Thursday, February 28, 2008

ரயில் பயணச்சீட்டு - சிறுகதை (இந்த வார தமிழோவியத்தில்)

"இவ்வளவு சம்பாதிக்கிற ஆளு, நாளைக்கு மதுரைக்கு அவரு போறதா இருந்த டிரெயின் டிக்கெட்டை கேன்சல் செய்ய சொல்லி நம்ம ஆபிஸ் ஆளு நாரய்யா வை மதியம் இந்த வேகாத வெயில்ல அனுப்பிச்சி இருக்காரு, டிக்கெட் கேன்சல் பண்ணி திரும்ப கிடைக்கப்போற பணத்தினாலா இவருக்கு என்ன பெரிய லாபம், அதை கேன்சல் பண்ணால் என்ன, பண்ணலாட்டி என்ன?"

தமிழோவியத்தில் தொடர்ந்துப் படிக்க இங்கே சொடுக்கவும்

Saturday, February 23, 2008

ஸ்டீவ் பக்னரின் சரியான முடிவு

கடந்த சிலவாரங்களாக பிரச்சினைக்குரிய அல்லது விவாதத்திற்குரிய முடிவுகளைக் கொடுத்தமைக்காக அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் ஆட்ட நடுவர் ஸ்டீவ்பக்னர் ஒரு சரியான முடிவைக் கொடுத்துள்ளார். வங்காளதேசம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஆன தாகா டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிகா வீரர் ஏபி டி வில்லியர்ஸுக்கு எதிராக ஒரு ஆட்டவிதிகளுக்கு உட்பட்ட முடிவொன்றைக் கொடுத்துள்ளார்.

AB De villiers c & b Mohammad Ashraful 46

என்ற ஸ்கோர் கார்டு விபரத்தைப்பார்த்தோமானால் ஒரு விசயமும் புரியாமல் இருக்கலாம். எந்தவிதத்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார் என்று தெரிந்தது என்றால் சுவாரசியமாக இருக்கும்.

சுழற்பந்துவீச்சாளரான அஷ்ரபுல் வீசிய பந்து டிவில்லியர்ஸை அடையும் முன் இரு முறை தரையில் பட்டு அவரின் மட்டைக்கு வந்து சேர்ந்தது. அல்வா மாதிரி கிடைத்த பந்தை தூக்கி சிக்சருக்கு அடிக்க நினைத்த டிவில்லியர்ஸினால் அது முடியாமல் போக, பந்து மட்டையில் பட்டு நேராக அஷ்ரபுல் கையில் தஞ்சம் புகுந்தது.

வங்காள வீரர்கள் கொண்டாட ஆரம்பிக்க, டிவில்லியர்ஸ் ஆடுகளத்திலேயே நின்றார். ”நோ பால்” என அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து அவர் அங்கேயே இருக்க, வழக்கம்போல சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஸ்டீவ் பக்னர் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார் என அறிவித்தார்.

”Law 24, section 6 states that the umpire shall call a no-ball only if it bounce more than twice before reaching the popping crease”

அஷ்ரபுல் இரண்டு முறை மட்டுமே பந்தை தரையில் பட வைத்ததால் விதிகளுக்கு உட்பட்டு அதை “நோ பால்” என அழைக்க முடியாது என முடிவு தெரிவித்தார்.
கடந்த தவறான முடிவுகளாலும் அதைத் தொடர்ந்து வந்த சம்பவங்களும் பக்னரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலும் , இந்த நுட்பமான , விதிகளுக்கு உட்பட்ட, விதிகளை ரசிகர்களுக்கும், ஆடுபவர்களுக்கும் நினைவுப்படுத்தும் வகையிலா முடிவு அவருக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்து இருக்கும்.இந்த வீடியோவில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த முறையை 19வது நொடியில் இருந்து பார்க்கலாம்.

கிரிகின்போ தளசெய்தியையும் படிக்க இங்கு சொடுக்கவும்

37G, மீனாட்சிக் கல்லூரியில் இருந்து லக்ஷ்மண் ஸ்ருதி சிக்னல் வரை - சிறுகதை (தமிழோவியத்தில் வெளிவந்தது)

கடன் அட்டைக்கான காசோலையை மீனாட்சிக்கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள, பெட்ரோல் பங்கில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு, தனது மோட்டார் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த கார்த்திக்கு. ஜோடி ஜோடியாக காதலர்கள் இரு சக்கர வண்டியில் கடந்துப் போனதைப்பார்க்கையில் ஏக்கமாக இருந்தது. தேதி நினைவுக்கு வந்தது.. இன்று காதலர் தினம் அல்லவா!!!

அனுமாரு, குரங்கு மூஞ்சி, நியாண்டர்தால் இப்பொழுது கடைசியா சைமண்ட்ஸ் .. இப்படித்தான் கார்த்தியை அவன் நண்பர்கள் கூப்பிடுவார்கள்.

கார்த்தி தினமும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கையில் கடவுளிடம்

"கடவுளே, அசிங்கமாத்தான் படைச்சே... அட்லீஸ்ட் மாநிறமாவது படைச்சிருக்கலாமே !!!"

அழகு... அழகில்லை என்பது ஒரு ஒப்பீட்டளவில்தான் என்றாலும், கார்த்தியை முதன்முறைப் பார்க்கும்பொழுது 100 க்கு 90 பேருக்கு அவன் அவலட்சனமாக இருக்கிறான் என்பதை அவர்களின் கண்களில் இருந்து அறிந்து கொள்ளும்போது அவனுக்கு வருத்தமாக இருக்கும்.

கைநிறைய சம்பாதித்தாலும், ஓரளவுக்குப் புத்திசாலியாக இருந்தாலும், தன்னால் பெண் நட்பு வட்டாரங்களை உருவாக்கிக்கொள்ள முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை நாளுக்கு நாள் அவனுக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது.. ஆடவன் எனத் தன்னை உணர்ந்து 14 வருடங்கள் ஆன பின்னும் சேர்ந்தார் போல 2 நிமிடம் கூட அவன் எந்த பெண்ணிடமும் பேசியதில்லை. சொந்தக்காரப் பெண்களிடம் பேசினால் கூட மோட்டு வளையப்பார்த்துக்கொண்டுதான் பேசுவான்.

சந்திரா பவன் சிக்னலில் சிவப்பு விழ, தடாலென வண்டியை நிறுத்திய கார்த்தியை உரசியபடி 37G வள்ளலார் நகர் - அய்யப்பந்தாங்கல் பேருந்து வந்து நின்றது.

58....57... என வினாடிகள் குறைந்து கொண்டிருக்க, கண்களை சுழலவிட்ட கார்த்தியின் பார்வை, 37 G பேருந்தில் இடது புறம், நடுவாக இறங்கும் வழிக்குப்பின்னால் சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பெண்ணின் மேல் நின்றது. பார்க்க கடலோரக்கவிதைகள் ரேகா மாதிரி இருந்தாள். மறுமுறை அவளை நோக்கிப்பார்க்கையில், அவள் , கார்த்தி தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கவனிக்கவும் பச்சை விழவும் சரியாக இருந்தது.

பஸ் அவனைக்கடந்து வேகம் எடுத்தது. மீண்டும் அவள் முகத்தைப் பார்க்க கார்த்திக்கு ஆவல் மேலிட, பேருந்தை துரத்தி இடது புறம் வந்தான், அவளும் கவனித்துவிட்டாள், கார்த்தி பேருந்தை தொடர்ந்து வருகிறான் என்று . சின்னப்புன்னகை அவள் முகத்தில் தெரிய... கார்த்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

"அட, நம்மளையும் ஒரு பொண்ணு லுக் விடுறாளே !!" தன்னைத்தான் பார்க்கிறாளா, இல்லை வேறு யாரையுமா? என ஒரு முறைத் திரும்பிப்பார்த்தான். இல்லை வேறுயாருமில்லை.

