Friday, March 30, 2007

பழைய ஸ்கோர்கார்டுகள் - கிரிக்கெட்

கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளிடம் நாம் தோற்பது புதிதல்ல,

சில உதாரணங்கள்,

தமிழ்நாட்டு அணியுடன் கோபாலன் கோப்பைக்காக ஆடிவந்த இலங்கையின் முதற் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி இந்தியாவுக்கெதிராக, அதுவும் உலகக் கோப்பையில் விவரத்திற்கும் சொடுக்கவும் இங்கே

இலங்கை டெஸ்ட் போட்டிகளிலும் முதற்முறையாக வீழ்த்திய அணி அட அது நாமதானுங்கோ

கென்யா நம்மை சுளுக்கு எடுத்த ஆட்டம் இங்கே

மீண்டும் கென்யா

வங்காளப் புலிகளிடம் வாங்கிய முதலடி



எல்லாத்துக்கு சிகரம் இதுதானுங்க, 7 ரன் அடிக்க வேண்டிய நிலையில் ஒலங்காவின் ஒரு ஓவரில் 3 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தது. 1999 உலகக்கோப்பையில் இந்த கூத்து நடந்தது

ஆட்டத்திலே இது எல்லாம் சகஜமுங்கோ!!! :):)

கங்குலி கோல்கத்தா வந்தார் - செய்தி

மற்ற இந்திய வீரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டுக்கு ஓடி வர, நம்ம தல "தாதா" கங்குலி மட்டும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு கோல்கத்தா வந்துள்ளார். கூடியிருந்த நபர்களும், விமான நிலைய அதிகாரிகளும் கங்குலிக்கு கைக்கொடுத்துப் பாராட்டியதை தனியார் செய்தி தொலைக்காட்சிகளும் காட்டியது.

இதனு தொடர்புடைய சுட்டிகள் இங்கே1
இங்கே2

Thursday, March 29, 2007

செண்டர்ம் எடுப்பேன் - குட்டிக்கதை

ஒரு குறிப்பிட்ட மதத்தை கிண்டலடித்து எழுதி வைத்திருந்த அங்கத கட்டுரையை ஒரு வார இதழுக்கு அனுப்ப வேண்டும் என்ற நினைவோடு வண்டியில் வந்து கொண்டிருந்தேன். அந்த மெயின் ரோட்டில் காலை நேரமாதலால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு சின்ன பையன் கையில் பரிட்சையில் எழுதும் அட்டையுடன் கை நீட்டினான்.

"சார், பாய்ஸ் ஹை ஸ்கூல் கிட்ட இறக்கி விட்டுடுங்க, பரிட்சைக்கு டைம் ஆச்சு பிளீஸ் " எனக் கெஞ்சலுடன் லிப்ட் கேட்டான்.

அவனை சில வினாடிகள் உற்று நோக்கினேன். படிக்கிற பையன் என்று முகத்திலேயே தெரிந்தது. நெற்றியில் விபூதியும் சந்தனமும் . ம்ம்ம் நம்ம பையன் தான் ..

"சரி, ஏறிக்கோ"

"தாங்க்ஸ் சார், பஸ் நிறுத்தாம போயிட்டான்"

சில நிமிட மவுனத்திற்குப் பின் "என்ன பரிட்சை இன்னக்கி" என்றேன்

"மேத்ஸ் சார்"

"செண்டர்ம் எடுப்பியா?"

"எடுத்துடுவேன் சார்"

அவனுக்கு உம் கொட்டினேன். தூரத்தில் சர்ச் தெரிந்தது, சர்ச்சை தாண்டினால் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி.

அந்த சர்ச்சை தாண்டுகையில்,

"சார், நான் இங்க இறங்கிக்கிறேன், சாமி கும்பிட்டுட்டு நடந்துடுப் போயிடுறேன். இங்க கும்பிட்டு போன நான் செண்டர்ம் எடுப்பேன், தாங்க்யூ சார்" என்று சொல்லிட்டு சர்ச் உள்ளே ஒடினான் அந்த சிறுவன்.

சுள்ளென்று எதோ மனதினில் தைத்ததது. அவன் திரும்புகையில் அவன் கையில் எனது ஹீரோப் பேனாவைக் கொடுத்துவிட்டு, எழுதி வைத்திருந்த அங்கத கட்டுரையை கிழித்தெறிய வேண்டும் என்ற முடிவோட வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்தேன்.

கிரிக்கெட்,கடலை,ஹிட்ஸ் மற்றும் சில

எல்லோருடைய "WEIRD" பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கும்போது, நம்மளை யாராவது கூப்பிட மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருந்த போது திரு.டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் அழைத்து விட்டார். "செல்-வா" பெயரிலேயே முரணை வைத்துக் கொண்டிருப்பாதாலோ என்னவோ பல விசயங்களில் ஒரே சமயத்தில் இரு வேறு கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருப்பது உண்டு. நம்முடைய இயல்பில்லாத-வித்தியாசமான குணதிசயங்கள் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாத வரை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.


"I loose interest quickly on things that I love very much"

இதுதாங்க பெரிய பிரச்சினை, கற்பூரம் மாதிரி சீக்கிரம் அணைஞ்சுப் போயிடும். நிரம்ப ஆர்வமா பண்ணிக்கிட்டு இருக்கிறபோது திடீர்னு சலிப்புத்தட்டி விருப்பம் போயிடும்.ஒரு வகையில் இது நல்லது கூட, குறுகிய காலத்தில் பல தரப்பட்ட விசயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். இது பத்தி நிறைய சொன்னால் "சுய சரிதை" ஆயிடும்.

ஆனால் இந்த விசயத்துக்கு இருக்கிற "Exception" கிரிக்கெட்.

இந்திய துணைக்கண்டத்தில் பிறந்து விட்டு கிரிக்கெட்டின் பாதிப்பு இல்லாமல் வளருபவர்கள் மிகச்சிலர்.நான் பெரும்பான்மையில் ஒருவன்.
கிரிக்கெட் எனது வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. கிரிக்கெட் பெண்ணாகப் பிறந்து இருந்தால் ஒரு வேளை என் முதல் காதலை அதனிடத்தில் தெரிவித்து இருப்பேன்.

நிறைய தருணங்களில் கிரிக்கெட் பார்க்கும்போது, எனது "weird" குணங்கள் எட்டிப்பார்க்கும்.
அவற்றில் சில,

அ. வலதுகை மட்டையாளர்கள் மட்டையடிக்கும்போது கண்ணடியில் இடது கை பேட்ஸ்மேனாக பார்ப்பது.
ஆ. 5 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்கும் சூழல் இருந்தால் கூட அணி வென்று விடும் என்ற நம்பிக்கையில் இருப்பது.
இ.ஏதாவது சாதனை நிகழ்த்தப்படும் என்று ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போது கண்மூடித்தனமாக எதிர்பார்ப்பது. ஆனால் சில சாதனைகளை நேரடியாகவும் பார்த்ததில் மகிழ்ச்சியும் உண்டு. தென்னாப்பிரிக்காவின் 434 துரத்தல். கிப்ஸின் 6*6. இந்தியாவின் 413. திராவிட் - கங்குலி 1999 உலக கோப்பையில் டவுண்டனில் 313 ரன் ஜோடியாட்டம்.
ம்ம்ம். இந்த முறை இந்தியா தோற்று வெளியேறிய போது வருந்தியவர்களில் நானும் ஒருவன்.
தோற்ற வருத்தத்தில் எழுதப்பட்டதுதான் இந்தக் கதை
ஈ. இந்தியா தோற்கும் போதெல்லாம் அன்று இரவு தூக்கத்தில் அந்த ஆட்டத்தை இந்தியா வென்று விடுவதாக கனவு வரும். கிரிக்கெட்டைப் பற்றி அதீத நினைப்பே இதற்கு காரணாமாக இருக்கலாம்.
*******
அடுத்தது, ஏதேனும் புதிய வார்த்தைகளோ,வாக்கியங்களோ அல்லது புதிய விசயங்களையோ தெரிந்துகொண்டால், அதனை வலுக்கட்டாயமாக நாலு பேருடன் பேசும் போது அப்படியே எடுத்து விடுவது. சில சமயங்களில் அது சம்பாந்தமில்லாமல் கூட இருக்கும். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது.
*****
கூகிளில் என் பெயர், புனைப்பெயர்களைப் போட்டு பார்ப்பது.

அடிக்கடி சாவுக்குப் பின் என்ன நடக்கும் என்ன நினைப்பது

பேய் பயம்

பழைய மெயில்களை எடுத்துப்படிப்பது என சொல்லிக் கொண்டே போகலாம்.
******

முன்பிருந்த ஒரு weird குணம் : கல்லூரியில் படிக்கும்போது "கடலை" போட முந்தின இரவே "ஹோம்-வொர்க்" செய்துவிட்டு மனதில் "ரிஹர்ஸலும்" பார்த்து மறுநாள் வெற்றிகரமாக 'மிஷனை" முடிப்பது.

இப்போது புதிதாய் முளைத்திருக்கும் weird குணம்: ஹிட்சை அதிகமாக்க மொக்கையாய் ஏதாவது படங்கள், வீடியோவை சுட்டு தில்லாலங்கடி பதிவு போடுவது.

நான் கூப்பிட விரும்புபவர்கள்;
முத்து(தமிழினி)
லக்கிலுக்
சிவஞானம்ஜி
வெற்றி

Tuesday, March 27, 2007

நானும் கடவுள்களும் - சிறுகதை

இரண்டு நிமிடம் கண்களை மூடி இழுத்து மூச்சை விட்டு கணினியில் வேலையை ஆரம்பித்தேன். மின்னஞ்சல்களை பார்க்கும்போது, மோகனின் மின்னஞ்சலை வழக்கம் போல் "Shift+Del" அடித்து முழுவதுமாக அழித்தேன். இந்த ஆளுக்கு வேற வேலையே கிடையாது, காலங்காத்தாலே யாருக்காவது ரத்தம் வேணும், சிறுநீரகம் வேணும், அவனுக்கு உதவனும் இவனுக்கு உதவனும் ஏதாவது வேண்டுகோள் மின்னஞ்சல்கள் அனுப்புவதே பிழைப்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டே ஜெனியினால் தள்ளிவிடப்பட்ட மினனஞ்சல்களில் மூழ்கிப் போனேன். எல்லாம் ஏற்கனவே படித்த சர்தார்ஜி துணுக்குகள் என்றாலும், அது ஜெனியினால் அனுப்பப்பட்டு படிக்கபடும்பொழுது அதன் சுவாரசியம் மேலும் கூடுகிறது.

நேற்றிரவு கிரிக்கெட் ஆட்டம் பார்த்ததனால் ஏற்பட்ட விழிப்பு, இப்பொழுது தூக்கமாக கண்களை சொக்கியது. சரி முகம் கழுவி விட்டு வந்து வேலையைப் பார்க்கலாமமென்று எண்ணி, ஒய்வறைக்கு சென்றேன். அங்கு மோகன் ரத்தக் கறை படிந்த சட்டையைக் கழட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

"மோகன், என்ன ஆச்சு?"

"ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் கார்த்தி"

"என்ன சார், கார் வாங்கி இரண்டு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள ஆக்ஸிடெண்ட் பண்ணிடிங்களா!! " ஒரு நக்கல் தொனியுடன் கேட்டேன்.

"இல்லைப்பா , நான் பண்ணல, ஆற்காட் ரோட்ல ஒரு வயசான ஆளை அரைபாடி லாரி அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான், அந்த ஆளை ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டுப் போக ஒரு ஆட்டோக்காரன் கூட வரலை, அப்புறம் நானே என் கார்ல தூக்கிட்டுப் போய் ரக்சித்ல சேர்த்துட்டு வர்றேன், ஆளுக்கு ஆயுசு கெட்டி, பிழைச்சுக்கிட்டார்"

நான் பைக் புதிதாய் வாங்கிய பொழுது என் வீட்டு வேலைக்காரியின் மகன் விளையாட்டுத்தனமாக சீட்டில் கிறுக்கிய போது நான் அவனை போட்டு அடித்தது ஞாபகத்துக்கு வந்து சென்றது. இப்படிக்கூட மனுஷாள் இருப்பானுங்களா? தன்னோட புது கார்ல ரத்தத்தோட அடிபட்டு கிடக்கிற ஆளை எடுத்துச் செல்கிற மனப்பக்குவம்.

ஜெனியின் தொலைபேசி அழைப்பு வர, கைத்தொலை பேசியை எடுத்துக் கொண்டு அலுவலக தோட்டத்துக்குச் சென்றேன்.

"கார்த்தி, இந்த சண்டே மொழி போகலாம்ட"

"ஜெனி, என் கார்ட்ல ஏற்கனவே லிமிட் எக்ஸீட் ஆயிடுச்சு, சத்யம் ல நீயே புக் பண்ணிடு"

"சரிடா" என்று சொல்லிவிட்டு கைத்தொலைபேசியின் இணைப்பை அவள் துண்டித்த பிறகு மெதுவாக தோட்ட புல்வெளியில் நடக்கும்பொழுது , மோகனின் காட்டமான குரலைக் கேட்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தேன்.

"முன்ன வாங்கின பணமே இன்னும் நீ கொடுக்கல, அதுக்குள்ள திரும்ப திரும்ப பணம் கேக்குற?" என்று மோகன் எங்க அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலைப் பார்க்கும் நரசய்யாவை கேட்டுக் கொண்டிருந்தார்.

நரசய்யாவின் கெஞ்சல்களுக்குப் பிறகு, மோகன் பணத்தைக் கொடுத்துவிட்டு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்ய வருமாறு கூறிவிட்டு சென்றார்.

மெதுவாக நரசய்யாவிடம் போய்,
"என்னப்பா? மோகன் கடன் கொடுத்து வீட்டு வேலை வாங்குறாரா?"

'சார், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை,அவர் வீட்டு வேலைக்கு இல்லை சார், போரூர் தாண்டி இருக்கிற ஆதாரவற்றோர் இல்லத்து தோட்டத்தை சுத்தம் செய்ய சார்,அப்படி வேலை செஞ்சா கடன் ல பாதிய வாங்கிக்க மாட்டாரு, அவர் வீட்டு வேலைக்கு என்னை என்னக்குமே கூப்பிட்டதில்லை" என்றார் நரசய்யா.

மோகன் ஒவ்வொரு மாதமும் ஏதாவது இயலாதோர் இல்லத்துக்கு பணம் கேட்க வரும்பொழுது, அலுவலக மக்கள் எரிச்சலுடன் இருந்தாலும், அவரைப் பார்த்த பிறகு தன்னையறியாமல் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் கொடுப்பது மோகனுக்காக. மோகன் யார் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்தாலும், வலிய சென்று உதவுவார். ஆண் , பெண் பேதம் கிடையாது, ஜாதி,மதம், மொழி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு. வேலையில் சந்தேகமிருந்தாலும், வீடு பார்த்துக்கொடுப்பதிலும்,குழந்தைகளுக்கு பள்ளியில் சேர, சிபாரிசு செய்வதிலும் மனுசன் அசரவே மாட்டார்.

எனக்குக் கூட வீடு பார்த்துகொடுத்தவர் மோகன் தான். ஆரம்பத்தில் உதவிய போதிலும் எனக்கு என்னமோ மோகன் தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள அதீதமாக முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் எப்போதும் உண்டு. ஒரு முறை அவர் ஒரு சிறார் பாதுகாப்பு அமைப்புக்காக பணம் கேட்ட போது முகத்தில் அடித்தார் போல தர முடியாது என்று சொன்ன போதும், அடுத்த மாதம் மீண்டும் வந்து கேட்டார், அவர் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமுமில்லை. சகஜமாக என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை செய்வார்.

ஞாயிறன்று, மொழி படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இடைவேளையின் போது எங்களுக்கு இரண்டு வரிசை முன்பு இருந்தவர்களைக் கவனித்தேன். ஒரு பதினைந்து பேர் ஊனமுற்ற குழந்தைகள். சிலர் கைக்கட்டை வைத்து இருந்தார்கள், சிலரால் பேசமுடியாதது போல் இருந்தது. இங்கு ஒன்று சொல்ல வேண்டும், மோகனுக்கு இப்படி சொன்னால் பிடிக்காது, சிறப்புத்திறன் உடையவர்கள் என்று சொல்லவேண்டும் எனக்கூறுவார்.

அட, மோகன் கையில் பாப்கார்ன்,காபி என எல்லா திண்பண்டங்களுடன் கஷ்டப்பட்டு எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்கிறார். இன்னொரு ஆச்சர்யம் , என் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த ரெமோ கூட அங்க இருக்கான். அவனும் தட்டுத் தடுமாறி தின்பண்டங்களை வாங்கி வந்து அவனும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றான். பெரிய ஆளுதான் மோகன்,இவனையும் இவரது கோஷ்டியிலே சேர வைத்துட்டார். நான் மோகனை கவனிக்கக் கூடாது என்று தவிர்க்க நினைத்து வேறு திசையில் பார்க்க முயற்சி செய்கையில் என்னை அவர் கவனித்து விட்டு கூப்பிட்டார்.

வேறு வழியின்றி அவர் அருகில் சென்றேன். மோகன் தனது "சிறந்த நண்பர்கள்" என்று அந்த சிறப்புத்திறன் உடையவர்களை எனக்கும் ஜெனிக்கும் அறிமுகப்படுத்தினார். நானும் மோகனும் பேசிக்கொண்டிருக்கையில் அதில் இருந்த ஒரு செவித்திறன் குறைந்த குழந்தையுடன் ஜெனி சைகை மொழியில் பேச ஆரம்பித்தாள். அவர்களின் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்.
கண்களில் எத்தனை சினேகம். வழி தெரியாமல் நான் ஒரு முறை பின்லேந்தில் மாட்டிக் கொண்ட தெலுங்கு பேசும் நபருக்கு தெலுங்கில் வழி சொன்ன போது அவரின் கன்களில் தெரிந்த ஆனந்தம் இவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.
எனக்கு ஜெனிக்கு இந்த சைகை வடிவங்கள் தெரியும் என்பது இன்றுதான் தெரியும்.

மோகன் படம் முடிந்ததும் இரவு உணவுக்கு அவர்களுடன் வருமாறு அழைத்தார். நாசுக்காக மறுத்துவிட்டேன். ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் படம் முடிந்து நானும் ஜெனியும் வெளியே வந்தோம். மோகனும் அவரது நண்பர்களும் அவர்கள் வந்திருந்த பெரிய வேனில் ஏறி எங்களுக்கு கையசைத்து விடை கொடுத்தார்கள்.

எப்படி மோகனால் இப்படி இருக்க முடிகிறது, நிதானம், பரிவு , புரிந்துகொள்ளல் எப்படி இந்த ஆளால் முடிகிறது. என் அகராதியில் மோகனுக்கு அர்த்தம் 'இளிச்சவாயன்".ஆனால் அலுவலகத்திலும் , பொதுவிலும் இந்த ஆளுக்கு எப்படி இவ்வளவு நண்பர்கள், பிடித்தவர்கள்.
ஒரு முறை மோகனை பற்றி புதிதாய் சேர்ந்தவரிடம் கிண்டலடிக்க போய்,அவர் தன்னை வேலைக்கு சேர்த்து விட்டது மோகன் தான் என்று கூறி என் மூக்குடைத்தார்.

எனது அலுவலகத்திலேயே அவரது சிபாரிசில் வந்தவர்கள் நிறைய பேராம். எனது மேலாளார் கூட அவரது சிபாரிசுதான். அவரின் சிபாரிசுகளின் கடமை உணர்ச்சிக்கு சில சமயம் அளவே இல்லாமல் இருக்கும். கோவிலுக்கு நேந்து விட்ட காளைகள் மாதிரி வேலையிலேயே குறிய இருப்பானுங்க மேலிடத்திலும் செல்வாக்கான ஆள்.

எனது மேலாளார் ஒரு முறை சொல்லி இருக்கிறார், இந்த மோகன் குப்பத்து பசங்களுக்கு எல்லாம் வார இறுதிகளில் அடிப்படை ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறார். என்னையும் கூப்பிட்டார் ஆனால் எனக்கு ஜெனியுடன் கடலை போடவே நேரம் போதவில்லை என்று மறுத்துவிட்டேன்.

இந்த மோகனைப் பத்தி கேள்விப்படும் விசயங்கள் எல்லாம் திகட்ட திகட்ட நல்லவையாகவே இருக்குது. இதைப்பற்றி மோகனிடமே நேராக்கேட்கவேண்டும் என நினைத்து இருக்கையில்
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று, மோகனை பெசண்ட் நகர் பீச்சில் பார்க்க நேரிட்டது. அவரைச் சுற்றி ஏகப்பட்ட நாய்கள். பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன சார், நாய்ங்க கூட உங்களுக்கு பிரெண்டா?" என்றேன் கேலியாக.

மோகன் சிரித்துக் கொண்டே பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னார். இதுதான் மோகனது இன்னொரு சிறப்பம்சம், கேலி , கிண்டல் என தெரிந்தாலும் கூட அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும்போது எதிராளியை நிராயுதபாணியாக்கி தவிக்க விட்டுவிடுவார்.

"நேராகவே கேட்கிறேன், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? அன்பே சிவம் கமலஹாசன் மாதிரி" என்றேன்.

