Wednesday, December 31, 2008

வாழும் வரை போராடு உன்னால் முடியும் தம்பி அகரம் இப்போ சிகரம் ஆச்சு

மற்றுமொரு இனிய வருடம் துவக்கம். நேற்றை விட இன்று மேலும் நலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் , அனைவருக்கும் எனது மனதார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டு நாளை அருமையான மூன்று பாடல்களுடன் தொடங்குங்கள்

வாழும் வரை போராடு



உன்னால் முடியும் தம்பி



அகரம் இப்போ சிகரம் ஆச்சு

Tuesday, December 16, 2008

திரைப்பார்வை - பொம்மலாட்டம் , சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கான இலக்கணம்

தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையான படங்கள் வெளிவருவது மிகவும் அரிது. அப்படியே அத்திப்பூத்தாற்போல வந்தாலும் அது பெரும்பாலும் கவர்ச்சிப்பட வரிசையில் சேர்ந்துவிடுவது கசப்பான உண்மை. திணிக்கப்பட்ட மசாலத்தனங்கள் இல்லாமல் அழகான ,விருவிருப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆரம்பகாலங்களில் சிகப்புரோஜாக்கள் , ,டிக்டிக்டிக் போன்ற படங்களின் வாயிலாக நகர்ப்புறம் சார்ந்த கிரைம் திரில்லர் படங்களை கிராமத்தானாலும் திரையில் தரமுடியும் எனக்காட்டிய பாரதிராஜா, கடைசியாக“கண்களால் கைது செய்” படத்தை இதே வகையில் தரமுயன்று வெற்றியை பெற முடியவில்லை.



அவரின் மூன்றாம் தலைமுறை இயக்குனர்கள் கோலேச்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்து பெரும் சோதனைகளைக் கடந்து நானாபடேகர்,அர்ஜுன்,ரஞ்சிதா,ருக்மிணி, காஜல் அகர்வால் நடிக்க தெற்கத்திக் கலைக்கூடம் தயாரிப்பில் வெளிந்திருக்கும் பொம்மலாட்டம் படத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்து இருக்கிறார்.

வழக்கமாக திரில்லர் படங்களில் வரும் இலக்கணமான ”நல்லவர்” என அறியப்படும் கதாபாத்திரம் இறுதியில் ”குற்றம் புரிந்தவர்” என வழக்கமாக முடிக்கப்படுவது போல அல்லாமல் படம் முழுவதும் குற்றம் புரிந்தவர் என சந்தேகிக்கப்படும்

கதையின் நாயகன் கடைசியில் அப்படி இல்லை எனக் காட்டியதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்க முடியாத முடிவுக்காட்சியை வைத்து பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார். படம் அதிர்ச்சி மதிப்பீடுகளை கொடூரம் இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் காட்டியமைக்கு பாரதிராஜாவிற்கு நிறைய நன்றிகள். படம் பார்த்து முடித்தப்பின்னர் அட இப்படிக்கூட யோசிக்க முடியுமா என வியப்பைக் கொடுக்கும் வகையில் படத்தின் முடிவு இருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சமே.




கதையின் நாயகன் பிரபல இயக்குனர் ராணா(நானாபடேகர்) தன் படத்தில் அறிமுகமாகி இருக்கும் கதாநாயகியை தனது காருடன் மலையுச்சியில் இருந்து தள்ளிவிட்டு, அதை விபத்தாக ஜோடிப்பதுடன் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. அது விபத்தல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டக் கொலை என சந்தேகப்படும் சிபிஐ , விவேக் வர்மாவை(அர்ஜுன்) விசாரணைக்கு அனுப்புகிறது. விவேக் வர்மா , ராணாவின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்கனவே நடந்த கொலைகளைப்பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். வலுவான சந்தேகங்களுடன் குற்றஞ்சாட்டப்படும் நானாபடேகர் நீதிமன்றத்தில் போதிய சாட்சிகள் இல்லாமையால் விடுவிக்கப்படுகிறார்.இறுதியில் விடாப்பிடியாக சிக்கலுண்ட அடிநுனியை சிபிஐ அதிகாரி விவேக் வர்மா கண்டுபிடிக்கும்பொழுது படம்பார்ப்பவர்களும் இருக்கையின் நுனிக்குவருவது படத்தின் தனிச்சிறப்பு.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் கடைசியாக அடையாளம் காட்டப்படும் குற்றவாளி , படம் ஆரம்பிக்கபடும் சில நிமிடங்களிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது இவ்வகையானப் படங்களுக்கு ஒரு இலக்கணம். படம் பார்க்கும்பொழுது கொலைகளுக்கு காரணம் , ராணாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் விவேக் வர்மாவின் காதலியாக இருப்பாரோ, ராணாவின் மனைவியாய் இருப்பாரோ, படத்தின் தயாரிப்பாளராய் வருபவரோ , விவேக் வர்மாவே கொலையாளியோ என ஊகங்கள் பார்வையாளருக்கு ஏற்படும் வகையில் அமைத்து தடாலடியாக ஒரு முடிவை வைத்து அசத்தி இருக்கிறார் பாரதிராஜா. பெரும்பாலான படங்களில் நடுவில் திடீரென ஒரு கதாபாத்திரம் நுழைந்து அல்லது நுழைக்கப்பட்டு
முடிவு அமைக்கப்படும். முடிவுகளுக்கும் பழிவாங்குதலைத் தவிர போதிய வலுவான காரணம் இருக்காது. ஆனால் வலுவான காரணத்துடன் ஆரம்ப முடிச்சிலேயே கதையை முடித்து த்ரில்ல்ர் படங்களுக்கு மேலும் ஒரு பரிமாணம் சேர்த்துள்ளார் பாரதிராஜா.

மாற்றங்கள் தேவையானதுதான், அதே மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்பொழுது ஏற்படும் விளைவுகளை நேர்த்தியாக திரையில் வடிவமைத்து, த்ரில்லர் வகையிலான படங்கள் சமீப காலமாக இல்லை என்றக்குறையைத் தீர்த்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா.

த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் தடையாக இருந்தாலும், பொம்மலாட்டம் படத்தில் கதையுடன் ஒன்றி வருவது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. நானாபடேகரின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றும் பாரதிராஜாவை நினைவுப்படுத்துகின்றன. உண்மையில்
பாரதிராஜா இப்படித்தான் படப்பிடிப்புத்தளத்தில் இருப்பாரோ என நினைக்கத் தோன்றுகிறது. நிழல்கள் ரவியின் குரல் நானாபடேகருக்குப் பாந்தமாக பொருந்துகிறது. அமைதிப்புயலாக அர்ஜுன் , அனேகமாக அர்ஜுன் நடித்து சண்டைக் காட்சி இல்லாத படம் இதுவொன்றாகத்தான் இருக்கும்.



கதையின் நாயகி த்ரிஷ்னா(ருக்மிணி) பாரதிராஜாவின் “ரா” வரிசை நாயகிகளில் நல்லதொரு நடிகையாக இடம்பிடிப்பார் என நம்பலாம். பயம்,தயக்கம்,ஆதரவைத் தேடும் கண்கள் என மற்றொரு நடிக்கத் தெரிந்த நடிகையாக வலம் வருவார். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். அர்ஜுனுடன் ஒரு டூயட் பாடல். இவர் கொலைகாரராக இருப்பாரோ எனக் கதையோட்டத்திற்கு பயன்படுகிறார். வணிகரீதியாக இணைக்கப்பட்டுள்ள விவேக் நகைச்சுவைப்பகுதி கதையுடன் ஒட்டிவருவது சுவாரசியமாக இருந்தது. சமூகத்தில் விவாதிக்க விரும்பப்படாத விசயங்களை மணிவண்ணன் கதாபாத்திரத்தின் மூலம் நேரிடையாகக் காட்டி இருப்பது இயக்குனரின் துணிச்சல்.

”ரசீத் உன் பேர் தாண்டா காரணம் உனக்கு லண்டனுக்கு விசாக் கிடைக்க மாட்டேங்குது”, ”பிரகாஷ்ராஜ் வேண்டாம், அவரு ஒரே பேமெண்ட் கேட்பாரு” என சுவாரசியமான சில வசனங்களையும் படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளது.

இந்தி உதட்டசைவுகள் வெளிப்படையாகத் தெரிவது படத்தில் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியும் ஒரு குறை. உபகதாபாத்திரங்கள் நானாபடேகருடன் வரும் காட்சிகள் தனித்தனியாக எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. படத்தில் தயாரிப்பாளராய் வரும் நபர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, தயாரிப்பாளர் ஆனவர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருப்பார்களோ என்பதை கண்முன் நிறுத்துகிறார்.

படத்திற்கு இசை ஹிமேஷ் ரேஷமய்யா, கலை சாபுசிரில் , ஒளிப்பதிவு - பி.கண்ணன்



“சினிமா” என்ற பெயரில் இந்தியில் வெளியாகப்போகும் இப்படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என ஆவலை இந்தத் தமிழ் பதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படம் வணிகரீதியாக தமிழிலும் இந்தியிலும் வெற்றிபெற்று, ”எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா” மீண்டும் ஒருமுறை திரையுலகில் வலம் வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

புகைப்படங்கள் நன்றி : இண்டியாகிலிட்ஸ்.கோம்

Friday, December 12, 2008

யாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதை

வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை. அவளுக்கு நான் கொடுத்திருக்கும் கவுரவம் என்னுடைய கடைசி காதலி என்பதுதான். அவளுக்குப்பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை, ஏனெனில் நான் காதலிக்கப்பட்டது அவளிடம் மட்டும் தான். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது எவ்வளவு சுகம் தெரியுமா!! உலகத்திலேயே வேகமான விடயம் இந்த நேரம் தான்... சடுதியில் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டனவே!! என்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்தின் போது நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்ததை மனம் அசை போடுவது என்னையும் அறியாமல் நான் விமான இருக்கையில் வந்தமர்ந்ததும் நடக்கும்.

வெற்றிகளை நான் துரத்துகின்றேனா...இல்லை வெற்றிகள் என்னைத் துரத்துகின்றனவா என்றதொரு நல்ல நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு அவள்தான் காரணம். எனக்கான பெண் என்று நான் நினைத்திருந்தவர்களில் என்னிடம் மிகக்குறைந்த காலம் இருந்தவள் அவள் தான். இருந்தாலும் அவள் வந்தபின் அவளின் நினைவு என்னை ஆக்கிரமிக்காத நாளே இல்லை..

நிறைய விடயங்களின் உயிர்ப்பு, கிடைத்தலை விட கிடைக்காமல் இருக்கும்போது தான் அதிகம் உணரப்படுகிறது. யுத்தமின்றி ரத்தமின்றி நாட்டுப்பிரிவினைகள் எப்படி சாத்தியமில்லையோ அது போல, வன்மமான வார்த்தைகள் இல்லாமல் காதல் பிரிவும் சாத்தியமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்ததை அவளின் அந்தக் கண்ணிர் உப்புக்கரித்த கடைசி முத்தம் மாற்றியது. சாத்வீகமாக பிரிந்த என்னுடைய ஒரே காதல் அவளுடையதுதான். அவளுக்கான நினைவுகளை மறுவாசிப்பு செய்து முடிப்பதற்கு முன்பாகவே விமானம் பிராங்க்பர்ட்டை அடைந்தது. வழக்கமான விமான நிலைய சோதனைகளை முடித்தாகியது. ஒரு மணி நேரம் காத்திருப்புக்க்குப்பின் கோபன்ஹேகனுக்கான விமானம் பிடித்தாகவேண்டும், அவளுக்கான எண்ண அலைகள், இளையராஜா பாடல்களை காதில் கேட்டுக்கொண்டே தொடர்ந்தது. ஆங்காங்கே சில தமிழ் குரல்கள் பாடலையும் மீறி காதில் விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு குரல் மிகவும் பரிச்சயமான குரல். ஆமாம்.. என்னுடைய இருக்கையில் இருந்து சில அடிகள் தூரத்தில் அவளேதான். கையில் குழந்தையுடன் குடும்பம் சகிதமாய்.. ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்ததை விட சற்று குண்டாகி இருந்தாள். பேசலாம் என மனம் ஆசைப்பட்டாலும், அவளின் கடைசி வார்த்தைகள்

"கார்த்தி, உனக்காக தினமும் ஒரு நொடியாவது வேண்டிக்கொள்வேன், ஆனால் கல்யாணத்துக்கு பின்னாடி உன்னை எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியல, இனிமேல் நாம பார்க்கவேண்டாம், பேசவேண்டாம், ஈமெயில்ஸ், எதுவுமே வேண்டாம்" நினைவுக்கு வந்து எச்சரித்தது.

என்னை அவள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வேறு இடம் பார்க்க எத்தனித்தபோது, "ஹேய் கார்த்தி " குரல், அவளின் குரல் .. ஐந்துவருடம் பின்னோக்கி சென்றதுபோல ஒரு உணர்வு.

"என்னங்க , நான் அடிக்கடி சொல்லுவேன்ல, கார்த்தி, அது இவர் தான்" ஐந்துவருடங்கள் "ன்" விகுதியை "ர்" விகுதியாக மாற்றிஇருப்பது இயல்புதான்.

நான் அவளின் கணவருக்கு வணக்க்ம் சொல்லிவிட்டு "எப்படி இருக்கீங்க" இரண்டுபேருக்கும் பொதுவாக கேட்டேன்.

"நாங்க ஜம்முன்னு இருக்கோம் கார்த்தி, நீங்க எப்படி இருக்கீங்க, வொய்ஃப், குழந்தைங்க"

"ம்ம் எல்லோரும் நல்லா இருக்காங்க, ஒரு பொண்ணு, ஒரு பையன்"

"பேரு எல்லாம் சொல்ல மாட்டிங்களோ!!" அதே கிண்டல் தொனி. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கணவனின் எதிரில் தன்னுடைய பழைய தோழமையை சினேகம் பாராட்டுவது.
நான் சிரித்துக்கொண்டே "வளன் பையன் பேரு, வள்ளி பொண்ணு பேரு"

"நல்ல தமிழ் பேருங்க" இது அவளின் கணவன்.

