Monday, May 28, 2007

எல்லாம் சாமிதான்

பள்ளியில் முதல் மாணவன் நான்,
எல்லாம் கற்பகவிநாயகர் அருள்
- அம்மா அத்தையிடம்

கடவுள் சன்னிதானம் பணம் போயிடாது
ரூபாய் தாளை நான் கொடுக்க
- ஒரு பெரியவர் சக நண்பரி்டம்

கர்த்தருக்கு நன்றி நீ கிடைத்ததுக்கு
- காதலி என்னிடம்

சாமிப்பேரு உனக்கு, அதனாலதான் இவ்வளவு நல்ல குணம்
- பக்கத்து வீட்டு பாட்டி

இராப்பகலாய் நான் முயற்சித்து முடித்த வேலை
அலுவலகக் கோயிலில் சிறப்பு யாகம்

பல நாள் வருத்தமெல்லாம் போனது,
"கடவுள் மாதிரி வந்து எம்புள்ளய காப்பத்திட்ட"
- என் ரத்தம் பெற்று உயிர் பிழைத்தவரின் தாய்

****************
பி.கு: சிரத்தை எடுத்து கவிதை வடிவில் எழுதவேண்டும் என்று முயற்சித்தது. எங்கேனும் வார்த்தைகளை மாற்றிப் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் சொல்லுங்களேன்.

நலமா !! - கவிதை (மாதிரி)

நலம் என்று தெரிந்தும்,

நலம்தான் என்ற பதிலை எதிர்பார்த்து

நலமா என்ற ஒரு கேள்வி ஏன் எனில், கேள்வி திரும்பும்போது,

நலமில்லை எனினும், நலம் என்ற பதிலை அளிக்கத்தான்

........

தோழி நீ இன்றும் நலமா!!!!

*************************************
பி.கு : ஹிஹிஹி, கவிதை மாதிரி!!!
*************************************

Saturday, May 26, 2007

XP , Firefox Mozilla தமிழ் கொம்பு (கே, கெ) மாற்றங்கள் , நன்றி எ-கலப்பை முகுந்த்

நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருந்து இருக்கும். எக்ஸ்.பி யில் நோட்பேடிலோ, வேர்டிலோ தமிழில் டைப் பண்ணினால் "கெ, கே" இவற்றிற்கு வரும் கொம்புகள் இடம் மாறி வரும். இதே நிலைமை தான் ஃபயர்பாக்ஸில் தமிழ் எழுத்துருக்களைப் படிப்பதிலும் ஏற்பட்டு இருக்கும்.

இந்த சந்தேகத்தை எ-கலப்பை முகுந்த் அவர்களிடம் கடந்த வாரம் கோவை பதிவர் பட்டறையில் கேட்ட போது எக்ஸ்.பி நிறுவும் பொழுது "இண்டிக்(indic)" சார்பு கோப்புகளை நிறுவாமல் விட்டு விடுவதுதான் இதற்கு காரணம் என்றார்.

அதை மீண்டும் நிறுவ Start --> Control Panel போனீர்கள் என்றால் ஒரு சன்னல் திறக்கும்.



அதில் Date,Time, Language Regional options யை சொடுக்கவும். சொடுக்கிய பின் கிடைக்கும் கீழ் காணும் பக்கத்தில்



Regional and Language options யை சொடுக்கவும்.

கீழே காட்டப்பட்டுள்ள ஒரு சன்னல் தனியாகத் திறக்கப்படும்.




சிவப்பு நிறத்தில் சுழிக்கப்பட்டுள்ள இடத்தை தேர்வு செய்து "Apply" செய்தால் எக்ஸ்.பி நிறுவும் குறுந்தகட்டை கணினிக் கேட்கும். குறுந்தகட்டை உள்ளீடு செய்துவிட்டு இண்டிக் சார்பு கோப்புகள் நிறுவுதல் முடிந்தவுடன் கணினியை மீண்டும் ஆரம்பித்தால்(Re-Start) நோட்பேடி்லும் எம்.எஸ் வேர்டிலும் தமிழி்லேயே சரியாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம்.Firefox mozilla உலவியி்லும் தமிழ் எழுத்துருக்கள் ஒழுங்காகத் தெரியும்.

இதை நிறுவுவதன் மூலம் உலவியின் மேற்பகுதியில் [][][] என்று கட்டம் கட்டமாகத் தெரிவதும் நின்று தமிழில் தெரியும்.

Thursday, May 24, 2007

சென்னை 600028 - திரைப்பட பார்வை

மேல இருக்கிற மஞ்சள் தோல் பிய்ந்து போன டென்னிஸ் பந்து, உடைந்த பெஞ்சிலிருந்து வந்த பேட், 20 ரூபாய் பெட் மேட்ச்சுக்கு 5 ரூபாய் குறையிறப்ப, அந்த 5 ரூபாய் கொடுத்தவனை ஓபனிங் இறங்க வச்சது, 10 ரன்னுக்கு ஒரு முறை 2 ரன் எக்ஸ்ட்ரா ஸ்கோர் ஏத்துறது, கவுண்டி கிளப் ல ஆடுற மாதிரி தன் டீம்முக்கு மேட்ச் இல்லாதப்ப அடுத்த டீம்முக்கு ஆடிக் கொடுப்பது, ஒத்தையா நின்ன அசோக மரத்தை ஸ்டம்பா வச்சு அதுக்கு பின்ன மட்டும் அடிக்கும் Back-Run கிரிக்கெட் ம்ம்ம் இப்படி அனேக சிறு வயது கிரிக்கெட் சம்பந்தப் பட்ட நினனவுகள் அத்தனையையும் ஒரு ஷாட்ல கிளறிவிடுற படம் தான் "சென்னை - 600028".



எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. விசாலாட்சி தோட்டம்(சுண்ணாம்பு கால்வாய்) "ஷார்க்ஸ்" அணியினர் ராயபுரம் "ராக்கர்ஸ்" அணியினருடன் வருடாவருடம் நடைபெறும் ரேடியோ மிர்ச்சி கிரிக்கெட் போட்டியில் அவர்களிடம் தோற்றுப் போகின்றனர். அதற்கடுத்த வருடமாவது நடக்கும் போட்டியிலாவது ராக்கர்ஸை தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் "ஷாக்கர்ஸ்" அணியினருக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் நட்பு, மகிழ்ச்சி, பிரிவு,துயரம் போராட்டம், காதல், வலி ஆகியவற்றை உயிரோட்டத்துடன் சலிப்புத்தட்டாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

"ராக்கர்ஸ்" அணியின் ரகு(ஜெய்) விசாலாட்சி தோட்டத்திற்கு குடிவந்த பிறகு, அவரை எதிரிபோல் பாவிக்கும் "ஷாக்கர்ஸ்" கார்த்திக்(வானொலி தொகுப்பாளர் சிவா) பின் தன் காதலை சேர்த்து வைப்பதால், ரகுவிற்கு, கார்த்திக் ஒவ்வொரு கட்டத்திலும் அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான உணர்வுபூர்வமான நகைச்சுவை.




படத்திற்கு கதாநாயகன் என்று யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கதையோட்டத்துடன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரவிந்தின் கதாபாத்திரம், அவருடைய காதல் , பாடல்கள் கதையுடன் ஒட்டவில்லை, ஒரு வேளை வியாபார ரீதியாக படத்தை நிலைநிறுத்திக் கொள்ள இவை அவசியப்பட்டு இருக்கலாம்.

படத்தில் இன்னொரு காதல் கிளைக்கதையும் உண்டு. பழனியின்(நிதின் சத்யா) தங்கையை கார்த்தி(சிவா) காதலிக்கிறார். அது பழனிக்கு தெரிந்து கார்த்தியை அடித்து உதைத்துவிட்டு அழுதுக் கொண்டே பேசிச் செல்லும் வசனங்கள் பல நடுத்தரக் குடும்பத்து அண்ணன்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்.



"யாரோ யாருக்குள்ள இங்கு யாரோ" பாடல் எஸ்.பி.பி - சித்ரா குரல்கள் அப்படியே வருடிக் கொடுக்கிறது. "சரோஜா சாமானிகாலோ" பாடல் இரண்டாவது ஆட்ட காட்சியிலும் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைக்கிறது.

இளவரசு, ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் உபகரணங்களை வைத்துக் கொள்ள தோதாக இருக்கும் சலூன் கடையை நடத்துகிறார். அவரின் கிரிக்கெட் ஆடும் விருப்பமும் அதனைச் சுற்றி பின்னப்பட்டுள்ள காட்சிகளும் படத்தை சுவாரசியமாக இறுதிப் போட்டிக்கு நகர்த்துகின்றன. படத்தோட மிகப்பெரிய "பஞ்ச்" இறுதிக் காட்சியும் அது சம்பந்தபட்ட முற்பாதிக் காட்சியும்.
"அட கலக்கிட்டாங்கடா" என்று நம்மையறியாமல் சொல்ல வைக்கும் இடங்கள் படத்தில் நிறைய,

ஆம்புலன்ஸ் வண்டி வைத்திருக்கும் ஏழுமலை, தன்னோட நண்பனை உயிருக்குப் போராடும் நிலையில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டி வந்து,

"இன்னக்கித்தாண்டா இந்த வண்டில வர்றவங்களோட வலி வேதனை புரிஞ்சது" என்று சொல்லி கதறும் இடத்தில் இந்த நடிகர் புதுமுகம் தானா என யோசிக்க வைத்தது. படத்தில் பெரும்பாலன நடிகர்கள் நடிகைகள் , புதுமுகங்கள் அல்லது அதிகம் அறியப்படாதவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு தைரியமாக இப்படத்தை தயாரித்த சரண் குழுவினரைப் பாராட்டலாம்.

"படவா கோபி" யின் கமெண்டரி பல இடங்களில் பின்னனி இசையினால் புரியாமல் போனாலும் காதில் விழுந்தவரை எல்லாம் சிரிப்பை வரவழைப்பவை.

"இவர் பந்தைப் பிடித்தாரா? அல்லது பந்து இவரைப் பிடித்ததா?"

"கௌரி ஆண்டி வீட்டு எண்டிலிருந்து ஓடி வரும் பவுலர்"

"முல்லைப் பெரியாறை விட பெரிய ஆறு"

"பேட்ஸ்பேன் அவர்களே , திருப்பதி லட்டு போல் வரும் மஞ்சள் கலரில் வருவதைப் பார்த்து அடியுங்கள்"

"இவருக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாத என்பது இவருக்கேத் தெரியாது"

என்பவை கல்லூரிக் கிரிக்கெட் போட்டிகளில் கேட்ட சில வர்ணனைகளை ஞாபகப் படுத்தியது.

நகைச்சுவை நடிகனால் இப்படியும் ஒரு பரிமாணம் அளிக்க முடியும் என்பதற்கு பிரேம்ஜி அமரன். இவரின் "ஒன் லைனர்ஸுக்கு" தியேட்டரே அதிர்கிறது.