அவர் ஹாஹா என வாய்விட்டு சிரித்து விட்டு "நீ ரொம்ப சினிமா பார்க்கிற" என்றார்,

" என்னோட லாஜிக் சிம்பிள் கார்த்தி, எனக்குத் தேவைப்பட்ட போது கிடைக்காத ஆதரவுகள்,உதவிகள் யாருக்கேனும் தேவைப்படுவதை தெரிந்தும் என்னால் சும்ம இருக்க முடியாது" என தொடர்ந்தார்.


"ஒண்ணுத்தெரியுமா? மற்ற எந்த விசயங்களில் இல்லாத ஒரு போதை மற்றவர்களுக்கு உதவுவதில் இருக்கிறது, நான் நிச்சயம் அவர்களுக்கு உதவுவேன் என்ற அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும்பொழுது ஒரு நிறைவு எந்த விசயத்திலும் கிடைக்காது" என்று மோகன் சொல்வதை உற்றுக் கேட்கும் சமயத்தில் கையில் பைபிளுடன் ஒருவர் வந்து அதன் பெருமைகளை பேச ஆரம்பித்தார்.
அதை கவனியாமல் நான் ஜெனிக்கு குறுஞ்செய்திகள் அனுப்ப ஆரம்பித்தேன். மோகன் அந்த நபரின் அனைத்து வார்த்தைகளையும் உன்னிப்பாக கேட்டு முடித்து அவரை அனுப்பி வைத்தார்.

"சார், நீங்க கிறிஸ்டியனா?"

"இல்லை கார்த்திக், எனக்கு திணிக்கப்பட்ட எந்தவொரு வழிபாட்டு முறைகளிலும் துளியும் நம்பிக்கை கிடையாது, சொல்லப் போனால் நான் ஒரு Agnostic"

"பிறகு ஏன் பைபிள் பத்தி அவர் சொல்லிக்கிட்டு இருந்தப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்க?"

"அதுவா!!!, கிறிஸ்தவம் கான்செப்ட், இலவசமா ஒருத்தர் எனக்கு உலகம் முழுவதும் மதிக்கப்படும் விசயத்தை சொல்லவருகிறார், நான் ஏன் அதை தடுக்க வேண்டும். நான் கதாகாலட்சேபம் கூட போய் உட்கார்ந்து கேட்பேன். நீ ஒண்ணு கவனிச்சியா , நான் அவரோட அட்ரஸ், போன் நெம்பர் , பிளட் க்ருப் எல்லாம் வாங்கிக்கிட்டேன். என்றாவது யாருக்காவது தேவைப்படும்" என்றார்.

"சார் உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது ? ஆபிஸ்ல வேலை நேரம் போக மீதி நேரம் சமூக சேவைதான் செய்றீங்க" என்றேன்.

" அது சரி உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?" என்றார்.

"இருக்கு, நிறைய இருக்கு? அவனின்றி ஒரு அணுவும் அசையாது"

"அந்தகடவுளுக்கு எவ்வளவு நேரம் நீ கொடுப்ப?"

'ஒரு நாளைக்கு 30 நிமிசம், வெள்ளிகிழமை 1 மணி நேரம்"

"ம்ம்ம், இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமான ஒரு விசயத்துக்கு நீ 30 நிமிசம் கொடுக்கிற, கண்ணுக்கு முன் இருக்கிற உன் கடவுளின் அம்சங்களுக்கு நான் 3 மணி நேரம் கொடுக்கிறேன், அவ்வளவு தான். கடவுளின் துகள்கள் நாம், முடிந்தவரை சக கடவுள்களை மதிப்போம்"

மனதினுள் இந்த ஆள் "Gods Debris" by Scott Adams படிச்சு இருக்கார்னு நினைச்சுக்கிட்டேன்.
இன்னமும் மோகனை கிண்டல் செய்யும் மனோபாவம் விடுபடவில்லை.

அந்த சமயத்தில் ஜெனியிடமிருந்து போன் வந்தது, அவளின் தோழி பேசினாள், ஜெனி வந்த ஸ்கூட்டி தடுமாறி கிழே விழுந்ததில், அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினாள்.

என் முகம் கலவரப்படுவதைக் கவனித்த மோகன் விசயத்தைக் கேட்டார். நிதானமாக , சிலருக்கு போன் அடித்து அந்த மருத்துவமனைக்கு போகச் சொன்னார். என்னையும், வேறொருவரிடம் பைபிளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்த அந்த கிறிஸ்தவ நபரையும் மோகன் தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.

எனக்கு எல்லோரும் கடவுள்களாக தெரிய ஆரம்பித்தனர்.

இவர் என்ன செய்கிறார் !!! ???

நோ கமெண்ட்ஸ், படத்தை பாருங்கள்.

காரி சோபர்ஸ் 6*6 மற்றும் ஐசிசி - யூடியூப்

யூடியூப் தளத்திலிருந்து அனைத்து உலகக்கோப்பை 2007 சம்பந்த்தமன ஒளித்துணுக்குகளை எடுத்து விடுமாறு ஐ.சி.சி கேட்டுக்கொண்டதற்கிணங்க அத்தளம் அனைத்தையும் நீக்கி விட்டது. இது தொலைநோக்கு பார்வை இல்லாத ஒரு முடிவு என கிரிகின்போ தளத்தில் விரிவாக
ஆண்ட்ரூ மில்லர் எழுதியுள்ளார் .

நேரடி ஒளிபரப்பு இல்லாத/கிடைக்காத இடங்களில் உள்ள ரசிகர்களுக்கு இத்தளத்தின் ஒளித்துணுக்குகள் பெரும் வரமாக இருந்தது. ஐசிசி யின் இந்த முடிவு பாராட்டத்தக்கது அல்ல. கிப்ஸின் 6*6 உம், லவெராக்கின் கேட்சும், அதிக பட்சமாக பார்க்கப்பட்ட முதலிடத்தில் இருந்ததாம். இது இருக்கட்டும், போட்டியின் துணுக்குகளை அதிக நேரம் ஒளிபரப்பும் செய்தி ஊடகங்களை ஐசிசி என்ன செய்ய போகிறது எனவும் கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள். அதைப்பற்றி படிக்க இங்கெ சொடுக்கவும்

காரி சோபர்ஸின் ஆறு பந்துகளி ஆறு ஸிகஸர்களை இங்கு கண்டு களிக்கவும்.



நன்றி : www.youtube.com

Monday, March 26, 2007

சிரிப்பு வருது சிரிப்பு வருது பார்க்க பார்க்க சிரிப்பு வருது

நாம தோத்தாலும் தோத்தோம், அந்தக் கவலையிலேந்து மீட்டு எடுக்கிறதுக்காகவே உட்கார்ந்து ரொம்ப யோசிச்சு, கிண்டல் பண்ணி படங்கள் அனுப்புறாங்கயா!!! இ-மெயில் வந்த பார்வர்ட்ஸ்லேய் THE BEST PHOTO இங்கே!!!


2023 - குட்டிக்கதை

ஜெர்மனிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா படுமோசமாக விளையாடி தோற்றதனால் அடுத்த தகுதி சுற்றுக்கு உறுதியாக முன்னேற இயலாத சூழலுக்கு ஆளாகியுள்ளது என அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக இருந்து கொண்டிருந்தது. ஒரு வேளை அப்படி முன்னேறவிட்டால், அணியில் சில முக்கிய தலைகள் உருளும் என ஆருடம் கூறிக்கொண்டிருந்தனர் பழைய ஆட்டக்காரர்கள்.

முன்னாள் கேப்டன் சிங்கிளி, கோச் தான் தோல்விக்கு பொறுப்பு என விளக்கமாக ஆங்கிலத் தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்.ஜெர்மனியின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வாண்டுல்கர் அதனது போட்டி சேனலில் அலறிக்கொண்டிருந்தார்.

முன்னாள் டொக்கு பேட்ஸ்மேன் ஆர்யா டைம்ஸ் ஆஃப் ப்யூச்சரில், வெற்றியும் தோல்வியும் ஜகஜம் என தத்துவ மழை பொழிந்து கொண்டிருந்தார்.

சாவு மேளம் வைத்து கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மைகளை சவ ஊர்வலமாக எடுத்து செல்வதை ஒரு ஹிந்தி சேனல் காட்டி கொண்டிருந்தது.

அடுத்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தயாராவதைப் பற்றி ஒரு எஸ்.எம்.எஸ் சர்வேயும் போய்க்கொண்டிருந்தது.

"கார்த்தி, நீ எத்தனை வருஷமானாலும் திருந்த வே மாட்டே!!" என சொல்லிக்கொண்டே காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி ஜெனி.

"இந்த முறை இவனுங்க சொதப்பிட்டானுங்க, கத்துக்குட்டிப் பசங்க ஜெர்மனி, அவனுங்ககிட்ட தோத்து மானம் போச்சு, இனிமேல் கிரிக்கெட்டுக்கு ஒரு முழுக்கு"

"கார்த்தி, நீ ஒரு லூசு, உன்னை லவ் பண்ணக் காலத்திலேந்து இனி கிரிக்கேட் பார்க்க மாட்டேன்னு ஒவ்வொரு தடவையும் இந்தியா தோக்கிறப்ப சொல்ற,அதுக்கு அப்புறம் மேட்ச் போட்டா ஆபிஸ்ல லீவ் போட்டு வந்து உடகார்ந்துடுற"

"இல்லை ஜெனி, சத்தியமா இனி மேட்ச் பார்க்க மாட்டேன்," சொல்லிக்கொண்டிருக்கும்போதே

ஒரு சேனலில் உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு மயிரிழை வாய்ப்பு உள்ளது எனக் கூறக் கேட்டு டீவியை கவனிக்கலானேன்.

ஒரு வேளை பிலிப்பைன்ஸ்,ஜெர்மனி அணியை தோற்கடித்தால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ம்ம்ம், நாம பிலிப்பைன்ஸ்க்கு எதிராக 623 ரன்கள் எடுத்தோம், பிலிப்பைன்ஸ் ஜெர்மனியை ஜெயிப்பது கஷ்டம் தான், இருந்தாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை.

"ஜெனி, இந்த ஒரு மேட்ச் மட்டும் பார்த்துக்கிறேன்" எனக் கெஞ்சலுடன் ஜெனியைப் பார்த்தேன்.