"எந்த பிளைட்டுக்கு வெயிட்டிங்"

"சியாட்டில் கார்த்தி, இன்னும் ஏழுமணி நேரம் இருக்கு"

என்னுடைய கோபன்ஹேகன் விமானத்திற்கான முதற் அறிவிப்பு வர, வேண்டும் என்றே சீக்கிரமாக விடைபெற்றுக்கொண்டு , நகரப்பேருந்துகளை விட பாடாவதியாக இருந்த கோபன்ஹேகனுக்கான விமானத்தில் ஏறி அமர்ந்தேன். அதுவரை என் கண்களில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் குபுக்கென வெளிவந்தது. பொய்யில்லாமல் பழகியது அவளிடம் மட்டுமே. ஆனால் அவளிடமும் இன்று ஒரு பொய் சொல்லியாகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் உண்டு என்பதுதான் அந்த பொய். நட்பான கணவன், அழகான குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவளிடம் , உன் நினைவுகள் மட்டுமே என்னை வழிநடத்தி செல்கின்றன, உன்னிடத்தில் வேறு ஒருத்தியை வைத்துப் பார்க்க மனம் வரவில்லை எனஎப்படி சொல்ல முடியும். அது அவளைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடாதா? நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொண்ட பொய் , அவளுக்கு நேர்ந்திருக்கக்கூடிய சங்கடத்தை தவிர்த்தது என்ற எண்ணம் என் மனபாரத்தை சற்றுக்குறைத்தது. அவளுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் என் சந்திப்பு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்திவிடாது என்பது திருப்தியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது ஒரு வியப்பு. அவளிடம் இருந்து தமிழில் ஒரு மின்னஞ்சல். அதுவும் நான் அவளுக்காக ஏற்படுத்திக்கொடுத்து இருந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து. இன்னும் அதை செயலில் வைத்திருக்கிறாள் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.. முன்பு அவள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் அவளின் பெயரை மின்னஞ்சலின் முடிவில் எழுத மாட்டாள். இதிலும் அவள் பெயரை இடவில்லை. அந்த மின்னஞ்சல் இதுதான்,

ooOoo

அன்புடன் கார்த்திக்கு,

'பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்' என்ற திருக்குறள் உனக்கு பிடித்த குறள் என நீ அடிக்கடி சொல்லுவாய். நீ உன் குழந்தைகளின் பெயர்கள் அர்ஜுன் , அஞ்சலி என இல்லாமல் வளன்,வள்ளி எனச்சொல்லும்பொழுதே நீ பொய் சொல்லுகிறாய்
எனப்புரிந்தது. எத்தனை வருடங்கள் ஆனாலும் உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியும். நீ எனக்காக சொல்லிய பொய், விரைவில் உண்மையாகாத வரை அது எனக்கான தண்டனையாகவே இருக்கும். ஒருவொருக்கொருவர் தண்டனைக்
கொடுத்துக்கொள்ள மாட்டோம் என்பதுதான் நமது உடன்பாடு என்பதை நான் நினைவுப்படுத்த தேவையில்லை.

பின் குறிப்பு : நீ என்னுடைய குழந்தையின் பெயர் அஞ்சலி எனத் தெரிந்து கொள்ளாமாலேயே போய்விட்டாய்.. பெயருக்கான காரணமும் என் கணவருக்குத் தெரியும்.

ooOoo

சாட்டையடியாக இருந்தது அவளின் வார்த்தைகள். என்னை நேசிக்கும் உறவுக்கு எத்தனைப் பெரிய தண்டனை தர இருந்தேன். பெருமூச்சுவிட்டு விட்டு எனது கட்டிடத்தை விட்டு வெளியே வந்தேன்.. பனிமழையில் நனைந்தபடி, எனது அலுவலத்தின் இன்னொரு கட்டிடத்தை நோக்கி கேத்ரீனாவைப் பார்க்க நடந்தேன். கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக கேத்ரீனா என்னைத் திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறாள். கேத்ரீனாவிடம் "யாக் அல்ஸ்கார் தீக்(jag älskar dig)" என சுவிடீஷ் மொழியில் சொல்லி எனது சம்மதத்தை தெரிவிக்கத்தான் கேத்ரீனாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.. "யாக் அல்ஸ்கார் தீக்" என்றால் சுவீடிஷ் மொழியில் நான் உன்னைக் காதலிக்கிறேன் எனப்பொருள்.


---------------------
தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்தது

Sunday, December 07, 2008

சுவீடனில் மேற்படிப்பு : சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது ,முந்துங்கள் மாணவ நண்பர்களே

டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.


சுவீடனில் இந்திய பொறியியல்,அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.

சுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.

அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே!! விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html

விண்ணப்ப வேலைகளை ஆரம்பியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்

நான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

இதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.

Monday, November 17, 2008

கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும் - சிறுகதை

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.

கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.

ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.

அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்.

"பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை.

"தூங்கிட்டு இருக்கா"

"லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?"

"சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.

அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்.

"கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.

காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்.

"பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"

மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"

மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

"நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?"

"வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்"

"உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்"

"ம்ம்ம்ம்"

"வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."

பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்"

"ம்ம்ம்ம் எடுத்துக்கோ"

மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

"என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"

நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்.

"கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற"

"அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"

கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.

-----------------------------முடிவு---------------

இவ்வார தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்த சிறுகதை. தமிழோவியம் இணைய இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்

Friday, October 10, 2008

சுவீடனில் படிக்கலாம் வாங்க, படிப்பு இலவசம், ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்

டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.


சுவீடனில் இந்திய பொறியியல்,அறிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.

சுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.

அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே!! விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html

விண்ணப்ப வேலைகளை ஆரம்பியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்

நான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்
--------------------

இதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.

ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து. டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.

தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்

ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.

சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH),உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ் , லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.

(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. )

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல , சுவீடனில் படிக்க Studera என்ன மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதற்கான இணையத்தளம் www.studera.nu ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். https://www.studera.nu/studera/241.html


ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.
(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)

இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலில் அனுப்பவேண்டிய சான்றிதழ்களைப் பற்றிய விபரங்களை இந்தச்சுட்டியில் வாசிக்கலாம்.

https://www.studera.nu/studera/1175.html

சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.

செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.

ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.

படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால் , இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.

கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
http://www.studyinsweden.se/templates/cs/Article____5001.aspx


மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.


இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.

இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.

முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த ‘மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.

சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.

அதி முக்கிய இணையத்தளங்கள்;

1. Studyinsweden.se, சுவீடனில் மேற்படிப்புப்பற்றிய அனைத்து விபரங்களும் அறிய

2. சுவீடன் பல்கலைகழங்களுக்கு விண்ணப்பிக்கும் இணையத்தளம் Studera.nu

3. விசா விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் ஏனைய குடியேற்ற சட்டதிட்டங்கள் பற்றி அறிய

4. Blekinge Institute of Technology யில் மென்பொருள் சம்பந்தமாக படிக்க விரும்புவர்கள் இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பருக்கான அறிவுப்பு விரைவில் வரும்.

5. இந்த வருடம் விண்ணப்பித்த முறை, அதில் சந்தித்த சங்கடங்கள் ஆகியனவற்றைப்பற்றி விபரமாக இந்தத் தளத்தில் காணலாம்

6. www.facebook.com என்ற சமுதாய இணையத்தளத்தில் இந்த வருடம் சுவீடனுக்கு விண்ணப்பித்தவர்களின் அனுபவங்களை வாசிக்கலாம். இது வரும் வருடம் விண்ணப்பிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.ஆரம்பம் முதல் கடைசி விசா முடியும் வரை அனைத்து விபரங்களும் தெளிவாக இருக்கும்.

-------------
ஸ்டாக்ஹோல்ம் KTH பல்கலைகழகத்தில்
ICT Entrepreneurship படிக்கும் சாந்தகுமார் கீழ்கண்ட தகவல்களை தனி மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி இருந்தார்.
சென்னையில் AISEC என்ற மாணவர் அமைப்பு இருக்கின்றது.. இதன் மூலமாக இந்தியாவில் படிப்பவர்கள் வெளிநாடுகளில் Internship வாங்க இயலும் .

அதன் சுட்டிகள் கீழே


http://www.aiesecindia.org/

http://www.aiesec.org

http://www.youtube.com/watch?v=dbg3_XAH31o


Statement of Purpose எழுதுவதற்கான உதவியான கையேட்டின் சுட்டி கீழே

http://www.cs.cmu.edu/~harchol/gradschooltalk.pdf

சுவீடனில் இருக்கும் தமிழ் அன்பர்களின் ஆர்குட் குழுமம் http://www.orkut.com/Main#Community.aspx?cmm=71389585 ஆலோசனை , உதவிக்கு தயங்காமல் இந்த குழும தமிழ் நண்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஸ்டாக்ஹோல்ம் இல் தங்குவதற்கு இப்பொழுதே முன் பதிவு செய்ய இந்த தளத்தை சொடுக்கவும். www.sssb.se
நமக்கு விருப்பமான மாணவர் விடுதி கிடைக்க பொதுவாக 400 நாட்களாகும், இப்பொழுதே முன்பதிவு செய்துவைத்துக்கொள்வது பேருதவியாக இருக்கும்

Wednesday, October 08, 2008

சினிமா டைட்டில் கார்டுகளும் சில சுவாரசியங்களும்

எத்தனை சுமாரானப் படமாக இருந்தாலும் அந்தப்படத்தின் டைட்டில் போடுவதில் இருந்து பார்க்கவில்லை என்றால் படம் பார்த்த ஒரு நிறைவு இருக்காது. பெரிய கதாநாயகர்கள் என்றால் அவர்களுக்கே உரிய பில்டப்புடனும் அவர்களின் பெயர் போடப்படும். முன்னனி இயக்குனர்கள் ஏதாவது ஒரு பஞ்சிங் காட்சியில் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என போடுவார்கள். நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படங்களில் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என டைட்டிலை ஆரம்பிப்பார்கள்.

யுடியூப் தளத்தின் வாயிலாக சிலபடங்களின் டைட்டில்களை உற்றுக்கவனித்ததில் சில சுவாரசியமான விசயங்கள் தட்டுப்பட்டன.


மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்தில், அபிஷேக்பச்சன் கதாநாயகனாக இருந்தாலும் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் முதலாவதாக வரும்.

நாயகன் சல்மான்கான் பெயருக்கு முன்னமே நாயகி மாதுரி தீக்‌ஷித்தின் பெயர் ஹம் ஆப் ஹெய்ன் கோன் என்றப்படத்தில் வரும்.

இதே போல தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைபாயுதே' திரைப்படம், ஷாத் அலி இயக்க விவேக் ஒபராய்,ராணி முகர்ஜி நடிக்க சாத்தியா என எடுக்கப்பட்ட பொழுது ராணிமுகர்ஜியின் பெயர் விவேக் ஒபராயிற்கு முன்னர் வரும்.

இதேப்படத்தின் தமிழ் வடிவத்தில் கதை ஆர்.செல்வராஜ் மற்றும் மணிரத்னம் எனக் காட்டுவார்கள்.

தமிழ் டைட்டில் காட்சி இங்கே



ஆனால் இந்தியில் மணிரத்னம் பெயர் மட்டுமே வரும். மூல தமிழ் வடிவமும் இந்திவடிவமும் காட்சிக்கு காட்சி அப்படியே இருக்கும்பொழுது எப்படி ஆர்.செல்வராஜ் பெயர் விட்டுப்போனது என தெரியவில்லை.

இந்தி டைட்டில் காட்சி இங்கே

Monday, September 22, 2008

சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான் - ஒரு நிமிடக்கதை

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் எனக்கு அறிமுகமான ஈரானியப் பெண் உட்கார்ந்திருந்தாள்.கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தவள் என்னைப்பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். அவள் கையில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததால், பேச்சை ஆரம்பிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது.

அவளிடம் இருந்து சில அடி இடைவெளிகள் விட்டு அமர்ந்துகொண்டு “அரைமணி நேரம் போகவேண்டுமே!!! இந்த பெண் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு என்னுடன் பேசக்கூடாதா என யோசித்துக்கொண்டே, கைபேசியில் இருந்த கீர்த்தனாவின் பழைய குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.

எங்களுக்குப்பின்னால் இருந்த பெஞ்சில் இருந்து அழுகை கலந்த சிணுங்கல்கள் வர,திரும்பிப்பார்க்கலாம் என நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன். ஒரு ஆணின் குரல் மட்டும் ஸ்விடீஷில் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க,மற்றொரு குரல் அழுகை விசும்பலுடன் இருந்தது. முன்னொருமுறை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், கீர்த்தனாவின் அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானம் செய்த முயற்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன. கீர்த்தனாவிற்கு முக்கின் நுனிமேல் கோபம் வரும். மன்னிப்புப் படலத்தை ஆரம்பித்தால், பனி போல உருகி ஒரு குழந்தையைப்போல மாறிவிடுவாள்.

பின்னால் இருந்து வரும் சிணுங்கல்களை அந்த ஈரானியப் பெண் கவனிக்கிறாளா எனப்பார்த்தேன்.ம்ஹூம் அவள் காதில் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாள். நேரம் 8.45 யை நெருங்க வேறுசிலரும் வெளியே அடிக்கும் குளிரின் தாக்கத்தை தவிர்க்க காத்திருப்பு அறையினுள் வந்து உட்கார்ந்தார்கள். சிணுங்கல் சத்தம் போய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டன போல, யாரும் அவர்களை ஒரு பொருட்டாய் பார்க்கவே இல்லை.

