Monday, May 12, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வைஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின ஒன்றாக இருந்தாலும் அது சுவாரசியமாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒரு முறை வலைப்பதிவு, தமிழ்தட்டச்சு நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது உணர முடிந்தது.அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலரங்கம் நடக்கும் கணிப்பொறி மையத்தில் மா.சிவக்குமார் மற்றும் பாலபாரதியுடன் உள்நுழைந்த போது முனைவர்.மு.இளங்கோவன் வலைப்பதிவு பயிலரங்கம் பற்றியும் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றியும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சிவக்குமாரும் பாலபாரதியும் களத்தில் இறங்கினர், முதலில் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு ஜிமெயிலில் கணக்கு துவங்கவும் அதைக்கொண்டு பிலாக்கரில் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி அளித்தனர்.மா.சிவக்குமார், பயிற்சி பெற வந்திருந்தவர்களில் சிலர் உருவாக்கிய வலைப்பதிவுகளை உரக்கச்சொல்லி பக்கம் ஆரம்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். இடையே சென்னைப்பதிவர் விக்கி அலுவல்களுக்கு இடையிலும் 12 மணியளவில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார்.
பயிலரங்கம் நடந்து கொண்டிருந்த போது வாழ்த்துரை வழங்க வந்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு க.பொன்முடிக்கும் வலைப்பதிவு ஆரம்பித்துக் கொடுக்கும் யோசனையை மா.சிவக்குமார் சொல்ல, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் புதிய வலைப்பதிவு அமைச்சர் உருவாக்கும் முறைகளை ஆர்வத்துடன் குறித்துக்கொண்டார். மா.சிவக்குமார் வழிமுறைகளை விளக்க, அருணபாரதி ஒளிப்படமாக திரையில் கொண்டு வர கலைஞர் என்ற புதிய வலைப்பூ அமைச்சருக்காக உருவாக்கப்பட்டது.மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வலைப்பதிவுகளில் ஒலி,ஒளி,படங்கள் ஆகியன இணைப்பதைப்பற்றிய நான் எடுத்த வகுப்பைத் தொடர்ந்து, ரா.சுகுமாரன் குறிச்சொல் இடுவது, அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். தாமதமாக வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட விக்கி திரட்டிகளில் வலைப்பதிவுகளைப்பற்றி தன்னுடைய பாணியில் விரிவாகவே விளக்கிக் கொண்டிருக்கதேநீருக்காக வெளியே வந்தபோது விழுப்புரம் பதிவர் பயிலரங்க முதுகெலும்புகளான தமிழ்நம்பி , ரவி.கார்த்தி மற்றும் எழில்.இளங்கோ ஆகியாருடன் தனியாக அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவர்களைப் பற்றியும் அவர்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கேள்விக்கேட்க கிடைத்த பதில்கள் சுவாரசியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.துறை சார்ந்த தமிழ்வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்ட தமிழ்நம்பி தஞ்சைப் பல்கலைகழகம் தொகுத்த அருங்கலைச் சொற் அகரமுதலி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிருக்கும் இவர் தொலைத்தொடர்பு துறையில் பொறியாளராக இருந்து பணி நிறைவு செய்தவர்.ரவி.கார்த்தி போக்குவரத்து கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர். எழில்.இளங்கோ விழுப்புரத்தில் கணிப்பொறி மையம் நடத்தி வருபவர்.
மூவரும் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருந்தாலும் அவர்களை இணைத்தது தமிழ் என்றால் மிகையாகாது. கடந்த பொங்கல் திருநாளில் மருதம் என்ற பொங்கல் விழாவை விழுப்புரத்தில் சிறப்பாக நடத்திக்காட்டிய இந்த குழு, தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றனர். என்பதைக் கேட்ட போது அடைந்த மகிழ்ச்சி அளவில முடியாதது.

தனித்தமிழ் ஆரவலர்களான இவர்களின் முயற்சியில் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று விழுப்புரத்தில் செயற்பட்டு வருகிறது என்ற செய்தியையும் பகிர்ந்து கொண்டனர். ரவி.கார்த்தி பொறியாளராக இருந்தாலும் தமிழ்ச்சமூகம், தெய்வங்களும் என்ற சமூக விஞ்ஞான ஆய்வு புத்தகத்தை பத்தாண்டுகளுக்கு முன்பாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

எத்தனை சிறப்பாக திட்டமிட்டாலும் களப்பணியாளர்கள் இல்லாவிடின் எந்த திட்டமும் சிறப்பான வெற்றியை அடையாது. தமிழ் சம்பந்தபட்ட எந்த ஒரு விசயமானாலும் கட்சி , கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முன்னுக்கு நிற்பவர் எழில்.இளங்கோ, இவரின் முயற்சியால் இணைய இணைப்பு மற்றும் வேறு சில ஆரம்பகட்ட வேலைகள் துரிதமாக நடந்தது என தமிழ் நம்பி மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். தமிழுணர்வும் அதை தொழில்நுட்பத்துடன் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆர்வமும் கடினமான அலுவல்களுக்கிடையிலும் நேரத்தை தமிழுக்காக கொடுத்தால் சிறுநகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறப் பகுதிகளில் கூட இத்தகைய பயிலரங்கத்தை நடத்த முடியும் என்பது அவர்களுடன் நடத்திய சிறு உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.