படத்திற்கு லெனின் எடிட்டிங்கும், ஷக்தி சரவணின் ஒளிப்பதிவும் பெரிய பலம். தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளைக் காட்டும்போது லெனினின் அனுபவம் தெரிகிறது.

தமிழ் திரையுலகில் படைப்புத்திறனுக்கும் பஞ்சமில்லை, ரசிப்புத்திறனும் குறையவில்லை என்பதை பறைசாற்றும் மற்றொருபடம் சென்னை - 600028.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தனக்கு மீண்டும் அந்த பழைய கிரிக்கெட் காலங்கள் கிடைக்காதா என ஒருக் கணமாவது ஏங்க வைக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.

Monday, May 21, 2007

பாமரனுடன் நான் - புகைப்படங்கள்

கோவைப் பதிவர் பட்டறையை மிகவும் கலகலப்பாக்கியவர் எழுத்தாளர் பாமரன்.
இவரது கோவை லொள்ளு பேச்சு எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்







கோவைப்பதிவர் பற்றிய விவரனைகளைக் காண இங்கே சொடுக்கவும்


எஸ்.பாலபாரதியின் பட்டறைத்துளிகள் பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.

Sunday, May 20, 2007

கோவைப் பதிவர் பட்டறை - ஒரு (முழுமையான!!) பார்வை


பொதுவாக வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சிரமமில்லாமல்/ அலைச்சல் இல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமே என்ற ஒரு கவலை இருக்கும்.
பெரும்பாலும் அந்தக் கவலைப்படியே இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இந்த பட்டறை நடந்த இடத்தை வெளியூர் பதிவர்கள் சிரமமில்லாமல் எளிதில் சென்றடைய முடியும் இடமாக தேர்வு செய்தமைக்காக நிச்சயம் ஓசை செல்லாவைப் பாராட்டவேண்டும்.(வெளியூர் பதிவர்கள் வந்து தங்குவதற்கும் ஓசை செல்லா ஏற்பாடு செய்து இருந்தார்).

சுமார் 9 மணியளவில் பட்டறை நடக்கும் இடத்தை அடைந்தபோது, "Stand -in Captain" பாலபாரதி ஏற்கனவே தனது ஒருங்கிணைப்பு குழுவினரோடு வந்து இருந்து நிகழ்ச்சிக்கான வேலைகளை மும்முரமாக செய்துகொண்டிருந்தார். ஓசை செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிக்கான வேலைகளை கைத்தொலைபேசியின் வழியாக வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

முதலில் டெல்லியிலிருந்து சென்ஷி, பெங்களூரிலிருந்து "எ-கலப்பை" முகுந்த், சென்னையிலிருந்து உண்மைத்தமிழன், உள்ளூர்காரர்கள் உதயசெல்வி, கோவை ரவீ, சுப்பையா வந்து சேர சுய அறிமுகங்கள் ஆரம்பமாயின. வின்செண்டு, தாமோதரன் சந்துரு , செகுவேரா, ஜெயகுமார், லிவிங் ஸ்மைல் வித்யா, ராஜாவனஜ், பாரதி ராஜா, மோகன் தாஸ் ஆகியோர் ஒவ்வொருவராக அறிமுகங்களுடன் ஊடாக சேர்ந்து கொண்டனர். இதில் பாரதிராஜா தனக்கு மதியம் தேர்வு இருந்தபோதும் வலைப்பதிவர்களை சந்திக்கும் ஆர்வத்தில் வந்ததாகக் கூறினார்.




பெண் பதிவர் உதயசெல்வி சுய அறிமுகங்களின்போது உண்மைத்தமிழனின் பெயரை மட்டும் ஆச்சர்யத்துடன் மீண்டும் கேட்டபோது, பின்னால் இருந்து

"அப்போ நாங்க எல்லாம் யாரு?" குரல் வர(அட நம்ம தழலார் வந்துட்டாக!!?) ஏற்பட்ட சிரிப்பொலி அடங்க சில நொடிகளானது. உதயசெல்வி தனது ஆரம்ப கால தட்டச்சு அனுபங்களை சுவையாக பகிர்ந்து கொண்டார். சென்ஷிக்கான பெயர்க் காரணமும் நட்பின் அருமையைப் பறைசாற்றும் விதமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து சுப்பையா ஒரு வாரத்தில் கணினி கற்றுக் கொண்ட விதத்தை அவருக்கே உரித்தான நடையில் சொன்னது சுவாரசியமாயிருந்தது. சிறப்பு அழைப்பாளார்கள் பாமரன் மற்றும் இசைக் கலைஞர் ஆறுமுகம் வர பட்டறை களைக் கட்ட ஆரம்பித்தது.

பாமரனுக்கும் ஆறுமுகத்துக்கும் நடந்த கலந்துரையாடலில் ஆரம்பகால சினிமா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.



தாதாசாகிப் பால்கேக்கு முன்னரே தமிழரான சாமிக்கண்ணு பேசாப்படத்தை எடுத்துள்ளார் என்ற விவரத்தை ஆறுமுகம் சொன்னபோது பெருமையாக இருந்தது. பாடல்கள் இல்லாத படம், பின்னனி இசையின்றி திரைப்படம், சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்கள் தான் இசைக்கலைஞர்களா? என வாதப் பரிமாற்றங்கள் சூடு பிடிக்கத்துவங்கியது.

முடிவிலா இசைப் பற்றிய விவாத முடிவில்,



சுப்பையா சார் சிறப்பு அழைப்பாளர் ஆறுமுகத்துக்கும்,



வலையுலக "ஹீரோ?!! செந்தழலாருக்கும்" , பாலபாரதிக்கும் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடைப் போர்த்தி மரியாதை செய்தார்.

கடைசிவரை இருந்து அனைத்து அமர்வுகளையும் கூர்ந்து கவனித்த திரு.வின்செண்ட், மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட நெல் விதைகளைப் பயன்பாடுத்தலில் எப்படி விவசாயிகள் பகடைக்காய்களாக அரசாங்கத்தாலும் பன்னாட்டு நிறுவங்களாலும் பயன்படுத்தப் படுகின்றனர் என்ற தகவலை சொல்லி வருத்தப்பட்டார். .

இதனிடையில் ஆங்கில நாளிதழ்களிலிருந்து வந்திருந்த புகைப்பட கலைஞர்கள், நம் பதிவர்களை பல கோணங்களில் படமெடுத்தனர். ஒளிப்பதிவும் செய்யப்பட்டது. சுடச்சுட நேரிடைப் பதிவுகளும் வலையில் ஏற்றப்பட்டன.




அடுத்து பேராசிரியர் ரமணி, ஊடக ஆதிக்கத்தை , புகைப்படம் எடுக்கப்பட்ட விதத்தை சிலேடையாக குறிப்பிட்டு தனது உரையில் பின்நவீனத்துவத்தை எளிதில் புரியும் வகையில் அறிமுகப் படுத்தினார்.



ராஜாவனஜ், மோகன் தாஸ், முகுந்த், மா.சி, மிதக்கும் வெளி முதலானோர் கேள்விகள் வைக்க அதன் விளக்கங்களுடன் பின்நவீனத்துவ அமர்வு நிறைவானது. இந்த அமர்வின் நிறைவில் வலையுலகின் பின்நவீனத்துவ கவிஞர் மிதக்கும் வெளி சுகுணதிவாகருக்கு செந்தழல் ரவியின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தேநீர் இடைவெளியின் போது கதை எழுதுவது பற்றியும், அதை சுவாரசியமாக்குவதைப் பற்றியும் தனது எண்ணங்களை மோகன் தாஸ் சக வலைப்பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபர் வலைப்பதிவர்களை, தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேட்டி எடுக்க நம்மவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழில் பேட்டி அளித்தனர். அந்த பெண் நிருபரும் மிக ஆர்வமாக பெரும்பாலன வலைப்பதிவர்களிடம் தனித்தனி கேள்விகள் வைத்து அவர்களைப் பற்றிய குறிப்புகளும் எடுத்துக் கொண்டார். லிவிங் ஸ்மைல் வித்யாவுடனான நிருபரின் உரையாடல் தெளிவான புரிதலை வலைப்பதிவர்களிடம் வைத்தது.


அடுத்ததாக பாமரன் தனது சொல்ல மறந்த கதையாக ஆரம்ப கால கணினி பயிற்சி முறைகளையும்,



தான் கணினி கற்றுக் கொண்டமைக்கான காரணத்தையும் "செவிக்கு உணவாக " உணவு இடைவேளைக்கு முன் பேசினார்.


உணவு இடைவேளைக்குப் பின் "எ-கலப்பை" முகுந்த் பல்வேறு தட்டச்சு முறைகளை பயன்படுத்தும் விதங்களை அவற்றை கணினியில் நிறுவும் முறைகளை எளிய முறையில் மிகவும் கலகலப்பாக அழகாக சொல்லிக் கொடுத்தார். நிறையப்பதிவர்கள் முன்னர் அறிந்திராத அதியன், தமிழ்விசை பற்றியும், மற்றும் யாஹூ, ஜிடாக் என அனைத்து சாட் தளங்களும் ஒருங்கே கிடைக்கும் மீபோ வையும் அறிமுகப் படுத்தினார். தமிழ்வலைப்பதிவு திரட்டியான தமிழ்ப்பதிவுகள் பற்றியும் இந்த திரட்டியில் பின்னூட்டம் திரட்டப்படாது என்றும் கூறினார். தொடர்ந்து மா.சிவக்குமார் கூகிளில் பதிவுகளையும், மின்னஞ்சல்களையும் முறைப்படுத்தல், பயர் பாக்ஸில் உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுதல் பற்றியும் ஜோயல் ஆன் சாஃப்ட்வேர் உதாரணம் மூலமாக பதிவுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்துதலின் முக்கியத்துவத்தை சொல்லியும் இந்த அமர்வை நிறைவு செய்தார்.

தொழில்நுட்ப விசயங்களைப் பற்றிய அமர்வுகளில் உண்மைத்தமிழன் காட்டிய ஆர்வம் மெச்சத் தகுந்ததாக இருந்தது.

ஒளி-ஒலி அமர்வு ஆரம்பிக்க எதிர்பார்த்தபடி அபி அப்பா வந்திருந்த பதிவர்களுடன் தொலைபேசினார். ஒளித்திரையில் சிறில் அலெக்ஸ் சிரிக்க , பதிவர்கள் சற்றுமுன் பற்றியும், அடுத்த கட்ட பட்டறை,சந்திப்புகளைப் பற்றியும் விவாதித்தனர். அனைத்து அமர்வுகளும் முடிய பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து கதைக்க ஆரம்பித்தனர். கோவை மணி தனது ஹைக்கூ கவிதைகளை பகிர்ந்து கொண்டார். ஹைக்கூ கவிதகளைப் பற்றி பாலபாரதியும் , மா.சி யும் சொன்னவைகளை அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டார். பதிவர்கள் ஒவ்வொருவரும் விடைபெற்று கொள்ள தமிழ் பதிவுலகத்தின் முதல் பட்டறை குறைகள் இருந்தாலும் அது தெரியாத அளவிற்கு மனநிறைவாகவே இனிதே முடிவுற்றது. கோவைப் பட்டறைக்கான காரணகர்த்தா ஓசை செல்லாவிற்கும், பொறுப்பாக நடத்தி முடித்த பாலபாரதி & குழுவிற்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கோவை வலைப்பதிவர் பட்டறை செந்தழலாரின் பார்வையில்

கோவை வலைப்பதிவர் பட்டறை வாத்தியார் சுப்பையாவின் பார்வையில்

கோவை வலைப்பதிவர் பட்டறை மா.சிவக்குமாரின் பார்வையில்


எஸ்.பாலபாரதியின் பட்டறைத்துளிகள் பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.