கண்ணாடி சன்னல் வழியாக, பேருந்து வருவது தெரிய, ஈரானியப் பெண் எழுந்தாள். அவளுடன் நானும் எழுந்தேன். இந்த நாட்டில் இப்படி பொது இடத்தில் காதல் இயல்பானதென்றாலும், எனக்கு முதன்முறை என்பதாலும் ,ஒரு ஆர்வத்தில் அந்த அறையை விட்டு வெளியே வரும்முன் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன், அட அவர்கள் இருவரும் ஆண்கள்.

---

பின்குறிப்பு : பேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.

Sunday, September 21, 2008

கீர்த்தனா சிறுகதையும் , Real கீர்த்தனாவின் மாற்று முடிவும்

திரைப்படங்களில் சோக முடிவுகள் , ரசிகர்களால் ஜீரணிக்க இயலாத முடிவுகள் இருக்கும் படங்கள் வெளியான பின் புதிய முடிவை இணைத்து திரையிடலைத் தொடருவார்கள். உதாரணமாக முகவரி,கிரீடம் திரைப்படங்களில் அஜீத் இறுதியில் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று இருப்பதாக முடிவை மாற்றி இருப்பார்கள். காக்க காக்க திரைப்படத்தின் குறுந்தகடு வடிவில் ஜோதிகா உயிரோடு இருப்பது போல இறுதிக் காட்சியையும் இணைத்திருப்பார்கள். முடிவு எதுவாக இருந்தாலும் பின்னாளில் முடிவை மாற்றுவது எனக்கு ஏற்பு உடையது அல்ல.

சில காலங்களுக்கு முன்னால் கதையின் முடிவை மாற்றச்சொல்லி யாரேனும் கேட்டிருந்தால், முடிவை ஏன் மாற்றமாட்டேன் என பெரிய விளக்கமெல்லாம் கொடுப்பேன். ஆனால் . இப்பொழுது என்னுடைய சென்றக் கதையின் முடிவை மாற்றச்சொல்லிக் கேட்பது கீர்த்தனா. என் வாழ்வில் இந்தக் காலக்கட்டத்தில் என் வாழ்வில் மிகப்பெரும்பங்கு வகிக்கும் கீர்த்தனா கேட்கும்பொழுது மறுக்க தோணவில்லை.

தசாவதாரம் படத்தில் பஞ்சாபி கமலஹாசன் சொல்லுவார்,அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து ”பாட்டுதான் என் உயிர்னு சொல்லுவேன், இவளைப்பார்க்காமல் இருந்திருந்தால்” எனச்சொல்லிவிட்டு “பாட்டு என் உயிர் இல்லை டாக்டர், அது என் தொழில்..இவதான், என் பேமிலி ஜிந்தஹி, என் லைஃப்” என தொடர்வார்.

இதோ அவள் பரிந்துரைத்த முடிவுடன் முழுக்கதையும் கீழே..
-----
பிடித்தமான விசயங்கள் கிடைத்தவுடன் அதன்மேல் இருக்கும் சுவாரசியத்தைக் குறைத்துக்கொள்ளும் மனோபாவத்துடனேயே இருந்து வந்த என்னை நேசிப்பின் சுவாரசியத்தை , விருப்பப்பட்ட விசயம் கிடைத்தபின்னரும் உணரச்செய்தவள் கீர்த்தனா. பொதுவாக நான் நேசிக்க விரும்பும் பெண்கள் என்னை நேசிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கான நேசம் முந்தையநாளைவிட மறுநாள் குறைவாகவே இருக்கும்படியே அமைந்துவிடும். அது முன்பு ஜெனியாக இருக்கட்டும், ஜெனியை விட என் மேல் அதிக மரியாதை வைத்திருந்த ரம்யாவாகட்டும். ஆனால் கீர்த்தனா எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக என் வாழ்வில் வந்திருக்கிறாள். எனக்காக கடவுள் இந்த உலகிற்கு அனுப்பிவைத்த தேவதை. தேவதையின் அருகாமை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. என் தேவதை கீர்த்தனா என் வாழ்க்கையில் வந்து ஆறு மாதங்களாகிறது.

ஒரு காதல் தோல்வி என்றாலே , திருமணம் வேண்டாம் என மனம் முடிவு செய்யும். எனக்கோ ஒன்றுக்கு இரண்டாக தோல்வி.இந்த தோல்வி இரண்டுக்கும் என் ”I loose interest quickly on things that I love very much ” என்பதே காரணமாக இருந்தாலும் வாழ்க்கையில் இன்னொரு முறை எந்தப்பொண்ணுக்கும் இடம் கொடுக்கக்க்கூடாது என தீர்க்கமான முடிவில் இருந்தபொழுது , என் அம்மாவின் வற்புறுத்தலால் ,கீர்த்தனாவை பெண்பார்க்கப்போனேன். அவளைப்பார்த்த கணம், என்னுடைய முன்முடிவுகள் அனைத்தையும் தூக்கி ஓரவைத்துவிட்டு அம்மாவிடம் சம்மதத்தை சின்ன புன்னகையால் சொல்லிவிட்டேன்.

அடுத்த மாதமே,ஜெனி,ரம்யா உட்பட எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்து, கல்யாணம் சிறப்பாகவே முடிந்தது. வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரத்தொடங்கும் காலக்கட்டத்தில் தான் விதி விளையாடும். விதி வெள்ளை எழுத்தால் வெள்ளைத்தாளில் எழுதப்படுவது என கீர்த்தனா அடிக்கடி சொல்லுவாள்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் , கீர்த்தனா எனக்களித்த முதற்பரிசான தலைக்கவசத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டுபோன என்னால் விதியின் வெள்ளெழுத்துக்களை படிக்க முடிந்தபோது நடுரோட்டில் போட்டிருந்த பூசணிசிதறலில் வண்டி தடுமாறி தலை எங்கோ போய் முட்டியது.

“என்னடா, சேனல் மாத்தனுமா? “ கீர்த்தனா கேட்டுக்கொண்டே வந்து என் படுக்கையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள். கடந்த 4 மாதங்களாக படுத்தப்படுக்கையாக , கைகால்கள் செயலற்று, வாய் பேசும் திறனையும் இழந்து, உயிர் இருந்தும் இல்லாமல் இருக்கும் என்னருகில் இருந்து கவனித்துக்கொண்ட இந்தப் பெண்ணை கடவுள் அனுப்பி வைத்த தேவதை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது சொல்லுங்கள்.

கீர்த்தனாவின் அப்பா வாசுதேவன் வந்திருப்பதை ,அவர் என் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உணர்ந்தேன். ”நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ பாட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க

“கீர்த்தனா, உன் அப்பா வந்திருக்கிறார், வாம்மா” என என் அம்மா வந்து கூப்பிட்டபிறகே போனாள்.

வாசுதேவன் இந்த வாரத்தில் வருவது மூன்றாவது தடவை. அவருக்கு கீர்த்தனாவை தன் வீட்டுக்குகூட்டிப் போய் விடுவதாக அம்மா அப்பாவிடம் கேட்டிருந்தார். என் அம்மா அப்பாவும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

“நீ வாழ வேண்டிய பொண்ணும்மா, நாங்க கார்த்தியைப் பார்த்துக்குறோம்”

”இல்லை அத்தை, நான் போக மாட்டேன்”

“கீர்த்தனா, வீம்பு பன்ணாதே, இது வாழ்க்கை, உன்னைத் தியாகி ஆக்க நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கல?”

“அப்பா, தியாகம் பண்றேன்னு நினைப்பிலேயோ , கடமைக்காகவோ நான் இங்கே இல்லை.. கார்த்தியோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட பாக்கியம்..என்னோட லைஃபோட பர்ப்பஸ் இது தான்... கார்த்தியை எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும், ஆனால் இந்த ரிலேஷன்சிப்போட இண்டன்ஸிட்டி ஜாஸ்திப்பா.. இன்னொரு முறை இப்படி கேட்டுட்டு இந்த வீட்டுப்பக்கம் வராதீங்க”

கீர்த்தனா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டபொழுது இந்த நொடியோ என் உயிரை விட்டுவிட வேண்டும் என நினைத்தேன். பயனில்லாமல் படுக்கையில் இருப்பதனால் எத்தனை பேருக்கு சங்கடம். ஆனால், நான் போய்விட்டால் கீர்த்தனா மகிழ்ச்சியாகவா இருப்பாள்? இல்லையே... காய்கறி போல அசைவன்றி இருந்தாலும், நான் இருக்கிறேன் என்பது மட்டுமே கீர்த்தனாவை இயங்கச் செய்கிறது. நான் செத்துப்போய்விட்டால் நான் என் துன்பங்களில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளலாம்.. ஆனால் காலம் முழுவதும் கீர்த்தனாவை தவிக்க விட்டு அல்லவா போய்விடுவேன். கீர்த்தனாவின் உன்னதம் என் இருப்பில் தான் இந்த உலகத்திற்கு புரியும். நான் சாகமாட்டேன். கீர்த்தனாவின் அன்பு என்னை எழவைக்கும்.

கண்களைத் துடைத்துக்கொண்டே கீர்த்தனா என்னருகில் வந்து “நீ என்னோட இருப்பதுதாண்டா என் வாழ்க்கையின் அர்த்தம், எப்போதும் உன்னைவிட்டு போகமாட்டேண்டா ” சொல்லியபடி என் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டபோது அடுத்த ஜென்மத்தில் நான் இவளுக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். தொலைக்காட்சியில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலஹாசன் தன் அரவணைப்பான கவனிப்பால் சுயநினைவற்று இருக்கும் கதாபாத்திரம் நலமாகும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

--------------

Friday, September 19, 2008

கீர்த்தனா - சிறுகதை

பிடித்தமான விசயங்கள் கிடைத்தவுடன் அதன்மேல் இருக்கும் சுவாரசியத்தைக் குறைத்துக்கொள்ளும் மனோபாவத்துடனேயே இருந்து வந்த என்னை நேசிப்பின் சுவாரசியத்தை , விருப்பப்பட்ட விசயம் கிடைத்தபின்னரும் உணரச்செய்தவள் கீர்த்தனா. பொதுவாக நான் நேசிக்க விரும்பும் பெண்கள் என்னை நேசிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கான நேசம் முந்தையநாளைவிட மறுநாள் குறைவாகவே இருக்கும்படியே அமைந்துவிடும். அது முன்பு ஜெனியாக இருக்கட்டும், ஜெனியை விட என் மேல் அதிக மரியாதை வைத்திருந்த ரம்யாவாகட்டும். ஆனால் கீர்த்தனா எல்லாவற்றிற்கும் விதிவிலக்காக என் வாழ்வில் வந்திருக்கிறாள். எனக்காக கடவுள் இந்த உலகிற்கு அனுப்பிவைத்த தேவதை. தேவதையின் அருகாமை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. என் தேவதை கீர்த்தனா என் வாழ்க்கையில் வந்து ஆறு மாதங்களாகிறது.

ஒரு காதல் தோல்வி என்றாலே , திருமணம் வேண்டாம் என மனம் முடிவு செய்யும். எனக்கோ ஒன்றுக்கு இரண்டாக தோல்வி.இந்த தோல்வி இரண்டுக்கும் என் ”I loose interest quickly on things that I love very much ” என்பதே காரணமாக இருந்தாலும் வாழ்க்கையில் இன்னொரு முறை எந்தப்பொண்ணுக்கும் இடம் கொடுக்கக்க்கூடாது என தீர்க்கமான முடிவில் இருந்தபொழுது , என் அம்மாவின் வற்புறுத்தலால் ,கீர்த்தனாவை பெண்பார்க்கப்போனேன். அவளைப்பார்த்த கணம், என்னுடைய முன்முடிவுகள் அனைத்தையும் தூக்கி ஓரவைத்துவிட்டு அம்மாவிடம் சம்மதத்தை சின்ன புன்னகையால் சொல்லிவிட்டேன்.

அடுத்த மாதமே,ஜெனி,ரம்யா உட்பட எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுத்து, கல்யாணம் சிறப்பாகவே முடிந்தது. வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரத்தொடங்கும் காலக்கட்டத்தில் தான் விதி விளையாடும். விதி வெள்ளை எழுத்தால் வெள்ளைத்தாளில் எழுதப்படுவது என கீர்த்தனா அடிக்கடி சொல்லுவாள்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் , கீர்த்தனா எனக்களித்த முதற்பரிசான தலைக்கவசத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டுபோன என்னால் விதியின் வெள்ளெழுத்துக்களை படிக்க முடிந்தபோது நடுரோட்டில் போட்டிருந்த பூசணிசிதறலில் வண்டி தடுமாறி தலை எங்கோ போய் முட்டியது.

“என்னடா, சேனல் மாத்தனுமா? “ கீர்த்தனா கேட்டுக்கொண்டே வந்து என் படுக்கையின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள். கடந்த 4 மாதங்களாக படுத்தப்படுக்கையாக , கைகால்கள் செயலற்று, வாய் பேசும் திறனையும் இழந்து, உயிர் இருந்தும் இல்லாமல் இருந்து என்னருகில் இருந்து கவனித்துக்கொண்ட இந்தப் பெண்ணை கடவுள் அனுப்பி வைத்த தேவதை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது சொல்லுங்கள்.

கீர்த்தனாவின் அப்பா வாசுதேவன் வந்திருப்பதை ,அவர் என் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு உணர்ந்தேன். ”நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ பாட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க

“கீர்த்தனா, உன் அப்பா வந்திருக்கிறார், வாம்மா” என என் அம்மா வந்து கூப்பிட்டபிறகே போனாள்.

வாசுதேவன் இந்த வாரத்தில் வருவது மூன்றாவது தடவை. அவருக்கு கீர்த்தனாவை தன் வீட்டுக்குகூட்டிப் போய் விடுவதாக அம்மா அப்பாவிடம் கேட்டிருந்தார். என் அம்மா அப்பாவும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

“நீ வாழ வேண்டிய பொண்ணும்மா, நாங்க கார்த்தியைப் பார்த்துக்குறோம்”

”இல்லை அத்தை, நான் போக மாட்டேன்”

“கீர்த்தனா, வீம்பு பன்ணாதே, இது வாழ்க்கை, உன்னைத் தியாகி ஆக்க நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கல?”