வாகன நெரிசலில், அனைத்து வண்டிகளும் மெதுவாக நகர்ந்தது கார்த்திக்கு ஒரு வகையில் நல்லதாகப்போயிற்று. முதலில் தயக்கமாகவும், பின் தைரியமாகவும் அவளைப்பார்க்க ஆரம்பித்தான்.

எப்படியும் லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் திரும்பிவிடப்போறோம் என்ற தைரியத்தில் தன் முகத்தை மறந்து அந்தப் பெண்ணை ரசிக்க ஆரம்பித்தான். அவளும் இவனைக் கண்ணுக்கு கண் பார்க்க ஆரம்பித்தாள். லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலும் வந்தது.

கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்தான்... "அழகாகத்தான் இருக்கேடா கார்த்தி நீ" என தனக்குள் ரசித்து சொல்லிக்கொண்டே, 37 G பேருந்து வலதுபுறம் திரும்ப கார்த்தி இடதுபுறம் திரும்பிப்போனான்.

அடுத்த 30 நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்த கார்த்தியின் கலகலப்பைக் கண்ட அறை நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அயப்பன்தாங்கலின் கடைசி நிறுத்ததில், நடக்க உதவும் கைக்கட்டைகளுடன், மெதுவாக பேருந்தில் இருந்து இறங்கிய ஜெனிபரைப் பார்த்து, அவளின் தந்தை "என்னம்மா முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு, ஆபிஸ்ல எதேனும் விசேசமா?"

"ஏதும் இல்லைப்பா, சும்மாத்தா..பஸ் சீக்கிரம் வந்துடுச்சுல்ல அதுதான்"

Friday, February 22, 2008

ஹவா ஹவா , பழைய இந்தி பாப் பாடல்

கானா பிரபாவின் “றேடியஸ்பதி” வலைப்பூவில் சிறப்பு நேயரான துர்காவின் விருப்பங்களில் ஒன்றான மலேசியாவில் பிரபலமான பழைய ஆல்பப் பாடலான “அக்கா மக” பாடலைக்கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கடை 80களில் ஆரம்ப 90களில் சக்கைப்போடுபோட்ட ஹவாஹவா பாடல் சட்டென நினைவுக்கு வந்தது.
ஹசன் ஜஹாங்கீர் என்ற பாகிஸ்தானி பாடகரின் தொகுப்புப்பாடல்களின் ஒன்றான அதை யூடியுப் தளத்தில் தேடியபோது சிக்கியது.அந்தக்காலக்கட்டங்களில் இந்தப்பாடல் ஒலிக்கப்படாத கல்லூரிவிழாக்களோ , சமுதாய விழாக்களோ இல்லை எனலாம். தேசாப், கயாமத் சே கயாமத் தக் ஆகியப்படப்பாடல்களுடன் இந்தப்பாடலும் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டது.(சேரன் பாண்டியன் படத்தில் செந்தில் இந்தப் பாடலை முணுமுணுத்தபடி ஒரு காட்சியில் வருவார்) இந்தப்பாடலின் மூலவடிவம் ஒரு பெர்சிய பாடல் என்று இணையத்தில் தேடியபோது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் கிடைத்தது. ஹசன் ஜஹாங்கிர் இந்த தொகுப்புக்குப்பின் பெரிய அளவில் பேசப்பட்ட பாடல்களைத் தராத நிலையில் மக்களின் நினைவில் இருந்து மறைந்தாலும், இந்தப்பாடல் மக்களின் நினைவில் என்றும் இருக்கும்.

Wednesday, February 20, 2008

அஞ்சாதே படத்தில் இருந்து கத்தாழை கண்ணாலே , கண்ணதாசன் காரைக்குடி பாடல்களின் வீடியோ

சில பாடல்களை முதல் முறைக் கேட்கும்பொழுதே அப்படியே மனதில் உட்கார்ந்து கொண்டு , நம்மை முணுமுணுக்க வைத்துவிடும். சித்திரம் பேசுதடி, “வாழைமீனு” பாடலுக்குப்பின் மீண்டும் இயக்குனர் மிஷ்கின் , இசையமைப்பாளர் சுந்தர் . சி. பாபு கூட்டணியில் இரண்டு பாடல்கள் அந்த வகையில் அமைந்துள்ளன.

கண்ணதாசன் காரைக்குடி பாடல் கிழே:கண்ணதாசன் காரைக்குடிப் பாடலைப் பாடியவர் இயக்குனர் மிஷ்கினே தான்.

பாண்டியராஜன் மீசை இல்லாமல் , வித்தியாசமாக காட்சியளிக்கும் கத்தாழை கண்ணாலே பாடல் கீழேஇந்தப்பாடலைப் பாடியவர் நவீன்.இந்தப்பாட்டில் கவர்ச்சி இல்லாமல் குத்தாட்டம் போட்டிருப்பவர் மும்பை இறக்குமதி “ஸ்னிக்தா”

பாடலை யுடியூப் வலைத்தளத்தில் ஏற்றி வைத்திருந்த அருண் துரைராஜ்007 அவர்களுக்கு நன்றி

அஞ்சாதே திரைப்படத்தைப் பற்றிய பார்வைகள்

“நந்தா வின் பார்வை”

உண்மைத்தமிழனின் நீண்ட நெடிய விமர்சனம்

கடலையூர் செல்வத்தின் விமர்சனம்

Sunday, February 17, 2008

டெண்டுல்கரின் கடைசி ஓவரும் 93' ஹீரோ கோப்பை அரை இறுதிப்போட்டியும்

நாள் : நவம்பர் 24, 1993 இடம் : கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானம்.

18/3 என்ற நிலையில் இருந்து அசாரும் பிரவின் ஆம்ரேவும் மீட்டெடுத்தும் தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பீல்டிங்கினாலும் பந்துவீச்சினாலும் இந்திய 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றிக்கு அருகேவே இருந்தது.
கடைசி ஓவர், 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை முதன்மை பந்துவீச்சாளர்களான கபில்தேவ், பிராபகர், ஸ்ரீநாத் மற்றும் அனில்கும்ப்ளே ,அஜய் ஜடேஜா , சலில் அங்கோலா என அனைவருக்கும் ஓவர் பாக்கி இருக்க , ஆட்டத்தில் அதுவரை பந்து வீச அழைக்கபடாத டெண்டுல்கரிடம் கடைசி ஓவர் தரப்படுகிறது

விக்கெட் கீப்பர் விஜய் யாதவின் பரிந்துரையின் பேரில் அசார் டெண்டுல்கருக்கு அந்த ஓவரைக் கொடுத்தார் என்று சொல்வார்கள். வெறும் மூன்று ரன்களை மட்டும் கொடுத்து இந்திய அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் சச்சின் டெண்டுல்கர்.ஆட்டவிபரம் இங்கே

Wednesday, February 13, 2008

Yes, I love this Idiot, I love this lovable Idiot

திரைப்படங்களில் நாயகன் நாயகி இருவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரின் காதலை அங்கீகரிக்கும் படலம் முடிந்தவுடன் பெரும்பாலும் பாடற்காட்சி அமைக்கப்படும். அது போல அமைந்த பாடல்களில் சிலவைக் காட்சியமைப்பிலும், இசையிலும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிடும்.