Sunday, March 25, 2007

இதைப் படிக்காதிங்க

லீ ஜெர்மோன், இவரது அறிமுக டெஸ்ட் ஆட்டமே அணித்தலைவராகத்தான். 1994-95 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த நியுசிலாந்து அணி மிக மோசமாக விளையாடியதை அடுத்து, ஒரு சில ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த லீ ஜெர்மோனை அணித்தலைவராக்கினார்கள். ஓரளவுக்கு சமாளித்த லீ ஜெர்மோன் 1997 ல் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். பெரிய வெற்றிகளைக் குவிக்கா விட்டாலும் பெரும் வீழ்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீட்ட பெருமை இவரைசாரும். 96 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில், சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரும் ஸ்கோரை எட்ட உதவினார். ஆனால் வாவ் சகோதரர்களின் சிறப்பான ஆட்டம் உலகக்கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அடுத்து கிரேம் ஸ்மித், மீண்டும் மழையால் 2003 உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா வெளியேறிய போது, அடுத்து காலிஸ், பவுச்சர், க்ரிஷ்டன் யார் கேப்டன் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது அதிரடியாக ஸ்மித் ஆக்கப்பட்டார். உலககோப்பைக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் போலக்குக்கும் ஸ்மித்துக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தின் வளர்ச்சி அதற்குப் பின்னால் ஏறுமுகம்தான். லான்ஸ் குலூஷ்னரை "Disruptive element in the team" என வெளிப்படையாக சொல்லி அவரை அணியிலிருந்து நிரந்தரமாக நீக்க காரணமாக இருந்த இவர், ஆஸ்திரேலியாவின் வார்த்தை அடிகளுக்கு சிறப்பான பதிலடி கொடுக்க என்றுமே தவறுவதில்லல.

ஜிம்பாப்வேயின் தற்போதைய கேப்டன் பிராஸ்பர் உத்சேயாவும் இப்படித்தான் கேப்டன் ஆக்கப்பட்டவர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரால் பெரும் தோல்விகளில் இருந்து அணிய காப்பாற்ற இயலவில்லை.

இதுபோல் மீண்டும் மீண்டும் பழைய முகங்களுக்கு போகமால் இந்தியாவும் ஒரு "தலைவனை" உருவாக்க முயற்சிக்கலாம். திராவிட்டை தவிர மற்ற பழைய முகங்கள் எதுவுமே பேட்டிங்கில் "consistent" ஆக சோபிக்க வில்லை, கங்குலி கூட தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஆடியது போல் இருந்தது. குறைந்த பட்சம், ஒரு நாள் போட்டிகளில் ஆவது டெண்டுல்கர், சேவாக், கங்குலி, கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர்களுக்கு கல்தா கொடுத்து விட்டு புதியவர்களை சேர்க்கலாம். தோனி, பதான் , உத்தப்பா ஆகியோர்களுக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுத்துவிட்டு சரியாக ஆடவில்லையெனில் நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

முதற் ஒரு சில வருடங்களுக்கு தோல்விகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் 2011ல் நல்ல அணியை உலகக் கோப்பைக்கு அனுப்பலாம். அதே சமயத்தில் அனுபவ வீரகளினால் டெஸ்ட் போட்டிக்கான அணியையும் மேம்படுத்தலாம்.

ரசிகர்களும்/மீடியாவும் "தனி மனித வழிபாடு" செய்வதை விட்டுவிட வேண்டும். இந்தியா ஜெயிக்கவில்லையா !!! பரவாயில்லை , தோனி 50 ஆ, சந்தோசம், கங்குலி 80ஆ சந்தோசம் என்று ஆனந்தப்படுவதை நிறுத்திவிட்டு வெற்றிக்காக 15 ரன் அடித்திருந்தாலும் அதைப் பாராட்ட வேண்டும்.

எல்லாவற்றுக்கு மேலாக , கிரிக்கெட்டும் ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டும் எனக் கருதி, ஒரு சினிமா/டிராமா போல் பார்க்க ஆரம்பித்தால் தானாகவே எல்லாம் ஒழுங்காகிவிடும். தேசபக்தியைக் காட்ட/வேளிப்படுத்த ஏகப்பட்ட விசய்ங்கள் இருக்கிறது.

Friday, March 23, 2007

மார்க் ஷீல்ட்ஸ், ஒரு போலிஸ் ஹீரோ !!

மார்க் ஷீல்ட்ஸ், கடந்த ஐந்தாறு நாட்களில் இந்தப் பெயரை உச்சரிக்காத/எழுதாத தொலைக்காட்சியோ/பத்திரிக்கையோ கிடையாது. ஹாலிவுட் ஹீரோ போல் தோற்றமளிக்கும் இவர் ஜமைக்கன் காவல் துறையில் துணை ஆணையாளர்.

ஷீல்ட்ஸ், பாப்வுல்மரின் கொலைக்கான புலன் விசாரனையில் ஈடுபட்டு வருகிறார். கறுப்பின மக்கள் அதிகம் உள்ள ஜமைக்காவில் ஒரு வெள்ளையதிகாரி இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும். உயர்நடுத்தர இங்கிலாந்து குடும்பத்தை சேர்ந்த இவர் 17 வயதில் தந்தையுடன் கோபித்துக் கொண்டு, குடும்பத்தை விட்டு வெளியே வந்து காவல்துறையில் சேர்ந்தாராம்.




28 வயதில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்த மார்க் ஷீல்ட்ஸ், லண்டனுக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.

லண்டனில் நவீன கேமராக்களை கொண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியில் திட்ட மேலாளராக இருந்த போது, தனி மனித சுதந்திர தலையீடு என்று அதை விமர்சனம் செய்தவர்கள் , பின்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை சுலபமாக பிடித்தபோது பாராட்டினராம்.

ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் என பலத்தரப்பட்ட குற்றங்களை முறியடித்த மார்க் ஷீல்ட்ஸ் ஸ்காட்லாண்டு யார்டிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

48 வயதாகும் இவர், ஜமைக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதைமருந்து கடத்தல், சிறுகுற்றங்களை ஒழிக்க ஜமைக்கா அரசினால் 2005 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டார்.

ஆரம்பத்தில் வெள்ளையதிகாரி என்ற எதிர்ப்பு இருந்தாலும், இன்று ஜமைக்காவில் ஒரு எல்லோராலும் விரும்பப்படும் ஒரு முக்கியஸ்தர்.

தனது ஆறாவது அறிவு அதிகப்ட்சமாகவே வேலை செய்கிறது எனக்கருதும் இவர், நிச்சயம் பாப்வுல்மரைக் கொன்றவர்களை சீக்கிரமாகவே கண்டுபிடிப்பார்கள் என நம்பலாம்.
இவரைப்பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

மார்க் ஷீல்ட்ஸ் --- போலிஸ் ஹீரோ

மார்க் ஷீல்ட்ஸ், கடந்த ஐந்தாறு நாட்களில் இந்தப் பெயரை உச்சரிக்காத/எழுதாத தொலைக்காட்சியோ/பத்திரிக்கையோ கிடையாது. ஹாலிவுட் ஹீரோ போல் தோற்றமளிக்கும் இவர் ஜமைக்கன் காவல் துறையில் துணை ஆணையாளர்.

ஷீல்ட்ஸ், பாப்வுல்மரின் கொலைக்கான புலன் விசாரனையில் ஈடுபட்டு வருகிறார். கறுப்பின மக்கள் அதிகம் உள்ள ஜமைக்காவில் ஒரு வெள்ளையதிகாரி இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும். உயர்நடுத்தர இங்கிலாந்து குடும்பத்தை சேர்ந்த இவர் 17 வயதில் தந்தையுடன் கோபித்துக் கொண்டு, குடும்பத்தை விட்டு வெளியே வந்து காவல்துறையில் சேர்ந்தாராம்.




28 வயதில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்த மார்க் ஷீல்ட்ஸ், லண்டனுக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.

லண்டனில் நவீன கேமராக்களை கொண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியில் திட்ட மேலாளராக இருந்த போது, தனி மனித சுதந்திர தலையீடு என்று அதை விமர்சனம் செய்தவர்கள் , பின்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை சுலபமாக பிடித்தபோது பாராட்டினராம்.

ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் என பலத்தரப்பட்ட குற்றங்களை முறியடித்த மார்க் ஷீல்ட்ஸ் ஸ்காட்லாண்டு யார்டிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

48 வயதாகும் இவர், ஜமைக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதைமருந்து கடத்தல், சிறுகுற்றங்களை ஒழிக்க ஜமைக்கா அரசினால் 2005 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டார்.

ஆரம்பத்தில் வெள்ளையதிகாரி என்ற எதிர்ப்பு இருந்தாலும், இன்று ஜமைக்காவில் ஒரு எல்லோராலும் விரும்பப்படும் ஒரு முக்கியஸ்தர்.

தனது ஆறாவது அறிவு அதிகப்ட்சமாகவே வேலை செய்கிறது எனக்கருதும் இவர், நிச்சயம் பாப்வுல்மரைக் கொன்றவர்களை சீக்கிரமாகவே கண்டுபிடிப்பார்கள் என நம்பலாம்.
இவரைப்பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

Wednesday, March 21, 2007

கனவே கலையாதே - சிறுகதை

"காதல் சொன்ன கணமே!அது கடவுளைக் கண்ட கணமே" மூன்றாவது முறையாக மொபைல் பாட ஆரம்பித்தது. கனவா நினைவா என்று சொல்ல முடியாத ஒரு கனவுக் கலைந்து மொபைலை தேடி எடுத்தேன். . ஜெனிக்கான ஸ்பெஷல் ரிங் டோன் இது,

"ஹலோ ஜெனி, போஞ்ஜூர்"


"கார்த்தி, போன் ஜூர் இல்லை, பேட் ஜூர்.. நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல, மற்றவர்களைக்காட்டிலும் உன்னை அதிகம் பிடித்தது, உன்னோட இயல்பா இருக்கிற குணம்தான், ஆனால் நீயும் எல்லாப் பசங்க மாதிரிதான்னு நிருபிச்சுட்ட! உனக்கு எப்படி இவ்வளவு சந்தேக குணம் வந்தது, என்னோட சுதந்திரத்தில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. நல்ல வேளை உன்னைப் பத்தி எனக்கு இப்போவே தெரிஞ்சது, தாங்க் காட், உனக்கும் எனக்கு இனி எந்தவொரு சம்பந்தமுமில்லல என சொல்லதான் போன் பண்ணேன், குட் பை" எனச் சொல்லி மொபைலை கட் பண்ணினாள்.

மணி பார்த்தேன், 11.20 காட்டியது. ரொம்ப நேரம் தூங்கிட்ட மாதிரி இருந்தாலும், இன்னும் தூக்கம் கண்ணை சொக்குது, ஜெனி இப்படி சொன்னதைக் காட்டிலும் தூங்குறப்ப வந்த கனவுதான் நெருடலா இருக்கு.

நேத்து நான் தான் ஜெனியை பெங்களூருக்கு மதிய டிரெயினில் ஏற்றி விட்டு வந்தேன். நல்லாதான் பேசினோம். வழக்கமான சண்டை எதுவும் இல்லை. பிறகு எதுக்கு இப்போ கூப்பிட்டு திட்டுறாள். ஒன்னுமே புரியலையே. செண்டரல் இருந்து நேரா ஆபிஸ் போய்ட்டு, கொஞ்சம் வேலை பார்த்துட்டு, பின் வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன்.