“அப்பா, தியாகம் பண்றேன்னு நினைப்பிலேயோ , கடமைக்காகவோ நான் இங்கே இல்லை.. கார்த்தியோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என்னோட பாக்கியம்..என்னோட லைஃபோட பர்ப்பஸ் இது தான்... கார்த்தியை எனக்கு ஆறு மாசமாத்தான் தெரியும், ஆனால் இந்த ரிலேஷன்சிப்போட இண்டன்ஸிட்டி ஜாஸ்திப்பா.. இன்னொரு முறை இப்படி கேட்டுட்டு இந்த வீட்டுப்பக்கம் வராதீங்க” என சொல்லிவிட்டு அறையினுள் நுழையும் முன் கண்களைத்துடைத்துக்கொண்டு , ” எப்போதும் உன்னைவிட்டு போகமாட்டேண்டா ” எனச் சொல்லி என் உயிரற்ற உடலின் நெற்றியில் வாஞ்சையாக முத்தமிட்டபோது சற்று தூரத்தில் அரூபமாக இருந்த என்னுள் சிலிர்ப்பை உணர்ந்தேன்.

அடுத்த ஜென்மத்தில் கீர்த்தனாவிற்கு குழந்தையாகப்பிறக்க வேண்டும், இல்லை இல்லை அது இந்த ஜென்மத்திலேயே நடக்கும். அடுத்த சில நிமிடங்களில் என் வீட்டில் அழுகைக்குரல்கள் அதிகமாக , மன நிம்மதியுடன் காற்றில் கரைந்தேன்.

---

மற்றொரு முடிவைப்படிக்க இங்கேச்சொடுக்கவும்

Thursday, September 18, 2008

Eslöv to Hässleholm பெயர் குழப்பம் (சுவீடன் அனுபவங்கள் - 1 )

சுவீடன் வந்த செப்டம்பர் முதல்வாரத்தில் எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொள்வதற்காக எஸ்லோவ்என்ற ஊர் வரை செல்ல வேண்டியதாய் இருந்தது. ரோன்னிபே என்ற ஊரில் இருந்து இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரயில் பிரயாணம். ஏதோ ஒரு தைரியத்தில் தனியாகவே போய் வாங்கி வந்துவிடலாம் என , ரயிலைப்பிடித்து கிளம்பியாகிவிட்டது.

இந்த ரயில் சுவீடனில் கார்ல்ஸ்க்ரோனா என்ற ஊரில் இருந்து டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன் வழியாக ஹெல்சின்ஹர் என்ற ஊர் வரை செல்வது. சுவீடனின் நாட்டுப்புற அழகை கண்ணாடி சன்னலுக்கு வெளியே ரசித்தபடியே, அடுத்த வருடம் கீர்த்தனாவுடன் இப்படி போகவேண்டும் என்ற எதிர்கால நினைவலைகளுடன் பயணம் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது. ரயிலில் அடுத்த நிலையம் அறிவிப்பு எஸ்லோ என வந்தது. அட நாம் வரவேண்டிய ஊரு 20 நிமிடம் முன்னமே வந்துவிட்டதே என இறங்க ஆயத்தமானேன். இருந்தாலும் மனதில் சின்ன நெருடல்.பக்கத்தில் இருந்தவரிடம் , அடுத்த நிலையம் எஸ்லோவ் ஆ எனக்கேட்டபோது ஆமாம் என அவர் தலையாட்ட நானும் ரயிலை விட்டு இறங்கி ஒரு மரபெஞ்சை பிடித்து அமர்ந்து , ரயில் நகர்வதைப் பார்த்துக்கொண்டே, தலையைத் திருப்பி ரயில் நிலையத்தின் பெயரைப்பார்க்க அது Hässleholm என்று இருந்தது. அடடா, நாம் இறங்க வேண்டிய ஊர் Eslov ஆச்சே என யோசித்துக்கொண்டே, ரயில் பாதையை சரிப்பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் இது எந்த ஊர் எனக்கேட்டபோது அவர்களும் Eslov க்குரிய உச்சரிப்புடனே யே ஊர் பெயரை சொன்னார்கள்.

நான் அந்த ஊரின் பெயரைப்படித்த போது ஹஸ்லஹோம் எனப்படித்தேன். ஸ்வீடிஷ் மொழி உச்சரிப்புப் படி அது எஸ்லஹோ என புரிந்தது. தவறான ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தாலும் பயம் ஏற்படவில்லை. சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.

எனக்கு அப்போது இருந்த ஒரே சந்தேகம், என் கையில் இருந்த பயணச்சீட்டு செல்லுமா என்பதுதான். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு ரயில் நான் செல்லப்போகும் ஊர் வழியாக செல்லும் என்பது தெரிந்திருந்ததால் ரயில் நேரம் பற்றி கவலைப்படவில்லை.

அங்கு ரயில்பாதையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் என் சந்தேகத்தை நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர்களுக்கு ஆங்கிலம் சரிவர பேசவராததால் , ரயில்நிலைய அதிகாரியை அழைத்தனர். வந்த ஆண் ரயில் அதிகாரி ரயில் வரும் நேரத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார், அதுவும் சுவீடிஷ் மொழியில். எனக்கு என் பயணச்சீட்டு செல்லுமா என்பது தான் சந்தேகம். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி ஆங்கித்தில் என் பயணச்சீட்டு செல்லும் என்பதை தெளிவாக்கி, என்னை ரயிலில் பத்திரமாக ஏற்றிவைத்தார்.

அடுத்த 20 நிமிடத்தில் நான் இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறங்கி, எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டு, மாலை ஊர் திரும்பினேன்.

புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

-----
அடுத்தப்பதிவு பேருந்துக்காகக் காத்திருக்கையில் ஒரு ஈரானியப்பெண்ணுடன் உரையாடியது.

Sunday, July 27, 2008

மறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை

சில சமயங்களில் காயத்தின் வலியுடனேயே இருப்பது சுகமாகவே இருக்கும். காயங்களை விட அவை மறைந்து அதன் அடையாள வடுக்கள் அதிகமான வலி தரும். அப்படி வலி தரும் மகிழ்ச்சியில் ஜெனியின் நினைவுகளுடன் கடைசி நான்கு வருடங்களாக இருந்த என்னை மீட்டெடுத்து வந்தவள் இந்த ரம்யா. இதோ என் முன்னால் என்னை ரசித்தபடி அமர்ந்து இருக்கிறாள்.

“கார்த்தி, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு என்ன பேரு வைக்கலாம்?”

“அர்ஜுன்,அஞ்சலி” இந்தக் கேள்வி எனக்கு ஏற்கனவே பரிச்சயமான கேள்வியாக இருந்ததால் சட்டென பதில் வந்து விழுந்தது.

“வாவ், சூப்பர் செலக்‌ஷன், இங்கிலிஷ்லேயும் பர்ஸ்ட் எழுத்து, தமிழிலும் பர்ஸ்ட் எழுத்துல ஆரம்பிக்கிற நேம்ஸ் குட் குட்” சிறிது நேர மௌனத்திற்குப்பின் ரம்யாவே தொடர்ந்தாள்

“கார்த்தி, நீ ஜெனி கூட போன எல்லா இடங்களுக்கும் என்னை கூட்டிட்டுப்போ ”

இதோ இந்த உணவகம் கூட நானும் ஜெனியும் நான்கு வருடங்களுக்கு முன்பு அடிக்கடி வரும் இடம்தான். உணவக வேலையாட்களின் முகம் சிலவை பழக்கமானவையாக இருந்தன. சிலர் சினேகமாக சிரித்தனர். என்னையும் ஜெனியையும் ஞாபகம் வைத்திருக்கின்றார்களோ என்னவோ.

“சரி ரம்யா, நாளைக்கு மாயாஜால் போகலாம்”

கடைசியாக மாயாஜாலில் நான், ஜெனியுடன் பார்த்தபடம் வர்ணஜாலம். அதன்பின்னர் அந்த திரையரங்கத்திற்கு போகும் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தவிர்த்து வந்து இருக்கிறேன். இனி தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் விருப்பம் இல்லை.

மறுநாள் , திருவான்மியூருக்குப்பின் தான் காரை ஓட்டிவருவதாக கூறியதால் நான் இடது புறம் வந்தமர்ந்து கொள்ள வழிநெடுக மனம் பின்னோக்கிய நினைவுளுடன் உடல் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. ஷீரடி சாய்பாபா கோவில், பசீரா ,
பெப்பிள்ஸ் கடற்கரை செல்லும் தார்ச்சாலை இவையனைத்து நானும் ஜெனியும் பழகியநாட்களை என்னைப்போலவே நினைவில் வைத்திருக்கும்.

“என்ன கார்த்தி, சைலண்டா வர்ற, மலரும் நினைவுகளா, போதும் போதும், மாயாஜாலே வந்துடுச்சு”

ஒரு விசயத்தை விட்டு நாம் முழுமையாக விலகி வந்துவிட்டோம் நினைக்கின்றபொழுது அந்த விசயம் நம் முன்னால் வந்து நின்று நம்மை நிலை குலைய வைக்கும். சுப்ரமணியபுரம் படம் இடைவேளையில் கண்கள் இரண்டால் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே , நானும் ரம்யாவும் பாப்கார்னும் காபியும் வாங்க காத்திருக்கையில்

“ஹாய் கார்த்தி” என ஒரு குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன். ஜெனி கையில் ஒரு குழந்தையுடனும் அவள் காலைக்கட்டிக்கொண்டிருந்த குழந்தையுடனும் நின்று கொண்டிருந்தாள்.

“எப்படிடா இருக்கே? நாலுவருசம் இருக்கும்லே, என்னோட கல்யாணத்தப்ப பார்த்தது” ஜெனி என்னை “டா” வென விளித்தது எனக்கு சங்கடமாக இருந்தபோதும் சமாளித்துக்கொண்டே

“ நீங்க எப்படி இருக்கீங்க, இது உங்க குழந்தைகளா?”

காலைக்கட்டிக்கொண்டிருந்த சின்னப்பையனைக் காட்டி “ஆமாம், இது அர்ஜுன்” . கையில் வைத்திருந்த குழந்தையை சுட்டி. “இந்தக் குட்டி பேரு அஞ்சலி”

“உங்க ஹஸ்பெண்ட் எங்கே?”

“அவரு, புரஜெக்ட் விசயமா ஆஸ்திரேலியா போயிருக்காரு, இன் - லாஸோட தசாவதாரம் வந்தேன், ரொம்ப நாள் கழிச்சு உன்னைப்பார்த்தது ரொம்ப சந்தோசம்டா கார்த்தி, இந்த என்னோட கார்ட், வீ கீப் இன் டச்”

அவளது அலுவலக முகவரி,தொலைபேசி,கைபேசி எண் அடங்கிய அந்த அட்டையைக் கொடுத்துவிட்டு அஞ்சலிப்பாப்பாவை கொஞ்சியபடியே கமல்ஹாசன் உலகைக்காப்பாற்றுவாரா என படத்தின் அடுத்தப் பாதியை பார்க்க அவளது திரையரங்கத்திற்குள் நுழைந்தாள்.

அதுவரை ஜெனியுடன் ஆன உரையாடலில் வராத ரம்யா என் கையில் இருந்த அந்த அட்டையை வாங்கி

“ம்ம் நல்ல பொசிஷன்ல தான் இருக்கா.. குட் குட், சரி வா படம் போட்டுறுவான் .”

சுப்ரமணியபுரம் படத்தின் தாக்கம் அன்றிரவு தணிந்த போது, ஜெனி கொடுத்த முகவரி அட்டையை ரம்யா திருப்பியேக் கொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஜெனியின் அலுவலக பெயரை மனதில் கொண்டு வர முயற்சிக்கையில்

“கண்கள் இரண்டால்” கைபேசியில் பாடி ரம்யாவின் அழைப்பு வந்தது

“கார்த்தி, நம்ம குழந்தைகளுக்கு நல்ல தமிழ் இலக்கியப் பெயர் வைக்கலாம், அர்ஜுன் , அஞ்சலி பேரு எல்லாம் வேண்டாம்”

“சரி, ரம்யா” என்றேன் ஞாபகத்திற்கு வந்த ஜெனியின் அலுவலகப்பெயரை மறந்தபடியே

----------முடிவு------

Thursday, June 19, 2008

வா ஜெனி, போயிடலாம் - சிறுகதை

கார்த்தியை அந்த பிள்ளையார் கோவிலின் மதிலின் அருகே பார்த்த பொழுது முதன்முறையாக ஜெனிநடுங்கிப்போனாள். கார்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்த நாட்கள் எப்படி மாறிவிட்டன.அவனைப் பார்த்ததும் தன்
கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே “கார்த்தருக்கு தோத்திரம்” என முணுமுணுத்துக்கொண்டே வேகமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை பின் தொடர்ந்த கார்த்தி

“வா போயிடலாம், ஜெனி, உனக்காக இங்கேயே காத்திருப்பேன்” என்று சொன்னது மட்டும் அவள் காதில் விழுந்தது.

வீட்டிற்கு வந்து சேர்ந்து அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்து அழுது முடித்துவிட்டு அம்மாவிடம் ஏதும் சொல்லாமல் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். பயம்,துக்கம் வருத்தம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது போல இருந்தது. கார்த்தியும் ஜெனியும்
உயிருக்கு உயிராக காதலித்தவர்கள். கார்த்தியுடன் போய்விட ஜெனிக்கு விருப்பம்தான், இருந்த போதிலும், அப்பா இறந்த பிறகு கண்ணும் கருத்துமாக தன்னை வளர்த்த அம்மாவை நிராதரவாக விட்டு செல்ல அவள் மனசாட்சி விட்டுக்கொடுக்கவில்லை.

