தையல் மெஷினும் ஆர்கெஸ்ட்ராவும் - சிறுகதை
காஞ்சிபுரத்தில் ரம்யாவின் அம்மா வைத்திருந்த அரதப்பழசான , உபயோகமில்லாத தையல் எந்திரத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது என நான் சொன்னதால் கோபித்துக்கொண்ட என் மனைவி ரம்யா , மாலை என் அலுவலக நண்பர் சுந்தரலிங்கத்தின் திருமணவரவேற்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டதால் எனது மேலாளர் மோகனுடன் செல்ல வேண்டியதாயிற்று.
“அந்த தையல் மெஷின் இல்லேன்னா, இந்த ரம்யா கிடையாது.. என் எஞ்சினியரிங் டிகிரி கிடையாது... நான் உனக்கு கிடைச்சிருக்கவே மாட்டேன்” என்ற அவளின் அழுகை விசும்பலுடன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க
நான், மோகனுடன் சுந்தரலிங்கத்தின் திருமண வரவேற்பு நடக்கும் மண்டபத்தினுள் நுழையும்பொழுதே மோகனின் கால்கள் தாளம் போட ஆரம்பித்துவிட்டன. மணமக்கள் அமரும் இடத்திற்கு வலப்பக்கமாக இசைக்குழுவினர் சில மெட்டுக்களை அடித்து
தயாராகிக் கொண்டிருந்தனர். சுந்தரலிங்கத்தின் உறவினர்கள் சிலர் ஆங்கங்கே அமர்ந்திருந்தனர். எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னையும் மோகனையும் தவிர வேறு யாரும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மோகன் இசைக்குழுவினர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக முதல் வரிசையில் ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து கொண்டார். வேறு வழியில்லாமல் நானும் அவரின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.
சுந்தரலிங்கத்தின் திருமணம் நேற்று விருதுநகரில் சுயமரியாதை முறைப்படி நடந்து விட்டது. என் கல்யாணம் கூட அப்படி நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ரம்யாவின் அம்மா சம்பிரதாயப்படி தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால் காதல் கொள்கையை வென்றது. எதிர்காலத்தில் என் பிள்ளைகளுக்காவது ,மந்திரங்கள் தவிர்த்த திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற எனது முக்கால எண்ண ஓட்டம்
“கார்த்தி, இந்த ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் நல்லா வாசிப்பாங்க, தொடர்ந்து இரண்டு நாள் எல்லாம் கச்சேரி பண்ணி இருக்காங்க!!” என்ற மோகனின் பேச்சால் கலைந்தது.
மோகனுக்கு திரைப்படப் பாடல்கள் மேல் அப்படி ஒரு மோகம். சுமாரான பாடல்களைக்கூட ரசித்து கேட்பார். அலுவலகத்தில் ஆறு மணிக்கு மேல் இருந்து வேலை செய்தால் அவரின் மடிக்கணினியில் 80களில் வெளிவந்த பாடல்களை சத்தம் அதிகமாக வைத்துக் கேட்பார். யாரேனும் கல்யாணப்பத்திரிக்கை அளித்தால், முதலில் அதில் இசைக்கச்சேரி இருக்கா, யார் இசைக்குழு என பார்த்துவிட்டுத்தான் எந்த கல்யாண மண்டபம், தேதி எல்லாம் பார்ப்பார். மோகன் நல்ல பாடகரும் கூட. எஸ்பிபி குரலின் சாயலில் அவர் பாடிய பாடல்களை சில சமயம் அலுவலகத்தில் நல்ல மனநிலையில் இருக்கும்பொழுது பாடிக்கொண்டிருப்பார்.
சரியாக ஏழரை மணிக்கு மேடைக்கு மணமக்கள் வந்து சேர, இசைக்கச்சேரி ஆரம்பித்தது. ”பாடவா உன் பாடலை “ பாட்டை ஆண் ஒருவர் அச்சு அசலாக ஜானகியின் குரலில் பாடிக்கொண்டிருந்தார். மோகன் எழுந்து சென்று மேடையில் பாடலைப் பாடியவருக்கு அன்பளிப்புக் கொடுத்துவிட்டு வந்தார்.
