Thursday, February 07, 2008

கும்ப்ளே எடுத்த 10 வது விக்கெட்டைப் பார்க்காமல் இருந்திருந்தால் - சிறுகதை

ஒவ்வொரு பிப்ரவரி ஏழாம் தேதி அன்றைக்கும் கும்ப்ளே, ரம்யா அப்புறம் மோகன் மூன்று பேரும் கரெக்டா ஞாபகத்துக்கு வருவாங்க..ஒன்பது வருடங்களுக்கு முன் அந்த ஞாயிற்றுக்கிழமை நிழலாய் நினைவுக்கு வந்தது.

”கும்ப்ளேக்கு நல்ல சான்ஸ்டா இன்னக்கி,சக்லைனை தூக்கிட்டு, அடுத்த பாலே வாக்கர் யூனூஸையும் எடுத்துட்டா பர்பெக்ட் டென் தான்?”

பாய்ஸ் ஹாஸ்டல்ல பாதிக்கூட்டம் கவுண்டர் கடையிலத்தான் இருந்தது. இன்னக்கி சண்டேன்னாலும் காலேஜ் ஆடிட்டோரியத்துல ஸ்கூல் பசங்களுக்காக கல்சுரல்ஸ் நடந்துட்டு இருக்கு. வேலிடிக்டரி பங்க்சன் கூட போகமா இங்க அடிச்சு பிடிச்சுக்கிட்டு கும்ப்ளேவோட 9 வது விக்கெட்டுக்காக காத்துட்டு இருந்த கூட்டத்தில் இருந்து

”ஹேஏஏஏஏஏஎ” காது கிழியுற அளவுக்கு சத்தம்... சக்லைன் எல்பிடபில்யூ... கும்ப்ளேவின் அப்பீலுக்காகக் காத்திருந்தவர் போல அம்பயர் கையைத்தூக்கினார்.”ம்ம்ம் இன்னும் ஒன்னே ஒன்னு, கடவுளே பர்ஸ்ட் பாலே வாக்கரை கால்ல வாங்க வச்சுடு, கால்ல பட்டுட்டால் போதும் நம்ம ஆளு கையைத் தூக்கிடுவாரு” என மனதில் வேண்டிக்கொண்டே நான் லேசாக தலையை திருப்பியதில் ரம்யாவும் மோகனும் நடந்து வருவது தெரிந்தது.

ரம்யா விடுவிடுவென நடந்து வந்து கொண்டிருந்தாள். மோகன் பின்ன வேகமாக மன்னிப்புக்கேட்கும் தொனியில் துரத்திக் கொண்டு வர, ரம்யா என்னைப் பார்த்ததும்

“கார்த்தி, பஸ் ஸ்டாப் வரை என் கூட வர்றீயா?”

“இல்லை ரம்யா, லாஸ்ட் விக்கெட், கும்ப்ளே பத்து விக்கெட் எடுக்க சான்ஸ் இருக்கு, ஹிஸ்டாரிக் மொமெண்ட், மிஸ் பண்ண விரும்பல..மோகன் இருக்கானே”

ரம்யா பதிலேதும் சொல்லாமல் விடுவிடுவென நடந்தாள். மோகன் கூடவே கெஞ்சியபடி போனது சிரிப்பாகவும் பாவமாகவும் இருந்தது.


ரம்யா என்னிடம் பேசிட்டு போறதைப்பார்த்த எங்க கிளாஸ் பிபிசி ரேடியோ கிருஷ்ணமூர்த்தி

“மச்சான் கலக்குற,, உன்னோட பரம விரோதியோட தோஸ்து, பேசிட்டு போறாள், என்ன விசயம்?”

“ஒன்னுமில்லைடா, ஸ்கோர் கேட்டா”

கும்ப்ளே வுக்கு லாஸ்ட் விக்கெட் கிடைக்கனும்னு ஸ்ரீநாத் வைட் பாலா போட்டுட்டு இருந்தார். முன்ன கபில்தேவுக்கு 433 வது விக்கெட் கிடைக்க கும்ப்ளே இப்படி வைட் பால்ஸ் நிறைய போட்டது ஞாபகத்துக்கு வந்தது. நாம யாருக்காவது ஒன்னு செஞ்சா , மத்தவங்க அதை நமக்கு செய்வாங்க அப்படிங்கிறது கும்ப்ளே விசயத்துல உண்மையானது.