பைபிளை மூடி வைத்து ஜெனி சற்று கண்ணயர்ந்த போது பைபிளின் மேல் வைத்திருந்த கைத்தொலைபேசி அடித்தது.

“ஜெனி,நான் கார்த்தி பேசுறேன், இரண்டு நாட்களாக உனக்காக காத்திருக்கின்றேன், நீ இன்னும் வரல, கடைசி வரை இருப்பேன்னு சொன்ன, ஆனால் கடைசிக்குப்பிறகு வரமாட்டியா? நான் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ எப்படி உனக்கு எப்படி மனசு வருது, ஆத்மார்த்தமானது நம் காதல்னு சொன்ன, நான் ஆத்மாவாக இருக்கிறப்ப ஏன் என்னைப்பார்த்து பயப்படுற? எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிற கடைசி நிமிசம் வரை உன்னைதான் நினைச்சுட்டு இருந்தேன், சீக்கிரம் வா காத்திருக்கிறேன்” என கார்த்தி சொல்லி முடிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சரியாக மணி பனிரண்டு அடிக்க, அம்மாவிற்காக வாங்கி வைத்திருந்த தூக்க மாத்திரைகளை எண்ண ஆரம்பித்தாள். மொத்தம் 18 இருந்தது. மூன்றாவது மாத்திரையை வாயில் போடும்பொழுது திரைச்சீலை விலகி இருந்த சன்னலுக்கு வெளியே கவனித்தாள். அவள் அப்பா நிற்பது போல இருந்தது. உண்மைதான் அவர் இறந்த அன்று போட்டிருந்த உடையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.

”ஆக்ஸிடெண்ட்ல, நான் போனப்ப, அம்மாவும் உன்னை மாதிரியே முடிவு எடுக்க நினைச்சிருந்தா நீ, இந்த நிலைக்கு படிச்சு முன்னுக்கு வந்து இருக்க முடியுமா, துக்கத்தை விட்டுட்டுப்போகனும்னா எல்லோரும் செத்துதான் போகனும்.. இந்த நிலையும் மாறும்.. இந்த முடிவு வேண்டாம்”

என ஜெனியின் அப்பா அவளது காதில் சன்னமாக கூறுவது போல இருந்தது. திரைச்சீலையை மூடிவிட்டு தீர்க்கமான முடிவுடன் மாத்திரைகளை மீண்டும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது அப்பா கடைசியாக எழுதி வைத்திருந்த நாட்குறிப்பு புத்தகத்தை எடுத்து தலைமாட்டில் வைத்துக்கொண்டு தூங்கிப்போனாள்.

*********************

Wednesday, June 18, 2008

மாற்றி அடி - Reverse Sweep - கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக் கொண்டிருக்கையில் , 135/2 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைவர் அலன் பார்டர் பந்து வீச வருகிறார். ஆஹா,அல்வா மாதிரியான பந்துவீச்சு என குதுகலத்துடன் மைக்கேட்டிங் ரிவர்ஸ் ஸ்வீப் வகையில் ஆட , மட்டையில் பட்டு பந்து , மேலே எழும்பி நேராக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது. சுறுசுறுப்பாக ஆடிக்கொண்டிருந்த மைக்கேட்டிங் ஆட்டமிழந்ததும் , பின்வரிசை ஆட்டக்காரர்களில் அலன் லேம்பைத் தவிர வேறு யாரும் நிலைத்து ஆடாமல் கடைசியில் வெறும் 7 ரன்களுக்கு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி இழந்தது. அந்த நேரத்தில் தேவை இல்லாத மைக்கெட்டிங்கின் ரிவர்ஸ் ஸ்வீப் ,இங்கிலாந்தின் பரம வைரிகளான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தின் துவக்கமாக அமைந்தது எனவும் சொல்லலாம்.



ஆட்டவிபரம் இங்கே

முதன் முதலாக பாகிஸ்தானின் ஹனீப்முகமது இந்த வகையான ரிவர்ஸ் ஸ்வீப் ஆட்டமுறை ஆட ஆரம்பித்திருந்தாலும் இதைப்பிரபல படுத்தியவர் அவரின் சகோதரர் முஸ்தாக் முகமதுதான். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வேகமாக ரன் எடுக்கும் முயற்சியின் போது இந்த வகையான ஆட்டத்தை,ஆட்டமிழந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருந்தும் மட்டையாளர்கள் வெளிப்படுத்துவார்கள். டெண்டுல்கர் கூட சில சமயங்களில் இந்த வகையில் வெற்றிகரமாக ஆடுவார்.



வழக்கமாக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுபவர்கள் மட்டையைப் பிடிக்கும் விதத்தை மாற்றாமல் வலதுகை ஆட்டக்காரராக இருந்தால் இடது கை ஆட்டக்காரர்போலவும் இடதுகை ஆட்டக்காரராக இருந்தால் வலது கை ஆட்டக்காரர் போல ஆடுவதாக தெரியும். இடது கை ஆட்டக்காரர்களில் ஆண்டிபிளவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆக மாற்றி அடிக்கும் கலையை அருமையாக தன்வசம் வைத்திருந்தவர்.

கடந்த உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் இடது கை ஆட்டக்காரர் பால் நிக்ஸன் இலங்கையின் முரளீதரன் பந்தை வலதுகை ஆட்டக்காரர்போல சிக்ஸர் அடித்தார்.



முதன்முறையாக இந்த வகையான ரிவர்ஸ் ஸ்வீப் , மாற்றி அடித்தல் ஆட்டமுறை கிரிக்கெட் ஆர்வலர்களால் கடந்த சில நாட்களாக அலசப்படுகிறது. காரணம் கெவின்பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் வலதுகை மட்டையாளரான இவர், நியுசிலாந்து அணிக்கெதிராக ஜூன் 15 , 2008 அன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியுசிலாந்தின் ஸ்காட் ஸ்டைரிஸின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விதத்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.


இரண்டு சிக்ஸர்களும் பாரட்டப்பட்ட அதே வேகத்தில் விமர்சனங்களும் ஆரம்பித்தன. சிக்ஸர்களை விளாசியபோது, வலது கை ஆட்டக்காரரான அவர், இடது கை ஆட்டக்காரர்கள் பிடிப்பது மட்டையைப்பிடிக்கும் விதத்தை மாற்றியதுதான். பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்பொழுது கைகளை மாற்றி வீசுவதற்கு முன்னால் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். அதே விதி மட்டையாளர்களுக்குப் பொருந்தாதா என கிரிக்கெட் விமர்சகர்கள் , முன்னாள் ஆட்டக்காரர்கள் குறிப்பாக மேற்கிந்தியதீவுகளின் முன்னாள் ஆட்டக்காரர் மைக்கெல் ஹோல்டிங் விவாதக்கனலை ஆரம்பிக்க,கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் பொறுப்பான Marylebone Cricket Club(MCC) தலையிட்டு இந்த வகையான ”மாற்றி அடித்தல்” விதிமுறைகளுக்குட்பட்டது எனவும், இந்த புதுவகையான ஆட்டம் கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கவல்லது எனவும் அறிவித்தது.

இந்த இரண்டு சிக்சர்களைப் பற்றி கெவின் பீட்டர்சனிடம் கேட்டபொழுது, முந்தைய இரவு படுக்கையில் மட்டையைபிடிக்கும் விதத்தை இடது கை ஆட்டக்காரர்கள் பிடிப்பது போல் பிடித்து பந்தை விளாசுவதை கற்பனை செய்து பார்த்து அதை ஆடுகளத்தில் நிறைவேற்றினாராம். கெவின் பீட்டர்சன் இதற்கு முன்பு ஒரு முறை இலங்கைக்கெதிராக 2006 ஆம் ஆண்டு எட்பாக்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் தான் ஆட்டமிழப்பதற்கு முந்தையப் பந்தை முரளிதரன் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து உள்ளார். அந்த சிக்ஸரின்போது அவர் மட்டைப்பிடிக்கும் விதத்தை மாற்றாததால் பிரச்சினை ஒன்றும் எழுப்பப்படவில்லை.



முன்பு ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் டௌக்லஸ் மரில்லியர் விக்கெட் கீப்பர் தலைக்கு இந்திய பந்துவீச்சை சிக்ஸர்களாக அடித்து ஒரு ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அதன்பின்பு அப்படி ஆடும் முறைக்கு மரில்லியர் ஷாட் என பெயர் வந்தது. இனி மட்டையைப்பிடிக்கும் விதத்தை மாற்றி ,ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்போவது “பீட்டர்சன் அடி” என வழங்கப்படலாம். ரிவர்ஸ் ஸ்வீப் என்றால் ஒரு நேரத்தில் எட்டிக்காயாக கசந்த இங்கிலாந்து ஊடகங்களுக்கு இந்த பீட்டர்சன் அடி இப்பொழுது தித்திக்கின்றது. எது எப்படியோ ஏற்கனவே சுவாரசியமான கிரிக்கெட் ஆட்டங்களில் இது போன்று அவ்வப்பொழுது ஆடுகளத்தில் நடக்கும் விசயங்கள் கிரிக்கெட் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றி அடி ரிவர்ஸ் ஸ்வீப் பற்றி பிரபலங்கள்

"Now that he has played that shot against Styris, I can finish off what I tried to say so many years ago. The argument is, if the batsman can change from being right-handed to left-handed, there shouldn't be a problem with a bowler changing from being right-handed to left-handed, either, without having to tell the umpire, nor should he have to tell the umpire if he is going over or round the wicket."
Michael Holding

"It just should be outlawed straightaway. If you want to hit to one side of the field, you've got to do it in a cross fashion, and not swap the way you're facing or your grip. Otherwise you are going to start to allow the bowlers to go round the wicket, over the wicket, and keep swapping during their run-ups."
Ian Healy

"I wasn't working on that game. I was watching it on television and I nearly jumped out of my seat. I thought he was absolutely brilliant, and it was a stroke of genius."
The ever-excitable David Lloyd manages to get even more excited

"That was outrageous. I hope he tries it on me. I might have more chance of getting him out."
Shane Warne

"If he [the batsman] is going to do that then you tell your bowler to bowl short into his ribs - and we have three leg slips and a gully [in case you have three slips and a gully to begin with]. If the batsmen is being so cute and clever, then I am going to say, 'Right, you are having a bit of Bodyline son'."
Nasser Hussain

"It incurs a great deal of risk for the batsman. It also offers bowlers a good chance of taking a wicket and therefore MCC believes that the shot is fair to both batsman and bowlers."
The MCC, after much deliberation, rules in favour of Pietersen


Sunday, June 15, 2008

தமிழ்மணம் நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஜூன் 15 2008

தமிழ்மணம் நிர்வாகிகளான தமிழ்சசி மற்றும் சொர்ணம் சங்கரபாண்டி ஆகியோர் சென்னைப்பதிவர்களை சந்தித்து தமிழ்மணம் பற்றி கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் ‘விவசாயி' இளாவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். நான் நீண்ட காலமாக சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த "பண்புடன்” ஆசிப் அண்ணாச்சியும் அங்கு வந்திருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.தனித்தனி அறிமுகங்களுடன் கலந்துரையாடல் ஆரம்பமானவுடன் , பதிவர்களின் தமிழ்மணம் தொடர்பான கேள்விகளுக்கு சொர்ணம் சங்கரபாண்டியும் தமிழ்சசியும் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.



(புகைப்படம் நன்றி: பத்ரி)


தமிழ்மணம் அறிவித்திருந்த விருது பற்றி ஏதும் பின்னறிவிப்பில்லையே என்றக் கேள்விக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தானியங்கியாக ஓட்டளிக்கும் முறையில் விருது வழங்கும் முறை முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் , ஆனால் தொழில்நுட்ப வேலைகள் குறித்த காலத்தில் முடிவுபெறாமையால் இந்த வருட இறுதிக்குள் தொழில்நுட்ப வேலைகள் முழுமை செய்யப்பட்டு , அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சங்கரபாண்டி பதிலளித்தார்.

இடுகைகளின் வகைப்படுத்தல் இனிவரும் காலங்களில் முற்றிலுமாக நீக்கப்பட்டு குறிச்சொற்கள் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினர்.

பூங்கா பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஒரு முறை அலசப்பட்டன. இந்த வருட இறுதிக்குள் வரும் என நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

தனிப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைக்கும் முறை மாற்றப்பட்டு பயனர் கணக்குடன் கூடிய தெரிவுகள் முறைக் கொண்டுவரப்படும் என தமிழ்சசி அறிவித்தார்.

பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்களின் வீக்கம் அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்குநேர்மாறலானது என்றும் 'ம' திரட்டியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் முகப்பில் வைக்கப்பட்டதாகவும் சசி மேலும் சொன்னார்.

தேன்கூடு போட்டிகள் போல போட்டிகள் அறிவித்தல் ஒரு கவனக்குவிப்பைக் கொண்டு வந்து பதிவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து அது நல்ல தரமான பதிவுகளை கொண்டு வரக்கூடும் என்றக் கேள்விக்கு போட்டிகளை பதிவர்கள் குழுக்களாக அமைந்து நடத்திக்கொண்டால், அதற்கு தமிழ்மண முகப்பில் இடமளிக்கப்படும் என சங்கரபாண்டி உறுதி அளித்தார்.

சில இடுகைகள், சிலபதிவர்களின் ஒட்டு மொத்தப் பதிவுகளும் ஏன் நீக்கப்பட்டன என்றக் கேள்விக்கு சிலவிதிமுறைகளுக்குட்பட்டு அவை நீக்கப்பட்டன என்றும் ,இருந்த போதிலும் தனிப்பட்ட வகையில் அவர்களின் பதிவுகளை தான் படித்துவருவதாகவும் சொர்ணம் சங்கரபாண்டி கூறியபோது பார்வதி அரங்கில் நிரம்பி இருந்த பதிவர்களின் மத்தியில் சிரிப்பலை பரவியது.