கங்கை அமரன் இசையில், கமலஹாசன், ஸ்ரீதேவி நடிக்க வாழ்வே மாயம் படத்தில் “மழைக்கால மேகமொன்று பாடலின்” ஒளி/ஒலி வடிவம் இங்கேஇசைவேந்தர் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி, சித்ரா பாடிய “காதல் கவிதைகள் படித்திடும் நேரம் “ என்ற பாடல் கோபுர வாசலிலே என்ற படத்தில் இருந்து,
“Yes, I love this Idiot, I love this lovable Idiot" எனப் பாடல் ஆரம்பிக்கும் முன்னர் வரும் வசனம் ரசிக்கவைக்கக்கூடியது.சங்கரின் பாய்ஸ் படத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காதல் சொன்னக் கணமே அது கடவுளைக் கண்ட கணமே என அழகான வரிகளுடன் ஆலே ஆலே எனத்துள்ளலோடு சித்தார்த்தின் காதலை ஜெனிலியா டிசௌசா ஏற்றுக்கொண்ட பின் வரும்பாடலின் காணொளிக் கீழேகடந்தகால காதலர்களுக்கு ரம்மியமான நினைவுகளை அசைபோட, நிகழ்கால மற்றும் எதிர்கால காதலர்கள் அனைவருக்கும் உங்கள் காதல் ஈடேற நல்வாழ்த்துக்களுடன் கீழ்வரும் பாடல்

Tuesday, February 12, 2008

”காதலிகள்” தினம் - சிறுகதை

”காதலில் தோற்றவர் என்றோ வென்றவர் என்றோ கிடையாது
காதலால் வாழ்ந்தவர் என்றும் வீழ்ந்தவர் என்றும் ஏதுமில்லை
காதலில் ஒரே வகை.. அது காதலை உணர்ந்தவர்கள்”

நான் காதலை உணர்ந்தவன். அதனால் தான் பலவகையான காதல்களை உணர்ந்த பிறகு இப்பொழுது (மீண்டும் வேறு) ஒரு பெண்ணிடம் என் காதலைச் சொல்லப்போறேன். இந்த பொண்ணு யாரு என்னவென்று எல்லாம் கதை சொல்ல விருப்பமில்லை. நாங்க இரண்டே வரிகள் தாம் பேசிக்கொண்டோம் .. என்ன பேசிக்கிறோம்னு கவனிங்க...

“ரம்யா, உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”

“கார்த்தி.. நாளைக்கு எஸ் னு சொல்லவா, வாலண்டைன்ஸ் டே, நாளைக்கு அக்செப்ட் பண்ணிக்கிறேனே!! பிளீஸ்”

ஜெனி எனக்கு பல்ப் கொடுத்துட்டு போய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து ஒரு பெண்ணிடம் விருப்பத்தைச் சொல்லி உடனடியாக முடிவுகிடைத்த மகிழ்ச்சியில் ”மழைக்கால மேகமொன்று மணி ஊஞ்சல் ஆடியதே” என மனதில் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கும்பொழுது நானும் ஜெனியும் வழக்கமாக முன்பு சாப்பிடும் பேக்கரி வந்தது. இந்த பேக்கரியில் தான் நாங்கள் கடைசியாக சந்தித்துக் கொண்டது.

<<இன்னும் கொஞ்சம் தொடராதோ எனும்போது முடிந்து விடுவதால் காதலும் சில சமயங்களில் ரயில் சினேகம் தான்>>

“ஜெனி , இந்தக் கவிதை எப்படி இருக்கு”

“ம்ம் நல்லா இருக்கிற மாதிரியும் இருக்கு, இல்லாத மாதிரியும் இருக்கு.. ”

“இன்னக்கி காலைல உன்னைப் பார்க்க வருமுன்ன தோனுச்சு”

“இந்த சர்காசிசம் உன்னிடம் எப்போவுமே பிடிக்காதது, சரி கார்த்தி, என் மேரேஜுக்கு வருவியா!!!”

“என்னை என்ன பூவே உனக்காக விஜய்னு நினைச்சியா!!!அந்த அளவுக்கு எல்லாம் மனசு இல்லை!!! எனிவே ஹேப்பி மேரிட் லைஃப்”

நான் சொன்னபடி ஜெனியோட கல்யாணத்துக்குப் போகல, அவளுக்கு குழந்தைக்கூட பிறந்திருச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆண்குழந்தை கார்த்திக்குமார் ன்னு நியுமாரலாஜிப்படி பேரு வைத்திருக்காங்கன்னு எங்க இரண்டுபேருக்கும் பொதுவா இருந்த நண்பர்கள் சொல்லிக்கேள்விப்பட்டு இருக்கேன்.. அவள் கார்த்தின்னு பேரு வைத்தால் என்ன? காத்தவராயன்னு பேரு வைத்தால் என்ன... பேரு வைக்கிறாளாம் பேரு.. ஆள் வேண்டாம் பேரு மட்டும் வேண்டுமாக்கும்!!!

இதுவரை எத்தனைபேரைக் காதலித்து இருப்பேன்... ஆறு பேர் இருக்குமா!!! இருக்கலாம்.. கூடவே இருக்கும். அதில் மூன்று ஒரு தலைக் காதல்கள் ..இந்த ஒரு தலைக் காதல் கிரிக்கெட்ல நெட் பிராக்டிஸ் மாதிரி. ஒரு சில ஒரு தலைக்காதல்களுக்குப்பின்ன நல்ல பார்முக்கு வந்துடலாம். பரஸ்பரக் காதல்களில் இந்த நெட் பிராக்டிஸ் நிறைய உபயோகமாக இருக்கும்.

கோயம்புத்தூர் ல குண்டு வைத்தது , ஜீனத்துடன் ஆன எனது ஒரு தலைக்காதல் இருதலையாய் மாறப்போகும் சமயம் ஒன்றில அணுகுண்டாய் மாறி போச்சு.”உங்க ஆளுங்க எல்லாம் பாம் பார்டிங்க போல ” என விளையாட்டுத்தனமாய் கல்லூரி இரண்டாமாண்டு ஆய்வகத்தில் அவளிடம் சொல்லி வைக்க

“இதுக்குத்தான் உனக்கும் எனக்கும் சரிவராதுன்னு சொன்னேன்... இப்போ இப்படி பேசுற நீ பின்ன என்னவேண்டுமானுலும் பேசுவ!” எனத் திட்டிவிட்டுப்போனவள் கல்லூரி முடியும்வரை பேசவே இல்லை.

சரிதான் போடி, என நானும் அவளை அதன் பின் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இந்த மடம், ஆகலேட்டி சந்தை மடம் னு என்னோட ஜூனியர் அர்ச்சனாகிட்ட ஸ்டார்ட் ஆன கடலை நட்பாகி, நட்புக்குமேலாகி , காதலும் ஆனது.

நிறைய சமயங்களில் பொண்ணுங்களுக்கு பிடிக்காத விசயங்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டருக்கும் சிராக்கோ ஆங்கிலப்படத்துக்கும் என் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தான் அந்தப்படம் 4 ரூபாய் டிக்கெட்டை 25 ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்தேன். நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த பாய்ஸ் ஹாஸ்டலும் அங்க தான் இருந்தது.

மறுநாள் உத்தமனாட்டம் “ நேத்து நைட் செமப்படம், பிட்டும் செம பிட்டு” அப்படின்னு இரவுப்பார்த்தப் படத்தை சிலாகித்து சொல்லப்போக

”ஹவ் சீப் யூ ஆர்? எப்படி கார்த்தி ... இவ்வளவு அருவருப்பானவனா நீ?” அர்ச்சனா பாட்டு பேசிக்கொண்டே இருந்தாள்.

“அர்ச்சு, திஸ் ஈஸ் டூ மச், மைண்ட் யுவர் வேர்ட்ஸ், ”

“அந்த மாதிரிப்படம் பார்த்துட்டு உன்னாலே கூச்சமே இல்லாமல் எப்படி பொண்னுங்க கிட்ட பேச முடியுது.. “

“என்னடி, ரொம்ப பேசுற, கல்யாணம் ஆன நடக்கிறது தானே!!!”

“சே , உங்க கிட்ட பழகினதுக்காக வெட்கப்படுறேன்.. குட் பை ஃபார் எவர்”

அர்ச்சனா அப்படித் திட்டிட்டு போனபின் ஒரு வாரம் அவளுக்காக வழக்கமான நாங்கள் சந்திக்கும் மரத்தடியில் காத்திருந்தேன். அவள் வரவில்லை. அதன்பின் அந்த மரத்தடி வழியாக நான் போகவில்லை.

ஆட்டோகிராப் சேரன் மாதிரி முன்பு ஏற்பட்ட காதல் அனுபவங்களின் நினைவுத்தொடர் , சரியாக 12 மணிக்கு ரம்யாவின் தொலைபேசி அழைப்புவர அறுபட்டுபோனது.

“கார்த்தி, ஐ லவ் யூ, நானும் உன்னை, சாரி சாரி, உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்”

“கிரேட்.. நீ எனக்கு கிடைப்பது என் பாக்கியம், ஹேப்பி வாலண்டைன்ஸ் டே மைடியர் ரம்யா”

“சேம் டூ யூ கார்த்தி” இதற்கு முன் நானும் ரம்யாவும் மணிக்கணக்கில் பேசி இருந்தாலும் காதலில் விழுந்த பின் பேசுவது சுவாரசியம் தானே.

விடிய விடிய பேசத்தான் போறோம். இந்த மாதிரி காதல் வசனங்கள் பேசப்போவது எனக்கு மூன்றாவது முறை.. ரம்யாவைப்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. தோழமையில் இருந்ததைக் காட்டிலும் ரம்யா அதிக வெளிப்படையாகப்பேசினாள்.

“கார்த்தி, நான் தான் உனக்கு பர்ஸ்ட் லவ்வா?”

ஜீனத்,ஜெனி,அர்ச்சனா மூவரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டு

“ஆமாம் ரம்யா, பர்ஸ்ட் டைம் நான் ஒரு பொண்ணுகிட்ட என் காதலை சொன்னது உன்னிடம் தான்”

இதற்கு முன்னர் வாழ்க்கையில வந்த காதல்களைக் கட்டிக்காக்க முடியல, இதையும் சொதப்பிடுவேனோன்னு மனசுல ஒரு மூலையில பயம் இருந்தாலும் .. பார்க்கலாமே!! அடுத்த வருடமும் இதே ரம்யாவோட பேசிட்டு இருந்தால் என் காதல் தேடல் முடிந்துவிட்டது..இல்லாவிடின் பயணம் தொடர்கிறது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம், என் கதைக்கேட்டிங்க, என் வாழ்த்தையும் கேட்டுட்டுப்போயிடுங்க,

உங்க எல்லோருக்கும் காதலிகள் தின , மன்னிக்கவும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Sunday, February 10, 2008

மேற்கிந்திய தீவுகள், வாழ்ந்து கெட்ட அணி

ஒரு காலத்தில பெரிய மதிப்போடு வாழ்ந்த குடும்பங்கள் கால ஓட்டத்தில் நொடித்துப் போய், வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற அடைமொழியுடன் வலம் வரும்பொழுது பார்க்க மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். கிரிக்கெட்டில் வாழ்ந்து கெட்ட அணியாக தற்பொழுது வலம் வருவது மேற்கிந்திய தீவுகள் அணி தான். ஆரம்ப 90கள் வரை ”வெஸ்ட் இன்டீஸ்” என்றாலே எதிர் அணியினருக்கு அடிவயிற்றைக் கலக்க வைத்த அணியாக திகழ்ந்த அணி , கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கடை 90களில் மொத்தமாக தன் பலத்தை இழந்தது. அவ்வப்போது எதிரணியினருக்கு ஷாக் (Mini world cup win, World Record Test chase) கொடுத்தாலும் , இன்னமும் காலிப்பெருங்காய டப்பாவாகத்தான் இருக்கிறது.

தன்னை நம்ப மறுத்தவன் தாழ்ந்து போவான் என, வலுவான நிலையில் இருந்து எப்படி ஒரு முக்கியமான ஆட்டத்தில் வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி தாரை வார்த்துக் கொடுக்கிறது என்பதை , 1996 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மொகலியில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரை இறுதிப் போட்டியை ஒரு மீள் பார்வை செய்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

15/4 என்ற அபாயகரமான நிலையில் இருந்து ஸ்டூவர்ட் லாவும், மைக்கெல் பேவனும் அணியை மீட்டு ஆடிய ஆட்டத்தினால் கவுரவமான 207 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி ,165/2 , 53 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலகுவான நிலையில் இருந்து தோல்வியை நோக்கி அவ்வணி சரிகின்ற நிகழ்வுகளின் காணொளி கீழேஆட்ட விபரம் இங்கே

கிரிக்கெட்டிலும் வாழ்க்கையிலும் "No ifs and buts" என இருந்தாலும் ஒரு வேளை, ஷேன்வார்னே அவுட் கேட்டபோதெல்லாம் வெங்கட் ராகவன் கையைத் தூக்காமல் இருந்திருந்தால்,ரிச்சி ரிச்சர்ட்சன் தேவை இல்லாமல் அந்த ஒரு ரன் ஓடாமல் இருந்திருந்தால், வால்ஷ் வந்த உடனே ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் கிரிக்கெட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட்டு இருக்குமோ?!!!!

ம்ம்ம்.... கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தோல்விக்குப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி பெரிய அளவில் எழவில்லை. எழவேண்டும்..மீண்டு(ம்) வரவேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ஆர்வலர்களின் பேராவல்.

நாதன் ஆஸ்ட்லேயின் அதிரடி இரட்டை சதம் - கிரிக்கெட் நினைவுகள்

சில சமயங்களில் அடைந்த வெற்றிகளை விட , தோல்வியைத் தவிர்க்கப் போராடும் போராட்டங்கள் நினைவை விட்டு அகலாது. அந்த மாதிரி நினைவில் நிற்க வைக்கும் போராட்டங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில் நடத்திக் காட்டியவர் நியுசிலாந்து அணியின் ஆட்டக்காரர் நாதன் ஆஸ்ட்லே.

கடைசி விக்கெட்டுடன் இணையாட்டம் ஆடுவதென்றால் நாதன் ஆஸ்ட்லேவுக்கு இனிப்பு சாப்பிடுவது மாதிரி. நிச்சயமான தோல்வி என்ற நிலையில், அந்த சமயத்தில் அதிக “டக் - அவுட்கள் “ சாதனையை வைத்திருந்த டேனி மோரிசனுடன் இணைந்து தான் சதமடித்ததோடு மட்டுமல்லாமல் , இணையாட்டமாக ஆட்டமிழக்காமல் 106 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து உடனான டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்ய வைத்தார். ( உடன் ஆடிய டேனி மோரிசன் அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டார், திரும்ப அவர் டெஸ்ட் ஆட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை. அதுவே அவருக்கு கடைசி ஆட்டமாக அமைந்துவிட்டது)


ஆட்ட விபரம் இங்கே

ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வைத்துவக்கி ஆஸ்ட்லே, ஏனைய நியுசிலாந்து பந்து வீச்சாளர்களைப்போலவே பேட்டிங் கடைவரிசையிலும், உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே சோபித்தார். இவரது அக்கா லிசா ஆஸ்ட்லே இவருக்கு முன்னதாகவே நியுசிலாந்து பெண்கள் அணியில் இடம்பிடித்து மூன்றாண்டுகளுக்குப்பின்னரே இவரால் தேசிய ஆண்கள் அணியில் இடம்பிடிக்க முடிந்தது.

கொஞ்சம் அதிரடியாக ஆடுவதிலும் வல்லவரான ஆஸ்ட்லே, ஒரு நாள் போட்டிகளில் 16 சதங்களையும் டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களையும் விளாசி இருக்கிறார்.

