Hypocrites - சிறுகதை
சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் "நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை"
"ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?"
"கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம... தாங்க்ஸ்
கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது, சீர்திருத்தவாதி மாதிரி பேசிட்டு இப்படி செய்றதை ஜீரணிச்சுக்க முடியல"
"டேக் இட் ஈசி கார்த்தி, அந்த சாமியார் வரதுனால உனக்கு என்ன நஷ்டம், அந்த புரஜெக்ட் கிளையண்ட், வரப்போற சாமியோரட பக்தர் வேற , "
நான் இந்த சாமியார் பற்றி என்னோட கல்லூரித் தோழி ரம்யா சொல்ல நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ரம்யாவிற்கு அந்த சாமியரின் போதனைகள் மிகவும் பிடிக்கும். அவரது புத்தகங்கள் ஏதாவது ஒன்றை வைத்து எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பாள். நான் ஆன்மீகத்தையும் பக்தியையும் , குறிப்பாக இந்த சாமியரை மட்டம் தட்டி பேசுவதினால் எங்களுக்கிடையில் ஆன பெரும்பாலான தொலைபேசி உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். தான் கல்யாணம் செய்து கொண்டால் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்வேன் என அடிக்கடிச் சொல்லுவாள்.
ஜெனி அலுவலகத்தில் என் உடன் வேலை பார்க்கும் பெண். அவளின் சேவை மனப்பான்மை
காரணமாக, அவளின் மத ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எனக்குப்பிடிக்கும். இந்த மக்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்துகொண்டே இருக்கனும் என்று எப்போதும் சொல்லுவாள். அவளின் தாக்கத்தினால் நான் கூட வார இறுதிகளில் ஏதேனும் ஆசிரமங்கள்,ஆதரவற்றோர் இல்லங்கள் போய் அங்கிருக்கும் மக்களுடன் சிறிது நேரம் செலவிட்டு வருவது உண்டு.
"இது பர்ஸ்ட் டைம் இல்லை, போன வாரம் ஏதோ ஒரு அல்லேலூயா கும்பலுக்கு ஓசில ஒரு வெப்சைட் செஞ்சு தர சொன்னாரு, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்"
அல்லேலூயா கும்பல் என்றவுடன் ஜெனியின் முகம் மாறியது.
"கார்த்தி, உன்னால் வார்த்தைகளில் ஏளனம் இல்லாமல் உன்னால பேச முடியாதா ?"
என்னிடம் ஜெனிக்குப் பிடிக்காத ஒரே விசயம், நான் அவள் நம்பிக்கை சார்ந்த விசயங்களை சகட்டுமேனிக்கு எள்ளலாகப் பேசுவதுதான்.
"இதப்பாரு ஜெனி, டோண்ட் கெட் பர்சனல், நான் சொல்ல வந்தது சாமி, பூஜை , சடங்கு எல்லாம் இருக்க வேண்டியது இல்லைன்னு சொல்லிட்டு அதே விசயங்களை தனக்கு சாதகமாக இருக்கிறப்ப செய்வதுதான் எரிச்சலா இருக்குன்னு சொன்னேன்... "
"ம்ம்" ஜெனி மவுனமாக தலையாட்டிக் கொண்டே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடி எனக் கைக்காட்டினாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு அலுவலகம் வரும் வழியில் ஜெனியே ஆரம்பித்தாள்.
"கார்த்தி, கொள்கைகளுக்கும் பிசினஸுக்கும் சம்பந்தம் கிடையாது.. எனக்கு எப்பவுமே நம்ம எம்.டி மேல பெரிய அபிப்ராயம் கிடையாது.. பிசினஸ் அவரோட ரிலிஜன், எலைட் சொசைட்டி அவரோட ஜாதி, இங்கிலீஷ் அவரோட மொழி அவரு செய்ற ஒவ்வொரு
விசயமும் தன்னோட வியாபர வெற்றிக்குத்தான்... அந்த கிறிஸ்தவ அமைப்பின் ஹெட் குவார்ட்டர்ஸ் சுவீடன் ல இருக்கு.. வெப்சைட்டை இலவசமா அந்த அமைப்புக்கு செஞ்சுதரதுனால ஏதாவது பிஸினஸ் லிங்க் எஸ்டாபிலிஷ் ஆகும் அப்படிங்கிற ஹிட்டன்
அஜண்டா வச்சிருப்பாரு . ஒன்னு தெரியுமா, அந்த வொர்க்கை என்னிடம் தான் கொடுத்தாரு...என்னோட எமொஷனல் அட்டாச்மெண்ட்டை சரியா பயன்படுத்திக்கிட்டாரு... அவரு ஒரு பக்கா பிசினஸ்மேன்.. சாதகமான ஆப்பர்சுனிட்டிஸ் முன்ன கொள்கை கத்தரிக்காய் எல்லாம் நீ எதிர்பார்க்கறது முட்டாள்தனம்"
"ம்ம்ம்"
"இந்த அப்ரைசல்ல நல்ல சாலரி ஹைக் வாங்கினோமா, அமைதியா இருந்தோமான்னு இல்லாம, எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதே"
எனக்கும் ஜெனி சொல்லுவது சரிதான் என தோன்றியது. இந்த ஆகஸ்ட் வந்தால் நான்கு வருடம் ஆகிறது. நல்ல சம்பள உயர்வுடன் வேறு வேலை தேடவேண்டும் என முடிவு செய்தேன்.