ஒன்னுமே புரியலியே, ஒரு வேளை இந்தக் கனவுக்கும் ஜெனி இப்படி சொன்னதுக்கும் சம்பந்தம் இருக்குமோ? ஏன்னா கனவிலேயும் ஜெனி அவளோட கசின் முன்ன கிட்டத்தட்ட இப்படித்தான் திட்டினாள்.

அப்படியே கண் திரும்ப சொக்க ஆரம்பித்தது, வெள்ளையா ஒரு உருவம் , புகை மூட்டமா பேச ஆரம்பித்தது.

"கார்த்தி, நேற்றிரவு என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரிஞ்சுக்க ஆசையா!!"

"யெஸ்"

"இப்போ நேற்றைய இரவுக்கு போகப் போற"

தலை சுற்ற ஆரம்பித்தது, ஜெயண்ட் வீல் போனால் ஏற்படுற உணர்வு.

ரயில் நிலைய அறிவிப்பு கன்னடத்தில், கடவுளே, நான் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருக்கிறேன். சில்லென குளிர் அடித்தது. ஆம் நான் ரத்தமும் சதையுமாய் முழுமையாக ஒரு இரவு பின்னோக்கி வந்துள்ளேன்.

சென்னையிலிருந்து வரும் ரயில் பிளாட்பாரத்தை அடைகிறது, ஜெனி ஏ/சி கோச்சிலிருந்து இறங்குகிறாள். அவள் கண்கள் யாரையோ தேடுகிறது. தூரத்தில் ரெமொ ஸ்டைலில் ஒருவன் ஓடி வருகிறான். இவளும் அவனைப் பார்த்து சந்தோசத்துடன் கையாட்டுகிறாள்.

அவன் இவளின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொள்கிறான். நான் அவர்களை நோக்கி வேகமாக நடக்க, ஒரு போர்ட்டர் என் மேல் இடித்துவிட்டு என்னைக் கன்னடத்தில் திட்டுவிட்டுப் போனான். அதைக் கவனித்த ஜெனி என்னருகில் வந்தாள்.

"கார்த்தி, நீ எப்படி இங்க, நான் தான் சொன்னேனே, நீ வராதேன்னு, நான் இங்க என்ன பண்ணப்போறேன்னு ஃபாலோ பண்றியா!!!" பிரென்சு, இங்கிலிஷ் எல்லா பாஷையிலேயும் திட்டிவிட்டு அந்த ரெமோவுடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள். கண்கள் சொருக பிளாட்பார சேரில் அப்படியே சரிந்தேன்.

"காதல் சொன்ன கணமே!அது கடவுளைக் கண்ட கணமே" மூன்றாவது முறையாக மொபைல் பாட ஆரம்பித்தது. கனவா நினைவா என்று சொல்ல முடியாத ஒரு கனவுக் கலைந்து மொபைலை தேடி எடுத்தேன். . ஜெனிக்கான ஸ்பெஷல் ரிங் டோன் இது,

"ஹலோ ஜெனி, போஞ்ஜூர்"

Tuesday, March 20, 2007

மாற்றங்களே மாறாதது - சிறுகதை

நாலு நாளா மனசே சரியில்லை, ஜெனிக்கு கல்யாணம் ஆயிடுச்சு, கல்யாணம் ஆயிடுச்சு என்பதைவிட, அவள் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுக்காதது இன்னும் கஷ்டமாயிருந்தது.
ஆபிஸ்ல அவளோட கடைசி வேலை நாள் அன்று என்னிடம் வந்து, "சாரி, கார்த்திக், உனக்கு என்னோட கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க விருப்பமில்லை, என் கல்யாணத்திற்கு நீ வருவதை நான் விரும்பவில்லை" என்று சொல்லிப்போனாள்.
இப்படி சொல்ல, எப்படி இவளுக்கு மனசு வந்தது. அவள் என்னிடம் வந்து வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள், சுமுகமாக பிரிந்துவிடலாம் என்று சொல்லிய போது கூட அவளுக்கு நான் எந்தவித மன உளைச்சலையும் தரவில்லை. அதன் பிறகும் நானும் ஜெனியும் ஒரு மாதம் ஒரே டீமில் வேலை பார்த்தோம்.
உலகத்தில் "உதாசீனப்படுத்துதல்" தான் மிக கடுமையான மனவருத்தத்தை அளிக்கக்கூடியது. I dont deserve that.
ஒரு வேளை "குற்ற உணர்ச்சியாக இருக்குமோ" .
எதுவாகினும், ஒரு நண்பனாக, சக பணியாளனாக என்னைக்கூப்பிட்டு இருக்கலாம். அதைப்பற்றி நினைக்க நினைக்க ஆத்திரம் தான் அதிகம் ஆனது.

எவ்வளவுதான் தவிர்க்க நினைத்தாலும் அவளுக்காக நான் விட்டுக்கொடுத்த விஷயங்கள்,பட்ட சிரமங்கள், செய்த செலவுகள் எல்லாம் நினைவில் வந்து போனது. ச்சே ச்சே தப்பு, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது என்று உள்ளுனர்வு சொன்னாலும், மீண்டும் மிண்டும் அதே நினைவுகள் வந்து போனது.

இப்படியே இருந்தால், இந்த வெறுப்புணர்வு அதிகமாகி, மனரீதியிலான பிரச்சினைகளில் கொண்டு வந்து விட்டுவிடும் என்பது மட்டும் தெரிந்தது.

இந்த என்ணங்கள் போகனும்னா, வேற மாற்று எண்ணங்களை கொண்டு வரனுமே, ஒன்று நிச்சயமாக எனக்குப் புரிந்தது, இந்த ஒரு மாததில் அதிக நேரம் எனக்கு கிடைக்கிறது.ஜெனி இருந்தப்ப என்னோட ஒவ்வோரு அசைவுகளும் அவளை சுற்றியே இருக்கும், வார இறுதியும் அப்படித்தான். ஆபிஸ் ல பாதி நேரம் என் வேலையை முடிச்சுட்டு அவளோட புரோகிராம டீ-பக் பண்றதிலேயே மீதி பாதிநேரம் போகும், ஆபிஸ் முடிஞ்ச பிறகு அவளோட டின்னர், ஹாஸ்டல்ல டிராப், அதுக்கப்புறம் எஸ்.எம்.எஸ், கால் பணறது, காலையில் பிக்-அப்

எல்லாம் ஜெனி மயம் ஆ இருந்துச்சு.

ஆனால் இப்போ திடிர்னு ஒரு நாளைக்கு அதிகமா சில மணி நேரம் கிடைச்சுட்ட மாதிரி இருக்கு, ஏதாவது பண்ணனும். ரெண்டு மாசம் முன்னாடி, என்னோட காலேஜ் சீனியர் முகப்பேர் பக்கத்தில ஒரு ஆதரவளிப்போர் இல்லம் இருக்கு, எதாவது நன்கொடை தர்றீயான்னு கேட்டாரு, அப்படி எதுவும் தரமுடியலேன்னாலும் ஒரு முறை வந்து அந்த குழந்தைகளிடம் பேசிட்டு போன்னு கேட்டார்.

நான் விதண்டாவாதமாக அதை நடத்துபவர்களின் நேர்மை எப்படி என்று நக்கலடித்ததால் கடுப்பாயிட்டார். ரொம்ப கோபமா, "உன்னாலயோ என்னாலயோ நாலு குழந்தைகளுக்கு சப்போர்ட் பண்ண முடியாது? ஆனால் அப்படி சப்போர்ட் பண்றவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணலாம்" சொல்லிட்டு போனைக் கட் பண்ணிட்டார்.

ம்ம்ம்,முதல்ல அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போகனும். சீனியருக்கு போன் செய்தேன். அவர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

அதுவரை என்ன பண்றது, பேப்பரை எடுத்துப் படித்தேன், அதில் அசோக்நகரில் ஏழை மாணவர்களுக்கு கணினி அறிவு தர ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், சொல்லிக்கொடுக்க தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்படப்பட்டிருந்தது. ம்ம்ம்ம், அந்த அட்ரஸை குறித்துக் கொண்டேன்.

இண்டர்நெட்டை கனெக்ட் பண்ணி, ஆன்லலன்ல இருந்த ஜூனியர்ஸ், சீனியர்ஸ் கிட்ட சாட் பண்ண ஆரம்பிச்சதில் நேரம் போனதே தெரியவில்லை, வாழ்க்கையில் எத்தனை விசயங்கள் மாறினாலும் கல்லூரி நினைவுகளை எத்தனை முறை பகிர்ந்து கொண்டாலும் அதன் சுவாரசியம் குறைவதே இல்லல. நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளாமைக்கு கடிந்து கொண்டனர். எல்லோருக்கும் என்னோட புதிய மொபைல் நெம்பரைக் கொடுத்து, எப்போ வேண்டுமனாலும் தொடர்பு கொள்ள சொன்னேன்.

இந்த வருஷம் என் காலேஜ்ல கேம்பஸ் ல போணியாகாத முன்னறிமுகம் இல்லாத ஜூனியர்ஸ்க்கு என் மெயில் ஐடி கொடுக்குமாறு ஜூனியர்ஸைக் கேட்டுக் கொண்டேன்.
அப்படியே ஜெனிக்கும் ஒரு வாழ்த்து இ-மெயில் அனுப்ப்பிவிட்டு கிளம்பலானேன். எப்போவோ ஆரம்பிச்ச பிளாக்குக்கு ஒரு திகில் கதை எழுதிட்டு அப்டேட் பண்ணேன்.

என்னவொரு மாற்றம், சில மணி நேரத்தில், "சைகோ" ஆகிவிடுவோமோ என்ற பயத்திற்கு மனதார நன்றி சொன்னேன். ம்ம்ம் இந்த பயம் மட்டும் இல்லையெனில் மனிதன் பைத்தியக்காரனாக மட்டுமே இருந்த்திருப்பான். மாற்றங்களையும் என் மனது ஏற்றுக்கொள்ளத் தயாரனது சந்தோசமாக இருந்தது,

" A candle loses nothing if it is used to light another one" ஒரு எஸ்.எம்.எஸைப் படித்து விட்டு முன்பு எப்போதும் இல்லாத நிதானத்துடன், புத்துணர்ச்சியுடன் பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

எந்தக் கடையிலே நீ அரிசி வாங்குற? !!

குண்டாயிருப்பது அழகு, அதிலும் குண்டாயிருப்பவர்கள் விளையாட்டில் இருப்பது இன்னும் அழகு. பெர்முடா அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளர் திவெயின் லெவராக் மல்யுத்த வீரர் போல கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தாலும், ஆட்டத்திலும் கண்ணும் கருத்துமாய் இருந்து உத்தப்பாவை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார். அதிலும் அவர் ஓடிய ஓட்டம் பல நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்ளுக்கு நினைவில் இருக்கும். 120 கிலோ எடையுடன், முழு ஈடுபாட்டுடன்,உற்சாகமாக இவர் கிரிக்கெட் ஆடும் அழகு கண்கொள்ளாக் காட்சி.



