Thursday, May 10, 2007

பாலுத்தேவர் (அ) வேதம் புதிது - சிறுகதை

"இதுவரைக்கும் ஒருத்தனை ஒருத்தனை அடிச்சுக்கிட்டு சாவுறத்துக்குத்தான் ஜாதியை பயன்படுத்திக்கிட்டு வந்தோம், இனிமேல் அந்த ஜாதியை நம்ம உரிமைக்காக பயன்படுத்துவோம், நம்ம பசங்க எல்லோரும் ஒழுங்கா ஜாதி சர்டிபிகேட் வாங்கி வச்சு இருக்கானுங்களான்னு நம்ம சங்க ஆட்கள் வந்து செக் பண்ணுவாங்க, அப்படி இல்லாட்டி சங்க ஆட்களே வாங்கித்தரதுக்கு உதவி பண்ணுவாங்க, இனிமே எவனும் கத்தியை தீட்ட வேணாம், புத்தியை தீட்டலாம், என்ன முருகா! உங்க ஆளுங்ககிட்டேயும் நீங்களே சொல்லிடுங்க, நாம அடிச்சுக்கிட்டது போதும். எல்லோரையும் படிக்கச்சொல்லுவோம்,,, படிப்புதான் நமக்குள்ள ஏற்ற இறக்கத்தை எல்லாம் போக்கும், எல்லோரும் படிச்சமுன்னா அடுத்த முருகன் தலைமுறையும், என் வம்சமும் மாமன் மச்சான் தான் " என்று பாலுத்தேவர் எங்க ஊர் அனைத்து ஜாதி ஒற்றுமைக் கூட்டத்தில் பேசி முடிக்க அடுத்து தலித் இயக்கத் தலைவர் முருகன் பேச ஆரம்பித்தார்.

"தேவரய்யா, சொன்ன மாதிரி ஜாதியை கல்வி உரிமைக்கு மட்டும் பயன்படுத்துவோம். நாம அடுத்து என்ன படிக்கலாம், அதுக்கு உள்ள வழிமுறைகள் பற்றி வரும் வார ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் எல்லாம் நடக்கும். நம்ம ஊர் பள்ளியிலே மாணவர்களுக்கு ஆங்கில மொழி வளத்தை அதிகப்படுத்த பள்ளி நேரத்துக்குப் பிறகு ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும், அதை எடுக்கிறது நம்ம கோயில் குருக்களோட மகன் விசுவநாதன் தான்" என்று சொல்லி என்னை அடையாளம் காட்டினார்.

நான் எழுந்து ஊர் மக்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தேன். போன வருஷம் வரைக்கும் இந்த மாதிரி கூட்டத்திலே அடிதடி நிச்சயமா இருக்கும். பாலுத்தேவரோட அப்பா போன பிறகு, பாலுத்தேவர் ஊர் பெரிய மனுஷனாகி நடக்கிற இந்த கூட்டங்கள்ல ரொம்ப மாற்றம் வந்துடுச்சு.

இப்போ எனக்கு +2 விடுமுறையில இருக்கிறதுனால,இந்த வகுப்புகளை நானே எடுக்க ஒத்துக்கிட்டேன். அந்த ஊர்லேயே வழக்கமா நல்லா படிக்கிற குடும்பம் எங்களுதுதான். அதனால நானே விரும்பி ஒத்துக்கிட்டதனாலே பாலுத்தேவருக்கு என்னை அதிகமா பிடிச்சுப் போச்சு. அவர் மில்லிலே இருக்கிற கம்ப்யூட்டரை நான் பயன்படுத்திக்க அனுமதிச்சாரு. அங்கேயே இருந்ததனால அவரோட பொறுமையா பிரச்சினைகளை கையாண்ட விதம் அவர்மேல இருந்த மதிப்பை அதிகப்படுத்தியது.

ஒரு நாள் தலித் பையன் , தேவர் வீட்டு பொண்ணை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிரச்சினையில்,

"இங்க பாருங்க சின்னத்தேவர், பையன் போஸ்ட் ஆபிஸ் ல நல்லா வேலை பார்க்கிறான், டிபார்ட்மெண்ட் எக்ஸாம் எழுதி இன்னும் பெரிய ஆபிஸராயிடுவான், மன்னிச்சு ஏத்துக்குங்க"

என்று அந்த பிரச்சினையிலே அவர் நடந்து கொண்ட விசயம் அவங்க சமூக மக்களை சங்கடப்படுத்தினாலும் ஒரு பெரிய வெட்டுக்குத்து தவிர்க்கப்பட்டத்திலே எல்லோருக்கும் ஒரு நிம்மதிதான்.

மறுநாள், அவரோட வேறு ஒரு சொந்தக்காரரிடம்

"நம்ம ஜாதிப்பையன் துவரங்குறிச்சியிலே இருக்கான், அவன் ஜாதகம் பொருந்துச்சுன்னா போய் பாரு" என்று சொன்னப்ப என்னால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமே கேட்டுவிட்டேன்

"தேவரய்யா, நேத்து கலப்பு கல்யாணத்துக்கு ஆதரவா பேசினிங்க, இன்னக்கி உங்க சொந்தக்காரருக்கு மட்டும் உங்க ஜாதிப்பையனை அடையாளம் காட்டுறீங்க"