“என்ன மோகன் சார் வேலையை ஆரம்பிச்சிட்டாரா?” என்றக்குரலைப் பார்த்து நான் திரும்பிப் பார்க்க எங்கள் அலுவலக கிண்டல் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்தான்.
“கார்த்தி பார்த்துக்கிட்டே இரேன், அப்படி இப்படி சீன் கிரியேட் பண்ணி இவரு பாட்டுப் பாடிடுவாரு!!! ”
அன்பளிப்பு கொடுத்துவிட்டு வந்த மோகனிடம் ”எவ்வளோ சார் கொடுத்தீங்க”
“லேடிஸ் வாய்ஸ்ல பாடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! எத்தனைக் கொடுத்தாலும் தகும்,.. ஆனால் நான் நூறு ருபாதான் கொடுத்தேன்!!”
அலுவலகத்தை விட்டுக்கிளம்பும்போது இரண்டு ஐநூறு ருபாய்களை நூறு ரூபாய்களாக மோகன் மாற்றி வைத்துக் கொண்டதன் காரணம் புரிந்தது. வெளியே மேகங்கள் கோடை மழைக்கு தயாராகிக்கொண்டிருந்தன. மோகன் தொடர்ந்து பாடுபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்த சில கல்லூரி இளைஞர்கள் சிலரும் மோகனுடன் இணைந்து கொள்ள கச்சேரி களை கட்டியது. ”சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்” பாடல் பாடப்படும்பொழுது, நானும் பாடலுடன் சேர்ந்து பாடலை சன்னமான குரலில் பாடிக்கொண்டிருந்தேன். இது போன்ற கச்சேரிகளில் நம் குரல் எவ்வளவு கர்ண கொடூரமா இருந்தாலும் , நாமும் இணைந்து பாடும்பொழுது ஒரு வித மகிழ்ச்சியான உற்சாகம் நல்லா இருக்கும். இந்த மாதிரி சூழலில் ரம்யா இல்லாமல் இருப்பது வருத்தமாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி சொன்ன மாதிரியே மோகன் இசைக்குழு நிர்வாகியுடன் பேசிவிட்டு ”மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு” பாட்டைக் கலக்கலாக பாடி அசத்தினார். அந்தப் பாட்டுக்கு ஏற்றவாறு வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது.
“நல்லாதான்யா பாடுறாரு!!” கிருஷ்ணமூர்த்தியே பாராட்டினான்.
மோகன் பாடி முடித்தவுடன் , மோகனுடன் மணமக்களிடம் கையோடு கொண்டு வந்திருந்த பாரதிதாசன் நூல் தொகுப்புகளை அன்பளிப்பாக அளித்துவிட்டு , வெளியே வந்தபோது ”நல்லா பாடினீங்க சார்” சிலர் பாராட்ட மோகன் என்னைப் பெருமிதமாகப் பார்த்தார்.
வீடு திரும்பும்போது மோகன் என்னிடம் “இன்னும் நாலு நூறு நோட்டு பாக்கி இருக்கு, ”
“கேட்கறேன்ன்னு தப்பா நினைச்சுக்காதிங்க சார், 600 ரூபா செலவு பண்ணி அப்படி நீங்க மேடையில ஏறிப் பாடனுமா!!” இப்படிக் கேட்டப்பிறகுதான் எனக்கு உரைத்தது. இந்தக் கேள்வியைத் தவிர்த்து இருக்கலாமே என்று.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மோகன் “எல்லோருக்கும் தன்னோட அப்பா அம்மா வேலைப்பார்த்த புரபஷன்ஸ் மேல ஒரு அபிமானம் மரியாதை இருக்கும்..நீங்க நம்ம ஆபிஸுக்கு வர போஸ்ட்மேன் கிட்ட எங்க மற்ற எல்லோரையும் விட பிரியமா பேசுவிங்கல்ல,அதுக்கு காரணம் உங்க அப்பாவும் போஸ்ட்மேனா இருந்தவர்... என் அப்பாவும் அம்மாவும் இது மாதிரி ஆர்கெஸ்ட்ரா நடத்திதான் என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சாங்க, ”
“-------”
”அசலை விட , அசலைப்போலவே நகல் உருவாக்கல் தான் கஷ்டம், ஒவ்வொரு முறையும் ஒரிஜினல் பாட்டு மாதிரியே பாடனும்னு பாடுறவங்க எடுக்கிற முயற்சியோட வலி நாம கொடுக்கிற கைத்தட்டலில்தான் அவங்களுக்கு மறக்கும்..”
