Saturday, February 02, 2008

இன்னா செய்தாரை ஒறுத்தல் .. - சிறுகதை

கார்த்தி இந்த ஐந்து வருடங்களில் நான்கு நிறுவனங்கள் மாறிவிட்டு, இப்பொழுது ஐந்தாவது முறையாக மரம் தாவ , கடைசி சுற்று நேர்முகத் தேர்விற்காகக் காத்திருக்கிறான். இந்த நிறுவனத்தில் இந்த தொழில்நுட்ப சுற்றைக் கடந்துவிட்டால் , அடுத்து மனித வள துறை சுற்றில் சம்பள விசயங்களை இறுதி செய்வது மட்டும் தான்.கல்லூரிக் காலம் தொட்டு இந்த நிறுவனம் தான் கார்த்தியின் ஆதர்சன நிறுவனமாக மனதில் இருந்து வருகிறது.

“மிஸ்டர், கார்த்தி ” என விளித்து மனிதவளத்துறையில் இருக்கும் ஒரு பெண் கார்த்தியிடம் நேர்முகத் தேர்வு நடக்கும் அறையை சுட்டினாள். ம்ம் இவளை இந்த நிறுவனத்தில் சேர்ந்தபின் நட்பாக்கிக் கொள்ளவேண்டும் மனதில் நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு அங்கு மோகனைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் தனக்கு இந்த வேலைக் கிடைக்காது என முடிவுகட்டினான்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் கார்த்தி முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் அவனுக்கு மேலாளராக இருந்தவர்தான் இந்த மோகன். கல்லூரி முடித்தவுடன் வேலையில் சேர்ந்திருந்ததால் சுறுசுறுப்பாக வேலையைக் கற்றுக் கொண்டு மோகனின் அபிமானத்தைப் பெற்ற கார்த்தி, மோகனின் சிபாரிசினால் ஒரு வருடத்திலேயே மற்றவர்களைக் காட்டிலும் நல்ல ஊதிய உயர்வையும் , பொறுப்பையும் பெற்றான்.

இரண்டாம் வருடத்தில் மோகன் தனது அதிகாரத்தின் கீழே வந்த ஒரு திட்டத்தில் , மேலிட எதிர்ப்பையும் மீறி கார்த்திக்கு மிக முக்கியமான பொறுப்பைக் கொடுத்து வைத்திருந்த நேரத்தில் திடிரென இரண்டு மடங்கு சம்பள வேலைக்காக மோகனிடம் கூட கலந்தாலோசிக்காமல் ராஜினாமா செய்து விட்டு போனவனுக்கு அதே மோகன் தான் இங்கு இருப்பார் என்பது கனவிலும் நினைத்துப் பாராத ஒன்று.

“கார்த்தி, உன் மேல நிறைய வருத்தம் உண்டு.. உலகம் ரொம்ப சின்ன உருண்டை. வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை திரும்ப சந்திக்க நேரிடும்... திரும்ப சந்திக்கிறப்போ நாம அவங்களுக்கு என்ன கொடுத்தமோ அது திரும்ப நமக்கு கிடைக்கும்.. ஐ யம் சாரி டு சே திஸ் ,,உன்னை என் நண்பர்கள் லிஸ்ட்லேந்து எடுத்துட்டேன்.. எனிவே ஆல் த பெஸ்ட் யங் மேன்”

கார்த்திக்கு அப்போது எந்தவித தொந்தரவு இல்லாமல் வேலையில் இருந்து விடுவித்து அனுப்பிவைத்த மோகன் அவனது கடைசி நாளன்று சொன்னது நினைவுக்கு வந்தது .

“ஹல்லோ சார் ஹவ் ஆர் யூ” எனக்கேட்ட கார்த்தியை இருக்கையில் அமரச்செய்து முகத்தில் சலனமே இல்லாமல் தொழில்நுட்ப சம்பந்தமான கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு “குட் லக் ஆல் த பெஸ்ட்” என சொல்லி அனுப்பி வைத்தார்.

வேலை தனக்கில்லை என முடிவு செய்து வெளியே வந்து வரவேற்பறையில் அமர்ந்திருந்த கார்த்தியை சில நிமிடங்களில் மனிதவள மேலாளர் அழைக்க, ஆச்சரியத்துடன் உள்ளே சென்றவனிடம்

“மிஸ்டர் கார்த்தி, அவர் டிரக்டர் ஈஸ் வெரிமச் இம்பரஸ்ட் வித் யூ, காங்க்ராசுலேஷன்ஸ்,லெட் அஸ் டிஸ்கஸ் அபவுட் சாலரி எக்ஸ்பெக்டேஷன்ஸ்”