எ-கலப்பை முகுந்த் அவர்களின் பார்வையில் கோவைப் பதிவர் பட்டறை

கவிஞர் தியாகுவின் பட்டறைப் பற்றிய பதிவைக் காண இங்கே சொடுக்கவும்

மோகன் தாஸின் பட்டறைப் பதிவு

Saturday, May 19, 2007

கோவை சந்திப்பு - 2

பதிவர் சுய அறிமுகங்கள், விருந்தினர் அறிமுகங்களுடன் சந்திப்பு ஆரம்பித்து, பழம்பெரும் இசைக்கலைஞர் ஆறுமுகத்துடன் எழுத்தாளரும் வலைப்பதிவருமான பாமரனின் கலந்துரையாடல சென்று கொன்டிருக்கிறது.

திரையுலகில் தாதாசாகிப் பால்கேக்கு முன்னோடியான சாமிக்கன்னுவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொன்டிருக்கிறார்

Monday, May 14, 2007

முன்னாள் காதலி - சிறுகதை

ரம்யாவுடன் கைக்கோர்த்து கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்த கார்த்தி சடாரென யாரையோப் பார்த்துவிட்டு,

“ரம்யா, ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, இதோ வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு தூரத்தில் தனது கணவனுடன் சென்று கொண்டிருந்த ஜெனியை நோக்கிப் போனான்.

“சல்யூ ஜெனி, கொமொன் சவா? “

“ஜ வே திரேபியான் கார்த்தி, ஏ த்யூ?”

“ எனக்குத் தெரிந்த லாங்குவேஜில பேசுங்க, ஹாய் கார்த்தி, உங்களை நான் டீவில அடிக்கடி பார்த்து இருக்கேன், இட்ஸ் எ சர்ப்ரைஸ் நேரில பார்க்குறது, உங்களைப் பத்தி ஜெனி நிறைய சொல்லி இருக்கா"

“கார்த்தி, இது மோகன், என் ஹஸ்பெண்ட்" என ஜெனி தனது கணவனை அறிமுகப்படுத்த மோகனுக்கு ஹாய் சொன்னான் கார்த்தி..

" உன் ப்ரோகிராம் எல்லாம் டீவில பார்த்து இருக்கேன், அருமையா ஆர்க்யூமெண்ட்ஸை எடுத்திட்டுப் போறே!! ஏதாவது ஃபாரின் மீடியா போகுற சான்ஸ் இருக்கா? உனக்குத்தான் பிரென்சும் ஜெர்மனும் சரளமா வருமே”


“இப்போதக்கி அப்படி ஐடியா எதுவும் இல்லை, எங்க சேனலின் நெம்பர் 2 புதுசா ஒரு சேனல் ஆரம்பிக்கப் போறாரு, அவர் போயிட்டாருன்னா அவரோட சில பேரும் போயிடுவாங்க,, சோ எனக்கு சீக்கிரம் மேல வர்ற சான்ஸ் அதிகம்"

“தட்ஸ் கிரேட் கார்த்தி, குட் லக்"

“யூ னொ ஒன் திங், சீனியர் பொலிடிசியன் அவர் கட்சிக்கு வர சொன்னாரு, நான் தான் இப்போவேண்டாம்னு மறுத்துட்டேன்" என அடுத்தடுத்து தனது அருமை பெருமைகளை விடாப்பிடியாக பேச ஆரம்பிக்க மோகனின் முகம் அவனையும் அறியாமல் மெல்லிய சுனக்கத்தை காட்ட ஆரம்பித்தது. இதைக் கவனித்த ஜெனி அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக

“ஒகே கார்த்தி, நாங்க கிளம்புறோம்" என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு இருவரும் நகர்ந்தனர்.

கார்த்தியை அடையாளாங் கண்டு கொண்ட சிறு கூட்டம் அவனிடம் வந்து ஆட்டோகிராப் வாங்க ஆரம்பித்தது. அவனைச் சுற்றி கூடிய கூட்டத்தை ஜெனி திரும்பிப் பார்த்தபடி போனாள்.

அதற்குள் கார்த்திக்கின் வருங்கால மனைவி ரம்யா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். கார்த்திக்கின் முகத்தில் பரவி இருந்த சந்தோசத்தைப் பார்த்து

“யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்த"

“ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் ஒரு பழைய கணக்கைத் தீர்த்தேன், ஐ ஜஸ்ட் ஹேப்பண்ட் டூ மீட் ஜெனி"


கார்த்தி இதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தது. எதேச்சையாக ஒரு நாள் ஜெனியைப் பார்க்கவேண்டும். அவள் கண் முன் வாழ்க்கையில் எத்தனை தூரம் தான் முன்னேறி இருப்பதை காட்ட வேண்டும், அவளால் எட்டாத உயரத்தில் தான் இருப்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்லவேண்டும். அவனின் அசூர வேக வெற்றியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று அவளின் கண்களில் ஏற்படும் ஏக்கத்தை காணவேண்டும். அவனை விட்டு 5 வருடம் முன் விலகியமைக்கு அவளுக்கு கொடுக்கும் தண்டனை இதுவாகத்தான் இருக்க வேண்டும், சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் ஜெனியிடம், தனது அந்தஸ்தை காட்டிக் கொண்டதில் அவனது நீண்ட நாளைய மனக்குமுறல் தீர்ந்தது போல் இருந்தது.

அதே நேரம் ஜெனி மனதினில்,

“ம்ம்ம், கார்த்தி இன்னும் மாறல, அதே ஸ்வீட் லேயர்ட் விச வார்த்தைகள், அடுத்தவர்களை தாழ்மையாக அடையாளப்படுத்தும் பேச்சுக்கள், ஒரு வித எமோஷன்ல் ரிவஞ் எடுக்கும் மனப்பான்மை, ம்ம் இன்னும் அவன் திருந்தவேயில்லை, இப்படி பட்ட வெற்றியாளனுடன் வாழ்வதைவிட, உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், மனைவியைத் தோழியாகப் பாவிக்கும் மோகனுடன் வாழ்வதுதான் சந்தோசம் , அது சராசரி நடுத்தர வாழ்க்கையாக இருந்தாலும் கூட" என்று நினைத்து மோகனின் தோளை வண்டியில் செல்லும்போது இறுக்கப் பிடித்துக் கொண்டாள்..

Sunday, May 13, 2007

ஒரு வீடு இரு வாசல் - சிறுகதை

கைத்தொலைபேசியில் அழைப்பு, கடவுளே!! இது ஜெனியின் எண்ணாச்சே!!, மொபைலில் பதிந்து வச்சிருந்ததை அழித்திருந்தாலும், மனதில் பதிந்து வைத்திருந்ததை அழிக்க முடியவில்லையே!!!

எதற்கு இந்த நேரத்தில் கூப்பிடுகிறாள். முடிந்து போன விசயங்கள் முடிந்து போனதாகவே இருக்கட்டுமே!! , எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அந்த அழைப்பு முடிந்து போனது. நான் திரும்ப அழைக்கவில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் ஜெனியிடம் இருந்து அழைப்பு.

“ஹலோ ஜெனி சொல்லு"

“கார்த்தி,...” அழுகையினால் ஏற்படும் செருமலுடன்

“ஜெனி, என்ன ஆச்சு?”

“கார்த்தி, நான் உன் கூட வந்துடுறேன், பிளீஸ் நாம எங்கயாவது போயிடலாம்"

“முதல்ல என்ன ஆச்சு சொல்லு, உன் ஹஸ்பெண்ட் எதாவது சொல்லிட்டாரா, என்ன பிரச்சினை, உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகல"

“பிளீஸ்டா, என்னைப் புரிஞ்சுக்கோ, என்னால முடியாது, உன் நினைப்பு என்னைக் கொல்லுது, உன்னை ஏமாத்திட்டேண்டா, என்னால அந்த கில்டி ஃபீலிங்கை தாங்க முடியல"

“ஜெனி, எல்லாம் சில நாள்ல சரி ஆயிடும்"

"இல்லைடா என்னால முடியாது, வெட்கத்தை விட்டு சொல்றேன், என் ஹஸ்பெண்ட் தொடுறப்ப எல்லாம் உன்னை தான் நினைச்சுக்கிறேன், நரக வேதனையா இருக்கு" அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது குரல் உடைந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“ஜெனி, பிளீஸ் அழதே, “ எனக்கும் கண்கலங்க ஆரம்பித்தது.

“கார்த்தி, அடுத்த மாசம் எனக்கு விசா வந்துடும், அவர்கூட போயாகனும், அதுக்கு முன்ன உன்கூட வந்துடுறேண்டா, என்னை ஏத்துக்குவியா, பிளீஸ்"

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“சரி ஜெனி நாளைக்கு நான் உன்னை நேரில் பார்க்கிறேன், அப்போ இதைப் பத்தி பேசலாம்"

“கார்த்தி, நாளைக்கு ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு வந்துடு, நீ வரலன்னே அப்படியே கடல்ல குதிச்சுடுவேன்"

“சரி வந்துடுவேன், தயவு செய்து எதுவும் தப்பு தப்பா யோசிக்காம தூங்குடா குட்டிமா!!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

ஜெனி என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவள். கல்லூரிக்காலங்களில் என்னுடன் படித்த எனக்குப் பிடித்த பெண்ணின் முகச்சாடையில் இருந்ததால், பழக்கத்தை வலிய ஏற்படுத்திக் கொண்டு, திட்டமிட்ட படி காதலை சொல்லி அடுத்த பத்து நாட்களில் அவளின் சம்மதத்தை வாங்கியபோது என்னிடம் இருந்த அதிர்ஷ்டம், அவள் தந்தையிடம் எங்களின் விருப்பத்தை சொல்லிய போது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத நான், அவளுக்காக மதம் மாறக்கூட தயாராயிருந்தேன். ஆனால் ஜெனியின் தந்தை தனது பொருளாதார அந்தஸ்தைக் காட்டி மறுத்துவிட்டார். ஆமாம், மாதத் தவணையில் மாருதி கார் வாங்கி ஓட்டும் நான் எங்கே!! ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தையில் வரும் புதிய காரில் வலம் வரும் அவர்களின் நிலை எங்கே!!!