இவர் பெர்முடாவில் காவல்துறையில் பணிபுரிகிறாராம். சிறுவயதில் 110 தடை தாண்டி ஒடும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவராம். கால்பந்தும் விளையாடி இருக்கிறார்.

இவரின் பிபிசி பேட்டி
இங்கே

போட்டிகளில் வெற்றி பெறுவதை விட "முழுமையாக பங்குபெறுதல்" என்பது தான் முக்கியம். உற்சாக ஆட்டத்தை தொடருங்கள் Mr."Rock"


இவரின் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய தகவல்களை பெற இங்கே சொடுக்கவும்

நன்றி : கிரிகின்போ.காம், விக்கிபீடியா

Saturday, March 17, 2007

ஷாகித் அப்ரிடி - அதிவேக சதம் வீடியோ

அப்ரிடியின் அதிவேக சதத்தின் வீடியோ



வீடியோவை ி உள்ளீடு செய்வது எப்படி என்று சொல்லிகொடுத்த சக பதிவர், பாஸ்ட் பவுலர் அவர்களுக்கு நன்றிகள்.

Courtesy : www.youtube.com

Friday, March 16, 2007

இவரு ரொம்ப நல்லவருங்க

கைப்புள்ள


இவர் பேரு வான் பஞ்ஜ், நேத்து இவர் பந்துகளை கட்டதுரை கிப்ஸ் சுலுக்கு எடுத்தார், எவ்வளவு அடிச்சாலும் இந்த கைப்புள்ள ் தாங்குவார் போல.

இவரைப் பற்றி மேலதிக தகவல்களுக்கு,

இங்கே சொ்டுக்கவும்்



கட்டதுரைகிப்ஸ் அடிச்ச 6 சிக்ஸ்ர்களைப் பார்க்க

இங்கே சொ்டுக்கவும்்


ஆங்கிலத்தில் படிக்க

இங்கே சொ்டுக்கவும்்

ஆனாலும் கடைசியிலே கைப்புள்ள தான் கிப்ஸ கேட்ச் பிடிச்ச்சு அவுட் ஆக்க்கினார்

Thursday, March 15, 2007

ஒரு ஞாயிற்றுக்கிழமை - சிறுகதை

என்னமோ தெரியாது, இந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலே மட்டும் கரெக்டா தூக்கம் சீக்கிரம் கலைஞ்சுப் போயிடும். மணி பார்த்தேன். 8.10, எழுந்து உட்கார்ந்து , டீவியைப் போட்டேன், தமிழ் சேனல் எதையும் காணோம், கன்னடப்பாட்டு சேனல்ல "கேளட நிம கீதா" பாட்டு ஓடிக்கொண்டிருந்தது, தமிழ்ல இந்தப்பாட்டு எனக்குப்பிடிச்ச பாட்டுல ஒன்னு, தேவதை இளம் தேவி, கார்த்திக் நடிச்ச படம்னு நினைக்கிறேன், ஸ்கூல் படிக்கிறப்ப ரேடியோல நைட் இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் இருந்த பயம், திகில் உணர்வை இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது.

ஆபிஸ் போகலாமா, வீட்டிலே இருந்து, 5.Something படிக்கலாமா...

ம்ம்ம், ஆபிஸே போகலாம், நிம்மதியா பிரவுஸ் பன்னலாம், என்னோட புரொஜெக்ட் டீம் எல்லாம் பிக்னிக் போயிட்டாங்க, அமெரிக்கால லாங் வீக் எண்ட் னா இங்க இவனுங்க எங்கயாவது கிளம்பிடுவானுங்க, நான் இந்த பார்ட்டி, பிக்னிக்குன்னு எதுலேயும் கலந்துகிறது இல்லீங்க. டீம் ஆளுங்ககிட்ட புரெஜெக்ட் , புரொகிராம் தவிர எதுவும் பேசுறது கிடையாது, கொஞ்சம் பேசிட்ட டின்னர் போலாம்னு சொல்லுவானுங்க, அங்க போயிட்டு , டச்சு, ஸ்பானிஷ் னு காசு கேட்பனுங்க, கம்பெனி ஜாயின் பண்ண புதுசுல, இப்படி போய், நான் சாப்பிட்ட 4 இட்லிக்கு 200 மொய் வைக்க வேண்டியதாப் போச்சு. அதுவும் புதுசா டீம்ல ஏதாவது பொண்ணு வந்துட்டாப் போதும், கடலைக்கு ஹோம் வொர்க் பண்ணிட்டு வருவானுங்க,

ஆபிஸ்ல எவனையும் பிடிக்கலன்னாலும் இங்க இருக்கிற காரணம், கிடைக்கிற சம்பளம்தான், இருந்தாலும் இவனுங்க கொடுக்கிற சம்பளத்துக்கு மேலேயே தான் நான் கூவுறேன், இன்னும் ஆறுமாசம், இங்க இருந்து ஜூட் தான்,

இந்த பிக்னிக்குக்கு என்னையும் கூப்பிடலாமேன்னு புதுசா வந்த ஹரியானா பொண்ணு சொன்னப்ப ,என் பி-எம் அடிச்ச கமெண்டுக்காகவே , ஆபிஸை விட்டு போறப்ப ,அவனுக்கு எக்சிட் இண்டர்வியூல ஆப்பு அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.

சோம்பலை முறித்துவிட்டு, கதவைத்திறந்து பேப்பரை எடுத்து எனக்கான கன்னி ராசிபலனை பார்க்கலானேன்.

'புதுவிதமான அறிமுகங்கள் கிடைக்கும்" எனப் போட்டிருந்தது. ஸ்போர்ட்ஸ் பேஜ் மட்டும் பார்த்துட்டு பேப்பரை மூடி வைத்தேன்.

ஆமாம், உள்ளவங்க கிட்டயே பேச முடியல, இதுல புது அறிமுகம் வேறயாக்கும், என நினைத்துக் கொண்டே மொபைலை எடுத்துப் பார்த்தேன், பி.எம் நெம்பர்லேந்து நிறைய மிஸ்ட் கால்ஸ், நைட்ல நான் எப்போதும் சைலண்ட் மோட்ல தான் போட்டுறது, இல்லாட்டி நேரம் கெட்ட நேரத்துல ஆணி புடுங்க டவுட் கேப்பானுங்க.

போன முறை இவனுங்க பிக்னிக் போனப்ப, என்னைக் கால் பண்ணி கலாட்டா பண்ணானுங்க, இந்த முறையும் கலாட்டா பண்ண என் பி.எம் டிரை பண்ணிருப்பான்னு நினைச்சுக்கிட்டே எஸ்.எம்.எஸ் பார்த்தேன், ஒரு எஸ்.எம்.எஸ் பி.எம் கிட்டேயிருந்து, Call me, immdediately"

கூப்பிட்டு வம்பு இழுக்கிறதுக்கு எப்படியெல்லாம் இந்த ஆளு மெசேஜ் அனுப்புறான்னு நினைச்சுக்கிட்டே, ஆபிஸுக்கு கிளம்ப ஆரம்பித்தேன்.

***
Forum எதிர்த்தாப்ல இருக்கிற கடையில நாலு இட்லியை நின்னுக்கிட்டே தின்னுட்டு, ஆபிஸ் நோக்கி பைக்கை ஓட்ட ஆரம்பித்தேன். எல்லாம் ஜோடி - ஜோடியா பறந்து போய்ட்டு இருந்தானுங்க, ஹும்ம்ம், எனக்கு தான் அந்தக் கொடுப்பினை இல்லை. இருக்கட்டும் இருக்கட்டும், இந்த முறை அந்த ஹரியானா பொண்ணைக் கரெக்ட் பண்ணனும் நினைச்சுக்கிட்டு வண்டியை வேகமெடுத்தேன்.

ஆபிஸ், வந்து சேரும்போது மணி 11, பார்க் பன்ணிட்டு, செக்யூரிட்டிகிட்ட ஒரு முறைக்கு இரண்டு முறை ஐடி காட்டுட்டு உள்ளேப் போனேன். ரெண்டு மாசம் முன்ன, ஐடி எடுக்காம வந்தப்ப இதே செக்யூரிட்டி அலப்பரை பண்ணிட்டான்.

என்றைக்கும் இல்லாமல் இன்னக்கி, செக்யூரிட்ட பசங்க கிட்ட ஒரு வித்தியாசம் தெரிஞ்சது.
சரி எதுவா இருந்தா எனக்கு என்னன்னு நான் லிப்ட் ல ஏறினேன்.

என் இடத்தை நோக்கி நடக்கையில், என் டீம் ல இருக்கிற ஜூனியர் பசங்க குரல் மாதிரி இருந்தது, அடுத்த தடுப்புல தான் அவனுங்க இருக்கானுங்க, ஆமாம், அந்த பசங்க டீம் பிக்னிக் ல போயிருந்தானுங்க, நாளைக்குல வர்றனும், எதுவும் டார்கெட் வேற இல்லை, நான் தான் அவனுங்களை டிரெயின் பன்னேன்,

இரண்டு பேர்ல ஒருத்தன் , டேபிள் மேல உட்கார்ந்துகிட்டு இருந்தான், இன்னொருத்தன் நின்னுக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தானுங்க,

"ஹாய், ஹவ் வாஸ் தெ ட்ரிப்?" னு கேட்டேன், பதில் எதுவும் இல்லை., வெள்ளிக்கிழமை வரை சார் சார் னு வழிஞ்சவனுங்க, இன்னக்கி பார்த்தும் பார்க்கதது மாதிரி இருக்கானுங்க, ம்ம், இந்த பி.எம் ஏதாவது ஓதி இருப்பான், more over டிரெயினிங் வேற முடிஞ்சுடுச்சு.

புளோர்ல வேறயாரும் இல்லை, இந்த பசங்க வேற என்னை கிண்டலடிக்கிற மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறானுங்க, ரெண்டு முறை பேச டிரை பண்ணியும் மதிக்க மாட்டுறானுங்க.

சரி போய் காபி சாப்பிடலாம்னு கபடேரியா வந்தேன். டூர் முடிச்சுட்டு வந்துட்டானுங்களா, பி.எம், அந்த ஹரியான பொண்ணு, இன்னும் சில என் டீம் மேட்ஸ் அங்க இருந்தானுங்க, காபி மெஷின்ல காபி எடுத்துக்கிட்டு எங்க டீம் கிட்ட போனேன்.

என் பி.எம் ஹரியானா பொன்ணு மேல கை போட்டு உட்கார்ந்து இருந்தான், பரதேசி , கரெக்ட் பண்ணிட்டான் போல.

"ஹாய், எவ்ரிபடி!! ஹவ் வாஸ் தெ ட்ரிப்" எல்லோரும் ஒரு சேர என்னைப் பார்த்தானுங்க, திரும்ப பேச ஆரம்பிச்சுட்டுனானுங்க,

"ஓகே பை" னு சொல்லிட்டு கீழே வந்தேன்.

