Friday, May 04, 2007

சாமியாருடன் ஓர் இரவு - சிறுகதை

இந்த மண் சாலையிலே மாட்டு வண்டி வருவதே அபூர்வம். வெளிச்சத்தை சில நூறு அடிகளுக்கு அப்பாலும் தெளித்துக் கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த மகிழூந்து திடிரென நின்று போனது.

புத்தம் புதியதாய் இறக்குமதி செய்யப்பட்ட வண்டி என்று அந்த மகிழூந்தின் வடிவமைப்புக் காட்டிக் கொடுத்தது.

என்ன ஆயிற்று எனப் பார்க்க அந்த மகிழூந்தின் அருகே சென்றேன். வாட்டசாட்டமாக ஒருவர் வெண்ணிற ஓட்டுநர் சீருடையில் வண்டியிலிருந்து இறங்கினார்.

"என்ன ஆச்சுங்க?"

அந்த ஆள் என்னை, என் தோற்றத்தை வைத்து ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு

"இங்க மெக்கானிக் யாரவது இருக்காங்களா?" என்றார்

"இங்க யாரும் இல்லீங்க, பக்கத்து டவுன்லதான் இருப்பாங்க"

"வண்டி எதாவது கிடைக்குமா" என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்கும்போது வண்டியின் பின்கதவைத் திறந்து கொண்டு ஒருவர் சாமியார் உடையில் இறங்கினார். அட இவர் அந்த பிரபல சாமியாரேதான்.

நாட்டின் பெருந்தலைவர்கள் எல்லாம் இவரிடம் வரிசையில் நின்று ஆசி வாங்கி செல்வார்கள்.
இவரிடம் பேசினால்,தொட்டால் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடக்கூடிய ஆற்றல் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.இளைஞர்கள், மனசோர்வை, அயற்சியைப் போக்க இவரிடம் அதிகமாக போகின்றனர். முக்காலமும் உணர்ந்தவர், தெய்வத்திற்கு நிகரானவர் என்று என நம்பும் பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் இவரின் புகைப்படம் பூஜை அறையை அலங்கரிக்கும்.
சில குடும்பங்களில் இவரைக்கேட்டுத்தான் சின்ன சின்ன விசயங்களை கூட செய்வதாக தொலைக்காட்சிகளில் பெருமிதத்தோடு சொல்லுகிறார்கள்.

ஆன்மிகம் மூலம் மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். இவர் நாளை மாலை அருகில் இருக்கும் பழங்கால கோவிலுக்கு வருவதாகத்தானே இருந்தது. இன்றே வந்துவிட்டார். அந்த பழம் பெருமை வாய்ந்த கோவிலை புனரமைக்கும் பணியை இவரின் ஆசிரம் ஏற்று செய்யப் போகிறது என்று அந்த சாமியாரைப்பற்றிய விசயங்கள் எண்ண அலைகளில் ஓடிக் கொண்டிருந்த போது

"என்ன ஆச்சு?" என்றார் கோபமாக அந்த ஓட்டுநரிடம்.

"குருஜி, என்ன பிராப்ளம்னு தெரியல, மெக்கானிக் தான் வரனும், அதைப்பத்தி இந்த ஆளுகிட்ட கேட்டிட்டு இருந்தேன்" என்று பவ்யமாக ஓட்டுநர் பதில் அளித்தார்.

"சாமி, அந்த தெரு முனையிலே ஒரு பைக் இருக்கு, இந்தாங்க சாவி, பக்கத்து டவுன்ல பஸ் ஸ்டாண்டு பக்கத்திலே இருக்கிற மெக்கானிக் கடையிலே முனியாண்டி அனுப்பிச்சேன்னு சொல்லுங்க, உடனே வருவான்"

என்று சொல்லி சாவியை சாமியாரிடம் நீட்டினேன். அவர் ஓட்டுநரிடம் கொடு என்று அலட்சியமாக கைக்காட்டினார்.

ஓட்டுநர் வண்டியை எடுத்து போன பிறகு சாமியாரிடம்

"சாமி, உங்க சக்தியினால இந்த வண்டிக்கு என்ன பிரச்சினைன்னு உங்களால கண்டுபிடிக்க முடியலியா" என்றேன்.

"என்ன கேட்ட" என்றார் முறைப்புடன்

என் கிராமத்து அருவருப்பான முரட்டுத்தோற்றம், அதுவும் இந்த நடுநிசியில் இந்த ஏடாகூட கேள்வி அவரை எரிச்சலூட்டி இருக்கக்கூடும்.

"சாமி கோச்சுக்காதிங்க, ஒரு கிராமத்தான் கேக்குறேன், படிச்சவங்களுக்கு மட்டும்தான் பதில் சொல்லுவிங்களா?"

"அவரவர் அவர் அவர்களின் கடமையைத் தான் செய்ய வேண்டும், என் ஆற்றலை மற்றவர்களின் கடமைக்காக செலுத்துதலை இறையாற்றல் அனுமதிக்காது"

"சரி சாமி, எல்லோருக்கும் எளிமையைப் போதிக்கும் நீங்க இந்த மாதிரி இறக்குமதி வண்டி எல்லாம் வச்சு இருக்கிங்க?, நீங்க சம்பாதித்ததா"

"முதல்ல நீ சாமி சாமின்னு சொல்றதை நிறுத்து, உலக மக்கள் என்னை குருஜி என்றுதான் அழைப்பார்கள், இந்த வண்டி , நான் இருக்கும் இடம் எல்லாம் என் பக்தர்கள் என் அறிவுரை, அறவுரைகளுக்கு அளித்த காணிக்கைகள், லட்சக்கணக்கில் பணத்தை என் காலடியில் வைத்து என் மவுனம் கலையக் காத்திருப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?"

"ஏன் குருஜி, எம்மொழி கசக்கிறதா. கூறும் அறிவுரைகளுக்கு காசு வாங்கும் உங்களுக்கும் , கார்பொரெட் மனேஜ்மெண்ட் , பெர்ஷனல் மனேஜ்மண்ட் கன்ஷல்டன்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? நீங்க இந்த நிற உடை போட்டு ஆன்மீகம் என்ற பெயரில் செய்வதைவிட அவர்களைப் போல புரபசனாலாக செய்யலாமே"

என்னுடைய ஆங்கில வார்த்தை பிரயோகங்களைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்தை அடக்கிக் கொண்டு

"மலிவான செய்திகளை தரும் தினசரிகள், மனத்தை சீரழிக்கும் சில புத்தகங்களைப்படித்து விட்டு உனக்கு புத்தி பேதலித்து போய்விட்டது, எனது ஆசிரமத்துக்கு வா, சில தியானப் பயிற்சிகள் தருகின்றேன்"

"குருஜி, உங்க தியான யோக முறைகள் எல்லாம் சரிதான், ஆனால் அதை ஏன் வாழ்க்கையில் வெந்து நொந்து போகி எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று வருகிற
மக்களை எக்ஸ்பிளாய்ட் செய்ய பயன்படுத்துகிறீர்கள்"

"மனிதனுக்கு இலவசமாய் கொடுக்கும் எந்த விசயத்திலும் நாட்டம் இருக்காது, அதுதான் சில காணிக்கைகள். நான் யார் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் ஆசி கொடுக்கிறேன் என்று சொன்னது, என்னிடம் வருபவர்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் ஏழைகள்"

"ஒத்துக் கொள்கிறேன், குருஜி ஆனால் அவர்கள் காத்திருக்கும் நேரம் வித்தியாசப்படுகிறதே?!!"


"....."


"நீங்கள் பக்தனை பக்தனாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறீர்கள், உங்களிடம் திரும்ப திரும்ப வரும் பக்தர்களே இதுக்கு சாட்சி, உங்களிடம் வரும் எல்லா மனிதர்களையும் இல்லாத/புரியாத விசயத்தை பூர்வஜென்மம், ஏழு ஜென்மம், முக்தி என்றெல்லாம் சொல்லி மாயையில் கட்டிப்போட்டு இருக்கிறீர்கள்"

"....."

"கிராமத்தில் நகரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் குருஜி வருகிறார், குருஜி வருகிறார் என்று அரசியல் தலைவர்களுக்கு இணையான விளம்பரம் எதற்கு? தேன் இருக்கும் இடத்தை தேனீக்கு தெரியாதா?"

"......."

"உங்களுக்குத் தேவை புகழ், இன்றைய சூழலில் ஆன்மீகத்திற்கு டிமாண்ட் அதிகம், மொழி வளமை, மதப்புத்தகங்கள் படித்த அறிவைக் கொண்டு நீங்கள் விரும்பிய புகழை அடைய இந்த வழியை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடைந்த புகழை தக்கவைத்துக் கொள்ள பணபலம், அதிகார பலம். எப்போது நீங்க இந்த சுழலுக்குள் சிக்கிக் கொண்டீரோ அப்போதே உங்களின் நோக்கம் கேள்விக் குறியாக்கபடுகிறது"

"எல்லாம் என் நேரம், என்னோட வார்த்தைகள் ஒவ்வொன்றும் புனிதமாகக் கருதப்படும் இப்பூமியில் உன்னைப் போன்ற காட்டானோடு எல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது"

