Sunday, May 06, 2007

பிரேக் ஃபாஸ்ட் - சிறுகதை

அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு அரைத் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்தேன். வெளியே நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி நின்று கொண்டிருந்தார்கள்.

"குட் மார்னிங் ஆண்டி"

"குட் மார்னிங் ஜெனி, இன்னக்கி பந்த், ஹோட்டல் எதுவும் கிடையாது, எங்க வீட்டுக்கு லஞ்ச்சுக்கு வந்துடும்மா"

"சிரமம் வேண்டாம் ஆண்டி, நான் நேத்தே பிரட் வாங்கி வச்சிட்டேன்"

"அதெல்லாம் இருக்கட்டும், இன்னக்கி எங்க வீட்டுல தான் நீ சாப்பிடுற, உன் பிரெண்டு அந்த பையனையும் கூப்பிடு"

"கார்த்தி, ஊருக்குப் போயிட்டான் ஆண்டி"

"ம்ம்ம், மறக்காம வந்துடு"

"சரி ஆண்டி" சங்கடமாக இருந்தாலும் பிரியமுடன் கூப்பிடுவதால் ஒத்துக் கொண்டேன்.

இந்த வீட்டிற்கு நான் குடிவந்து இரண்டு வாரங்கள் தான் ஆகுது. அம்மாவைக் கூட்டி கொண்டு வந்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இருப்பதால் தனியாகவே வீடு எடுத்துக் கொண்டேன். வீடு குடி வந்த பிறகு இன்றுதான் இவருடன் பேசிகின்றேன். எப்போது பார்த்தாலும் ஒரு சின்ன புன்னகை அவ்வளவு தான்.

மஹாராஜாவிலும்,அலுவல மதிய உணவிலும் செத்துப் போயிருந்த நாக்குக்கு எளிமையான மதிய உணவாயிருந்தாலும் நல்லா இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன்

"ஜெனி, இந்த எங்க வீட்டு வாலுங்களோட போட்டோ ஆல்பம், இது சைலஜா அமெரிக்கால எம்.எஸ் பண்றா!, இது ராஜு ஆஸ்திரேலியாவிலே இருக்கான்"

கடமைக்கு ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்ப்பது போல பாவனை செய்து ஆல்பத்தை புரட்டினேன்.

"ஜெனி, காலையிலே எத்தனை மணிக்கு ஆபிஸ் போற, பிரேக் ஃபாஸ்ட் எங்க சாப்பிடுற?"

"9.30 க்கு ஆண்டி, பெரும்பாலும் பிரேக்ஃபாஸ்ட் கட்டு தான்"

"நீ இட்லி தோசை எல்லாம் சாப்பிடுவில்ல, டெய்லி காத்தால நான் பண்ணித்தரேன்"

"அய்யோ வேனாம் ஆண்டி"

"இல்லை , காலை சாப்பாடை ஸ்கிப் பண்ணவேக் கூடாது, எங்களுக்கு ஒன்னும் சிரமமில்லை, எங்க ரெண்டு பேருக்கும் சமைக்கிறதைக் காட்டிலும் கொஞ்சம் கூட சமைக்கப் போறேன் அவ்வளவுதான்"

'ம்ம்ம் சரி ஆண்டி"

***

மறுநாளிலிருந்து காலை சாப்பாடை ஹாட்-பேக்கில் வைத்து நான் கிளம்பும் நேரத்தில் என்னிடம் வந்து கொடுத்து விடுவார்கள். சுடச்சுட வீட்டு சாப்பாடு சாப்பிடுவதுக் கூட நல்லாதான் இருந்தது.
காலையில் சாப்பிட்டு வேலைப் பார்ப்பதால் வழக்கமாக இருக்கும் ஒரு சோர்வு இல்லவே இல்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டு வாடகையுடன் கார்த்தியின் யோசனைப்படி காலை சாப்பாட்டிற்கும் ஒரு கணக்குப் போட்டு அந்த ஆண்டியிடம் கொடுத்தேன்.