ஜெனியவே நேரே வரவழைத்து தனது வாழ்க்கையில் என்னைக் குறுக்கிடவேண்டாமென்று சொல்ல வைத்தார். இருந்தும் ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தேன் திருமணத்திற்கு முன்னர் என்னைத் தேடி வருவாள் என்று. இதற்காக பெங்களூரில் இருக்கும் என் நண்பர்களிடம் வீடு பார்க்க எல்லாம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் இப்படி திடீரென்று திருமணத்திற்குப் பின் இவ்வளவு பெரிய குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“பிறர் மனை நோக்காமை பேராண்மை" படித்த குறளும், “எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே" பார்த்த வசனமும் ஞாபகத்திற்கு வந்தது.

இவள் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக செய்து கொண்டால், நானும் அல்லவா இதில் இழுக்கப்படுவேன். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்ற எண்ணத்திலேயே தூங்கிப் போனேன்.

மறுநாள் ஜெனியை சந்திக்கப் போனபோது, என்னமோ மனதில் அந்தப் பழையக் காதல் இல்லை. கடைசியா இந்த பாபாக் கோவிலுக்கு வந்தபோது
“ஜெனி எனக்கு எப்படியாவது கிடைக்கவேண்டும்" என்று வேண்டிய வேண்டுதல் இப்படியா இரு இக்கட்டான சூழலுக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும்.

ஜெனி அந்த சோகத்திலும் அழகாக இருந்தாள். கோவிலுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தாள்.

“ஜெனி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, சாமி கும்பிட்டு வந்துடுறேன்"

கஷ்டகாலத்துலதான் கடவுள் என்கிற ஒரு விசயம் நிஜமாகவே இருந்து எல்லா பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றமாட்டாரா நம்மை அறியாமல் ஒரு உணர்வு/உந்துதல் வரும். எனக்கு இப்போவெல்லாம் அடிக்கடி வருகிறது.

வேகமாக வேகமாக சாமி கும்பிட்டுவிட்டு காருக்கு வந்தபொழுது என் காரிலே உட்கார்ந்திருந்தாள்.

காரை மிதமான வேகத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செலுத்தினேன்.

“ஜெனி, நம்மை மீறி சில விசயங்கள் நடந்து முடிஞ்சுடும், அதை சகித்துக் கொண்டு தான் வாழ்க்கையை வாழ பழகிக்கனும், உன் கல்யாணத்திற்கு முன்னமே நீ என்னோட உங்க அப்பாவை எதிர்த்து வந்திருந்தீன்னா, எந்த சஞ்சலமும் இல்லாம உன்னை ஏத்திக்கிட்டிருந்திருப்பேன். “

“இல்லைடா, அப்பா, அம்மா எல்லாம் என்னை மிரட்டி ஒரு சூழ்நிலைக் கைதியா வச்சிருந்தாங்க, என்னால ஒன்னும் பண்ண முடியல"

“ம்ம்ம், ஜெனி என்னை மறந்து வாழ்ந்தின்னா, அது உன் மனசிலே மட்டும் தான் காயமா கொஞ்ச காலம் இருக்கும், அதுவும் காலப் போக்கில மறைஞ்சுப் போயிடும், ஆனால் நீ சொல்ற மாதிரி நாம முட்டாள்தனமா நடந்துகிட்டோம்னா எல்லோருடைய மனசிலேயும் தீராத காயமா ஆகிடும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வு காலம்பூர நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கும், இந்த உலகத்திலே இருக்கிற பெண்களும் ஆண்களும் உன்னை மாதிரி நினைச்சாங்கான்னா குடும்ப உறவு முறைகளே இருக்காது, உன் ஹஸ்பெண்டுக்கு வாழ்க்கையைப் பத்தி எவ்வளவு கனவுகள் இருக்கும், அந்தக் கனவுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கி விடாதே!! முழுக்க முழுக்க தவற்றை உன் பக்கம் வைத்துக் கொண்டு அவரை ஏன் பலிகடா ஆக்க வேண்டும், அவருடன் ஆஸ்திரேலியா போ, அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட், ஒரு சின்னக் கனவு மாதிரி என் நினைவுகள் தானாகவே மறந்துவிடும், எப்படி உன் நினைவிலே என் காலேஜ் ஜூனியர் நினைவுகள் மறந்துப் போனது அது மாதிரி, எனக்கும் உன் நினைவுகள் மறக்கும், ஜெனியோட இடத்தை ஒரு ஜென்சி பிடிக்கலாம். நீ படிச்சவ, உட்கார்ந்து யோசி... உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்கும்.. மற்றவர்களின் உணர்வுகளைக் கொன்று புதைத்து அதன் மேல் நம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம். நானும் நைஜீரியா போறேன். இரண்டு வருஷம் காண்டிராக்ட். சில சமயங்களில் தோல்விகள் கூட இனிமையாக இருக்கும், லெட் அஸ் பி குட் பிரெண்ட்ஸ் ஃபார் எவர்,"

முடிவு 1:

நான் சொல்லிக்கொண்டு இருக்க அவள் கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“சாரிடா, யூ ஆர் கரெக்ட், உன்னை ரொம்ப டிரபிள் பண்ணிட்டேன். என் ஹஸ்பெண்டும் உன்னை மாதிரி ஜெண்டில்மேன் தான், என் வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆமாம் இவ்வளவு தூரம் நான் வந்த பிறகும் என்னைக் கழட்டி விடுறீயே, இந்த கேப்பிலே யாரையாவது கரெக்ட் பண்ணிட்டீயா " என்று சொல்லிக் கொண்டிருந்த போது அவளுக்கு அழைப்பு வந்தது,

“ஹலோ ஹனி, ஐ யம் வித் மை பிரெண்ட், வில் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்" அழைப்பைத் துண்டித்தாள்.

அவளின் பேச்சிலும் பார்வையிலும் ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது.

நான் வேண்டிய வேண்டுதல் நிறைவேற்றிய சீரடி பாபாவுக்கு நன்றி தெரிவிக்க வண்டியைத் திருப்பினேன்.

முடிவு 2 :
“கார்த்தி,, இட்ஸ் டூ லேட் நௌ. ஒரு வேளை நேத்தே இந்த அட்வைஸ் பண்ணி இருந்தீன்னா நான் மாறினாலும் மாறி இருந்திருப்பேன் . நானும் நீயும் அன்-லக்கி, உன்கிட்ட பேசி முடிச்ச பிறகு நான் ஸ்லீப்பிங் டேப்லட்ஸ் போட்டு சூசைட் பண்ணிக்கிட்டேன்,. உன்கிட்ட மீட் பண்றேன்னு சொல்லிட்டேனேன்னு தான் இப்போ வந்தேன்.” என்று சொல்லி காரின் சீட்டிலிருந்து நொடியில் மறைந்தாள்., அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை நான் தவறவிட எதிரே !!! அய்யோ ஒரு கண்டெயினர் லாரி!!!!!!

Saturday, May 12, 2007

கி.பி. 3092 - சிறுகதை

"விலங்கோடு விலங்காக என்றோ ஒரு நாள் பூமியில் உருவான மனிதன் காலத்தைவிட வேகமாக ஓடி கடவுளுக்கும் அவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, அவன் கண்டறிந்த இயந்திரங்களால் கடவுளையும் கடந்து பிறப்பு இறப்புகளை அவனே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கின்றான் என்ற கர்வத்தை அடக்கப் போகும் பொன்னான நாள் இன்று" என்றக் குறிப்பை கணிணியில் எழுதி வைத்துவிட்டு எனது கண்டுபிடிப்பான நேர இயந்திரத்தில் கடைசி நேர பரிசோதனைகளை செய்து முடித்தேன்.

பூமிப் பிரதேசத்தின் தலை சிறந்த விஞ்ஞானி என்பதால், எனக்கு அரசாங்கம் 50 வருடம் வாழ்நாள் நீட்டிப்பு இரண்டு முறைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை நீட்டிப்புக் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு மற்ற கிரகங்களிலிருந்து கிளம்பி உள்ளதால் அடுத்த வருடம் 3092, தை 1 வாழ்க்கை நீட்டிப்பு முடிவடையும் நாள். அன்று மதியம் 12 மணிக்கு என்னுடைய உயிர் பறிக்கப்பட்டு, என்னுடைய ஆற்றல் வேறொரு உயிராக உருவாக்கப்படும்.
இவர்கள் யார்? வாழ்வை நிர்ணயிக்க, பிறக்கும் போதே , இறந்த நாளையும் குறிக்க,, மனிதனுக்கு கட்டுப்பட்டு இயந்திரமா, இயந்திரத்திற்கு கட்டுப்பட்ட மனிதனா? இந்த கட்டுத்தளையிலிருந்து நான் விடுபட போகும் நாள்,இதற்காகவே கடந்த 100 வருடமாக இந்த இயந்திரத்தை மிக ரகசியமாக உருவாக்கி வைத்துள்ளேன். நேற்று கடந்த காலத்திற்கு சென்று என் நேர இயந்திரத்தை பரிசோதித்து விட்டேன். இன்று ஒரேடியாக என் இறுதி நாள் எனக்குறிப்பிடப்பட்டுள்ள நாளிலிருந்து 100 வது வருடத்திற்கு அப்பால் போகப் போகின்றேன். அதன் பின் நான் சாகாவரம் பெற்றவன். என் இயந்திரத்தால், முக்காலமும் உணர்ந்தவன் ஆகி விடுவேன்.
இயந்திரத்தில் நான் செல்லபோகும் 3200 ஆம் ஆண்டை தட்டச்சு செய்தேன். என்னுடைய கண்டுபிடிப்பின் குறிப்புகளோடு உள்ளே சென்று அமர்ந்து இயந்திரத்தினை இயக்கினேன், மாதங்கள், வாரங்கள் ஆகின, வாரங்கள் நாட்கள் ஆகின, இன்னும் சில மணி நேரம், எனக்கு இறப்புக் குறிக்கப்பட்ட நாளைக் கடக்கப் போகின்றேன். இதோ இன்னும் 10 வினாடிகள் 3092 தை 1 11.59.50
52 .... 53..... 54 ....55 ....56 ....57 ....58 ...........டமால், என்னுடைய இயந்திரமும் நானும் வெடித்து சிதறினோம்.....59 ...
சரியாக 12.00.00 மணிக்கு என் ஆற்றல் என்னைவிட்டுப் பிரிந்தது,

Thursday, May 10, 2007

பாலுத்தேவர் (அ) வேதம் புதிது - சிறுகதை

"இதுவரைக்கும் ஒருத்தனை ஒருத்தனை அடிச்சுக்கிட்டு சாவுறத்துக்குத்தான் ஜாதியை பயன்படுத்திக்கிட்டு வந்தோம், இனிமேல் அந்த ஜாதியை நம்ம உரிமைக்காக பயன்படுத்துவோம், நம்ம பசங்க எல்லோரும் ஒழுங்கா ஜாதி சர்டிபிகேட் வாங்கி வச்சு இருக்கானுங்களான்னு நம்ம சங்க ஆட்கள் வந்து செக் பண்ணுவாங்க, அப்படி இல்லாட்டி சங்க ஆட்களே வாங்கித்தரதுக்கு உதவி பண்ணுவாங்க, இனிமே எவனும் கத்தியை தீட்ட வேணாம், புத்தியை தீட்டலாம், என்ன முருகா! உங்க ஆளுங்ககிட்டேயும் நீங்களே சொல்லிடுங்க, நாம அடிச்சுக்கிட்டது போதும். எல்லோரையும் படிக்கச்சொல்லுவோம்,,, படிப்புதான் நமக்குள்ள ஏற்ற இறக்கத்தை எல்லாம் போக்கும், எல்லோரும் படிச்சமுன்னா அடுத்த முருகன் தலைமுறையும், என் வம்சமும் மாமன் மச்சான் தான் " என்று பாலுத்தேவர் எங்க ஊர் அனைத்து ஜாதி ஒற்றுமைக் கூட்டத்தில் பேசி முடிக்க அடுத்து தலித் இயக்கத் தலைவர் முருகன் பேச ஆரம்பித்தார்.