உரையாடலுக்குப்பின்னர் பயிலரங்க அறைக்கு வந்த பொழுது கடலூர் சீனிவாசன் கூகுள் ரீடர் பற்றி சொல்லித்தந்ததைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பற்றி பாலபாரதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.5.30 மணியளவில் விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் சார்பாக சென்னைப்பதிவர்களுக்கு அளிக்கப்பட்ட நினைவுபரிசைப் பெற்றுக்கொண்டு மற்றும் ஒரு நிறைவான பயிலரங்கத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த தமிழுக்கும் பயிலரங்கம் நடத்திய நிர்வாக குழுவினருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றோம். <படங்களுக்கு இங்கே சொடுக்கவும்>

துணுக்குகள்

* இரண்டரை ஆண்டுகளாக மா.சிவக்குமாரிடம் “சுசே லினக்ஸ்” இன்ஸாடால் செய்து தர வைத்திருந்த கோரிக்கையை பாலபாரதி விழுப்புரம் பயணத்தில் நிறைவேற்றிக்கொண்டார்.

* பழனியில் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாரி, பழனியிலும் இது போன்ற பயிலரங்கத்தை நடத்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் பயிற்சி அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகோளை மா.சிவக்குமாரிடம் வைத்தார்.

* புதுவை வலைப்பதிவர்கள் சார்பாக பயிற்சி பெற வந்தவர்களுக்கு குறுந்தகடு ஒன்று அளிக்கப்பட்டது.

* கோ.சுகுமாரன் அவர்கள் சுடச்சுட பயிலரங்க நிகழ்வுகளை வலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.

* சென்னைப்பட்டறையில் மட்டுறுத்தல் பற்றிய ஒரு விசயத்தை ரா.சுகுமாரனிடம் கற்றுகொண்டேன். விழுப்புரத்தில் 98 விண்டோஸ் இயங்கியில் எப்படி எழுத்துருக்களை நிறுவுதல் என்ற விசயத்தைக் கற்றுக்கொண்டேன்.


* மைலம் சந்தை ரோட்டில் சாப்பிட வண்டியை நிறுத்திய பொழுது, கால்சட்டைப் பையில் கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டே , கைத்தொலைபேசியை காணவில்லை என மா.சி தேட ஆரம்பிக்க, பாலபாரதி கடையில் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவரின் காதருகே போய் அது மா.சி உடையதா என பார்த்துவிட்டு வந்தார்.

* நாங்கள் சென்றிருந்த வாகனத்தின் ஓட்டுநர் , சென்னையை நெருங்குகையில் , இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தன் பிள்ளைகளுக்கும் கணினிப் பயிற்சி தரவேண்டும், தனது பிள்ளைகள் தமிழ்வழிக்கல்வியில் படிப்பதாகவும் தமிழில் படித்தால் கணினி கற்றுக் கொள்வது கடினமா எனக்கேட்க, மா.சிவக்குமார் தனக்கே உரித்தான பாணியில் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்தார்.

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

வினையூக்கி சார்,

நேரில் பார்பது போலவே அழகாக விளக்கி இருக்கிறீர்கள். பயனுற்றேன். பாராட்டுகள் !

said...

தோழர் வியனையூக்கி செல்வன் அவர்களுக்கு வணக்கம். நலம்.நலமறிய ஆவல். தங்களின் பதிவு நேரில் இருந்து பார்ப்பது போல் உள்ளது. மிகவும் யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.தாங்கள் உட்பட பயிற்சி அளித்த அனைவரும் மிகச்சிறப்பாக அவரவர்களின் பங்களிப்பைச் செலுத்திய விதம் கண்டு மிக்க மகிழ்ந்தேன். கண்டிப்பாக பழனியில் நடத்த இருக்கிறோம். தாங்களும் தோழர்களும் கலந்து கொண்டு பயிற்சி அளித்து அனைவரையும் அறிவார்ந்த மக்களாக உருவாக்க துணை நிற்க வேண்டும். நன்றி. பழனியிலிருந்து வ.மாரிமுத்து.

said...

நிகழ்ச்சி நன்றா இருந்தது என்பது அறிந்து மகிழ்ச்சி..

said...

தலை, கமல் போல அடிக்கடி கெட்டப் மாற்றுகிறாரே(ஆச்சரிய குறி)