மனோஜ் பிரபாகர்
ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.
கதாநாயகனைப்போலத் தோற்றத்துடன், கைகளில் வெள்ளைப்பட்டை அணிந்து இவர் பந்து வீசும் விதம் கடை 80களிலும் ஆரம்ப 90களிலும் பிரசித்தம். மைய 90களில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்,துவக்கப் பந்துவீச்சாளர் என இரு முக்கிய பணிகளையும் செவ்வனே செய்து கொண்டிருந்த காலத்தில்தான் இவரின் பந்துவீச்சை தில்லியில் நடந்த உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் கலுவித்தரனா,ஜெயசூர்யா துவம்சம் செய்து இவரின் கிரிக்கெட் வாழ்வை அஸ்தமிக்கச் செய்தனர்.
முதல் இரண்டு ஓவர்களில் 33 ரன்களைக் கொடுத்த பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களை சுழற்பந்து வீச்சு முறையில் வீசினார். ஒரு காலத்தில் இன்சுவிங்கர் யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்த மனோஜ்பிரபாகருக்கு இப்படி நேர்ந்தமை கிரிக்கெட் விநோதங்களில் ஒன்று.
இப்பொழுதெல்லாம் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்ற வீதத்தில் கொடுத்தால் கூட மன்னிக்கப்பட்டுவிடும் சூழல் அப்பொழுதெல்லாம் இல்லாமையால் அடுத்த ஆட்டத்தில் ஆடும் அணியில் இருந்தும், உலகக்கோப்பை முடிந்ததும் மொத்தமாகவும் நீக்கப்பட்டார். இங்கிலாந்து க்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டதும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு,அரசியலில் குதித்த மனோஜ்பிரபாகர், காங்கிரஸ்[திவாரி] கட்சி சார்பாக தெற்கு தில்லியில் அதே வருடம் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் நின்று தோற்றுப்போனார்.
சுமாரான பேட்ஸ்மேனான இவர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து உள்ளார். இவர் அடித்த இரண்டாவது சதத்திற்குப் பிரச்சினைக்குரியாதாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் வெற்றிக்காக ஆடாமல், தன் சதத்திற்காக ஆடியமைக்காக இவர் அதற்கடுத்த போட்டியில் நீக்கப்பட்டார்.
இவர் டெண்டுல்கருடன் இணைந்து களம் இறங்கும்பொழுது ஒரு முனையில் டெண்டுல்கர் அடித்தாட, பிரபாகர் மறுமுனையில் நிதானமாக ஆடி நல்ல துவக்கத்தை தருவார். 130 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்திருப்பது இவரின் நிதானமான ஆட்டத்திற்கு ஒரு சான்று. 46 ஒரு நாள் ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரபாகரின் சராசரி கிட்டத்தட்ட 35. வீழ்த்திய விக்கெட்டுகள்
ஆடிய 39 டெஸ்ட் ஆட்டங்களில் 23 ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இருக்கும் மனோஜ்பிரபாகர் ஒரு சதத்துடன் சராசரி 35 வைத்திருப்பது பாராட்டுதலுக்குரிய விசயம் என்றாலும் இவர் இன்று இவரது சாதனைகளுக்காக நினைவு கூறப்படுவதில்லை.
மேட்ச்பிக்ஸிங் விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, பழைய வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக கபில்தேவை இவர் கைக்காட்டியது இவருக்கே கடைசியில் ஆப்பாக வந்து அமைந்தது. விசாரணைக்குழுவின் பார்வை இவர்மேல் திரும்பி, அசாருதீன் , அஜய்சர்மா வுடன் இவரும் தடைசெய்யப்பட்டார். அதன் பின்னர் மனைவியுடன் தகராறு, வரதட்சனை புகார், அடுத்த வீட்டுக்காரரை அடித்தது என எதிர்மறையான விசயங்களுக்காகவே கடைசி சில வருடங்களில் செய்திகளில் அடிபடுகிறார்.
1992 உலகக்கோப்பை போட்டியில் டீன் ஜோன்ஸ் அடித்த சிகஸருக்குப்பின் அவரை அடுத்த பந்திலேயே தானே கேட்ச்பிடித்து அவுட் ஆக்கி பந்தை தரையில் ஓங்கி அடிப்பார். இது ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்தியவுடன் இவர் காட்டும் கடுமையான ஆக்ரோஷத்திற்கு உதாரணம், அணியில் உடன் இருப்பவர்களுடன் எப்பொழுதும் கடுமையாக இருக்கும் மனோஜ்பிரபாகரை அவருடன் விளையாடியவர்களுள் பெரும்பாலனவர்களுக்கு அவர்மேல் மிகப்பெரும் அபிப்ராயம் ஏதும் இருந்ததில்லை என இந்தியா டுடே கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.
