”காதலிகள்” தினம் - சிறுகதை
”காதலில் தோற்றவர் என்றோ வென்றவர் என்றோ கிடையாது
காதலால் வாழ்ந்தவர் என்றும் வீழ்ந்தவர் என்றும் ஏதுமில்லை
காதலில் ஒரே வகை.. அது காதலை உணர்ந்தவர்கள்”
நான் காதலை உணர்ந்தவன். அதனால் தான் பலவகையான காதல்களை உணர்ந்த பிறகு இப்பொழுது (மீண்டும் வேறு) ஒரு பெண்ணிடம் என் காதலைச் சொல்லப்போறேன். இந்த பொண்ணு யாரு என்னவென்று எல்லாம் கதை சொல்ல விருப்பமில்லை. நாங்க இரண்டே வரிகள் தாம் பேசிக்கொண்டோம் .. என்ன பேசிக்கிறோம்னு கவனிங்க...
“ரம்யா, உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”
“கார்த்தி.. நாளைக்கு எஸ் னு சொல்லவா, வாலண்டைன்ஸ் டே, நாளைக்கு அக்செப்ட் பண்ணிக்கிறேனே!! பிளீஸ்”
ஜெனி எனக்கு பல்ப் கொடுத்துட்டு போய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து ஒரு பெண்ணிடம் விருப்பத்தைச் சொல்லி உடனடியாக முடிவுகிடைத்த மகிழ்ச்சியில் ”மழைக்கால மேகமொன்று மணி ஊஞ்சல் ஆடியதே” என மனதில் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கும்பொழுது நானும் ஜெனியும் வழக்கமாக முன்பு சாப்பிடும் பேக்கரி வந்தது. இந்த பேக்கரியில் தான் நாங்கள் கடைசியாக சந்தித்துக் கொண்டது.
<<இன்னும் கொஞ்சம் தொடராதோ எனும்போது முடிந்து விடுவதால் காதலும் சில சமயங்களில் ரயில் சினேகம் தான்>>
“ஜெனி , இந்தக் கவிதை எப்படி இருக்கு”
“ம்ம் நல்லா இருக்கிற மாதிரியும் இருக்கு, இல்லாத மாதிரியும் இருக்கு.. ”
“இன்னக்கி காலைல உன்னைப் பார்க்க வருமுன்ன தோனுச்சு”
“இந்த சர்காசிசம் உன்னிடம் எப்போவுமே பிடிக்காதது, சரி கார்த்தி, என் மேரேஜுக்கு வருவியா!!!”
“என்னை என்ன பூவே உனக்காக விஜய்னு நினைச்சியா!!!அந்த அளவுக்கு எல்லாம் மனசு இல்லை!!! எனிவே ஹேப்பி மேரிட் லைஃப்”
நான் சொன்னபடி ஜெனியோட கல்யாணத்துக்குப் போகல, அவளுக்கு குழந்தைக்கூட பிறந்திருச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆண்குழந்தை கார்த்திக்குமார் ன்னு நியுமாரலாஜிப்படி பேரு வைத்திருக்காங்கன்னு எங்க இரண்டுபேருக்கும் பொதுவா இருந்த நண்பர்கள் சொல்லிக்கேள்விப்பட்டு இருக்கேன்.. அவள் கார்த்தின்னு பேரு வைத்தால் என்ன? காத்தவராயன்னு பேரு வைத்தால் என்ன... பேரு வைக்கிறாளாம் பேரு.. ஆள் வேண்டாம் பேரு மட்டும் வேண்டுமாக்கும்!!!
இதுவரை எத்தனைபேரைக் காதலித்து இருப்பேன்... ஆறு பேர் இருக்குமா!!! இருக்கலாம்.. கூடவே இருக்கும். அதில் மூன்று ஒரு தலைக் காதல்கள் ..இந்த ஒரு தலைக் காதல் கிரிக்கெட்ல நெட் பிராக்டிஸ் மாதிரி. ஒரு சில ஒரு தலைக்காதல்களுக்குப்பின்ன நல்ல பார்முக்கு வந்துடலாம். பரஸ்பரக் காதல்களில் இந்த நெட் பிராக்டிஸ் நிறைய உபயோகமாக இருக்கும்.
கோயம்புத்தூர் ல குண்டு வைத்தது , ஜீனத்துடன் ஆன எனது ஒரு தலைக்காதல் இருதலையாய் மாறப்போகும் சமயம் ஒன்றில அணுகுண்டாய் மாறி போச்சு.”உங்க ஆளுங்க எல்லாம் பாம் பார்டிங்க போல ” என விளையாட்டுத்தனமாய் கல்லூரி இரண்டாமாண்டு ஆய்வகத்தில் அவளிடம் சொல்லி வைக்க
“இதுக்குத்தான் உனக்கும் எனக்கும் சரிவராதுன்னு சொன்னேன்... இப்போ இப்படி பேசுற நீ பின்ன என்னவேண்டுமானுலும் பேசுவ!” எனத் திட்டிவிட்டுப்போனவள் கல்லூரி முடியும்வரை பேசவே இல்லை.
சரிதான் போடி, என நானும் அவளை அதன் பின் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இந்த மடம், ஆகலேட்டி சந்தை மடம் னு என்னோட ஜூனியர் அர்ச்சனாகிட்ட ஸ்டார்ட் ஆன கடலை நட்பாகி, நட்புக்குமேலாகி , காதலும் ஆனது.
