Monday, March 26, 2007

2023 - குட்டிக்கதை

ஜெர்மனிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா படுமோசமாக விளையாடி தோற்றதனால் அடுத்த தகுதி சுற்றுக்கு உறுதியாக முன்னேற இயலாத சூழலுக்கு ஆளாகியுள்ளது என அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக இருந்து கொண்டிருந்தது. ஒரு வேளை அப்படி முன்னேறவிட்டால், அணியில் சில முக்கிய தலைகள் உருளும் என ஆருடம் கூறிக்கொண்டிருந்தனர் பழைய ஆட்டக்காரர்கள்.

முன்னாள் கேப்டன் சிங்கிளி, கோச் தான் தோல்விக்கு பொறுப்பு என விளக்கமாக ஆங்கிலத் தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்.ஜெர்மனியின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என வாண்டுல்கர் அதனது போட்டி சேனலில் அலறிக்கொண்டிருந்தார்.

முன்னாள் டொக்கு பேட்ஸ்மேன் ஆர்யா டைம்ஸ் ஆஃப் ப்யூச்சரில், வெற்றியும் தோல்வியும் ஜகஜம் என தத்துவ மழை பொழிந்து கொண்டிருந்தார்.

சாவு மேளம் வைத்து கிரிக்கெட் வீரர்களின் உருவ பொம்மைகளை சவ ஊர்வலமாக எடுத்து செல்வதை ஒரு ஹிந்தி சேனல் காட்டி கொண்டிருந்தது.

அடுத்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தயாராவதைப் பற்றி ஒரு எஸ்.எம்.எஸ் சர்வேயும் போய்க்கொண்டிருந்தது.

"கார்த்தி, நீ எத்தனை வருஷமானாலும் திருந்த வே மாட்டே!!" என சொல்லிக்கொண்டே காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள் என் மனைவி ஜெனி.

"இந்த முறை இவனுங்க சொதப்பிட்டானுங்க, கத்துக்குட்டிப் பசங்க ஜெர்மனி, அவனுங்ககிட்ட தோத்து மானம் போச்சு, இனிமேல் கிரிக்கெட்டுக்கு ஒரு முழுக்கு"

"கார்த்தி, நீ ஒரு லூசு, உன்னை லவ் பண்ணக் காலத்திலேந்து இனி கிரிக்கேட் பார்க்க மாட்டேன்னு ஒவ்வொரு தடவையும் இந்தியா தோக்கிறப்ப சொல்ற,அதுக்கு அப்புறம் மேட்ச் போட்டா ஆபிஸ்ல லீவ் போட்டு வந்து உடகார்ந்துடுற"

"இல்லை ஜெனி, சத்தியமா இனி மேட்ச் பார்க்க மாட்டேன்," சொல்லிக்கொண்டிருக்கும்போதே

ஒரு சேனலில் உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு மயிரிழை வாய்ப்பு உள்ளது எனக் கூறக் கேட்டு டீவியை கவனிக்கலானேன்.

ஒரு வேளை பிலிப்பைன்ஸ்,ஜெர்மனி அணியை தோற்கடித்தால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ம்ம்ம், நாம பிலிப்பைன்ஸ்க்கு எதிராக 623 ரன்கள் எடுத்தோம், பிலிப்பைன்ஸ் ஜெர்மனியை ஜெயிப்பது கஷ்டம் தான், இருந்தாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை.

"ஜெனி, இந்த ஒரு மேட்ச் மட்டும் பார்த்துக்கிறேன்" எனக் கெஞ்சலுடன் ஜெனியைப் பார்த்தேன்.

0 பின்னூட்டங்கள்/Comments: