் நேரா என் மாடி அறைக்கு வந்து தயா தக்கான்னு குதிச்சுட்டு இருக்கும். அந்த பாப்பா மேல வந்தால் எங்க வீட்டு குட்டி பிசாசும் மேலே வந்துடும். நிம்மதியா ஜெனிக்கிட்ட தொலைபேச முடியவில்லை. என்னோட தனிமை பெருமளவு பாதிக்கப்பட்டது.
கதவை மூடி வைத்தாலும் குட்டி பாப்பா அழகா மாடி ஏறி வந்து கதவைத் தட்டி, "கொம்பிட்டர்ல டோலு டோலு பாட்டு" ன்னு கேட்கும். இன்னொரு நாள் அல்கெமிஸ்ட் புத்தகத்தோட எல்லா பக்கத்திலேயும் கிறுக்கி வைத்திருந்தது.
"என்ன இதுன்னு" கோபமா பாப்பாவிடம்
ரொம்ப கூலா " கிறுக்கா புறுக்கா" என்று சொன்னது.
முதுகில நாலு சாத்தலாம்னு தோணியது.
"இந்த ரூம்ல சந்திரமுகி இருக்கு, குட்டி பாப்பா இனி மாடிக்கு வந்தால் தூக்கிட்டுப் போயிடும்னு சொன்னுச்சு" என்று அந்தக் குழந்தை இனி மாடிக்கு வருவதை தவிர்க்க பயம் காட்டினேன். அன்றிலிருந்து ஹர்ஷினி பாப்பா மாடிக்கு வருவதேயில்லை.
லேசாகப் பசித்தது மாதிரி இருந்ததால், கிழே வந்தேன்.
"எங்கடி ஹர்ஷினி பாப்பா"
"நீ தான் நாய் மாதிரி வள்ளு வள்ளுன்னு கத்தினில்ல அதுல குழந்தை பயந்து வீட்டுக்குப் போயிடுச்சு"
அவள் சொன்னதைக் கவனிக்காமல் "அம்மா சாப்பாடு வை" என்றேன்.
"ஏண்டா, நீ மாடி ரூம்ல சந்திரமுகி பேய் இருக்குன்னு சொன்னே, குழந்தை நேத்து நீ இல்லாதப்ப மாடிக்கு போய் இன்னொரு ஹர்ஷினி பாப்பாவும் , சந்திரமுகி பேயும் இருக்குன்னு அலறிட்டு கீழே ஓடியாந்துடுச்சு"
"அதுவா தன்னையே கண்ணாடில பார்த்துட்டு பயந்து இருக்கும்"
"குழந்தைகளை எல்லாம் பயமுறுத்தாதடா.. பிஞ்சு மனசு, ஆழ்ந்து பதிஞ்சுடும்"
"கிழவி மாதிரி அட்வைஸ் பண்ணாதே,முதல்ல அந்த ரிமோட்டை எடு" என்று சொல்லி தொலைக்காட்சியில் காத்துக் கருப்பு பார்க்க ஆரம்பித்தேன்.
மறுநாள் மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டதால், காபி குடித்து விட்டு மாடிக்குபோனப்ப அங்க ஹர்ஷினி பாப்பா என்னோட கணினி முன்னால் நின்றுக்கொண்டு அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. என் தங்கை இல்லாவிடில் இது தான் பிரச்சினை. நேரா என் அறைக்கு வந்துவிடும். சந்திரமுகி பேய் பயம் போயிடுச்சு போல.
"பாப்பா, அக்காக்கிட்ட போய் விளையாடு, இங்க பேய் வரும். போ போ"
என விரட்டினேன்.
குழந்தைங்க கோபமா பார்த்தா அதுலக் கூட ஒரு அழகு இருக்கும். ஹர்ஷினி பாப்பா முறைச்சு பார்த்துச்சு.அது முறைக்கிறத பார்த்து எனக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. ஆனால் சிரிச்சிட்டா இங்கேயே உட்கார்ந்துடும். ஜெனிக்கிட்ட இருந்து அழைப்பு வரும் வேற.
பாப்பா, என்னைப் பார்த்துக்கிட்டே படியிலே இறங்கி கீழே போனது.
அன்றிரவு எங்க வீட்டுல சேர்ந்து சாப்பிடும்போது,
"கார்த்தி, இன்னக்கி நாள் முழுசும் ஒரே போருட !! காலையிலே ஹர்ஷினி பாப்பா ஊருக்குப் போயிட்டா, அடுத்த மாசம் தான் வருமாம்" என்றாள் என் தங்கை.
அப்போ இன்று சாயந்திரம் நான் பார்த்தது??? ##@@$%%#$@#$%
5 பின்னூட்டங்கள்/Comments:
எதிர்பார்த்த டுவிஸ்ட்...என்றாலும் நல்லாயிருக்கு உங்க கதை சொல்லும்பாணி..
தலைவா.. ஜெனியக் கூட என்னால பொறுத்துக்க முடியுது.. இந்தப் பேய்க் கதைய எப்ப நிறுத்தப் போறீங்க?
நன்றி ஆழியூரான்.
dai....nijamavey nee oru naal chandramukia parka porae!!
நன்றி ஞானேஷ் அண்ணன்
Post a Comment