Saturday, February 02, 2008

இன்சாமம் உல் ஹக்


இன்சாமம் உல் ஹக் , தூக்கத்தில் இருந்து பாதியில் எழுப்பிவிட்டு , போய் பிடிக்காத வேலை ஒன்றை செய்து வா என்று யாரோ விரட்டியது போல வேண்டா வெறுப்பாக ஆடுகளத்திற்குள் இவர் நுழைவதும் ஒரு அழகுதான். சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமான இவர், ஆரம்பத்தில் துவக்க ஆட்டக்காரராகத் தான் களத்தில் இறங்கினார். அந்த நிலையில் 2 சதங்கள் 2 அரை சதங்கள் அடித்திருந்த போதிலும், மத்திய தரவரிசை ஆட்டக்காரராக நியுசிலாந்து அணிக்கெதிராக 92 உலகக்கோப்பை அரை இறுதியில் இவர் ஆடிய ஆட்டம் டெண்டுல்கர் டெண்டுல்கர் என உச்சாடனம் செய்து கொண்டிருந்த கிரிக்கெட் மேட்டுக்குடி மக்களை இவரின் பக்கமும் சற்று திரும்ப வைத்தது.120 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி இருக்கும் இவரின் மொத்த 25 சதங்களில் 17 வெற்றிக் காரணகர்த்தாவாக அமைந்தவை. அணிய இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்து எதிர்பாராத வெற்றியை ஈட்டித்தருபவர். ஆனால் இவரது வெற்றித் தருணங்களை விட , இவர் ஆட்டமிழக்கும் விதங்களைத் தான் மக்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.பெரும்பாலும் சாதுவாக ஆட்டக்களத்தில் இருக்கும் இவர், டோரோண்டோவில் ரசிகர் ஒருவர் உருளைக்கிழங்கு என கிண்டலடித்ததால் , அடிக்கப் பாயவும் தயங்காதவர்.இந்தியாவுடன் ஆன ஒரு நாள் ஆட்டமொன்றில் "obstructing the field" என்ற முறையிலும் ஆட்டமிழ்ந்துள்ளார். வேடிக்கை என்னவெனில் இதற்கு முன் இங்கிலாந்து உடன் ஆட்டம் ஒன்றில் , கிரீஸ் உள்ளே நின்றபடி பந்தை தடுக்காமல் விலகப்போய் , பந்து ஸ்டம்பை நோக்கி செல்ல வழிவிட, அந்தரத்தில் நின்றதால் ரன் அவுட் கொடுக்கப்பட்டார்.இன்சாமம் உல் ஹக் வேடிக்கையான முறையில் காட்டிக் கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்கும் நகர்படம் ஒன்று.இறை நம்பிக்கை , ஆன்மிக ஈடுபாடு கொண்ட இன்சாமம் உல் ஹக், ஒவ்வொரு பரிசளிப்பு நிகழ்ச்சியின்போதும் இறைவனைப் புகழ்ந்துவிட்டு , விசயத்தை பேச ஆரம்பிப்பது நெகிழ்ச்சியாக இருக்கும். இவரது ஆங்கிலப் பேச்சாற்றல் சற்றுக் குறைவாக மதிப்பிடப்பட்டாலும், சில சமயங்களில் நகைச்சுவைக்கிடமாகிப் போனாலும், என் பணி கிரிக்கெட், நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்வது உன் பொறுப்பு என எதற்கும் அசராமல் இருப்பது இன்சாமம் உல் ஹக்கின் குணாதியசங்களில் ஒன்று.தான் ஆடிய முதல் உலகக்கோப்பைப் போட்டியைத் தவிர , மற்றவை எவற்றிலும் இன்சாமம் எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. குறிப்பாக கடைசி இரண்டு உலகக் கோப்பை போட்டித் தொடர்களை இன்சாமம் நிச்சயமாக மறக்க விரும்புவார். 23 பவுண்டு எடைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய இன்சாமமால் 2003 ஆட்டங்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பாப் உல்மர் இறப்பால் , ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியே சங்கடத்தில் ஆளாகி இன்சாமம் ஓய்வு பெற்றது, ஒப்பற்ற கிரிக்கெட் வீரரின் , மகத்தான சாதனைகளுக்கு மகுடமாக அமையவில்லை என்பது வருத்தமான விசயமாகும்.
எதுவாக இருப்பினும் நல்லதொரு கிரிக்கெட் ஆட்டக்காரராக பாகிஸ்தான் ரசிகர்களால் மட்டுமல்ல உலகக் கிரிக்கெட் ரசிகர்களாலும் என்றும் நினைவு கூறப்படுவார்.

------

இன்சாமம் உல் ஹக் கிரிக்இன்போ பக்கம் இங்கே

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

NICE JOB

said...

தம்பீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீபீ
நீயுமா என்னை மாதிரி வெட்டி ஆபீஸர்..?
ஆபீஸ்ல வேலையே இல்லையா..?
மா.சி.கிட்ட மட்டும் சொல்லிராத..
உன்னை மாதிரி ஆளுகளாலதான் இஇந்தியாவோட பொருளாதாரமே கெட்டுப் போச்சுன்னு சொன்னாலும் சொல்வாரு..

said...

அவ்வளவு ஒல்லியாக இருந்து ஓடி ஓடியே குண்டாகிவிட்டாரே?
பல முறை ரன் அவுட் மூலம் ஆட்டமிழப்பது இவருடைய குணாதிசியம் என்று கேள்விப்பட்டிருக்கேன்.

said...

@சிவஞானம்ஜி
மிக்க நன்றி
@உண்மைத்தமிழன்
சார்,
நீங்க சொன்னதுல பாதி சரி, பாதி தவறு. வெட்டி ஆபிசர் என்பது சரி. ஆனால் அலுவலகத்தில் இருந்து பதிப்பிக்கவில்லை. இல்லத்தில் இரவு மூன்று வரை கண்விழித்து , வீடியோக்கள், தகவல்களை சிரமப்பட்டு தேடி எடுத்துப் போடப்பட்டிருக்கும் பதிவு இது.

@வடுவூர்குமார்
சார்,
உண்மைதான். ஒரு நாள் ஆட்டங்களில் 40 முறை ரன் அவுட் ஆகி உள்ளாராம். ஆனால் சாதனையாளர் மறவன் அத்தப்பட்டு. அவர் 41 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் , தான் ரன் அவுட் ஆவதை விட மற்றவர்களை ஆக்கி விடுவதில் இன்சமாம் வல்லவர். :))))