"என்னம்ம ஜெனி இது 1000 ரூபாய் அதிகமா இருக்கு"

"ஆண்டி, இது பிரேக்ஃபாஸ்ட்டுக்கு" என்று நான் சொன்னவுடன் அவர்களின் கண்ணில் அவர்களையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"ஜெனி, உனக்கு செய்யுறதை என் பிள்ளைகளுக்கு செய்யுற மாதிரித்தான் நினைச்சு செஞ்சேன், என் குழந்தைகளும் தூர தேசத்திலே இருக்காங்க, உனக்கு நான் செஞ்சா அவங்களுக்கு யாராவது செய்வாங்க என்கிற நம்பிக்கை தான், இந்தப் பணம் எனக்கு வேண்டாம், யாரும் அவங்க குழந்தைங்க கிட்ட சாப்பாடுக்காக காசு வாங்க மாட்டாங்க"

அவர்கள் இப்படி சொன்னதும் , நானும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். கடைசியா நான் உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீரைக் காட்டியது என் அக்கா கல்யாணம் ஆகி அவள் மாமியார் வீட்டுக்கு போகும்போதுதான்.

"சாரி, ஆண்டி "

"ம்ம்ம், இதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் ஈவ்னிங் சீக்கிரம் வந்துட்டீன்னா எங்க வீட்டுலதான் உனக்கு டின்னர்" என்று சொல்லி அந்த அதிக ஆயிரம் ரூபாயை என் கையில் திணித்தார்கள்.

அன்றிரவு என் அம்மாவிடம் இதைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைக்கையிலேயே அம்மாவோட அழைப்பு கைத்தொலைபேசிக்கு வந்தது.

அந்த ஆண்டிக்கு பை சொல்லிவிட்டு அம்மாவின் அழைப்பை எடுத்தேன்

"ஹலோ அம்மா, நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லவேண்டும்"

"இருடி நானும் ஒரு விசயம் சொல்லனும்"

"ம்ம் சொல்லு"

"நம்ம வீட்டு மாடி போர்ஷனுக்கு ரெண்டு பொண்ணுங்க வந்திருக்காங்க அவங்களுக்கு இன்னக்கி நான் டின்னர் சமைச்சுக் கொடுத்தேன், அவங்களுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா"

"ஏம்மா, நீ உன்னை சிரமப்படுத்திக்கிற"

"இல்லைடி,அவங்க தனியா கஷ்டப்படுறதைப் பார்க்கிறப்ப உன் ஞாபகம் வந்துச்சு, பாவம்டி நீயும் அப்படித்தானே கஷ்டப்படுவே, அவங்களுக்கு நான் செய்றதை நான் உனக்கு செய்யுறதாத்தான் நினைக்கிறேன்... ம்ம்ம் நீ சாப்பிட்டியா"

"ம்ம் ஆச்சு" என்று சொல்லி அன்று நடந்த விசயங்களை அம்மாவிடம் விலாவாரியாக சொல்ல ஆரம்பித்தேன்.

-----------------

இந்தக் கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கேச் சொடுக்கவும் http://translatedtamilstories.blogspot.com/2010/04/breakfast-short-story-translated-by.html

11 பின்னூட்டங்கள்/Comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல கதை!
நல்ல வேளை, ஆன்டியையும் அமானுஷ்யமாக்காம விட்டீங்க!

சென்ஷி said...

//"ஏம்மா, நீ உன்னை சிரமப்படுத்திக்கிற"//

:)))

சென்ஷி

சென்ஷி said...

//siva gnanamji said...
நல்ல கதை!
நல்ல வேளை, ஆன்டியையும் அமானுஷ்யமாக்காம விட்டீங்க!//

அது சரி :)

இங்க பேய் வரலையேன்னு கவனமா எட்டிப்பாத்துட்டு பின்னூட்டம் போட வேண்டியிருக்கு..

இல்லைன்னா ஆன்லைன் ஆவிகள் வூடு பூந்து விளையாடுது :))

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

நாளுக்கு நாள் எங்கயோ போய்கிட்டே இருக்கீங்க தலைவா.. தொடருங்க :)

Gnanes said...

very well said story da..enjoyed every bit....thank got, the aunt wasn;t a ghost

வினையூக்கி said...

நன்றி சிவஞானம்ஜி , சென்ஷி, பொன்ஸ், ஞானேஷ்

none said...

" ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" னு சொல்றது சரியாதான் இருக்கு :)

Unknown said...

nalla kadhai.

Chandrasekaran said...

Good Story

எல் கே said...

நல்ல கதை

setha said...

my mum used to cook nicely and she used to give the food to next door girl who is away from her mother.. that time she used to tell me if i take care of her na, some body will take care of u when u r away from me nu...