"தேவரய்யா, சொன்ன மாதிரி ஜாதியை கல்வி உரிமைக்கு மட்டும் பயன்படுத்துவோம். நாம அடுத்து என்ன படிக்கலாம், அதுக்கு உள்ள வழிமுறைகள் பற்றி வரும் வார ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் எல்லாம் நடக்கும். நம்ம ஊர் பள்ளியிலே மாணவர்களுக்கு ஆங்கில மொழி வளத்தை அதிகப்படுத்த பள்ளி நேரத்துக்குப் பிறகு ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும், அதை எடுக்கிறது நம்ம கோயில் குருக்களோட மகன் விசுவநாதன் தான்" என்று சொல்லி என்னை அடையாளம் காட்டினார்.

நான் எழுந்து ஊர் மக்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தேன். போன வருஷம் வரைக்கும் இந்த மாதிரி கூட்டத்திலே அடிதடி நிச்சயமா இருக்கும். பாலுத்தேவரோட அப்பா போன பிறகு, பாலுத்தேவர் ஊர் பெரிய மனுஷனாகி நடக்கிற இந்த கூட்டங்கள்ல ரொம்ப மாற்றம் வந்துடுச்சு.

இப்போ எனக்கு +2 விடுமுறையில இருக்கிறதுனால,இந்த வகுப்புகளை நானே எடுக்க ஒத்துக்கிட்டேன். அந்த ஊர்லேயே வழக்கமா நல்லா படிக்கிற குடும்பம் எங்களுதுதான். அதனால நானே விரும்பி ஒத்துக்கிட்டதனாலே பாலுத்தேவருக்கு என்னை அதிகமா பிடிச்சுப் போச்சு. அவர் மில்லிலே இருக்கிற கம்ப்யூட்டரை நான் பயன்படுத்திக்க அனுமதிச்சாரு. அங்கேயே இருந்ததனால அவரோட பொறுமையா பிரச்சினைகளை கையாண்ட விதம் அவர்மேல இருந்த மதிப்பை அதிகப்படுத்தியது.

ஒரு நாள் தலித் பையன் , தேவர் வீட்டு பொண்ணை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிரச்சினையில்,

"இங்க பாருங்க சின்னத்தேவர், பையன் போஸ்ட் ஆபிஸ் ல நல்லா வேலை பார்க்கிறான், டிபார்ட்மெண்ட் எக்ஸாம் எழுதி இன்னும் பெரிய ஆபிஸராயிடுவான், மன்னிச்சு ஏத்துக்குங்க"

என்று அந்த பிரச்சினையிலே அவர் நடந்து கொண்ட விசயம் அவங்க சமூக மக்களை சங்கடப்படுத்தினாலும் ஒரு பெரிய வெட்டுக்குத்து தவிர்க்கப்பட்டத்திலே எல்லோருக்கும் ஒரு நிம்மதிதான்.

மறுநாள், அவரோட வேறு ஒரு சொந்தக்காரரிடம்

"நம்ம ஜாதிப்பையன் துவரங்குறிச்சியிலே இருக்கான், அவன் ஜாதகம் பொருந்துச்சுன்னா போய் பாரு" என்று சொன்னப்ப என்னால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமே கேட்டுவிட்டேன்

"தேவரய்யா, நேத்து கலப்பு கல்யாணத்துக்கு ஆதரவா பேசினிங்க, இன்னக்கி உங்க சொந்தக்காரருக்கு மட்டும் உங்க ஜாதிப்பையனை அடையாளம் காட்டுறீங்க"

"ம்ம்ம், அடேய் விச்சு, ஆனைக்கு அர்ரம் ன குதிரைக்கு குர்ரம் கிடையாது, கல்யாணத்தைப் பொருத்தவரை, தெரிஞ்ச இடத்துல பொண்ணு கொடுக்கனும்னு எல்லோருடைய விருப்பமாக இருக்கும், அப்போ முதல்ல சொந்தக்காரனை பார்ப்பாங்க, அடுத்து சாதி சனத்துல தேடுவாங்க, நாளை முன்ன பின்ன பிரச்சினை வந்தால் பேசித்தீர்த்துக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கை, இங்க ஜாதி உணர்வைவிட நம்பகத்தன்மைக்கு ஒரு உத்திரவாதத்தை மனுஷன் எதிர்பார்க்கிறான், ஆனால் நேத்து பார்த்தின்னா அந்த ரெண்டு பேரும் மனசால ஒண்ணு சேர்ந்தாச்சு, அப்படி இருக்கிறப்ப அவங்களை ஜாதியைக் காட்டி பிரிக்கிறது பாவம். ஜாதில ஊறின நாம்ம மண்னுல எடுத்த உடனேயே கலப்பு மணம் என்று பேசினால் பிரச்சினைதான் வரும். தானாகாவே அமையுற கலப்பு கல்யாணத்தைக் கண்டிப்பாக ஆதரிக்கனும்"

அவர் சொன்னது ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. கால ஓட்டத்திலே நானும் நல்லா படிச்சு மேலே வந்து வாழ்க்கையிலே நல்ல நிலைக்கு வந்தேன். என்னைப் போலவே அந்த ஊரில் ஏகப்பட்ட மாணவர்கள் படித்து என்னை விட நல்ல நிலைமைக்கு வந்தனர்.

அந்த சின்ன ஊருக்கு ஒரு ஆறேழு வருசம் கழிச்சு சில சம்பிரதாயங்களை செய்து முடிக்க மீண்டும் வந்தேன். ஆற்றின் கரையோரத்தில் சடங்குகளை முடித்து விட்டு கரையேறுகையில்

"டேய் விச்சு, எப்போ வந்த!" நடு ஆற்றிலிருந்து கரையை நோக்கி நீச்சல் அடித்து வந்து கொண்டிருந்த பாலுத்தேவரின் குரல் கேட்டது.

அவரிடம் நெடுநாட்களாக பயத்தால் கேட்காமல் மனதில் வைத்திருந்த கேள்வியைக் கேட்க முடிவு செய்தேன்.

"எப்படி இருக்கேடா விச்சு"

"நல்லா இருக்கேன் பாலு அய்யா" என்று சொன்னவுடன் அவரின் முகம் சுருங்கியது.

"என்னப்பா, தேவரய்யா ன்னு ஊரேக் கூப்பிடுறப்ப பேர் சொல்லு கூப்பிடுற, படிச்சுட்டோம்ங்கிறதுனாலாய/"

"தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கினப் பட்டமா? ஊருக்கெல்லாம் சர்டிபிகேட்ல மட்டும் ஜாதி இருக்குனும்னு சொல்லிட்டு உங்க ஆதிக்க உணர்வை பேரோட வச்சுக்கிட்டு காட்டுறீங்களே"

இப்படி நான் சொன்னவுடன் கோபப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நிதானமாக என் வெற்று மேல் உடம்பைப் பார்த்தார். அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தது. பூணூலை கழட்டி ஆற்றுத் தண்ணீரோடு விட்டுவிட்டு மீண்டும் அதே கேள்வியை அவரிடம் கேட்டேன்.

"தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கினப் பட்டமா"

என் தோளைத்தட்டி பாராட்டிவிட்டு

"இனிமேல் பாலு மட்டும் தாண்டா விச்சு, அய்யாவும் வேண்டாம் தேவரும் வேண்டாம்"

ஒருவருகொருவர் கை கொடுத்து கரையேறினோம்
***********************
இந்த சிறுகதை பூங்கா இணைய இதழில் மே21 பதிப்பில் தேர்வு செய்யப்பட்டது

http://poongaa.com/content/view/1708/1/

Wednesday, May 09, 2007

கடவுளுக்கு என்னைப் பிடிக்குமா? - சிறுகதை

அப்படா!!, ஒரு வழியாக அந்த சுவிசேஷக் கூட்டம் முடிந்தது. ஜெனி கூட்டத்தோடு கூட்டமாக சுடிதாரின் மேல் துண்டை தலையில் முக்காடு போல் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். கண்களில் அழுத சுவடு தெரிந்தது. தன்னுடன் வந்தவர்களை அனுப்பிவிட்டு என்னை நோக்கி வந்தாள்.

"ஒரு வழியா இப்போதான் உங்க கூட்டம் முடிஞ்சதா?"

"ம்ம்ம்ம், இன்னக்கி ஆனந்தமான ஒரு உணர்வுடா, நார்வேலேந்து ஒருத்தர் வந்து இருந்தார், நல்ல பிரசங்கம். சாரி உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேன், நீ கூட உள்ளே வந்து இருக்கலாம்"

"சரி, சரி டைம் ஆயிடுச்சு வண்டில ஏறு" மெலிதான எரிச்சலுடன்

"கோச்சுக்காதேடா, நல்ல வார்த்தைகளை நீ உள்ள வந்து கேட்டால்தான் என்ன?"

"இதைப்பாரு ஜெனி, ஏற்கனவே சொன்னதுதான், எனக்கு எந்தக் கடவுளையும் பிடிக்காது,அதைவிட கடவுளின் ஏஜெண்டுகளை சுத்தமாகப் பிடிக்காது. அடுத்த வாரத்திலேந்து நீ தனியா ஆட்டோல வந்துட்டுப் போயிடு"

"ம்ம்ம் , சாரி சாரி, இனிமேல் இதைப்பத்தி பேசமாட்டேன். கடைசியா ஒண்ணு சொல்லட்டுமா?"

"சொல்லு"

"உனக்கு கடவுளைப் பிடிக்காட்டி கூட கடவுளுக்கு உன்னைப் பிடிக்கும்"

இதற்கு நான் பதில் சொல்லவில்லை. ஜெனி தங்கி இருக்கும் விடுதி முன்னால் அவளை இறக்கிவிட்டு விட்டு, முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு "பை" சொல்லிவிட்டு என் அறைக்கு வந்து சேரும் போது மணி பத்தடித்தது.

தூக்கம் கண்களைச் சொக்கியபோது கைத்தொலைபேசியில் ஜெனியின் அழைப்பு வந்தது.

