நாதன் ஆஸ்ட்லேயின் அதிரடி இரட்டை சதம் - கிரிக்கெட் நினைவுகள்
சில சமயங்களில் அடைந்த வெற்றிகளை விட , தோல்வியைத் தவிர்க்கப் போராடும் போராட்டங்கள் நினைவை விட்டு அகலாது. அந்த மாதிரி நினைவில் நிற்க வைக்கும் போராட்டங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில் நடத்திக் காட்டியவர் நியுசிலாந்து அணியின் ஆட்டக்காரர் நாதன் ஆஸ்ட்லே.
கடைசி விக்கெட்டுடன் இணையாட்டம் ஆடுவதென்றால் நாதன் ஆஸ்ட்லேவுக்கு இனிப்பு சாப்பிடுவது மாதிரி. நிச்சயமான தோல்வி என்ற நிலையில், அந்த சமயத்தில் அதிக “டக் - அவுட்கள் “ சாதனையை வைத்திருந்த டேனி மோரிசனுடன் இணைந்து தான் சதமடித்ததோடு மட்டுமல்லாமல் , இணையாட்டமாக ஆட்டமிழக்காமல் 106 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து உடனான டெஸ்ட் ஆட்டத்தை டிரா செய்ய வைத்தார். ( உடன் ஆடிய டேனி மோரிசன் அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டார், திரும்ப அவர் டெஸ்ட் ஆட்டத்திற்கு அழைக்கப்படவே இல்லை. அதுவே அவருக்கு கடைசி ஆட்டமாக அமைந்துவிட்டது)
ஆட்ட விபரம் இங்கே
ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வைத்துவக்கி ஆஸ்ட்லே, ஏனைய நியுசிலாந்து பந்து வீச்சாளர்களைப்போலவே பேட்டிங் கடைவரிசையிலும், உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே சோபித்தார். இவரது அக்கா லிசா ஆஸ்ட்லே இவருக்கு முன்னதாகவே நியுசிலாந்து பெண்கள் அணியில் இடம்பிடித்து மூன்றாண்டுகளுக்குப்பின்னரே இவரால் தேசிய ஆண்கள் அணியில் இடம்பிடிக்க முடிந்தது.
கொஞ்சம் அதிரடியாக ஆடுவதிலும் வல்லவரான ஆஸ்ட்லே, ஒரு நாள் போட்டிகளில் 16 சதங்களையும் டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களையும் விளாசி இருக்கிறார்.
இவரது கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான தருனம் மார்ச் 16 ,2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் கிறிஸ்ட்சர்ச் நகரில் வந்தது.வெற்றி இலக்கு 550 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மறுமுனையில் ஒவ்வொருவராக ஆட்டமிழக்க , காயம் காரணமாக கடைசி விக்கெட்டாக மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ரன்ஸ் களம் இறங்கினார். ஒரு முனையை கிறிஸ் கெய்ரன்ஸ் தற்காத்துக்கொள்ள, மறு முனையில் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்துக்கட்டிய ஆஸ்ட்லே தனது 101 - 200 யை வெறும் 39 பந்துகளில் கடந்தார். 331/9 என்ற நிலையில் இருந்து அதிரடியாக ஆடத்தொடங்கிய ஆஸ்ட்லே இங்கிலாந்து நடுநடுங்கிப் போனது என்பது உண்மைதான். 153 பந்துகளில் 200 ரன்களைக் கடந்து அதிவேகமாக இரட்டைச்சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். (அதற்கு சிலவாரங்களுக்கு முன்புதான் கில்கிறிஸ்ட் அந்த சாதனையை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) 11 சிக்ஸர்கள் 28 பவுண்டரிகளுடன் 168 பந்துகளைச் சந்தித்து 222 ரன்களில் ஆஸ்ட்லே ஆட்டமிழந்த போதுதான் இங்கிலாந்துக்கு உயிரே வந்தது. வெறும் 98 ரன்களில் நியுசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
அந்த ஆட்டத்தின் காணொளியை கிழேப் பார்க்கலாம்.
ஆட்ட விபரம் இங்கே
அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அடைந்த வெற்றியை விட, இழப்பதற்கு ஒன்றுமில்லை அடைவதற்கு வெற்றி இருக்கிறது என்று ஆஸ்ட்லே போராடியது கிரிக்கெட் இருக்கும் வரை பேசப்படும்.
2 பின்னூட்டங்கள்/Comments:
மறக்க முடியாத போட்டிகளில் ஒன்று அண்ணாத்த! நன்றி ஹை :))
நாதன் ஆஸ்ட்லேவின் அந்த இரண்டு ஆட்டங்களுமே அபாரமானவை. இரண்டாவது மேட்சிலும் அவருக்கு 'மேன் ஆப் தி மேட்ச்' பட்டம் கொடுத்திருக்கலாம்.
Post a Comment