பூஜை தினத்தன்று, மோகன் என்னை சாமியாரிடம் கூட்டிச்சென்று , 'கார்த்தி தான் அந்த வெற்றிகரமான திட்டத்திற்கு பொறுப்பாளர்' என்று அறிமுகப்படுத்தி வைத்தார். சாமியாரும் தட்டில் இருந்த ஒரு ஆப்பிளை எடுதது அரையடி உயரத்தில் இருந்து என் கையில்
போட்டார். அந்த சாமியார் அப்படித்தான் பழங்களைக் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டு இருந்ததால் பெரிய வருத்தம் ஏதுமில்லை. ஒரு ஆப்பிள் லாபம்தான் என நினைத்துக்கொண்ட நான் மோகன் என்னை தனிப்பட்ட முறையில் சாமியாரிடம் அறிமுகப்படுத்தி
வைத்தது பிடித்து இருந்தது.
ஒரு வாரம் கழித்து சாமியாரின் சிபாரிசில் புதிதாய் அலுவலகத்தில் சேர்ந்திருந்தவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து முடித்து வெளியே வரும்பொழுது எனக்காக ஜெனி வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
"கார்த்தி, பேப்பர் போட்டுட்டேன்"
"என்ன இது சர்ப்ரைஸா, எனிவே எங்க போறே!!"
"சுவீடன் போறேன் கார்த்தி, ஞாபகம் இருக்கா, ஒரு கிறிஸ்தவ அமைப்புக்கு நான் வெப்சைட் டிசைன் பண்ணேன்ல, அவங்க அதுல ரொம்ப இம்ப்ரஸ் ஆகி என்னை அங்க கூப்பிட்டுட்டாங்க, நல்ல சாலரி, ஈரோப்பியன் செட்டில்மெண்ட், லைஃப் ல ஒரு நல்ல பிரேக்
வர்றப்ப மிஸ் பண்ணிடக்கூடாது தானே!!"
குறுக்குசால் ஓட்டி புத்திசாலித்தனமாகத்தான் ஜெனி காரியம் செய்து இருக்கிறாள் எனப்புரிந்தது. சிலகாலம் நல்ல தோழியாக இருந்த காரணத்தினால் வாழ்த்தி அனுப்பிவைத்தேன். ஜெனி, மோகனைப் பற்றி தனக்கு சாதகமான வாய்ப்புகள் முன்பு கொள்கையாவது கத்தரிக்காயவது என சொன்னது ஞாபகம் வந்தது,
அன்றிரவு நான் சாமியாரிடம் ஆப்பிள் வாங்கிய காட்சியின் புகைப்படத்தை முதல் வேலையாக ரம்யாவிற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன் . நிச்சயம் இந்தப் படம் ரம்யாவை மகிழ்ச்சி அடைய வைக்கும்,அது ரம்யாவிடம் என் காதலைச் சொல்லும்பொழுது எனது மதிப்பைக்கூட்டிக் கொடுக்கும் என நினைத்தபடி இருந்த பொழுது ரம்யாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஹல்லோ கார்த்தி, நைஸ் போட்டொ, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, ரொம்ப நாளா ஒரு விசயம் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன்.. எனக்கானவரை கண்டுபிடிச்சுட்டேன்.. என் கூட வேலை பார்க்கறவர்தான், கடைசி மூனு மாசமா நல்ல பேச ஆரம்பிச்சு போன வாரம் அவரோட விருப்பத்தை சொன்னாரு, இன்னக்கித்தான் அக்செப்ட் பண்ணேன், யூ க்னோ அவரும் உன்னை மாதிரி ஒரு கடவுள் மறுப்பாளர், சாமி, பூஜை , சாமியார் இது மாதிரி விசயங்கள்னா காத தூரம் ஓடிடுவாரு”
------
15 பின்னூட்டங்கள்/Comments:
ஜெனி + கார்த்தி + ரம்யா - பேய்
மிகவும் சிறப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
நல்லா இருக்கு :)
கடைசில ரம்யா மாறினதுக்கு அழுத்தமா ரீசன் ஒன்னும் இல்லியே!?
மத்தபடி ரொம்ப நல்லா இருந்தது கதை.
:-) Good One
//கடைசி மூனு மாசமா நல்ல பேச ஆரம்பிச்சு போன வாரம் அவரோட விருப்பத்தை சொன்னாரு, //
அய்யோ பாவம் :(
\\கடைசில ரம்யா மாறினதுக்கு அழுத்தமா ரீசன் ஒன்னும் இல்லியே!?\\
ரிப்பீட்டேய், ஒருவேளை கிடைச்சது போதும்னு மனசு மாற பண்ணீட்டங்களாஆ
Hi vinaiooki
I cudnt understand the story...
what s d reason for ramya's change?
hi vinai
classical story
good one from u again
At last, Karthi had also become a hypocrite by sending the photo with the saint even though he didn't have belief but for the personal benefit. THat is the main story line, right? I don't know if everyone understood....
தல நல்லாருக்கு கதை , சூப்பர்
Good One. தலைப்பு நேரடியாக வைக்காமல், தமிழில் வைத்தால் நல்லாயிருக்கும்.
முடிவு நல்லாயிருந்தது.
பல நேரங்களில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களிடம் கொள்கைப்பிடிப்பு அதிகம் உள்ளதைக் காணலாம்.
அட பாவமே கார்த்தி நெலமை இப்படி போயிடுச்சே!
//சாதகமான ஆப்பர்சுனிட்டிஸ் முன்ன கொள்கை கத்தரிக்காய் எல்லாம் நீ எதிர்பார்க்கறது முட்டாள்தனம்//
எதார்த்தமான உண்மை
opporutunista "aappu"rtunistaakiteengalay :D inteeresting story
opporutunista "aappu"rtunistaakiteengalay :D inteeresting story
dear selva, r u trying to say every body in the world is hypocryte? even u and me? or this is just for the story?
Post a Comment