ரிஷப்சனுக்கு வந்தப்ப அங்க ஹெச்-ஆர் ஜெனி நின்னுக்கிட்டு இருந்தாள், சில ஹெச்-ஆர் டிரெயினிஸ்,
அவர்களைக் கவனிக்காமல் காபியுடன் தம்மடிக்க வெளியே வர எத்தனிக்கும்போது

'கார்த்தி" ன்னு கூப்பிட்டாள் ஜெனி.

"யெஸ்" என அவளை நோக்கித்திரும்பினேன்,

அவள் கண்களில் கலக்கம் தெரிந்தது.

"யுவர் டீம் வேன் ஹாட் மெட் அன் ஆக்சிடெண்ட்"

"வாட்?!! "

"அதில இருந்த எல்லோரும் ஸ்பாட்லேயே ....??" சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்.

"அய்யோ,அப்போ நான் மேல பார்த்தவங்க!!!!"

******************************
இந்த சிறுகதை பூங்கா இணைய வார இதழில் (மார்ச் 19 )தேர்வு செய்யப்பட்டது
http://poongaa.com/content/view/1365/1/

Friday, March 09, 2007

கிழக்கு கடற்கரை - சிறுகதை

"ஆனந்த ராகம் கேட்கும் காலம்" பன்னீர் புஷ்பங்கள் பாடப் பாட்டு கார் சிடியில் ஒலித்துக்கொண்டிருக்க, ஜெனி, காரை ஈ.சி.ஆர் இல் மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
இடது புறம் கார்த்திக் அவள் கார் ஓட்டும் அழகை ரசித்துகொண்டிருந்தான்.

"கார்த்தி, பாட்டை மாத்து, காலையில் கிளம்பினதுலேந்து இது 12 வது தடவை, உனக்கு போரே அடிக்கலியா" என்றாள் ரோட்டின் மீதிருந்த கவனத்தை எடுக்காமல்.

"சில விஷயங்கள் எனக்கு போரே அடிக்காது, உன்னையும் சேர்த்து"

"நடிக்காத, அவளோட எஸ்.எம்.எஸ் இன்பாக்ஸ் ல இதே டயலாக்கோட உன்னோட மெசேஜ் பார்த்தேன்"

"ஹே, அதுவா, இட்ஸ் ஜஸ்ட் அ பார்வர்டட் மெசேஜ், கோச்சுக்காதே, இருக்கட்டும் உன்னோட மளிகை கடை முறைப்பயன் எப்படி இருக்கான் "

"அடி வாங்குவடா!!!, அவன் சூப்பர் மார்க்கெட் வச்சு இருக்கான், மளிகைக்கடை கிடையாது"

"சரி், ஏசி வைச்ச மளிகைக்கடை"

"போடா, நாயே, பி,ஸீரியஸ், அப்பா, வேலை பார்த்தது போதும், அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுங்கிறார்"

"ஹா ஹா, அப்படி யே பண்ணிடு, மளிகைக் கடை கல்லால உன்னோட லேப்டாப் வச்சிக்கிட்டு வரவு செலவுக்கணக்கு பாரு"

நான் இப்படி சொன்னதும் ஜெனியின் முகம் வாடிப்போனது, 5 நிமிஷத்துக்கு முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு காரை ஓட்டினாள்.

"ஜெனி, சாரி, விளையாட்டுக்கு கிண்டல் பண்ணேன்"
காரை மெதுவாக மாயாஜால் முன்ன இருக்கிற ஒரு இளநீர் கடையில் நிறுத்தினாள்.

இரண்டு பேரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். சுள்ளுன்னு முகத்திலே வெயில் அடித்தது, சம்மர் ஸ்டார்ட் ஆயிடுச்சு.

"நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா? ஆன்சைட் போறியான்னு பி.எம் கேட்டாரு, ஒரு வருஷம், அப்பாக்கிட்ட கேட்டேன், கன்னபின்னான்னு கத்திட்டார், படிக்க வச்சதே தப்பு, சம்பாதிக்கிற திமிரு, ஏதெதோ கத்திட்டு இருந்தார், என் கேரக்டரையும் தப்பா பேச ஆரம்பிச்சுட்டார்," என அழ ஆரம்பித்தாள்.

இளநீர் கடைக்காரன் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்க, காசு கொடுத்து விட்டு வேகமாக காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான் கார்ததி.


ஜெனி, இடதுபுறம் ஏறிக் கொண்டாள், சில நிமிட மவுனத்திற்குப் பின்,

"கார்த்தி, நான் பண்ணுறது தப்பா?சாதிக்கனும், நான் உலகம் முழுவது தெரியர இந்திரா நூயி மாதிரி வர்றனும், உனக்கேத் தெரியும் , ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன், வீக் எண்ட் கூட பிஸி, பிரென்சு,லிபா, அசைன்மெண்ட்ஸ், கீபோர்ட்,ஸாப் கிளாஸ்.
ஸ்கூல், காலேஜ் ல கத்துக் கொள்ளாமல் போன விஷயங்களை இப்போதான் கத்துக்கிறேன்.
ஆனால் அப்பாக்கு , நான் என்னமோ சினிமால காட்டுற மாதிரி ஊர் சுத்திக்கிட்டு ஆட்டம் போடுற மாதிரி நினைக்கிறார், சில சமயங்கள் தோணும் ஏன் இந்த ஆளுக்கு பொண்ணா பிறந்தோம்னு, வேற குடும்பத்தில பிறந்து இருக்கலாம்னு " என ஜெனி முடிக்கு முன் அவளது மொபைல் போன் பாட ஆரம்பித்தது.

"ஹலோ, இல்லைப்பா,

???

உடம்பு சரியில்லைப்பா

???

இன்னக்கி லீவ் போட்டுட்டேன்,

???

இல்லைப்பா,
இங்க தான் பக்கத்துலதான் இருக்கேன்,
எப்போப்பா வந்தீங்க,

???
10 நிமிஷத்துல வந்துடுறேன்பா" என போனைக் கட் செய்தாள் ஜெனி.

கார்த்தி, அப்பா ஹாஸ்டல் இருக்காரு, வண்டியைத்திருப்பு, இன்னக்கி அவ்வளவுதான், ஆபிஸ்ல போய் விசாரிச்சுட்டு வந்து இருக்கார், என்ன நடக்க போகுதோ!!! கொஞ்சம் வேகமாப் போடா, பிளீஸ்.

கார்த்தி, காரை விரட்ட ஆரம்பித்தான். உத்தண்டி தாண்டி வருகையில், என்னது இது பாண்டிச்சேரி பஸ் மீடியனைதாண்டி ராங் சைட் வர்றான், அய்யோ, என பஸ்ஸை பார்த்து காரை வலப்புறம் திருப்ப, மரத்தில் மோதி கார் நசுங்கியது.

மாலைப்பத்திரிக்கைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து, மரத்தில் கார் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி".

அதற்கு கீழே, வெளிநாட்டில் வாழும் பிரபல எழுத்தாளரும்,பெண்ணியவாதியுமான வாசகன் தேனிலைவை கொண்டாட மனைவியுடன் மாமல்லபுரம் வந்தார்.


Get Your Own Music Player at Music Plugin

Thursday, March 08, 2007

ஓர் இரவில் நானும் ஜெனியும் - சிறுகதை

இந்த தெருவிலே அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி, 8 மணிக்கே வரப் பயப்படுவாங்க, ஆனால் கடைசி மூணு வருசத்துல லேண்ட் ரேட்டு எக்குத்தப்பா எகிறி மதுரவயல் போற வரைக்கும் அபார்ட்மெண்ட்ஸ் , வீடுகள் , சூப்பர் மார்கெட், டாஸ்மாக் பார்னு ஏரியா ஏகத்துக்கும் டெவலப் ஆயிடுச்சு. மெட்ராஸ் வந்தப்புதுசுல ஒருத்தர் ஒரு கிரவுண்டு 4 லடசத்துக்கு வேணுமான்னு கேட்டார். வாங்கி போட்டு இருந்தா இன்னய ரேட்டுக்கு ஏகத்துக்குப் போயிருக்கும்.

இப்போ மணி பத்தரை, இருந்தாலும் ஜன நடமாட்டம் இருந்து கிட்டு தான் இருக்கு. வழக்கமா நான் பைக்கில் வரும்போது குரைக்காத நாய்கள், நடந்து வரும்போது எரிச்சல் ஊட்டும்படி குரைக்க ஆரம்பித்தன. என்ன பண்றது, நேற்றைய என் நிலைமை வேற..இன்னக்கி என் நிலைமை வேற. கடைசி 20 மணி நேரத்திலே மெட்றாஸ் ல பாதி ஏரியா சுத்திட்டேன். தடுக்க ஆள் கிடையாது இனிமேல் , பயமில்லை.

தன்னால் புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்குதான் மனுஷன் அதிகமா பயப்படுறான், புரிதல் அதிகம் ஆகும்போது, தெளிவு பிறந்து பயம் போகிறது. கிரவுண்டைத்தாண்டி இருக்கிற அபார்ண்ட்மெண்ட்ஸ்ல மூனாவது புளோர்ல தான் நான் தனியா குடியிருக்கேன். சரியா சொல்லப்போனால் குடியிருந்தேன். சரி கடைசியா ஒரு முறை வீட்டைப் பார்த்துட்டுபோயிடாலாம்னு போய்க்கிட்டு இருக்கேன்.

வழக்கமா நான் அயர்ன் துணிக்கொடுக்கும் கடையைத் தாண்டி போகையில், ஒரு பெண் , 25 வயது இருக்கலாம், என்னை உற்றுப் பார்ப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. அட அது பிரமை இல்லை. என்னைத்தான் பார்க்கிறாள்., அட சிரிக்கிறாள்.
ஆனால்? என்னை எப்படி இவள் பார்த்து சிரிக்கிறாள், இவளை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லையே, மேலும் !!!!! ?????

முழுக்கை பச்சைக்கலர் சுடிதார் அணிந்து, பழைய நடிகை ஜெயசுதா போல் இருந்தாள், பக்கத்தில் வந்து ஹாய் சொன்னாள், அட இது என்ன அதிசயம் , என்னைப்பார்த்து ஒரு பெண், அதுவும் அழகான இளம்பெண் ..

"இதுக்கு முன்னாடி நான் உங்களைப் பார்த்தது இல்லியே?" என்றேன் ஆச்சார்யத்துடன்

"நான் உங்களை கடைசி ஒரு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன், நீங்க பைக்கில லேப்டாப்போட இந்த டைம்முக்கு போவீங்க சரியா?"

"ம்ம்ம் சரி, என் பேரு கார்த்திக், உங்க பேரு?"

"என் பேரு ஜெனி".