பின்னூட்ட உயரெல்லை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தற்போது சோதனை வடிவம் இருப்பதால் பின்னூட்ட உயரெல்லை தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தமிழ்மணம் இயங்காத காலங்களில் வலைப்பூக்களுக்கு கருவிப்பட்டையின் காரணமாக ஏற்படும் பிரச்சினை சரிசெய்வதாக தமிழ்சசி உறுதி அளித்தார்.

* லக்கிலுக் தமிழ்மணம் டீ-ஷர்ட்டில் வந்திருந்தர்.

* டி.பி.ஆர் ஜோசஃப் சாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் பதிவர் சந்திப்பில் சந்திக்க முடிந்தது.

* இளவஞ்சி,வளர்மதி,டாக்டர் ப்ரூனோ,இளா ஆகியோரை முதன் முறையாக சந்தித்த பொழுது மனம் உவகைக் கொண்டது.

* புதுப்பதிவர்களான ஜிங்கார ஜமீன் மற்றும் அதிஷா ஆகியோர் கலந்துரையாடலை கவனமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

* தமிழ்சசி முக அமைப்பில் இன்னொரு பிரபல பதிவரைப்போலவே அச்சு அசலாக இருந்தார்.

* இந்த வார தமிழ்மண நட்சத்திரம் ஜேகே வும் சந்திப்பில் கலந்து கொண்டது மிகப்பொருத்தமாக இருந்தது.

* சந்திப்பில் கலந்துகொண்ட ஏனைய பதிவர்கள் பத்ரி,ஐகாரஸ்பிரகாஷ், டோண்டு ராகவன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,முரளிக்கண்ணன்,நந்தா,உண்மைத்தமிழன்,லிவிங்ஸ்மைல்வித்யா,
கடலையூர் செல்வம்,மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்,நடைவண்டி ஆழியூரான், ஜெயகார்த்தி,ராம.பாலன்,வாதி சரவணன்,ஆடுமாடு மற்றும் சோமன்.


* சந்திப்பை ஒருங்கிணைத்த பாலபாரதிக்கு நன்றிகள்.

தேநீர் அருந்திய பின்னர் பதிவர்கள் தனித்தனி குழுக்களாக கதைக்க ஆரம்பித்தனர். உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவராக விடைபெற்றனர்.வலைப்பதிவுலகில் மற்றும் ஒரு உற்சாகமான மாலைப்பொழுதாக தமிழ் வலையுலகம் அடுத்தக் கட்டத்தை நோக்கி மெல்ல நகர்கிறது,நகரும் என நம்பிக்கையோடு கழிந்தது.

Friday, June 13, 2008

தசாவதாரம் பட விமர்சனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் கூத்தும்





தசாவதாரம் படத்தைப்பற்றி எந்த வகையிலும் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. இங்கு விசயம் விமர்சனம் பற்றியதல்ல, நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ விமர்சனம் எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. பிரச்சினை படத்தின் இயக்குனர் என்ற இடத்தில் கமலஹாசன் என்றிருப்பதுதான்.

விமர்சனம் எழுதியவர் நிக்கத் காஸ்மி. இவர் 20 வருடங்களுக்கு மேலாக இந்தப் பத்திரிக்கையில் திரைப்படங்கள் பற்றி எழுதிவருபவராம். சிறந்த சினிமா விமர்சகராம், இவர் ஒரு படத்தின் இயக்குனர் யார் எனத் தெரியாமலேயே படத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளது வருந்ததக்கது. உண்மையிலேயே இவரே எழுதி இருப்பாரா, அல்லது மண்டபத்தில் யாரேனும் எழுதிக் கொடுத்து வலையேற்றி இருப்பார்களா என்பது Times OFF India க்குதான் வெளிச்சம்.

கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குப்பின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என சரிசெய்து இருக்கிறார்கள்.



தசாவதாரம் படத்தைப் பற்றி Times of India வின் இணைய விமர்சனத்தின் சுட்டி இங்கே.
http://timesofindia.indiatimes.com/moviereview/3127454.cms


-----

தசாவதாரம் பட விமர்சனங்கள்

1. பினாத்தல் சுரேஷ்

2. வெட்டிப்பயல்

3. அபிஅப்பா

4. பரத்

5. சிறில் அலெக்ஸ்

6. ரீடிப் விமர்சனம் ஆங்கிலத்தில்

7. சினிமா நிருபர்

8. மைபிரண்டு

9. லக்கிலுக்

10. ஜி.ராகவன்

தசாவதாரம் படம் வெற்றி அடைய வாழ்த்துகள்

Tuesday, June 10, 2008

மீதமான உணவு - சிறுகதை

ரம்யாவிற்கு வருத்தமோ கோபமோ இருப்பது தெரிந்தால் நான் செய்யும் முதற்காரியம், அவளை வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தான். அதிகாலையிலேயே எழுந்து எங்களது அலுவலக நண்பர்களின் வருகைக்காக பலவகையான கூட்டுக்களுடன் மதிய உணவைத் தயாரித்து வைத்திருந்து , உறுதியளித்திருந்த படி சிலர்
வராததுதான் ரம்யாவின் வருத்ததிற்குக் காரணம்.

ரம்யாவிற்கு உணவு மீதமானாலோ, யாராவது அதிகமாக தட்டில் போட்டுக்கொண்டு அதை சாப்பிடாமல் போனாலோ அத்தனை கோபம் வரும். சின்ன வயசில அரைவயிறு கால்வயிறு சாப்பிட்டிருந்தால் சாப்பாட்டோட அருமை தெரியும் என அடிக்கடி என்னிடம் சொல்லுவாள்.

“கிருஷ்ணமூர்த்தி , வாசுதேவன் கிட்ட எத்தனை தடவை சொன்னோம் கண்டிப்பாக பேமிலியோட வரச்சொல்லி, அட்லீஸ்ட் காலையிலவாது வர முடியாதுன்னு சொல்லி இருக்கலாம், குறைச்சு சமைச்சிருப்பேன்... “

“பராவாயில்லை ரம்யா,வராதவங்களா பத்தி ஏன் பேசனும்...அஜீஸ் , சேவியர் பேமிலிஸுக்கு இன்னக்கி மறக்க முடியாத லஞ்சுன்னு சொல்லிட்டுப்போனாங்கள்ல, அதை நினைச்சு சந்தோசப்படு , மீதமான சாப்பாட்டை நைட் டின்னர் ல காலி பண்ணிடுவோம்..டோண்ட் வொரி”

“ம்ஹூம், அப்படியும் நாலு பேரு சாப்பிடுற அளவுக்கு சாப்பாடு மீதி இருக்கும் ”

தொடர்ந்து கோவிலை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் எங்களது வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு எளிமையான வீட்டின் அருகே
ஒரு கணம் நின்று என்னைப் பார்த்தாள். கட்டிடம் கட்டுபவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குடிசையின் வாசலில் கணவன் மனைவி தங்களது மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கணவன், மனைவி மேலும் சிலபேருடன் அந்த வீட்டைக் கட்டும்
பணியில் ஈடுபட்டிருப்பதை நான் வாரநாட்களில் பார்த்திருக்கின்றேன். அந்த வீடு கடைசி மூன்று மாதங்களாக மெதுவாக வளர்ந்து வருகிறது. ஒரு மாத இடைவெளியில் மாளிகை மாதிரி வீடுகளே எழும்பும் இந்த காலத்தில், இப்படி மெதுவாக வேலை நடப்பது ஆச்சரியமாக இருக்கும். வீடு கட்டுபவருக்கு என்ன பிரச்சினையோ. என யோசித்துக் கொண்டிருந்தபொழுது ரம்யா என் தோளைத் தொட , அதன் காரணத்தைப் புரிந்து கொண்ட நான்

மெல்லியத்தயக்கத்துடன் , நான் அந்தக் கட்டிடத்தொழிலாளியை அணுகி

“வீட்டில விருந்து செஞ்சோம் கொஞ்சம் சாப்பாடு இருக்கு, தந்தால் சாப்பிடுவிங்களா?” ஏதாவது கடினமாக சொல்லி மறுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே கேட்டேன்.

ஒரு கணம் யோசித்த அவர், தனது காலைக்கட்டிக்கொண்டிருந்த குழந்தைகளை தலையில் தடவிக்கொடுத்துவிட்டு “இருங்க சார், பாத்திரம் எடுத்துட்டு வரேன்”

கட்டிடத்தொழிலாளியை அழைத்துக்கொண்டு நானும் ரம்யாவும் வீடுத் திரும்பியபின், அவர் கொண்டு வந்திருந்த பாத்திரம் சாப்பாடு மற்றும் உடன் உணவு வகையறாக்களை வைக்க போதுமானதாக இல்லாததால் எங்கள் வீட்டில் இருந்த சில கிண்ணங்களில் அனைத்து சாப்பாட்டையும், கூட்டு வகையறாக்களையும்,குழம்பு வகைகளையும், வாழை இலைகளையும் கொடுத்தனுப்பினாள்.

இப்பொழுது ரம்யாவின் வருத்தம் கொஞ்சம் தணிந்திருந்தது அவளின் முகத்தில் தெரிந்தது. எல்லா உணவையும் கொடுத்துவிட்டதால் வெளியே உணவகம் போய் சாப்பிடலாம் என முடிவு செய்து, நானும் ரம்யாவும் அந்த கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டைக் கடக்கையில் கட்டிடத்தொழிலாளி அவரின் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சாப்பிட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த ரம்யா என்னிடம்

“கிருஷ்ணமூர்த்தி பேமிலியும், வாசுதேவன் பேமிலியும் லஞ்சுக்கு வராதது நல்லது தான், ” சொன்ன பொழுது அவளின் முகத்தில் கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சிக்களைத் தெரிந்தது.
*****

Wednesday, June 04, 2008

Hypocrites - சிறுகதை

சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் "நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை"

"ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?"

"கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம... தாங்க்ஸ்
கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது, சீர்திருத்தவாதி மாதிரி பேசிட்டு இப்படி செய்றதை ஜீரணிச்சுக்க முடியல"

"டேக் இட் ஈசி கார்த்தி, அந்த சாமியார் வரதுனால உனக்கு என்ன நஷ்டம், அந்த புரஜெக்ட் கிளையண்ட், வரப்போற சாமியோரட பக்தர் வேற , "

நான் இந்த சாமியார் பற்றி என்னோட கல்லூரித் தோழி ரம்யா சொல்ல நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ரம்யாவிற்கு அந்த சாமியரின் போதனைகள் மிகவும் பிடிக்கும். அவரது புத்தகங்கள் ஏதாவது ஒன்றை வைத்து எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பாள். நான் ஆன்மீகத்தையும் பக்தியையும் , குறிப்பாக இந்த சாமியரை மட்டம் தட்டி பேசுவதினால் எங்களுக்கிடையில் ஆன பெரும்பாலான தொலைபேசி உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். தான் கல்யாணம் செய்து கொண்டால் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்வேன் என அடிக்கடிச் சொல்லுவாள்.

ஜெனி அலுவலகத்தில் என் உடன் வேலை பார்க்கும் பெண். அவளின் சேவை மனப்பான்மை
காரணமாக, அவளின் மத ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எனக்குப்பிடிக்கும். இந்த மக்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்துகொண்டே இருக்கனும் என்று எப்போதும் சொல்லுவாள். அவளின் தாக்கத்தினால் நான் கூட வார இறுதிகளில் ஏதேனும் ஆசிரமங்கள்,ஆதரவற்றோர் இல்லங்கள் போய் அங்கிருக்கும் மக்களுடன் சிறிது நேரம் செலவிட்டு வருவது உண்டு.

"இது பர்ஸ்ட் டைம் இல்லை, போன வாரம் ஏதோ ஒரு அல்லேலூயா கும்பலுக்கு ஓசில ஒரு வெப்சைட் செஞ்சு தர சொன்னாரு, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்"

அல்லேலூயா கும்பல் என்றவுடன் ஜெனியின் முகம் மாறியது.

"கார்த்தி, உன்னால் வார்த்தைகளில் ஏளனம் இல்லாமல் உன்னால பேச முடியாதா ?"

என்னிடம் ஜெனிக்குப் பிடிக்காத ஒரே விசயம், நான் அவள் நம்பிக்கை சார்ந்த விசயங்களை சகட்டுமேனிக்கு எள்ளலாகப் பேசுவதுதான்.

"இதப்பாரு ஜெனி, டோண்ட் கெட் பர்சனல், நான் சொல்ல வந்தது சாமி, பூஜை , சடங்கு எல்லாம் இருக்க வேண்டியது இல்லைன்னு சொல்லிட்டு அதே விசயங்களை தனக்கு சாதகமாக இருக்கிறப்ப செய்வதுதான் எரிச்சலா இருக்குன்னு சொன்னேன்... "

"ம்ம்" ஜெனி மவுனமாக தலையாட்டிக் கொண்டே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடி எனக் கைக்காட்டினாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அலுவலகம் வரும் வழியில் ஜெனியே ஆரம்பித்தாள்.