"கார்த்தி, என்ன கோபமா?"

"கோபம் எல்லாம் இல்லை,என்ன விசயம் சொல்லு ஜெனி"

"ஏண்டா, உனக்குக் கடவுளைப் பிடிக்கல?"

"நான் ஏற்கனவே சொன்னதுதான், நிச்சயம் ஏதோ ஒரு சக்தி நம்மை சுழ்ந்து உள்ளது, ஆனால் அதற்கு ஒரு உருவம் கொடுத்து, வழிபாடுகளைத் திணித்து கடவுளாகக் கொண்டாடுவது தான் பிடிக்கவில்லை"

"ம்ம்ம் உருவம் கொடுக்கிறதுக் கூட ஒரு வகை நம்பிக்கை தானே!!கடவுளைப் பற்றிய உணர்வு மனிதனை குறைந்தபட்ச ஒழுக்கத்தோடு இருக்க வைக்கிறது"

"ம்ம் கடவுள் பக்தியே இல்லாமல் கூட அதிக பட்ச ஒழுக்கத்தோடு இருக்கும் ஆட்களை நான் பார்த்திருக்கிறேன், உலகத்தில் அதிக பேர் கொல்லப்பட்டது கடவுளின் பேரால் தான். மனிதனை எமோஷனால அடிமைப்படுத்துற ஒரு உணர்வுதான் இந்த கடவுள் கான்செப்ட்"

"இதுதான் பாயிண்ட், மனுசனுக்கு எப்போவுமே ஒரு சரணாகதி பீலிங் வேனும், யாரையாவது/எதையாவது சார்ந்து அல்லது பின் தொடர்ந்து வாழனும், அது இந்த கடவுள்ங்கிற ஒரு விசயத்துலே அதிகமா இருக்கு. எமோஷனல் அடிமை உணர்வு கிரேட்டஸ்ட் பீலிங்டா.. இப்போ நான் கூட உனக்கு எமோஷனல் அடிமைதான்" சொல்லிவிட்டு கிலுக்கென சிரித்தாள் ஜெனி.


"நீ எனக்கு அடிமைங்கிறதைவிட உன் மதத்துக்கு தான் அடிமையா இருக்கிறீயோன்னு அடிக்கடி தோனும், பக்திங்கிற போதைக்கு நீ அடிமையாயிட்ட"

"சரி சரி , நாம இப்படியே பேசிட்டுபோனால் சண்டை வந்துடும், என்னோட கடவுளைக் கும்பிட வேனாம், உன்னோட சாமியாவது கும்பிடுடா கார்த்தி"

'கடவுள்ல என்ன உன்னோட சாமி, என்னோட சாமின்னு...இதுதான் உன்னை மாதிரி ரிலிஜீயஸ் ஆட்கள் கிட்ட உள்ள பிரச்சினை. எனக்கு கடவுள் எந்த ரூபத்திலும் வேண்டாம்.. கடவுள்ங்கிற கான்செப்ட்டை நான் வெறுக்குறேன்"

"ஒகே ஒகே.. நீ கடவுளை வெறுத்தாலும் கடவுளுக்கு உன்னைப்பிடிக்கும், நான் போனை வக்கிறேன்...நீ ஒழுங்காத் தூங்கு டாடா" என்று சொல்லி கைத்தொலைபேசியைத் துண்டித்தாள்.

அதன்பின்னர் தூக்கம் வரவே இல்லை. ஜெனி இன்று இரண்டு முறை சொன்ன அந்த வாக்கியம் தான் நினைவில் வந்து கொண்டிருந்தது. 'கடவுளுக்கு உன்னைப் பிடிக்கும்"

கடவுள் என்று ஒரு விசயம் உண்மையாக இருந்தால் , கடவுளுக்கு என்னைப் பிடிக்குமா?

எல்லோரையும் அன்பு செய்கிறேன் என்று சொல்வதை விட யாரையும் நான் வெறுக்காமல் இருக்கின்றேன் என்று சொல்லலாம். மனதில் அன்பு இருக்கிறதோ இல்லியோ வெறுப்புணர்வு இல்லை... இதுக்கு கடவுள்ங்கிற எனக்குப் புரியாத கன்செப்ட் மட்டும் விதிவிலக்கு.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றேன். ஜெனி மூன்று மணிநேரம் அவள் மதத்தைப் பற்றி பேசினாலும் அவள் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் என்னால் பேச முடிகிறது. சமுதாயம் விரும்பும் தனிமனித ஒழுக்கம் இருக்கிறது. என்னால் மற்றவர்களுக்கு உதவ நேரிடும் சந்தர்ப்பங்களை தவற விடுவதேயில்லை. என்னுடையக் கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணிப்பதில்லை, ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதுமில்லை. நான் நானாகவே இருக்கின்றேன், சில சில மாற்றங்களுடன் பெரும்பாலும்.

ம்ம் இவைதான் ஜெனிக்கு என்னைப்பிடிக்க காரணங்கள், ஜெனியை கடவுளுக்குப் பிடித்து இருந்தால் ஜெனிக்குப் பிடித்த என்னையும் நிச்சயம் பிடிக்கும்.

Sunday, May 06, 2007

பிரேக் ஃபாஸ்ட் - சிறுகதை

அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு அரைத் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்தேன். வெளியே நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி நின்று கொண்டிருந்தார்கள்.

"குட் மார்னிங் ஆண்டி"

"குட் மார்னிங் ஜெனி, இன்னக்கி பந்த், ஹோட்டல் எதுவும் கிடையாது, எங்க வீட்டுக்கு லஞ்ச்சுக்கு வந்துடும்மா"

"சிரமம் வேண்டாம் ஆண்டி, நான் நேத்தே பிரட் வாங்கி வச்சிட்டேன்"

"அதெல்லாம் இருக்கட்டும், இன்னக்கி எங்க வீட்டுல தான் நீ சாப்பிடுற, உன் பிரெண்டு அந்த பையனையும் கூப்பிடு"

"கார்த்தி, ஊருக்குப் போயிட்டான் ஆண்டி"

"ம்ம்ம், மறக்காம வந்துடு"

"சரி ஆண்டி" சங்கடமாக இருந்தாலும் பிரியமுடன் கூப்பிடுவதால் ஒத்துக் கொண்டேன்.

இந்த வீட்டிற்கு நான் குடிவந்து இரண்டு வாரங்கள் தான் ஆகுது. அம்மாவைக் கூட்டி கொண்டு வந்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இருப்பதால் தனியாகவே வீடு எடுத்துக் கொண்டேன். வீடு குடி வந்த பிறகு இன்றுதான் இவருடன் பேசிகின்றேன். எப்போது பார்த்தாலும் ஒரு சின்ன புன்னகை அவ்வளவு தான்.

மஹாராஜாவிலும்,அலுவல மதிய உணவிலும் செத்துப் போயிருந்த நாக்குக்கு எளிமையான மதிய உணவாயிருந்தாலும் நல்லா இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன்

"ஜெனி, இந்த எங்க வீட்டு வாலுங்களோட போட்டோ ஆல்பம், இது சைலஜா அமெரிக்கால எம்.எஸ் பண்றா!, இது ராஜு ஆஸ்திரேலியாவிலே இருக்கான்"

கடமைக்கு ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்ப்பது போல பாவனை செய்து ஆல்பத்தை புரட்டினேன்.

"ஜெனி, காலையிலே எத்தனை மணிக்கு ஆபிஸ் போற, பிரேக் ஃபாஸ்ட் எங்க சாப்பிடுற?"

"9.30 க்கு ஆண்டி, பெரும்பாலும் பிரேக்ஃபாஸ்ட் கட்டு தான்"

"நீ இட்லி தோசை எல்லாம் சாப்பிடுவில்ல, டெய்லி காத்தால நான் பண்ணித்தரேன்"

"அய்யோ வேனாம் ஆண்டி"

"இல்லை , காலை சாப்பாடை ஸ்கிப் பண்ணவேக் கூடாது, எங்களுக்கு ஒன்னும் சிரமமில்லை, எங்க ரெண்டு பேருக்கும் சமைக்கிறதைக் காட்டிலும் கொஞ்சம் கூட சமைக்கப் போறேன் அவ்வளவுதான்"

'ம்ம்ம் சரி ஆண்டி"

***

மறுநாளிலிருந்து காலை சாப்பாடை ஹாட்-பேக்கில் வைத்து நான் கிளம்பும் நேரத்தில் என்னிடம் வந்து கொடுத்து விடுவார்கள். சுடச்சுட வீட்டு சாப்பாடு சாப்பிடுவதுக் கூட நல்லாதான் இருந்தது.
காலையில் சாப்பிட்டு வேலைப் பார்ப்பதால் வழக்கமாக இருக்கும் ஒரு சோர்வு இல்லவே இல்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டு வாடகையுடன் கார்த்தியின் யோசனைப்படி காலை சாப்பாட்டிற்கும் ஒரு கணக்குப் போட்டு அந்த ஆண்டியிடம் கொடுத்தேன்.

"என்னம்ம ஜெனி இது 1000 ரூபாய் அதிகமா இருக்கு"

"ஆண்டி, இது பிரேக்ஃபாஸ்ட்டுக்கு" என்று நான் சொன்னவுடன் அவர்களின் கண்ணில் அவர்களையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"ஜெனி, உனக்கு செய்யுறதை என் பிள்ளைகளுக்கு செய்யுற மாதிரித்தான் நினைச்சு செஞ்சேன், என் குழந்தைகளும் தூர தேசத்திலே இருக்காங்க, உனக்கு நான் செஞ்சா அவங்களுக்கு யாராவது செய்வாங்க என்கிற நம்பிக்கை தான், இந்தப் பணம் எனக்கு வேண்டாம், யாரும் அவங்க குழந்தைங்க கிட்ட சாப்பாடுக்காக காசு வாங்க மாட்டாங்க"

அவர்கள் இப்படி சொன்னதும் , நானும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். கடைசியா நான் உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீரைக் காட்டியது என் அக்கா கல்யாணம் ஆகி அவள் மாமியார் வீட்டுக்கு போகும்போதுதான்.

"சாரி, ஆண்டி "

"ம்ம்ம், இதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் ஈவ்னிங் சீக்கிரம் வந்துட்டீன்னா எங்க வீட்டுலதான் உனக்கு டின்னர்" என்று சொல்லி அந்த அதிக ஆயிரம் ரூபாயை என் கையில் திணித்தார்கள்.

அன்றிரவு என் அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைக்கையிலேயே அம்மாவோட அழைப்பு கைத்தொலைபேசிக்கு வந்தது.