நிறைய சமயங்களில் பொண்ணுங்களுக்கு பிடிக்காத விசயங்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டருக்கும் சிராக்கோ ஆங்கிலப்படத்துக்கும் என் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தான் அந்தப்படம் 4 ரூபாய் டிக்கெட்டை 25 ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்தேன். நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த பாய்ஸ் ஹாஸ்டலும் அங்க தான் இருந்தது.
மறுநாள் உத்தமனாட்டம் “ நேத்து நைட் செமப்படம், பிட்டும் செம பிட்டு” அப்படின்னு இரவுப்பார்த்தப் படத்தை சிலாகித்து சொல்லப்போக
”ஹவ் சீப் யூ ஆர்? எப்படி கார்த்தி ... இவ்வளவு அருவருப்பானவனா நீ?” அர்ச்சனா பாட்டு பேசிக்கொண்டே இருந்தாள்.
“அர்ச்சு, திஸ் ஈஸ் டூ மச், மைண்ட் யுவர் வேர்ட்ஸ், ”
“அந்த மாதிரிப்படம் பார்த்துட்டு உன்னாலே கூச்சமே இல்லாமல் எப்படி பொண்னுங்க கிட்ட பேச முடியுது.. “
“என்னடி, ரொம்ப பேசுற, கல்யாணம் ஆன நடக்கிறது தானே!!!”
“சே , உங்க கிட்ட பழகினதுக்காக வெட்கப்படுறேன்.. குட் பை ஃபார் எவர்”
அர்ச்சனா அப்படித் திட்டிட்டு போனபின் ஒரு வாரம் அவளுக்காக வழக்கமான நாங்கள் சந்திக்கும் மரத்தடியில் காத்திருந்தேன். அவள் வரவில்லை. அதன்பின் அந்த மரத்தடி வழியாக நான் போகவில்லை.
ஆட்டோகிராப் சேரன் மாதிரி முன்பு ஏற்பட்ட காதல் அனுபவங்களின் நினைவுத்தொடர் , சரியாக 12 மணிக்கு ரம்யாவின் தொலைபேசி அழைப்புவர அறுபட்டுபோனது.
“கார்த்தி, ஐ லவ் யூ, நானும் உன்னை, சாரி சாரி, உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்”
“கிரேட்.. நீ எனக்கு கிடைப்பது என் பாக்கியம், ஹேப்பி வாலண்டைன்ஸ் டே மைடியர் ரம்யா”
“சேம் டூ யூ கார்த்தி” இதற்கு முன் நானும் ரம்யாவும் மணிக்கணக்கில் பேசி இருந்தாலும் காதலில் விழுந்த பின் பேசுவது சுவாரசியம் தானே.
விடிய விடிய பேசத்தான் போறோம். இந்த மாதிரி காதல் வசனங்கள் பேசப்போவது எனக்கு மூன்றாவது முறை.. ரம்யாவைப்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. தோழமையில் இருந்ததைக் காட்டிலும் ரம்யா அதிக வெளிப்படையாகப்பேசினாள்.
“கார்த்தி, நான் தான் உனக்கு பர்ஸ்ட் லவ்வா?”
ஜீனத்,ஜெனி,அர்ச்சனா மூவரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டு
“ஆமாம் ரம்யா, பர்ஸ்ட் டைம் நான் ஒரு பொண்ணுகிட்ட என் காதலை சொன்னது உன்னிடம் தான்”
இதற்கு முன்னர் வாழ்க்கையில வந்த காதல்களைக் கட்டிக்காக்க முடியல, இதையும் சொதப்பிடுவேனோன்னு மனசுல ஒரு மூலையில பயம் இருந்தாலும் .. பார்க்கலாமே!! அடுத்த வருடமும் இதே ரம்யாவோட பேசிட்டு இருந்தால் என் காதல் தேடல் முடிந்துவிட்டது..இல்லாவிடின் பயணம் தொடர்கிறது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம், என் கதைக்கேட்டிங்க, என் வாழ்த்தையும் கேட்டுட்டுப்போயிடுங்க,
உங்க எல்லோருக்கும் காதலிகள் தின , மன்னிக்கவும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
9 பின்னூட்டங்கள்/Comments:
சாமீ ஏன் இம்புட்டு கொல வெறி?
//கார்த்தி னு பேர் வைத்தால் என்ன?
காத்தவராயன்னு வைத்தால் என்ன?//
அதானே? சர்ட்டிபிகேட்ல இருக்கிற பேரை வைத்தால் என்ன? வீட்டில்
விளங்கும் பேரை வைத்தால் என்ன?
@துர்கா,
உங்களுக்கு சிங்கிள் ஸ்மைல்ஸ்
@சிவஞானம்ஜி
உங்களுக்கு டபுள் ஸ்மைல்ஸ்.
:))
//திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டருக்கும் //
படுபாவிங்க அதைத்தான் இடிச்சுட்டாங்களே :)))
@கப்பி
ஆமாம்பா...ஆமாம் :((((
காதலை காதலிப்போருக்கு காதலர் தின வாழ்த்துகள்!
நண்பரே...
நல்ல எழுத்து.
சரளமான நடை...
நன்று...
நன்று...
இந்தக் காதலாவது அவனுக்கு நிலைக்குமா?
வாழ்த்துக்கள்.
நன்றி அந்தோனி முத்து & லக்கிலுக்
ஹாஹா லேட்டானாலும்
படிச்சிட்டேன்
"காதலிகள் மாறலாம்
ஆனால் நம் உள்ளிருக்கும்
'காதல்'மாறக்கூடாது"
இது எங்கியோ படிச்சது!!!!
Post a Comment