"கார்த்தி, கொள்கைகளுக்கும் பிசினஸுக்கும் சம்பந்தம் கிடையாது.. எனக்கு எப்பவுமே நம்ம எம்.டி மேல பெரிய அபிப்ராயம் கிடையாது.. பிசினஸ் அவரோட ரிலிஜன், எலைட் சொசைட்டி அவரோட ஜாதி, இங்கிலீஷ் அவரோட மொழி அவரு செய்ற ஒவ்வொரு
விசயமும் தன்னோட வியாபர வெற்றிக்குத்தான்... அந்த கிறிஸ்தவ அமைப்பின் ஹெட் குவார்ட்டர்ஸ் சுவீடன் ல இருக்கு.. வெப்சைட்டை இலவசமா அந்த அமைப்புக்கு செஞ்சுதரதுனால ஏதாவது பிஸினஸ் லிங்க் எஸ்டாபிலிஷ் ஆகும் அப்படிங்கிற ஹிட்டன்
அஜண்டா வச்சிருப்பாரு . ஒன்னு தெரியுமா, அந்த வொர்க்கை என்னிடம் தான் கொடுத்தாரு...என்னோட எமொஷனல் அட்டாச்மெண்ட்டை சரியா பயன்படுத்திக்கிட்டாரு... அவரு ஒரு பக்கா பிசினஸ்மேன்.. சாதகமான ஆப்பர்சுனிட்டிஸ் முன்ன கொள்கை கத்தரிக்காய் எல்லாம் நீ எதிர்பார்க்கறது முட்டாள்தனம்"

"ம்ம்ம்"

"இந்த அப்ரைசல்ல நல்ல சாலரி ஹைக் வாங்கினோமா, அமைதியா இருந்தோமான்னு இல்லாம, எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதே"

எனக்கும் ஜெனி சொல்லுவது சரிதான் என தோன்றியது. இந்த ஆகஸ்ட் வந்தால் நான்கு வருடம் ஆகிறது. நல்ல சம்பள உயர்வுடன் வேறு வேலை தேடவேண்டும் என முடிவு செய்தேன்.

பூஜை தினத்தன்று, மோகன் என்னை சாமியாரிடம் கூட்டிச்சென்று , 'கார்த்தி தான் அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு பொறுப்பாளர்' என்று அறிமுகப்படுத்தி வைத்தார். சாமியாரும் தட்டில் இருந்த ஒரு ஆப்பிளை எடுதது அரையடி உயரத்தில் இருந்து என் கையில்
போட்டார். அந்த சாமியார் அப்படித்தான் பழங்களைக் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டு இருந்ததால் பெரிய வருத்தம் ஏதுமில்லை. ஒரு ஆப்பிள் லாபம்தான் என நினைத்துக்கொண்ட நான் மோகன் என்னை தனிப்பட்ட முறையில் சாமியாரிடம் அறிமுகப்படுத்தி
வைத்தது பிடித்து இருந்தது.

ஒரு வாரம் கழித்து சாமியாரின் சிபாரிசில் புதிதாய் அலுவலகத்தில் சேர்ந்திருந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து முடித்து வெளியே வரும்பொழுது எனக்காக ஜெனி வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.

"கார்த்தி, பேப்பர் போட்டுட்டேன்"

"என்ன இது சர்ப்ரைஸா, எனிவே எங்க போறே!!"

"சுவீடன் போறேன் கார்த்தி, ஞாபகம் இருக்கா, ஒரு கிறிஸ்தவ அமைப்புக்கு நான் வெப்சைட் டிசைன் பண்ணேன்ல, அவங்க அதுல ரொம்ப இம்ப்ரஸ் ஆகி என்னை அங்க கூப்பிட்டுட்டாங்க, நல்ல சாலரி, ஈரோப்பியன் செட்டில்மெண்ட், லைஃப் ல ஒரு நல்ல பிரேக்
வர்றப்ப மிஸ் பண்ணிடக்கூடாது தானே!!"

குறுக்குசால் ஓட்டி புத்திசாலித்தனமாகத்தான் ஜெனி காரியம் செய்து இருக்கிறாள் எனப்புரிந்தது. சிலகாலம் நல்ல தோழியாக இருந்த காரணத்தினால் வாழ்த்தி அனுப்பிவைத்தேன். ஜெனி, மோகனைப் பற்றி தனக்கு சாதகமான வாய்ப்புகள் முன்பு கொள்கையாவது கத்தரிக்காயவது என சொன்னது ஞாபகம் வந்தது,

அன்றிரவு நான் சாமியாரிடம் ஆப்பிள் வாங்கிய காட்சியின் புகைப்படத்தை முதல் வேலையாக ரம்யாவிற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன் . நிச்சயம் இந்தப் படம் ரம்யாவை மகிழ்ச்சி அடைய வைக்கும்,அது ரம்யாவிடம் என் காதலைச் சொல்லும்பொழுது எனது மதிப்பைக்கூட்டிக் கொடுக்கும் என நினைத்தபடி இருந்த பொழுது ரம்யாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“ஹல்லோ கார்த்தி, நைஸ் போட்டொ, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, ரொம்ப நாளா ஒரு விசயம் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. எனக்கானவரை கண்டுபிடிச்சுட்டேன்.. என் கூட வேலை பார்க்கறவர்தான், கடைசி மூனு மாசமா நல்ல பேச ஆரம்பிச்சு போன வாரம் அவரோட விருப்பத்தை சொன்னாரு, இன்னக்கித்தான் அக்செப்ட் பண்ணேன், யூ க்னோ அவரும் உன்னை மாதிரி ஒரு கடவுள் மறுப்பாளர், சாமி, பூஜை , சாமியார் இது மாதிரி விசயங்கள்னா காத தூரம் ஓடிடுவாரு”

------

Saturday, May 31, 2008

மனோஜ் பிரபாகர்



ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.



கதாநாயகனைப்போலத் தோற்றத்துடன், கைகளில் வெள்ளைப்பட்டை அணிந்து இவர் பந்து வீசும் விதம் கடை 80களிலும் ஆரம்ப 90களிலும் பிரசித்தம். மைய 90களில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்,துவக்கப் பந்துவீச்சாளர் என இரு முக்கிய பணிகளையும் செவ்வனே செய்து கொண்டிருந்த காலத்தில்தான் இவரின் பந்துவீச்சை தில்லியில் நடந்த உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் கலுவித்தரனா,ஜெயசூர்யா துவம்சம் செய்து இவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமிக்கச் செய்தனர்.


முதல் இரண்டு ஓவர்களில் 33 ரன்களைக் கொடுத்த பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களை சுழற்பந்து வீச்சு முறையில் வீசினார். ஒரு காலத்தில் இன்சுவிங்கர் யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்த மனோஜ்பிரபாகருக்கு இப்படி நேர்ந்தமை கிரிக்கெட் விநோதங்களில் ஒன்று.

இப்பொழுதெல்லாம் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்ற வீதத்தில் கொடுத்தால் கூட மன்னிக்கப்பட்டுவிடும் சூழல் அப்பொழுதெல்லாம் இல்லாமையால் அடுத்த ஆட்டத்தில் ஆடும் அணியில் இருந்தும், உலகக்கோப்பை முடிந்ததும் மொத்தமாகவும் நீக்கப்பட்டார். இங்கிலாந்து க்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டதும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு,அரசியலில் குதித்த மனோஜ்பிரபாகர், காங்கிரஸ்[திவாரி] கட்சி சார்பாக தெற்கு தில்லியில் அதே வருடம் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.

சுமாரான பேட்ஸ்மேனான இவர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து உள்ளார். இவர் அடித்த இரண்டாவது சதத்திற்குப் பிரச்சினைக்குரியாதாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் வெற்றிக்காக ஆடாமல், தன் சதத்திற்காக ஆடியமைக்காக இவர் அதற்கடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.

இவர் டெண்டுல்கருடன் இணைந்து களம் இறங்கும்பொழுது ஒரு முனையில் டெண்டுல்கர் அடித்தாட, பிரபாகர் மறுமுனையில் நிதானமாக ஆடி நல்ல துவக்கத்தை தருவார். 130 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்திருப்பது இவரின் நிதானமான ஆட்டத்திற்கு ஒரு சான்று. 46 ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரபாகரின் சராசரி கிட்டத்தட்ட 35. வீழ்த்திய விக்கெட்டுகள்

ஆடிய 39 டெஸ்ட் ஆட்டங்களில் 23 ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இருக்கும் மனோஜ்பிரபாகர் ஒரு சதத்துடன் சராசரி 35 வைத்திருப்பது பாராட்டுதலுக்குரிய விசயம் என்றாலும் இவர் இன்று இவரது சாதனைகளுக்காக நினைவு கூறப்படுவதில்லை.



மேட்ச்பிக்ஸிங் விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, பழைய வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக கபில்தேவை இவர் கைக்காட்டியது இவருக்கே கடைசியில் ஆப்பாக வந்து அமைந்தது. விசாரணைக்குழுவின் பார்வை இவர்மேல் திரும்பி, அசாருதீன் , அஜய்சர்மா வுடன் இவரும் தடைசெய்யப்பட்டார். அதன் பின்னர் மனைவியுடன் தகராறு, வரதட்சனை புகார், அடுத்த வீட்டுக்காரரை அடித்தது என எதிர்மறையான விசயங்களுக்காகவே கடைசி சில வருடங்களில் செய்திகளில் அடிபடுகிறார்.

1992 உலகக்கோப்பை போட்டியில் டீன் ஜோன்ஸ் அடித்த சிகஸருக்குப்பின் அவரை அடுத்த பந்திலேயே தானே கேட்ச்பிடித்து அவுட் ஆக்கி பந்தை தரையில் ஓங்கி அடிப்பார். இது ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தியவுடன் இவர் காட்டும் கடுமையான ஆக்ரோஷத்திற்கு உதாரணம், அணியில் உடன் இருப்பவர்களுடன் எப்பொழுதும் கடுமையாக இருக்கும் மனோஜ்பிரபாகரை அவருடன் விளையாடியவர்களுள் பெரும்பாலனவர்களுக்கு அவர்மேல் மிகப்பெரும் அபிப்ராயம் ஏதும் இருந்ததில்லை என இந்தியா டுடே கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

ஒரு கட்டத்தில் கபில்தேவை விட நன்றாகப் பந்துவீசினாலும்,பேட்டிங் செய்தாலும் கபில்தேவ் அளவுக்கு தான் புகழப்படுவதில்லை என்ற் ஆதங்கம் அவருக்கு எப்பொழுதும் உண்டு என்றும் சொல்வர்.

கொஞ்சம் பொறுமை காத்திருந்து மீண்டும் அணியில் இடம்பிடித்து, நல்ல ஆல்ரவுண்டர் என்ற அடைமொழியுடன் ஓய்வுபெறுவதை விடுத்து, 96 உலகக்கோப்பைக்குப்பின்னர் அவசரக்குடுக்கையாக 32 வயதில் ஓய்வுபெற்று மேட்ச்பிக்ஸிங் விவகாரத்தில் புலிவாலைப்பிடித்தக் கதையாக மாட்டிக்கொண்டு தனது கிரிக்கெட் புகழுக்கு தானே முடிவுரை எழுதிக்கொண்ட மனோஜ்பிரபாகர் தற்பொழுது ஐந்து வருட தடைக்குப்பின்னர் தில்லி அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இனிவரும் காலம் அவருக்கு வளமாக இருக்கட்டும்.

மனோஜ்பிராபகர் பற்றிய கிரிகின்போ பக்கம் இங்கே

Saturday, May 17, 2008

தையல் மெஷினும் ஆர்கெஸ்ட்ராவும் - சிறுகதை

காஞ்சிபுரத்தில் ரம்யாவின் அம்மா வைத்திருந்த அரதப்பழசான , உபயோகமில்லாத தையல் எந்திரத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது என நான் சொன்னதால் கோபித்துக்கொண்ட என் மனைவி ரம்யா , மாலை என் அலுவலக நண்பர் சுந்தரலிங்கத்தின் திருமணவரவேற்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டதால் எனது மேலாளர் மோகனுடன் செல்ல வேண்டியதாயிற்று.

“அந்த தையல் மெஷின் இல்லேன்னா, இந்த ரம்யா கிடையாது.. என் எஞ்சினியரிங் டிகிரி கிடையாது... நான் உனக்கு கிடைச்சிருக்கவே மாட்டேன்” என்ற அவளின் அழுகை விசும்பலுடன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க

நான், மோகனுடன் சுந்தரலிங்கத்தின் திருமண வரவேற்பு நடக்கும் மண்டபத்தினுள் நுழையும்பொழுதே மோகனின் கால்கள் தாளம் போட ஆரம்பித்துவிட்டன. மணமக்கள் அமரும் இடத்திற்கு வலப்பக்கமாக இசைக்குழுவினர் சில மெட்டுக்களை அடித்து
தயாராகிக் கொண்டிருந்தனர். சுந்தரலிங்கத்தின் உறவினர்கள் சிலர் ஆங்கங்கே அமர்ந்திருந்தனர். எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னையும் மோகனையும் தவிர வேறு யாரும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மோகன் இசைக்குழுவினர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக முதல் வரிசையில் ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் நானும் அவரின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.

சுந்தரலிங்கத்தின் திருமணம் நேற்று விருதுநகரில் சுயமரியாதை முறைப்படி நடந்து விட்டது. என் கல்யாணம் கூட அப்படி நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ரம்யாவின் அம்மா சம்பிரதாயப்படி தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால் காதல் கொள்கையை வென்றது. எதிர்காலத்தில் என் பிள்ளைகளுக்காவது ,மந்திரங்கள் தவிர்த்த திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எனது முக்கால எண்ண ஓட்டம்

“கார்த்தி, இந்த ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் நல்லா வாசிப்பாங்க, தொடர்ந்து இரண்டு நாள் எல்லாம் கச்சேரி பண்ணி இருக்காங்க!!” என்ற மோகனின் பேச்சால் கலைந்தது.

மோகனுக்கு திரைப்படப் பாடல்கள் மேல் அப்படி ஒரு மோகம். சுமாரான பாடல்களைக்கூட ரசித்து கேட்பார். அலுவலகத்தில் ஆறு மணிக்கு மேல் இருந்து வேலை செய்தால் அவரின் மடிக்கணினியில் 80களில் வெளிவந்த பாடல்களை சத்தம் அதிகமாக வைத்துக் கேட்பார். யாரேனும் கல்யாணப்பத்திரிக்கை அளித்தால், முதலில் அதில் இசைக்கச்சேரி இருக்கா, யார் இசைக்குழு என பார்த்துவிட்டுத்தான் எந்த கல்யாண மண்டபம், தேதி எல்லாம் பார்ப்பார். மோகன் நல்ல பாடகரும் கூட. எஸ்பிபி குரலின் சாயலில் அவர் பாடிய பாடல்களை சில சமயம் அலுவலகத்தில் நல்ல மனநிலையில் இருக்கும்பொழுது பாடிக்கொண்டிருப்பார்.