அந்த ஆண்டிக்கு பை சொல்லிவிட்டு அம்மாவின் அழைப்பை எடுத்தேன்

"ஹலோ அம்மா, நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லவேண்டும்"

"இருடி நானும் ஒரு விசயம் சொல்லனும்"

"ம்ம் சொல்லு"

"நம்ம வீட்டு மாடி போர்ஷனுக்கு ரெண்டு பொண்ணுங்க வந்திருக்காங்க அவங்களுக்கு இன்னக்கி நான் டின்னர் சமைச்சுக் கொடுத்தேன், அவங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா"

"ஏம்மா, நீ உன்னை சிரமப்படுத்திக்கிற"

"இல்லைடி,அவங்க தனியா கஷ்டப்படுறதைப் பார்க்கிறப்ப உன் ஞாபகம் வந்துச்சு, பாவம்டி நீயும் அப்படித்தானே கஷ்டப்படுவே, அவங்களுக்கு நான் செய்றதை நான் உனக்கு செய்யுறதாத்தான் நினைக்கிறேன்... ம்ம்ம் நீ சாப்பிட்டியா"

"ம்ம் ஆச்சு" என்று சொல்லி அன்று நடந்த விசயங்களை அம்மாவிடம் விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தேன்.

-----------------

இந்தக் கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கேச் சொடுக்கவும் http://translatedtamilstories.blogspot.com/2010/04/breakfast-short-story-translated-by.html

Saturday, May 05, 2007

சேரன் - கனாக்காணும் காலங்கள் - மாயக்கண்ணாடி

கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் கனாக்காணும் காலங்கள் தொடரைப் பார்த்து இருந்தால் ஒன்றைக்கவனித்து இருக்கலாம். நடிகர் - இயக்குநர் சேரன் அந்த தொடரில் சேரனாகவே வருவார்.

பள்ளிப்பருவ காலங்களை பற்றிய இத்தொடரில், பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல்
சேரனின் மாயக்கண்ணாடி படம் பார்க்கப் போவதாகவும், கூட்டத்தில் முந்தியடித்து நுழைவுச்சீட்டைப் பெற்று படம் பார்ப்பதாகவும் காட்டினார்கள். அவர்கள் வாங்கிய குறிப்பிட்ட நுழைவுச்சீட்டுக்கு உரிய நபரின் வீட்டிற்கு சேரனே வருவார் என அரங்க நிர்வாகிகள் அறிவிக்கின்றனர்.

இந்த பள்ளி மாணவர்கள் சேரனைத் தங்களின் பள்ளி திரைக்குழும ஆரம்ப விழாவிற்கு வரவைக்கின்றனர். அங்கு முழுக்க முழுக்க மாயக்கண்ணாடி திரைப்படத்தை பற்றிய கலந்துரையாடல் நடைபெறுவதாகக் காட்டுகின்றனர்.

விளம்பரங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.

மாயக்கண்ணாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Friday, May 04, 2007

சாமியாருடன் ஓர் இரவு - சிறுகதை

இந்த மண் சாலையிலே மாட்டு வண்டி வருவதே அபூர்வம். வெளிச்சத்தை சில நூறு அடிகளுக்கு அப்பாலும் தெளித்துக் கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த மகிழூந்து திடிரென நின்று போனது.

புத்தம் புதியதாய் இறக்குமதி செய்யப்பட்ட வண்டி என்று அந்த மகிழூந்தின் வடிவமைப்புக் காட்டிக் கொடுத்தது.

என்ன ஆயிற்று எனப் பார்க்க அந்த மகிழூந்தின் அருகே சென்றேன். வாட்டசாட்டமாக ஒருவர் வெண்ணிற ஓட்டுநர் சீருடையில் வண்டியிலிருந்து இறங்கினார்.

"என்ன ஆச்சுங்க?"

அந்த ஆள் என்னை, என் தோற்றத்தை வைத்து ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு

"இங்க மெக்கானிக் யாரவது இருக்காங்களா?" என்றார்

"இங்க யாரும் இல்லீங்க, பக்கத்து டவுன்லதான் இருப்பாங்க"

"வண்டி எதாவது கிடைக்குமா" என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்கும்போது வண்டியின் பின்கதவைத் திறந்து கொண்டு ஒருவர் சாமியார் உடையில் இறங்கினார். அட இவர் அந்த பிரபல சாமியாரேதான்.

நாட்டின் பெருந்தலைவர்கள் எல்லாம் இவரிடம் வரிசையில் நின்று ஆசி வாங்கி செல்வார்கள்.
இவரிடம் பேசினால்,தொட்டால் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடக்கூடிய ஆற்றல் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.இளைஞர்கள், மனசோர்வை, அயற்சியைப் போக்க இவரிடம் அதிகமாக போகின்றனர். முக்காலமும் உணர்ந்தவர், தெய்வத்திற்கு நிகரானவர் என்று என நம்பும் பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் இவரின் புகைப்படம் பூஜை அறையை அலங்கரிக்கும்.
சில குடும்பங்களில் இவரைக்கேட்டுத்தான் சின்ன சின்ன விசயங்களை கூட செய்வதாக தொலைக்காட்சிகளில் பெருமிதத்தோடு சொல்லுகிறார்கள்.

ஆன்மிகம் மூலம் மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். இவர் நாளை மாலை அருகில் இருக்கும் பழங்கால கோவிலுக்கு வருவதாகத்தானே இருந்தது. இன்றே வந்துவிட்டார். அந்த பழம் பெருமை வாய்ந்த கோவிலை புனரமைக்கும் பணியை இவரின் ஆசிரம் ஏற்று செய்யப் போகிறது என்று அந்த சாமியாரைப்பற்றிய விசயங்கள் எண்ண அலைகளில் ஓடிக் கொண்டிருந்த போது

"என்ன ஆச்சு?" என்றார் கோபமாக அந்த ஓட்டுநரிடம்.

"குருஜி, என்ன பிராப்ளம்னு தெரியல, மெக்கானிக் தான் வரனும், அதைப்பத்தி இந்த ஆளுகிட்ட கேட்டிட்டு இருந்தேன்" என்று பவ்யமாக ஓட்டுநர் பதில் அளித்தார்.

"சாமி, அந்த தெரு முனையிலே ஒரு பைக் இருக்கு, இந்தாங்க சாவி, பக்கத்து டவுன்ல பஸ் ஸ்டாண்டு பக்கத்திலே இருக்கிற மெக்கானிக் கடையிலே முனியாண்டி அனுப்பிச்சேன்னு சொல்லுங்க, உடனே வருவான்"

என்று சொல்லி சாவியை சாமியாரிடம் நீட்டினேன். அவர் ஓட்டுநரிடம் கொடு என்று அலட்சியமாக கைக்காட்டினார்.

ஓட்டுநர் வண்டியை எடுத்து போன பிறகு சாமியாரிடம்

"சாமி, உங்க சக்தியினால இந்த வண்டிக்கு என்ன பிரச்சினைன்னு உங்களால கண்டுபிடிக்க முடியலியா" என்றேன்.

"என்ன கேட்ட" என்றார் முறைப்புடன்

என் கிராமத்து அருவருப்பான முரட்டுத்தோற்றம், அதுவும் இந்த நடுநிசியில் இந்த ஏடாகூட கேள்வி அவரை எரிச்சலூட்டி இருக்கக்கூடும்.

"சாமி கோச்சுக்காதிங்க, ஒரு கிராமத்தான் கேக்குறேன், படிச்சவங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்லுவிங்களா?"

"அவரவர் அவர் அவர்களின் கடமையைத் தான் செய்ய வேண்டும், என் ஆற்றலை மற்றவர்களின் கடமைக்காக செலுத்துதலை இறையாற்றல் அனுமதிக்காது"

"சரி சாமி, எல்லோருக்கும் எளிமையைப் போதிக்கும் நீங்க இந்த மாதிரி இறக்குமதி வண்டி எல்லாம் வச்சு இருக்கிங்க?, நீங்க சம்பாதித்ததா"

"முதல்ல நீ சாமி சாமின்னு சொல்றதை நிறுத்து, உலக மக்கள் என்னை குருஜி என்றுதான் அழைப்பார்கள், இந்த வண்டி , நான் இருக்கும் இடம் எல்லாம் என் பக்தர்கள் என் அறிவுரை, அறவுரைகளுக்கு அளித்த காணிக்கைகள், லட்சக்கணக்கில் பணத்தை என் காலடியில் வைத்து என் மவுனம் கலையக் காத்திருப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?"

"ஏன் குருஜி, எம்மொழி கசக்கிறதா. கூறும் அறிவுரைகளுக்கு காசு வாங்கும் உங்களுக்கும் , கார்பொரெட் மனேஜ்மெண்ட் , பெர்ஷனல் மனேஜ்மண்ட் கன்ஷல்டன்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? நீங்க இந்த நிற உடை போட்டு ஆன்மீகம் என்ற பெயரில் செய்வதைவிட அவர்களைப் போல புரபசனாலாக செய்யலாமே"

என்னுடைய ஆங்கில வார்த்தை பிரயோகங்களைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்தை அடக்கிக் கொண்டு

"மலிவான செய்திகளை தரும் தினசரிகள், மனத்தை சீரழிக்கும் சில புத்தகங்களைப்படித்து விட்டு உனக்கு புத்தி பேதலித்து போய்விட்டது, எனது ஆசிரமத்துக்கு வா, சில தியானப் பயிற்சிகள் தருகின்றேன்"

"குருஜி, உங்க தியான யோக முறைகள் எல்லாம் சரிதான், ஆனால் அதை ஏன் வாழ்க்கையில் வெந்து நொந்து போகி எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று வருகிற
மக்களை எக்ஸ்பிளாய்ட் செய்ய பயன்படுத்துகிறீர்கள்"

"மனிதனுக்கு இலவசமாய் கொடுக்கும் எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது, அதுதான் சில காணிக்கைகள். நான் யார் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் ஆசி கொடுக்கிறேன் என்று சொன்னது, என்னிடம் வருபவர்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் ஏழைகள்"

"ஒத்துக் கொள்கிறேன், குருஜி ஆனால் அவர்கள் காத்திருக்கும் நேரம் வித்தியாசப்படுகிறதே?!!"


"....."


"நீங்கள் பக்தனை பக்தனாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறீர்கள், உங்களிடம் திரும்ப திரும்ப வரும் பக்தர்களே இதுக்கு சாட்சி, உங்களிடம் வரும் எல்லா மனிதர்களையும் இல்லாத/புரியாத விசயத்தை பூர்வஜென்மம், ஏழு ஜென்மம், முக்தி என்றெல்லாம் சொல்லி மாயையில் கட்டிப்போட்டு இருக்கிறீர்கள்"

"....."

"கிராமத்தில் நகரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் குருஜி வருகிறார், குருஜி வருகிறார் என்று அரசியல் தலைவர்களுக்கு இணையான விளம்பரம் எதற்கு? தேன் இருக்கும் இடத்தை தேனீக்கு தெரியாதா?"

"......."