"ம்ம்ம், அடேய் விச்சு, ஆனைக்கு அர்ரம் ன குதிரைக்கு குர்ரம் கிடையாது, கல்யாணத்தைப் பொருத்தவரை, தெரிஞ்ச இடத்துல பொண்ணு கொடுக்கனும்னு எல்லோருடைய விருப்பமாக இருக்கும், அப்போ முதல்ல சொந்தக்காரனை பார்ப்பாங்க, அடுத்து சாதி சனத்துல தேடுவாங்க, நாளை முன்ன பின்ன பிரச்சினை வந்தால் பேசித்தீர்த்துக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கை, இங்க ஜாதி உணர்வைவிட நம்பகத்தன்மைக்கு ஒரு உத்திரவாதத்தை மனுஷன் எதிர்பார்க்கிறான், ஆனால் நேத்து பார்த்தின்னா அந்த ரெண்டு பேரும் மனசால ஒண்ணு சேர்ந்தாச்சு, அப்படி இருக்கிறப்ப அவங்களை ஜாதியைக் காட்டி பிரிக்கிறது பாவம். ஜாதில ஊறின நாம்ம மண்னுல எடுத்த உடனேயே கலப்பு மணம் என்று பேசினால் பிரச்சினைதான் வரும். தானாகாவே அமையுற கலப்பு கல்யாணத்தைக் கண்டிப்பாக ஆதரிக்கனும்"

அவர் சொன்னது ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. கால ஓட்டத்திலே நானும் நல்லா படிச்சு மேலே வந்து வாழ்க்கையிலே நல்ல நிலைக்கு வந்தேன். என்னைப் போலவே அந்த ஊரில் ஏகப்பட்ட மாணவர்கள் படித்து என்னை விட நல்ல நிலைமைக்கு வந்தனர்.

அந்த சின்ன ஊருக்கு ஒரு ஆறேழு வருசம் கழிச்சு சில சம்பிரதாயங்களை செய்து முடிக்க மீண்டும் வந்தேன். ஆற்றின் கரையோரத்தில் சடங்குகளை முடித்து விட்டு கரையேறுகையில்

"டேய் விச்சு, எப்போ வந்த!" நடு ஆற்றிலிருந்து கரையை நோக்கி நீச்சல் அடித்து வந்து கொண்டிருந்த பாலுத்தேவரின் குரல் கேட்டது.

அவரிடம் நெடுநாட்களாக பயத்தால் கேட்காமல் மனதில் வைத்திருந்த கேள்வியைக் கேட்க முடிவு செய்தேன்.

"எப்படி இருக்கேடா விச்சு"

"நல்லா இருக்கேன் பாலு அய்யா" என்று சொன்னவுடன் அவரின் முகம் சுருங்கியது.

"என்னப்பா, தேவரய்யா ன்னு ஊரேக் கூப்பிடுறப்ப பேர் சொல்லு கூப்பிடுற, படிச்சுட்டோம்ங்கிறதுனாலாய/"

"தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கினப் பட்டமா? ஊருக்கெல்லாம் சர்டிபிகேட்ல மட்டும் ஜாதி இருக்குனும்னு சொல்லிட்டு உங்க ஆதிக்க உணர்வை பேரோட வச்சுக்கிட்டு காட்டுறீங்களே"

இப்படி நான் சொன்னவுடன் கோபப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நிதானமாக என் வெற்று மேல் உடம்பைப் பார்த்தார். அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தது. பூணூலை கழட்டி ஆற்றுத் தண்ணீரோடு விட்டுவிட்டு மீண்டும் அதே கேள்வியை அவரிடம் கேட்டேன்.

"தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கினப் பட்டமா"

என் தோளைத்தட்டி பாராட்டிவிட்டு

"இனிமேல் பாலு மட்டும் தாண்டா விச்சு, அய்யாவும் வேண்டாம் தேவரும் வேண்டாம்"

ஒருவருகொருவர் கை கொடுத்து கரையேறினோம்
***********************
இந்த சிறுகதை பூங்கா இணைய இதழில் மே21 பதிப்பில் தேர்வு செய்யப்பட்டது

http://poongaa.com/content/view/1708/1/

11 பின்னூட்டங்கள்/Comments:

none said...

Excellent!
நான் பாலு அய்யாவுக்கு Fan ஆகிட்டேன்.
:)

Unknown said...

Pazhaiya soru naalum pudusa koduthirukira touch nalla irukku...ungal sindhanai peruga enn vazhthukkal..:-)

சிவபாலன் said...

மெசேஜ் சொல்லனும் என்பதால் கதையில் சுவாரசியம் கம்மியாகிவிட்டதாக உணர்கிறேன்

எனினும் நல்ல முயற்சி! நல்ல மெசேஜ்!

கதையின் கருவுடன் உடன்படுகிறேன்

வினையூக்கி said...

நன்றி சிவபாலன்.வேதம் புதிது படத்தில் "தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா" என்ற கேள்வி வரும் இடத்தைப் பார்த்த போது இந்தக் கதையில் வருவது போல் இருந்திருந்தால் அந்தக் காட்சி இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என நினைத்ததால் இந்தக் கதை உருவானது. கதையின் ஓட்டத்தில் சுவாரசியம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். :):)

வினையூக்கி said...

நன்றி பூர்ணிமா மற்றும் அபர்ணா

தருமி said...

அதாவது பாரதிராஜாவின் கதைக்கு முலாம் பூசுறீங்க, இல்லையா? நல்லா இருக்கு

வினையூக்கி said...

தருமி ஐயா,
கதையின் மையம் வேதம் புதிது படம் தான். ஆனால் நீல நிறத்தில் உள்ள வாக்கியங்கள் படத்தில் கிடையாது. நீல நிற வாக்கியங்கள் அந்தப் படத்திற்கு மேலும் மெருகு கூட்டும் முலாம்.

கப்பி | Kappi said...

sooper thala!

Gnanes said...

u have grown a lot in story telling..kudos man

Anonymous said...

mmmmmmmmm

Sundar Padmanaban said...

வினையூக்கி

நீங்க குடுத்த சுட்டிய வச்சு இங்க வந்து படிச்சேன்.

நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

பாராட்டுகள்.