சரியாக ஏழரை மணிக்கு மேடைக்கு மணமக்கள் வந்து சேர, இசைக்கச்சேரி ஆரம்பித்தது. ”பாடவா உன் பாடலை “ பாட்டை ஆண் ஒருவர் அச்சு அசலாக ஜானகியின் குரலில் பாடிக்கொண்டிருந்தார். மோகன் எழுந்து சென்று மேடையில் பாடலைப் பாடியவருக்கு அன்பளிப்புக் கொடுத்துவிட்டு வந்தார்.

“என்ன மோகன் சார் வேலையை ஆரம்பிச்சிட்டாரா?” என்றக்குரலைப் பார்த்து நான் திரும்பிப் பார்க்க எங்கள் அலுவலக கிண்டல் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்தான்.

“கார்த்தி பார்த்துக்கிட்டே இரேன், அப்படி இப்படி சீன் கிரியேட் பண்ணி இவரு பாட்டுப் பாடிடுவாரு!!! ”

அன்பளிப்பு கொடுத்துவிட்டு வந்த மோகனிடம் ”எவ்வளோ சார் கொடுத்தீங்க”

“லேடிஸ் வாய்ஸ்ல பாடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! எத்தனைக் கொடுத்தாலும் தகும்,.. ஆனால் நான் நூறு ருபாதான் கொடுத்தேன்!!”

அலுவலகத்தை விட்டுக்கிளம்பும்போது இரண்டு ஐநூறு ருபாய்களை நூறு ரூபாய்களாக மோகன் மாற்றி வைத்துக் கொண்டதன் காரணம் புரிந்தது. வெளியே மேகங்கள் கோடை மழைக்கு தயாராகிக்கொண்டிருந்தன. மோகன் தொடர்ந்து பாடுபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த சில கல்லூரி இளைஞர்கள் சிலரும் மோகனுடன் இணைந்து கொள்ள கச்சேரி களை கட்டியது. ”சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்” பாடல் பாடப்படும்பொழுது, நானும் பாடலுடன் சேர்ந்து பாடலை சன்னமான குரலில் பாடிக்கொண்டிருந்தேன். இது போன்ற கச்சேரிகளில் நம் குரல் எவ்வளவு கர்ண கொடூரமா இருந்தாலும் , நாமும் இணைந்து பாடும்பொழுது ஒரு வித மகிழ்ச்சியான உற்சாகம் நல்லா இருக்கும். இந்த மாதிரி சூழலில் ரம்யா இல்லாமல் இருப்பது வருத்தமாக இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரியே மோகன் இசைக்குழு நிர்வாகியுடன் பேசிவிட்டு ”மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு” பாட்டைக் கலக்கலாக பாடி அசத்தினார். அந்தப் பாட்டுக்கு ஏற்றவாறு வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது.

“நல்லாதான்யா பாடுறாரு!!” கிருஷ்ணமூர்த்தியே பாராட்டினான்.

மோகன் பாடி முடித்தவுடன் , மோகனுடன் மணமக்களிடம் கையோடு கொண்டு வந்திருந்த பாரதிதாசன் நூல் தொகுப்புகளை அன்பளிப்பாக அளித்துவிட்டு , வெளியே வந்தபோது ”நல்லா பாடினீங்க சார்” சிலர் பாராட்ட மோகன் என்னைப் பெருமிதமாகப் பார்த்தார்.

வீடு திரும்பும்போது மோகன் என்னிடம் “இன்னும் நாலு நூறு நோட்டு பாக்கி இருக்கு, ”

“கேட்கறேன்ன்னு தப்பா நினைச்சுக்காதிங்க சார், 600 ரூபா செலவு பண்ணி அப்படி நீங்க மேடையில ஏறிப் பாடனுமா!!” இப்படிக் கேட்டப்பிறகுதான் எனக்கு உரைத்தது. இந்தக் கேள்வியைத் தவிர்த்து இருக்கலாமே என்று.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மோகன் “எல்லோருக்கும் தன்னோட அப்பா அம்மா வேலைப்பார்த்த புரபஷன்ஸ் மேல ஒரு அபிமானம் மரியாதை இருக்கும்..நீங்க நம்ம ஆபிஸுக்கு வர போஸ்ட்மேன் கிட்ட எங்க மற்ற எல்லோரையும் விட பிரியமா பேசுவிங்கல்ல,அதுக்கு காரணம் உங்க அப்பாவும் போஸ்ட்மேனா இருந்தவர்... என் அப்பாவும் அம்மாவும் இது மாதிரி ஆர்கெஸ்ட்ரா நடத்திதான் என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சாங்க, ”

“-------”


”அசலை விட , அசலைப்போலவே நகல் உருவாக்கல் தான் கஷ்டம், ஒவ்வொரு முறையும் ஒரிஜினல் பாட்டு மாதிரியே பாடனும்னு பாடுறவங்க எடுக்கிற முயற்சியோட வலி நாம கொடுக்கிற கைத்தட்டலில்தான் அவங்களுக்கு மறக்கும்..”

“--------”

சில வினாடிகளுக்குப்பின்னர்,

”எங்க அப்பா இது மாதிரி மேடைல பாடிட்டு இருக்கிறப்பதான் உயிரைவிட்டார்..... நான் இப்படி ஒவ்வொரு தடவையும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் பாடுறது அவருக்கு செலுத்துற மரியாதையா நினைக்கிறேன்”

நாளை ரம்யாவுடன் காஞ்சிபுரம் போய் அந்த தையல் எந்திரத்தை எடுத்துவரவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.

Monday, May 12, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வை



ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின ஒன்றாக இருந்தாலும் அது சுவாரசியமாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒரு முறை வலைப்பதிவு, தமிழ்தட்டச்சு நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது உணர முடிந்தது.



அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலரங்கம் நடக்கும் கணிப்பொறி மையத்தில் மா.சிவக்குமார் மற்றும் பாலபாரதியுடன் உள்நுழைந்த போது முனைவர்.மு.இளங்கோவன் வலைப்பதிவு பயிலரங்கம் பற்றியும் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றியும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சிவக்குமாரும் பாலபாரதியும் களத்தில் இறங்கினர், முதலில் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு ஜிமெயிலில் கணக்கு துவங்கவும் அதைக்கொண்டு பிலாக்கரில் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி அளித்தனர்.மா.சிவக்குமார், பயிற்சி பெற வந்திருந்தவர்களில் சிலர் உருவாக்கிய வலைப்பதிவுகளை உரக்கச்சொல்லி பக்கம் ஆரம்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். இடையே சென்னைப்பதிவர் விக்கி அலுவல்களுக்கு இடையிலும் 12 மணியளவில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.




பயிலரங்கம் நடந்து கொண்டிருந்த போது வாழ்த்துரை வழங்க வந்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு க.பொன்முடிக்கும் வலைப்பதிவு ஆரம்பித்துக் கொடுக்கும் யோசனையை மா.சிவக்குமார் சொல்ல, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் புதிய வலைப்பதிவு அமைச்சர் உருவாக்கும் முறைகளை ஆர்வத்துடன் குறித்துக்கொண்டார். மா.சிவக்குமார் வழிமுறைகளை விளக்க, அருணபாரதி ஒளிப்படமாக திரையில் கொண்டு வர கலைஞர் என்ற புதிய வலைப்பூ அமைச்சருக்காக உருவாக்கப்பட்டது.



மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வலைப்பதிவுகளில் ஒலி,ஒளி,படங்கள் ஆகியன இணைப்பதைப்பற்றிய நான் எடுத்த வகுப்பைத் தொடர்ந்து, ரா.சுகுமாரன் குறிச்சொல் இடுவது, அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். தாமதமாக வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட விக்கி திரட்டிகளில் வலைப்பதிவுகளைப்பற்றி தன்னுடைய பாணியில் விரிவாகவே விளக்கிக் கொண்டிருக்க



தேநீருக்காக வெளியே வந்தபோது விழுப்புரம் பதிவர் பயிலரங்க முதுகெலும்புகளான தமிழ்நம்பி , ரவி.கார்த்தி மற்றும் எழில்.இளங்கோ ஆகியாருடன் தனியாக அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவர்களைப் பற்றியும் அவர்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கேள்விக்கேட்க கிடைத்த பதில்கள் சுவாரசியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.துறை சார்ந்த தமிழ்வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்ட தமிழ்நம்பி தஞ்சைப் பல்கலைகழகம் தொகுத்த அருங்கலைச் சொற் அகரமுதலி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிருக்கும் இவர் தொலைத்தொடர்பு துறையில் பொறியாளராக இருந்து பணி நிறைவு செய்தவர்.ரவி.கார்த்தி போக்குவரத்து கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர். எழில்.இளங்கோ விழுப்புரத்தில் கணிப்பொறி மையம் நடத்தி வருபவர்.




மூவரும் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருந்தாலும் அவர்களை இணைத்தது தமிழ் என்றால் மிகையாகாது. கடந்த பொங்கல் திருநாளில் மருதம் என்ற பொங்கல் விழாவை விழுப்புரத்தில் சிறப்பாக நடத்திக்காட்டிய இந்த குழு, தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றனர். என்பதைக் கேட்ட போது அடைந்த மகிழ்ச்சி அளவில முடியாதது.

தனித்தமிழ் ஆரவலர்களான இவர்களின் முயற்சியில் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று விழுப்புரத்தில் செயற்பட்டு வருகிறது என்ற செய்தியையும் பகிர்ந்து கொண்டனர். ரவி.கார்த்தி பொறியாளராக இருந்தாலும் தமிழ்ச்சமூகம், தெய்வங்களும் என்ற சமூக விஞ்ஞான ஆய்வு புத்தகத்தை பத்தாண்டுகளுக்கு முன்பாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

எத்தனை சிறப்பாக திட்டமிட்டாலும் களப்பணியாளர்கள் இல்லாவிடின் எந்த திட்டமும் சிறப்பான வெற்றியை அடையாது. தமிழ் சம்பந்தபட்ட எந்த ஒரு விசயமானாலும் கட்சி , கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முன்னுக்கு நிற்பவர் எழில்.இளங்கோ, இவரின் முயற்சியால் இணைய இணைப்பு மற்றும் வேறு சில ஆரம்பகட்ட வேலைகள் துரிதமாக நடந்தது என தமிழ் நம்பி மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். தமிழுணர்வும் அதை தொழில்நுட்பத்துடன் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆர்வமும் கடினமான அலுவல்களுக்கிடையிலும் நேரத்தை தமிழுக்காக கொடுத்தால் சிறுநகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறப் பகுதிகளில் கூட இத்தகைய பயிலரங்கத்தை நடத்த முடியும் என்பது அவர்களுடன் நடத்திய சிறு உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.


உரையாடலுக்குப்பின்னர் பயிலரங்க அறைக்கு வந்த பொழுது கடலூர் சீனிவாசன் கூகுள் ரீடர் பற்றி சொல்லித்தந்ததைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பற்றி பாலபாரதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.



5.30 மணியளவில் விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் சார்பாக சென்னைப்பதிவர்களுக்கு அளிக்கப்பட்ட நினைவுபரிசைப் பெற்றுக்கொண்டு மற்றும் ஒரு நிறைவான பயிலரங்கத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த தமிழுக்கும் பயிலரங்கம் நடத்திய நிர்வாக குழுவினருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றோம். <படங்களுக்கு இங்கே சொடுக்கவும்>

துணுக்குகள்

* இரண்டரை ஆண்டுகளாக மா.சிவக்குமாரிடம் “சுசே லினக்ஸ்” இன்ஸாடால் செய்து தர வைத்திருந்த கோரிக்கையை பாலபாரதி விழுப்புரம் பயணத்தில் நிறைவேற்றிக்கொண்டார்.

* பழனியில் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாரி, பழனியிலும் இது போன்ற பயிலரங்கத்தை நடத்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் பயிற்சி அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகோளை மா.சிவக்குமாரிடம் வைத்தார்.

* புதுவை வலைப்பதிவர்கள் சார்பாக பயிற்சி பெற வந்தவர்களுக்கு குறுந்தகடு ஒன்று அளிக்கப்பட்டது.

* கோ.சுகுமாரன் அவர்கள் சுடச்சுட பயிலரங்க நிகழ்வுகளை வலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.

* சென்னைப்பட்டறையில் மட்டுறுத்தல் பற்றிய ஒரு விசயத்தை ரா.சுகுமாரனிடம் கற்றுகொண்டேன். விழுப்புரத்தில் 98 விண்டோஸ் இயங்கியில் எப்படி எழுத்துருக்களை நிறுவுதல் என்ற விசயத்தைக் கற்றுக்கொண்டேன்.


* மைலம் சந்தை ரோட்டில் சாப்பிட வண்டியை நிறுத்திய பொழுது, கால்சட்டைப் பையில் கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டே , கைத்தொலைபேசியை காணவில்லை என மா.சி தேட ஆரம்பிக்க, பாலபாரதி கடையில் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவரின் காதருகே போய் அது மா.சி உடையதா என பார்த்துவிட்டு வந்தார்.

* நாங்கள் சென்றிருந்த வாகனத்தின் ஓட்டுநர் , சென்னையை நெருங்குகையில் , இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தன் பிள்ளைகளுக்கும் கணினிப் பயிற்சி தரவேண்டும், தனது பிள்ளைகள் தமிழ்வழிக்கல்வியில் படிப்பதாகவும் தமிழில் படித்தால் கணினி கற்றுக் கொள்வது கடினமா எனக்கேட்க, மா.சிவக்குமார் தனக்கே உரித்தான பாணியில் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்தார்.