இவரது கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான தருனம் மார்ச் 16 ,2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் கிறிஸ்ட்சர்ச் நகரில் வந்தது.வெற்றி இலக்கு 550 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மறுமுனையில் ஒவ்வொருவராக ஆட்டமிழக்க , காயம் காரணமாக கடைசி விக்கெட்டாக மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ரன்ஸ் களம் இறங்கினார். ஒரு முனையை கிறிஸ் கெய்ரன்ஸ் தற்காத்துக்கொள்ள, மறு முனையில் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்துக்கட்டிய ஆஸ்ட்லே தனது 101 - 200 யை வெறும் 39 பந்துகளில் கடந்தார். 331/9 என்ற நிலையில் இருந்து அதிரடியாக ஆடத்தொடங்கிய ஆஸ்ட்லே இங்கிலாந்து நடுநடுங்கிப் போனது என்பது உண்மைதான். 153 பந்துகளில் 200 ரன்களைக் கடந்து அதிவேகமாக இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். (அதற்கு சிலவாரங்களுக்கு முன்புதான் கில்கிறிஸ்ட் அந்த சாதனையை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) 11 சிக்ஸர்கள் 28 பவுண்டரிகளுடன் 168 பந்துகளைச் சந்தித்து 222 ரன்களில் ஆஸ்ட்லே ஆட்டமிழந்த போதுதான் இங்கிலாந்துக்கு உயிரே வந்தது. வெறும் 98 ரன்களில் நியுசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.

அந்த ஆட்டத்தின் காணொளியை கிழேப் பார்க்கலாம்.ஆட்ட விபரம் இங்கே

அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அடைந்த வெற்றியை விட, இழப்பதற்கு ஒன்றுமில்லை அடைவதற்கு வெற்றி இருக்கிறது என்று ஆஸ்ட்லே போராடியது கிரிக்கெட் இருக்கும் வரை பேசப்படும்.

Saturday, February 09, 2008

താളവട്ടം - மனசுக்குள் மத்தாப்பு - क्योंकि

One Flew Over the Cuckoo's Nest என்ற ஆங்கிலப்படத்தை மேலாகத் தழுவி பிரியதர்சனின் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால், கார்த்திகா, லிசி நடிக்க 1986 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தாளவட்டம். எம்.ஜி.சோமன், நெடுமுடி வேணு ஆகியோரும் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பனர்.

கதையின் படி கதாநாயகனின் விளையாட்டுத்தனத்தால், அவனின் காதலி விபத்தொன்றில் உயிரிழக்க அதனால் மனநலம் பாதிப்படைந்த நாயகனை மனநல காப்பகத்தில் சேர்க்கின்றனர். அங்கு கடுமையான முறைகளினால் மட்டுமே நோயாளிகளைக் குணமாக்க முடியும் என்ற அபிப்ராயம் உள்ள தலைமை மருத்துவரின் மகள் நாயகனின் மேல் வைக்கும் பிரியத்தினால் நாயகன் குணமடையும் சூழலில் , அடுத்தடுத்து திருப்பங்களுடன் கனமான முடிவுடன் படம் நிறைவு பெறும். தலைமை மருத்துவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கருணை உள்ள மருத்துவராகக் காட்டி இருக்கும் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

படத்தில் மிகமுக்கிய காட்சியான விபத்திற்கு முன்னால் வரும் பாடல் மலையாளத்தில் இன்றும் பலராலும் விரும்பிக்கேட்கப்படும் பாடல்களுள் ஒன்றாகும்.

ரெகுகுமாரின் இசையில் எம்.ஜி.ஸ்ரீகுமார், கே.எஸ்.சித்ரா குரல்களில் அமைந்த அந்தப் பாடலின் காணொளி இங்கே


1988 ஆம் ஆண்டு தாளவட்டம் படம், மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. பிரபு,சரண்யா,லிசி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ராபர்ட்ராஜசேகரனின் இயக்கத்தில் வெளிவந்தது.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ஜெயச்சந்திரன் , சுனந்தா பாடி இருக்கும் இந்த பாடல் காட்சியில் பிரபு எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பாருங்கள்.இந்தியில் ஷாருக்கானை வைத்து தயாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு , பின்பு இயக்குனர் பிரியதர்சனுக்கும் அவருக்கும் ஏற்பட்டக் கருத்து மாறுபாடுகளால் ஷாருக் நீக்கப்பட்டு சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க, கரீனாகபூர் அக்கறைக் காட்டும் மருத்துவராகவும், ரிமி சென் காதலியாகவும் நடித்து க்யோன் கி என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு படம் வெளியானது.

ஹிமேஷ் ரேசமய்யாவின் இசையில் உதித் நாரயண், அல்கா யாக்னிக் குரல்களில் மலையாளம் தமிழ் வடிவங்களில் வந்தபோது கிடைத்த அதே வரவேற்பை இந்தி வடிவத்திலும் பெற்றது.


மூன்று வடிவங்களுமே கிட்டத்தட்ட 20 வருட இடைவெளிகளில் வந்திருந்தாலும் இன்றும் கேட்கும்பொழுது மனதை இளமையாக்குகிறது என்பது நிச்சயமான உண்மை.

Thursday, February 07, 2008

தமிழோவியம் இணைய இதழில் என் சிறுகதை

தமிழோவியம் இணைய இதழுக்கு நான் அனுப்பி இருந்த "நானும் இந்தியன்" என்று தலைப்பிட்டக் கதை , இவ்வார இதழில் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கதையை அனுப்ப ஊக்கமளித்த பாஸ்டன் பாலா, கதையை எழுதும்போது தங்கள் பொன்னான ஆலோசனைகளை வழங்கிய பாலபாரதி, சிறில் அலெக்ஸ் , தலைப்பை வழங்கிய டிபிசிடி , தனிவாசகர்கள் சிவஞானம்ஜி ,ஜிரா மற்றும் திவ்யா ஆகியோருக்கும் நன்றி.

கதையைப் பதிப்பித்த தமிழோவியத்திற்கும், கணேஷ் சந்திரா அவர்களுக்கும் மிக்க நன்றி.

தமிழோவியத்தில் கதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

கும்ப்ளே எடுத்த 10 வது விக்கெட்டைப் பார்க்காமல் இருந்திருந்தால் - சிறுகதை

ஒவ்வொரு பிப்ரவரி ஏழாம் தேதி அன்றைக்கும் கும்ப்ளே, ரம்யா அப்புறம் மோகன் மூன்று பேரும் கரெக்டா ஞாபகத்துக்கு வருவாங்க..ஒன்பது வருடங்களுக்கு முன் அந்த ஞாயிற்றுக்கிழமை நிழலாய் நினைவுக்கு வந்தது.

”கும்ப்ளேக்கு நல்ல சான்ஸ்டா இன்னக்கி,சக்லைனை தூக்கிட்டு, அடுத்த பாலே வாக்கர் யூனூஸையும் எடுத்துட்டா பர்பெக்ட் டென் தான்?”

பாய்ஸ் ஹாஸ்டல்ல பாதிக்கூட்டம் கவுண்டர் கடையிலத்தான் இருந்தது. இன்னக்கி சண்டேன்னாலும் காலேஜ் ஆடிட்டோரியத்துல ஸ்கூல் பசங்களுக்காக கல்சுரல்ஸ் நடந்துட்டு இருக்கு. வேலிடிக்டரி பங்க்சன் கூட போகமா இங்க அடிச்சு பிடிச்சுக்கிட்டு கும்ப்ளேவோட 9 வது விக்கெட்டுக்காக காத்துட்டு இருந்த கூட்டத்தில் இருந்து

”ஹேஏஏஏஏஏஎ” காது கிழியுற அளவுக்கு சத்தம்... சக்லைன் எல்பிடபில்யூ... கும்ப்ளேவின் அப்பீலுக்காகக் காத்திருந்தவர் போல அம்பயர் கையைத்தூக்கினார்.”ம்ம்ம் இன்னும் ஒன்னே ஒன்னு, கடவுளே பர்ஸ்ட் பாலே வாக்கரை கால்ல வாங்க வச்சுடு, கால்ல பட்டுட்டால் போதும் நம்ம ஆளு கையைத் தூக்கிடுவாரு” என மனதில் வேண்டிக்கொண்டே நான் லேசாக தலையை திருப்பியதில் ரம்யாவும் மோகனும் நடந்து வருவது தெரிந்தது.