“--------”
சில வினாடிகளுக்குப்பின்னர்,
”எங்க அப்பா இது மாதிரி மேடைல பாடிட்டு இருக்கிறப்பதான் உயிரைவிட்டார்..... நான் இப்படி ஒவ்வொரு தடவையும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் பாடுறது அவருக்கு செலுத்துற மரியாதையா நினைக்கிறேன்”
நாளை ரம்யாவுடன் காஞ்சிபுரம் போய் அந்த தையல் எந்திரத்தை எடுத்துவரவேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
18 பின்னூட்டங்கள்/Comments:
டச்சிங்... டச்சிங்... நல்லா இருந்தது...
//”அசலை விட , அசலைப்போலவே நகல் உருவாக்கல் தான் கஷ்டம், ஒவ்வொரு முறையும் ஒரிஜினல் பாட்டு மாதிரியே பாடனும்னு பாடுறவங்க எடுக்கிற முயற்சியோட வலி நாம கொடுக்கிற கைத்தட்டலில்தான் அவங்களுக்கு மறக்கும்..”//
ம்ம்ம்ம்... நல்லாருக்குங்க கடவுளே!
நல்லாயிருக்கு தலைவா.... :))
நல்ல உணர்வு செல்வா வாழ்த்துகள்!!!
\\ம்ம்ம்ம்... நல்லாருக்குங்க கடவுளே\\
ரிப்பீட்டேய்
நன்றி ச்சின்னப் பையன், காயத்ரி,சென்ஷி,எழில்பாரதி,சின்ன அம்மிணி
very nice...:-)
Jawahar
அருமையான கதை. சொல்லவந்த கருத்தை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.
“என்ன மோகன் சார் வேலையை ஆரம்பிச்சிட்டாரா?” என்றக்குரலைப் பார்த்து நான் திரும்பிப் பார்க்க (என்னை) எங்கள் அலுவலக கிண்டல் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்தான்.
புரிந்து கொள்வதில் சற்று சிரமம் உள்ளது. அடைப்பில் உள்ள என்னை என்பதன் தேவை புரியவில்லை.
அழகா வந்திருக்கு....
நல்லாயிருக்கு! எல்லாருக்கும் அவர்களுக்கு பழகிய/தெரிந்த வேலை மீது ஒரு ஒட்டுதல் இருக்கும்!
நன்றி ஜவஹர்,இளங்குமரன்,தமிழ்பிரியன் மற்றும் ரம்யா ரமணி
நல்ல கதை. பாத்திரங்களின் பிண்ணனியை அழகாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.
காணவில்லை!!
இந்தப் பதிவிலேயே சுத்திக் கொண்டிருக்கும் பேய்கள் சிலவற்றைக் காணவில்லை.
கண்டுபிடித்துக் கொடுப்போர்க்கு மூன்று பேய் கதைகள் சன்மானம்.
Selva!
Back from Pavillion!!!!
rds
Parthi
நல்லா இருக்குங்க.
மிகவும் அருமையான கதை வினியூக்கி,
சொல்ல நினைத்த கருத்தை தெள்ளந்தெளிவாக கூறியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள் வினையூக்கி!!
Ikkaidhaiyil varum Ramya Endra peyarai Ini varum natkalil Keerthana Endru maatri kollavum..!!!
Ikkaidhaiyil varum Ramya Endra peyarai Ini varum natkalil Keerthana Endru maatri kollavum..!!!
Post a Comment