கனவா நினைவா என்று கார்த்திக்குப் புரியவில்லை. மோகன் சாருக்கு தன்மேல இருக்கும் அந்த அபிமானம் இன்னும் போகவில்லை. கையில் பணி நியமனக் கடிதத்துடன் வெளியே வந்தவனின் மனதில்
“மோகன் சார் ரியலி கிரேட், அவரை நட்டாத்துல விட்டுட்டுப் போன எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்காரு, ஐ திங் ஐ வில் ஹேவ் அ நைஸ் டைம் ஹியர்” ஓடிக்கொண்டிருந்த அதே சமயத்தில்

உள்ளே மோகனின் மனதில் ”மவனே , வாடா வா, நீ ஜாயின் பன்னதும் உன்னைக் கவனிச்சுக்குறேன்... எத்தனை சொல்லடி பட்டு அந்த புரஜெக்டை முடிச்சிருப்பேன்... உன்னை செலக்ட் பண்ணதே நீ விட்டுட்டுப் போனதனால நான் பட்ட கஷ்டத்தை உனக்கு திருப்பிகொடுக்கதாண்டா!!!!!” என நினைத்துக்கொண்டிருந்தது சில காலத்துக்கு கார்த்திக்குப் புரிய வாய்ப்பே இல்லை.

10 பின்னூட்டங்கள்/Comments:

said...

பழிவாங்கும் உணர்வு
மனிதனின் இயல்பு!

கதையில் இவ்வுணர்வை உணர்த்தியிருகிறீர்கள்.

சில வருடங்களுக்கு முன், நண்பர்கள் லிஸ்டிலிருந்து கார்தியின் பெயரை நீக்கினாலும், அவனுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லும் மோகன், சந்தர்ப்பம் கிடைக்கையில் பழிவாங்க துடிப்பது.......ஜீரனிக்க முடியவில்லை.

said...

மோகன் பட்டதை நானும் பட்டிருக்கிறேன். சொல்லாமக் கொள்ளாம இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கீட்டு ஓடிப்போயிட்டாரு என்னோட டீம்ல மெம்பர் ஒருத்தரு. கிளையண்ட் கிட்ட நான் என்னனு சொல்றது? அப்பப்பா...எப்படியோ ஒப்பேத்தி அந்த புரோஜெக்ட்டை முடிச்சேன். ஒரு மேனேஜரா பட்ட பாடு இருக்கே. மறக்க முடியாதுய்யா..நீங்க கதைல சொன்னாப்புல எத்தன சொல்லடி பட்டு புரோஜெக்ட முடிச்சேன்னு எனக்கும் கூட இருந்த டீம் மெம்பர்களுக்கும் தான் தெரியும்.

ஓடிப்போனவன் மேல ஆத்திரம் கொஞ்சம் இருந்தாலும் பழி வாங்குற எண்ணம் இல்லை. எங்கயிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்.

said...

சந்தர்ப்பவாதம்..பழிவாங்கும் படலம்..இப்படியும் பலர்!

said...

மோகனுக்கு என்று ஒரு் பிம்பத்தை உருவாக்கியிருந்தீர்கள்; அதை இப்படி உடைக்கலாமா?

said...

ஜிரா சொல்லற மாதிரி இது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஆனா அதுக்காக பழி வாங்கத் துடிப்பது எல்லாம் டூ மச். வேலை வேணுமானா குடுக்காம இருக்கலாம். அது கூட முன்ன மாதிரி இல்லை, இப்போ பொறுப்பு வந்திருக்கு எனத் தெரிஞ்சா வேலையைக் குடுக்க வேண்டியதுதான். நம்ம தனிப்பட்ட கருத்துக்களினால் நம் நிறுவனம் ஒரு நல்ல ஆளை இழக்கக்கூடாது இல்லையா!

said...

@திவ்யா,
இதைப்பழிவாங்கல் என்று சொல்ல இயலாது.ஒரு சின்னக் கணக்குத் தீர்த்தல் என்று வைத்துக்கொள்ளலாம்.

said...

@ஜிரா,
உங்க பெருந்தன்மை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

said...

@இலவசக்கொத்தனார் சார்,
நீங்க சொல்லுவதும் வாஸ்தவம்தான். தனிப்பட்டக் கருத்துக்களுக்காக ஒரு நல்ல திறமைசாலியை இழக்கக்கூடாதுதான். இங்கு மோகன் கார்த்திக்கு வேலைக் கொடுத்தது , முன்பு அவன் தவற விட்ட விசயங்களை வட்டியும் முதலுமாக வாங்கத்தான்.

said...

@பாசமலர்

ஆமாம். பழிவாங்கும் எண்ணமும், சந்தர்ப்ப வாதமும் மனிதனுடன் கூடப்பிறந்தவை. குறைக்கலாமே தவிர முழுதும் போக்க முடியாது.

said...

@சிவஞானம்ஜி
மோகனுக்கு எப்போதும் பாசிடிவ் இமேஜ்தான் சார்.