ரம்யா விடுவிடுவென நடந்து வந்து கொண்டிருந்தாள். மோகன் பின்ன வேகமாக மன்னிப்புக்கேட்கும் தொனியில் துரத்திக் கொண்டு வர, ரம்யா என்னைப் பார்த்ததும்

“கார்த்தி, பஸ் ஸ்டாப் வரை என் கூட வர்றீயா?”

“இல்லை ரம்யா, லாஸ்ட் விக்கெட், கும்ப்ளே பத்து விக்கெட் எடுக்க சான்ஸ் இருக்கு, ஹிஸ்டாரிக் மொமெண்ட், மிஸ் பண்ண விரும்பல..மோகன் இருக்கானே”

ரம்யா பதிலேதும் சொல்லாமல் விடுவிடுவென நடந்தாள். மோகன் கூடவே கெஞ்சியபடி போனது சிரிப்பாகவும் பாவமாகவும் இருந்தது.


ரம்யா என்னிடம் பேசிட்டு போறதைப்பார்த்த எங்க கிளாஸ் பிபிசி ரேடியோ கிருஷ்ணமூர்த்தி

“மச்சான் கலக்குற,, உன்னோட பரம விரோதியோட தோஸ்து, பேசிட்டு போறாள், என்ன விசயம்?”

“ஒன்னுமில்லைடா, ஸ்கோர் கேட்டா”

கும்ப்ளே வுக்கு லாஸ்ட் விக்கெட் கிடைக்கனும்னு ஸ்ரீநாத் வைட் பாலா போட்டுட்டு இருந்தார். முன்ன கபில்தேவுக்கு 433 வது விக்கெட் கிடைக்க கும்ப்ளே இப்படி வைட் பால்ஸ் நிறைய போட்டது ஞாபகத்துக்கு வந்தது. நாம யாருக்காவது ஒன்னு செஞ்சா , மத்தவங்க அதை நமக்கு செய்வாங்க அப்படிங்கிறது கும்ப்ளே விசயத்துல உண்மையானது.

மனம் கிரிக்கெட்டில் ஒன்ற நினைத்தாலும் ரம்யாவின் செய்கை எரிச்சல்தான் வரவைத்தது. மோகனை எரிச்சல் படுத்த என்னை அவள்கூட பஸ் ஸ்டாப் வரை வரக்கேட்கிறாள்.
இது முதல் தடவை இல்லை.. எப்பொவெல்லாம் அவளுக்கும் மோகனுக்கும் முட்டிக்குதோ அப்பொவெல்லாம் என்னிடம் வந்து பேச ஆரம்பிப்பாள். போன செமஸ்டர்ல அவள் டாக்டிக்ஸ் தெரியாம நானும் நிறைய பேசி இருக்கேன். மோகனும் அவளும் சமாதனம் ஆன உடனே கண்ணுக்கு கண் பார்த்தால் கூட சிரிக்க மாட்டாள். எனக்கு ரம்யா மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தாலும் , அடுத்தவன் ஆட்டத்தைக் கலைக்க வேண்டாம் என்று ஒதுங்கியே இருக்கும்பொழுது அடிக்கடி இந்த கிருஷ்ணமூர்த்தி என்னை ஏத்திவிடுவான்.

“மச்சான், எதற்கும் அசராத எதிரியைக்கூட பொண்ணை வச்சு கீழேதள்ளிடலாம்.. மச்சான் அவன் ஆளு ரம்யாவுக்கு நீ டிராக் போடு, ஆட்டோமெடிக்கா மோகன் சைக்கோவா ஆயிடுவான்”

“டேய் பிபிசி, அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்டா”

“மச்சான், எந்தக்காலத்துல நீ இருக்க, வர பிப்ரவரி 14 மோகன் ரம்யாவை புரோபஸ் பண்ணப்போறான் பாரு”

டீவியில் மைதானத்தில் எழும்பிய சத்தத்தை விட , கவுண்டர் கடையில் அதிகம் சத்தம் வந்திருக்கும்.

ஒரு வழியா லபக்குன்னு வாசிம் அக்ரம் கேட்சை லகக்ஷ்மன் பிடிக்க கும்ப்ளே பத்தாவது விக்கெட்டை எடுத்தார்.டெஸ்ட்மேட்ச் வின், அதுவும் பாகிஸ்தானோட, இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹிஸ்டாரிக் மொமெண்ட்ஸை லைவ் ஆ பார்த்தது அடுத்த ஒரு வாரத்திற்கு மனசுக்கு சந்தோசமா இருந்தது.

ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை பிப்ரவரி 14 பிபிசி சொன்ன மோகன் ரம்யா பற்றிய கிசுகிசு உண்மை என்று தெரிந்த போது, மனசுக்குள் ஒரு உறுத்தல் கும்ப்ளேவோட பத்தாவது விக்கெட்டுக்காகக் காத்திருக்காமல் ரம்யாவுடன் பஸ் ஸ்டாப் வரை போய் இருந்தால் மோகன் இடத்தில் நான் இருந்திருப்பேனோ என்ற ஆதங்கம், அழகான மனைவி ஜெனி, குட்டிப் பாப்பா அஞ்சலி என என் வாழ்க்கையில் புதுவரவுகள் இந்த ஒன்பது வருடத்தில் வந்துவிட்ட போதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

========

அனில் கும்ப்ளேவின் பர்பெக்ட்-டென் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தின் ஆட்ட விபரம் இங்கே

Wednesday, February 06, 2008

கொசுக்களும் அதைச்சார்ந்த சில நினைவுகளும், பதிவர் அப்பாவிக்காக
ஙேஏஏஏஏஏஏஏஏஏஏ,, நல்லா துங்கிட்டு இருக்கிறப்ப காது பக்கத்துல வந்து மியுசிக் போடுற கொசுவை அடிக்க நினைச்சா, அது ஸ்லிப் ஆகி நம்ம மூக்குல அடிச்சு தூக்கம் கலையுறப்ப வர்றா ஆத்திரம் இருக்கே அது சொல்லி மாளாது.

உலகத்தில எந்த உயிரினத்தோட இறப்பைக் கண்ணால பார்த்தாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதுக்கு ஒரே ஒரு எக்ஸப்ஷன் இந்தக் கொசுதான். கொசு ஜம்முன்னு நம்ம மேல உட்கார்ந்து ஜூஸ் குடிக்கிறாப்ல ரத்தத்தை இஞ்செக்ஷன் போட்டு உறிஞ்சுட்டு இருக்கிறப்ப படீர்னு ஒரு அடி போட்டு அதைத் தட்டி விடுறது ஒரு போர்க்களத்தில் ஏதோ வெற்றியை சாதித்தது மாதிரிதான்.கொசுவலை இருந்தும் , சின்ன வயசுல சாம்பிராணி போட்டு கொசுவை விரட்டி இருக்கோம். சின்ன பேப்பர்ல எண்ணெய் தடவி, டியுப்லைட்ல தொங்க விட்டு கொசு பிடித்தக் காலம் போய் பின்ன சுருள்வர்த்தி வந்தது. நடுவில ஓடோமாஸ் அப்படின்னு ஒரு க்ரீம் அதற்கடுத்து எலக்ட்ரிக் மெஷின்ல கொசுவை விரட்டுற பட்டிகள் வந்தது.
Banish தான் முதல்ல வந்தது என்று நினைவு... மாசக்கடைசியில உபயோகப்படுத்தின பேனிஷ் பட்டிகளை (வாசம் கொஞ்சம் இருக்கும்) லேசாக நெருப்பில் காட்டி கொசுவை விரட்டியக்காலமும் உண்டு. சுருளு போய், பட்டி போய், இப்போ திரவ வடிவிலும் கொசுவை மக்கள் விரட்டத்தான் முயற்சி செய்கிறார்கள். என்ன டெக்னாலஜி போட்டு கொசுப்பரம்பரையைக் காலி செய்ய நினைத்தாலும் டைனசோர் காலத்தில் இருந்து இருக்கும் இந்தக் கொசுக்கூட்டத்தை மட்டும் ஒன்ன்னும் செய்ய முடியல.

தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்ககூடிய கொசுக்களின் வேகம் 1-2 கிமீ/ஒரு மணி நேரம். உலகத்தில நிறைய பேரைக் காலி பண்ணி இருக்கிற வியாதிகளை எல்லாம் அதிகமாக ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தி வருகிற வேலை செய்யுறது இந்தக் கொசுக்கள் தான். இவ்வளவு வேலை பண்ணி இருந்தாலும் எய்ட்ஸ் கொசுக்கள் மூலமாகப் பரவாது என்று சொல்றாங்க


Studies with HIV clearly show that the virus responsible for the AIDS infection is regarded as food to the mosquito and is digested along with the blood meal.
Mosquitoes Do Not Ingest Enough HIV Particles to Transmit AIDS by Contamination
An AIDS-free individual would have to be bitten by 10 million mosquitoes that had begun feeding on an AIDS carrier to receive a single unit of HIV from contaminated mosquito mouthparts.


கொசுக்களைப் பற்றிய “கொசு”றுத்தகவல்கள் :

1. 2700 வகையான கொசுக்கள் உலகத்தில் உள்ளன.
2. வாழைப்பழம் சாப்பிடுறவங்களை கொசுவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
3. கொசு உண்மையில் கடிப்பதில்லை. ஒரு விதமான திரவத்தை நம் தோலின் மேல் செலுத்துவது நம்மைக் கடிப்பது போல இருக்கிறது.
4. பெண் கொசுக்கள் தாம் நம்மைக் கடிப்பது (கொசுக்களிலுமா?!!!!)...ஆண் கொசுக்கள் பியூர் வெஜிடேரியன்ஸ்.
--------------

பதிவர் “அப்பாவி” அழைத்ததின் பெயரில் எழுதப்பட்டது.

Sunday, February 03, 2008

கடைசி பந்து சிக்ஸர்கள்

கடைசிபந்தில் சிக்ஸர் என்றாலே சேதன்சர்மா, ஜாவித் மியாண்டட் , ஷார்ஜா அத்துடன் கொஞ்சம் ஆதங்கம் இவைதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தோன்றும். எத்தனைதடவைப் பார்த்தாலும் அந்த மேட்சை நினைத்தாலும் ஒரு இனம்புரியாத சோகம் மனதைக்கவ்வும். மியாண்டட் அடித்த அந்த சிக்ஸரினால் பாகிஸ்தானின் ஆதிக்கம் கங்குலி பாகிஸ்தானில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித்தொடரை வெல்லும் வரைத் தொடர்ந்தது.நாலு வருடங்களுக்கு முறை உலகக்கோப்பை போட்டியில் மட்டும் வென்று ஆறுதல் அடைந்துகொண்டிருந்தோம்.

சேதன் சர்மாவின் அந்தக் கடைசி ஓவரின் வீடியோ இங்கேஆட்டவிபரம் இங்கே

மேலதிக தகவல் சேதன்சர்மா ஒருநாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனையும் ஒரு சதமும் அடித்துள்ளார். குறிப்பிடத்தக்க சாதனைகளான அவை இரண்டும் மக்களுக்கு மறந்து போய் இந்த கடைசிப் பந்து சிக்ஸர் மட்டும் நினைவில் இருப்பது அவரின் துரதிர்ஷ்டமே.

ஆஸ்திரேலியாவுடன் ஆன ஒருநாள் ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்டெடுத்து கடைசிபந்தில் ஆறு ரன்கள் அடித்தால் ஆட்டம் சமன் என்ற நிலையில் பாகிஸ்தானின் ஆசிப் முஜிதபா அடித்த சிக்ஸரின் வீடியோ இதோஆட்டவிபரம் இங்கே

2006 ஆம் ஆண்டி பங்களாதேஷ் அணிக்கெதிராக ஜிம்பாப்வே அணியின் பிரண்டன் டெயிலர் கடைசிபந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தக் காட்சிகள் கீழேஜிம்பாப்வே பெரிய அணிகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அந்த வைத்தியங்களுள் இந்த சிக்ஸரும் ஒன்று.

ஆட்டவிபரம் இங்கே

தென்னாப்பிரிக்காவின் லான்ஸ் குலூஸ்னர் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் நியுசிலாந்தின் டியோன்நாஷ் பந்தை சிக்ஸருக்கு அடித்து வெற்றித் தேடி தந்துள்ளார்.

கொசுறு: நான்கு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியாவின் ராஜேஷ் சவுகான், பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக்கின் பந்தை சிக்ஸருக்கு தூக்கி வெற்றி பெறச்செய்தார்.
ஆட்டவிபரம் இங்கே

Saturday, February 02, 2008

இன்னா செய்தாரை ஒறுத்தல் .. - சிறுகதை

கார்த்தி இந்த ஐந்து வருடங்களில் நான்கு நிறுவனங்கள் மாறிவிட்டு, இப்பொழுது ஐந்தாவது முறையாக மரம் தாவ , கடைசி சுற்று நேர்முகத் தேர்விற்காகக் காத்திருக்கிறான். இந்த நிறுவனத்தில் இந்த தொழில்நுட்ப சுற்றைக் கடந்துவிட்டால் , அடுத்து மனித வள துறை சுற்றில் சம்பள விசயங்களை இறுதி செய்வது மட்டும் தான்.கல்லூரிக் காலம் தொட்டு இந்த நிறுவனம் தான் கார்த்தியின் ஆதர்சன நிறுவனமாக மனதில் இருந்து வருகிறது.

“மிஸ்டர், கார்த்தி ” என விளித்து மனிதவளத்துறையில் இருக்கும் ஒரு பெண் கார்த்தியிடம் நேர்முகத் தேர்வு நடக்கும் அறையை சுட்டினாள். ம்ம் இவளை இந்த நிறுவனத்தில் சேர்ந்தபின் நட்பாக்கிக் கொள்ளவேண்டும் மனதில் நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு அங்கு மோகனைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் தனக்கு இந்த வேலைக் கிடைக்காது என முடிவுகட்டினான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் கார்த்தி முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் அவனுக்கு மேலாளராக இருந்தவர்தான் இந்த மோகன். கல்லூரி முடித்தவுடன் வேலையில் சேர்ந்திருந்ததால் சுறுசுறுப்பாக வேலையைக் கற்றுக் கொண்டு மோகனின் அபிமானத்தைப் பெற்ற கார்த்தி, மோகனின் சிபாரிசினால் ஒரு வருடத்திலேயே மற்றவர்களைக் காட்டிலும் நல்ல ஊதிய உயர்வையும் , பொறுப்பையும் பெற்றான்.

இரண்டாம் வருடத்தில் மோகன் தனது அதிகாரத்தின் கீழே வந்த ஒரு திட்டத்தில் , மேலிட எதிர்ப்பையும் மீறி கார்த்திக்கு மிக முக்கியமான பொறுப்பைக் கொடுத்து வைத்திருந்த நேரத்தில் திடிரென இரண்டு மடங்கு சம்பள வேலைக்காக மோகனிடம் கூட கலந்தாலோசிக்காமல் ராஜினாமா செய்து விட்டு போனவனுக்கு அதே மோகன் தான் இங்கு இருப்பார் என்பது கனவிலும் நினைத்துப் பாராத ஒன்று.