மனம் கிரிக்கெட்டில் ஒன்ற நினைத்தாலும் ரம்யாவின் செய்கை எரிச்சல்தான் வரவைத்தது. மோகனை எரிச்சல் படுத்த என்னை அவள்கூட பஸ் ஸ்டாப் வரை வரக்கேட்கிறாள்.
இது முதல் தடவை இல்லை.. எப்பொவெல்லாம் அவளுக்கும் மோகனுக்கும் முட்டிக்குதோ அப்பொவெல்லாம் என்னிடம் வந்து பேச ஆரம்பிப்பாள். போன செமஸ்டர்ல அவள் டாக்டிக்ஸ் தெரியாம நானும் நிறைய பேசி இருக்கேன். மோகனும் அவளும் சமாதனம் ஆன உடனே கண்ணுக்கு கண் பார்த்தால் கூட சிரிக்க மாட்டாள். எனக்கு ரம்யா மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தாலும் , அடுத்தவன் ஆட்டத்தைக் கலைக்க வேண்டாம் என்று ஒதுங்கியே இருக்கும்பொழுது அடிக்கடி இந்த கிருஷ்ணமூர்த்தி என்னை ஏத்திவிடுவான்.

“மச்சான், எதற்கும் அசராத எதிரியைக்கூட பொண்ணை வச்சு கீழேதள்ளிடலாம்.. மச்சான் அவன் ஆளு ரம்யாவுக்கு நீ டிராக் போடு, ஆட்டோமெடிக்கா மோகன் சைக்கோவா ஆயிடுவான்”

“டேய் பிபிசி, அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்டா”

“மச்சான், எந்தக்காலத்துல நீ இருக்க, வர பிப்ரவரி 14 மோகன் ரம்யாவை புரோபஸ் பண்ணப்போறான் பாரு”

டீவியில் மைதானத்தில் எழும்பிய சத்தத்தை விட , கவுண்டர் கடையில் அதிகம் சத்தம் வந்திருக்கும்.

ஒரு வழியா லபக்குன்னு வாசிம் அக்ரம் கேட்சை லகக்ஷ்மன் பிடிக்க கும்ப்ளே பத்தாவது விக்கெட்டை எடுத்தார்.டெஸ்ட்மேட்ச் வின், அதுவும் பாகிஸ்தானோட, இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹிஸ்டாரிக் மொமெண்ட்ஸை லைவ் ஆ பார்த்தது அடுத்த ஒரு வாரத்திற்கு மனசுக்கு சந்தோசமா இருந்தது.

ஆனால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை பிப்ரவரி 14 பிபிசி சொன்ன மோகன் ரம்யா பற்றிய கிசுகிசு உண்மை என்று தெரிந்த போது, மனசுக்குள் ஒரு உறுத்தல் கும்ப்ளேவோட பத்தாவது விக்கெட்டுக்காகக் காத்திருக்காமல் ரம்யாவுடன் பஸ் ஸ்டாப் வரை போய் இருந்தால் மோகன் இடத்தில் நான் இருந்திருப்பேனோ என்ற ஆதங்கம், அழகான மனைவி ஜெனி, குட்டிப் பாப்பா அஞ்சலி என என் வாழ்க்கையில் புதுவரவுகள் இந்த ஒன்பது வருடத்தில் வந்துவிட்ட போதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

========

அனில் கும்ப்ளேவின் பர்பெக்ட்-டென் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தின் ஆட்ட விபரம் இங்கே

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்ல தலைப்பு!!

நடுவே நகர்படம்!!

ஜெனி சாகவில்லை!!

கதையில் பேய் இல்லை!!

நிறையா பேர் இந்த மாதிரி மிஸ்ட் சான்சஸ் பத்தி யோசிப்பாங்க!!

மொத்தத்தில் நல்லா இருக்கு!!

said...

நன்றி இலவசக்கொத்தனார். வித்தியாசமான genre களில் எழுத முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பாராட்டுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

said...

கற்பனையையும் நிஜத்தையும்
தேவையான விகிததில் கலந்தால்
ஜோராதான்கீது

said...

கதை நல்லாயிருக்கு வினையூக்கி, கிரிக்கட் ரசனையையும் , சில மணிதுளிகளில் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களை தவர விடுவதையும் அழகாக இணைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்!!

said...

நன்றி சிவஞானம்ஜி, திவ்யா.

said...

கலக்கலான கற்பனை.