"உங்களுக்குத் தேவை புகழ், இன்றைய சூழலில் ஆன்மீகத்திற்கு டிமாண்ட் அதிகம், மொழி வளமை, மதப்புத்தகங்கள் படித்த அறிவைக் கொண்டு நீங்கள் விரும்பிய புகழை அடைய இந்த வழியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடைந்த புகழை தக்கவைத்துக் கொள்ள பணபலம், அதிகார பலம். எப்போது நீங்க இந்த சுழலுக்குள் சிக்கிக் கொண்டீரோ அப்போதே உங்களின் நோக்கம் கேள்விக் குறியாக்கபடுகிறது"

"எல்லாம் என் நேரம், என்னோட வார்த்தைகள் ஒவ்வொன்றும் புனிதமாகக் கருதப்படும் இப்பூமியில் உன்னைப் போன்ற காட்டானோடு எல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது"

"உங்க நேரம் நல்லா இருப்பதுனாலதான் நான் வந்து உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.
உங்கள் ஆசிரமத்தில் உங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள ஆட்கள்கிட்ட ஜாக்கிரதையாக இருங்க இவ்வுலகத்தில் ஆக்கப் பூர்வமான விமர்சனத்துக்கும், மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டு எந்த விசயங்களும் கிடையாது. உங்களின் தத்துவங்களைப் புனித படுத்த முயற்சிக்காதீர்கள். அப்படி ஆக்கப்பட்ட விசயங்கள் அனைத்தும் அடிச்சுவடு இல்லாமல் போய்விட்டன"

"உண்மையை சொல்லு நீ யாரு?"

"நானா, இந்த ஊருல முனியாண்டின்னு சொல்லுவாங்க, அடுத்த ஊர்ல அய்யனாருன்னு சொல்லுவாங்க,
பொதுவா கடவுள்னும் சொல்லுவாங்க, உங்க வார்த்தைகளிலே இறையாற்றல் " என்று சொல்லி அந்த இடத்தை
விட்டு காற்றோடு காற்றாக மறைந்தேன்.

நேற்று - இன்று - நாளை

நேற்றைவிட சுமாராகவும்

நாளையை விட அருமையாகவும்

இன்றைய நாள் இருக்கிறது

நீ மனதில் மட்டும் இருப்பதனால்


நேற்றைவிட அருமையாகவும்

நாளையை விட சுமாராகவும்

இன்றைய நாள் இருக்கும் என தோன்றுகிறது

உன் மனதிலும் நான் இருந்தால்


********************
பின் குறிப்பு :

செல்வனின் பதிவில் இது போன்று அமைந்த வரிகளை படித்த போது, தோன்றிய கவிதை இது. ம்ம்ம்ம் இல்லை இல்லை கவிதை மாதிரி.

Wednesday, May 02, 2007

விடாது காதல் -சிறுகதை

நண்பர் ஒருவரிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உரையாடிக் கொண்டிருக்கையில் ஜெனியின் அழைப்பு வருவதை கைத்தொலைபேசி காட்டியது. நண்பரை பிறகு தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஜெனியை அழைத்தேன்.

ஜெனிக்கிட்ட போன வாரம் தான் பேசினேன். வழக்கமா 15 நாளைக்கு ஒரு முறைதான் ஜெனியிடம் இருந்து அழைப்பு வரும். விசயம் என்னாவாக இருக்கும் என்ற யோசனையுடன்,

"ஹலோ ஜெனி, ஸ்வீட் சர்ப்ரைஸ், திடீர்னு ஒரு வாரத்திலேயே கால் பண்ணிட்டிங்க"

"ம்ம்ம்ம், ஒரு விசயம் உங்க கிட்ட கேட்கலாமா?"

"ஜெனி, என்ன கேள்வி எது? உங்களுக்கு இந்த கால காட்டத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்க உரிமை உண்டு"

"ஒரு வேளை கடைசி வரை உங்களோட காதலை ஏற்றுக் கொள்ளாமலேப் போய்விட்டால் நீங்கள் மனரீதியாக எவ்வளவு பாதிக்கபடுவீங்க? உங்களைக் காதலை ஏற்றுக் கொள்ளாமலே, நம்ம நட்பு மட்டும் தொடர்ந்து கடைசியில் பிரியும் போது ,நான் உங்களை ஏமாத்திவிட்டேன்னு சொல்லுவிங்களா?"

"மனரீதியாக என்றால் ஒரு மொமண்டரி வருத்தம் இருக்கும், அது சில நிமிசத்துல சரியாகிடும். நிச்சயமா உங்க கல்யாணத்துக்கு வருவேங்க, வேண்டுமானால் சொல்லுங்க உங்க கல்யாண ரிஷப்சன்ல பூவே உனக்காக விஜய் மாதிரி பாட்டு எல்லாம் பாடுறேன்"

"ம்ம்ம்ம்"

"நிச்சயம், உங்களைக் குறை சொல்ல மாட்டேன். உங்களின் சுதந்திரம் ஆரம்பிக்கும் இடத்தில் என்னுடைய சுதந்திரம், உரிமைகள் முடிகிறது. என்னோட விருப்பத்தை சொன்னது என்னோட உரிமை, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் டோட்டலி உங்க ரைட்ஸ்"

"ம்ம்ம்ம்"

"இவ்வளவு நாள் நீங்க என்னுடன் பெருந்தன்மையாக பழகும்போது, நானும் அப்படி இருப்பதுதானே உங்களுடன் பழகியதுக்கான அர்த்தம் . வெகுசில இடங்களில் மட்டுமே
மனுசனுக்கு தனது பெருந்தன்மையைக்காட்டும் சந்தர்ப்பங்கள் அமையும். அப்படியொரு சந்தர்ப்பம் நமது பிரிவில் கிடைக்கும் போது அதை தவறவிட மாட்டேன்."

"ம்ம்ம்ம்"

"வாழ்க்கை பயணம் மாதிரி, பயணங்களில் நாம் எப்போதும் வசதியை பார்ப்போம். உங்களுடன் பயணப்பட்டால் எனக்கு என் பயணம் சுகமாகவும் வசதியாகவும் இருக்குமமென்று நினைத்ததால் என் விருப்பத்தை சொன்னேன். "

"ம்ம்ம்ம்"

"ஜெனி, டிக்கெட் கன்பார்ம் ஆகாதபோது பயணநேரம் வரை டிக்கெட் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்பிக்கை வைப்பதில் தவறில்லையே.. என்ன ம்ம்ம் மட்டும் சொல்லிக்கிட்டே வர்றீங்க, ஏதாவது பேசுங்க,"

"ம்ம்ம், நல்லாதான் பேசுறீங்க, பேசுங்க கேட்கிறேன்."

"ஒரு வேளை மூனு நாலு வருசம் முன்னாடி இப்படியான சூழ்நிலை அமைந்து இருந்தால், அதிக வருத்தமோ, கோபமோ இருந்திருக்கலாம், எதிர்மறையான முடிவுகளை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் இப்போது உள்ளது"

"ம்ம்ம்"

"முதல்வனில் சொல்வது போல், வீடு,மஞ்ச டிஸ்டம்பர், மனைவி புள்ளகுட்டி, ஹிந்து பேப்பர், பேங்க் பேலன்ஸ், வெட்டி நியாங்கள் பேசி வாழும் நடுத்தர வாழ்க்கை வாழ விரும்பவில்லை, சமுதாயத்தில் நானும் இருந்தேன் என்று நல்ல வழியில் அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் ஒரு வாழ்க்கையே வாழ விரும்புகின்றேன். அப்படிப்பட்ட ஒருவிதமான போராடும் வாழ்க்கைக்கு நீங்கள் என்னுடன் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்ததால்தான் விருப்பத்தை சொன்னேன்"

"ம்ம்ம்"

"எல்லாவற்றுக்கும் மேலாக , யாரவது நம்மை ஏமாத்திட்டாங்கன்னு சொன்னா, அது நம்முடைய இயாலாமையை, தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டும்"

"ம்ம்ம்ம்"

"எக்காலத்தில் யோசித்துப் பார்த்தாலும், உங்களைப்பற்றிய நினைவுகள் உற்சாகமாத்தான் இருக்கும் உறுத்தல்கள் இருக்காது"

"ம்ம்ம்ம்"

"நீங்க கிடைச்சால் எனக்கு நல்லது, கிடைக்காட்டி அது உங்களுக்கு நல்லதா இருக்கலாம்"

"ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்ம்ம்ம் மட்டுமே சொல்றீங்க, கடவுள், ஆன்மிகம் பத்தின என்னுடைய விமர்சனங்களுக்கு மட்டும் எப்படி பதிலுக்குப் பதில் பேசுவீங்க, இப்போ வெறும் ம்ம்ம் தானா? ம்ம்ம்ம் க்கு என்ன அர்த்தம் பேச்சை நிறுத்து என்றா!"

"இல்லை, கார்த்தி உங்க தன்னிலை விளக்கம் நல்லா இருந்துச்சு, கேட்டுட்டு இருந்தேன்"


"எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

மாயாவி படத்தில் வரும் கடவுள் தந்த அழகிய வாழ்வு பாட்டு கேட்டு இருக்கிங்களா ஜெனி, அதுல இந்த வரிகள் வரும் "

"கேட்டு இருக்கேன், கார்த்தி"

"இந்த வரிகள்தான் நம் நட்பினில் என்னுடைய நிலை"

"ம்ம்ம்ம்ம்"

"மாற்றங்கள்தான் மாறாதது என்ன சரியா ஜெனி"

"இல்லை இல்லை, சில விசயங்கள் மாறாமல் அதன் நிலையிலேயே இருப்பதுதான் நல்லது" வேகவேகமாக ஜெனியிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது.

"ஹிஹி, இதுக்கு மட்டும் ம்ம்ம் சொல்லாமல் பதில் சொல்லிட்டீங்க"

"ம்ம்ம்ம்ம்"

"இப்படி சொல்லிட்டதுனால இன்னொருமுறை ப்ரபோஸ் பண்ண மாட்டேன்னு நினைக்காதிங்க, முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறக் கூடாது.. " என்றேன்.

"தாங்க்ஸ், உங்க பதிலுக்கு. யூ ஆர் எ குட் மேன், தூக்கம் வருது, அடுத்து தோனுறப்ப கூப்பிடுறேன். குட் நைட்" என்று ஜெனி சொன்ன பிறகு அழைப்பைத் துண்டித்தேன்.

அடுத்த அழைப்பு விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் தூங்கப்போனேன்.

Tuesday, May 01, 2007

QwErTy - தகவல்

தட்டச்சுப்பொறி முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தபோது அதை உபயோகப்படுத்தியவர்கள் எழுத்துக்கள் சுலபமாக வரிசையாக அமைந்திருந்ததால் வேக வேகமாக தட்டச்சு செய்ய, எழுத்துக்களின் விசைக்கம்பிகள் அடிக்கடி சிக்கிக் கொண்டது. அதனால் தட்டச்சு செய்பவர்களின் வேகத்தைக் குறைக்க எழுத்துக்கள் மிகவும் கடினமான முறையில் எழுத்துக்கள் கலைக்கப்பட்டு QWERTY தட்டச்சு விசைப்பலகை வடிவமைக்கப்பட்டது.

இப்பொழுது இந்த QWERTY வடிவமைப்பு விசைபலகையைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.