“கார்த்தி, உன் மேல நிறைய வருத்தம் உண்டு.. உலகம் ரொம்ப சின்ன உருண்டை. வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை திரும்ப சந்திக்க நேரிடும்... திரும்ப சந்திக்கிறப்போ நாம அவங்களுக்கு என்ன கொடுத்தமோ அது திரும்ப நமக்கு கிடைக்கும்.. ஐ யம் சாரி டு சே திஸ் ,,உன்னை என் நண்பர்கள் லிஸ்ட்லேந்து எடுத்துட்டேன்.. எனிவே ஆல் த பெஸ்ட் யங் மேன்”

கார்த்திக்கு அப்போது எந்தவித தொந்தரவு இல்லாமல் வேலையில் இருந்து விடுவித்து அனுப்பிவைத்த மோகன் அவனது கடைசி நாளன்று சொன்னது நினைவுக்கு வந்தது .

“ஹல்லோ சார் ஹவ் ஆர் யூ” எனக்கேட்ட கார்த்தியை இருக்கையில் அமரச்செய்து முகத்தில் சலனமே இல்லாமல் தொழில்நுட்ப சம்பந்தமான கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு “குட் லக் ஆல் த பெஸ்ட்” என சொல்லி அனுப்பி வைத்தார்.

வேலை தனக்கில்லை என முடிவு செய்து வெளியே வந்து வரவேற்பறையில் அமர்ந்திருந்த கார்த்தியை சில நிமிடங்களில் மனிதவள மேலாளர் அழைக்க, ஆச்சரியத்துடன் உள்ளே சென்றவனிடம்

“மிஸ்டர் கார்த்தி, அவர் டிரக்டர் ஈஸ் வெரிமச் இம்பரஸ்ட் வித் யூ, காங்க்ராசுலேஷன்ஸ்,லெட் அஸ் டிஸ்கஸ் அபவுட் சாலரி எக்ஸ்பெக்டேஷன்ஸ்”

கனவா நினைவா என்று கார்த்திக்குப் புரியவில்லை. மோகன் சாருக்கு தன்மேல இருக்கும் அந்த அபிமானம் இன்னும் போகவில்லை. கையில் பணி நியமனக் கடிதத்துடன் வெளியே வந்தவனின் மனதில்
“மோகன் சார் ரியலி கிரேட், அவரை நட்டாத்துல விட்டுட்டுப் போன எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்காரு, ஐ திங் ஐ வில் ஹேவ் அ நைஸ் டைம் ஹியர்” ஓடிக்கொண்டிருந்த அதே சமயத்தில்

உள்ளே மோகனின் மனதில் ”மவனே , வாடா வா, நீ ஜாயின் பன்னதும் உன்னைக் கவனிச்சுக்குறேன்... எத்தனை சொல்லடி பட்டு அந்த புரஜெக்டை முடிச்சிருப்பேன்... உன்னை செலக்ட் பண்ணதே நீ விட்டுட்டுப் போனதனால நான் பட்ட கஷ்டத்தை உனக்கு திருப்பிகொடுக்கதாண்டா!!!!!” என நினைத்துக்கொண்டிருந்தது சில காலத்துக்கு கார்த்திக்குப் புரிய வாய்ப்பே இல்லை.

இன்சாமம் உல் ஹக்


இன்சாமம் உல் ஹக் , தூக்கத்தில் இருந்து பாதியில் எழுப்பிவிட்டு , போய் பிடிக்காத வேலை ஒன்றை செய்து வா என்று யாரோ விரட்டியது போல வேண்டா வெறுப்பாக ஆடுகளத்திற்குள் இவர் நுழைவதும் ஒரு அழகுதான். சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமான இவர், ஆரம்பத்தில் துவக்க ஆட்டக்காரராகத் தான் களத்தில் இறங்கினார். அந்த நிலையில் 2 சதங்கள் 2 அரை சதங்கள் அடித்திருந்த போதிலும், மத்திய தரவரிசை ஆட்டக்காரராக நியுசிலாந்து அணிக்கெதிராக 92 உலகக்கோப்பை அரை இறுதியில் இவர் ஆடிய ஆட்டம் டெண்டுல்கர் டெண்டுல்கர் என உச்சாடனம் செய்து கொண்டிருந்த கிரிக்கெட் மேட்டுக்குடி மக்களை இவரின் பக்கமும் சற்று திரும்ப வைத்தது.120 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி இருக்கும் இவரின் மொத்த 25 சதங்களில் 17 வெற்றிக் காரணகர்த்தாவாக அமைந்தவை. அணிய இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்து எதிர்பாராத வெற்றியை ஈட்டித்தருபவர். ஆனால் இவரது வெற்றித் தருணங்களை விட , இவர் ஆட்டமிழக்கும் விதங்களைத் தான் மக்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.பெரும்பாலும் சாதுவாக ஆட்டக்களத்தில் இருக்கும் இவர், டோரோண்டோவில் ரசிகர் ஒருவர் உருளைக்கிழங்கு என கிண்டலடித்ததால் , அடிக்கப் பாயவும் தயங்காதவர்.இந்தியாவுடன் ஆன ஒரு நாள் ஆட்டமொன்றில் "obstructing the field" என்ற முறையிலும் ஆட்டமிழ்ந்துள்ளார். வேடிக்கை என்னவெனில் இதற்கு முன் இங்கிலாந்து உடன் ஆட்டம் ஒன்றில் , கிரீஸ் உள்ளே நின்றபடி பந்தை தடுக்காமல் விலகப்போய் , பந்து ஸ்டம்பை நோக்கி செல்ல வழிவிட, அந்தரத்தில் நின்றதால் ரன் அவுட் கொடுக்கப்பட்டார்.இன்சாமம் உல் ஹக் வேடிக்கையான முறையில் காட்டிக் கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்கும் நகர்படம் ஒன்று.இறை நம்பிக்கை , ஆன்மிக ஈடுபாடு கொண்ட இன்சாமம் உல் ஹக், ஒவ்வொரு பரிசளிப்பு நிகழ்ச்சியின்போதும் இறைவனைப் புகழ்ந்துவிட்டு , விசயத்தை பேச ஆரம்பிப்பது நெகிழ்ச்சியாக இருக்கும். இவரது ஆங்கிலப் பேச்சாற்றல் சற்றுக் குறைவாக மதிப்பிடப்பட்டாலும், சில சமயங்களில் நகைச்சுவைக்கிடமாகிப் போனாலும், என் பணி கிரிக்கெட், நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்வது உன் பொறுப்பு என எதற்கும் அசராமல் இருப்பது இன்சாமம் உல் ஹக்கின் குணாதியசங்களில் ஒன்று.தான் ஆடிய முதல் உலகக்கோப்பைப் போட்டியைத் தவிர , மற்றவை எவற்றிலும் இன்சாமம் எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. குறிப்பாக கடைசி இரண்டு உலகக் கோப்பை போட்டித் தொடர்களை இன்சாமம் நிச்சயமாக மறக்க விரும்புவார். 23 பவுண்டு எடைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய இன்சாமமால் 2003 ஆட்டங்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பாப் உல்மர் இறப்பால் , ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியே சங்கடத்தில் ஆளாகி இன்சாமம் ஓய்வு பெற்றது, ஒப்பற்ற கிரிக்கெட் வீரரின் , மகத்தான சாதனைகளுக்கு மகுடமாக அமையவில்லை என்பது வருத்தமான விசயமாகும்.
எதுவாக இருப்பினும் நல்லதொரு கிரிக்கெட் ஆட்டக்காரராக பாகிஸ்தான் ரசிகர்களால் மட்டுமல்ல உலகக் கிரிக்கெட் ரசிகர்களாலும் என்றும் நினைவு கூறப்படுவார்.

------

இன்சாமம் உல் ஹக் கிரிக்இன்போ பக்கம் இங்கே