"உங்க நேரம் நல்லா இருப்பதுனாலதான் நான் வந்து உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்.
உங்கள் ஆசிரமத்தில் உங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள ஆட்கள்கிட்ட ஜாக்கிரதையாக இருங்க இவ்வுலகத்தில் ஆக்கப் பூர்வமான விமர்சனத்துக்கும், மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டு எந்த விசயங்களும் கிடையாது. உங்களின் தத்துவங்களைப் புனித படுத்த முயற்சிக்காதீர்கள். அப்படி ஆக்கப்பட்ட விசயங்கள் அனைத்தும் அடிச்சுவடு இல்லாமல் போய்விட்டன"

"உண்மையை சொல்லு நீ யாரு?"

"நானா, இந்த ஊருல முனியாண்டின்னு சொல்லுவாங்க, அடுத்த ஊர்ல அய்யனாருன்னு சொல்லுவாங்க,
பொதுவா கடவுள்னும் சொல்லுவாங்க, உங்க வார்த்தைகளிலே இறையாற்றல் " என்று சொல்லி அந்த இடத்தை
விட்டு காற்றோடு காற்றாக மறைந்தேன்.

17 பின்னூட்டங்கள்/Comments:

said...

நெத்தியடி!!

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நன்றி மா.சி

said...

இப்போ எல்லாம் சாமி பத்தி கதை எழுத ஆரம்பிசிடீங்களா அண்ணா? எப்படியோ, பேய் பத்தி எழுதாதவரைக்கும் சந்தோஷம் தான்.
:)

said...

//"நானா, இந்த ஊருல முனியாண்டின்னு சொல்லுவாங்க, அடுத்த ஊர்ல அய்யனாருன்னு சொல்லுவாங்க,
பொதுவா கடவுள்னும் சொல்லுவாங்க, உங்க வார்த்தைகளிலே இறையாற்றல் " என்று சொல்லி அந்த இடத்தை
விட்டு காற்றோடு காற்றாக மறைந்தேன்.
//
கலக்கல், இந்த வரிகளை எதிர்பார்க்கவில்லை...

said...

நன்றி பூர்ணிமா மற்றும் குழலி

said...

Fantastic script...great job
prof. samiyaargalukku nethi adi
hats off kadavule...kalakitte

Anonymous said...

It was like a slap on the face. Really enjoyed it.

Srinivas from Dubai

said...

நன்றி அபர்ணா & ஸ்ரீனிவாஸ்

said...

WOW! Good Post!

//நீங்கள் பக்தனை பக்தனாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறீர்கள், உங்களிடம் திரும்ப திரும்ப வரும் பக்தர்களே இதுக்கு சாட்சி, உங்களிடம் வரும் எல்லா மனிதர்களையும் இல்லாத/புரியாத விசயத்தை பூர்வஜென்மம், ஏழு ஜென்மம், முக்தி என்றெல்லாம் சொல்லி மாயையில் கட்டிப்போட்டு இருக்கிறீர்கள்"//

This is excellent!

Really Worth Reading..


But, Why do you mention "GOD"? I cannot understand that?

said...

நன்றி சிவபாலன். கடவுள் என்று முடித்ததற்கு இரண்டு காரணங்கள்,
1. எதிர்பாராத திருப்பமான முடிவுக்கு.
2. எல்லாம் உணர்ந்தவர் என்று தன்னைக்கூறிக் கொள்ளும் மனிதரால் இயற்கைசக்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்று உணர்த்த

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

said...

+++

said...

மாசி, பூர்ணிமா இவர்களை அப்படியே வழிமொழிகிறேன்.. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை...

said...

நன்றி பொன்ஸ். :):):)

said...

//இவ்வுலகத்தில் ஆக்கப் பூர்வமான விமர்சனத்துக்கும், மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டு எந்த விசயங்களும் கிடையாது. உங்களின் தத்துவங்களைப் புனித படுத்த முயற்சிக்காதீர்கள். அப்படி ஆக்கப்பட்ட விசயங்கள் அனைத்தும் அடிச்சுவடு இல்லாமல் போய்விட்டன//

Ultimate !!

said...

periyar padam eppo parthey??...thought proviking one...!!...

said...

கலக்கல்...கதை..

முடிவு எதிர்பாராதது..

(ஆனா,திரைப்படம் போலவே, ஆங்கிலம் பேசி தான் அறிவாற்றலை புரிய வைக்க வேண்டிய நிலை வெட்கி தலை குணிய வைக்குது..)