"வீடு எங்க? "

"நேரப் போய் லெஃப்ட் எடுத்து , டாஸ்மாக்கைத்தாண்டி வர்ற தனி வீடு, அம்மா, அப்பா கடைசி ஒரு வருஷமா இங்க தான் இருக்காங்க"

"ஜெனி, இந்த டைம்ல நீங்க தனியா எப்படி? போவிங்க "

அந்த சமயத்திலே பொலிஸ் வண்டி எங்களை கிராஸ் செயதது. வழக்கமாக இந்த நேரத்தில் ஒரு பெண் தனியா நின்னு பேசிட்டு இருந்தால் விசாரிக்கும் பொலிஸ் ஜெனியை கண்டுகொள்ளாவில்லை. ஒரு வேளைக் கவனிக்காமல் சென்று விட்டார்களோ என்னவோ!!!

"சரி ஜெனி, உங்க வீடு வரைக்கு நான் பேசிட்டு வர்றேன்"

"தாராளாமாக, இன்னக்கி நீங்களாவது கம்பெனி இருக்கீங்களே, தாங்க்ஸ் கார்த்தி"

என் அபார்டெம்ண்ட் வாசலில் அந்த பொலிஸ் வண்டி நின்றுக்கொண்டிருந்தது.

என் அபார்ட்மெண்டு வாட்ச்மேனை ஏதோக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை என்னைப்பற்றி தான் இருக்குமோ!!!

"ஜெனி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"இப்போ எதுவும் இல்லை, ஐ வாஸ் வொர்க்கிங் பார் சிக்ஸ் மண்த்ஸ்"

"ஜெனி, இந்த டாஸ்மாக் கடை வழியா போக உங்களுக்குப் பயமில்லையா?"

"இல்லை, அவங்க, என்னைக்கவனிக்க மாட்டாங்க, எல்லாத்துக்கு மேல நான் அடக்கமான பொண்ணு, அதனால பிரச்சினையே இல்லை"

இருந்தாலும் எனக்குப் பயமாத்தான் இருந்தது, ஜெனி சொன்ன மாதிரியே குடிமகன்கள் யாரும் எங்களைக் கவனித்தது போல் தெரியவில்லை.

"கார்த்திக் உங்க பைக் எங்க? " ஏன் நடந்து வர்றீங்க?"

" அதுவா, நேத்து பாண்டிச்சேரில ஒரு பார்ட்டி, பார்ட்டி முடிச்சுட்டு நைட் டிரைவ் பண்ணப்ப, மகாப்ஸ் முன்ன ஒரு ஆம்னி பஸ் என் பைக்க அடிச்சுட்டான்.. பைக் நாஸ்தி, எனக்குத்தலையில அடி, ஆம்புலன்ஸ் ல என்னைத்தூக்கிட்டுப் போறதை பார்த்தேன், இப்போ நான் உயிரோடில்லை, இப்போ நான் ஒரு பிம்பம் அவ்வளோதான் உயிரோடு இருந்தப்ப புரியாத நிறைய விசயங்களை கடைசி 20 மணி நேரத்தில புரிஞ்சுகிட்டேன், அது சரி என்னை எப்படி பார்த்திங்க? டு யு ஹாவ் எனி எக்ஸ்ட்ரா பவர்ஸ்"

மெலிதான புன்னகையுடன் "எக்ஸ்ட்ரா பவர்ஸ் என்று எல்லாம் சொல்ல இயலாது, இருந்தாலும் ஆமாம்" என்றாள் ஜெனி.

"சரி, கார்த்திக் வீடு வந்துடுச்சு, இனி அடிக்கடிப் பார்க்கலாம் இப்போ டாடா" என்று சொன்னபடி நடக்கிறாளா, மிதக்கிறாளா எனத்தெரியாதபடி வீட்டுக் கேட்டை அடைந்தாள்.

நானும் ஒரு டாடா காட்டிவிட்டு ,என்னடா இது சோதனை, செத்த பிறகு ஒரு பெண்ணோட அறிமுகம் நினைத்துக் கொண்டே, எனது அபார்டமெண்ட் தெருவை அடைந்தேன்.

அங்க ஒரு போஸ்டர் ஒரு வீட்டின் சுவரில்

அட அந்த போஸ்டரை நான் போகிறப்ப கவனிக்கலியே??!!!


முதலாமாண்டு நினைவு கண்ணீர் அஞ்சலி

ஜெனி (எ) ஜெனிபர் பெர்ணாண்டஸ்

தோற்றம் : 17.07.1984 மறைவு 14.02.2006

Monday, March 05, 2007

ரவிசங்கருக்கு நன்றி, செவ்வானம் சேலைக்கட்டி - பாடல்

பதிவர் ரவிசங்கரின் இந்தப்பதிவின் முலம் எனக்கு வலைப்பூவில் எப்படி பாடற்களை ஏற்றுவது என்பது புரிந்தது.

எனக்குப் பிடித்த செவ்வானம் சேலைக்கட்டி என்ற பாடலை இங்கு வைத்துள்ளேன்.

பாடியவர் : ஜாசி கிஃப்ட் (லஜ்ஜாவதியே புகழ்)
இசை : வித்யாசாகர்
படம் : மொழி


Get Your Own Music Player at Music Plugin

ரவிசங்கருக்கு மீண்டும் ஒரு நன்றி.

Sunday, March 04, 2007

மொழி - ஒரு பாராட்டுப் பதிவு

சில நல்ல விசயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்லலாம். ஏற்கனவே சகபதிவர்கள் மொழிப்படத்தை பற்றி எழுதிவிட்டாலும், ஒரு சந்தோசமான படத்தை பார்த்த திருப்தியில் நானும் ஒரு பாராட்டு பதிவை பதிவு செய்கிறேன்.


உடற், மன, வாழ்க்கைக் குறைபாடுகளை கேலி செய்யாமல், மிகைப்படுத்தாமல் அதே சமயம் அவற்றின் வலிகள், வேதனைகளை மக்கள் மனதில் பதியும் வண்ணம் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராதாமோகன் இயக்கத்தில் , பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளிவந்துள்ள் மொழி. படத்தில் குறைவான கதாபாத்திரங்கள், ஆனால் ஒவ்வொன்றும் நிறைவாக நினைவில் நிற்கும்படி இயக்குனர் திரைக்கதை அமைத்துள்ளார்.




இசைக்கலைஞரான கார்த்திக்(பிரிதிவிராஜ்) நண்பர விஜியுடன் (பிரகாஷ்ராஜ்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசிக்கும், வாய் பேச , காது கேள முடியாத அர்ச்சனாவை(ஜோதிகா) நேசிக்க ஆரம்பிக்கிறார்.

கார்த்திக், அர்ச்சனாவின் தோழி ஷீலா(சுவர்ணமால்யா) மூலம் சைகை மொழியையும் கற்றுக் கொண்டு அர்ச்சனாவிடம் இயல்பாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் தனது திருமண விருப்பத்தை கார்த்திக் அர்ச்சனாவிடம் தெரிவிக்க, அர்ச்சனா கார்த்திகை புறக்கணிக்க ஆரம்பிக்கிறார்.
கடைசியில் அர்ச்சனா, கார்த்திக்கை ஏற்ருக்கொண்டாரா இல்லையா என்பதுதான் பிற்பாதி கதை.

மலையாள நடிகர் பிரித்விரரஜ் "கனாகண்டேனில்" வில்லனாக அறிமுகமாகி, "பாரிஜாதத்தில் கதாநாயகனாகி, மொழியினில் பிரகாசிக்கிறார். மம்மூட்டி, ஜெயராமை தொடர்ந்து இவரும் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படுவார்.

ஜோதிகாவைப் பற்றி சொல்வதற்கில்லை, படம் பாருங்கள், பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து மொழி வரை எத்தனை பரிமாணங்கள். ஒரு ஹை-கிளாஸ் நடிப்போடு அவர் திரையுலகிலிருந்து விடைபெறுவது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம்.


வேற்று மொழி நகைச்சுவை நடிகர்கள் , தமிழில் ரசிக்கும்படி நடித்ததில்லை என்ற குறையை தெலுங்கு முன்னனி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்த் தீர்த்து வைத்து விட்டார். கடைசியில் இவர் பிரித்விராஜிடம் கரப்பான் பூச்சியைக் காட்டுவது இயல்பான நகைச்சுவை.

எம்.எஸ் பாஸ்கர் "ஞானப்பிரகாஷம்" புரொபெஷர் ஞானப்பிரகாஷம் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதிலிருந்த்து அழுது தீர்த்து தனது மன சோகத்தை விட்டு விலகும் காட்சி வரைக் கலக்கி இருக்கிறார்.

பிரகாஷ்ராஜ் சுவர்ணமால்யா வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.

எல்லாக் கதாபாத்திரங்களையும் கண்ணியமானதாக திரையில் உலவ விட்டுள்ள இயக்குன்ரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதனி மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்திவ்டின்
மனிதனுக்கு மொழியே தேவையில்லை"

வைரமுத்து பாடற் வரிகள் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அழகூட்ட முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.

"குறைகளையும் மீறி தைரியத்துடன் வாழ்றவங்களை பார்க்கும்போது வாழ்க்கையிலே சுவாரசியம்,வாழனும்கிற ஆசை இன்னும் அதிகமாகுது"

விஜியின் வசனங்கள் , ஆங்கில கலப்பு அதிகம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் புரியும்படியா அழகான, கருத்துள்ள வசனங்கள்.


சிறப்பு வல்லமை பெற்றவர்களை கதையின் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் (என் மனவானில், காசி, பேரழகன், பட்டியல்) இந்த படம் சிறந்தது எனக் கூறலாம்.

பிரகாஷ்ராஜ் ஏன் அதிகப்படியான படங்களில் நடிக்கிறார் என்ற வருத்தமிருந்தது உண்டு. ஆனால் இது போன்ற நல்ல படங்களை எடுக்க, "பாசிட்டிவ்" எண்ணங்களை விதைக்கும் இயக்குநர்களை ஊக்குவிக்க அவருக்கு தேவையான பொருளை சம்பாதிக்க எவ்வளவு மசாலா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

இசை, இந்தப் படத்திற்கு பெரிய பலம், பின்னணி இசையும் பாடல் இசையும் அருமையாக உள்ளது.

'காற்றின் இசை" , "செவ்வானம் சேலைக் கட்டி " இரு பாடற்களும் படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, காதுக்கு இனிமை.

படம் ஒவ்வொரு பிரேமிலும் அழகாத் தெரிய வைத்த ஒளிபதிவு இயக்குனருக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

இது நகைச்சுவைப் படமல்ல, செண்டிமெண்டு படமும் அல்ல,
மகிழ்ச்சியான படம், சந்தோச எண்ணங்களை , சக மனிதனை கண்ணியமாக நடத்த , நினைக்கத் தூண்டும் ஒரு அற்புதமான படம்.

நிச்சயம் பாருங்கள் , ஒரு முறை அல்ல இரண்டு முறை.