ஒரு கட்டத்தில் கபில்தேவை விட நன்றாகப் பந்துவீசினாலும்,பேட்டிங் செய்தாலும் கபில்தேவ் அளவுக்கு தான் புகழப்படுவதில்லை என்ற் ஆதங்கம் அவருக்கு எப்பொழுதும் உண்டு என்றும் சொல்வர்.
கொஞ்சம் பொறுமை காத்திருந்து மீண்டும் அணியில் இடம்பிடித்து, நல்ல ஆல்ரவுண்டர் என்ற அடைமொழியுடன் ஓய்வுபெறுவதை விடுத்து, 96 உலகக்கோப்பைக்குப்பின்னர் அவசரக்குடுக்கையாக 32 வயதில் ஓய்வுபெற்று மேட்ச்பிக்ஸிங் விவகாரத்தில் புலிவாலைப்பிடித்தக் கதையாக மாட்டிக்கொண்டு தனது கிரிக்கெட் புகழுக்கு தானே முடிவுரை எழுதிக்கொண்ட மனோஜ்பிரபாகர் தற்பொழுது ஐந்து வருட தடைக்குப்பின்னர் தில்லி அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இனிவரும் காலம் அவருக்கு வளமாக இருக்கட்டும்.
மனோஜ்பிராபகர் பற்றிய கிரிகின்போ பக்கம் இங்கே
3 பின்னூட்டங்கள்/Comments:
மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கிய இவர், கபில்தேவ்வின் மேல் சுமத்திய குற்றசாட்டுகள் ஒரு பெரும் பண்டோரா பாக்ஸை திறக்கச் செய்தது. BBC-ல் கபில்தேவ் கண்ணீர் விட்டு அழ, அதற்க்கு பின்னர் ஒரு Sting operation-ல் ரவி சாஸ்திரி ஒருமுறை கபில்தேவ் தாவூத் இப்ராஹிமை தனது நன்பர் என்று அறிமுகம் செய்து வைத்தார் என்று சொல்ல பெரும் சர்ச்சைகள்.
இதற்கெல்லாம் சிகரமாக தில்லி தொகுதியில் வேட்பாளராக மனோஜ் பிரபாகர் நின்ற பொழுது கபில்தேவ் அவருக்காக பிரச்சாரம் செய்தார்.
இன்றும் கபில்தேவ் எனது ஆதர்சங்களில் ஒருவர் என்றாலும்,
மனோஜ் பிரபாகரிடம் இன்னமும் பல உண்மைகள் இருக்கலாம் என்றே படுகின்றது.
அஸ்னோட்கர் ஆடுவதைப் பார்க்கும் போது கலு ஆடுவது போலவே உள்ளது
பிரபாகர் ம் ம் ம் இன்னெரு கங்குலி
//BBC-ல் கபில்தேவ் கண்ணீர் விட்டு அழ//
அது Hard talkஆ அல்லது Face to Faceஆ என்று சரியாக நினைவில் இல்லை. கண்ணீர் விட்டுக் கதறிய கபில் கடைசி வரை தான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று முழுவதுமாக மறுக்கவே இல்லை. மாற்றாக் கண்ணீர் விட்டு அழுது இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்ற என்னை எப்படி சந்தேகப்படலாம் என்று ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆக அவரை ஒரு கம்பேஷனேட் க்ரவுண்டில் தான் விட்டுவிட்டார்களேயொழிய மிஸ்டர் க்ளீன் என்று விடவில்லை. ஆனாலும் அசாரை டால்மியா காலத்தின் பொழுது மிக ஓவராகவே வில்லனாகக் காட்டினார்கள். கபிலைவிட அசாரின் மேல் எனக்கு மதிப்பு அதிகம் :)
மேலும் கிரிக்கெட்டில் புக்கீ பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிப்பதற்கு முன் ஹோம் சீரிஸ்கள் பிக்ஸ் செய்து வந்தது வழக்கமான விஷய்ங்கள் தான்.
Post a Comment